பெருமாள் திருமொழி -10–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம் –

அநாதி காலம் இழந்த இழவை-ஸ்ரீ தேவகி தேவகியார் பெற்று வைத்து ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை
யனுபவிக்கப் பெறாதே இழந்தவள் பாசுரத்தாலே பேசினார் -ஆல நீள் கரும்பில் –
மன்னு புகழில்-ஸ்ரீ கௌசலையையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் –
பால்ய அவஸ்தையிலே எல்லாம் அனுபவித்து ப்ராப்த யௌவனம் ஆனவாறே அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோபாதி தமக்கு ப்ராப்தி உண்டாகையாலே அவன் பாசுரத்தாலே தம் இழவைப் பேசினார் -வன் தாளில் –
இத் திருமொழி யிலே-கீழ்ப் பிறந்த இழவுகள் எல்லாம் தீர –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் நித்ய வாஸம் பண்ணுகிற
ஸ்ரீ திருச் சித்ரகூடமாகிற திருப்பதியிலே திரு வவதாரம் தொடங்கி-அந்த திருவவதார வ்ருத்தாந்தத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் பேசி அனுபவித்தால் போலே தன்னுடைய ஜ்ஞான வைச்யத்தாலே
சம காலத்தில் போலே அனுபவிக்கிறார் –

—————-

அவதாரிகை –

முதல் பாட்டு -தேவர்கள் எம்மாரும் க்ருத்தார்த்தராம் படி வந்து திருவவதாரம் பண்ணின படி சொல்கிறது –

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –

அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –

விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை
தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை

செம் கண் நெடும் கரு முகிலை –
தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும்
ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்

ராமன் தன்னை-
வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
கீழில் -வீரன் -என்கிறதும் -இங்கும் அன்வயிக்கக் கடவது -சத்யேதியாதிவத் –

தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
அவதாரத்தில் சமகாலத்தில் அனுபவிக்கப் பெறாத இழவு தீர பிற்பட்ட காலத்தில் உள்ளாருக்கும்
உதவலாம் படி சந்நிஹிதனானவனை

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
அக்காலத்தில் அனுபவிக்கப் பெறாத எங்களை உஜ்ஜீவிப்பைக்கு ஒப்பில்லாத காரண பூதனானவனை –
வகுத்த சேஷியானவனை

என்று கொலோ? கண் குளிர காணும் நாளே—
இந்த ராஜ்ய துரந்தரையிலே அகப்பட்டு இருக்கிற நான் அன்றோ -அவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண்களானவை கண்டு
விடாய் தீர்ந்து கண் படைத்த பிரயோஜனம் பெறலாவது என்றோ என்கிறார் –
என்று கொலோ என்று கால தத்வத்துக்கு ஒரு அவதி பெற்றானாகில்-இன்று கண்டதோடு ஒக்கும் கிடீர் –

—————————————————————————-

அவதாரிகை –

இரண்டாம் பாட்டு —
ராஷச வதத்துக்கு எல்லாம் அடியாகவும் -ரிஷியுடைய அபிமதம் தலைக் கட்டுகைக்கும்
தாடகா தாடகேயரை நிரசித்த படி சொல்லுகிறது —

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை-தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
சிவந்த தளிர்கள் நடுவே விகசியா நின்றுள்ள புஷ்பங்களை உடைத்தாய் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான
சோலையாலே அலங்க்ருதமான ஊரிலே

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அநந்ய பிரயோஜனரான பிராமணர் மூவாயிரம் பேர் -திரண்டு மங்களா சாசனம் பண்ண

அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே–
கோப்புடைய சீரிய சிங்காசனம் என்னும்படியே மஹார்கங்களான ரத்னங்களை யுடைத்தான-சிம்ஹாசனத்திலே
தன் மேன்மை தோற்ற வீற்று இருந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

————————————————————————

அவதாரிகை –

மூன்றாம் பாட்டு –
பிராட்டியோட்டை கலவிக்கு விரோதியைப் போக்கின படி சொல்லுகிறது

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி-சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து
எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய
ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-

செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின
ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த் தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்-எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
ஷத்ருக்கள் அஞ்சும் படியான உயர்ந்த மதிளையும்-அட்டாலைகளையும் உடைத்தான ஊரிலே வர்த்திக்கிற
அவஷ்டப்யம் அஹத்தநு -என்று வேறு ஒரு ஒருத்தரால் அடக்கியாள ஒண்ணாதே காணவே பிரதிபஷம் முடியும்படியான
ஸ்ரீ சார்ங்கத்தை உடைய சக்கரவர்த்தி திருமகனை

இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய வீரத்துக்கும் அழகுக்கும் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தோற்று
அவர்கள் திருவடிகளிலே – இறைஞ்சினேனே—-
ஸ்ரீ பரத ஆழ்வானுக்குத் தோற்ற ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் போலே –

————————————————————-

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
கொத்துக் கொத்தாக அலருகிற பூக்களை உடைய -சுருண்டு அழகியதான குழலை உடைய கைகேயி –
இத்தால் தன் ஒப்பனையாலும் அழகாலும் ஸ்ரீ சக்கரவர்த்தியைத் தானிட்ட வழக்காம் படி
பண்ணிப் பிரமிக்க வல்லளான கைகேசி சொல்லால்-
ஸ்ரீ சக்கரவர்த்தி வாய் திறக்க மாட்டாதே இருக்க -பிள்ளாய் -உங்கள் ஐயர் உன்னைக் காடேறப் போகச் சொல்லா நின்றார் –
என்று கைகேயி சொன்ன வார்த்தையாலே –

தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
குல க்ரமா கதமதாய் வருகிற படை வீட்டை சந்யசித்து -இவள் சொன்னாள் என்று போகைக்கு
பிராப்தி இல்லாமையைக் காட்டுகிறது

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை -இன்று தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
ஸ்ரீ சித்ரகூடத்திலே எழுந்தி அருளி இருக்கிற இருப்பு தான் பெறாதே பிற்பட்டார்க்கும் இழவு தீர சர்வ காலத்திலும்
அனுபவிக்கைக்காக திருச் சித்ரகூடத்திலே வர்த்திக்கிறவனை

எத்தனையும் கண் குளிர காணப் பெற்ற
இவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண் குளிரும்படி –
காணப் பெற்ற-
கேட்டே போகை அன்றிக்கே கண்டு அனுபவிக்கப் பெற்ற

இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே—
உகந்து அருளின தேசங்களை உடைய ஸ்லாக்கியமான பூமியில் உள்ளார்க்கு சதா பஸ்யந்தி-பண்ணி இருக்கையே-
ஸ்வ பாவமான நித்ய ஸூரிகளும் ஒவ்வார் –
இங்கு கண்ணுக்கு விஷயம் புறம்பே உண்டாய் இருக்கச் செய்தே
அத்தை த்யஜித்து காண்கிறவர்கள் -அவர்கள் அதுவே ஆசையாக இருக்கிறவர்கள் இறே –

———————————————————————————–

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று

வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி

கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி

கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி
இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து

சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்-தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான
பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்

திரிதலால் தவமுடைத்து தரணி தானே –
இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது –

——————————————————-

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –10-6–

தன மருவு வைதேகி பிரியல் உற்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே –
ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு
ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை
ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –
தனமருவு வைதேகி -என்று
விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –

வன மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று
வாலிக்கு அஞ்சி காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸ்ரீ ஸூக்ரீவனை
சிநேக பூர்வகமாகக் கட்சி கொண்டு –அதற்காக அதிபல பராக்ரமான வாலியை நிரசித்து

இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
இலங்கைக்கு நிர்வாஹகன் என்றும் ராஷேச்வரன் என்றும் மோஹித்து இருக்கிறவனுடைய அபிமானமும் சீற்றமும் அடங்கும் படி
ஸ்ரீ திருவடி வாலிலே நெருப்பை இட்டு சுடுவித்தவனை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
அக்காலத்தில் அனுபவிக்கப் பெற்றிலோம் என்னும் இழவு தீரே இங்கே நித்ய சந்நிஹிதனாக இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனான ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை

ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –
அவனுடைய வடிவு அழகிலும் சௌலப்யத்திலும் ஈடுபட்டு ஏத்துமவர்கள் திருவடிகளிலே ஏத்தினேனே –

———————————————————————-

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான
அம்பை விட்டு மருகும்படியாக செய்து

குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத்
தூரத்து வழி செய்து அந்தக் கரையிலே போய்

எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்-இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
சத்ருக்களை எரிக்கக் கடவதாய் நெடிதான வேலை உடைய ராஷசரோடே-லங்காதிபதியான ராவணனை
அவன் உகந்த பிராணனை ஹரித்து -அவன் தம்பிக்கு ராஜ்யத்தையும் கொடுத்து

திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
ஸ்ரீ பிராட்டியோடு கூட பிரிந்த பிரிவு எல்லாம் மறக்கும் படி இனிது அமர்ந்து அருளிய
ஐஸ்வர்யம் உடையவன் தன்னை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே—
ராஜ்ஜியம் பண்ணி இருக்கிறவன் திருவடிகளைக் கொடுக்கை யாகிற ராஜ்ஜியம் ஒழிய அதற்கு எதிர்த்தட்டாக
ஸ்வ தந்த்ர்யத்தைப் பார்க்கும் ராஜ்யத்தை ராஜ்யமாக வேண்டேன் –

————————————————————-

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து

அரசு எய்தி
ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

அகத்தியன் வாய் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு –
வேறு க்ர்த்யம்சம் இல்லாமையாலே பொது போக்காக தான் முன் கொன்ற ராவணனுடைய பூர்வ வ்ருத்தாந்தங்களை அடைய
ஸ்ரீ அகஸ்த்ய பகவான் விண்ணப்பம் செய்யக் கேட்டு

மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஜகம் அடைய உஜ்ஜீவிக்கும் படி பெற்ற ஸ்ரீ குசலவர்கள் பேச தம்முடைய வ்ருத்தாந்தமான
ஸ்ரீ இராமாயண கதையை கேட்டு அருளினவர் நித்ய வாஸம் பண்ணுகிற

தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே—
என்னுடைய நாதனுடைய வ்ருத்தாந்தத்தை ஸ்ரீ திருவடியைப் போலே சர்வ இந்த்ரியங்களாலும் அனுபவிக்கப் பெற்ற நாம்
தேவ ஜாதி அனுபவிக்கிற அமிர்தத்தை ஒன்றாக மதியோமே –

——————————————————————————-

செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட
திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளம் தன்னை
வுடையோம் மற்று உ று துயர் அடையோம் அன்றே —10-9–

செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
மிக்க தபஸ்சை உடையனாய் -ஷூத்ரனான ஜம்புகனைத் தலை யறுத்து

செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி –
விலஷணனான பிராமணனுடைய புத்திரன் பிராணனை மீட்டு –
ஸ்ரீ அஹஸ்த்ய பகவான் கொடுத்த பெரு விலையனான ஹாரத்தையும் சாத்தி யருளி
ஸ்ரீ திரு வயோத்யையிலே புகுந்து லவணா ஸூரனை ஸ்ரீ சத்ருகன ஆழ்வானை விடுவித்து வீர ஸ்வர்க்கத்திலே குடியேற்றுவித்து

முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் உறைவானை –
ஸ்ரீ துர்வாசவினுடைய சாபத்தாலே -த்விதீயம் மேந்த்ராந்தமா நம் -என்கிறபடியே தம்முடைய
பிராண பூதரான ஸ்ரீ இளைய பெருமாளுக்கு விடை கொடுத்து
அப்படிப்பட்ட தன்னைப் பின்புள்ளார் காணப் பெறாத இழவு தீர ஸ்ரீ திருச் சித்ர கூடத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை

மறவாத வுள்ளம் தன்னை வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே —
இப்படிப்பட்ட சௌலப்யத்தை அநவரத பாவனை பண்ணி இருக்கிற நமக்கு –
ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு இனி இல்லை –

————————————————————————

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —10-10–

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அபிவ்ர்ஷா பரிம்லா நா -என்று வ்யதிரேகத்திலே அவை பட்டது அறிந்து அருளுகையாலே –
நோசா சாக்தம் அயோத்யாயாம் ஸூ ஷூமம் அபித்ர்ச்யதே-திர்யக்யோநி கதாச்சான்யே சர்வே ராம அநு வ்ரதா-என்கிறபடியே
ஸ்ரீ இளைய பெருமாளோபாதி ஸ்ரீ பரம பதத்துக்கு போக விட்டு

அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை-வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
சர்ப்ப ஜாதிக்கு ஜன்ம சத்ருவான ஸ்ரீ பெரிய திருவடியை மேற்கொண்டு அசூர வர்க்கத்தை வென்று –
அந்த வீர ஸ்ரீ விளங்குகிற திருத் தோள்கள் நாலோடும் கூட -அங்குள்ளார் உகக்கும் படி எழுந்து அருளி

விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
ஸ்ரீ பரம பதத்திலே போய்ப் புக்கு தன் மேன்மை எல்லாம் தோற்றும்படியான ஸ்ரீ ஈஸ்வரனை

தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —
அவ்விருப்பில் ஒன்றும் குறையாமே காலதத்வம் உள்ளதனையும் இங்கே நமக்காக நித்ய வாஸம் பண்ணுமவனை
அநந்ய பிரயோஜனரான நீங்கள் அவனை ஆஸ்ரயித்து க்ருத்தார்த்தர் ஆகுங்கோள் –

—————————————————————————————–

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

நிகமத்தில் –
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து
நித்ய வாஸம் பண்ணுகிறவனை

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –
வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய
கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் –
வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த

நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–
அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: