பெருமாள் திருமொழி -2–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை

பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்கு சம்பவிப்பன சில ஸ்வ பாவங்கள் உண்டு —
ஆநு கூல்ய சங்கல்ப -ப்ராதி கூலச்ய வர்ஜனம் –
ஆநு கூல்யமாவது -பாகவத விஷயத்திலும் பகவத் விஷயத்திலும் பண்ணுமவை-
பகவத் விஷயம் பூர்ணம் ஆகையாலே
இவனுக்கு ஆநு கூல்யம் பண்ணுகைக்கு துறை இல்லை இறே –

இப்படி துறை இல்லை என்று இவன் கை வாங்காமைக்காக இறே
இவன் உகந்த த்ரவ்யமே தனக்குத் திரு மேனியாகவும்
இவன் திரு மஞ்சனம் பண்ணின போது அமுது செய்து அல்லாத போது பட்டினியுமாம் படி இறே
அவர்களுக்குத் தன்னை அமைத்து வைப்பது –
இப்படி யாய்த்து இல்லையாகில் பரி பூர்ண விஷயத்தில் இவனுக்கு கிஞ்சித் கரிக்கைக்கு துறை இல்லை இறே

ஜ்ஞாநீத் வாத்மைவமேமதம் -என்றும் –
மம பிராணா ஹி பாண்டவா –என்றும்
பத்தராவி -என்றும்
ததீய விஷயத்தில் பண்ணும் ஆநு கூலயமும் பகவத் விஷயத்திலே பண்ணிற்றாம் இறே
ஆகையால் இவரும் தமக்கு இவை இரண்டும் பிறந்தது என்கிறார் –

பகவத் விஷயத்தில் பிறந்த ஆநு கூல்யம் சொன்னார் -கீழில் திரு மொழியில்
ததீய விஷயத்தில் ஆநு கூல்யம் பிறந்தபடி சொல்லுகிறார் -இத் திரு மொழியில் –

—————————————–

முடிய பாகவத விஷயம் உத்தேச்யம் ஆகிறதும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தார் -என்னுமது இறே
இன்னான் அர்த்தமுடையன் -ஷேத்ரமுடையன் -என்று ஆஸ்ரயிப்பாரைப் போலே –
பகவத் பிரத்யாசத்தி யுடையார் என்று இறே இவர்களைப் பற்றுகிறது
பகவத் விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவர்
ஆசார்ய விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணப் புக்கு
அவர்க்கு நிறமாகச் சொல்லிற்று பகவத் விஷயத்தில் ஜ்ஞான பக்திகளை இறே
ஜ்ஞான வைராக்ய ராசயே-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

பதவுரை

தேட்டரும்–(தன் முயற்சியால்) தேடிப் பெறுதற்கு அருமை யானவனும்
திறல்–(தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும்
தேனினை–தேன் போல் பரம போக்யனும்
தென் அரங்கனை–தென் திருவரங்கத்தில் வாழ்பவனும்
திரு மாது வாழ் வாட்டம் இல் வன மாலை மார்பனை–பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் செய்தற்கிடமாய்
வாடாமல் செவ்வி பெற்றிருக்கிற வன மாலையை அணிந்துள்ள திரு மார்வை யுடையனுமான ஸ்ரீரங்கநாதனை
மால் கொள் சிந்தையர் ஆய்–(அவன் திறத்தில்) மோஹங்கொண்ட மனதை யுடையராய்
ஆட்டம் மேவி–(அந்த மோஹத்தாலே நின்ற விடத்தில் நிற்க மாட்டாமல்) ஆடுவதிலே ஒருப்பட்டு
அலர்ந்து அழைத்து–(பகவந்நாமங்களை) வாய் விட்டுக் கதறி கூப்பிட்டு
அயர்வு எய்தும்–இளைப்படைகின்ற
மெய் அடியார்கள் தம்–உண்மையான அன்புடைய பாகவதர்களின்
ஈட்டம்–கோஷ்டியை
கண்டிட கூடும் ஏல்–ஸேவிக்கப் பெறுவோமாகில்
அது காணும் கண் பயன் ஆவது -கண் படைத்ததற்குப் பயன் அதுவே யன்றோ!

தேட்டரும் –
தாமே வந்து ஸூலபராம் அத்தனை அல்லது
ஸ்வ யத்னத்தால் காண ஒண்ணாது என்கை-

திறல் தேனினை –
ய ஆத்மதா பலதா-என்னுமா போலே –
தன்னையும் கொடுத்து –
தன்னை அனுபவிக்கைக்கு ஈடான பலத்தையும் கொடுக்கும் தேன்-

தேனினை தென் அரங்கனை -திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை
ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்-
திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-
ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –

வாழ்த்தி –
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே
அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி

மால் கொள் சிந்தையராய்
பித்தேறின மனஸை உடையராய்

ஆட்ட மேவி –
ஆட வேணும் என்னும் கார்யா புத்யா யன்றியிலே
ப்ரேமம் ஒட்டாமையாலே ஆட்ட மேவி

அலர்ந்து அழைத்து
அலர்ந்து கார்யப் பாடறக் கூப்பிட்டு

அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
க்ரம பிராப்தி பெறாமையாலே -அறிவு குடி போய் பரவசராய்
அநந்ய பிரயோஜனருடைய

ஈட்டம் –
இப்படி இருப்பார் உமக்கு எத்தனை பேர் வேணும் என்ன –

அடியார்கள் குழாங்களை காணப் பெறில்
கண்டிட கூடு மேல் அது காணும் கண் பயன் ஆவதே–
இது கூடிற்றாகில் பிரயோஜனம் கண்ணுக்கு இது அல்லது இல்லை –
த்ருஷ்ட பிரயோஜனம் இது –

——————————————————————

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

பதவுரை

தோடு உலாம் மலர் மங்கை–இதழ்கள் மிக்கிருந்துள்ள தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியினது
தோள் இணை தோய்ந்ததும்–திருத் தோள்களோடு அணைய வமுக்கிக் கட்டிக் கொண்டதும்
சுடர் வாளியால்–புகரை யுடைய அம்பினால்
நீடு மா மரம் செற்றதும்–நீண்ட ஸப்த ஸால வருக்ஷங்களைத் துளை செய்து தள்ளியதும்
நிரை மேய்த்ததும்–இப்படிப் பட்ட பகவச் சரிதங்களையே அநுஸந்தித்து
ஆடி–சரீர விகாரம் பெற்று
பாடி–(காதலுக்குப் போக்கு வீடாக வாய் விட்டுப்) பாடி
ஓ! அரங்க!! என்று–‘ஓ அரங்கனே!’ என்று (அவன் திரு நாமங்களைச் சொல்லி
அழைக்கும்–கூப்பிடுகிற
தொண்டர்–கைங்கரியத்தையே நிரூபகமாக வுடைய பாகவதர்களின்
அடி பொடி–திருவடித் தூள்களிலே
நாம் ஆட பெறில்–நாம் அவகாஹிக்கப் பெற்றால் (பிறகு)
கங்கை நீர்–கங்கா ஜலத்திலே
குடைந்து ஆடும் வேட்கை–அவகாஹித்து நீராட வேணுமென்கிற ஆசையானது
என் ஆவது–ஏதுக்கு?

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும்
இதழ் மிக்கு இருந்த தாமரைப் பூவை வாசஸ் ஸ்தானமாக உடைய
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருத் தோள்கள் இரண்டையும் தோய்ந்ததும் –
தனியன் பெரு வெள்ளத்திலே இழிந்து அனுபவிக்கத் தேடினது போலே தோய்ந்ததுவும் –

சுடர் வாளியால்-
புகரை உடைய அம்பாலே –

நீடு மா மரம் செற்றதும்-
ஒக்கத்தை உடைத்தான மரா மராமரங்கள் ஏழையும்-பண்டே துளையான வற்றிலே
ஓட்டினால் போலே யாய்த்து -அந்தமாய் பலவத்தரமான சப்த சாலத்தை நிரசித்ததும் –
ஆஸ்ரிதரை விஸ்வசிப்பிக்கும் செயல் இறே

நிரை மேய்த்ததும் –
உபய விபூதி நாயகனாய் இருந்து வைத்து கையிலே ஒரு கோலையும் கொண்டு பசு மேய்த்ததும்
இவையே நினைந்து
இந்த சீலாதி குணங்களையே நினைந்து இவற்றை நினைக்கும் அது ஒழிய
வேறொரு பிரயோஜனத்தையும் கணிசியாதே –

ஆடி பாடி-
ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே ஆடிப்பாடி

அரங்காவோ! என்று அழைக்கும் –
ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி யாற்ற மாட்டாதே கூப்பிடும்

தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் –
பகவத் குண வித்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாத ரேணுக்களிலே அவகாஹிக்கப் பெறில்

கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே –
எப்போதும் ஒக்க பகவத் சம்பந்தம் உடையராகையாலே தீர்த்த பாதரான
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுக்களிலே அவகாஹிக்கப் பெறில்
கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே –
காதாசித்க சம்பந்தமேயாய் பல சிக்குத் தலைகளிலே புக்கு
உபகதிப்பட்ட கங்கை யாடினால் என்ன பிரயோஜனம் உண்டு
நலம் திகழ் சடையான் -இத்யாதி –
பொதுவானது இறே அது –

——————————————————————————–

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

ஏறு அடர்த்ததும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான ரிஷபங்கள் ஏழையும் அடர்த்ததும்

ஏனமாய் நிலம் கீண்டதும் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி யோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச்சுவரான விரோதியாய் –
அவர்களுக்கு பிரகாரமான பூமியை பிரளயம் கொள்ள
உதவிற்றிலன் என்னும் அவத்யம் வாராத படி
மஹா வராஹமாய் அண்ட புத்தியிலே புக்கு
ஒட்டின பூமியை ஒட்டு விடுவித்து

முன்னி ராமனாய் மாறு அடர்ததும் –
பிராட்டியைப் பிரித்த பையலை எதிரியாக்கிக் கொன்றதுவும்

மண் அளந்ததும்-
ஸ்ரீ பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியை போக்கினாப் போலே
இந்த்ரனோடு விரோதித்த மஹா பலியைக் கைக் கொண்ட பூமியை மீட்டு
எல்லை நடந்து கொடுத்ததும்

சொல்லி பாடி –
இவ் வபதானங்களைச் சொல்லி ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாடி –

வண் பொன்னி பேர் ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு –
காவேரி பெரு வெள்ளமாய் மலைப் பண்டம் கொண்டு வருமா போலே
அமைக்க நில்லாதே
கடல் குடமாக வெள்ளம் இடுகிற கண்ணீரைக் கொண்டு

அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் –
அங்குப் பாங்காக திரு அலகு பணி செய்து வைத்தால்
இவர்கள் கண்ண நீராலே சேறாக்குவார்கள் யாய்த்து

சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –
அமங்கலமான புழுகு நெய்யாலே அலங்கரித்து உள்ள தோஷம் தீர
மங்களார்த்தமான ஸ்ரீ வைஷ்ணவர்களின்
திருவடிகளில் அழகிய சேற்றை யணிவன்-

————————————————————————

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

பதவுரை

தோய்த்த தண் தயிர்–தோய்த்த தண் தயிர்
வெண்ணெய்–வெண்ணையையும்
பால்–பாலையும்
உடன் உண்டலும்–ஒரே காலத்திலே அமுது செய்தவளவில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி யானவள்
கண்டு உடன்று–(அந்த களவு தன்னைப்) பார்த்து கோபித்து
ஆர்த்த–(பிறகு அவளாலே) பிடித்துக் கட்டப்பட்ட
தோள் உடை–தோள்களை யுடைய
எம்பிரான்–எமக்குத் தலைவனான
என் அரங்கனுக்கு–என் ரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆய்–ஆட்பட்டவர்களாய்
நா தழும்ப எழ–நாக்குத் தடிக்கும்படி
நாரணா என்று அழைத்து–நாராயணா! என்று கூப்பிட்டு
மெய் தழும்ப தொழுது–சரீரம் காய்ப்பேறும்படி ஸேவித்து
ஏத்தி–தோத்திரம் பண்ணி
இன்புறும்–ஆனந்தமடைகின்ற
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
சே அடி–திருவடிகளை
என் நெஞ்சம்–என் மனமானது
ஏத்தி வாழ்த்தும்–துதித்து (அவர்களுக்கே) பல்லாண்டு பாடும்

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் –
கடைந்து பிரித்த வெண்ணெய்-
அதுக்கு உறுப்பாக தோய்த்த தயிர் –
அதுக்கு அடியான பால் –

உடன் உண்டலும் –
இவை அடங்கலும் நிச்சேஷமாக ஒருக்காலே யமுது செய்தவாறே

உடன்று
உடைக்கொணா விட்டவாறே கோபித்தாள்-
தீரா வெகுளியளாய் -ஸ்நேஹத்துக்கு அவதி உண்டாகில் இறே-கோபத்துக்கு அவதி உண்டாவது –

ஆய்ச்சி கண்டு-
வாயது கையதுவாகக் கொண்டு அடியோடு கண்டு பிடித்தாள் யாய்த்து

ஆர்த்த தோள் உடை எம்பிரான் –
கண்டவாறே பிடித்துக் கொண்டு கட்டினாள்

எம்பிரான் –
ஆஸ்ரீத ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது செல்லாமை காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினான்

என் அரங்கனுக்கு அடியார்களாய்-
அவதார காலத்தில் இழந்தார் இழவு தீர வந்து ஸூலபரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய செயலாலே
எழுதிக் கொடுத்தவர்கள் யாய்த்து –

நா தழும்பு எழ –
நாவானது தழும்பு ஏறும்படி

நாரணா என்று அழைத்து –
அம்மே என்பாரைப் போலே திரு நாமத்தை அடைவு கெடச் சொல்லி

மெய் தழும்ப தொழுது-ஏத்தி-
ப்ரணாமம் பண்ணின படி தோற்ற உடம்பு எல்லாம் தழும்பாக –
ஸ்ரீ சிறியாத்தானைப் போலே ஏத்தி –
இப்படிப்பட்ட செயல்களை சொல்லி ஏத்தி –

இன்புறும் தொண்டர் சேவடி-
மனசிலே வைத்து ஏத்துகையாலே விஷயத்தைக் கிட்டினால் பிறக்கும் நிரதிசய ஆனந்த யுக்தராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாதங்களை

தொண்டர் சேவடி-ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே-
அவர்கள் தாங்கள் அகப்பட்ட நவ நீத சௌர்யத்தில் போகாது என் நெஞ்சு -அதிலே அகப்பட்டவர்கள்
தங்களை ஏத்தி வாழ்த்தும் அத்தனை –

ஏத்தி வாழ்த்தும் –
இச் செயலுக்கு இவர்கள் நிலவராவதே -என்று ஸ்தோத்ரத்தை பண்ணி –
இது நித்யமாக வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் என் நெஞ்சு –

——————————————————————————————

பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

பதவுரை

பொய்–க்ருத்ரிமமாய்
சிலை குரல்–கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான
ஏறு–(ஏழு) ரிஷபங்களின்
எருத்தம் இறுத்து–முசுப்புகளை முறித்தவனாய்
போர் அரவு ஈர்த்த கோன்–போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்த ஸ்வாமியாய்,
சிலை செய்–கல்லினால் செய்யப்பட்டு
சுடர் ஒளி–மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய்
திண்ணம்–த்ருடமாயிருக்குந் தன்மையையும் உடைத்தாய்
மா–பெரிதான
மதிள் சூழ்–மதிகளாலே சூழப்பட்ட
தென் அரங்கன் ஆம்–தென்னரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான ரங்கநாதனாகிய
மெய் சிலை கரு மேகம் ஒன்று–சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காள மேகமானது
தன் நெஞ்சுள் நின்று திகழப் போய்–தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற
மெய் சிலிர்ப்பவர் தம்மையே–மயிர்க் கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே
என் மனம் நினைந்து–என் நெஞ்சானது அநுஸந்தித்து
மெய் சிலிர்க்கும்–மயிர்க் கூச்செறியப் பெற்றது.

பொய் சிலை குரல் ஏறு -எருத்தம் இறுத்து
பொய் -க்ரித்ரிமம் –சிலை -கோபம் -அஸூரா வேசத்தாலே க்ர்த்ரிமமாய் கோபத்தையும் உடைத்தாய்
இருந்துள்ள ஏறும் உறாயப் பொருது –
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு விரோதியானவையுமாய் பொருகிறவையுமாய்
சிலை போலே கோரமான த்வனியை உடைத்தாய் இருந்துள்ள ரிஷபங்களைக் கழுத்தை முறித்து –

போர் அரவீர்த்த கோன்-
ஸ்ரீ திருவாய்ப்பாடியில் பசுக்களும் இடையரும் தண்ணீர் குடிக்க ஒண்ணாத படி
ஜலத்தைத் தூஷித்துக் கிடந்த காளியன்
யுத்த உன்முகனாய் புறப்படும்படி கலக்கி பொய்கையில் நின்றும் போக விட்டு –
அத்தாலே ஸ்ரீ திருவாய்ப்பாடியில் உள்ளார்க்கு நாதனானவனை

செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
கல்லாலே செய்யப்பட்டு பிறரால் அபிபவிக்க ஒண்ணாத படியான மதிப்பை உடைத்தான திண்மையையும்
ஒக்கத்தாலும் விஞ்சின திரு மதிள்கள் பலவும் சூழ்ந்து இருக்கிற ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற

மெய் சிலை கரு மேகம் –
உடம்பிலே வில்லை உடைய மேகம் என்னுதல்—
மெய்யே வில்லோடு கூடின மேகம் தான் என்னுதல் –

ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே
மாணிக்கக் குப்பியிலே உள்ளு நின்ற நிலை புறம்பே தெரியுமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாளை தங்கள் நெஞ்சிலே எழுந்து அருளிவித்து வைக்கையாலே நிழல் இடா நிற்கும் இறே

மெய் சிலிர்ப்பவர் -தம்மையே நினைந்து
உள்ளே எழுந்து அருளி இருக்கிற படியே அனுசந்தித்து புளகித காத்ரராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தம்மை நினைத்து

என் மனம் மெய் சிலிர்க்குமே
ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து அவர்கள் உடம்பு படும் பாட்டை –
அவர்களை அனுபவித்து என் நெஞ்சு படா நின்றது
ஸ்பர்ச த்ரவ்யம் பட்டது எல்லாம் படா நின்றது அமூர்த்த த்ரவ்யம் –

——————————————————————————-

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனாய்
அந்தம்–ப்ரளய காலத்திலும் வாழ்பவனாய்
அநந்தம்–ஸர்வ வ்யாபியாய்
அற்புதம் ஆன–ஆச்சரிய பூதனாய்
வானவர் தம்பிரான்–அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய
மா மலர் பாதம்–சிறந்த மலர் போன்ற திருவடிகளை
சூடும் பத்தி இலாத–சிரஸா வஹிப்பதற் குறுப்பான அன்பு இல்லாத
பாவிகள் உய்ந்திட–பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி
எங்கும் திரிந்து–ஸர்வ தேசங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து
தீது இல்–குற்றமற்ற
நல் நெறி–நல் வழிகளை
காட்டி–(தமது அநுஷ்டாநமுகத்தாலே) வெளிப்படுத்திக் கொண்டு
எம்மான்–நமக்குத் தலைவனான
அரங்கனுக்கே–ஸ்ரீரங்கநாதனுக்கே
காதல் செய்–பக்தி பூண்டிருக்கின்ற
தொண்டர்க்கு–பாகவதர்கள் விஷயத்தில்
என் நெஞ்சம்–எனது மனமானது
எப் பிறப்பிலும்–எந்த ஜன்மத்திலும்
காதல் செய்யும்–அன்பு பூண்டிருக்கும்.

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
ஆதி –
ஜகத் காரண பூதன் –

அநந்தம் –
காரண அவஸ்தையிலும் கார்ய அவஸ்தையிலும் ஒக்க வியாபித்து நிற்குமவன்

அற்புதம் –
காரண அவஸ்தையோடு சதாவஸ்தனாய் நிற்குமத்தோடு வாசியற நிற்கும் நிலைகள் வேறொரு இடத்தில்
காண ஒண்ணாது என்னும்படி இருக்கும் ஆச்சர்ய பூதன் –

ஆன வானவர் தம்பிரான்-
ஆன போதும் அமர்ந்த போதும் எப்போதும் ஒக்க உளராய் இருக்கும் நித்ய ஸூரிகளுக்கு நாதன் –
உபய விபூதி நாதன் -என்றபடி –

பாத மா மலர் சூடும் பத்தி இலாத –
அவன் திருவடிகளாகிற செவ்வித் தாமரையைச் சூடும் பக்தியை உடையராய் இருக்கை யாய்த்து கர்த்தவ்யம் –
அது இல்லாத –

பாவிகள் உய்ந்திட
பக்தி இல்லாத மஹா பாபத்தைப் பண்ணி –
அசந்நேவ–என்னும்படி இருக்கிற தேசம் எங்கும் புக்கு சஞ்சரித்து
அவர்களை பக்தி உண்டாக்கி யுஜ்ஜீவிப்பைக்காக

தீதில் நல் நெறி காட்டி –
தீமையோடு கூடின நெறி யன்றிக்கே -சேதனர் நல் வழி போம் படி தாங்கள் ஆஸ்ரயித்துக் காட்டி

எங்கும் திரிந்து –
புகக் கடவது அல்லாத தேசம் எங்கும் புக்கு சஞ்சரித்து

அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு –
என்னை அனந்யார்ஹம் ஆக்கின ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே பக்தி உண்டாய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு

எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –
அநேக ஜன்மங்கள் பிறந்து அவர்களுக்கு அடிமை செய்ய வேணும் என்று
ஆசைப் படா நின்றது என் நெஞ்சு –

—————————————————————————————-

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

பதவுரை

கார் இனம் புரை–மேகங்களின் திரளை ஒத்த
மேனி–திருமேனியையும்
நல் கதிர்–அழகிய லாவண்யத்தையும்
முத்தம் வெண் நகை செய்ய வாய்– முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பை யுடைய சிவந்த திருப் பவளத்தையும்
ஆரம் மார்வன்–முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான
அரங்கன் என்னும்–ஸ்ரீரங்கநாதனாகிற
அரும் பெரும் சுடர் ஒன்றினை–அருமை பெருமை யுள்ள விலக்ஷணமான தொரு தேஜஸ்ஸை
சேரும் நெஞ்சினர் ஆகி–கிட்டி அநுபவிக்க வேணுமென்கிற சிந்தையை யுடையவராய்
சேர்ந்து–(அங்ஙனமே) சேர்ந்து
கசிந்து இழிந்த–(பக்தி பாரவச்யத்தாலே) சுரந்து பெருகின
கண் நீர்கள்–ஆநந்த பாஷ்பங்கள்
வார நிற்பவர்–வெள்ளமிட்டொழுகும்படி நிற்குமவர்களுடைய
தாள் இணைக்கு–இரண்டு திருவடிகள் விஷயத்தில்
என் நெஞ்சம்–என் மனமானது
ஒரு வாரம் ஆகும்–ஒப்பற்ற அன்பையுடையதாகும்.

கார் இனம் புரை மேனி-
தொக்க மேகப் பல் குழாங்கள் -என்றும்
கார்த்திரள் அனைய மேனி -என்றும் -சொல்லுகிறபடியே
அழகிய திருமேனியையும் உடையராய்

நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
கண்டாரைப் போகாமல் துவக்க வல்ல ஒளியை உடை முத்து நிரை போலே இருக்கும் தந்த பந்தியையும் –
இதுக்கு பரபாகமான திருவதரத்தில் பழுப்பையும் உடையவராய்

ஆர மார்வன் –
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -என்று
ஐஸ்வர்ய பிரகாசகமாம் படி இட்டுப் பூண வேண்டும்படி உள்ள ஹாரத்தையும்
திரு மார்பிலே உடையராய் இருக்கிற

அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
ஸ்ரீ பெரிய பெருமாள் என்று -உபய விபூதியிலும் பிரசித்தராய்
நிரவதிக தேஜோ ரூபராய் அத்விதீயரானவரை

சேரும் நெஞ்சினராகி –
அவர் வந்து கிட்டும் போது விலக்காமை யடியாகப் -பிறந்த பக்தியை உடையராய்

சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால் வார நிற்ப்பவர் தாள் இணைக்கு –
அவனைக் கிட்டி நிரதிசய பக்தி உக்தராய் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் அவர்களுக்கு பக்தி
பாரவச்யத்தாலே இறே என்று அங்குத்தைக்கும் இவர்களுக்குமாய் நில்லாதே
இவர்களுடைய திருவடிகளுக்கு

ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே –
அநந்ய பிரயோஜனமாய் நில்லா நின்றது என் நெஞ்சு –

—————————————————————————————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

பதவுரை

மாலை உற்ற கடல்–(தன் திரு மேனி ஸ்பர்சத்தாலே) அலை யெறிகிற திருப்பாற்கடலில்
கிடந்தவன்–பள்ளிகொள்பவனும்
வண்டு கிண்டு நறு துழாய் மாலை உற்ற–(தேனுக்காக) வண்டுகள் குடையா நின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்த
வரை பெரு திருமார்பினை–மலைபோற் பெருமை தங்கிய திருமார்பை யுடையவனும்
மலர் கண்ணனை–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவனுமான ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
மாலை உற்று–வ்யாமோஹத்தை அடைந்து
எழுந்து ஆடி–(இருந்தவிடத்திலிராமல்) எழுந்து கூத்தாடி
பாடி–(வாயாரப்) பாடி
திரிந்து–(திவ்ய தேசங்கள் தோறும்) ஸஞ்சரித்து
அரங்கன் எம்மானுக்கே–எமக்கு ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
மாலை உற்றிடும்–பித்தேறித் திரிகின்ற
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
வாழ்வுக்கு–ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கு
என் நெஞ்சம் மாலை உற்றது– என் மனம் மயங்கிக் கிடக்கின்றது.

மாலை யுற்ற கடல் கிடந்தவன்-
ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்

வண்டு கிண்டு நறும் துழாய் மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை –
வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற
பெரும் திரு மார்வை உடையராய் –
மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே

மலர் கண்ணனை
செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை

மாலை உற்று எழுந்து ஆடி பாடி திரிந்து –
பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் –
ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து

அரங்கன் எம்மானுக்கே மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு –
ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு

மாலை யுற்றது என் நெஞ்சமே–
பித்தேறா நின்றது -என்கிறார் –

———————————————————————-

அவதாரிகை –

பித்தேறித் திரிவார்க்கு ஒரு நீர் பித்தேறுவது என்ன –
பிராப்த விஷயத்தில் பித்தேறுமவர்கள் பித்தர் அன்று என்கிறார் –

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

பதவுரை

கண் பனி–ஆநந்த பாஷ்பமானது
மொய்த்து சோர–இடைவிடாமல் சொரியவும்
மெய்கள் சிலிர்ப்ப–உடல் மயிர்க் கூச்செறியவும் உடல்
ஏங்கி இளைத்து நின்று–நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய்
எய்த்து–நிலை தளர்ந்து
கும்பிடு நட்டம் இட்டு–மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி
எழுந்து ஆடி பாடி இறைஞ்சி–நின்ற விடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி,
என் அத்தன்–எனக்குத் தந்தையாய்
அச்சன்–ஸ்வாமியான
அரங்கனுக்கு–ஸ்ரீரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆகி–அடியவர்களாய்
அவனுக்கே–அந்த ரங்கநாதன் விஷயத்திலேயே
பித்தர் ஆமவர்–பித்தேறித் திரிகிறவர்கள்
பித்தர் அல்லர்கள்–பைத்தியக்காரர்களல்லர்;
மற்றயார் முற்றும்–(பத்தி கார்யமான இந்த வ்யா மோஹமில்லாத) மற்ற பேர்களெல்லாம்
பித்தரே–பைத்தியக்காரர்கள் தான்.

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப இளைத்து நின்று
இரண்டு கண்ணாலே வர்ஷ தாரை போலே சொரிய புளகித காத்ரராய்

ஏங்கி எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி –
விஷயத்தை நினைத்து ஏங்கி இளைத்து சிதிலராய் –அவ்வளவு அன்றியிலே ஸ்தப்ராய் நின்று –
அந்நிலையும் நில்லாதே –
கும்பிடு நட்டம் இட்டு -எழுந்து ஆடி பாடி
சசம்பிரம நர்த்தம் பண்ணி

இறைஞ்சி –
தீர்க்க பிரணாமத்தைப் பண்ணி

என் அத்தன் அச்சன் –
எனக்கு ஜனகனுமாய் ஸ்வாமியும் ஆனவனை

அரங்கனுக்கு அடியார்களாகி –
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடியாராகி

அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள்
அவர்க்கு பக்திமான்களாய் பக்தி கார்யமான பித்தேறித் திரிகிறவர்கள் -பித்தர் அல்லர்கள் –

மற்றையார் முற்றும் பித்தரே–
இந்த பக்தி கார்யமான பித்தர் அல்லாதவர்கள் அடைய பித்தரே –
இக் கலக்கம் இல்லாதே தெளிந்து இருக்கும் ஸ்ரீ சனகாதிகளே யாகிலும் அவர்களே பித்தரே –

———————————————————————-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்–
ஸ்ரீ யபதியான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ-வைஷ்ணவர்களுடைய

எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
ஆத்ம தாச்யத்திலே என்றும் ஒக்கப் பொருந்தின திரு உள்ளத்தை உடையரோம்

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்-
கொல்லிக்கும் மதுரைக்கும் உறையூருக்கும் -நாயகரான பெருமாள் –
ஸ்ரீ பெரிய உடையாருடைய இழவாலே வந்த வெறுப்பாலே –
வனவா சோம ஹோதயா -என்று போய்-
ராஜ்யாத்பரம்சோ வ நே வாச –என்று வந்ததுக்குப் போந்து அது பிரியமாய் இருந்தவர்
இவ் விழவாலே அடியிலே போந்ததுவும் எல்லாம் தமக்கு வெறுப்புக்கு உடலானாப் போலே
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் -என்றும்
இவ்வரசும் யான் வேண்டேன்-என்றும்-சொல்லுகிற
இவர்க்குத் ததீய சேஷத்வத்தைத் தந்த ஜன்மம் என்று
ராஜ ஜன்யம் தன்னையும் கொண்டாடுகிறார் இறே

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் –
இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்

தொண்டர் தொண்டர்கள் ஆவரே –
இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: