அருளிச் செயல் சாற்றுமுறை —

அருளிச் செயல் சாற்றுமுறை
——————————————————————
முதல் நாள் சேவை சாற்றுமுறை –

முதல் திருவந்தாதி –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –99-

ஓரடியும் சாடுடைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியின்
தாயவனைக்கேசவனைத் த ண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை -100

வையம் தலியா வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று -1-

திருவாய் மொழி -1-1-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலேன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி யான் என் மணியே –1-10-10-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன் தனிவிளர் கற்பறேல் கல்வி வாயுமே –1-10-11-

——————————————————————————-

இரண்டாம் நாள் சேவை சாற்று முறை –

பெரியாழ்வார் திருமொழி

தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போல் சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பி
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே –5-4-10-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கோலும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றி அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலப் பாட வல்லார் தாமும் அனுக்கர்களே –5-4-11-

இரண்டாம் திருவந்தாதி –

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய்ம்மளர்கள் தூவ
அறை கழல சேவடியான் செங்கண் நெடியான் குறள் உருவாய் மாவடிவில் மண் கொண்டான் மால் –99

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துலாய்க் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே எந்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புறுகி சிந்தை இடு திரியா
நன்புருகி ஜ்ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஜ்ஞானத் தமிழ் புரிந்த நான் –1

திருவாய் மொழி -2-10-

சூது என்று களவும் சூதும் செய்யாதே வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவில் மலையே புகுவது பொருளே –2-10-10-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்து அருள் உடையவன் தாள் அணிவிக்கும் முடித்தே –2-10-11-

——————————————————————————

மூன்றாம் நாள் சேவை சாற்று முறை

நாச்சியார் திருமொழி -14-

நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே –14-9-

பாரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைய பிரான் அடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே –14-10-

மூன்றாம் திருவந்தாதி –

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு –99-

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ்வரை மார்பன் தான் முயங்கும்
காரார்ந்த வானமரும் மின்னிமைக்கும் வண் தாமரை நெடும் கண் தேனமரும் பூ மேல் திரு –100-

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று –1-

திருவாய்மொழி –3-30-

தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் இரு சுடரை கிளர் ஒளிமாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஒன்றும் கேடிலனே –3-10-10-

கேடில் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பிடற வல்லார்கட்கு
அவன் நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே –3-10-11-

—————————————————————–

நான்காம் நாள் சேவை சாற்று முறை –

பெருமாள் திருமொழி –

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவப் பகை ஏறி அசுரர் தம்மை வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வரத் தன தாமம் மேவி சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னைத் தில்லை நகரத் திருச் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே –10-10-

தில்லை நகரத் திருச் சித்ர கூடம் தன்னுள் திறல்விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை எல்லையில் சீர்த் தயரதன் தன மகனாய்த் தோன்றிற்று
அது முதலாத் தன்னுலகம் புக்கதீரா கொல்லியலும் படைத்தானைக் கொற்ற ஒள வாள் கோழியர் கோன் குடைக் குலசேகரன்
சொற் செய்த நல்லியலின் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவாரே — 10-11-

நான்முகன் திருவந்தாதி –

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடல் நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை இட நாடு காண இனி –95

இனி யறிந்தேன் ஈசற்க்கும் நான் முகற்கும் தெய்வம் இனி யறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி யறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ நற் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

நான் முகனை நாராயணன் படைத்தான் நான் முகனும் தான் முகனாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து –1-

திருவாய்மொழி -4-10-

உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்போடு ஓங்கு திருக் குருகூர் அதனுள் குரிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே –4-10-10-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் நாள் கமல் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே –4-10-11-

—————————————————————–

ஐந்தாம் நாள் சேவை சாற்று முறை-

கண்ணி நுண் சிறுத் தாம்பு

பயன் நன்றாகிலும் பாங்கு அலற ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பனி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே –10

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –11

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே –1-

திரு விருத்தம் –

ஈனச் சொல்லாயினுமாக அறி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –99

நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் எழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாயவன் சேற்று அள்ளல் பொய்ன் நிலத்தே –100-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா மெய்ந்நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

திருவாய் மொழி –5-10-

கூடி நீரைக் கடைந்த வாரும் அமுதம் தேவர் உன்ன அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டு இடுகின்ற நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகனையானே –5-10-10-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்று அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –5-10-11-

————————————————————————-

ஆறாம் நாள் சேவை சாற்று முறை

பெரிய திருமொழி –2-10-

தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற காவடியின் கற்பகமே போலே நின்று
கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு வுருவமானான் தன்னை
தீவடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே –2-10-9-

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்
காரணங்காளால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே –2-10-10-

திருவாசிரியம்-

நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா யாவகை யுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் பிறவும் சிரிதுடன் மயங்க ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமோ -7-

திருவாய்மொழி –6-10-

அகலகில்லேன் இறையும் என்று அலற மேல் மங்கை யுரை மார்பா நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை யால்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே புகழ் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –6-10-10-

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக்கு இவை பத்தும் பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –6-10-11-

——————————————————————————-

ஏழாம் நாள் சேவை சாற்று முறை

பெரிய திருமொழி -4-10-

குடிகுடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்னேத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான்
அமர்ந்து உறை கோயில் கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்போடு மெரும் செந்நெல் அசைய வடியுடை அன்னம்
பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே –4-10-9-

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தென் திரை வருடப் பாற் கடல் துயின்ற
திரு வெள்ளியங்குடியானை வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் கொண்டு
இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடலுலகே –410-10-

பெரிய திருவந்தாதி —

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ துயரை என் நினைந்து போக்குவர் இப்போது –86-

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் –87-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி நயப்புடைய
நாவின் தொடை கிளவி உள் பொதிவோம் நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

திருவாய் மொழி –7-10-

சிந்தை மற்று ஒன்றின் திறத்ததல்லாத் தன்மை தேவபிரான் அறியும் சிந்தையினால் செய்வது தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திருவாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்றோர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகிச் செழும் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே –7-10-11-

—————————————————————————————-

எட்டாம் நாள் சேவை சாற்று முறை –

பெரிய திருமொழி –7-10-

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுறுவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
வேள்வியை விளக்கின் ஒளி தன்னை மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் கண்ணினை
கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9–

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த வண்ண வொண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை
வல்லரே உரைப்பார் மதியம் தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லின் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

சிறிய திருமடல் –

பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல்

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர் சீரார் முலைத் தடங்கள் சேரளவும் பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர் மன்று ஓங்க ஊர்வன் மடல்

திருவாய் மொழி –8-10-

வாய்க்க தமியேற்கு ஊழி தோர் ஊழி மாகாயாம் பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே –8-10-10-

நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை அம தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11-

—————————————————————————————–

ஒன்பதாம் நாள் சேவை சாற்று முறை –

பெரிய திருமொழி -10-10-

இன்னார் என்று அறியேன் என்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –10-10-9-

தொண்டீர் பாடுமினோ சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள் தொண்டீர் பாடுமினோ –10-10-10-

பெரிய திருமடல் –

மா முனிக்காத் தன்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான் உன்னி யுலவா வுலகரிய உஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒலி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல் –

என்னிலமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் தன்னருளாகமும் தாரானேல் பின்னைப் போய்
ஒண் துறை வேல் நீர் வேல் உலகறிய யூர்வன் நான் வண்டறை பூம் பெண்ணை மடல் –

திருவாய் மொழி –9-10 –

இல்லையல்லல் எனக்கேல் இனியென் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதில் சூழ் திருக் கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே –9-10-11-

——————————————————————————————

பத்தாம் நாள் சேவை சாற்று முறை –

பெரிய திருமொழி -11-8-

நந்தா நரகத்து யழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே –11-8-9-

குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை மன்றில் மலி புகழ் மங்கைமன் கலிகன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல் என்றும் வினையாயின சார கில்லாவே –11-8-10–

திரு நெடும் தாண்டகம் —

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரம் துரந்து குலங்கள் ஐந்து வென்றானை
குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே –30-

திருவாய் மொழி -10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ சூழ்ந்த அதனில் பெரிய பர நல மலர்ச் சோதீயோ
சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான வின்பமேயோ சூழ்ந்த அதனில் பெரிய என்னவா அறச் சூழ்ந்தாயே –10-10-10–

அவாவறச் சூழ் அரியை அயனை அலற்றி அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –10-10-11-

உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதி பதி யவனவன் துயர் அரு சுடர் அடி தொழுது எழு என் மனனே–1-1-1-

கண்ணி நுண் சிறுத் தாம்பு –

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே யரண்

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் –நண்ணித் தென் குருகூர்
நாவினால் நவிற்று –தேவு மற்று அறியேன்
திரி தந்தாகிலும் –பெரிய வ ண் குருகூர்
நன்மையால் மிக்க –அன்னையாய் அத்தனை
நம்பினேன் –செம்பொன் மாட
இன்று தொட்டும் –குன்றமாட
கண்டு கொண்டு என்னை –யே ண் திசையும்
அருள் கொண்டாடும் –அருள் கொண்டு
மிக்க வேதியர் –தக்க சீர்ச் சடகோபன்
பயன் நன்றாகிலும் –குயில் நின்றார் பொழில்
பயன் நன்றாகிலும் –குயில் நின்றார் பொழில்
அன்பன் தன்னை –அன்பனாய்
அன்பன் தன்னை –அன்பனாய்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் –நண்ணித் தென் குருகூர் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே –

இராமானுச நூற்றந்தாதி –

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர்
அவை தம்மோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன இதயத்துள்ளே தனக்கு இன்புறவே –106-

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோறும் பிறந்து இறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே என்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆட்படுத்தே –107-

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் என்னும் பங்கய மா மலர்ப் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தெப்பத் தளைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே –108-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –1-

திருப்பல்லாண்டு –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே —

உபதேச ரத்ன மாலை –

முன்னம் திருவாய் மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி
தன்னன்புடன் செய் உபதேச இரத்தின மாலை தன்னை தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள் சரண் நமக்க்ர்

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து –1-

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வர வாற்றது என்பர் மூர்க்கராவார் –71

பூருவாசாரியார்கள் போதம் அனுட்டானங்கள் கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி
இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து –72-

இந்த உபதேச ரத்தின மாலை தன்னை சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார்
எந்தை எதிராசரின் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம் –73

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை
உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன் –

திருவாய் மொழி நூற்றந்தாதி —

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு உயர் வேத நேர் கொண்டு உரைத்து
மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –1-

சூழ்ந்து நின்றமால் விசும்பில் தொல்லை வழி காட்ட ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து வாழ்ந்து அங்கு
அடியார் உடனே இருந்தவற்றை யுரை செய்தான் முடி மகிழ் சேர் ஞான முனி –99

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து ‘
நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு உயர் வேத நேர் கொண்டு உரைத்து
மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –1-

————————————————————————————–

இயல் சாத்து –

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும் ஒன்றும் குறையில்லை ஓதினோம்
குன்றம்
எடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி –

வாழி திருக்குருகூர் வாழி திரு மழிசை வாழி திரு மல்லி வள நாடு வாழி
சுழி பொரித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் வலி

திருநாடு வாழி திருப் பொருநல் வாழி திரு நாட்டுத் தென் குருகூர் வாழி
திரு நாட்டுச் சிட்டத்தமர் வாழி வாழி சடகோபன் இட்டத் தமிழ்ப் பாவிசை

மங்கை நகர் வாழி வண் குறையலூர் வாழி செங்கையருள் மாரி சீர் வாழி
பொங்கு புனல் மன்னித்துறை வாழி வாழி பரகாலன் மண்ணில் தமிழ்ப் பாவிசை –

வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை வாழியரோ தென் குறையல் மா நகரம்
வாழியரோ தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் புதூர் முக்கோல் பிடித்த முனி

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக் குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே

நெஞ்சத் திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும் வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் ஸ்ரீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத்தொருவன் சரணாம்புயம் என் தலைக்கு அணிந்தே

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே வாழி எனும்
பூதம் பேய் பொய்கை மாறன் மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை குலமுனிவன் கூறிய நூலோதி வீதி வாழி என
வருந் திரளை வாழ்த்துவர் தம் மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –

————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: