திருவாய்மொழி – -2-5– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

கஜ ஆகர்ஷதே தீரே -க்ராஹ ஆகர்ஷதே ஜலே -என்னுமா போலே இறே-கீழே ஆடியாடியிலே ஆழ்வாருக்கு பிறந்த வ்யசனம்-
அது எல்லாம் ஆறும்படியாக-அதந்த்ரிசமூபதி பரஹித ஹஸ்தம் -என்கிறபடியே பெரிய த்வரையோடே ஆயுத ஆபரணங்களை
அக்ரமமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு
ஆனையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையிலுமாக -அணைத்து எடுத்து கொண்டு கரையிலே ஏறி
க்ராஹம் சக்ரேண மாதவ -என்கிறபடியே -பிரஜையின் வாயிலே முலையைக் கொடுத்து கிரந்தியைச் சிகித்சிப்பிக்குமா போலே –
பெரிய பிராட்டியாரும் தானுமாக இரண்டுக்கும் நலிவு வாராமே திரு வாழியாலே விடுவித்து சாத்தி யருளின
திருப்பரி வட்டத் தலையை சுருட்டி திருப் பவளத்திலே வைத்து அதினுடைய புண் வாயை வேது கொண்டு
திருக் கையாலே குளிர ஸ்பர்சித்து நின்றாப் போலே
இவரும்-வலம் கொள் புள்ளுயர்த்தாய்—2-4-4-என்று கூப்பிட்ட ஆர்த்த நாதம் செவிப்பட்டு -அழகிதாக நாம் ஜகந்நிர்வஹணம் பண்ணினோம்
-நாம் ஆரோனோம் என்று -பிற்பாட்டுக்கு-லஜ்ஜா பயங்களாலே விஹ்வலனாய்
-தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை திவ்யாயுதங்கள் சேர்ந்த சேர்த்தி இவை எல்லாவற்றோடும் வந்து சம்ச்லேஷித்து
அத்தாலே ஹ்ருஷ்டனாய் க்ருதக்ருத்யனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தாம் பெற்ற பேற்றை- பேசி அனுபவிக்கிறார் –

———————————————————–

அவதாரிகை –

அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ என்று இவர் ஆசைப் பட்ட படியே வந்து கலந்தான் -என்கிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

அந்தாமத்தன்பு செய்து –
அழகிய தாமத்திலே பண்ணக் கடவ ச்நேஹத்தை -என் பக்கலிலே பண்ணி -தாமம் என்று ஸ்தானமாய்-
மஞ்சா க்ரோசந்தி போலே பரமபதத்தில் உள்ளார் பக்கலிலே பண்ணக் கடவ ச்நேஹத்தை கிடீர் என் ஒருவன் பக்கலிலும் பண்ணிற்று
தாமே அருளிச் செய்தார் இறே -முற்றவும் நின்றனன் -1-2-6- என்று
என்னாவி -சேர்
அவன் மேல் விழ -தான் இறாய்த்தமை தோற்றுகிறது
இவர் பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்து இறாயா நின்றார்
இதுவே ஹேதுவாக அவன் மேல் விழா நின்றான்
கமர் பிளந்த விடத்தே நீர் பாய்ச்சுவாரைப் போலே –
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -2-4-7–என்கிற ஆவியிலே காணும் வந்து சேருகிறது
சேர்
விடாயர் மடுவிலே சேருமா போலே வந்து சேரா நின்றான் –
இப்படி மேல் விழுகைக்கு ஹேது என் என்னில்
அம்மானுக்கு –
வகுத்த ஸ்வாமி யாகையாலே –
நித்ய விபூதியில் உள்ளாரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தியை உடையவனுக்கு –
இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் ஆயிற்று –
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே நித்ய ஸூரிகளோடு வந்து கலந்தான் –
என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை ஆண்டான் பணிக்கும் படி
ஆனால் அவர்களை ஆழி நூல் ஆரம் -என்றோ சொல்லுவது என்னில் சின்மயராய் இருக்கச் செய்தே பாரதந்த்ர்யம் சித்திக்காக
தங்களை அமைத்து வைத்து இருக்கும் அத்தனை இறே
அங்கன் இன்றிக்கே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி -இவரோடு சம்ச்லேஷிப்பதற்கு முன்பு அவனோடு ஒக்க இவையும்
அனுஜ்ஜ்வலமாய் அசத்சமமாய் -இவரோடு கலந்த பின்பு உஜ்ஜ்வலமாய் சத்தை பெற்ற படி சொல்லுகிறது -என்று
-கல்ப தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடும் இறே –

அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
அழகிய மாலையானது முடி சூடி வாழத் தொடங்கிற்று –
அன்றியே வாண் முடி என்றாய் -வாள் -என்று ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமான முடி என்றுமாம்
தாமம் -என்று தேஜஸ் ஆகவுமாம்
தேஜோ ரூபமான ஸ்ரீ பாஞ்சசன்யம் -தேஜோ ரூபமான திருவாழி-நூல் -திரு யஜ்ஞ்ஞோபவிதம் -ஆரம் -திருவாரம் –
இவை நித்ய ஸூரிகளுக்கு உப லஷணம்
உள –
நித்யரான இவர்கள் உளராகை யாவது என் -ச ஏகாகீ ந ரமேத-என்கிறபடியே இவரோடு கலப்பதற்கு முன்பே
அந்த விபூதியும் இல்லையே தோற்றுகையாலே –

செந்தாமரைத் தடங்கண் –
ஆர்த்தி எல்லாம் தீர இவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிற நிலை –
இவரோடு கலந்த பின்பாயிற்று திருக் கண்கள் செவ்வி பெற்றதும் விகசிதம் ஆயிற்றதும்
ஏக ரூபம் ஆனவற்றுக்கு எல்லாம் இதொரு விகாரம் பிறக்கிறது இறே
சதைக ரூப ரூபாயா -என்கிற இடத்தில் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிறதாயிற்று அத்தனை இறே
செங்கனிவாய் செங்கமலம்
சாடுசதங்கள் சொல்லுகிற திருவதரம் இருக்கிறபடி –சிவந்து கனிந்த அதரமானது -சிவந்து கமலம் போலே இரா நின்றது
செந்தாமரை யடிக்கள் –
நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்று விழும் திருவடிகள் –திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி
செம்பொன் திருவுடம்பே —
ருக்மாபம் -என்னும்படி யாயிற்று இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர் தான் –

————————————————————————————-

அவதாரிகை –

தம்மோடு கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி -தம் உடம்பைப் பற்றி ப்ரஹ்ம ஈசா நாதிகள் சத்தையாம் படி
இருக்கிறவன் தான் என் உடம்பைப் பற்றி தாம் சத்தையாம்படி இரா நின்றான் என்கிறார் –

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

திருவுடம்பு வான்சுடர் –
அணைந்த போதை ஸ்பர்ச ஸூகம் கொண்டு அருளிச் செய்கிறார் இறே
ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை விபூதி இல்லை என்கிறவர்கள் முன்பே ஆப்ததமரான இவர் திருவுடம்பு வான் சுடர் -என்னப் பெறுவதே –
ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை குணம் இல்லை என்கிறவர்கள் பண்ணி வைக்க மாட்டாத பாபம் இல்லை
அவர்களை அனுவர்த்தித்து அது கேட்க விடாதபடி பெருமாள் நமக்கு பண்ணின உபகாரம் என் -என்று அருளிச் செய்வர் ஜீயர்
-பட்டர் மூலம் சம்ப்ரதாயம் வந்ததை அனுசந்தித்து நஞ்சீயர் அருளிச் செய்த படி
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் துவக்கு உண்கிற திருமேனி இறே
இச்சா க்ருஹீதா அபிமதோறு தேஹ-என்று தனக்கும் அபிமதமாய் இருப்பதொரு ஓன்று இறே
தான் மதித்தார்க்கு ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்று கொடுப்பதும் திருமேனியையே
வான் சுடர் –
முதலிலே தேஜோ ரூபமான திருமேனி மிகவும் ஒளி பெற்றது இவரோட்டை கலவியாலே –
புறம்பு ஒளியாய் உள்ளு மண் பற்றி பற்றி இருக்கை யன்றிக்கே -நெய் திணுங்கினால் போலே தேஜஸ் தத்வமேயாய் இருக்கை –
தேஜசாம் ராசிமூர்ஜிதம் -என்கிறபடியே பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தே -ஷாட் குண்ய விக்ரஹன் -என்கிறது
குணங்களுக்கு பிரகாசகமாகை சுட்டி இறே –
செந்தாமரைக் கண்
கடாஷத்தாலே வவ்வலிட்டு சொல்லுகிற வார்த்தை –
கை கமலம்
கரேண ம்ருதுநா -என்கிறபடியே அணைத்த கை
இவர் ஒரு கால் சொன்னதைப் பல கால் சொல்லுவது என் என்னில் முத்துக் கோக்க வல்லவன் முகம் மாறிக் கோத்த வாறே
விலை பெறுமா போலே -இவரும் ஒரோ முக பேதத்தாலே மாறி மாறி அனுபவிக்கிறார்
திருவிடமே மார்வம்
அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டியாருக்கு இடம் திரு மார்பு
அயனிடமே கொப்பூழ்
சதுர்தச புவன ஸ்ரஷ்டாவானா ப்ரஹ்மா திரு நாபி கமலத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்கும்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஓரிடம் என்னாதே-ஒருவிடம் என்கிறது -ஒருவுதல் நீங்குதலாய்-நீங்கின இடம் என்றபடி –
என் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் ருத்ரனுக்கு இருப்பிடமாயும் இருக்கும்
தாமஸ தேவதை இருப்பிடம் ஆகையாலே -நீங்கின இடம் என்று அநாதார உக்தி இருக்கிறபடி –
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –
என்னோடு வந்து கலக்கிற இடத்தில் -நீங்கின இடம் ஒன்றும் இன்றிக்கே வந்து கலந்தான் –
அநந்ய பரையான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து வைப்பதே –என்று இந்த சீல குணத்தை
அனுசந்தித்து வித்தராய் இருந்தார் முன்பு -ஏறவனை பூவனைப் பூ மகள் தன்னை -2-2-3-
இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே -அது பரத்வம் என்று தோற்றி இது என்ன சீல அதிசயமோ என்கிறார் –
ஒரு விடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு திருவுடம்பு என்று தொடங்கி–அரனே ஒ -என்று அந்வயம் –

————————————————————————————–

அவதாரிகை –

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன் –
தான் என்னைப் பற்றி உளனாய் என்னோடு வந்து கலந்தான் என்கிறார் –

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

என்னுள் கலந்தவன் –
அகஸ்ய ப்ராதா -என்னுமா போலே நிரூபகம் இருக்கிறபடி –நாராயணன் -வா ஸூ தேவன் -என்னுமா போலே என்னுள் கலந்தவன் -என்று காணும் அவனுக்குத் திரு நாமம் –
செங்கனிவாய் செங்கமலம்
சிவந்து கனிந்த வாய் -செங்கமலம் போலே இரா நின்றது
மின்னும் சுடர் மலைக்குக்
வாட்டமில் புகழ் வாமனன் கலந்த பின்பு வளர்ந்த படியும் -புகர் பெற்ற படியும் -தரையிலே கால் பாவி தரித்த படியும்
-திண்மையை உடையனான படியும் பற்ற -மலை -என்கிறார் –
கண் பாதம் கை கமலம்
முகம் அறிந்து கோத்த வாறே முத்து விலை பெறுமா போலே இவரும் திவ்ய அவயவங்களைச் சரியான விதத்திலே சேர்த்து அனுபவிக்கிறார் –
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
ப்ரவாஹ ரூபத்தாலே நித்தியமான சகல லோகங்களும் தன சங்கல்பத்தைப் பற்றிக் கிடக்கிறன
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே —
தன் திரு உள்ளத்தை அபாஸ்ரயமாக யுடைத்தது அன்றிக்கே இருக்கிற வஸ்து யாதொன்று -அது நாஸ்தி சப்தத்துக்கு அர்த்தமாகிறது
அப்ரஹ்மாத்மகமாய் இருப்பதொரு பதார்த்தம் தான் இல்லை –ந ததஸ்தி விநா யத் ஸ்யாத்–ஸ்ரீ கீதை -10-39-என்றான் இறே –
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே —
அவை இவனைப் பற்றாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது ஸ்வரூபத்தாலே
இவன் இவரை கலவாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது பிரணயித்வ குணத்தாலே –

——————————————————————————————-

அவதாரிகை –

நீர் ஒரு கால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லி இங்கனே கிடந்தது படுகிறது என் -என்ன
நான் அது தவிருகிறேன் -நீங்கள் இவ்விஷயம் ஒரு கால் இருந்த படியே எப்போதும் இருக்கும் படி பண்ண வல்லி கோளோ -என்கிறார்

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-4-4-

எப்பொருளும் தானாய் –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாம் படி -தான் பிரகாரியாய் –
ஸ்வ அதீநம் அல்லாதோரு பதார்த்தத்தைப் பெற்றுத்தான் இப்பாடு படுகிறானோ
மரகதக் குன்றம் ஒக்கும்
கீழ் -ஜகதாகாரணனாய் நிற்கும் நிலை சொல்லிற்று
இங்கு -அசாதாரண விக்ரஹம் தன்னையே சொல்லுகிறது
கீழ் -மின்னும் சுடர் -என்று தம்மோட்டைக் கல்வியால் வந்த புகரைச் சொல்லிற்று
அதற்கு ஆஸ்ரயமான அசாதாரண விக்ரஹத்தை சொல்லுகிறது இங்கே –
அப்பொழுதைத் -தாமரைப் பூக்
கீழ் தாமரையைச் சொன்ன விடம் தப்பச் சொன்னோம் என்று அழித்து பிரதிஜ்ஞை பண்ணுகிறார்
கேவலம் தாமரையை ஒப்பாகச் சொல்லில் செவ்வி யழிந்த சமயத்திலும் ஒப்பாகத் தொடங்குமே
அப்போது அலர்ந்த செவ்வியை உடைத்தான தாமரை
கண் பாதம்
கண் -பந்தத்தை விளைக்கும் கண்
பாதம் -பந்தம் அறிந்தால் அனுபவிக்க இழியும் துறை
கை கமலம்
தம்மோட்டை ஸ்பரசத்தாலே செவ்வி பெற்ற படி
இவை எல்லாம் அப்போது அலர்ந்த கமலம் போலே இருக்கும் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே —
கலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது -ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது
ஓராண்டு அனுபவிப்பது கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும்
கீழ்ச் சொன்ன அப்பொழுதைக்கு அப் பொழுது என்னாராவமுதமே –
பூர்வ ஷணத்தில் அனுபவம் போலே வல்ல வாயிற்று உத்தர ஷணத்தில் அனுபவம் இருப்பது
தாராவாஹிக விஜ்ஞானத்தில் காலோபஷ்டம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே-ஜ்ஞானத்துக்கு
-இங்கு விஷயம் தானே பேதியா நின்றதாயிற்று –

—————————————————————————————

அவதாரிகை –

இத்தனை போதும் தாமரையை சிஷித்து உபமானமாகச் சொல்லிப் போந்தார் -விஷயத்திலே அவகாஹித்தவாறே
நேர் கொடு நேர் உபமானமாக நின்றது இல்லை -அவற்றைக் கழித்து உபமேயம் தன்னையே சொல்லுகிறார்-

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5–5–

ஆராவமுதமாய்
எப்போதும் புஜியா நின்றாலும் மேன்மேல் என த்ருஷ்ணையை விளைக்கும் அமிர்தம் போலே நிரதிசய போக்கினாய்
யல்லாவி யுள் கலந்த
இப்படி போக்யம் குறைவற்றால் போக்தாக்களும் அதுக்கு அனுரூபமாகப் பெற்றதோ
அல்லாவி
ஒரு வஸ்துவாக என்ன ஒண்ணாத என்னுடைய ஆவியோடு கிடீர் வந்து கலந்தது
தன்னையும் அறிந்திலன் என்னையும் அறிந்திலன்
அல் ஆவி
அசித்தைக் காட்டிலும் தம்மை குறைய நினைத்த படி
அசித்துக்கு இழவு இல்லையே -தன் ஸ்வரூபத்திலே கிடந்ததே
சேதனனாய் இருந்து வைத்து ஜ்ஞானம் பலம் இல்லாமையாலே அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்து இருக்கிறார்
உள் கலந்த
பெரு மக்கள் உள்ளவரான நித்ய ஸூ ரிகள் அளவில் கலக்குமா போலே தான் கலந்தானோ
என்னை ஆராவமுதாக நினைத்து -என்னளவாகத் தன்னை நினைத்துக் கிடீர் கலந்தது
உள் கலந்த
ஏக தத்வம் என்னலாம் படி கலந்தானாயிற்று
அவன் இப்படி கலந்தமை நீர் என் கொண்டு அறிந்தது
அவன் இப்படி கலந்தமை நீர் என் கொண்டு அறிந்தது என்னில் -வடிவிலே தொடை கொண்டேன் -என்கிறார்
காரார் கரு முகில் போல் –
என்னோட்டைக் கலவி பெறாப் பேறு என்னும் இடம் தன் வடிவிலே தோற்ற இரா நின்றான்
கார் காலத்திலே ஆர்ந்த கருமுகில் போலே -என்னுதல்
கார் என்று கறுப்பாய்-கருமை மிக்க முகில் என்னுதல்
இவ்வடிவை உடையவன் கிடீர் என்னோடு வந்து கலந்தான் -என்கிறார் –
என்னம்மான் கண்ணனுக்கு
அவ்வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்ட கிருஷ்ணனுக்கு –
நேராவாய் செம்பவளம்
பவளமாகில் சிவந்தது அன்றோ இருப்பது என்னில் பிரவாளத்தை ஸ்படிக ஸ்தானத்திலே யாக்கி அவ்வருகே சிறந்த பவளத்தை கற்பித்தால்
அப்படி சிறந்த பவளமாயிற்று ஜாதியாக திருப் பவளத்துக்கு ஒப்பாகாதது
கண் பாதம் கை கமலம் நேரா –
குளிர நோக்கின கண் –நோக்குக்குத் தோற்று விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை எடுத்து அணைக்கும் கை –
இவற்றுக்குத் தாமரை ஜாதியாக ஒப்பாகா –
பேராரம் –
பெரிய வரை மார்பில் பேராரம் என்கிறபடியே -திருக் கழுத்துக்கு இருமடியிட்டுச் சாத்த வேண்டும்படியான ஆரம்
நீண் முடி –
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகம்
நாண்
விடு நாண்
பின்னும் இழை பலவே —
அனுபவித்துப் போம் இத்தனை போக்கி என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ –

——————————————————————————————–

அவதாரிகை –

தம்முடனே கலந்து ஆற்றானாய்-அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணி என்னை அனுபவியா நின்றான் கிடீர் -என்கிறார் –

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு என்னில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

பலபலவே யாபரணம்
ஜாதி பேதமும் வ்யக்தி பேதமும் இருக்கிற படி
திருக்கைக்கு சாத்துமவை என்றால் அநேகம்
அவை தன்னிலே இடைச்சரி கடைச்சரி என்று அநேகமாய் இருக்கும் இறே
பேரும் பலபலவே
அனுபவ சமயத்தில் நாம க்ரஹணத்துக்கு இழிந்த இடம் எல்லாம் துறை
சீலப்பேர் வீரப்பர் அநேகமாய் இருக்கும் இறே
பலபலவே சோதி வடிவு –
திரு நாமத்வாரா காணும் வடிவுகளும் பல
அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையாலே எல்லாம் சோதி வடிவையே இருக்கும் இறே
சௌபரியைப் போலே அநேகம் வடிவைக் கொண்டாயிற்று இவரை அனுபவிக்கிறது
முக்தன் தன்னை அனுபவிக்கும் போது படுமா போலே தான் என்னை அனுபவிக்க பல வடிவு கொள்ளா நின்றான்
பண்பு என்னில்
பிரகாரங்களை அனுசந்திக்கில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
கண்டு கேட்டு உண்டு உற்று மோந்து உண்டாகக் கடவதான ஐந்த்ரிய ஸூகங்களும்
பல பல த்ருஷடி பிரியமாய் இருக்குமவையும் புஜிக்குமவையும் ஸ்ரவண இந்த்ரிய விஷயமாய் இருக்குமவையுமாய் அநேகம் இறே
பாம்பனை மேலாற்கேயோ–
விஷயங்களைச் சொல்லுதல் -அவற்றை அறிக்கைக்கு சாமக்ரியையான ஜ்ஞானங்களைச் சொல்லுதல்
ஜ்ஞானமும் பல உண்டோ என்னில் -விஷயங்கள் தோறும் பேதிக்கும் இறே ஜ்ஞானமும்
ஸ்வ வ்யதிரிக்த விஷயங்களை எல்லாம் விஷயமாக உடையவனாய் -அவற்றை எல்லாம் அறியவும் வல்லனாய்
அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தை யும் உடையவனாய் இருக்கும் இறே
பலபலவே ஞானமும்
இவை எல்லாம் ஒரு விஷயத்திலே உண்டாய் அனுபவிக்கும் என்னும் இடத்துக்கு உதாரணம் காட்டுகிறார்
ஸ்பர்ச இந்த்ரியத்துக்கு உண்டு -க்ராண இந்த்ரியத்துக்கு உண்டு -கண்ணுக்கு இனியதாய் இருக்கும் இவை தொடக்கமானவை எல்லாம் உண்டு இறே
பாம்பணை மேலாற்க்கு -பண்பு என்னில் -பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும்-ஒ –என்று அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

அயர்வறும் அமரர்களாய் இருந்து வைத்து –ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி ராம கிருஷ்ணாதி
யவதாரங்களைப் பண்ணிற்று எல்லாம் எனக்காக கிடீர் என்கிறார் –

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
ஆர்த்த ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே நீர் உறுத்தாமைக்கு-சைத்ய சௌகந்த்ய சௌகுமார்யங்களை யுடையனான
திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளிற்றும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
சுற்றுடைமைக்கும் -செவ்வைக்கும் மூங்கில் போலே இருந்துள்ள தோள் அழகையுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு
பிரதி பந்தகங்களான ருஷபங்கள் ஏழையும் ஒரு காலே ஊட்டியாக நெரித்துப் பொகட்டதும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
மகா ராஜர் நீர் வாலியைக் கொல்ல மாட்டீர் என்ன -அவரை விஸ்வசிப்பைக்காக-தேனை உடைத்தாய் பணைத்து-அடி கண்டு
இலக்கு குறிக்க ஒண்ணாத படியாய் இருக்கிற மரா மரங்கள் ஏழையும் எய்ததும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –
பூவை உடைத்தாய் தொடை யுண்ட -என்னுதல்
நல்ல தொடையை உடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்-ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையனாய்
இவ் வழகு தன்னை நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பித்து அத்தால் வந்த மேன்மை தோற்ற -அழகியதாய்
யுத்த உன்முகமான ருஷபம் போலே மேனாணித்து இருக்கும் இருப்பு
பொன் முடியம் போரேறே –
பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும் -பாம்பணை மேல் -என்று தனித் தனியே க்ரியையாகக் கடவது
இவை எல்லாம் எனக்காகக் கிடீர் என்றுமாம் –

———————————————————————————————–

அவதாரிகை –

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து என் தண்மையைப் பாராதே என்னோடு வந்து கலந்த
இம் மகா குணத்தை என்னால் பேசி முடியாது -என்கிறார் –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரீ –2-5-8-

பொன் முடியம் போரேற்றை –
உபய விபூதிக்கும் கவித்த முடியை யுடையனாய் -அத்தால் வந்த சேஷித்வ வுரைப்புத் தோற்ற இருக்கிறவனை
எம்மானை
தன் சேஷித்வத்தில் எல்லையைக் காட்டி -என்னை சேஷத்வத்தின் எல்லையில் நிறுத்தினவனை
நால் தடம் தோள் தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
நாலாய் பணைத்து இருந்துள்ள தோள்களை
உடையவனாய் தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காண மாட்டாத -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
மீளும்படி இருப்பானாய் இருக்கிற தண் துழாய் மாலையானை
எல்லை காண ஒண்ணாத வஸ்துவுக்கு லஷணம் போலே திருத் துழாய் மாலை –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
அவன் பக்கல் நன்மைக்கு எல்லை காண ஒண்ணாதா போலே யாயிற்று இவர் பக்கல் தீமைக்கு எல்லை காண ஒண்ணாதே இருக்கிறபடி
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
என் அளவு பாராதே -அவிஜ்ஞாதா -என்கிறபடியே என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான் என்னுதல்
அன்றிக்கே -ஆடியாடியிலே விச்லேஷித்த வியசனத்தாலே நான் முடியப்புக -அது காண மாட்டாதே என்னோடு கலந்தான் என்னுதல் –
சொல் முடிவு காணேன் நான் –
என்னோடு வந்து கலந்த ஒரு குணத்தையும் சொல்லில் -ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப் புக்க வேதம் பட்டது படும் அத்தனை –
அவன் என்னை அனுபவிப்பிக்க -அத்தால் எனக்கு பிறந்த ரசம் அனுபவித்து விடும் அத்தனை அல்லது பாசுரம் இட்டுச் சொல்ல முடியாது என்றுமாம்
சொல்லுவது என் சொல்லீரீ –
இதர விஷயங்களை அனுபவித்து அவற்றுக்கு பாசுரம் இட்டுச் சொன்னீர்களாய் இருக்கிற நீங்கள் தான் சொல்ல வல்லிகளோ-

———————————————————————————–

அவதாரிகை –

பாசுரம் இல்லை என்னா கை வாங்க மாட்டாரே -சம்சாரிகளைப் பார்த்து -என் நாயகனான சர்வேஸ்வரனை
எல்லாரும் கூடியாகிலும் சொல்ல வல்லிகோளோ -என்கிறார்

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-

சொல்லீர் என் அம்மானை –
ஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அவற்றுக்கு பாசுரம் இட்டு சொல்லி இருக்கிற நீங்களாகிலும் சொல்ல வல்லி கோளோ –
என் அம்மானை –
தன் குண சேஷ்டிதங்களாலே என்னை முறையிலே நிறுத்தினவனை
என்னாவி யாவி தனை
என் ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய் உள்ளவனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
திவ்யாத்ம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் விக்ரஹ குணங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற படி
அளவிறந்த கல்யாண குணங்களையும் நீல மணி போலே குளிர்ந்த வடிவு அழகையும் என்னை அனுபவிப்பித்தவனை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
நித்யமுமாய் போக்யமுமான அமுதம்
ப்ராக்ருத போக்யன்களுள் தலையான அம்ருதம்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க ஒண்ணாத மோஷ புருஷார்த்த முமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் —
போக்யதைக்கு தாமரைப் போவில் பரிமளத் தோடே
ஒத்து
இதர புருஷ சஜாதீயன் அல்லன் –
பெண் அல்லன் என்றவோ பாதி
ஆண் அல்லன் என்று அது தன்னையும் கழிக்கிறது
இத்தால் உபமான ரஹிதன் -என்றபடி –

———————————————————————————

அவதாரிகை –

என்னோடு கலந்த எம்பெருமான் படி பேசப் பெரிதும் மிறுக்குடைத்து-கடினமானது என்கிறார் –

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
நாட்டில் காண்கிற ஆண்களின் படியும் அல்லன் -அப்படியே ஸ்திரீகளின் படியும் அல்லன் –
உபயோக யோக்யம் அல்லாத நபும்சக பதார்த்தத்தின் படியும் அல்லன்-
நைனம் வாசா ச்த்ரியம் ப்ருவன் நைனமஸ்த்ரீ புமான் ப்ருவன் புமாம்சம் ந ப்ருவன் நைனம் வதன் வத்தி கச்சன அ இதி ப்ரஹ்ம-
ஆரணத்தில் இரண்டாம் ஒத்து –
ச வை ந தேவாஸூர மர்த்ய ந ஸ்திரீ ந ஷண்டோ ந புமான் நாயம் குண கர்ம ந சன்ன சாசன் நிஷேத சேஷோ ஜெயதாத சேஷ -என்று
இப்படி பட்டர் அருளிச் செய்தவாறே ஒரு தமிழன் -ஜீயா நாட்டில் காண்கிற மூன்று மூன்றும் படியும் அல்லனாகில்
சொல்லிற்றாகிற வஸ்து சூன்யமோ பின்னை -என்று கேட்க
பட்டரும் -பிள்ளாய் இயல் அறிவுக்கு போந்து இருதது இல்லையீ -ஆண் அல்லன் பெண் அல்லள் அல்லா யலியும் அல்லது என்றது அல்லையே
அல்லன் அல்லன் என்கையாலே புருஷோத்தமன் என்று சப்தம் தான் தோற்று விக்கிறது இல்லையோ -என்று அருளிச் செய்தார்
ஆண் அல்லன் பெண் அல்லன் என்கிற இத்தால் சஜாதீய விஜாதீய நிஷேதம் பண்ணின படி –
காணலும் ஆகான்
ஆண் பெண் அலி -என்கிற இவற்றைக் காணும் பிரமாணங்களால் காணப் படாதான் -இத்தால் ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -என்கை
உளன் அல்லன்
அநாஸ்ரிதற்கு
இல்லை அல்லன்
ஆஸ்ரிதர்க்கு
அத்தை உபபாதிக்கிறது மேல்
பேணும் கால் பேணும் உருவாகும்
1–நீ எங்களுக்கு புத்ரனாய் வந்து பிறக்க வேணும் -என்று சிலர் இரந்தால்-அப்படியே வந்து பிறந்து -சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோஹம்
யத் தவோதராத் -என்று நிற்கும்
அன்றியே –
2-பேணுங்கால் -தன்னை அர்த்திக்கும் காட்டில் பேணும் உருவாகும் -தன்னைப் பேணி மறைக்க வேண்டும்படி வந்து அவதரிக்கும் -என்றுமாம்
அல்லனுமாம்
இப்படி தாழா நிற்கச் செய்தே சிசுபாலாதிகளுக்கு கிட்ட அரிதாம் படி இருக்கும் –
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே-
இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த சர்வேஸ்வரன் படிகளை பேச வென்றால் சால மிறுக்குடைத்து –

——————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் உண்டாகில் அவர்கள் பரமபதத்தில் போய்
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர் -என்கிறார் –

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை –
தன் படிகளைப் பேசப்புக்கால்-ஆனந்த வல்லியில் -சொல்லுகிற படியே பேசித் தலைக் கட்ட ஒண்ணாது இருக்கிறவனை
பேச ஒண்ணாது ஒழிகிறது பரத்வம் அல்ல -குடக் கூத்தாடின செயல் ஒன்றுமே யாயிற்று
அம்மானை
குடக் கூத்தாலே என்னை அனந்யார்ஹம் ஆக்கினவனை –
விஷ்ணோர் ஜிஷ்ணோர் வாசுதேவாத் மஜச்ய –
கூறுதலே மேவிக்
பேச நிலம் அன்று என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று தாமும் பேச ஒண்ணாது -என்று கை வாங்காதே –
அழகிதாகப் பேசக் கடவோம் என்று அத்யவசித்தார்
நான் சொல்லுவது என்-சொல்லீரோ என்னா-திரியவும் -சொல்லீர் என் அம்மானை என்று தொடங்குமவர் இறே
அத்யவசித்தத்து இத்தனையோ -கூறிற்றும் உண்டோ என்னில்
குருகூர்ச் சடகோபன் –
குருகூர்ச் சடகோபன் அன்றோ -கூறச் சொல்ல வேணுமோ -மயர்வற மதுநலம் அருளப் பெற்றவர்க்கு பேசத் தட்டுண்டோ –
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும் –
விஷயத்துக்கு அனுரூபமாகப் பேசித் தலைக் கட்டின அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் உண்டாகில்
கூடுவர் வைகுந்தமே –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –என்று ஆசைப் பட்டுப் பெறாதே
ஆடியாடியாய் வ்யசனப் படாதே -இப்பாசுர மாதரத்தை சொல்லவே நான் பிரார்த்தித்து பெற்ற பேறு பெறுவார்கள்
பித்ரு தனம் கிடந்தால் புத்திரன் அழித்து ஜீவிக்கும் அத்தனை இறே -ஆழ்வார் பட்ட வ்யசனம் பண்ண வேண்டா –
இது கற்றார்க்கு இவர் பேற்றிலே அந்வயம் –

முதல் பாட்டில் இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடு வந்து கலந்த படி சொன்னார்
இரண்டாம் பாட்டில் -தம்மோடு கலந்த பின்பு அவன் திரு மேனியும் திவ்ய அவயவங்களும் திவ்ய ஆயுதங்களும் நிறம் பெற்றது என்றார்
மூன்றாம் பாட்டில் -தம்மோடு கலந்து தான் சத்தை பெறுதல் -இல்லையாகில் இல்லையாம் படி வந்து கலந்தான் என்றார் –
நாலாம் பாட்டில் கீழ் இவனுக்கு திருஷ்டாந்தமாக சொன்னவை நேர் இல்லாமையாலே அவற்றை சிஷித்து சேர்த்து அனுபவித்தார்-
அஞ்சாம் பாட்டில் அது தானும் உபமானமாக நேர் இல்லாமையாலே அவற்றைக் கழித்து உபமேயம் தன்னையே அனுபவித்தார் –
ஆறாம் பாட்டில் இப்படி விலஷணன் ஆனவன் -முக்தன் தன்னை அனுபவிக்குமா போலே தான் என்னை அனுபவித்தான் என்றார்
ஏழாம் பாட்டில் தமக்காக ராம கிருஷ்ணாதி அவதாரங்களைப் பண்ணினான் -என்றார்
எட்டாம் பாட்டில் அவனை என்னால் பேச முடியாது -என்றார்
ஒன்பதாம் பாட்டில் துணை தேடிக் கொண்டு திரியவும் பேசுகையில் உபக்ரமித்தார்
பத்தாம் பாட்டில் இப்படிகளால் என்னோடு கலந்த இம் மகா குணம் ஒன்றையுமே பேச என்றால் சால மிறுக்குடைத்து என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: