ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஆறாம் திருமொழி —

அவதாரிகை –

குயிலைப் பார்த்து நீ அழைத்துத் தர வேணும் என்ற இடத்தில் அது அப்படி செய்யக் கண்டிலள் –
அவனைக் கடுகக் கிட்டிக் கொடு நிற்கக் கண்டிலள் –
கடுக கிட்ட வேண்டும்படி யாய்த்து -இவளுக்கு பிறந்த தசை —
அப்போதே கிட்டப் பெறாமையாலே மிகவும் அவசன்னையானாள் –

அவன் தான் இவள் தசைக்கு ஈடாக வந்து முகம் காட்டிற்று இலன் –
இத்தலையில் அவஸ்தை அறியாத ஒருவன் அல்லன் இறே-
இன்னமும் ஓர் அளவைப் பிறப்பித்து -பரம பக்தி பர்யந்தமாக ஆக்கி -முகம் காட்டுகிறோம் என்று இருந்தான் –

மயர்வற மதி நலம் அருளின போதே -முனியே நான்முகனாய் இராதே
மயர்வற்ற போதே பெற வேண்டும்படியான ஆற்றாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் –
பரம பக்தி பர்யந்தமாக

நடுவு உண்டான அவஸ்தைகளைப் பிறப்பித்து இறே கொடுத்தது ஆழ்வாருக்கு –

வெளுத்த புடவைக்கு வாசம் கொளுத்துவாரோபாதியாக இவ்வருகே
பரமபக்தி பர்யந்தமாக பிறந்தால் இறே
அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் சாத்மிப்பது –
முதல் அடியிலே இது உண்டானாலும் காலம் சென்றவாறே பிறப்பிப்பதும் ஒரு பாகம் உண்டு இறே –

பிராட்டிக்கு பெருமாளைப் பிரிந்த போதே கூட வேணும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தே இறே
ஊர்த்வம் மாசன்ன ஜீவிஷ்யே -என்பது –
அவர் தாம் ந ஜீவேயம் ஷணம் அபி -என்பது யாய்த்து –

ஸ்வப்னே அபி யத்யஹம் வீரம் –ஸ்வப்னத்தில் கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லராய்த்து –
ராகவம் சஹ லஷ்மணம் -சுந்தர -34-21-
பிரிகிற போது இருவரும் கூடப் பிரிகையாலே
காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே -தங்களில் கூடினார்களோ இல்லையோ -என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம் யதி ஜீவேயம் ச்வப்னோ அபி மம மத்சரீ –என் அவஸ்தை அறிந்து
முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இறே –

தான் காணப் பெறாத போதும் பிறர் கண்டு சொல்லக் கேட்டு தரித்து இருந்தாள் இறே அவள் –
த்ரிஜடாதிகள் சொல்லக் கேட்டு தரித்து இருந்தால் போலே இருக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள்
இவள் தன்னை உண்டாக்கி அனுபவிக்க வேணும் என்று இருக்குமே
ஸ்வப்னத்திலே யாகிலும் அனுபவிப்பித்து தரிப்போம் என்று பார்த்தான்
இஜ் ஜந்துக்கள் கிடந்தது உறங்கா நிற்கச் செய்தே
சர்வேஸ்வரன் தான் உணர்ந்து இருந்து கர்ம அனுகுணமாக சில பதார்த்தங்களை சிருஷ்டித்து
ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்கும் என்று சொல்லா நின்றது இறே

ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் -காமம் புருஷோ நிர்மிமாண -கடக -2-5-8-
அப் பொதுவான நிலை அன்றிக்கே -தன்னை அனுபவிக்க வேணும் என்று இருக்கிறாள் ஆகையாலே
இவள் அனுபவிக்க வேணும் என்று பாரித்து இருந்த படிகளிலே ஒன்றும் குறையாதபடி
பாணிக்ரஹண பர்யந்தமாக ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்க அனுபவித்து
தான் அனுபவித்த படியைத் தோழிக்கு சொல்லி தரிக்கிறாளாய் இருக்கிறது –

ஸ்வப்னே அபி கேசவத அநயம் ந பஸ்யதி மஹாமதி –
ஸ்வப்னே அபி தஸ்ய நாயாதி புருஷார்த்த விரோதி நீ
-இதிஹாச சமுச்சயம் -32-128-
சாமான்யர் விஷயத்தில் கர்ம அனுகுணமாகவும்
ஆஸ்ரிதர் விஷயத்தில் ருசி அனுகுணமாகவும் ஸ்வப்ன அனுபவம் பலிக்கிறது என்று அருளிச் செய்வர்

———————————————————————-

வந்து புகுந்தால் அனுபவிக்கை அன்றிக்கே –
வாரா நின்றான் -என்று ஊரிலே வார்த்தை யானவாறே தொடங்கி
அனுபவிக்க வேணும் என்றால் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –
அவனுடைய கதி சிந்தனை பண்ணுகிறாள் யாய்த்து –

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

பதவுரை

தோழீ–என் உயிர்த் தோழியே!
நம்பி–ஸகல குண பரிபூர்ணனான
நாரணன்–ஸ்ரீமந் நாராயணன்
ஆயிரம் வாரணம் சூழ–ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர
வலம் செய்து நடக்கின்றான் என்று–பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிற னென்று (வாத்ய கோஷதிகளால் நிச்சயித்து)
பொன் பூரண குடம் வைத்து–பொன் மயமான பூர்ண கும்பங்களை வைத்து
புரம் எங்கும்–பட்டணம் முழுதும்
தோரணம் நாட்ட–தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை)
நான் கனாக் கண்டேன்–நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்.

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
உந்து மத களிற்றன் பிள்ளை இறே
ஸ்ரீ நந்தகோபரும் ஆனை ஏறி இறே திரிவது
ஸ்ரீ வஸூ தேவரும் ஸ்ரீ நந்தகோபரும் தங்களில் மித்ரராய் –
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா
-5-18-என்று இருக்கிறபடியால்-
இங்குத்தை கோ சம்ருத்தி அவரதாய்-
அங்குத்தை  யானை குதிரை இவரதாய் –
ஒன்றாய் பரிமாறி இறே போருவது-
இனி தத்த புத்ரர்களுக்கு இரண்டிடத்திலும் அம்சம் உண்டாய் இறே இருப்பது
ஆகையால் யானைக்கு குறை இல்லை இறே

ஆயிரம் –என்ற நிர்பந்தத்துக்கு கருத்து என் என்னில்
தன்னேராயிரம் பிள்ளைகளும் –தளர் நடை இட்டு வருவான் –பெரியாழ்வார் திருமொழி -3-1-1-
தானுமாக வரும் போது அவர்களைத் தன்னில் தாழ்வாக ஒட்டானே –ஆகையாலே ஆயிரம் -என்கிறது
தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்கு தம்மையே ஒக்க அருள் செய்து இறே வைப்பது –

நாரண நம்பி –
நாரண –
உபய விபூதி யுக்தன் வருமா போலே இருக்கும் போலே காணும்
ஸ்ரீ மதுரைக்கும் திருவாய்ப்பாடிக்கும் கடவராய் வரும் போது –

நம்பி –
உபய விபூதி யோகத்தால் வந்த குணங்கள் சொல்லக் கேட்டு போம் அத்தனை இறே
அக் குணங்கள் பூரணமாக அனுபவிக்கலாவது அவதாரங்களிலே இறே
குறைவாளருக்கு முகம் கொடுத்த இடத்தில் இறே சௌலப்யம் அனுபவிக்கலாவது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த இடத்திலே இறே இக்குணங்கள் ஸ்புடமாவது
செவ்வைக் கேடர் பக்கலிலே இறே அவனுடைய ஆர்ஜ்வாதி குணங்கள் காணலாம்

நடக்கின்றான் என்று –
குசஸ்தலே நிவசதி ச ச ப்ராதரி ஹேஷ்யதி
இன்ன இடத்திலே வந்து விட்டான் -அணித்தாக வந்துவிட்டான் என்னும்
அது தானும் தரிப்புக்கு உடலாக இருக்கும் இறே –
சாபாத் அபி சராத் அபி -என்னும் விச்வாமித்ராதிகளை கொடு வரவும் வேண்டா விறே இங்கு –
இரண்டாலும் சம்ஹரிக்கிறேன் என்று ஸ்ரீ பரசுராம ஆழ்வான் வார்த்தை
கடகரும் வேண்டாவோ என்ன -சாபம் -விஸ்வாமித்ரர் -சரம் –பெருமாள்
அஸ்த்ர சிஷை பண்ணுவிப்பவர் என்பதால் இரண்டும் விச்வாமித்ரருக்கு என்னவுமாம் –

எதிர் பூரண பொற் குடம் வைத்து
எதிரே பூர்ண கும்பங்களை வைத்து

புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் –திருவாய்மொழி -10-9-2-என்னக் கடவது இறே-
இங்குள்ளார் அங்குப் போம் போது-
அதுக்கும் அடியானவர்கள் வரவுக்கு உடலாக அலங்கரிக்கும் படி சொல்லுகிறது இங்கு –

புரம் -பட்டணம் –புறம்
ஊர்ப் புறம் -புறச் சோலைகள் என்றுமாம் –

கனாக் கண்டேன் தோழீ நான்–
கதிரில்லி போலே (-ஜன்னல்கள் போலே –இல்லியில் கதிர் -ஜால கரந்தரத்தில் கதிர் -ஸூஷ்ம த்வாரம் -) இருக்கிற
பாஹ்ய இந்த்ரியங்களாலே அனுபவிக்கிற ஜ்ஞானம் கொண்டு அனுபவிக்கை அன்றிக்கே
நேரே ஹிருதயத்தாலே ஒரு முகம் செய்து அனுபவிக்கப் பெற்றேன் காண்-

ஆனுகூல்யம் உடையார் சொல்லுதல் –
தாய்மார் போல்வார் -சொல்லுதல் –
நீ சொல்லுதல் செய்யக் கேட்கை –
அன்றிக்கே
-நான் உனக்குச் சொல்லலாம்படி அனுபவித்தேன் காண் –

——————————————————————————————-

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2-

பதவுரை

நாளை–நாளைக்கு
வதுவை மணம் என்று நாள் இட்டு–விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ்–பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை–நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன்
புகுத–பிரவேசிக்க

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு-
நாள் நெடுக விட்டால் ஆற்ற மாட்டாள்
இன்று என்னில் வாய் புகு நீராய்த் தரிக்க மாட்டாள் –

பிரகர்ஷேணா வருத்தா சா வ்யாஜஹார நகிஞ்சன-யுத்த -116-15/16-என்று
திருவடி ராம விஜயத்தை விண்ணப்பம் செய்யக் கேட்ட போது
பிராட்டி ஹர்ஷத்தாலே விக்கி வார்த்தை சொல்ல மாட்டாதே இருந்தாள்-
அவளுக்கு ஓடுகிற பிரிதியிலே சிறிது அகஞ்சுரிப் படுத்த வேணும் என்று
கிம் த்வம் சிந்தயசே தேவி -கிந்நு மாம் நபி பாஷசே -என்றான்
நான் விண்ணப்பம் செய்த ராம விஷயம் இங்குத்தைக்கு அநபிமதமோ –
ஒரு மறு மாற்றம் அருளிச் செய்யாது இருந்ததீ-என்ன
ஓடின ப்ரீதி அரையாறு பட்டு -ஹர்ஷம் மிடறு அடைக்க வார்த்தை சொல்லாது இருந்தேன் அத்தனை காண் -என்றாள் இறே –

நாளை விவாஹ மங்களம் என்று நாளிட்டு –
நாள் பொருந்தினால் இறே அல்லாதவை கொண்டு கார்யம் உள்ளது
இருவர் நாளும் கேட்டு -இரண்டு தலைக்கும் பொருந்தும்படி நாளிட்டு

பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்-
பாளையுடனே கொடு வந்து நட்ட கமுகை உடைத்தான பந்தலின் கீழே

பரிசு
பெருமைக்கும் அழகுக்கும் பெயர்

வேறு ஓர் இடத்தின் நின்றும் கொடு வந்து நட்டால் போலே இராதே –
அவ்விடத்தே முளைத்து எழுந்த சோலை போலே அழகியதாய் இருக்கை-

கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
கோளரி
யஸ்ய சா ஜனகாத்மஜா -அப்ரமேயம் ஹி தத் தேஜ-
-என்கிற பெருமை
எல்லாம் தோற்ற மேணானிப்போடே வந்தபடி

மாதவன்
பரம ரசிகன் என்று தோற்ற நடந்து வந்த படி –

கோவிந்தன்
விவாஹமாய் இரா நின்றது -ஆராலே என்ன விக்நம் வரும் -என்று அறியாமையாலே
எல்லாருக்கும் கையாளாய் முகம் கொடுத்துக் கொடு வந்தபடி

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—
காளை -இவை ஒன்றும் இல்லையானாலும் மேலே விழ வேண்டும்படி பருவம் இருந்த படி
தோழிமார் பந்துக்கள் மற்றும் உள்ளார் பருவம் இல்லை என்ன ஒண்ணாதே –

கனாக் கண்டேன் தோழீ நான்—-
அவன் பருவம் என் நெஞ்சில் படுத்த நீ படும் பாடு அறிதியே –
அத் தலை இத் தலையாய் நான் உனக்குச் சொல்ல வேண்டும்படி யாய்த்து காண் –

————————————————————————

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-3-

பதவுரை

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்–இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம்
வந்து இருந்து–(இந்திலத்திலே) வந்திருந்து
என்னை மகள் பேசி–என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி
மந்திரித்து–அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள்
விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு, (பிறகு)
அந்தரி–‘துர்க்கை‘ என்கிற நாத்தனார்
மந்திரம் கோடி உடுத்தி–கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி
மணம் மாலை சூட்ட–பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
ஆத்மானம் மானுஷம் மன்யே -யுத்த -120-11-என்று சூழ்த்துக் கொடுக்கும்
அவதாரம் அல்லாமையாலே இந்திராதிகளும் வருவர்கள் இறே –
சரபங்க பகவான் ஆஸ்ரமத்திலே பெருமாளைக் கண்டவன் –
இவர் மனிச்சை ஏறிட்டுக் கொண்டு இருக்கச் செய்தே -நான்- முகம் காட்டுகிறது என் -என்று
தறை கால் பாவாதே போனான் இறே -ராவண வத அந்தரத்திலே முகம் காட்டுகிறோம் -என்று

அஹம் வோ பாந்தவ -என்றது உண்டானாலும் ஈஸ்வரத்வம் கலந்து பரிமாறும் அவதாரம் இறே
இந்த்ராதிகள் வந்து அங்கோடு இங்கோடாய் பிரஜாபத்தியம் பண்ணித் திரியா நின்றார்கள் யாய்த்து –

வந்து இருந்து
இந்த்ராதி தேவர்கள் திரள் திரளாக வந்து தறையிலே கால் பாவி நல் தரிக்க இருந்து
இக் கார்யம் தலைக் கட்டினால் அல்லது எழுந்து இருப்பது இல்லை என்று இருந்து

என்னை மகள் பேசி மந்திரத்து
ப்ரஹ்மா தொடங்கி பெரியாழ்வார் வரையில் –
இக் குலத்தில் உண்டான நன்மைகள் எல்லாம் பேசி –

மந்திரித்து
திரளில் நின்றும் எழுந்து இருந்து போய் ரஹஸ்யமாக இருந்து –
இத் தலைக்கும் அத் தலைக்கும் வேண்டுவன ஆராய்ந்து –
தங்களிலே அறுதியிட்டு –

மந்திரக் கோடி யுடுத்தி –
அறுதியிட்ட போதே ஒரு விக்நம் பிறப்பதற்கு முன்னே தலைக் கட்ட வேணும் என்று
எல்லாரும் குறை வறுத்துக் கொண்டு போலே காணும் வந்தது
மந்திர வாஸசை உடுத்தி –

மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
நாத்தனராய் -இதுக்கு எல்லாம் கடவாளாய் அபிமானித்த துர்க்கை யாய்த்து
மாலைகளும் மடியும் (கூறைப் புடைவையையும் ) சூட்டி ஒப்பித்தாள்-
இவளுடைய ஸ்பர்சம் தானே ஓன்று தங்கி
அவனோடு அணைந்தால்
போலே இருக்கிறது காணும் இவளுக்கு –

வேத மந்த்ரங்களால் பரிசுத்திக்கப் பட்ட கூறைப் புடைவையையும்
தேன் ஒழுகும் மண மாலையையும் சித்தப் படுத்திக் கொண்டு –
அவனோடு கூடப் பிறந்தவள் என்னைத் தொட்டு மண மாலை சூட்டப் பெற்றேன் காண் தோழி –

அந்தரி -ஆகாசத்தில் சஞ்சரிக்கும் துர்க்கை
அவனுடன் பிறந்தவள்  என்னை ஸ்பரசிக்கப் பெற்றேன் காண்
சதம் பண ஹச்தாஸ் தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -கௌஷீதகீ -1-34–இருக்கிறபடி –
மதிமுக மடந்தையர் -மாலை- மை -வாசனைப் பொடி- ஆடைகள்- ஆபரணங்கள்-
கொண்டு அலங்கரிப்பது போலே –

——————————————————————————————————

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-4-

பதவுரை

பாப்பனர் சிட்டாகள் பல்லார்–சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை–நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம்–தீர்த்தங்களை
கொணர்ந்து–கொண்டு வந்து
நனி நல்கி–நன்றாகத் தெளிந்து
எடுத்து ஏத்தி–உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு–(பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை
யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு
என்றன்னை–என்னை (இணைத்து)
காப்பு நாண் கட்ட–கங்கணங்கட்ட

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு ஸ்ரீ வானர வீரர்கள் நாலு சமுத்ரத்தில் உள்ள ஜலங்களையும்
கொண்டு வந்தால் போலே
நாலு திக்கிலும் உள்ள தீர்த்தங்களை கொடு வந்து –

நனி நல்கி –
மிகவும் நல்கி –
நனி
-மிகுதி
போர நீரைத் தெளிக்கவே ஆயுஸ்ஸூ தொடக்கமான நன்மைகள் எல்லாம் உண்டாம் என்று இருப்பார்களே இறே

பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
ஜாதி மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே
ஒத்து அழகியதாய் போய் சிஷ்டர்கள் என்று வ்யாபதேசராய்
சடங்குகள் அழகிதாக கை வந்து இருக்கும் ப்ராஹ்மண அக்ரேசர் எல்லாரும் திரண்டு
உதாத்தமாக –எடுத்தேத்தி -இரண்டு தலைக்கும் மங்களா சாசனம் பண்ணி –

பூப்புனை கண்ணிப் புனிதனோடு-
விவாஹ சமயத்தில் அவள் பேர் ஒப்பனை போல் அன்றிக்கே ஒரு தனி மாலையை யிட்டு ஸ்நானம் பண்ணி
கையும் பவித்ரமுமாய் -தீண்டினார் உண்டாகில் முகத்தை பொல்லாதாகப் பண்ணி
குந்தி நடந்து -புடவை ஒதுக்கி -வினீத வேஷத்தோடு வந்தபடி
பெரியாழ்வார் பெண் பிள்ளையை ஆசார வைகல்யம் உண்டானால் கொடார்கள் இறே –

என் தன்னை காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–
நான் தொடுமது ஒழிய -தொட்டாரை தொடும் அளவும் வாய்த்துக் காண் –
உபாத்யாயர் கட்டுகையாலே தொட்டாரை தொடும் அளவு என்றது –
பர புத்தியாலே கிட்டப் பெற்றேன் காண்
பேற்றில் இனி இதுக்கு அவ்வருகு இல்லை

இது பற்றாசாக தோழி பெறுவது காண் –காப்பு நூல் அடியாக -என்றபடி
அவன் நினைவைக் காட்டிலும் மேலான பேறு ஒன்றும் இல்லை –
அவன் நினைவு ஏற்பட்ட பின்பு பேறு சித்தம் அன்றோ –
பிராப்ய பிராபகங்கள் அவன் நினைவே என்றபடி –

———————————————————————-

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5-

பதவுரை

சதிர் இள மங்கையர் தாம்–அழகிய இளம் பெண்கள்
கதிர் ஒளி தீபம்–ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும்
கலசம்–பொற் கலசங்களையும்
உடன் ஏந்தி–கையில் ஏந்திக் கொண்டு
வந்து எதிர் கொள்ள–எதிர் கொண்டு வர,
மதுரையார் மன்னன்–மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான்
அடி நிலை தொட்டு,–பாதுகைகளைச் சாத்திக் கொண்டு
எங்கும் அதிர–பூமி யெங்கும் அதிரும் படியாக.
புகுத–எழுந்தருள்

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
இதுக்கு ஒரு விச்சேதம் வரில் மங்களத்துக்கு குறையாம் என்று ஆதித்ய பிரபை போலே இருக்கிற தீபம்
அப்படியே இருக்கிற பொற் கலசங்கள் இவற்றைத் தரித்து –

சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –திருவாய் மொழி -10-9-10-என்னக் கடவது இறே

தங்கள் பருவத்தாலும்
வடிவு அழகாலும்
தங்களையே எல்லாரும் கடாஷிக்கும் படி இருக்கிறவர்கள்
தாங்கள் கவிழ்ந்து முன்னடியைப் பார்த்து கொடு வந்து எதிர் கொள்ள –

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
பரம பதத்தை விட்டுப் போந்து விரும்பின ஊருக்கு நிர்வாஹகன் இறே –

பரம பதத்தில் இருப்புக்கு மேலே ஓர் ஏற்றம் போலே காணும்
அவ் ஊருக்கு கடவன் -என்னுமது

மன்னு வடமதுரை மைந்தனை -என்று இவள் தான் ஆதரிப்பதும் அங்கே இறே –
ஒருவன் ஒரு பிள்ளையை உகந்து அருளப் பண்ணி –
இவனுக்கு என்ன திரு நாமம் சாற்றுவோம் என்று இருக்கச் செய்தே-
அதுவே இதுவே என்று அழையாதே-என்னை மதுரை மன்னன் -என்று அழை-என்று
ஸ்வப்னத்திலே அருளிச் செய்தாராம் –

அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக்
திருவடி நிலைகளைக் கோத்து
மஹா பலி யஜ்ஞ வாடத்திலே நடந்த போது பூமி நெளிந்தது என்று ஒரு கிரந்தத்திலே -கிடந்ததாய்-
இதுக்குப் பொருள் என் என்று கேட்டவாறே
யஸ்மின் பிரயாதே அஸூரப் பூப்ருதோஸ் த்வரம்-நநாம கேதா தவ நிஸ் ச சாகரா ச வாமனஸ்
சர்வ ஜகன் மயஸ் சதா
மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தையே ஹரி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-31-
வருத்தத்தால் பூமி வளைந்ததே –
சர்வேஸ்வரன் அன்றோ சொல்ல வேணுமோ என்றார்களாய்

இத்தை ஜீயர் கேட்டருளி பட்டரைக் கேட்க
இரப்பில் பதற்றத்தாலே அடியிட்ட படி காணும் -என்று அருளிச் செய்தாராம்

ஒரு பூமிக்காக இப்படி பதறி வருமவன்
இவளைப் பெற்று விடுகிறானோ

கனாக் கண்டேன் தோழீ நான்–
தோழி -உகப்பாய் நீ இறே –

—————————————————————————————————-

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

பதவுரை

மத்தளம் கொட்ட–மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கம் நின்று ஊத–ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூதனன்–மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான்
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து–முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள்
தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து
என்னை கைத் தலம் பற்ற–என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
ராஜ குலம் உடையராய் இருக்குமவர்கள் விவாஹம் பண்ணப் புக்கால் செய்யுமா போலே
மங்கள வாத்யங்கள் மாறாதே நின்று முழங்க
சாந்திபிநீ யோடே ஓதுவதற்கு முன்னே போலே காணும் இவளை விவாஹம் பண்ணிற்று-

வேத மந்த்ரங்கள் சொல்லி கை பிடிக்காமல் மங்கள வாத்தியங்கள் முழங்க என்பதற்கு
வ்யாக்யாதாவின் சமாதான ஸ்ரீ ஸூக்திகள்
திருவாய்ப்பாடியிலே நெடும் காலம் வளர்ந்து பின்பு இறே அங்குப் போய்த்தது

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
முத்து மாலை நிரைகளானவை தலையிலே வந்து தாழ்ந்த பந்தலின் கீழே
(இன்றும் யானை வாஹனம் பொழுது முத்துக் கொடை கொண்டே புறப்பாடு –
மற்ற நாள்களில் ஸ்வர்ணம் கொடை -யானை வாகனமும் ஆறாம் நாள் நடக்கும் )

மைத்துனன் நம்பி-
நப்பின்னை பிராட்டியோடு உண்டான சம்பந்தம் தன்னோடும் உண்டு என்று இருக்கிறாள் காணும் –

மது சூதனன் –
மற்றும் மைத்துனமை முறை உண்டு என்று ஆரேனும் வந்து கைப் பிடிக்கப் பார்க்கில்
அவர்களையும் அழியச் செய்து தானே ஸ்வீகரிக்க வல்லவனாய்த்து –
தனது உடமையை பிறர் -என்னது -என்னும் போது
அவர்களை அழியச் செய்து கைக் கொள்ள வல்லவனாய்த்து –

வந்து என்னை கைத்தலம் பற்றக் -கனாக் கண்டேன் தோழீ நான்–
அவன் தானே வந்து கைப்பிடிக்கை முறை -என்று இருப்பாள் ஒருத்தி இறே இவர்கள் தான்

கைத்தலம் பற்ற –
ந பிரமாணீ க்ருத பாணி பால்யே பாலேன பீடித
என்னை அறியா விட்டால் தம்மை அறியாது ஒழிய வேணுமோ
தாம் பருவம் நிரம்பாது இருக்க தாம் என்னைக் கையைப் பிடித்தது மறந்தாரோ

பாணி க்ரஹணம் -என்ற ஒரு பதத்தால் சொல்லாதே –
பீடித -என்பான் என் என்னில் என்று எம்பாரை சிலர் கேட்டார்கள் –
அங்கண்ணன் உண்ட என்னாருயிர்க் கோது இது -என்கிறபடியே
பிடித்த பிடியில் அனந்யார்ஹை யாம்படி பிடித்தது -என்றாராம்
கை அழுந்தப் பிடிக்கப் பட்டதே –வலியப் பிடிக்கை

இயம் சீதா மம ஸூ தா சஹ தர்ம சரீ தவ -ப்ரதீச்ச சை நாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்ணீஷ்வ பாணிநா
-பால -73-26-
இயம் சீதா -பிறந்த உமக்கு பிறவாமையால் வந்த ஏற்றம் உடையார் தேட்டமே –
மம ஸூதா -சஹ தர்ம சரீ தவ
நீர் ஆர்த்த ரஷணத்திலே தீஷித்தால் உமக்கு முன்னே போய்க் கைச் சிறையாய் இருக்க வல்லவள்
ப்ரதீச்ச சை நாம் —-கரும்பு தின்ன கூலி அன்றோ
இவளைக் கைக் கொள்ளும் என்று அன்றோ உம்மை நான் கால் பிடிக்கிறது
பத்ரம் தே —-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –என்கிறபடியே
ஐயரும் ஊரில் உள்ளாரும் வாராது இருக்க நான் கைக் கொள்ளுகை யாவது என் என்று
தன் வைதக்த்யம் தோற்ற இறாய்த்து நின்றார் -அது வேண்டா காணும்
உம்முடைய கையாலே இவள் கையைப் பிடியீர்
ப்ரதீச்ச -என்னச் செய்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ -என்றான் இறே
இவளை அங்கீ கரிப்பீராக – என்ற பின்பும் கையைப் பிடியும் –
தந்தையார் அனைவரும் வந்து இருக்கும் இப்போது -முன்பு போலே மறுக்காமல் என்றான் இறே

—————————————————————————————————-

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து
காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-7-

பதவுரை

வாய் நல்லார்–நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி–சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க,
மந்திரத்தால்–(அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு
பாசு இலை நாணல் படுத்து–பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து–ஸமித்துக்களை இட்டு,
காய்சின வாய் களிறு அன்னன்–மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான்
என் கை பற்றி–என் கையைப் பிடித்துக் கொண்டு
தீ வலம் செய்ய–அக்நியைச் சுற்றி வர

வாய் நல்லார்-
அழகியதாக ஸ்வரத்திலே உச்சரிக்க வல்லவர்கள்

நல்ல மறை ஓதி மந்திரத்தால்-
ஆராதன விஷயமாக பரந்தவை அன்றிக்கே
ஆராத்யனுடைய ஸ்வரூபத்திலே பரந்தவற்றைச் சொல்லி —
ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைச் சொல்லி

மந்திரத்தால்-
அதுக்குள்ளே எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தே
அவ்வோ கிரியைக்கு அநு ரூபமான மந்த்ரத்தாலே

பாசிலை நாணல் படுத்துப் –
பசுத்த இலையை உடைத்தானை நாணலை –
அக்னியை சூழப் படுத்து -பரிஸ்தரித்து

பரிது வைத்து
பரிதிகளையிட்டு -சமித்துக்களை இட்டு

காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
ஒரு மத்த கஜம் போலே மேன்மையோடு வந்து

தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் —
அக்னியைச் சூழ வருகிற போது பிசுகி நடந்த படி

ஏகமிஷே விஷ்ணுஸ் த்வா அந்வேது த்வே ஊர்ஜே விஷ்ணுஸ் த்வா அந்வேது
சகா சப்தபதா அபூம
-யஜூர் அஷ்டகம்-3 பிரச்னம் -7-பஞ்ச -89-என்று
ஏகமிஷே -தொடங்கி-சகா
சப்தபதா பவ
-அளவும் நடந்தபடி –சப்தபதீ மந்த்ரம் –
வந்து கைப் பிடித்த போது ஒரு மத்த கஜம் சிறைப் பட்டால் போலே யாய்த்து

தீ வலம் செய்ய –
தான் நெகிழும் அன்றும் நெகிழ ஒண்ணாத படியாகவும்
நானும் நெகிழ ஒண்ணாத படியாகவும் பெற்றது காண்
அக்னி சாஷியாக கைப்பிடித்ததால்
இருவராலும் இருவர் கையையும் விட முடியாதே –

—————————————————————————————————-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

பதவுரை

இம்மைக்கு–இப் பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான்–சரண்யனா யிருப்பவனாய்
நம்மை உடையவன்–நமக்கு சேஷியாய்
நம்பி–ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய்
நாராயணன்–நாராயணனான கண்ண பிரான்
செம்மை உடைய திரு கையால்–செவ்விய (தனது) திருக் கையினால்
தாள் பற்றி–(எனது) காலைப் பிடித்து
அம்மி மிதிக்க–அம்மியின் மேல் எடுத்து வைக்க

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
அக்னி தானே நெகிழப் பார்க்கும் அன்றும் நெகிழ விடானாய்த்து –
இவனுடைய அனுபவம் மாறாதே செல்லுமாகில்
என்றும் பிறந்தால் ஆகாதோ என்று இருக்கிறாள் –

ஏழ் ஏ ழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் –என்று பிரார்த்திக்குமவள் இறே
வ்ருஷ்ட்யாதிகளுக்கு ஈடாக யத்தனித்தால் வர்ஷித்த அநந்தரம் மறுத்துப் போகா நிற்கும்
பகவத் விஷயத்தைப் பற்றினால் –
சக்ருதேவ பிரபன்னாய
-என்று ஒரே தடவை பற்றினாலும் –
கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தே நிற்கும் இத்தனை யாய்த்து –
அத்தையே ஏழ் ஏழ் பிறவிக்கும் என்று காட்டி அருளுகிறாள்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணம் -திருவாய்மொழி -9-1-7-என்கிறபடியே –

நம்மை யுடையவன் –
பலம் இன்றிக்கே ஒழிந்தால் தான் புறம்பு எங்கே போவது —சர்வ ஸ்வாமி-
அவன் உடைமையை என்னது என்று இருக்குமதே இறே களவாவது –
சோரேண ஆத்ம அபஹாரிணா
–என்கிறபடியே

நாராயணன் நம்பி-
ஸ்வாமித்வத்துக்கும் குணங்களுக்கும் வாசகமான திரு நாமம் இறே

நம்பி
கல்யாண குணங்களால் பூரணன்

செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி-
பிள்ளை உறவு முறையார் வேண்டா என்பர்கள்-
பெண் பிள்ளை உறவு முறையார் வேணும் என்னா நிற்பர்கள் —
இப்படி இரண்டு தலையில் உள்ளாறும் வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
தானே வந்து காலைப் பிடிக்க கணிசியா நிற்கும் யாய்த்து

அதாவது
ஆஸ்ரிதர் கால் பிடிக்க என்றால் இறாயாத கை யாய்த்து

உபதேச காலத்தில் போல் அன்று இறே பரிமாற்றத்தில் இருப்பது –
உபதேசிப்பது -அவன் கால் பிடிக்கக் கடவதாக
பரிமாற்றத்தால் வந்தால் அவன் தான் பிடிக்கும் படியாக வாய்த்து இருப்பது –

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் –
அசமாரோஹணம் பண்ணக் கனாக் கண்டேன்
அவ் வம்மியில் ஓரடியிடில் செய்வது என் -என்று துணுக்  துணுக்  என்று இருந்தாள் காணும் –
அடியிட்டானாகில் அதுவும் ஒரு பெண்ணாகுமே-

அஸ்மேவ ஸ்வம் ஸ்திரா பவ –
அசித் வத் பாரதந்தர்யம் காட்டவே -வேத மந்த்ரம் சொல்லும் –
கல்லைப் போலவே இருப்பதைக் காட்டும்

தோழீ நான் —
நீ என் கால் பற்றி போரும்படி எல்லாம் அறிதியே
அவன் என் கால் பற்றும்படி யாய்த்துக் காண்
அவன் ஸ்வபாவம் நீ சொல்லக் கேட்ட படியே அனுபவிக்கப் பெற்றேன்
அச்மேவ த்வம் ஸ்திரா பவ – –
இந்த கல்லைப் போலே எனக்கு ஆட்பட்டு இருப்பதில் நிலையாய் இருப்பாய் –
அசித்வத் பாரதந்த்ர்யம் உபதேசிக்கும் வேத மந்த்ரம் –

—————————————————————————

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-9-

பதவுரை

வரி சிலை வான் முகம்–அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான
என் ஐமார் தாம்–எனது தமையன்மார்கள்
வந்திட்டு–வந்து
எரிமுகம் பாரித்து–அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து
முன்னே என்னை நிறுத்தி–அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன்–(ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
கை மேல்–திருக் கையின் மேல்
என் கை வைத்து–என்னுடைய கையை வைத்து
பொரி–பொரிகளை
முகந்து அட்ட–அள்ளிப் பரிமாற

என் ஐமார் தாம்-என் தமையன்மார்கள்-

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
வரி –அழகு -அழகிய வில்லு போன்ற இருக்கிற புருவத்தையும்
ஒளியை யுடைய முகத்தையும் உடையவர்கள் –

என்னுடைய ப்ராதாக்கள் ஆனவர்களே –
இதுக்கு எல்லாம் –லாஜ ஹோமம் –அபிமானிகள் -என்னும் இடம்
தங்கள் முகத்தில் ஒளியிலே காணும் படியாக வந்து
அக்னி முகத்தை பாரித்து -ஜ்வலிகச் செய்து —
நான் வ்ரீளையால் இறாய்க்க-என்னை எடுத்து முன்னே நிறுத்தி-

அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–
பொரி முகந்து -அட்ட
பொரியை அள்ளி அக்னியிலே பரிமாற-

மைத்துனமை முறையுடையார் இவனை இளிம்பு படுத்திச் சிரிக்க வேணும் என்று
சில விலாச சேஷ்டிதங்களை பண்ணக் கோலினால்
அவர்களுக்கு கணிசிக்க ஒண்ணாத படி அநபிபவனாய் இருந்த இருப்பு –

அச்சுதன்
அவர்கள் பொரியட்டி விட்டாலும் தான் கை விடாதவன் –

கைம்மேல் என் கை வைத்து
அடியார் ரஷணத்தில் பிராட்டி புருஷகாரம் அடியாக என்பதால்
இவள் கையே மேலே இருக்கும்

என் கை மென்மையை தோழி நீ அறிவாயே-
அவனும் அறியும் படி அவன் கை மேல் என் கை வைக்கப் பெற்றேன்

————————————————————————————————-

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-10-

பதவுரை

குங்குமம்–குங்குமக் குழம்பை
அப்பி–உடம்பெல்லாம் பூசி
குளிர் சாந்தம்–குளிர்ந்த சந்தனத்தை
மட்டித்து–கனக்கத் தடவி
ஆனை மேல்–மத்த கஜத்தின் மேலே
அவனோடும் உடன் சென்று–அக் கண்ண பிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி–(விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே
வலம் செய்து–ஊர்வலம் வந்து
மணம் நீர்–வஸந்த ஜலத்தினால்
மஞ்சனம் ஆட்ட–(எங்க ளிருவரையும்) திருமஞசனம் பண்ணுவதாக

அங்கு
தோழீ
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
அங்கு ஆனைமேல்
அவனோடும் உடன் சென்று
மங்கல வீதி வலம் செய்து
மண நீர் மஞ்சனமாட்டக்
கனாக் கண்டேன் தோழீ நான்–என்று அந்வயம் –

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து
மண நீர் காப்புக் கட்டுகைக்கு
தனிமாலையும் சாந்துமாக மட்டாக ஒப்பித்தான் -என்றது

அவ்வளவு அன்றிக்கே
விவாஹ சமயத்தில் மாலைகளும் அங்க ராகங்கங்களும் போரக் கொண்டு
பேர் ஒப்பனையாக விறே ஒப்பிப்பது
அவற்றை எல்லாம் கழித்து

மட்டித்து
பூப்புனை கண்ணி புனிதனோடு
-பேர் அலங்காரங்களை மட்டித்து என்றபடி –
அக்னி முகத்திலே இருந்தது பொறாது இறே சௌகுமார்யத்தாலே —
அதற்குப் பரிஹாரமாக குளிர்ந்த கும்குமத்தை திருமேனி எங்கும் அப்பி
பழகப் புதைத்து ஆறின சாந்தை மட்டித்து –
திருமஞ்சனத்துக்கு ஈடாக சமைந்தவற்றை கொண்டு ஊரை வலமாக வந்து

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–
அவற்றை வீதியிலே
தானும் தோழன்மாருமாக ஆனை ஏறி வந்தான் என்றது இறே
இப்போது
தானும் அவனுமாக அங்கே ஆனைக் கழுத்திலே புக்கு வலமாக வந்து

மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
இருவரையும் கூட வைத்து –
உடன் மண நீராட்டினார்கள் யாய்த்து

விவாஹத்தில் ஏற்பட்ட களைப்பு எல்லாம் தீரும்படி –
புடவையையும் வஸ்த்ரத்தையும் முடிந்து
ஒன்றாக்கி மண நீராட்டுகை –

தம்பதிகள் இருவரும் ஒரே புடவை உடுத்தி
மண நீராட்டுகை
-என்றவாறு –

————————————————————————————————

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-

பதவுரை

வேயர் புகழ்–வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய்
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை–தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து
சொல்–அருளிச் செய்த
தூய–பரிசுத்தமான
தமிழ் மாலை ஈர் ஐந்தும்–தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர்–ஓத வல்லவர்கள்
வாயும்–நற்குணகளமைந்த
நல்ல மக்களைப் பெற்று–விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று
மகிழ்வர்–ஆநந்திக்கப் பெறுவர்கள்

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன்
கோதை
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் -நல் குணங்களைப் பெற்ற
நன் மக்களைப் -கைங்கர்ய ஸ்ரீ உள்ள மக்களைப்
பெற்று மகிழ்வரே—என்று அந்வயம் –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
அவனுக்கு அனந்யார்ஹையாக தான் கண்ட கனாவினை -என்னுதல்-

அவன் பேற்றுக்கு
உனக்கே நாம் ஆட்செய்வோம்
-என்ற
பேற்றுக்கு உறுப்பாக தான் கண்ட கனா என்னுதல்

ந ஜீவேயம் -என்பாரது இறே பேறு-
ஒரு ஷணமும் உயிர் வாழாத எம்பெருமான்
திங்கள் புக்கு இருப்பாரதன்றே —
மாசாதூர்த்த்வம்
-ஒரு மாசம் ஜீவிப்பேன் என்ற பிராட்டி யுடையது அல்லவே

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
பெரியாழ்வார் திருமகள் ஸ்ரீ ஸூக்தியான

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—
அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –

இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில்
கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்

புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் பெரியாழ்வாரைப் போலே
பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –

ஆண்டாளுக்கும் உப லஷணம்
பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றது

மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11-
என்றார் இறே தாம் கை கண்டவர் ஆகையாலே –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s