ஸ்ரீ இராமாயண சாரம் ஆகிய பெருமாள் திருமொழி –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த தனியன் –
இன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் —
அவதாரிகை –
இதில் -திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் திர்யக்குகள் தான் திரு நாமங்களைச் சொல்ல வற்றாய் இறே இருப்பது -ஆகையால் –
சகு நா நூதித ப்ர்ஹ்ம கோஷம் -என்றும்
பூ மருவி புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குளறும் புனல் அரங்கமே -பெரிய ஆழ்வார் திரு மொழி 4-9-5–என்றும்
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறுகாலைப் பாடும் -பெரிய ஆழ்வார் திரு மொழி-4-2-8-என்றும்
எல்லியம் போது இரு சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி -பெரிய ஆழ்வார் திரு மொழி -4-8-8-என்றும்
அள்ளியம் பொழில் வாயிருந்து வாழ் குயில்கள் அரியரி என்று அவை அழைப்ப -என்றும்
செவ்வாய்க் கிளி நான் மறை பாடும் -என்றும் -சொல்லுகையாலே
ஸ்ரீ ராம பக்தரான குல சேகரர் ஸ்ரீ ராமன் திரு நாமத்தை அவற்றுக்குக் கற்ப்பித்துக் கேட்குமா போலே –
ஸ்ரீ குலசேகர பக்தரானவர்களும் அவர் திரு நாமங்களை அவற்றின் வாயாலே கேட்க
இச்சிக்கிற படியை சொல்லுகிறதாகவுமாம்
அன்றிக்கே –
ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றும்
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் என்றும் இறே
ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ ரெங்க தாமத்திலும் எம்பெருமானார் மண்டி இருப்பது –
ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் –
எல்லையில் சீர்த் தயரதன் தன மகனாய்த் தோன்றிற்று முதலா தன்னுலகம் புக்கதீறா -என்றும்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் இன்றே -என்றும்
ஸ்ரீ ரங்க யாத்ரா திநே திநே -என்றும் –
ஸ்ரீ அணியரங்கன் திரு முற்றம் -என்றும்
ஸ்ரீ அரங்கன் அடியிணைத் தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் –என்றும்
இரண்டையும் ஆதரித்துக் கொண்டு இறே போருவது
ஆகையால் -கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமானுசன் -என்னும்படி
ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள் இடத்தில் யதி ராஜரான ஸ்ரீ எம்பெருமானார் மடு விட்டு இருப்பது –
அற்ற பத்தர் அபிமானத்திலே ஒதுங்கிப் போருகிற ஸ்ரீ ஆழ்வான் போல்வரை யாய்த்து –
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே -என்கிறார் ஆகவுமாம் –
கிளியும் கற்ப்பித்ததே சொல்லும் –
இவரும்-கற்பியா வைத்த மாற்றம் இறே சொல்லுவது –
மேல் சொல்லுமவர் அன்றே -சொன்னதைச் சொல்லுமவர் இறே
ஆகையால் ஸ்ரீ கூரத் தாழ்வான் போல்வாரைக் கொண்டு ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வைபவத்தை கூறுவிக்கிறார்–
இன்னமுத மூட்டுகேன் -கூறு என்கிறார்
இன்னமுத மூட்டுகேன்
இன்னடிசிலொடு பாலமதூட்டி எடுத்த என் கோலக் கிளியை -என்னக் கடவது இறே –
இங்கு -தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமத்தை இறே ஊட்டி வளர்த்தது –
அது தோன்ற ஆழ்வான் வலத் திருச் செவியிலே முன்பு பிரசாதித்த த்வயத்தை மீளவும் பிரசாதித்து அருளிற்று –
இங்கே வா –
என்று -திரு நாமம் சொல் -என்றத்தால் வடிவில் பிறந்த ஹர்ஷத்தை கண்டு வர அழைக்கிறது
பைங்கிளியே
பசுத்து மரகதம் போலே இருக்கிற மடக் கிளியே
இத்தால் –
என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசும் சாம நிறத்தனன் –
என்னும் படியான ரூப சௌம்யத்தைச் சொல்லுகிறது
பரமம் சாம்யம் உபைதி இறே
ஏதுக்காக என்னை அழைக்கிறது என்னில்
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ் சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன்
எங்கள் குலசேகரன் என்றே கூறு -என்கிறது
தென்னரங்கம் பாட வல்ல சீர் பெருமாளாவது –
இருளிரிய -தேட்டரும் திறல் தேன் –மெய்யில் வாழ்க்கை -என்கிற மூன்று திருமொழியிலும் பாடி
முடிவிலும் -யாவரும் வந்து அடி வணங்க வரங்க நகரத் துயின்றவனே -என்றும்
மற்றும் ஸ்ரீ திருமலை முதலாய் இருக்கிற ஆராமங்களான ஸ்ரீ திருப்பதிகளையும்
காகுத்தா கண்ணனே -என்றும் அர்ச்சாவதாரத்துக்கு அடியான ஸ்ரீ அவதாரங்களையும் அருளிச் செய்து தலைக் கட்டுகையாலும்
அவர் தாம் -செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ஆகையாலும்
வெண்ணெய் உண்ட வாயனாகையாலும் -எல்லாம் திருவரங்கத் திருப்பதி விஷயம் ஆகலாம் இறே
பொன்னஞ் சிலை சேர் நுதலியர் வேள்
பொன்னின் -என்றும் பாடம்
ஸ்பர்ஹணீயமான வில்லுக்கு சதர்சமான புருவத்தை முகத்திலே சேர்ந்துடைய ஸ்திரீகளுக்கு ரஞ்ச நீயராய் இருக்கிறவர் –
வேள் -காமன்
கந்தர்ப்ப இவ மூர்த்திமான் -என்றும் –
காமர் மானேய் நோக்கியர்க்கே –என்னக் கடவது இறே
இத்தால் -ஜ்ஞானத்துக்கு மேலான ஸ்வரூப தாந்தியை உடையவர்களுக்கு தர்ச நீயமாய் இருக்கிறவர் -என்றபடி
சேரலர் கோன் –
சேர வம்சத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் ராஜா -என்றபடி
ராஜாதி ராஜ சர்வேஷாம்
கோன் -ராஜா -குடிக்கு நிர்வாஹகர் -என்றபடி
எங்கள் குலசேகரன்
பிரபன்ன குல சேகரர் என்கை-இராமானுசன் என் குலக் கொழுந்து -என்னுமா போலே
குலசேகரன் என்றே கூறு-
நான் வளர்த்த சிறு கிளி பைதலே இன் குரல் நீ மிழற்றாதே குலசேகரன் என்றே கூறு
கூறின வாய்க்கு அமுதமாய திருமால் திரு நாமமான இன்னமுத மூட்டுகேன் -ஆகையால் குலசேகரன் என்றே கூறு
வக்தவ்யம் ஆச்சார்யா வைபவம் -என்னக் கடவது இறே –
————————————————
ஸ்ரீ மணக்கால் நம்பி அருளிச் செய்த தனியன் –
ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரங்கொடு குடப்பாம்பிற் கையிட்டவன் மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகா மணியே –
அவதாரிகை –
இதில் அவர் ஸ்ரீ வைஷ்ணவர் திறத்தில் பஷபாதித்து இருக்கிற படியைச் சொல்லுகிறது –
ஆரங்கெடப்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில் அவர்க்கு உண்டான பிராவண்யத்தைக் குலைக்க வேணும் என்று
மந்த்ரிகள் அவர் திரு ஆரத்தை எடுத்து மறைய வைத்து அவர்கள் பேரிலே ஆரோபிக்க -அத்தைக் கேட்டு
பரனன்பர் கொள்ளார் என்று –
பர வஸ்துவிலே பக்தி பண்ணுமவர்கள் பர வஸ்துவைக் கொள்ளார் என்று பிரதிஜ்ஞ்ஞை பண்ணி –
பரன் அன்பர் அல்லாதவர்கள் இறே -பிறர் நன் பொருள் தன்னை நம்புவது
இப்படி யாகையாலே
அவர்களுக்கே வாரங்கொடு-
அவ்வளவு அன்றிக்கே அவர்கள் விஷயத்திலே பஷபதித்தது –
குடப்பாம்பிற் கையிட்டவன்
பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி -என்கிறபடியே பாம்புக் குடத்திலே அதின் படத்திலே படக் கையிட்டு
அவர்கள் ஆபரணம் எடார்கள் என்று பணத்திலே கையிட்டவர்
அப்படி செய்தவர் தான் அல்பரோ என்னில்
மாற்றலரை வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்-
சத்ருக்களை நிரசிக்கும் சார்வ பௌம்யர் -என்கிறது –
சத்ருக்கள் வீர்யத்தை நிர்வீர்யமாகப் பண்ணின இது எத்தாலே என்னில்
செங்கோல் –
ஆஞ்ஞையாலே
இருளார் வினை கெட செங்கோல் நடாவுதிர்
கொல்லி காவலன் –
குருகை காவலன் -என்னுமா போலே -கொல்லி -என்கிற நகரத்துக்கு நிர்வாஹகர் -என்கை
வில்லவர் கோன்
அவாந்தர ராஜாக்களுக்கும் அதி ராஜன் -என்கை
அன்றிக்கே
வில்லவர் கோன் -என்று வில்லவர் -என்று பேர்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்றார் இறே
கோழி -உறையூர் -உறையூருக்கும் இறையவர் என்றபடி -அது சோழன் ராஜ தானி –
சேரன் குலசேகரன்
சேரனுடைய குலத்துக்கு சேகரன் –
குலசேகரர் -திரு நாமம்
இப்படி ராஜாதி ராஜர் ஆகையாலே –
முடி வேந்தர் சிகா மணியே -என்கிறது
முடி வேந்தர் சிகா மணி யாவது –
மணி மகுடம் தாழ துளங்கு நீண் முடி யரசர் -அடியிலே வணங்குகையாலே-
மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் -என்று தமக்கு இருக்குமா போல –
தாமும் அவர்களுக்கு சிகா மணி போலே சேகரிக்குமவராய் அலங்கார வஹராய் இருக்கை –
பெரு மணி வானவர் உச்சி வைத்த —
ஈஸ்வராணாம் ஸ்ரீ மத கிரீட தட பீடிதபாத பீடம் -என்னக் கடவது இறே -இவர் பெருமாளை
குலசேகரப் பெருமாளான இவர் பெருமையும் அப்படியே
இப்படி முடி வேந்தர் சிகாமணியான இவரும் ஒருவரே என்னுதல்
இப்படி பெரிய வேண்டப்பாட்டை உடையவரே குடப் பாம்பில் கையிடுவதே -என்று ஈடுபாடு ஆதல்
இத்தால் -அரங்கன் மெய்யடியார்கள் தம் எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனனாம் -என்றத்தை
அனுஷ்டான பர்யாவசாயியாம் படி அனுஷ்டித்த பிரகாரத்தை சொல்லிற்றாய்த்து –
———————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
June 28, 2016 at 2:52 pm |
வணக்கம்
ஸ்ரீ ராமானுஜரும் ஒரே ஒரு தனியன் தவிரத் தமிழில் வேறு எதுவும் எழுதவில்ல்லை அந்தப் பாடல்
வருமாறுஇன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு –