திருவாய்மொழி – -2-1– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் -மணியை -வானவர் கண்ணனை -தன்னதோர் அணியை -என்று
சௌலப்யத்தையும்-மேன்மையையும் -வடிவு அழகையும் -சொல்லிற்று
இவை ஒரொன்றே போரும் இறே மேல் விழப் பண்ணுகைக்கு
இங்கன் அன்றிக்கே இவை மூன்றும் குறைவற்ற விஷயமானால் அனுபவியாது இருக்கப் போகாது இறே
-இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்தது –
அப்போதே நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே பிறந்த அவசாதாதிசயத்தை -எம்பெருமானோடே கலந்து பிரிந்து ஆற்றாமையாலே
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி -ஆற்றாமை கை கொடுக்க லீலா உத்யாநத்த்திலே புறப்பட்டு அங்கே வர்த்திக்கிற
பதார்த்தங்களைக் கண்டு அவையும் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
-அவற்றுக்குமாக தான் நோவு படுகிற பாசுரத்தாலே பேசுகிறார்

அஞ்சிறைய மட நாரையிலும் -இதுக்கு ஆற்றாமை கரை புரண்டு இருக்கும் –அதுக்கு அடி என் என்னில் –
பெரு நலம் கிடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் -1-3-10-என்று அவதாரத்திலே அனுபவிக்கக் கோலி பெறாததாகையாலே –
அது ஒரு காலத்திலேயாய்-நாம் பிற்பாடராகையால் என்று ஆறி இருக்கலாம் -இது அங்கன் அன்றிக்கே அவதாரத்திலே பிற்பாடர்க்கும்
இழக்க வேண்டாதபடி முகம் கொடுக்கைக்கு நிற்கிற இடம் இறே உகந்து அருளின நிலங்கள்
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று உகந்து அருளின நிலத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு பெறாமையாலே வந்த
ஆற்றாமையாகையாலே இது கனத்து இருக்கும்
அஞ்சிறைய மட நாரையில்-தூது விடுகைக்கு தரிப்பு உண்டாயிற்று இதில் அங்கு தூது விட்டவையும் நோவு படுகிறனவாக-
அவற்றுக்குமாக தாமும் நோவு படுகிறார் –

அனுபவிக்கிற இவர் தம் படியாலும் இத் திருவாய்மொழிக்கு ஆற்றாமை கனத்து இருக்கும்
பத்துடை யடியவர்கு முன்பு அவ்விஷயத்தை அனுபவித்து பிரிந்த அளவால் உள்ள ஆற்றாமை இறே அதில் உள்ளது
அஞ்சிறைய மட நாரைக்கு பின்பு இவ்வளவும் வர அவனுடைய குணங்களை அனுபவித்து பிரிந்த பிரிவாகையாலே
ஆற்றாமை மிகவும் கனத்து இருக்கும் -இதில் பதில பயில விறே இனிதாய் இருக்கும் இவ்விஷயம்

நாரையாகில் வெளுத்து இருக்கையும்
அன்றிலாகில் வாய் அலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும்
காற்றாகில் சததகதியாய் திரிகையும்
மேகமாகில் நீராய் இற்றிற்று விழுகையும்
சந்த்ரனாகில் தேய்வதும் வளருவதுமாகக் கடவதும்
தமஸ்ஸாகில் பதார்த்த தர்சனம் பண்ண ஒட்டாது என்றும்
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவது வடிவதாகக் கடவது என்றும்
விளக்காகில் இற்றிற்று எரியக் கடவது என்றும்
இவற்றுக்கு இவை நியத ஸ்வபாவம் என்று அறியாதே -இவை எல்லாம் தம்மைப்போலே பகவத் விச்லேஷத்தாலே
வ்யசன படுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் அநுசோகிக்கிறார்

இத் திருவாய் மொழியால் -இளைய பெருமாளில் காட்டில் இவர்க்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்கிறது -எங்கனே என்னில்
மத்ச்யத்துக்கு ஜலம் தாரகமாக அறுதியிட்டார் அவர் -இவர் அந்த மத்ச்யத்தொடு ஜலத்தோடு தம்மோடு வாசியற
பகவத் குணங்களே தாரகம் என்று இருக்கிறார் -ஆகையாலே துக்கிகளாய்இருப்பார் தங்களோடு சம துக்கிகளைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு
கூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்குவிட்டு தரிக்குமா போலே இவளும் கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் எல்லாவற்றோடும்
கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து நீ பட்டதோ நான் பட்டதோ என்று கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –
அபிவ்ருஷா பரிம்லா நா -என்னுமா போலே சேதன அசேதன விபாகம் அற நோவு படுத்த வற்றாய் இறே இவள் பிரிந்த விஷயம் தான் இருப்பது
உபதத் தோதகா நத்ய பலவலா நி சராம்சி ச -என்று ஆறுகளோடு-சிறு குழிகளோடு பெரும் குழிகளோடு வாசி யற கரை யருகும் சென்று
கிட்ட ஒண்ணாத படி ராம விரஹத்தாலே கொதித்தது இ றே
பரிசுஷ்க பலாசாநி வநான்யு பவநாநி ச -என்று சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசி யற விரஹ அக்னி கொளுத்திற்று
பெருமாள்- சீதே ம்ருதஸ் தேச்வசுர பித்ரா ஹீ நோசி லஷ்மண-என்று ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்தது கூப்பிட்டாப் போலே கூப்பிடுகிறார் இங்கு –

————————————————-

அவதாரிகை –

பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே கடற்கரைச் சோலையைப் பற்ற இவள் பிரிவுக்கு இரங்கி இருக்கச் செய்தே
அங்கே ஆமிஷார்த்தமாக அவதானம் பண்ணிக் கொண்டு இருக்கிறது ஒரு நாரை கண்ணுக்கு இலக்காக
-அதின் உடம்பில் வெளுப்பைக் கண்டு -அதுவும் தன்னைப் போலே பிரிவாற்றாமையாலே வந்த வைவர்ண்யத்தோடே இருக்கிறதாகக் கொண்டு
-பாவியேன் நீயும் நான் அகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு நெஞ்சு பரி உண்டாய் யாகாதோ -என்கிறாள்

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளும் –
வாய்கை -கிட்டுகை-
பெரிய மலை போலே வந்து கிட்டுகிற திரைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப் புகுரும் அளவும்
சலியாதே இருக்குமாயிற்று -பகவத் த்யான பரர் இருக்குமா போலே இருக்கும் –
அலைகடல் நீர் குழம்ப அகடாடவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -பெரிய திருமொழி -11-4-1-
மறவாது இருப்பாருக்கு போலியாய் இரா நின்றது -அலைகள் மீது கொண்டு வருமீன் மறவாது இருக்கிற இதுவும் –
இத்தால் -மீனைக் குறிக்கோளாகக் கொண்ட நாரை என்கிறார் யாயிற்று -மேலே -திரையுகளும் -என்பதற்கு உதாரணம் காட்டுகிறார்
கிரயோ வர்ஷதாராபிர் ஹன்யமாநா ந விவ்யது அபிபூயமாநா வ்யச நைர் யதா தோஷஜ சேதச-ஸ்ரீ மாத20-15- பாகவதம் -10-என்று சொல்லக் கடவது இறே
நிரந்தரமாக வர்ஷதாரைகள் விழா நிற்கச் செய்தேயும் மலைகள் சலியா நின்றன –
என் போலே என்றால் -சர்வேஸ்வரனே ரஷகன் -என்று இருப்பார் தாப த்ரயங்களால் வந்த வ்யசனங்களுக்கு இடையாதே இருக்குமா போலே

கானல் மடநாராய்
வந்து கிட்டுகிற திரை உகளா நின்றுள்ள
கானலிலே -நெய்தல் நிலத்திலே இருக்கிற மட நாராய்
யாகங்களும் பண்ணிப் பவித்ரங்களும் முடித்திட்டு தார்மிகர் என்னும்படி திரியா நிற்பார்கள் இறே -பரஹிம்சை பண்ணா நிற்கச் செய்தே கிராமணிகள்
அப்படியே ஷூத்ர மத்ச்யங்கள் வந்தாலும் அநாதரித்து இருக்குமாயிற்று நினைத்தது கைப்புகுரும் அளவும்
பற்றிற்று விடாது ஒழிகை இறே மடப்பமாவது

ஆயும் -துஞ்சிலும்-நீ துஞ்சாயால்
என் பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும்
அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
தங்கள் சத்தையே பிடித்து உறங்காத நித்ய ஸூரிகள் உறங்கிலும் நீ உறங்குகிறிலை
இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கம் இன்றிக்கே ஒழிவான் என் என்னில் -முன்பு எல்லாம் -இவளுக்கு சத்ருசனாய் இருப்பான் ஒருவனை
பெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே -என்று கண் உறங்காது
பின்பு நாயகனைப் பிரிந்து இவள் நோவு படுகிறபடியைக் கண்டு அத்தாலே கண் உறங்காது
பதி சம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா சிந்தார்ணவ கத -என்றாள் இறே பிராட்டி
ஒரு உபக்னத்திலே கொண்டு போய் சேர்த்து நோக்கில் நோக்கலாய் இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இரா நின்றது
இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையிலே காட்டிக் கொடுத்தோமாக வல்லோமே -என்று எங்கள் ஐயர்
சிந்தார்ணவ கதரானார் என்றாள் இறே பிராட்டி
அப்படியே இ றே இவளைப் பெற்ற தாயாரும் கண் உறங்காதே படும்படி
அநிமிஷராய்-சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் ஆகையாலே நித்ய ஸூரிகளுக்கும் தானே நித்தரை இல்லையே —

நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
மானசவ்யதையும்-அத்தாலே வந்த வைவர்ண்யமும் தன பக்கலிலே காண்கையாலே-இவ்விரண்டும் அதுக்கு உண்டு என்று இருக்கிறாள்
மீதுரா
விஷம் ஏறினால் போலே உடம்பிலே பரக்க
எம்மே போல்
இப்படி கிலேசப் படுக்கைக்கு நான் ஒருத்தியும் என்று இருந்தேன் -நீயும் என்னைப் போலே ஆவதே
துக்க பரிபவங்களை பொறுத்து இருக்கையாலும் -பற்றிற்று விடாது இருக்கிறபடியாலும் -வைவர்ண்யத்தாலும் -என்னைப் போலே இரா நின்றாய் –
நீயும்
வ்ரஹ வ்யசனம் பொறுக்க மாட்டாத மார்த்தவத்தை உடைய நீயும்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்க மாட்டாமைக்கு இருவரும் ஒத்தோமோ
திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே —
மானச வ்யதையும் வைவர்ண்யமும் இருந்தபடி கண்டேனுக்கு -நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டாய் ஆகாதே
மைந்தனை மலராள் மணவாளனையோ -1-10-4-நீயும் ஆசைப் பட்டது
நெஞ்சம் கோட்பட்டாயே —
நெஞ்சு பறியுண்டாயாகாதே
தோற புரை யன்றியே மாறுபாடுருவ வேர்ப்பற்றிலே நோவு பட்டாயாகாதே

—————————————————————————–

அவதாரிகை –

இப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது
வாயலகு நெகிழ்ந்த வாறே கூப்பிட்டது -இதனுடைய ஆர்த்த த்வநியைக் கேட்டு –
பாவியேன் நீயும் என்னைப் போலே அகப்பட்டாய் ஆகாதே -என்கிறார் –

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேடபட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

கோட்பட்ட சிந்தையையாய்க்
அபஹரிக்கப் பட்ட ஹ்ருதயத்தை உடையையே
அபஹ்ருதமான மனஸ் ஸூ என்று அறிந்தபடி என் என்னில்
அதினுடைய அடியற்ற த்வனி தான் -நெஞ்சு இழந்தது -என்று தோற்ற நின்றது காணும் இவளுக்கு
கூர்வாய வன்றிலே
தனியாய் இருப்பாரை இரு துண்டமாக இட வல்ல த்வனி யாயிற்று
கூர்வாய்
வாய் -என்று வார்த்தை
அன்றியே கூர்த்த வாய் அலகை உடைய -என்னுதல்

சேடபட்ட யாமங்கள் –
ராத்ரியாய் நெடுகுகை யன்றிக்கே யாமங்கள் தோறும் நெடுகா நின்றதாயிற்று -சேண் -நீண்ட என்றபடி
சேராது இரங்குதியால்
நெடுகுகிற யாமங்களில் படுக்கையில் சேராது ஒழிந்தாலும் தரிக்கலாம் இறே -அங்கனே செய்யாதே சிதிலையாய் நின்றாய்
ஆட்பட்ட வெம்மே போல்
நெஞ்சு பறியுண்டு-படுக்கையிலும் சேராதே -நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளிலே
தாஸ்ய பரிமளத்திலே யாகாதே அகப்பட்டது
நீயும் –
நாட்டாரில் வ்யாவ்ருத்தமாய் போந்து இருக்கிற நீயும்
பதிம் விச்வச்ய -யஸ் யாஸ்மி -என்று ஓதினாய் அல்லை
மயர்வற மதிநலம் பெற்றதாய் அல்லை
என்தனை உட்புகாத நீயும் இப்படியாவதே –

அரவணையான் -தாட்பட்ட தண் துழாய்த் தாமம்
திருமாலால் என்றது இறே கீழே
இருவருமானால் இருப்பது படுக்கையிலேயாய் இருக்குமே
அவனும் அவளுமாய்த் துகைத்த திருத் துழாய் மாலை பெற வேணும் -என்று அத்தையோ நீயும் ஆசைப் பட்டது
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே —
சுடர் முடி மேல் -1-9-7- துழாய் ஒழிய அவர்கள் இருவரும் கூட துகைத்த துழாயையோ நீயும் ஆசைப் பட்டது
புழுகிலே தோய்ந்து எடுத்தால் போலே பரிமளத்திலே தெரியுமே
கலம்பகன் நாறுமே
தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -4-2-5-என்று இ றே தான் கிடப்பது
தாமம் -ஒளியும் மாலையும்
காமுற்றாயே
சங்கத்து அளவில் நின்றிலை யாகாதே
பெறில் ஜீவித்தல் பெறா விடில் முடிதலான அவஸ்தையை ப்ராபித்தாய் யாகாதே –

————————————————————————————-

அவதாரிகை –

அன்றிலுனுடைய த்வநிக்கு இடைந்து இருக்கிற அளவிலே -கடல் என்று ஒரு மஹா தத்வமாய் -அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து
கரையிலே வருவது -கரை ஏற மாட்டாதே உள்ளே விழுவதாய்-எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி ஊமைக் கூறனாய்க்
கூப்பிடுகிற படியைக் கண்டு -பாவியேன் நீயும் ராம குணத்திலே அகப்பட்டு நான் பட்டது பட்டாயாகாதே -என்கிறாள் –

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

எல்லே கனை கடலே -தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ -காமுற்ற கையறவோடு
யிராப்பகல் முற்றவும் நீ கண் துயிலாய் -நெஞ்சுருகி யேங்குதியால் வாழி -என்று அந்வயம்
காமுற்ற கையறவோடு –
ஆசைப்பட்ட பொருள் இழவோடே-கைத்து -என்று பொருள் -அறவு -இழவு-ஆசைப்பட்ட பொருள் கை புகுராமையால் வந்த இழவோடே-
காமுறுகையும் இழவும் கடலுக்கு இன்றிக்கே இருக்க திருஷ்டாந்த பூதையான தனக்கு உண்டாகையாலே -இதுக்கும் உண்டு -என்று
அநு மித்துச் சொல்கிறாள்
எல்லே
இரவோடு பகலொடு வாசி அறக் கதறுகிறபடியைக் கண்டு தன் படிக்கு போலியாய் இருக்கையாலே தோழியை சம்போதிக்குமா போலே
சம்போதிக்கிறாள் -சிறையுறவு போலே -ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –பெரிய திருமொழி -9-4-9-என்னக் கடவது இ றே
அன்றிக்கே -எல்லே -என்றது என்னே -என்று ஆச்சர்யமாதல்
யிராப்பகல் நீ முற்றக் கண் துயிலாய்
உறங்கக் கண்ட இரவுக்கும் உறங்காமைக்கு கண்ட பகலுக்கும் உன் பக்கல் ஒரு வாசி கண்டிலோமீ
நீ
உன் காம்பீர்யம் எல்லாம் எங்கே போயிற்று
நெஞ்சுருகி யேங்குதியால்
உறக்கம் இன்றிக்கே ஒழிந்தால் நெஞ்சு தான் அழியாது இருக்கப் பெற்றதோ -பேற்றுக்கு ஏற்ற -நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றாய்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்
பாவியேன் -பரத்வத்திலே ஆசைப்பட மாட்டிற்று இல்லையாகாதே -பிரணயிநி விரஹம் பொறுக்க மாட்டாத
சக்கரவர்த்தி திருமகனை யாகாதே நீயும் ஆசைப்பட்டது
தென்னிலங்கை முற்றத் தீயூட்டினான் -விபீஷண க்ருஹம் இலங்கைக்குள் அன்று போலே -அவன் அவர்களுக்கு கூட்டில்லாதா போலே
அவனகமும் அவர்கள் அகங்களுக்கு கூட்டில்லை போலே காணும் -அவன் அகம் தாசோஹம் இ றே -அகம் -வீடு அஹம் மனம் என்றபடி
அன்றிக்கே
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்
ராவண பயத்தாலே முன்பு அரை வயிறாக ஜீவித்த அக்னி ஒள்ளெரி மண்டி யுண்ண -என்கிறபடியே வயிறு நிறைய உண்டு ஜீவிக்கப் பெற்றதாயிற்று –பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே -செந்தீயுண்டு தேக்கிட்டதே -பெரிய திருமொழி -10-9-1–என்னக் கடவது இ றே
-முற்ற -முழுவதும் -பூரணமாக என்றபடி
தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –
பரம பிரணயியான சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆசைப் பட்ட நான் பட்டது பட்டாயாகாதே நீயும்
தாள் நயந்தாரோடு -தோள் நயந்தாரோடு வாசி யறுவதே கிலேசப் படுக்கைக்கு -பிராட்டியோடு ஸ்ரீ பரத ஆழ்வானோடு வாசி அற்றது இ றே
சேது பந்தன நேரத்திலே பெருமாள் திருவடிகளை சமுத்ரம் அடைந்ததே -ஆழ்வார் பிராட்டி பாவத்தில் அவன் தோளை அடைந்தார் -என்றபடி
வாழி
இவ்வவசாதம் நீங்கி நீ ஜீவித்திடுக
கனை கடலே
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே விம்மல் பொருமலாய் படுகிறாய் ஆகாதே
கோஷிக்கிற கடலே -என்னவுமாம் –

——————————————————————————————–

அவதாரிகை –

காற்று என்று ஒரு வ்யாபக தத்வமாய் -அது தான் அபிமத விரஹ வ்யசனத்தாலே இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே
மடலூருவாரைப் போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய் ஜவர சந்நிபதிதரைப் போலே
குளிர்ந்து இருந்தது அத்தைப் பார்த்து நீயும் நான் பட்டது பட்டாயாகாதே -என்கிறாள் –

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

கடலும் மலையும் விசும்பும் துழாய்
காரார் திருமேனி காணும் அளவும் போய்–சிறிய திருமடல் -என்று ஷீராப்தியோடு திருமலையோடு பரமபதத்தோடு வாசி அறத்
தேடுவார்க்கு போலியாய் இருக்கிறபடி
ஊராய வெல்லாம் -ஒழியாமே தேடுவார்க்கு போலியாய் இருக்கிறபடி
தௌ வநாநி க்ரீம்ச்சைவ சரிதச்ச சராம்சி ச நிகிலேந விசின்வாநௌ சீதாம் தசரதாத் மஜௌ-என்று தேடித் திரிந்தவர்களுக்கு போலியாய் இரா நின்றது
சீதாம் -தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று
தசரதாத் மஜௌ-தேடப் பிறந்தவர்கள் அல்லர் –அவர்கள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் உண்டோ –இத்தால் சென்று அற்றது -என்றபடி

கடலும் மலையும் விசும்பும் துழாய்
அபரிச்சின்னமான கடல் -நிர்விவரமான மலை -அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசம் -அன்றியே அச்சமான ஆகாசம்
எம் போல் சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
ஜவர சந்நிபதிதரைப் போலே சென்று அற்றாயாகாதே என்னைப் போலே
சுடர் என்று ஆதித்யன்
சுடரைக் கொள்ளப் பட்டது என்றது ஆதித்யன் அஸ்தமித்த இரவோடு சுடரை உடைத்தான பகலொடு வாசி அற உறங்குகிறிலை
குளிர்ந்த வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
அடல் -என்று மிடுக்கு -எதிரிகள் மிடுக்கைக் கொள்ளுதல் என்னுதல்
தான் மிடுக்காய் இருத்தல் என்னுதல்
ஏதத் வ்ரதம் மம என்ற அளவன்றிக்கே ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய பிரதிஜ்ஞனானவன் ஓரத்தளவு அகப்பட்டாய் ஆகாதே –
சக்கரத்தின் முனையில் -பஷபாதத்தில் என்றுமாம் –
பாரத சமரத்தில் சக்ர உத்தாரணத்தின் அன்று அர்ஜுனன் இளைத்துக் கை வாங்கினவாறே பண்ணின பிரதிஜ்ஞையை அழித்து
திரு வாழியைக் கொண்டு பீஷ்மரைத் தொடர்ந்தான் இ றே
ஏஹயேஹி -கெட்டு ஓடுகிறவன் பிற்காலித்து நின்று -எங்கள் அம்மை நாயனார் மாறி மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என் -என்றான்
புல்லாம்புஜ பத்ர நேத்ர-என்றும் -ஆணை மறுத்தால் சேதம் என்-சீறிச் சிவந்த கண் அழகைக் காணப் பெற்றால்
பிரசஹ்ய மாம் பாதய-ஆயுதம் எடேன் என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம் இருக்கில் தோலேன்
-ஆயுதத்தைப் பொகடச் சொல்லி தலை யறுத்து அருளீர்
லோக நாத -உமக்கும் வீரத்துக்கும் தோலேன் -முதன்மைக்குத் தோற்பேன்
அடல் கொள் படை யாழி
மிடுக்கை உடைத்தான படையாகிற திருவாழி
ஆழி யம்மானை
கையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரனை யாகாதே நீயும் காண ஆசைப் பட்டதே
நீ உடலம் நோய் உற்றாயோ
பிரத்யுபகார நிரபேஷமாக உபகரிக்கும் நீ -சர்வ ரஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாய் யாகாதே -என்கிறாள்
சஞ்சாரம் இதுக்கு நியத ஸ்வபாவம் இ றே
ஊழி தோர் ஊழியே –
கல்பம் தோறும் கல்பம் தோறும் நோவு படா நிற்கச் செய்தே தவிராதபடி சரீராந்தமான நோவு கொண்டாய் யாகாதே
காலம் மாறி வரச் செய்தேயும் நோவு மாறாதே ஏக ரூபமாய் செல்லுகிறபடி

———————————————————————–

அவதாரிகை –

அவ்வளவில் ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப் புக்கது -நீயும் அவனுடைய விரோதி நிரசன சீலதையிலே அகப்பட்டாயாகாதே -என்கிறாள்

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
கல்பம் தோறும் கல்பம் தோறும் நீராய் நெகிழ்கின்ற
லோகம் அடங்கும் வெள்ளமிட வேண்டும் படி நீரை முகந்து கொண்டு –
உனக்கு ஒரு நல்ல நிதர்சனம் உண்டு
தோழியரும் யாமும் போல் –
என் இழவுக்கு எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும்-9-9-5-என்னையும் போலே
நீராய் நெகிழ்கின்ற
கரைந்து நீராய் விழுகின்ற
வாழிய
ஜகத்துக்கு உபகாரகமாய் இருக்கிற நீ உன்னுடைய கண்ண நீர் நீங்கி வாழ்ந்திடுக
வானமே
மேகத்தைச் சொல்லுதல்
ஆகாசத்தைச் சொல்லுதல்
அதி ஸூஷ்மமான ஆகாசம் நீரை முகந்து கொண்டு சிதறி உருகி நீராய் விழுகிறது என்று நினைக்கிறாள்
வானம் என்று மேகத்துக்கு பெயர்
வான் கலந்த வண்ணன் –இரண்டாம் திருவந்தாதி -75-என்றது இறே
வானம் வழங்காது எனின் –திருக்குறள் -19-என்றான் இறே தமிழனும்
நீயும்
லோக உபகாரகமாக வடிவு படைத்த நீயும்
மதுசூதன் பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே
விரோதி நிரசன சீலனானவனுடைய வீர குணத்திலே அகப்பட்டு -அவன் பக்கல் உண்டான நசையாலே ஜீவிக்கவும் மாட்டாதே
முடியவும் மாட்டாதே நோவு படுகிறாய் யாகாதே
பாழிமை -பலம் -இடமுடமை -என்றுமாம் மனசில் தாரள இடம் கொண்டவன்
அவன் கண் பாசத்தால் -அவன் பக்கல் நசையாலே
விஷய அனுகூலமாய் இறே நசை இருப்பது
எவ்வளவு நசையுண்டு-அவ்வளவு நைவும் உண்டாம் இறே வ்யதிரேகத்தில்
நைவாயே -நைவே பலம்

—————————————————————————–

அவதாரிகை –

மேகத்தின் அருகே கலா மாத்ரமான-பிரதமை – சந்தரன் தோற்றினான் -அவனைப் பார்த்து உன் வடிவில் எழில் இழந்தாயாகாதே -என்கிறாள்

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6-

நைவாய வெம்மே போல் –
நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல்
நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் –நைவு ஆய -என்றபடி
ச பங்காம் பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்
விபத்மாமிவ பதமி நீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன பொய்கை போலே இருந்தாள்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம் ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்

நாண் மதியே-
நாளால் பூர்ணனான சந்த்ரனே -பண்டு பூர்ணனாகக் கண்டு வைக்குமே
நாட்பூ என்னுமா போலே இள மதியே என்றுமாம்
நீ இந்நாள்
தர்ச நீயனான நீ -இக்காலம்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
இப்படி குறையற்று இருக்கக் கடவ நீ இக்காலத்தில் வந்தவாறே ஆகாசத்தில் கறுத்த இருளை போக்க மாட்டு கிறிலை என்னுதல்
எதிரி எளியன் ஆனால் சத்ருக்கள் கூட நின்று உறுமுமா போலே மேலிடா நின்றது
சஹாவஸ்ததானமும் உண்டாகா நின்றதீ
மாழாந்து தேம்புதியால்
ஒளி மழுங்கி குறைந்து இரா நின்றாய்
ஐவாயரவணை மேல்
அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாயாகாதே நீ
தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாயிற்று-நாச் -10-3-என்கிறபடியே தமக்கு பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில்
தம் பரிகரத்துக்கு அஞ்சு வாய் உண்டு -அவனுக்கு பள்ளித் தோழமை பலித்த படி
ஆழிப் பெருமானார்
அல்லாத பரிகரமோ தான் நன்றாக இருக்கிறது
தாம் பகலை இரவாக்க நினைக்கில் அதுக்கு பெரு நிலை நிற்கும் பரிகரம்
பேறு அவர்களே யானால் இழவிலும் இன்னாதாக பிராப்தி யுண்டு -என்கை
பெருமானார் –
அவர்களுக்கும் தம் பக்கலிலே பொய் ஓத வேண்டும் படி பொய்யால் பெரியவர்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை –பெரிய திருமொழி -10-7-4-என்னக் கடவது இறே
ஆழிப் பெருமானார் மெய் வாசகம் –என்னவே பொய் என்று பிரசித்தமாய் இருக்கும் போலே காணும்
பொய் என்னாது ஒழிவான் ஏன் என்னில் -பொய் என்னில் நாட்டார் பொய்யோ பாதி யாமே
மெய் வாசகம் கேட்டு
அவர் ஏதத் வ்ரதம் மம-என்ற வார்த்தை கேட்டே நீயும் இப்படி அகப்பட்டது
இப்போது உதவாமையாலே பொய் என்று இருக்கிறாள் இறே
ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இறே ஆஸ்ரிதர்க்கு தஞ்சம்
உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
உன் வடிவில் எழில் இழந்தாயாகாதே
தர்ச நீயமான தண்ணளியேயாய் லோக உபகாரகமான உன் உடம்பின் ஒளியை யாகாதே இழந்தது –

———————————————————————-

அவதாரிகை –

மதி கெட்டவாறே-அந்தகாரம் வந்து மேலிட்டது -என்கிறாள்

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

கீழும் மேலும் போருகிறபடி யொழிய சப்த ஸ்வாரஸ்யத்தைப் பற்ற எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஓன்று உண்டு
அம்மங்கி அம்மாளும் அத்தையே நிர்பந்தித்துப் போரும் -அதாகிறது தான் பிரிவற்றாதார் அநேகர் கூடக் கட்டிக் கொண்டு கூப்பிடா நிற்க
இருள் வந்து முகத்தை மறைக்க அத்தைப் பார்த்து -ஆற்றாமைக்கு போக்கு விட்டு தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ -என்கிறாள்
எம்மே போல் என்கிற பதார்த்தங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு சொல்லுகிறது –
தோற்றோம் மட நெஞ்சம்
பகவத் விஷயம் என்றால் விட மாட்டாதபடி சபலமான நெஞ்சை இழந்தோம் —
தோற்றேன் சொல்லாமல் தோற்றோம் என்பதால் முன்பு சொல்லிய அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுகிறார்
அன்றியே பவ்யமான நெஞ்சை இழந்தோம் -என்னுதல்
எம்பெருமான் நாரணற்கு
கெடுவாய் -வகுத்த விஷயத்தில் அன்றோ நாங்கள் நெஞ்சு இழந்தது
தன்னுடைமை என்றால் வத்சலனாய் இருக்குமவனுக்கு என்றோ இழந்தது -ஸூலபனுக்கு என்றுமாம் –
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை –
ஆற்றாமை உடையார் -தந்தாம் ஆற்றாமை சொல்லிக் கூப்பிடக் கடவது அன்றோ
நாங்கள் பெறப் புகுகிறதொரு பிரயோஜனம் உண்டாய் -அத்தை விலக்கி நாம் பெற வேணும் -என்று தான் செய்கிறாய் அன்றோ
அவனைப் பெறவோ –போன நெஞ்சைப் பெறவோ -எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ-
நீ நடுவே
அல்லாதவற்றுக்கு உள்ளது அமையாதோ உனக்கு -அவனை நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்தது
கூப்பிடுகை ஒழிய பாத்ய பாதக பாவமுண்டோ –
நலிகைக்கு ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே –
வேற்றோர் வகையில் கொடியதாய்
வேற்றோர் உண்டு -சத்ருக்கள் வகை உண்டு -அவர்கள் நலியும் பிரகாரம் -அதிலும் கொடிதாக நலியா நின்றாய்
சத்ருக்கள் ஆனாலும் நோவுபட்டாரை ஐயோ என்ன வன்றோ வடுப்பது
எனையூழி மாற்றாண்மை நிற்றியே
காலதத்வம் உள்ளதனையும் சாத்ரவத்திலே நிற்கக் கடவையோ
ராவணாதிகள் பிரித்த இத்தனை
கூப்பிடப் பொறுத்தார்கள் நீர்மை யுடையார்
சஞ்ஜாத பாஷ்ப -என்று கண்ண நீரை விழ விட்டார்கள்
நீர்மை உடையார் படியும் கண்டிலோம்
சத்ருக்கள் படியும் கண்டிலோம்
உன்னது வ்யாவ்ருத்தமாய் இருந்ததீ
வாழி
காதுகரை -உடன் பிறந்தீர் என்னுமா போலே
கனையிருளே —
செறிந்த இருளே -என்னுதல்
கனை இருளை -கனைத்துக் கொண்டு செருக்கி வருகிற இருளை -என்னுதல்
அன்றியே –
பிரகரணத்தோடே சேர்ந்த பொருளாவது -தமஸ் -என்று ஒரு பதார்த்தமாய் -அது தான் ஒளி மழுங்கி அடங்கி இருக்கை ஸ்வபாவம் என்று அறியாதே
அபிமத விச்லேஷத்தாலே ஒளி மழுங்கி வாய் விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவு படுகிறபடியைக் கண்டு
-உன் இழவு கனத்து இருந்ததீ -என்கிறாள் -வகுத்த விஷயத்தாலே நாம் எல்லாம் நெஞ்சு இழந்து கூப்பிடா நிற்க
நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலியா நின்றாய் -உன் அவசாதம் நீங்கி நீ ஜீவித்திடுக -என்கிறாள் –

—————————————————————————————–

அவதாரிகை –

அவ்விருளுக்கு இறாய்த்து-அங்கே இங்கே சஞ்சரியா நிற்க இருள் செறிந்தால் போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்-
அது மடல் எடுப்பாரைப் போலே கட்டோடு நிற்குமே -பாவியேன் சகடாஸூர நிரசனம் பண்ணின
அச்செயலிலே நீயும் அகப்பட்டாயாகாதே -என்கிறாள்

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

இருளின் திணி வண்ணம் –
அச்சமான இருள் -வெளிறான இருள் அன்றிக்கே இருளின் புற இதழை வாங்கி வயிரத்தை சேரப் பிடித்தால் போலே இரா நின்றது
இருளின் திணி போலே இருக்கிற நிறத்தை உடைத்தாய் பெரு நீரையும் உடைத்தான கழியே
போய் மருளுற்று
மிகவும் அறிவு கெட்டு-மயர்வற மதிநலம் அருளப் பெற்றார் அறிவு கேட்டுக்கும் அவ்வருகே இரா நின்றதீ உன் அறிவு கேடு
இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கிறிலோம்
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே —
காவலாக வைத்த சகடம் தானே அஸூராவேசத்தாலே ஊர்ந்து வர தாயும் கூட உதவாத சமயத்திலே
முலை வரவு தாழ்த்துச்சீறி நிமிர்ந்த திருவடிகளாலே முடித்து ஜகத்துக்கு சேஷியைத் தந்த உபகாரகன் பிரணயிநிக்கு உதவானோ என்னும் நசையாலே
அருளின் பெரு நசையால்
அருளின் கணத்துக்கு தக்கபடி இறே நசையின் கணம் இருப்பது
ஆழ்ந்து நொந்தாயே
தரைப் பட்டு நோவு பட்டாயாகாதே

————————————————————————————–

அவதாரிகை –

அக்கழிக்கு ஒரு கரை காண மாட்டாதே மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்-அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்-
அது உடம்பில் கை வைக்க ஒண்ணாத படி விரஹ ஜ்வரம் பற்றி எரியா நின்றது என்று அத்தைப் பார்த்து
நீயும் நோவு பட்டாயாகாதே -என்கிறாள் –

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நோவ என்று புக்கால் நொந்து தலைக் கட்டக் கடவது அன்றிக்கே இருக்கிற ப்ரேம வியாதியானது
தொட்டார் மேலே தோஷமாம் படி மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குறுத்து வற்றாக உலர்த்த
மெல்லாவி -பகவத் குண அனுபவத்தாலே நைந்து இருக்கை
காற்றுப் பட பொறாது இருக்கை
நந்தா விளக்கமே –
ஜ்வாலா பேத அனுமானம் இருந்து பார்க்கிறாள் அன்றே
சந்தான விச்சேதம் இன்றிக்கே உருவ நோவு படுகிறாயாகாதே
நீயும் அளியத்தாய்
நாட்டுக்குக் கண் காட்டியான நீ படும் பாடே இது
அளியத்தாய்
அருமந்த நீ -பரார்த்தமான உடம்பிலே உனக்கு நோவு வருவதே —
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
பதி சம்மாநிதா சீதா பர்த்தாரமஸி தேஷணா-என்ற பேறு பெற வேணும் என்றததையோ நீயும் ஆசைப் பட்டது –
செந்தாமரைத் தடங்கண்
முகத்தைப் பார்த்து குளிர நோக்கின போதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது
செங்கனிவாய் –
இன்சொல் சொல்லலுகிற போதை திருவதரத்தில் பழுப்பைச் சொல்கிறது
எம்பெருமான் -அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே —
நோக்காலும் ஸ்மிதத்தாலும் என்னை அனந்யார்ஹை ஆக்கினவனுடைய அழகிய திருத் துழாய் மாலை பெற வேணும் பெற வேணும்
என்னும் ஆசையாலே
வேவாயே –
உக்கக்காலுக்கு -விசிறிக் காற்றுக்கு -உளையக்கடவ உன்னுடம்பே நெருப்பாக வேகிறாயாகாதே-

————————————————————————————-

அவதாரிகை –

இவள் அவசாதம் எல்லாம் தீர வந்து சம்ச்லேஷித்த எம்பெருமானைக் குறித்து இனி ஒரு நாளும் என்னை விடாது ஒழிய வேணும் -என்கிறார்

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

வேவாரா வேட்கை நோய் –
வேவ என்று தொடங்கினால் ஒரு கால் வெந்து தலைக்கட்ட மாட்டாதாயிற்று
அல்லாதவை போல் அன்றிக்கே ப்ரேம வியாதிக்கு உள்ளது ஒன்றாயிற்று இது தான்
மெல்லாவி –
சரீரத்தில் உண்டான சௌகுமார்யம் ஆத்மாவிலும் உண்டாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு
உள்ளுலர்த்த
கூடோக் நிரிவ பாதபம் என்கிறபடியே உள்ளே படிந்து புறம்பே வர வேவா நின்றதாயிற்று
அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னியாகில் இ றே
மஹதா ஜ்வலதாநித்ய மகனி நேவாக்னி பர்வத -என்று வெந்த விடமே விறகாக வேவா நின்றது
ஓவாது இராப்பகல்
வேவாரா நோய் வேட்கை போலே இராப்பகல் ஓவாது ஒழிகிறபடி
உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத படி உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய்-என்னுதல்
உன் பாலே வீழ்த்து
உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டு
ஒழிந்தாய்
முகம் காட்டாதே கடக்க நின்றாய் -என்னுதல்

மாவாய் பிளந்து மருதிடை போய் மண்ணளந்த மூவா முதல்வா-
கேசி வாயை அநாயாசேன கிழித்து -யமலார்ஜூனங்களின் நடுவே போய் -மஹா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி உபகாரகங்களைப் பண்ணி பின்னையும் ஒன்றும் செய்யாதானாகக் குறைப்பட்டு இவற்றினுடைய ரஷகணத்திலே உத்யுக்தனாய் இருக்குமவனே
இப்படி எல்லாம் செய்யச் செய்தேயும் ஒன்றும் செய்யாதாரைப் போலே ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணிணவனே
இனி எம்மைச் சோரேலே —
கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கினால் போலே தம் விரோதியையும் போக்கி அவன் வந்து முகம் காட்டச் சொலுகிறார் ஆதல்
தம்முடைய ஆபத்தின் கனத்தால் வந்து முகம் காட்டும் -என்னும் விசுவாசத்தால் சொல்லுகிறாள் ஆதல்
இனி
புத்த்வா காலம் அதீதஞ்ச முமோஹா பரமாதுர-என்னுமா போலே முன்புள்ள காலம் இழந்த தாகிலும் இனி மேலுள்ள காலம் இவ் வஸ்துவைக் கை விடாது ஒழிய வேணும்
போன காலத்தை மீட்க ஒண்ணாது என்றதுக்கு சோகிக்கிறார்
ந மே துக்கம் ப்ரியா தூரே -என்னுடைய பிரியை யானவள் தூரத்தில் இருக்கிறாள் என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன்
அது ஒரு பயணம் எடுத்து விடத் தீரும்
ந மே துக்கம் ஹ்ருதேதி வா -வலிய ரஷச்சாலே பிரிவு வந்தது என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன் -அது அவன் தலையை அறுக்கத் தீரும்
ஏத தேவா நு சோசாமி-இது ஒன்றுமே எனக்கு சோக நிமித்தம்
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே -போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாது இறே

——————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார் கண்ணால் கண்டது எல்லாம் பகவத் அலாபத்திலே நோவு படுகிற சம்சாரத்திலே இருந்து
நோவு படாதே கண்டார் எல்லாம் பகவ லாபத்தாலே களித்து வர்த்திக்கும் நாட்டிலே புகப் பெறுவர் என்கிறார்

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
இவ்வளவிலே வந்து இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே -ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரனாய்-
இவரோடு வந்து கலந்து அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருந்தான்
இவருக்கு வந்து முகம் காட்டுவதற்கு முன்பு சர்வேஸ்வரத்வமும் அழிந்தது போலே கிடந்தது –
இவர் ஒருத்தரையும் சோரக் கொடுக்கவே சர்வேஸ்வரத்வமும் அழியும் இறே
இவர் இழவு தீர வந்து முகம் காட்டின பின்பு எல்லா பொருட்கும் நிர்வாஹகனானான்
சோதிக்கே –
பேறு இழவுகள் இவரது அன்றிக்கே தன்னது என்னும் இடம் வடிவிலே புகரிலே தோற்றா நின்றது -க்ருதக்ருத்யன் -என்னும்படியானான் –

ஆராத காதல் –
இத் திருவாய் மொழியால் சொல்லிற்று யாயிற்று -கண்ணால் கண்ட பதார்த்தங்களுக்கு எல்லாம் -பகவத் அலாபத்தாலே
தம்மைப் போலே நோவு படுகிறவனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு படும்படியான இவருடைய அபிநிவேசமாயிற்று
காதல் -குருகூர்ச் சடகோபன்
காதலை இட்டாயிற்று இவரை நிரூபிப்பது
தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேணுமே
ஓராயிரம் சொன்ன
இக்காதலோடே யாயிற்று ஆயிரமும் அருளிச் செய்தது
அவற்றுள் இவை பத்தும்
அல்லாதவை ஒரு தலையாக -இது ஒரு தலையாம் படி அக்காதல் முக்த கண்டமாகச் சொன்ன திருவாய் மொழியாயிற்று இது
இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் –
இங்கே இருந்து கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் அடங்கலும் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவனவாக அனுசந்திக்குமவர்கள்
இவ்விருப்பை விட்டு கண்ணார் கண்டார் அடங்கலும் பகவ லாபத்தாலே களிக்கும் நித்ய விபூதி விடாதே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்
கண்டீர் என்று கையெடுத்துக் கூப்பிடுகிறார்
திண்ணனவே –
இது ஸூநிச்சிதம்
இவ்வருகே சிலரைப் பற்றி சொல்லிற்றோர் அர்த்தமாகில் இறே சம்சய விபர்யயங்கள் உள்ளது
பகவத் பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேனும் சபதம் பண்ணலாம் –

முதல் பாட்டிலே தொடங்கி-நாரை தொடக்கமாக -அன்றில் -கடல் -காற்று -மேகம் -சந்தரன் -இருள் -கழி -விளக்கு –
இப்பதார்த்தங்களைக் குறித்து அநுசோகித்து -மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகம் காட்ட -இனி என்னை
விடாது ஒழிய வேணும் -என்று இத் திருவாய் மொழி கற்றார்க்கு பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்

———————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: