ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -பன்னிரண்டாவது திருமொழி —

அவதாரிகை –

மேல் சொல்லி என் –
பகவத் விச்லேஷத்தால் நொந்து –
இவள் தனக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டாய் –
இவ்விரண்டிலும் தான் அதிசங்கை பண்ணி —
அத்தலையாலே பேறு -என்று அறுதியிட்டு –
அது பார்த்து இருக்க ஒண்ணாது -அத்தலையில் ஸ்வாதந்த்ர்யத்தாலே –

ஆனாலும் கேவலம் ஸ்வா தந்த்ர்யமே அன்றிக்கே –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்றும் ஓன்று உண்டு அவனுக்கு –

ஆன பின்பு பெரியாழ்வார் அளவிலும் அவனுக்கு அந்த ஸ்வா தந்த்ர்யம் ஜீவியாது –

அவர் சம்பந்தம் கொண்டு நமக்குப் பெறுகைக்கு ஒரு தட்டில்லை -என்று அத்யவசித்து இருந்த இவள்
பின்னையும் –
அவன் தான் குணாதிகனுமாய்-சவிபூதிகனுமாய் இருப்பான் ஒருவன் ஆகையாலே
ஆஸ்ரீதவிஷயத்தில் தன் ஸ்வா தந்த்ர்யம் நடத்துகையாவது இவற்றை இழைக்கை
இவற்றை இழக்க கார்யம் செய்யான் –

இனித் தான் அவன் ஸ்வா தந்த்ர்யம் நமக்குப் பேற்றுக்கு உடல் அத்தனை போக்கி இழவுக்கு உடலோ –
கார்யம் செய்வானாக நினைத்த போது அவனுக்கு நிவாரகர் இல்லை அத்தனை அன்றோ –என்று
அத்தையும் பெரியாழ்வார் வயிற்றில் பிறப்போபாதி பேற்றுக்கு உடலாக அத்யவசித்தாள்-

விடுகைக்கு ஹேதுவான ஸ்வா தந்த்ர்யம் தானே –
அவஸ்தா பேதத்தாலே பற்றுகைக்கு உடலாகத் தோற்ற பற்றினாள்
-என்றவாறு –

இப்படி அத்யவசித்து இருக்கச் செய்தேயும் –
அவன் சடக்கென வந்து தன் ஆற்றாமை பரிஹரிக்க கண்டிலள் –
ஆனாலும் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வல்ல பிரகிருதி அன்றே –
கடுக பெற்றுக் கொடு நிற்க வேண்டும்படி இறே இவளுடைய த்வரை-

தன் ஸ்வரூபத்தோடு சேர்ந்த செயலாகிறது அவன் வரப் பார்த்து இருக்கையே-
அவ்வளவு அல்லவே இவளுக்கு இப்போது ஓடுகிறது –
ஸ்வரூப ஹானி வரப் பொறுத்ததே -தன் ஸ்வரூபத்தோடு சேராதாகிலும்-அத்தை பொறுத்து
அவன் முகத்திலே விழிக்க வேணும் –என்று பார்த்து

அதுக்கு கால் நடை தாராத படி பலஹானி மிக்கது –
இனி தன் தசையை அனுசந்தித்தார்க்கு
ஈச்வரனோபாதியும்-
பெரியாழ்வாரோ பாதியும் தன் கார்யம் செய்ய வேண்டும் என்றாய்த்து தான் நினைத்து இருப்பது

தனக்குக் கால் நடை தாராதாய்த்து –
அவன் தன் தசை அறிந்து வந்து முகம் காட்டுவான் ஒருவன் அன்றிக்கே இருந்தான்-
இனி தன் கண் வட்டத்தில் நின்று தன் தசையை அறிந்து கால் நடை தருவார்க்கு தன் கார்யம் செய்கை பரம் இறே
அவன் வர்த்திக்கையாலே ப்ராப்யமான தேச பரிசரத்தில் என்னைக் கொடு பொய்
நீங்கள் பொகடப் பாருங்கோள்
-என்கிறாள் —

———————————————————————————–

அத்தலையாலே பேறு என்று அறுதியிட்டால் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண்-
நீ இங்கனே பதறலாகாது காண் -என்ன
என் தசையை அறியாதே சில சொல்லுகிற உங்களுக்கும் எனக்கு வார்த்தை சொல்ல பிராப்தி இல்லை —
உங்கள் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்கைக்கும் எனக்கு பிராப்தி இல்லை என்கிறாள் –

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

பதவுரை

மற்று இருந்தீர்கட்கு–(என்னுடைய துணிவுக்கு மாறுபாடாக இருக்கின்ற உங்களுக்கு
அறியல் ஆகா–அறிய முடியாததாய்
மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை–மாதவன் விஷயமான அபிநிவேசத்தை
உற்றிருந்தேனுக்கு–அடைந்திருக்கிற எனக்கு
உரைப்பது எல்லாம்–நீங்கள் சொல்லுவதெல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை–ஊமையும் செவிடனுங் கூடி வார்த்தை சொல்லிக் கொள்வது போல் வீண்
(இப்போது எனக்குச் செய்யத் தக்கது எதுவென்றால்)
புறத்து–ஸமீப ப்ரதேசத்திலே
என்னை–என்னை
பெற்றிருந்தாளை ஒழிய போய்–மெய் நொந்து பெற்ற தாயான தேவகியை விட்டொழிந்து
பேர்த்து ஒரு தாய் இல்–வேறொரு தாயாகிய யசோதையின் க்ருஹத்திலே
வளர்ந்த–வளர்ந்தவனும்
மல் பொருந்தாமல் களம் அடைந்த–மல்ல யுத்த பூமியிலே மல்லர்கள் வந்து சேர்வதற்கு முன்னே
தான் முற்பாடனாய்ப் போய்ச் சேர்த்திருப்பவனுமான
நம்பி–கண்ண பிரானுடைய (நகரமாகிய)
மதுரை–மதுராபுரி யினுடைய
உய்த்திடுமின்–கொண்டு சேர்ந்து விடுங்கள்.

மற்று –
வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –
மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-

இருந்தீர்கட்கு அறியலாகா –
ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு
நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-
எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –

பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் -உத்த -68-5- சஞ்சயன் வார்த்தை -என்னக் கடவது இறே
மாயம் ந சேவே -இத்யாதி –
சாஸ்த்ரத்தில் வாசனை உனக்கும் எனக்கும் ஒக்கும் -புத்தி யோகத்திலும் எனக்கு குறையில்லை
இங்கனே இருக்கச் செய்தே உனக்கு அர்த்தம் உள்ளபடி பிரகாசியா நின்றது –
எனக்கு நீ சொல்ல கேட்க வேண்டி இரா நின்றது -இதுக்கடி என் -என்ன

நான் வஞ்சன பரன் அல்லேன் –சல தர்மங்கள் அனுஷ்டித்து அறியேன் -ஸூத்த ஸ்வ பாவனாய் இருப்பவன்
நீ கற்ற வரியடைவு கொண்டு அறிய விரும்புதி -நான் அங்கன் இன்றிக்கே பக்தி சஹக்ருத சாஸ்திரம் கொண்டு அறிய இருப்பவன் –
சித்தாஞ்சனம் இட்டு பதார்த்த தர்சனம் பண்ணுவாரைப் போலே காண் என் படி –என்றான் இறே –

மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு –
ப்ரஹ்மசாரி எம்பெருமானை ஆசைப் பட்டேன் ஆகில் தான் ஆறி இரேனோ-
மாதவன் விஷயமான அன்பு -என்னுதல் –
மாதவன் ஆகிற அன்பு -என்னுதல்
அன்பு -என்றும் –
அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தோன்றாதே   –அன்பு தான் என்னலாய்த்து இருப்பது

தேந தே தமநுவ்ரதா-அயோத்யா -17-16- என்கிறபடியே
தான் முந்துற இத்தலையிலே அன்பைப் பண்ணி –
பின்னை யாய்த்து இத்தலையில் அன்பை விளைத்தது –

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -திருவாய் -10-10-7-என்னுமா போலே –
சர்வ பிரகாரத்தாலும் விலஷணமான விஷயத்தை இறே இவள் தான் ஆசைப் பட்டது –
அப்படிப் பட்ட வைலஷண்யம் உள்ளது  ஸ்ரீ யபதிக்கு இறே –
அவன் பக்கலிலே யாய்த்து இவள் அன்பைப் பண்ணிற்று –

அன்பு தன்னை உற்று –
அவனைக் கிட்டி -என்னுதல்
அவன் விஷயமான பக்தியை மாறுபாடுருவ உடையேனாய் -என்னுதல்

நிறந்தானூடு புக்கு –
எனதாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற –
திருவாய் -5-10-1-என்னுமா போலே

இருந்தேனுக்கு –
இப்படி அவனை ஒழிய செல்லாமை உண்டானால் அவன் இருந்த இடத்தில் சென்று கிட்ட இ றே அடுப்பது –
அதுக்கு கால் நடை தாராத படி இருக்கிற எனக்கு –

உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
உரைப்பது எல்லாம் –
அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு –
நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்

மற்று –உரைப்பது எல்லாம்
அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்

ஊமையரோடு செவிடர் வார்த்தை-
என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை
எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை
ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை
செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்

உனக்கு ஓடுகிற தசை ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்று சொல்லுவான் என் –
உனக்கு இத் தசையை விளைத்தவன் தனக்குத் தெரியாதோ -என்ன —
தாய் செல்லாமை அறியாதவனோ கலந்தார் செல்லாமை அறியப் புகுகிறான்

பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
அநந்த வ்ரதம் -அனந்தனை குறித்து -வ்ரதம் அளவற்ற வ்ரதம் -அனுஷ்டித்து
பின்னைப் பிள்ளை முகத்தில் விழிக்க வேண்டும்
என்று கிலேசப் பட்டு பெற்று பின்னை -போக விட்டு இழந்து இருந்தாள் ஆய்த்து–

போய்ப்பேர்த்து –
இவள் இரக்கத்தாலே இழவு பொறுக்க மாட்டாமே கண்ணும் கண்ண நீருமாய் இருந்தாள்
அவன் முலைச் சுவடி அறியாமையாலே கால் தாழவும் மாட்டாதே போனான் –

பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
வேறு ஒருதாய் க்ரஹத்திலே வளர்ந்தான் ஆய்த்து
பெற்றவள் இழவுடன் இருக்க –
அவளுக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி தாயானமையில் ஒரு வாசி தோற்றாத படி யாய்த்து வளர்ந்தது

அவள் தானும்-
திருவிலேன் ஒ ன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
–பெருமாள் திருமொழி -7-5-
என்றாள்-இறே
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8 என்னக் கடவது இறே –

பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாரை நலிகையே அவனுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து
தாய் முலை –பெருமாள் திரு-6-4-இத்யாதி –
இது இறே -ஊடினார் வார்த்தை
முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆய்த்து-

தனக்கு ஜீவன ஹேதுவாய் தான் வந்து முலை உண்ணாமையாலே-முலைக் கண் நெறித்து அவள் இருக்க
தன் மௌக்த்யம் தோற்ற தனக்கு விநாசத்தைப் பலிக்குமதான விஷத்தை உண்டு -அத்தாலே
பாவ பந்தம் உடையாருக்கும் பாவ தோஷம் உடையாருக்கும் வாசி அறியாதான் ஒருவன் காண் இவன் –
என்று கண்டார் இகழும்படி நின்றான்
நம்பி
சாலப் பூர்ணன் ஆய்த்து –

மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–
தன் உடம்போடு அணைய வேணும் என்னும் ஆசை உடைய நான் இருக்க
இத்தனை போது புறப்பட்டு முரட்டு மல்லரோடே அணைகைக்கு போகா நிற்கும்

மல்லரானவர்கள் மல் பொருகைக்கு யுத்த பூமியிலே சென்று கிட்டும் காட்டில் தான் யுத்த பூமியில் சென்று கிட்டுமாய்த்து
அவன் மல்லர் உடம்போடு அணைவதற்கு முன்னே இடையிலே நான் சென்று கிட்டிக் கொள்ளும் படி
என்னை மதுரையின் பரிசரத்திலே கொடு போய் பொகடுங்கோள்

மல் பொருந்தா மல் களம்
அவர்கள் கிட்டுவதற்கு முன்னே என்னுதல்
என்னிடத்தில் பொருந்தாமல் மல்லர் யுத்த பூமியை அடைந்தவன் என்னுதல் –

————————————————————————————-

எல்லாம் செய்தாலும் இப்படி துணிந்து முடுக்க நிற்குமது அவனுக்கு அவத்யாவஹம் –
நீ அவனுக்கு அவத்யத்தை விளைக்கக் கடவையோ
உன்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்க வேண்டாவோ -என்ன –

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்--12-2-

பதவுரை

இனி–இனி மேல்
நாணி–வெட்கப்பட்டு
ஓர் கருமம் இல்லை–ஒரு பயனுமில்லை (ஏனெனில்)
நால் அயலாரும்–ஊரிலுள்ளாரெல்லாரும்
அறிந்தொழிந்தார்–(எனது செய்தியை) அறிந்து கொண்டார்கள்
பாணியாது–கால தாமத மின்றி
மருந்து செய்து–வேண்டும் பரிஹாரங்களைச் செய்து
என்னை–என்னை
பண்டு பண்டு ஆக்க உறுதிர் ஆகில்–இப்போதைய விரஹாவஸ்தைக்கு முற்பட்டதான ஸம்ஸ்லேஷ தசைக்கும்
முற்பட்டதான பகவத் விஷய வாஸனையையே அறியாத தசையிலிருந்த நிறத்தைப் பெற்றவளாகச் செய்ய நினைப்பீர்களாகில்,
நீர்–நீங்கள்
என்னை–என்னை
ஆணையால்–ஸத்யமாக
காக்க வேண்டில்–காப்பாற்ற விரும்புகிறீர்களாகில்
என்னை–என்னை
ஆய்ப்பாடிக்கே–திருவாய்ப்பாடியிலே
உய்த்திடுமின்–கொண்டு சேர்த்து விடுங்கள்

நாணி யினியோர் கருமம் இல்லை –
நாணி நான் என்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்குகிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –
நாணுகை யாவது லஜ்ஜிக்கை இ றே-

லஜ்ஜித்து மீள வேண்டுவது –
இன்னமும் சில நாள் இருந்து அவ்வஸ்துவை லபிக்க வேணும் என்று இருப்பார்க்கே –
லஜ்ஜை போகையாவது முடிகை இறே –

இனி -முடியும் அளவானாலும் ஜீவித்து இருப்பார் செய்யுமது செய்யப் போமோ –
சத்தை கிடக்கில் இறே லஜ்ஜை நோக்குவது
சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ
தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது
தரமி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோ-
இனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –

இனி ஒரு கார்யம் இல்லை என்கைக்கு இப்போது உனக்கு வந்தது என் என்ன
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்-
இது தான் பிறர் அறியாமைக்கே தான் பரிஹரிக்கப் பார்க்கிறது –
இது அறியாதார் சிலர் உண்டாய் பரிஹரிக்க வேணுமே

இவள் தான் முந்துற அறியாமே பரிஹரித்து அநந்தரம்
அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து
அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து –
இப்படி போரா நிற்கச் செய்தே ஓர் அசல் அறிந்து-
மற்ற வசல் அறிந்து -அவ்வளவில் அடங்காதே அவ் ஊரில் உள்ளவர்கள் அறிந்து
அது தான் புற வெள்ளம் இட்டு அவ் வழியாலே எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து-

அறிந்து ஒழிந்தார் –
இவள் தான் திருக் கோட்டியூர் நம்பியை போலே -பகவத் விஷயம் ஒருவரால் அறியலாகாது
என்று மறைத்துக் கொடு போருமவள் ஒருத்தி போலே காணும்

நம்பி தாம் ஒரு திண்ணையிலே ஒருவரும் அறியாத படி பகவத் குண அனுசந்தானம் பண்ணி இருப்பர்-
எம்பெருமானார் எழுந்து அருளி -நம்பி மடம் எது -என்று கொண்டு தெண்டன் இட்ட வாறே
அங்குள்ளார் -எம்பெருமானார் நம் திருக் கோட்டியூர் நம்பி அகத்தை நோக்கி தண்டன் இடா நின்றார்
என்ற பின்பு இறே நம்பியுடைய பிரபாவம் அங்கு உள்ளார் அறிந்தது-

ஆழ்வானும் ஆண்டானும் ஓர் ஆறு மாசம் சேவித்து இருந்த சந்நிவேசத்தைக் போரும் போது ஒரு வார்த்தை
கேட்டுப் போருவார்கள்

ஆழ்வான் ஒரு விசை ஆறு மாசம் சேவித்து நின்று போரப் புகா நிற்கச் செய்தே ஆழ்வானை-நம்மாழ்வார்
அடியேன் உள்ளான் –என்றபடி கண்டாயே -என்று பணித்தாராம்
அடியேன் க்ருதார்த்தன் ஆனேன் -என்று போந்தானாம்

என்னுள்ளான் என்ற அஹம் அர்த்தத்தை நிச்சயிக்கிற இடத்தில் அடியேன் -என்று
சேஷத்வத்தை நிரூபகமாகச் சொல்லுகிறது இறே
ஜ்ஞானானந்த லஷணமுமாய்-ஜ்ஞான குண கமுமாய் -அசித் வ்யாவருத்தமுமாய் இருக்கும் என்னும் இடத்தை
மூன்றாம் பதத்தாலே நிரூபியா நிற்கச் செய்தே
முன்பே பாட க்ரமத்தாலே சேஷத்வத்தை இட்டு சொல்ல வேண்டும் படி இறே
சேஷத்வம் ஸ்வ ஸ்வரூபமாய் அற்ற படி –

நீ கை வாங்கினாய் என்னா-உன் இடையாட்டத்தில் நாங்கள் கை வாங்கப் பாரோமே –
ஆந்தனையும் ஹிதம் சொல்லி நோக்கத் தேடுவுதோம் இறே-
எங்களுக்கு உன் பக்கல் உண்டான நசையாலே -என்ன

என்னை மெய்யே நோக்கப் பாறிகோள் ஆகில் -தன்னுடைமை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவனை
என் கண்ணுக்கு இலக்காகப் பாருங்கோள் –
பாணியாது என்னை மருந்து செய்து -பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பாணித்தல் -காலம் தாழ்த்தல் —
காதல் நோயைத் தீர்க்கப் பரிஹாரம் செய்தல்
தாழாதே எனக்கு வேண்டும் பரிஹாரம் பண்ணி –

பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பண்டு -சம்சஸ்லேஷ நிலை
பண்டு பண்டு -முந்திய நாயகனைப் பற்றி அறியாத நிலை
சம்ஸ்லேஷத்துக்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாக்கப் பார்த்தி கோளாகில்-
கலக்கப் புக்கவன்று தொடங்கி-மெலிவுக்கு இறே கிருஷி பண்ணிற்று –

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
மாணியுருவாய் –
உண்டு என்று இட்ட போதொடு -இல்லை என்று தள்ளிக் கதவடைத்த போதொடு
வாசி அற முகம் மலர்ந்து போம்படி இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையவனாய்

யுலகளந்த மாயனைக் காணில் –
த்ரை லோகத்தையும் அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனைக் காணில் –
குண ஜ்ஞானத்தால் ஜீவித்து இருக்கும் அவஸ்தை இல்லை என்கிறது
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருக்கும் -8-3- நிலை தாண்டிற்றே

தலை மறியும்-
தொடருகிற பாம்பை திரிய விடுவிக்குமா போலே –
பிரிவாற்றாமையால் வந்த நோய் தீரும்

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் –
உங்கள் ஆணையே -உங்கள் மேல் ஆணை என்றபடி
நீர் என்னை நோக்க வேண்டில் -என்னுதல்
நான் தெரிந்து இருந்து உங்களுடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் பண்ணும் படியாக
என்னை நோக்கப் பார்க்கில் -என்னுதல்

ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்-
அவன் தீம்புக்கு பெற்ற தாய் -பெரு நிலை -துணை -நிற்கும் ஊரிலே-
என்னைக் கொண்டு பொய் போகடப் பாருங்கோள்-
அங்கனம் தீமை செய்வார்களோ நம்பீ-ஆயர் மட மக்களை –பெரிய திருமொழி -10-7-11-என்று இறே அவள் சொல்லுவது

தீமையால் பூரணன் என்றவாறு நம்பீ –என்கிறாள்
இத்தை இறே அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -3-9- என்கிறது –

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட
மோதவும் கில்லேன்
-பெரிய திருமொழி -4-7-8- என்னுமவள் சந்நிதியிலே –
படிறு பல செய்து பாடி எங்கும் திரியாமே –என் பிள்ளையைப் போக்கினேன் —என்று
அவன் தீம்பு செய்யப் பெறாததுக்கு வயிறு பிடிக்கிறாள் இறே –

அஞ்ச உரைப்பாள் அசோதை –
இவன் தீம்பிலே புண்பட்ட பெண்கள் -இவன் தான் தோன்றி அல்லனே -இவனுக்கு ஒரு தாய் உண்டே –
அவளுக்கு அறிவிப்போம் -என்று முறைப்படச் சென்றால் அஞ்சும் படி பொடியாள் –

அவன் தீம்பிலே சதசாகமாக பணைக்கும் படி யாக வைத்துப் பொடிவது –
சிரித்துக் கொண்டு –அங்கனம் தீமைகள் செய்வார்களோ நம்பீ –என்னும்
இவன் இங்கிதஜ்ஞனாய் –
இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்ய விழிக்கும்-பிரான்
-திருவாய் -1-7-5-என்கிறபடியே
அப்போதே அவ்விடம் தன்னிலே நின்றவர்களும் தானும் அறிந்ததாக சில தூர்த்த க்ருத்யங்களைப் பண்ணும் –

ஆணாட விட்டிட்டு இருக்கும்
அவனை ஆணாட்டம் அடிக்க விட்டு -ஆனந்த நிர்பரையாய் இருக்கும் –
என் மகனுக்குத் தோற்று சிலர் வந்து முறைப்பட பெறுவதே -என்று
பெறாப் பேறு பெற்றவளாய் -க்ருதார்த்தையாய் இருக்கும் –

————————————————————————

இவளும் நம்மோபாதி பெண் பிறந்தாள் ஒருத்தி அன்றோ -இவளை விட்டு –
தமப்பனாய் -நியமிக்கைக்கு சக்தனாய் இருக்கச் செய்தே நியமியாதே இருக்கிற
ஸ்ரீ நந்தகோபன் வாசலிலே கொடு பொய் பொகடுங்கோள் -என்கிறாள் –

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி  போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-

பதவுரை

தந்தையும்–“தகப்பனாரும்
தாயும்–தாய்மாரும்
உற்றாரும்–மற்றுமுள்ள உறவினரும்
நிற்க–இருக்கும் போது
தனி வழி–(இவள்) தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்“ என்கிற வார்த்தையானது
வந்த பின்னை–உலகில் பரவின பிறகு
பழிகாப்பு அரிது–அப் பழியைத் தடுப்பது முடியாது (நான் தனி வழி போகாதிருக்கவும் முடியவில்லை, ஏனென்றால்)
நந்த கோபாலன்–நந்த கோபருடைய
கடைத் தலைக்கே–திரு மாளிகை வாசலிலே
மாயவன்–ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ண பிரான்
வந்து–எதிரே வந்து
உரு காட்டுகின்றான்–தன் வடிவைக் காட்டி இழுக்கின்றானே (இப்போது நீங்கள் செய்ய வேண்டிய தென்ன வென்றால்)
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற–(பெண்களைக்) குடிகெடுத்துக் குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான
நள்ளிருட் கண்–நடு நிசியிலே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் –
பழி விளைந்தால் பழி பரிஹரிக்கை பணி யுடைத்து நீங்கள் தான் பழி
பரிஹரியாமல் இருக்க வல்லவர்கள் அல்லி கோள்
இனி அதுவும் பிறக்கக் கொள்ள பின்னை நின்று மிறுக்குப் படாதே -ஏற்கவே பரிஹரிக்கப் பாருங்கோள் –
எனக்கு விளம்பம் பொறுக்கலாய் தாழ்க்கிறேன் அல்லேன் –
உங்களைப் பார்த்து கால் தாழ்க்கிறேன் அத்தனை –
அது தான் இனிச் செய்யப் போகாது -ஆனபின்பு ஏற்கவே பரிஹரிக்கப் பாருங்கோள் –

தனி வழி  போயினாள் என்னும் சொல்லு வந்த பின்னைப் பழி காப்பரிது
கடகரை ஒழிய தனியே புறப்பட்டு போகைக்கு மேற்பட பழி இல்லை
தாய் தமப்பன் உறவு முறையார் என்கிற இவர்களை விட்டுத் தனி வழியே போயினாள் –
நாயகன் பின்னே போகையும் அன்றிக்கே தானே தனியே போயினாள் -என்கிற
இந்தச் சொல்லு நாட்டிலே வார்த்தை யானால்
பின்னை பரிஹரிக்கப் போகாது

வயோ அச்யா ஹ்யதி வர்த்ததே -யூத -5-5- என்னக் கடவது இறே –
மேலும் இப் பேற்றை யன்றோ பெற இருக்கிறது -என்று வரும் நாளை நினைத்து ஆறி இருக்கப் போகாது –
முன்பு இழந்ததும் இப் பேற்றை யாகாதே -என்று வெறுக்க வேணும் –
இது தான் பழி என்று புத்தி பண்ணிப் பரிஹரிக்கவும் வேணும் என்று இருந்தாய் ஆகில்
முதலிலே இது பிறவாதபடி-க்ரம ப்ராப்தி பார்த்து பொறுத்து எங்களுக்காக இருந்தாலோ என்ன –

மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்-
ஒரு தாய் தமப்பனைப் பார்த்து ஆறி இருக்கலாம் படியோ அவனுடைய சௌந்தர்ய சீலாதிகள் வந்து நலிகிற படி –
நானும் ஆந்தனையும் பாரா நின்றேன் -அவன் உரு வெளிப்படடிலேயே முற்பாடனாகா நின்றான்

காசித் சாவசதஸ் யாந்தே ஸ்தித்வா த்ருஷ்ட்வா பஹிர்குரும்-தன்மயத்வேன கோவிந்தம் தத்யௌ மீலித லோசநா-
தச்சித்த விமல ஆஹ்லாத ஷீண புண்ய சயா ததா -தாதா ப்ராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா –
சிந்த யந்தி ஜகத் ஸூ தீம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வா சத்யா முக்திம் கதாநய கோப கன்யகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-20–22-

இந்த இடத்துக்கு பட்டர் அருளிச் செய்யும் படி –
திருவாய்ப்பாடியிலே -கிருஷ்ண சம்ஸ்லேஷத்தில் இவளைப் போலே
புதியார் இல்லை –என்று –
அதாவது -குரு தர்சனம் பண்ண வல்லள் ஆனாளே
தாய் தந்தையரைப் பார்க்க அவளால் முடிந்ததால் கண்ணனை நோக்கி ஓடுவதற்கு தடையாக வாயிற்றே –

யயௌ காசித் ப்ரேமாந்தா தத் பார்ச்வம விலம்பிதம்-ஸ்ரீ விஷ்ணு -5-13-19–என்கிறது இறே
ஒருத்தி போனாள் என்கிறது -வழி காட்டினார் ஆர் என்றால் பிரேமத்தால் நெஞ்சு இருண்டது –
அந்த இருட்சி வழி காட்டப் போனாள் –

இவளை நோக்கும் போது சிந்தயந்தி புதியவளே –
குரவ கிம் கரிஷ்யந்தி
-இத்யாதி -ஸ்ரீ விஷ்ணு -5-18-22-
என்றபடி பெரியவர்களை உதறிச் சென்ற ஆய்ச்சியின் நிலையிலே நின்று ஆண்டாள் பேசுகிறாள்

தூ வலம் புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே கோவலர் சிறுமியர்
இளம் கொங்கை குதுகலிப்ப உடலுள் அவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து -பெரியாழ்வார் -3-6-1-என்றபடி
பலவகைப் பட்ட அரண்களிலே பெண்களை கொடு புக்கு கட்டிக் கொடு கிடந்தார்கள்

உறவுமுறையார் இட்ட அரணையும் கடந்து -காத்துக் கிடக்கிறவர்களையும் உறக்கிச் செவியிலே வார்த்தை
சொல்ல வல்லதொரு தூது போனான் –
குழலோசை செவிப்பட அநந்தரம் முலைகள் உணர்ந்து -பெண்களை எழுப்பி -குழலோசை வந்தது
நாம் போதும் கொல்-என்ன —
அவர்கள் -காத்துக் கிடக்கிறவர்கள் உணரும் கிடாய் -என்ன
ஆனால் நீங்கள் அவர்கள் உறங்கினால் வாருங்கோள் -நாங்கள் முன்னே போகிறோம் -என்றன –

குதுகலிப்ப -என்று இவற்றை சேதன சமாதியாலே சொல்லும் போது
அங்கனம் ஆக வேணும் இறே

இளம் கொங்கை
சொல் கேளா பிரஜைகள் யாய்த்து

காவலும் கடந்து
ஷூத்ர பாஷாணங்கள் கிடக்க மேலே நீர் போமா போலே –
நீர் வெள்ளமானால் மலை மேலும் ஓடும்
அப்படியே இட்ட அணையை ஒன்றாக நினையாமைக்கு ஹேது -கௌதூஹலத்தின் மிகுதி இறே –
அப்படியே தாய் தமப்பனை நாக்கு வளைக்கப் பண்ணின வடிவு அழகு இருக்கிறபடி
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற-

கொந்தளமாக்கிப் பரக்கழித்துக்
கொந்தளமாக்கி -சிலுசிடுகை –
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக்-சண்டையிட்டு பழி விளைத்து –

குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற –
ஸ்ரீ நந்தகோபர் தம்முடைய ராஜ்யத்தில் வன்னியம் அடிக்கைக்காக நோன்பு நோற்றுப் பிள்ளை பெற்றாராய்
அது கண்டி கோளே-அவன் இவனை நியமியாதே இருக்கிறபடி

நந்த கோபாலன் கடைத் தலைக்கே –
நந்த கோபாலன் கடைத்தலை -என்றால் பிரசித்தம் இறே –

பட்டர் அருளிச் செய்வர் என்று -இவனால் புண்பட்ட பெண்கள் அடைய
கட்டணங்களும்-stretcher -கையும் பசும் துவலுமாய்த்து-அவர் வாசல்
விஷம் தீர்ப்பார் வாசல் போலே -பசும் துவல் -வைவர்ண்யம்-

நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்-
நடுவான இருளிலே கொடு பொய் பொகடுங்கோள் –
நீங்கள் வெளியிலே கொடு போய்ப் பொகட்டு-
அவன் பித்ராதிகளுக்கு லஜ்ஜித்து புறப்பட்டு மாட்டாது இராமே -வெளிச்சத்தில் கொண்டு பொகட்டால் லஜ்ஜிக்குமே –

இருளிலே கொடு பொய் பொகடுங்கோள் –
இருள் அன்ன மா மேனியாகையாலே-பெரிய திருவந்தாதி -26-
தன நிறத்தோடு விகல்ப்பிக்கலாம் –-இருளிலே புறப்பட்டு அவனை அணைக்கலாம் படி –

மகனைப் பெற்ற நந்த கோபாலன் –
இவனைப் பெறுகைக்கு நோன்பு நோற்றவன் இறே –
தாம் பண்ணின துஷ்கர்ம பலம் தானே அனுபவிக்கும் படி அவன் வாசலிலே பொகடுங்கோள்
அங்கே பொகடச் செய்தே பின்னையும் உங்களுக்கு பழி வராதே கொல்லுங்கோள் –

வெளியிலே கொடு பொய் பொகட்டு —
வெளிச்சத்தில் அவன் உறவு முறையாருக்கு லஜ்ஜித்து புறப்பட மாட்டாதே இருக்கும் –
அவ்வளவிலே நான் முடிவன் -பின்னையும் உங்களுக்கு பழி வாராதபடி பாருங்கோள் –
எனக்கே நள்ளிருட் கண் என்னை யுய்த்திடுமின்–

————————————————————————

அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்--12-4-

பதவுரை

அம் கைத்தலத்திடை–அழகிய திருக்கைத் தலத்திலே
ஆழி கொண்டானவன்–திரு வாழியை ஏந்தி யிருப்பவனான பிரானுடைய
முகத்து அன்றி விழியேன் என்று–முகத்தில் தவிர (மற்ற பேருடைய முகத்தில்) விழிக்க மாட்டேனென்று
செம் கச்சு ஆடை கொண்டு–நல்ல கஞ்சுகமாகிற ஆடையினாலே
கண் ஆர்த்து–கண்களை மூடிக் கொண்டு
சிறு மானிட வரை காணில் நானும்–க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால் வெட்கப்படா நின்ற
கொங்கைத் தலம் இவை–இக் கொங்கைகளை
நோக்கி காணீர்–(தாய்மார்களே!) நீங்கள் உற்று நோக்குங்கள் (இக் கொங்கைகளானவை)
கோவிந்தனுக்கு அல்லால்–கண்ண பிரானைத் தவிர்த்து
வாயில் போகா–மற்றொருவடைய வீட்டு வாசலை நோக்க மாட்டா, (ஆகையாலே)
இங்குத்தை வாழ்வை ஒழிய போய்–நான் இவ்விடத்திலே வாழ்வதை யொழித்து
என்னை எமுனை கரைக்கு உய்த்திடுமின்–என்னை யமுநா நதிக் கரையிலே கொண்டு போட்டு விடுங்கள்.

அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று–
முலைகளினுடைய-சங்கல்ப வாக்கியம் இருக்கிற படி –
பூ வேளைக் காரரைப் போலே யாய்த்து முலைகளின் படி –

அரசரின் தலையிலே பூக்களுக்கு ஊறு நேர்ந்தாலும் தங்களை அழித்து கொள்வார்களாம் –
ராஜாக்களின் தலையில் பூ மாறில் குத்திக் கொள்வார் சிலர் உண்டு –
அப்படியே கையில் திரு வாழி ஒழிந்த அன்று அவன் தான் வரிலும் வேண்டேன் –

வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி –
அழகிய கையிலே கல்பக தரு பணைத்துப் பூத்தால் போலே யாய்த்து கையில் திருவாழி இருப்பது
வெறும் புறத்திலே கொல்ல வற்றாய்த்து திருக் கை தான் –
அதுக்கு மேலே திரு ஆழியையும் தரித்தான்

பிரதிகூலரைக் கை கழியப் போய்க் கொல்லும்-
அனுகூலரை கை மேலே இருந்து கொல்லும்

கருதிமிடம் பொருது –கைந் நின்ற சக்கரத்தன்–திருவாய் -10-6-8=-

செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்-கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் –
சிவந்த கச்சைக் கொண்டு கண்ணை மறைத்தாய்த்து முலைகள் -கண் -முலைக் காம்பு
பெரு மானிடவரும்-புருஷத்தமன் அன்றோ – உண்டு போல் காணும்

மாநுஷீம் தநும் ஆஸ்ரிதம் பரம் பாவம் -ஸ்ரீ கீதை -9-11- என்னக் கடவது இறே –

காணில் நாணும் –
சமைய வளர்ந்த முலைகளானவை-உள்ளே குடிபுகும் –

ஸ்வா நி காத்ராணி லஜ்ஜயா
ஒருவருக்கு ஒருவர் அம்பேற்றுப் பெறப் படுகிற ராஜ்ஜியம்
பெருமாள் சொல்லக் கேட்டு லஜ்ஜையால் உடல் குன்றினால் போலே
இவர்கள் -ஸ்ரீ பரத ஆழ்வான் இளைய பெருமாள் -கையிலே படுகிற பாடு இது -அயோத்யா அரசு –

பரதனைக் கொல்லுவன் குத்துவன் என்றால் போலே இளைய பெருமாள் முனிதல் தீர சில வார்த்தை சொல்ல
பெருமாள் பல படிகளாலும் மாற்றிப் பார்த்தார் -பின்னையும் மீண்டிலர்

பாடமித்யேவ வஹ்யாதி -என்று
அதுவோ பிள்ளைக்கு ராஜ்ய ஸ்ரத்தை ஓடுகிறது -பிள்ளாய் நீ அத்தை தவிர் -என்று நான் சொன்னவாறே
தலைச் சுமையோபாதி பொகட்டுக் போகிறான் -என்றவாறே
இளைய பெருமாளைக் கண்டுவிட்டதில்லை –

காத்ரை சோகாபி கர்சிதை –என்கிறபடியே
ஒன்றைக் கொண்டே அணைய வேணும் -பிராட்டி திருவடிக்கு காட்டினால் போலே
ஸ்ரீ ராம பிரானையே அணைய ஆசைப் பட்டது போலே
அல்லாதார் செய்த படி செய்ய -இச் சிறு பிரஜைகள் கண்ணிலே கண்ண நீரைப் பாரி கோள் -என்னுமா போலே
இவை நோக்கிக் காணீர் –
அவனை நினைத்து இவை வீங்கின படி பாரி கோள் –
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் –

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது –
வழியே போய் வழி வந்து ஏக தார வ்ரதனாய் இருக்கும் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –

மம து அஸ்வா நிவ்ருதச்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மநி–அயோத்யா -69-1-
அஸ்வம் ஹ்ருதயம் அறிக்கைக்கு ஸூமந்தரன் -தன்னைத் தான் மதித்த படியால் –மம -என்கிறான்
து -இற்றைக்கு முன்பின் இன்றிக்கே இன்றைக்கே உள்ளதொரு விசேஷமாய்த்து இது
அஸ்வா –என் கருத்திலே நடந்து போனவை
நிவ்ருதச்ய -பெருமாளை எழுந்து அருளிவித்து கொடு போகிற போது போய்த்தின
ந ப்ராவர்த்தந்த வர்த்மநி– வழி செய்து கிடக்கிற பெரு வழியை விட்டு காடு பாயத் தொடங்கிற்றன

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்-
அடிச்சுவடு உருவெளிப்பாடாய் -மானஸ அனுபவ மாத்ரமாய் -அனுபவிக்கலாம் இங்குத்தை சம்ருத்தியை விட்டு
அடிச் சுவட்டை கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள் –
தூய பெரு நீர் யமுனை – இறே
தானும் அவனுமாய் ஜலக்ரீடை பண்ணி விளையாடக் காணும் நினைவு –

————————————————————————————–

நோவு அறிந்து அதுக்கு ஈடாக பரிஹாரம் பண்ண வேணும் இறே -என்று
அதிலே துக்கப் படத் தொடங்கினார்கள்-
உறவுமுறையார் என்னா
உங்களுக்கு என் நோவு அறியப் போகாது
-என்கிறாள் –

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

பதவுரை

அம்மனைமீர்–தாய்மார்களே!
என்–என்னுடைய
இது நோய்–இந்த வியாதியானது
ஆர்க்கும்–எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
அறியல் ஆகாது–அறிய முடியாத்து, (ஆனால்)
துழதிப்படாதே–(இது அப்படிப்பட்ட நோயா! என்று) நீங்கள் துக்கப்படாமல்,
நீர் கரை நின்ற–காளிங்க மடுவின் கரையிலிருந்த
கடம்பை ஏறி–கடம்ப மரத்தின் மேல் ஏறி (அங்கிருந்து)
காளியன் உச்சியில்–காளிய நாகத்தின் படத்தின் மேலே
நட்டம் பாய்ந்து–ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து
போர் களம் ஆக–அப் பொய்கை தானே யுத்தக் களமாம்படியாக
நிருத்தம் செய்த–நர்த்தனம் செய்யப் பெற்ற
பொய்கை கரைக்கு–மடுவின் கரையிலே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள்.
கார் கடல் வண்ணன் என்பான் ஒருவன்–நீலக் கடல் போன்ற திரு நிறத்தனான கண்ணபிரான்
தடவ–(தனது திருக் கைகளால் என்னைத்) தடவுவானாகில்
தீரும்–(இந் நோய்) தீர்ந்து விடும்
கை கண்ட யோகம்–(இது தான்) கை மேலே பலிக்கக் கூடிய உபாயம்.

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது –
இந் நோவு விளைத்தவனுக்கும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாது
இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும்
இளம் தெய்வம் அன்று இது
-திருவாய் -4-6-2- என்னக் கடவது இறே –
யஸ்யா மதம் தஸ்ய மதம் –கேன -2-3-என்றதுக்குள்ளே புக்கான் இறே அவனும்
தாம் தம் பெருமை அறியார் -பெரிய திரு மொழி -5-2-1- –
தன்னைப் பரிச்சேதித்தால் இறே என் நோயைப் பரிச்சேதிக்கலாவது

எந்நோய்-
ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்த -ராம விரஹத்தாலே -அத்தைக் காணா-அவன் அருகு நின்ற –
மந்தரை -கைகேயிக்கு -மோஹிக்க ஒண்ணாது இறே

அஸ்ய ராஜ குலச்யாத்ய த்வத் அதீனம் ஹி ஜீவிதம் –அயோத்யா -87-8-
பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான் —
இனி நீ நோக்கும் இத்தனை இறே எங்களை -என்கிறார்கள் அல்லர்
உன் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு போனவர் உன்னை இழக்க மாட்டாமையாலே மீள்வர் -என்னும் இது
பற்றாசாக இறே நாங்கள் நாங்கள் ஜீவித்து இருப்பது

புத்ர வ்யாதிர் ந தே கச்சித்
நின்றால் போலே ரசவாதிகள் போமா போலே மோஹித்துக் கொண்டு நிற்கக் கண்டார்கள்
பிள்ளாய் உனக்கு ஓடுகிற நோய் என் என்று கேட்கிறார்கள் -கௌசல்யாதிகளும் உட்பட –

ராம விரஹம் சர்வ சாதாரணமாய்த்து-தங்களுக்கும் உண்டாய் இருக்க
உனக்கு ஓடுகிற தசை என் என்று கேட்கும் படி யாய்த்து இவன் மோஹித்த சடக்கு
தங்கள் அளவில் ஆகில் இறே இவனுக்கும் அதுவே என்று நினைத்து இருக்கலாவது – –

அபிவ்ருஷா -அயோத்யா -59-4-என்னுமா போலே
மரங்களும் வாடா நிற்க –இவனைக் கேட்க வேண்டாம் இறே
ஒரு வ்யக்திகதமான விசேஷம் உண்டானால் அந்த வ்யக்தி தன்னையே கேட்டு அறிய வேணும் இ றே
எந்நோய் –
தெய்வ நந்நோய்-திரு விருத்தம் -53- -என்னுமா போலே இவள் தனக்கும் ஆதர விஷயமாய்
உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இந்நோய் தான் –

அம்மனைமீர் துழிதிப் படாதே-
பெற்ற பிராப்தி கொண்டு அறிவோம் என்றால் அறியப் போமோ
உங்களுக்கும் இப்போதாகப் பாகம் பிறந்தது -முன்பு பாலைகளாய் அன்றோ –
பிராப்யத் த்வரையாலே துடித்தவர்கள் தானே
துக்கப் படாதே –துழதி -துக்கம் –
இது நீங்கள் அறிந்த வகையாலே பரிஹரிக்கப் பார்த்தி கோளாகில்-உங்களுக்கு துக்கமே சேஷித்து விடுவது –
நீ கை வாங்கினாய் என்னா நாங்களும் கை வாங்க மாட்டோமே –
நாங்கள் உன்னை இழக்க மாட்டோமே
நீ பரிகாரமாக நினைத்து இருந்தது என் -என் -கேள் என்று சொல்லுகிறாள் –

கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்-
கரும் கடல் போலே -ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் இருப்பான் ஒருவன் உண்டு
நோவுக்கு நிதானைத்தைச் சொல்லி சொல்கிறாள் ஆயத்து
பரிஹாரத்தை இவர்கள் தாங்களும் அடியே பிடித்து இவள் தன் பக்கலிலே கேட்டறிய வேண்டும்படி யாய்த்து கலங்கின படி –

ஒருவன் –
நீங்களும் பரிஹாரத்தில் இழியும் அத்தனை போக்கி உங்களுக்கு அடி ஆராயப் போகாதாய்த்து –

கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்-
யோகம் -ஔஷத பிரயோகம்
கைக் கண்டு இருந்து இறே இவள் தான் சொல்கிறது –
இவள் முன்பு சொல்லிப் போரும் வார்த்தைகளில் ஓன்று இறே இப்போது சொல்லுகிற பரிகாரமும் என்ன ஒண்ணாது
கைக்கண்ட உபாயம் என்றுமாம் –
யோகம்
-உபாயம் –

கௌந்தேய பிரதி ஜா நீ ஹி -இவ்வர்த்தத்தில் நம்மைப் பார்த்து இருக்க வேண்டியதில்லை காண்
நீ பிரதிஜ்ஞை பண்ணு
பிரதிஜ்ஞாம் குரு –ஸ்ரீ கீதா -பாஷ்யம் 9-3- என்கிறபடியே
மே-நம்மை அறியாயோ நீ-
ந மே பக்த ப்ரணச்யதி -நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலமும் அநர்த்தம் வாராது காண்-
அக்னி நா சிஞ்சேத்-நெருப்பாலே நனைக்கக் கடவன் என்றால் போலே அசங்கதம்-

ஆரே துயர் உழுந்தார் -துன்புற்றார் ஆண்டையார் -காரே மலிந்த கரும் கடலை-நேரே கடைந்தானை
காரணனை நீரணை மேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து -மூன்றாம் திரு -27-
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் -அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிற பாப பலங்கள் அனுபவித்தார்
உண்டு என்று கேட்டறிவார் உண்டோ

துயர் உ ழுந்தாரில்-– துன்புற்றார் உண்டோ -துன்ப்ற்றார் யாரோ –பாபங்களைப் பண்ணி வைத்து-
நம்மை ஆஸ்ரயித்து பின்னும் பல அனுபவம் பண்ணினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ –
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் முன்பு கை வந்தபடி திரிந்தார்களே யாகிலும் அவன் திருவடிகளிலே-
தலை சாய்ந்த வாறே இவை தானே சவாசனமாக கழிந்து நிற்றல் –

நாட்டிலுள்ள பாபம் எல்லாம் சும்மெனாதே கைவிட்டோடி தூறுகள் பாய்ந்தனவே –பெரியாழ்வார் -5-4-3-
அன்றிக்கே –
உகவாதவர் மேலே ஏறிடுதல் அன்றியே தன் மேலே ஏறிட்டுக் கொள்ளுதல் செய்யும் அத்தனை

உரஸா ப்ரதிஜக்ராஹ
பகதத்தன் அம்பை தான் ஏறிட்டுக் கொண்டது போலே –
என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் அவன் வார்த்தை பழுதாகாதே –

நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
இங்கே இருந்து எனக்குப் பரியாதே
அவனுக்கு பரியலாம் தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள்-

முதலிலே தொடங்கி -கடம்பிலே ஏறினதுமே -பயாவஹமாய் இருப்பது ஒன்றாய்த்து
முதலிலே விஜ ஜாலம் தாரகமாக முளைத்து வளர்ந்தது இறே
ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு சென்று காளியனைக் கிளப்பி –
அவன் கிளம்பின வாறே அவன் தலை இலக்காகப் பாயலாம் படி கடம்பிலே உயர ஏறினான் ஆய்த்து
பாட்கிற போதே காளியன் தலை காலாகப் பாய்ந்தான்

போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–
இதுக்கு பட்டர் அருளிச் செய்ய நான்-நம்பிள்ளை – கேட்டேன் -என்று அருளிச் செய்வர்-
காளியன் தலையிலே கிருஷ்ணன் பாய்ந்தான் -என்று கேட்டார் கேட்ட இடங்களிலே ஆழ விழுந்ததாய்த்து
பொய்கை அளவும் கால் நடை தந்து போய் புக வல்லார் இல்லையாய்த்து இறே

அனந்தாழ்வான் எம்பெருமானாரைக் காண வேணும் என்று வாரா நிற்கச் செய்தே –
வடகரை அளவிலே வந்தவாறே -திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று
சில ஏகாங்கிகள் தலைகளையும் சிரித்து ஏறினார்கள்
அவர்களைக் கண்டு -அனந்தாழ்வான் உடன் வந்த ஸ்ரீ நம்பி குஹ தாசர் -மரத்திலே ஏறி விழுவதாக ஏறினாராய்-
தெளிந்து ஏறின நீ சாவ மாட்டாய் காண் போந்திழி -என்றானாம் –

பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–
இங்கே தெளிவாக இருந்து கிலேசப்படாதே
மோஹித்து கிடக்கலாம் தேசத்திலே பொகடுங்கோள் –

———————————————————————–

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

பதவுரை

கார்–வர்ஷா காலத்தி லுண்டான
தண்–குளிர்ந்த
முகிலும்–மேகமும்
கருவிளையும்–கருவிளைப் பூவும்
காயா மலரும்–காயம் பூவும்
கமலம் பூவும்–தாமரைப் பூவுமாகிற இவைகள்
வந்திட்டு–எதிரே வந்து நின்று
இருடீகேசன் பக்கல் போகு என்று என்னை ஈர்த்திடுகின்றன–“கண்ணபிரான் பக்கலில் நீயும்போ“ என்று
என்னை வலிக்கின்றன. (ஆகையாலே)
பத்தவிலோசனத்து–பக்தவிலோச்நமென்கிற ஸ்தானத்திலே
வேர்த்து–“பசுமேயக்கிற ச்ரமத்தாலே வேர்வை யடைந்து
பசித்து–பசியினால் வருந்தி
வயிறு அசைந்து–வயிறு தளர்ந்து
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று–வேண்டிய ப்ரஸாதம் உண்ண வேண்டிய காலம் இது என்று
பார்த்திருந்து–(ரிஷி பத்னிகளின் வரவை) எதிர்பார்த்திருந்து
நெடு நோக்குக் கொள்ளும்–நெடுங்காலம் கடாக்ஷித்துக் கொண்டிருக்குமிடமான
உய்த்திடுமின்–(என்னைக்) கொண்டு சேர்த்து விடுங்கள்.

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
கார் காலத்திலே குளிர்ந்த முகிலும்
கருவிளைப்பூவும்
காயா மலரும் –
மேகத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லப் புக்கவள் -ஒன்றும் போராமையாலே
பலவற்றிலேயும் கதிர் பொறுக்குகிறாள் –
(சமுதாய சோபை சொல்லி அடுத்து )அவயவ சோபைக்கு-கமலப் பூவையும் சொல்கிறாள் –

ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு –
பற்றி இழா நின்றன –
என் சொல்லி என்னில் –

இருடீகேசன் பக்கல் போகே யென்று
லஷ்மணே ந கதாம் கதிம் -என்கிறபடியே –
கரணங்கள் உடையவன் பக்கலிலே போனால் அவற்றின் பின்னே போகை இறே உள்ளது

யச்யாத்மா சரீரம் -அன்றோ –
கரணாதி பாதிப
-என்னக்  கடவது இறே
பரம சேஷியைக் கண்டால் பின்னை த்வார சேஷிகள்-
ஹ்ருஷீகம் -இந்த்ரியங்கள் -அவற்றுக்குத் தலைவன்- ஹ்ருஷீ கேசன் என்றபடி அளவில் நில்லாது இறே அவை –

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து-
நானே சென்று முறை கெடப் பற்றினேன் ஆகாமே பாருங்கோள்
என் செல்லாமை பரிஹரிக்கைக்கா அன்றிக்கே அவன் செல்லாமை பரிஹரிக்க போனேனாம் படி பண்ணப் பாருங்கோள் –

வேர்த்து –
பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு
அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்களிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்
அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு வரவு –பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி –

இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –
பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –

பித்ருக்கள் நிமித்தமாக வரிக்கப் பட்டது போலே இல்லாமல் -தானும் விதி ப்ரேரிதனாகக் கொள்ளும் என்றபடி
பெரியாழ்வார் பெண் பிள்ளை இடுமது போலே –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-நான் ஓன்று

நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9-7–என்னுமா போலே
பெரியாழ்வார் மகளாய் இழந்து இராதே ஒரு பட்டை சோற்றை கொண்டு போயாகிலும் கிட்டுவோம் -என்கிறாள்-

நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –
பத்தம் -சமைத்த சோறு —
விலோசனம்
-பார்வை-
(பிரசாதம் எதிர் பார்த்து இருக்கும் -என்றே சப்தார்த்தம் )
சோறு பார்த்து இருந்த இடமாய்த்து-
சோறு பார்த்து இருக்கும் இடத்திலே -என்றபடி

—————————————————————————————————

உனக்கு இஸ் ஸ்வபாவ அந்யதாபாவம் எத்தாலே தீரக் கடவது என்ன –
அது இன்னது என்கிறாள்
அவன் வெற்றி மாலையிட்டு நிற்கிற இடத்திலே
என்னைக் கொடு பொய் பொகடுங்கோள் என்கிறாள்-

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-

பதவுரை

வண்ணம் திரிவும்–(என்னுடைய) மேனி நிறத்தின் மாறுபாடும்
மனம் குழைவும்–மனத் தளர்ச்சியும்
உண்ணல் உறாமையும்–ஆஹாரம் வேண்டியிராமையுமும்
உள் மெலிவும்–அறிவு சுருங்கிப் போனதுமாகிய இவை யெல்லாம் (எப்போது தணியுமென்றால்)
ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன்–கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ண பிரானுடைய
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட–குளிர்ந்து அழகிய திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுமளவில்
தணியும்–நீங்கும்,
(அத் திருத் துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டு வந்து கொடுக்க முடியாதாகில்)
மானம் இலாமையும்–மானம் கெட்டுப் போனபடியும்
வாய் வெளுப்பும்–வாய் வெளுத்துப் போனபடியும்
பலதேவன்–பலராமன்
பிலம்பன் தன்னை–ப்ரலம்பாஸுரனை
பண் அழிய–ஸந்தி பந்தங்கள் உருக் குலையும்படி,
வென்ற–கொன்று முடித்த இடமாகிய பாண்டி வடத்து
பாண்டீரமென்னும் –ஆலமரத்தினருகில்
என்னை உய்த்துடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடுங்கள்.

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
வண்ணம் திரிவும்-நிறத்தினுடைய அந்யதா பாவமும்
மனம் குழைவும்-லாப அலாபங்களுக்கு இடையக் கடவதல்லாத நெஞ்சினுடைய நெகிழ்ச்சியும்
மானமிலாமையும்-எல்லா அளவிலும் உண்டான ஸ்த்ரீத்வ அபிமானம் வாசனையோடு குடிபோகையும்
வாய் வெளுப்பும்-போக்யத் த்ரவ்யங்களைக் குறைக்கையினாலே வாயிலே உண்டான வெளுப்பும் –
வாய்ப்புறம் வெளுத்து
-நாச் திரு -1-8-

உண்ணல் உறாமையும் உள் மெலிவும் –
வேறு ஒன்றும் தாரகமாய் இருப்பது இல்லாமையினாலே சரீரத்தில் பிறந்த பல ஹானியும்
இவை எல்லா வற்றுக்கும் அடியான ஜ்ஞான சங்கடமும்
உள்
-என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது -ஜ்ஞான சங்கோசம் –

ஓத வண்ணன் என்பான் ஒருவன்-
இவை எல்லாம் இப்படிப் பண்ணி வேறு படுத்தின வடிவு அழகு இருக்கிறபடி –
ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையான் ஒருவன்
ஒருவன் -இதர சஜாதீயன் –என்றுமாம் –

தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும்
அவன் தான் இதர விசஜாதீயனாய் இருக்குமா போலே –
அம்மாலையின் படியும்
அத்தைக் கொடு வந்து ஸ்பர்சிக்க இது தணியும் –

பிலம்பன் தன்னை பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்-
கன்றுகள் மேய்க்கும் பிரதேசத்தில் -ஆல மரத்தின் அடியிலே –
ப்ரலம்பா ஸூரன் கட்டழிந்து -சந்தி பந்தங்கள் குலைந்து

சிதிலனாம் படியாக நம்பி மூத்த பிரான் வென்ற பாண்டீர வடத்திலே கொடு பொய் பொகடப் பாருங்கோள் –
இளைய பெருமாள் இந்த்ரஜித் வதம் பண்ண -அந்த வெற்றி பெருமாளானதாப் போலே யாய்த்து இங்கும்
நம்பி மூத்த பிரானுடைய வெற்றியும் கிருஷ்ணனதாய் இருந்தது இறே –
அவன் வீர அபிஷேகமும் விஜய அபிஷேகமும் பண்ணி மாலையிடும் போது–(வெற்றி வாகை சூடும் பொழுது )அவன் தனியே நில்லாமே
நானும் ஒக்க நின்று மாலையிடும்படியாக என்னை அங்கே கொடு பொய் பொகடுங்கோள்-

———————————————————————————————

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-

பதவுரை

கன்று இனம்–கன்றுகளின் திரள்கைள
மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்–மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றவனுமானான்.
காடு வாழ் சாதியும் ஆக பெற்றான்–(வீட்டை விட்டுக் கழிந்து) காட்டிலேயே தங்கி வாழும்படியான சாதிபிலும் பிறக்கப் பெற்றான்
பற்றி–வெண்ணெய் களவில் பிடிபட்டு
உரலிடை–உரலிலே
ஆப்பும் உண்டான்–கட்டுப்படவும் பெற்றான் (ஸௌலப்ய காஷ்டையான இச் செயல்கள்)
பாலிகாள்–குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே!
உங்களுக்கு–உங்களுக்கு
ஏச்சுக் கொலோ–தூஷணத்துக்கோ உடலாயிற்று? (இதுவரையில் நீங்கள் இழிவாகச் சொன்னவை நிற்க இனியாகிலும்)
கற்றன பேசி வசவு உணாதே–நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி (என்னிடத்தில்) வசவு கேட்டுக் கொள்ளாமல்,
காலிகள் உய்ய மழை தடுத்து–பசுக்கள் பிழைக்கும்படி பெரு மழையைத் தடை செய்து
கொற்றம் குடை ஆக–வெற்றிக் குடையாக
ஏந்தி நின்ற–(கண்ண பிரனால்) தரிக்கப்பட்ட
கோவர்தனத்து–கோவர்த்தன மலையினருகே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

கெடுவாய் நீ இங்கனே கிடந்தது படா நிற்கிறது என் –
பசுக்களை மேய்க்கை நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்தது என்னலாம் படி கன்றுகளின் பின்னே
அவற்றினுடைய ரஷணத்துக்காக திரிவான் ஒரு பாலனுமாய்-
ஓர் ஊரிலே தங்குகையும் அன்றிக்கே -பசுக்களுக்கு நீரும் புல்லும் உள்ள விடத்தே தங்குவான் ஒருத்தனுமாய்-
எளியராய் இருப்பார் செய்வித்தை செய்து -எளிய த்ரவ்யங்களைப் புசித்து -இப்படி திரிவான் ஒருவன் காண்-
அவனைப் பெறுகைக்கோ நீ இப்படி படுகிறது -என்ன –

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
–திருவாய் -10-3-10-என்கிறபடியே-
(தெய்வத்தை காட்டிலும் ஐந்தாம் வேற்றுமை -அதை விட / இரண்டாம் வேற்றுமை அங்கேயும் –
டியோ டியோ -சொல்லி -பசு மேய்க்கும் மந்த்ரம் என்பான் -ஹாவு ஹாவு சொல்வது போலே )

பசுக்களை மேய்க்கையை உகந்தான்
அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக
நினைத்து இருந்தான் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்
-திரு நெடும் தாண்டகம் -16-
இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி
அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –

பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
வெண்ணெயைத் தனக்கு தாரகமாகக் கொண்டு –
அது தானும் நேர் கொடு நேர் கிடையாமே- களவு கண்டு புஜிக்க புக்கு-
அதுவும் தலைக் கட்டாமே- ஓர் அபலை கையிலே அகப்பட்டு-
அவள் வர விழுத்து -ஒன்றோடு கட்டக் கண்டு-
(ஏங்கி அழுது -உரால் மூச்சு விட்டாலும் இவன் விடான் -ஏங்குவதே குரலுக்கும் இவனுக்கும் வாசி )
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேதுவான -தான் பிரதிகிரியை பண்ண மாட்டாதே நின்றான் –

சக்கரவர்த்தி திருமகன் காடேறப் போனவிடத்திலே பிதாவாலே உபேஷிக்கப் பட்டான் என்று உகவாதார்க்குச் சொல்லலாய் –
இருப்பதொரு உண்டு உண்டு இறே அதுவும் இல்லையாய்த்து இவனுக்கு

பாவிகாள்
மகா பாவத்தை பண்ணினி கோளே

உங்களுக்கு எச்சுக் கொலோ –
உங்களுக்கு குணமே குற்றமாகைக்கு நீங்கள் சிஸூபாலன் பிறந்த முஹூர்த்தத்திலேயோ பிறந்தது-
எங்கள் வர்க்கத்தில் உள்ளார் –எத்திறம் -திருவாய் -1-3-1–என்னுமது உங்களுக்கு ஏச்சுக்கு உடலாவதே –
(குணங்களுக்கு உன்னால் பெருமை -லோக விபரீதம் —
மாடு மேய்க்க தான் லாயக்கு வசவும் உண்டே -அதே நீ செய்தால் கொண்டாட்டம் தானே -)

கற்றன பேசி வசவு உணாதே –
நீங்கள் உங்களுக்கு பிரதிபந்தங்களைச் சொல்லி என் வாயாலே தக்கன கேளாதே

காலிகளுய்ய மழை தடுத்த கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–
பண்ணின உபகாரம் அறியாத பசுக்களும் தத் ப்ராப்யருமான இடையரும் உஜ்ஜீவிக்கும் படியாக மழையால் வந்த நலிவை
பரிஹரிக்கைகாக மலையை எடுத்து பிடித்துக் கொண்டு நின்றான் ஆய்த்து
தன்னைப் பேணாதே பர ரஷணம் பண்ணும் இதுவே யாத்ரையாய் இருப்பான் ஒருவன் –
தலைக் காவலாக வைத்த இந்த்ரன் தானே பாதகனாக -அவனால் வந்த நலிவை பரிஹரிக்கைக்காக
ரஷணத்துக்கு-பரிகரமாகக் கொண்டு அவன் கோவர்த்தனத்தை தரித்து கொண்டு நின்றான்
அவன் தனியே நில்லாமே நானும் ஒரு தலை தாங்கும் படி
என்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்

————————————————————————————————

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை  இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

பதவுரை

கிளி–(நான் வளர்த்த) கிளியானது
கூட்டில் இருந்து–கூட்டில் இருந்து கொண்டு
எப்போதும்–ஸதா காலமும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்–கோவிந்தா கோவிந்தா வென்று கூவா நின்றது,
ஊட்டு கொடாது–உணவு கெடாமல் (பட்டினி கிடக்கும்படி)
செறுப்பன் ஆகில்–துன்பப் படுத்தினேனாகில்
உலகு அளந்தான் என்று–உலகளந்த பெருமானே! என்று
உயர கூவும்–உரக்கக் கூவா நின்றது!
(இந்தத் திருநாமங்கள் என் காதில் விழும் போதே என் சரீரம் புறப்படக் கிளம்புகின்றது ஆகையால்)
நாட்டில்–இவ் வுலகில்
தலை பழி எய்தி–பெருத்த அபவாதத்தை ஸம்பாதித்து
உங்கள் நன்மை இழந்து–உங்களுடைய நல்ல பேரைக் கெடுத்துக் கொண்டு
தலை இடாதே–(பிறகு ஒருவரையுமு முகம் நோக்க மாட்டாமல்) தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி,
சூடு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும்–தலை யுயர்ந்த மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்-
இவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை
இவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் கொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று
இது தான் ஸ்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-
(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )
அங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –

கோவிந்தா கோவிந்தா –
நாராயணாதி நாமங்களும் உண்டு இறே –
இவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இறே
அது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –
இவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்
தனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –
இப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இறே இப்படிச் சொல்லுகிறது –
அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இறே அவள் நினைவு –

விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில்
அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

நாட்டில் தலைப் பழி எய்தி
நாட்டிலே தலையான பழியை பிராபித்து -நாட்டார்க்கு துக்க நிவர்த்தகமாய் நமக்கு தாரகமான(-திரு நாமம் ) –
இவளுக்கு மோஹ ஹேது வாகா நின்றது
இது என்னாய்த் தலைக் கட்ட கடவதோ -என்று நாட்டிலே தலையாய் இருப்பதொரு பழியை பிராபித்து –

உங்கள் நன்மை  இழந்து தலையிடாதே-
அவன் தானே வரும் அளவும் பார்த்து இருந்து இலள்-
இவள் தானே போவதாக ஒருப்பட்டாள்-என்று உங்கள் நன்மையை இழந்து கவிழ தலை இடாதே
முகம் நோக்க முடியாதபடி லஜ்ஜையால் தலை கவிழ்ந்து கிடப்பதைக் சொல்கிறது –

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–
நெற்றிகள் உயர்ந்து தோன்றா நின்றுள்ள மாடங்களால் சூழ்ந்து தோன்றா நின்றுள்ள
ஸ்ரீ மத் த்வாரகையிலே கொடு போய் பொகடுங்கோள்-

பதினாறாயிரத்து ஒரு மாளிகையாக எடுத்து -என்னை அதிலே வைத்து
அவன் அவர்களோடு ஒக்க அனுபவிக்கலாம் படியாக-

என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள்

———————————————————————————–

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

பதவுரை

தாழ் குழலாள்–தாழ்ந்த கூந்தலை யுடையளாய்
பொன் இயல்மாடம் பொலிந்து தோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை–பொன் மயமான மாடங்களினால்
விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள்.
மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை–ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும்
(சொல்லப்பட்ட சில திவ்ய தேசங்களில்) தன்னை (ஆண்டாளை)
தமர்–தன் உறவினர்
உய்த்து பெய்ய வேண்டி–கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி
துணிந்த துணிவை–கொண்ட அத்யவஸாயம் விஷயமாக,
இன் இசையால் சொன்ன–இனிய இசையுடன் அருளிச் செய்த
செம் சொல் மாலை–அழகிய சொல் மாலை யாகிய இத் திருமொழியை
ஏத்த வல்லார்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடம்–வாழுமிடம்
வைகுந்தம்–பரமபதமேயாம்

மன்னு மதுரை
பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –

வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி —
வாசஸ் ஸ்தவயமான தேசம்
– என்று இருக்கிறாள் போலும்-

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இறே
தன்னை உறவு முறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி

தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத்   த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து-
நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: