எம்மா வீடு -பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் -நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே -நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் -என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –
ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்
எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –
ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது -இறே –
த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில் முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
-ஆத்மா வி நாசமே யாகவுமாம் – நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை
-உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா –
ஆன பின்பு தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –
இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல –
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய்
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன்
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக -அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –
இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் என்று சொல்லிற்று இலீரே
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார்
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
——————————————
அவதாரிகை –
முதல் பாட்டில் -எவ்வகையாலும் விலஷணமான மோஷத்திலும் எனக்கு அபேஷை இல்லை –
உன் திருவடிகளை என் தலையிலே வைக்க வேணும் -என்கிறார் –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்
எவ்வகையாலும் நன்றான மோஷத்து இடையாட்டமும் செப்பம் -செப்போம் –சொல்லோம்
நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-
ஒரு தமிழன் எம்மா வீட்டு விகல்பமும் செவ்வியவாம் என்றான் -அந்த பஷத்தில் வீட்டு விகல்பமாவது
சாலோக்ய -சாரூப்ய -சமீப்ய -சாயுஜ்யம் -என்கிறவை
செவ்வியவாகை யாவது -சா லோக்யாதிகள் எல்லாம் இம் மோஷத்தில் உண்டாகை-
ஆனால் உமக்கு வேண்டுவது என் என்னில்
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –
இது எனக்கு வேண்டுவது -செம் -என்று சிவப்பாய் -மா என்று கறுப்பாய்-
உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ச்யாமமாய் -விகாசம் செவ்வி குளிர்த்து நாற்றங்களுக்குத் தாமரையை ஒரு போலி
சொல்லலாம்படி இருக்கிற திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க வேணும்
அன்றிக்கே –
செம்மையால் நினைக்கிறது -செவ்வையாய் ஆஸ்ரிதற்கு வருந்த வேண்டாத படியான ஆர்ஜவத்தை உடைத்தாய்
மா -என்று மஹத்தையாய் -பரம பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்
சேர்த்து -என்று சேர்க்க வேணும் -என்றபடி
கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்
சேர்த்து என்று ல்யப்பாகை -வினை எச்ச மாதரம் -யன்றிக்கே விதியாய் -சேர்த்து அருள வேணும் -என்கை-
யாவந்த சரனௌ ப்ராது பார்த்திவவ் யஞ்ஜ நான்விதௌ சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா-98-8-
பிள்ளாய் உன்னுள் வெப்பு ஆறுவது எப்போது என்றார்கள் –
பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று என்றான் இறே
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து
மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இவரும் ஈறில் இன்பத்து இரு வெள்ளத்தில் -2-4-8-முழுகிப் பூச்சூட இருக்கிறார் காணும்
அப்படியே செய்கிறோம் -என்றான்
அக்க்ரமம் பற்றாது
ஒல்லைக்
செய்து கொடு நின்று –செய்கிறோம் -என்ன வேணும்
இப்படித் த்வரிக்க வேண்டும் இடம் உண்டோ என்னில்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே –
நீ த்வரித்து வந்து விழும்படி அறியாயோ -பரமபதமாபன்ன -சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும்படியான ஆபத்து ஆயிற்று
மனஸா அசிந்தயத் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்-கூப்பீடு ஒவிற்று
கைம்மா துன்பம்
ஆனையும் தன்னளவிலே இறே நோவு படுவது -துதிக்கை முழுத்தின ஆபத்து இறே –
அப்படி -உமக்கு ஆபத்து உண்டோ என்ன -அங்கு முதலை ஓன்று -எனக்கு முதலை ஐந்து -அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம்
-இங்கு அநாதி காலம் -அங்கு ஒரு சிறு குழி -இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் -அதுக்கு சரீர நாசம் -எனக்கு ஆத்மா நாசம்
-ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது
-ஆனால் அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்
பிரானே –
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய துக்கத்தைப் போக்கின இதுவும் -நமக்கு உபஹரித்தது -என்று இருக்கிறார்
அதுக்கு உதவினமை உண்டு உமக்கு என் என்ன
அம்மா –
அதுக்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரோட்டை சம்பந்தம் -நீ ஸ்வாமி யன்றோ
நீர் ஆர் என்ன
வடியேன்
நான் சேஷ பூதன் -இருவர் உடைய -ச்வாமித்வ சேஷித்வ-அம்மா அடியேன் – ஸ்வரூபத்தையும் பற்றி -தவிர ஒண்ணாது -என்று அபேஷிக்கிறீரோ-என்ன
வேண்டுவது-
ராக பிராப்தம் -இதுவாகில் வேண்டுவது
இது செய்கிறோம் இதுவும் இன்னம் எதுவும் வேணும் என்றான்
ஈதே
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்ற இதுவே என்கிறார் –
————————————————————————————
அவதாரிகை –
முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-
கீழில் பாட்டில் ஈதே -என்னச் செய்தேயும் ஒரு அர்த்தத்தையே பலகால் கேட்டவாறே மற்று ஒன்றிலே தடுமாறிச் செல்லவும் கூடுமே –
இதிலே நிலை நின்றமை அறிய வேண்டும் -என்று -இதுவும் இன்னம் எதுவும் வேணும் -என்றான்
ஈதே -என்கிறார் –
நீர் இதிலே நிலை நின்றீர் என்னும் இடம் நாம் அறியும் படி என் என்ன –
யானுன்னைக் கொள்வது –
இருவருடையவும் தர்மியே இதிலே பிரமாணம்
ஸ்வாமியான உன் பக்கலிலே சேஷ பூதனான நான் கொள்ளுமது இதுவே –
நம்முடைய ஸ்வாமித்வமும்-உம்முடைய சேஷத்வமும் கிடக்கச் செய்தே யன்றோ நெடு நாள் இழந்து போந்தது
ஆனபின்பு நமக்கு அதி சங்கை வர்த்தியா நின்றது காணும் –
இது எத்தனை குளிக்கு நிற்கும் என்ன
எஞ்ஞான்றும் –
யாவதாத்மபாவி இதுவே எனக்கு வார்த்தை –
இதிலே நிலை நிற்கும்படி உம்மை இத் துச் சிஷை பண்ணு வித்தார் ஆர் -என்றான் ஈஸ்வரன்
இப்படி ஆர் கற்ப்பித்தார்-மற்றும் உண்டோ -தேவர் வடிவு அழகு இறே
என் மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்-
மை தோய்ந்து இருந்துள்ள தேஜஸ்சை யுடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திரு நிறத்தைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கி உன் சேஷித்வத்தை அறிவித்தவனே –
அழகிது உமக்குச் செய்ய வேண்டுவதாவது என் என்ன
எய்தா நின் கழல் யான் எய்த
ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –
அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன
ஞானக் கைதா –
இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்
அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம்
ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது –
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும்
எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –
அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன
ஞானக் கை தா –
அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற பெற வேணும் என்னவுமாம்
அப்படியே செய்கிறோம் என்ன
காலக் கழிவு செய்யலே —
ஒல்லை என்றது தானே யன்றோ எனக்கு எப்போதும் வார்த்தை
——————————————————————————————–
அவதாரிகை –
இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே
கையும் திரு வாழியும் பொருந்தி இருக்கும் இருப்பைக் கண்டாயே
நம் பவ்யத்தை கண்டாயே
நம்மை அனுபவிக்கை அழகியதோ
ஷூத்ர விஷயங்களில் பிரவணனாய் அனர்த்தப் படுக்கை அழகியதோ -என்று
கையில் திரு வாழியையும் பவ்யதையும் காட்டி யாயிற்று இவருடைய விஷய பிராவண்யத்தைத் தவிர்த்தது –
சாஸ்திர ப்ரதா நாதிகளால் அன்று
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே —
துக்க நிவ்ருத்-ஜிதந்தே -என்கிறபடியே ஏதேனும் உத்க்ரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும் படி பண்ணியருள வேணும்
செறிந்த ச்லேஷமாவானது கண்டத்தை அடைக்கிலும் உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை நான் மறவாதே
ஏத்த வல்லேனாம் படி பண்ணி யருள வேணும்-
உத்க்ரமண தசை பார்த்து இருப்பார் காணும் கோழைப் பையலார் வந்து மிடறு பிடிக்க
நீர் சொல்லுகிற அது ஸூக்ருத பலம் அன்றோ என்ன
அருள் செய் –
இவன் பெற்றிடுவான் என்று இரங்கி யருள வேணும்
இது பின்னை சர்வர்க்கும் பிரயோஜனம் ஆகாதோ என்ன
எனக்கு
எனக்கு ஒருவனுக்கே செய்து அருள வேணும் –
————————————————————————————————
அவதாரிகை –
இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது -ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –
சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள் -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே
அவனை ஆனந்திப்பார்கள் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்-
திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே
-அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே
-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –
எம்மா வீட்டில் எம்மா வீடாய்-வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே
அபேஷித்துப் பெறுமதுவாய்-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –
அதில் -எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும்
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும்
க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் என்று ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும்
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது
ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் –
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்
அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இ றே
ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இ றே
அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது –
நின் என்றும் அம்மா என்றும் முன்னிலையாக சம்போதித்துக் கொண்டு போரா நிற்கச் செய்தே இங்குப் படர்க்கையாகச் சொல்லுவான் என் என்னில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்
எனக்கே கண்ணனை-
தனக்கே யாக என்ற பின்புத்தை எனக்கே இ றே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது
ஒரு சேதனன் இ றே அபேஷிப்பான்-
நீர் அபேஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்ய வேணும் காணும் என்ன
யான் கொள் –
ஸ்வரூப ஞானத்தை நீ பிறப்பிக்க -அத்தாலே ஸ்வரூப ஞானம் உடைய நான் ஒருவனுமே பெறும்படி பண்ண வேணும்
உமக்கும் எப்போதும் நம்மால் செய்யப் போகாது என்ன
சிறப்பே —
பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்
அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் –
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி
சிறப்பாவது -முக்தியும் சம்பத்தும் நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் -நன்றி என்னவுமாம் –
———————————————————————–
அவதாரிகை –
கீழ் மநோ வாக் காயங்கள் மூன்றாலும் உண்டான பேற்றை ஆசைப்பட்டு -இவை மூன்றாலும் உண்டான அனுபவத்தில் உன்னுடைய பரிதியிலே
அந்தர்பூதனாம் இதுக்கு மேற்பட எனக்காய் இருக்கும் ஆகாரத்தை தவிர்க்க வேணும் -என்றார்
-இது தான் சம்சாரிகள் பக்கல் பரிமாறுவது ஓன்று அல்ல -இவர் தாம் தம்மை யாராக நினைத்து இந்த பேற்றை அபேஷிக்கிறார் என்று
ஆராய்ந்து பார்ப்போம் என்று -நீர் ஆராயத்தான் நம்மை இப்படி அபேஷிக்கிறது என்ன
தேஹமே ஆத்மா என்பார் –
கேவல தேஹத்துக்கு இந்த்ரியம் ஒழிய அனுபவம் இல்லாமையாலே இந்த்ரியங்களே காண் ஆத்மா என்பார் –
அந்த இந்த்ரியங்களும் மனஸ் சஹகாரம் இல்லாத போது பதார்த்த க்ரஹணம் பண்ண மாட்டாமையாலே மனசே காண் ஆத்மா என்பார் –
அம் மனஸ்ஸூ தனக்கும் பிராணன்கள் சஹகரிக்க வேண்டுகையாலே பிராணன் காண் ஆத்மா என்பார் –
இவை எல்லாமே உண்டானாலும் அத்யவசாயம் வேணுமே -அதுக்கு கருவியான புத்தி தத்வமே காண் ஆத்மா என்பார் –
இவை அத்தனைக்கும் அவ்வருகாய் ஜ்ஞான குணகமாய் ஜ்ஞான ஸ்வரூபமாய் இருப்பது ஓன்று ஆத்மா என்பாராகா நிற்பார்கள் –
அதில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை — ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –
சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-
சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம் இறப்பில் எய்துக எய்தற்க –
நித்ய சம்சாரியாய்ப் போந்தவன் நித்ய ஸூ ரிகளுடைய அனுபவத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவதாகச் சொல்லுகிற மோஷம் –
பரிமித ஸூகத்தை உடைத்தான ஸ்வர்க்கம்
நிஷ்க்ருஷ்ட துக்கமேயான நரகம்
இவற்றை சரீர வியோக சமயத்திலே -பிராபிக்க -பிரபியாது ஒழிக-
இதுக்குக் கருத்து என் என்னில்
தேஹாதிரிக்தனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டாகவுமாம்-தேஹமே ஆத்மா வாகவுமாம்-இதில் நிர்பந்தம் இல்லை என்கை –
தேஹாதிரிக்தமாய் இருப்பதொரு வஸ்து உண்டாகில் இறே ஸ்வர்க்காத் யனுபவங்கள் உள்ளது –
கேவல தேஹம் இங்கே தக்தமாக காணா நின்றோம் இறே
யானும்
ச சப்தத்தாலே நான் இப் பேறு இத்தனையும் பெறுவது காண் என்கிறார் –
ஸ்வரூப நிர்ணயித்ததில் நிர்பந்தம் இன்றிக்கே -நான் ஆரேனுமாக அமையும் -என்று இருக்கிற நானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்கச் செய்தே கர்ம வச்யரும் பிறவாத ஜன்மங்களிலே பிறக்க வல்ல சர்வாதிகனை
அஜாய மாநோ பஹூதா விஜாயதே –
மறப்பு ஓன்று இன்றி –
அவதாரங்களிலும் சேஷ்டிதங்களிலும் ஒரு மறப்பு இன்றிக்கே –
மறப்பு ஓன்று இன்றி –
இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம்
அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது
என்றும் மகிழ்வேனே –
மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார்
ஆக -இத்தாலே -ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –
பெருமான் -என்கையாலே தம்முடைய சேஷத்வமும்
மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -ஜ்ஞாத்ருத்வமும்
என்றும் -என்கையாலே நித்யத்வமும்
மகிழ்வு -என்கையாலே போக்த்ருத்வமும் -அருளிச் செய்கிறார் யாயிற்று –
———————————————————————————
அவதாரிகை –
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது
நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் –
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-
மகிழ் கொள் தெய்வம் –
போகய போக உபகரண போக ஸ்தானங்களாலே-மனுஷ்யரைக் காட்டில் ஆனந்த பிரசுரராய் இருந்துள்ள தேவர்கள் –
உலோகம் –
லோக்யத இதி லோகே -என்கிற படி சஷூராதி கரணங்களுக்கு விஷயமான அசித்து
அலோகம்
இவற்றைக் கிரஹிக்கும் சாதனங்களால் கிரஹிக்கப் படாதே -சாஸ்த்ரைக சமதிகம்யமான சித் வஸ்து
மகிழ் கொள் சோதி –
தாஹகமான தேச பதார்த்தம் -சந்திர ஸூ ர்யர்கள் என்னவுமாம்
மலர்ந்த வம்மானே –
இவற்றை உண்டாக்கின சர்வேஸ்வரனே
பஹூச்யாம் என்கிறபடியே தன விகாசம் ஆகையாலே -மலர்ந்த -என்கிறார்
சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணமுமாய் கார்யமுமாகக் கடவது இறே
நீர் சொன்னவை எல்லாம் செய்தமை உண்டு -உமக்கு இப்போது செய்ய வேண்டுவது தான் என் -என்ன
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –
என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்
என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –
——————————————————————
அவதாரிகை –
தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –
வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-
வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புனராவ்ருத்தி இல்லாத பேற்றை நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராதே இருக்கிறவனே –
வாராத இன்னாப்பாலே -தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –
அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்
உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் —
தர நினையா விட்டால் நெஞ்சிலே பிரகாசிக்கிற அத்தை தவிர்க்க்கவுமாம் இறே
அகவாய் பெரிய திரு நாளாய்ச் செல்லா நின்றது –
உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய்
நிரதிசய போக்யனான உன்னை பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணாத போது தரிக்க மாட்டாத என்னுடைய
ஹிருதயத்திலே உன்னைக் கொண்டு புகுந்து வைக்கும் இடத்தில் ஒரு நாளும் அமையாத படி இருக்கிறவனே
எனக்கு என்றும் எக்காலே –
எனக்கு -எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்
வாராய்
வர வேணும்
உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி தாராதாய் -என்னுதல்
வாராய் -என்னுதல் –
—————————————————————————————
அவதாரிகை –
அத்யல்ப காலமாகிலும் சேஷியாய்—{
எக்காலத்தும் –ஏதேனும் அற்ப காலமாவது -ஆளவந்தார் நிர்வாஹமாக திருமாலை ஆண்டான்
-எல்லா காலத்திலும் –இதுவே வேறு ஒன்றும் வேண்டேன் என்பதாக எம்பெருமானார் நிர்வாஹம் -)
என்னோடு சம்ச்லேஷிக்கப் பெறில்-பின்னை ஒரு காலமும் அதுவும் வேண்டா -என்று தமக்கு அடிமை செய்கையில்
உண்டான விடாயின் மிகுதியை அருளிச் செய்கிறார்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று -எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும்
நீ ஸ்வாமி யான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில்
மற்று எக்காலத்திலும்
இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –
பின்னை இது தானும் வேண்டேன் –ஜ்வர சந்நிபதிதர் -ஒரு கால் நாக்கு நனைக்க -என்னுமா போலே
-ஷண காலமும் அனுபவிக்க அமையும் என்னும் படியான விஷயம் உண்டோ -என்ன
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே —
பகவத் அனுபவத்திலே மிக்காராய்-யத்ர ருஷய பிரதமஜா யே புராணா -என்கிறபடியே வேதத்தில் விமலராக
பிரதிபாதிக்கப் பட்டுள்ள நித்ய ஸூரிகள் அனுபவியா நின்றுள்ள
அக்காரம் போலவும் கனி போலவும் உண்டான உன்னுடைய போக்யாதிசயத்தை எனக்கு பிரகாசிப்பித்தவனே
அக்காரம் வ்ருஷமாய்-அது கோட்புக்கு பழுத்த பலம் போலே நிரதிசய போக்யமானவனே-
அக்காரக் கனி -என்கிற இது அவர்களுக்கு சர்வ வித போக்யங்களும் தானே என்னும் இடத்துக்கு உப லஷணம்-
உன்னை யானே —
இப்படி நிரதிசய போக்யனான உன்னை –
உன் சுவடு அறிந்த நான் –
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
இத்தை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகியது –
இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது
பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –
எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்
-எக்காலத்திலும்
-இக்காலம் எல்லாவற்றிலும்
மற்று யாதொன்றும் வேண்டேன்
பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –
——————————————————————————–
அவதாரிகை –
மிக்கார் வேத விமலர் விழுங்கும் -என்று நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணுகிற படியை அனுசந்தித்தார் –
அவர்களோடு ஒத்த பிராப்தி தமக்கு உண்டாய் இருக்க இழந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –
யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-
யானே –
என் இழவு பகவத் க்ருதமல்ல –
அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க -நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் -என்கிறார்
என்னை யறியகிலாதே-
ராஜ புத்ரன் வேடன் கையிலே அகப்பட்டு தன்னை வேடனாக பிரதிபத்தி பண்ணுமா போலே -சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனான என்னை அறியாதே
யானே என்தனதே என்று இருந்தேன் –
அவனும் அவன் உடைமையும் என்ற இருக்கை தவிர்ந்து -நானும் என் உடைமையும் -என்று வகுத்துக் கொண்டு போந்தேன்
இருந்தேன் –
இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –
அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் இருந்தேன்
தீ வினையேன் வாளா விருந்தேன் -என்னுமா போலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கைக்கு பிராப்தி உண்டாய் இருக்க
ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே கை ஒழிந்து இருந்தேன் –
முடிந்தேன் -என்றால் போலே இருக்கிறது இறே
ஒரு நாள் இழவே போந்திருக்க அநாதி காலம் இழந்து போந்தேன் –
அங்கன் அன்றோ அர்த்த தத்வம் -என்ன
யானே நீ –
அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்
மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி
ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே
என்னுடைமையும் நீயே
யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே
இது எங்கே பரிமாறக் கண்டு சொல்லும் வார்த்தை என்ன
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே —
நித்ய ஸூரிகள் அடைய இப்படி யன்றோ உன்னை அனுபவிப்பது
மஞ்சா க்ரோசந்தி என்கிறபடியே வானே ஏத்தும் என்கிறது –
எம் வானவர் ஏறே —
அவர்கள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு
எம் -என்றது
எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –
—————————————————————————————
அவதாரிகை –
யானே என் தனதே என்று இருந்தேன் -என்று நீர் அனுதபிக்கும் படி பண்ணினோம் ஆகில் உமக்குச் செய்ய வேண்டுவது
ஓன்று உண்டோ -நீர் இங்கனே கிடந்தது படுகிறது எதுக்காக -என்ன இதுக்காக -என்கிறார் –
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-
ஏறேல் ஏழும் வென்று
ஏறாகில் ஏழையும் வென்று நப்பின்னை பிராட்டியோட்டை
சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமான ருஷபங்கள் ஏழையும் வென்று
ஏர் கொள் இலங்கையை –
தர்ச நீயமாய் கட்டுடைத்தான இலங்கையை -அஹோ வீர்ய மகோ தைர்யம் என்று திருவடி மதிக்கும் படியான இலங்கையை
பபூவ புத்திஸ்து ஹரீச்வரஸ்ய -ராவணனும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை கண்டவாறே -தானும் ஒரு சமுதாயத்துக்குக்
கடவனாகையாலே -இங்கனே இருப்பதொரு புத்தி பிறந்தது –
யதீத்ருசீ இத்யாதி -பையல் தானும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை -பெருமாளும் பிராட்டியுமாய் இருக்க சம்மதித்தான் ஆகில்
இந்த ஐஸ்வர்யம் குலையாது இருக்கலாயிற்றுக் கிடீர்
இமா யதா ராஷச ராஜ பார்யாஸ் ஸூ ஜாத மஸ் யேதி ஹி சாது புத்தே -சத்ருக்களுக்கும் நன்மை வேணும் என்று இருக்கும் புத்தியை உடையவனுக்கு –
நீறே செய்த
பிராட்டி அருளிச் செய்த படியே பஸ்ம சேஷமாம் படி பண்ணின
நெடுஞ்சுடர்ச் சோதி –
ராவணனை இப்பரிகரததோடே கொன்று கையும் வில்லுமான வீர ஸ்ரீ யோடு நின்ற நிலை –
அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் -என்கிறார் –
தேறேல் என்னை –
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தில் பிரதிபந்தகம் போக்க அமையும் –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் அளவில் அவளைப் பிரித்த ராவணனை முடிக்க அமையும்
அவர்களை உனக்காக வேண்டா -பண்டே உனக்கேயாய் இருக்கையாலே
இப்படியே இவன் விரோதிகளைப் போக்கி நமக்கு ஆக்கினோமாகில் இனி என் என்று இருக்க ஒண்ணாதே என்னளவில் .
தேறேன் -என்ற பாடமான போது -தெளியேன் என்னுதல் தரியேன் என்னுதல்
ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்
உன் பொன்னடி
கல்லுக்கும் சைதன்யம் கொடுக்க வல்ல அடி யன்றோ
சேர்த்து -சேர்த்து அருள வேணும்
ஒல்லை -நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —
இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது
நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்
என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –
————————————————————————-
அவதாரிகை –
இத் திருவாய் மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த பிராப்யத்தை பெறுவார் என்கிறார் –
விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-
விடலில் சக்கரத் தண்ணலை –
நாம் விடுகிறோம் என்று அதிசங்கை பண்ணுகிறது என் –
நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –
விடலில் சக்கரத் தண்ணலை —
ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒருவரையும் விடாத -அவன் ஸ்வ பாவத்தாலே கிட்டி
அவனை பிரியில் தரியாத படி -பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்தார்
வண்மை யாவது -இவ்வனுபவத்துக்கு பாசுரம் இட்டு உபகரித்த உபகாரம்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும் –
இவ்வாத்மாவுக்கு அனர்த்த கந்தம் வாராதபடி ஹிதத்தை ஆராய்ந்து அருளிச் செய்த இது தான் -அவற்றில்
இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும்
வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்த தாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே
தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –
முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராய இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயிடுக -உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும்படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாத படி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்
—————————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-