ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -நான்காம் திருமொழி —

அவதாரிகை –

இவனும்
பெண்களுடைய பரியட்டங்கள் எல்லாம் வாரிக் கொண்டு போய் குருந்தின் மேலே ஏறி இருக்க
இவர்களும்
அநு வர்த்தித்தும் –
வைதும்-
இப்படி பஹூ பிரகாரங்களாலே
அவனுக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி
சிலவற்றைச் செய்து –
அவனும் கொடுக்க –
இவர்களும் பெற்றார்களாய் நின்றது –

இவனும் இவை கொடுத்து அவர்களும் அவை பெற்று
சம்ஸ்லேஷம் வ்ருத்தமானாலும் அது தானும் விஸ்லேஷ அந்தமாய் அல்லாது இராது இறே

சம்யோகா விபர யோகாந்தா -அயோத்யா -105-16-
சம்சாரத்தில் போகங்கள் நிலை நில்லாதாகையாலே –
அவனும் பேர நிற்க –
இவர்களும் இன்னமும் ஒரு கால் பரியட்டம் உரிய வல்லேனே –
என்று அதுக்கு கூடல் இழைக்கிறார்கள் இத்தனை-

இங்குத்தைப் பரிமாற்றம் பேறும் இழவுமாய்ச் செல்லும் அத்தனை இறே
இது தான் இதர விஷய லாபத்தில் காட்டில் நன்றாய் இருக்கும் இறே
பேறு இழவுகள் இவ் விஷயத்தில் ஆகப் பெறுவதே –

பரம சேதனனை விட்டு அசேதன க்ரியா கலாபங்களைக் கொண்டு பெறப் பார்ப்பாரைப் போலே
சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு

அசேதனமான கூடலின் காலிலே விழுகிறாள்

வ்ருத்த ஹீனனான கிருஷ்ணனை -ஆசாரம் இல்லாத -கைம்முதல் எதிர்பாராத கிருஷ்ணனை –
வ்ருத்தவதியாய்ப் பெறப் பார்க்கிறாள்
காணும்

இத்தனை கலங்காத வன்று
பிரிந்த விஷய வைலஷண்யத்துக்கு நமச்காரமாம் இத்தனை இறே –

—————————————————————————–

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

பதவுரை

கூடலே–கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர்–தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும்–கைகளார வணங்கப் பெற்ற
தேவனார்–ஸ்வாமியாய்
வள்ளல்–பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார்–திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து-பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட–(அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில்–(அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு–நீ கூட வேணும்

காதாசித்க சம்ஸ்லேஷத்துக்கு தான் இன்று இருந்து கூடல் இழைக்கப் புக்க வாறே
நித்ய அனுபவம் பண்ணுகிறவர்களை நினைத்தாள்

தெள்ளியார் –
அவர்களும் சிலரே –
அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –
பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-
பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து –

பலர் –
த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே
இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்
இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை –
அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –
பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே

கைந்தொழும்-
நித்ய அஞ்சலி புடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்

தேவனார்-
இவர்கள் தொழுது உளரானார் போலே
இவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜ்வலனாகா நிற்குமவன்

வள்ளல் -மாலிரும் சோலை-
லுப்தனாய் இருக்குமவன் –கையிலே குவாலாக உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓன்று கழியிலும் அத்தைக் குறைவாக நினைத்து இருக்குமா போலே
நித்ய விபூதியும் -நித்ய அனுபவம் பண்ணுவாரும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே
சம்சாரிகள் இழவை அனுசந்தித்து
உடம்பு வெளுத்து அவ்விருப்பை இங்கு உள்ளாறும் பெற வேணும் என்னும் கிருபையாலே
திருமலை அளவும் வந்து –

தன்னை அனுபவிப்பைக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்கும் நிலையைச் சொல்கிறது

நித்ய விபூதியும் தானுமாய் இருக்கச் செய்தே இறே இவை அழிந்தது கொண்டு
ச ஏகாகி ந ரமேத – -என்கிறது
தன்னை சர்வஸ்வதானம் பண்ணி கொண்டாய்த்து நிற்கிறது –

-மணாளனார்-
தன்னைக் கைக் கொள்ளுகைக்காக வந்து நிற்கும் இடமாய்த்து –

மணாளனார் –
ஸ்ரீ கோபீமாரைப் போலே யமுனா தீரங்களிலே பிருந்தா வனத்திலே
இரவும் இருட்டும் தேடி ஒளி களவிலே யாக ஒண்ணாதே
பெரியாழ்வார் பெண் பிள்ளையை –
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுச்சித்தர் –
பெரியாழ்வார் -2-8-10-ஆகையாலே
ஒரு கோத்ர ஸூத்ரப்பட செய்ய வேணும் என்று வந்து நிற்கிறான் திருமலையிலே –
கோத்ரம் -சாடு பர்வதம் –

மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து –
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே –
அதாகிறது –கோயிலாய்த்து –

பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் –
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –

அடி கொட்டிட
உணர்ந்து இருக்கும் போது அடிமை செய்து போகை அன்றிக்கே
பள்ளி கொள்ளும் போதும் அதுக்கு வர்த்தகமான அடிமை செய்து வர்த்திக்க வாய்த்து சொல்லுகிறது
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க வாய்த்து கணிசிக்கிறது
இது வாய்த்து பிராப்தி பலம் –நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-

கொள்ளுமாகில் –
அதில் உபாய அம்சம் இருக்கும் படி-
அவன் நினைவாலே பேறாக வாய்த்து நினைத்து இருப்பது
முமுஷூக்களுடைய யாத்ரை இருக்கும் படி

நீ கூடிடு கூடிலே–
அவனாலே பேறு என்று இருக்கச் செய்தேயும்
அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறதே
பிராப்ய த்வரை-

—————————————————————————

அவன் என்னைப் பெறுகைக்கு சாதனானுஷ்டானம் பண்ணுகையிலே
உத்யுக்தரைப் போலே இருந்தான்
அதன் பலம் நான் பெறும்படி பண்ண வல்லையே -என்கிறாள் –

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

பதவுரை

கூடலே!-’-
காட்டில் வேங்கடம்–காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம்– நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி–மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
உறை–நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன்–வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து–ஓடி வந்து
என் கை பற்றி–என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும்–தன்னொடு
கூட்டும் ஆகில்–அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு–நீ கூடவேணும்

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
காட்டிலே உண்டான வேங்கடம் -என்னுதல்
காட்டை இல்லாக உடைய வேங்கடம் -என்னுதல்

ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளோடே இருந்து –
வனவாச ரசம் அனுபவித்தால் போலே யாய்த்து -திருமலையில் இருப்பு –
திரு அயோத்யையில் இருக்குமா போலே யாய்த்து
திருக் கண்ண புரத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பு

அன்றியே
ஸ்ரீ பிருந்தாவனம் திருவாய்ப்பாடியும் போலே யாதல்
பரம பதத்தில் நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுத்து கொண்டு இருக்குமவன் இறே
கானமும் வானரமும் வேடுமான -நான்முகன் திரு -47-
இவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு திரு மலையிலே வந்து நிற்கிறான்

வாட்டமின்றி –
பரம பதத்தில் நித்ய ஸூரிகள் அனுபவிக்கக் கடவ நாம் –
அவ்விடத்தை விட்டு இவர்கள் நடுவே இரா நின்றோம் என்று திரு உள்ளத்திலே ஒரு வாட்டமும் இன்றிக்கே

மகிழ்ந்துறை வாமனன்
அவர்கள் நடுவே நிரதிசய ஆனந்த உக்தனாய் இருக்குமா போலே
நிரவதிக ப்ரீதி உக்தனாய் இருந்து
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற
தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளனாமவன்-

ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
ஓரடிக் கழஞ்சு மண்ணுக்கு பதறுமவன் இவளைப் பெற்றால் இரான் இறே
ஆசூரப் பிரக்ருதியான மகாபலி முன்னே கழஞ்சு மண்ணுக்கு பதறி நடக்குமவன்
இவள் ஒருதலையானால் ஆறி இரான் இறே

ந பிரமாணீ கருத பாணி பால்யே பாலேன பீடித -யுத்த – 119-16-என்கிறபடியே
அம் கண்ணன் உண்ட என்னாருயிர் கோது இது -திருவாய் -9-6-6-என்னுமா போலே
பிடித்த பிடியிலே அனன்யார்ஹமாம் படி பிடித்து –

தன்னோடும் கூட்டுமாகில்
நான் தன கர ச்பர்சத்தாலே துவண்டு ஸ்தப்தையாய் நிற்க –
அணைத்து ஏறிட்டுக் கொள்ளுமாகில்

நீ கூடிடு கூடலே—
அவன் பக்கல் குறையில்லை
உன் தலை துலுக்குகை கிடாய் வேண்டுவது

ஸ்வா பதேசத்தில் கூடல் மனஸ்சைக் குறிப்பதால் எம்பெருமான் எதிர் சூழல் புக்கு திரிந்தாலும்
பேற்றைப் பெறுகைக்கு இசைவு இச்சை வேணுமே –

தலை துலுக்கு -இசைவு -நீ கூடுகை -என்றபடி –

——————————————————————————–

பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு  சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே–4-3-

பதவுரை

பூ மகன்–பூலிற் பிறந்த பிரமனும்
வானவர்–நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு–கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம்–தகுந்த
மகன்–புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி–மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன்–சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம்–மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன்–மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில்–(என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே! கூடிடு-

பூ மகன்
இந்த விபூதி

புகழ் வானவர்
லஷ்மி சம்பன்ன -பால -18-28–போலே அங்குள்ளார்

போற்றுதற்கு ஆமகன் –
நாவேவ யாந்தம் உபயே ஹவந்தே
இரண்டு கரையில் உள்ளாறும் நடுவே போகிற ஓடத்தை அழைக்குமா போலே

அணி வாணுதல் தேவகி-
அழகிய ஒளியை உடைத்தாய்
வேறு ஒரு ஆபரணம் மிகையான நுதலை யுடைய தேவகிக்கு

மாமகன்
அவள் வளர்த்த செருக்காலே மகன் அல்ல -உடன் பிறந்தான் என்னலாம் படி –
மிக்க மகன்
தாய் வழியால் வந்த ஏற்றம் ஒன்றுமேயோ உள்ளது -என்ன –

மிகு  சீர் வசுதேவர் தம்- கோமகன்-
கோவான மகன் –
சக்கரவர்த்திக்கு போலே நியாம்யன் அல்லன்
இவர் தம்மையும் நியமிக்கும் மகன்

அவரை நியமிக்கையாவது -கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொல்வதைக்   கேட்டு சுகமாய் இரும் -என்றால் போலே நியமிக்கை

வரில் –
இரண்டு பிறப்பாலும் உள்ள -இருவர் சாயையும் தோற்ற -நடையிலே நடந்து வருமாகில்

கூடிடு கூடலே-
நீ கூடி என்னையும் அவனையும் கூட்டு –

—————————————————————————

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

பதவுரை

ஆய்ச்சிமார்களும்–இடைச்சிகளும்
ஆயரும்–இடையரும்
அஞ்சிட–பயப்படும்படியாக,
பூத்த நீள் கடம்பு ஏறி–புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து–(அங்கு நின்றும் எழும்பிக் குதித்து)
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய–நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில் கண்ணபிரான் வரக்கூடுமாகில்–பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான
கூடலே! கூடிடு-

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட-
பயமே ஸ்வ பாவம் ஆனவர்களும் –
பயம் வ்யுத்பத்தி பண்ணி அறியாதவர்களும் –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன்- போல்வாரும்
அதுவே போர்க்களமாக இறே ந்ருத்தம் செய்தது – –
போர்க்களமாக ந்ருத்தம் செய்த பொய்கைக் கரை
-12-7-

பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது
அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –
கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ

நீள் கடம்பு –
இலக்கு வாய்க்கைக்காக உயர ஏறிப் பாய்ந்தான்

புகப் பாய்ந்த –
கால் ஆழக் குதிக்க

வாய்த்த காளியன்
தன் முலைகளிலே -இவள் கணிசிக்கும் நடமடைய அவன் தலையிலே பெற்றான்
அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாது ஒழிவதே –

மேல் நடமாடிய-
ந்ருத்த சாஸ்தரத்துக்கு ஸூத்ரம் இறே –
ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸூத்ரம் போலே –

கூத்தனார் வரில் –
ஆடின ஒசிவோடே வந்து அணைய வேணும்

கூடிடு கூடலே-
உன் இசைவு கொண்டு பெற இருக்கிறேன் நான் –

———————————————————————————–

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-

பதவுரை

ஓடை–நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம்–மிக்க மதத்தை யுடைத்தான
யானை–(குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன்–உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி–மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி–(நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு–நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில் -(நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே! நீ கூடிடு

ஓடை -நெற்றிப் பட்டத்தை உடையதாய்
நாடி -நம் வீட்டைத் தேடிக் கொண்டு –

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி-நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
அவன் விழ விழவுக்கு என்று கோடித்தான்-
இவள் இவன் வரவுக்கு என்று இருந்தாள் -மாட மாளிகைகள் சமைத்து அலங்கரித்தது –

நாடி
நேர வந்து புகுர ஒண்ணாது
இன்னாள் வீடு எது -இன்னாள் வீடு எது என்று ஊர் இரியலிடத் தேடி விட்டு –
ஆரவாரம் பண்ணித் தேடி விட்டு –விடாய் எல்லாம் தோற்ற –
முதா யுக்தௌ மாலாகாரா க்ருஹம் கதௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-9-17-
மாலாகாரருக்கு முடுக்குத் தெருவிலே இறே அகம் –
பெரும் தெரு எல்லாம் தேடி முடுக்குத் தெருவிலே கண்டு கொண்டான் இறே

பிரசாத பரமௌ-பிரசாதமே விஞ்சி இருப்பது
நாதௌ-இது தர்மம் என்கைக்கு ஒரு தர்மி யுண்டித்தினை
மம கேஹம் உபாகதௌ-நாதத்வம் மிக்கு இருக்கில் அழைத்து அன்றோ காண்பது –
தன்யோஹம் -ஆரும் தேடித் பெறாத நதியை -இருந்த இடத்தே எடுத்துக் கொள்ளப் பெற்றேனே
அர்ச்சயிஷ்யாமி -ஸ்வரூப அநுகுணமாக பெற்ற நிதியை அழித்து புஜிப்பேன்-
தக்கவாறு மாற்றி அர்ச்சனம் வந்தனம் போன்றவற்றால் அனுபவிப்பேன் -என்றபடி
இதி -இப்பாசுரம் ஆர் சொன்னார் என்னில்
மால்யோபஜீவன -போக்யதை விற்று உண்கிறவன்-
பார்யையை விற்று உண்பாரைப் போலே –
முகத்தை திரிய வைத்து இறே மாலை கட்டுவது
இதிலே சாண் மாலை அழியாமைக்காக
ஆஹா -இவனை இவ்வரவு இப்படியாக்கி -சொல்லுவிப்பதும் செய்தது –என்கிறான்
இவள் தானும் ஒரு மாலாகாரர் மகள் இறே

நம் தெரு –
திருவாய்ப்பாடி அடைய தன்னது ஆனால் போலே இங்கும் –
வட மதுரை மா நகரிலும் -ஒரு திரு மாளிகை யுண்டு –
உகந்து அருளிய இடம் எங்கும்
தேவத்வேதேவ தே ஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -ஒரோ திரு மாளிகை யுண்டு –
இன்னாள் அகத்துக்கு என்று முகம் தெரியாதபடி அகத்தளவும் தெருவின் நடுவே வர வேணும்

ஓடை மா மதயானை யுதைத்தவன்-கூடுமாகில் நீ கூடிடு கூடலே–
ஓடை -முக படமுமாம் -பட்டமுமாம் –

மா மத யானை -களிப்பித்தார்கள் மத த்ரவ்யங்களாலே
மதத்தாலே செருக்கித் திமிர்த்து நின்றது –
திருவடிகளாலே உதைத்தவன் –

கூடுமாகில் –
விரோதி போய்த்து -நீ கூட்டித் தரும் இத்தனை –

—————————————————————————

அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே–4-6-

பதவுரை

அற்றவன்–(ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய–யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன்–தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை–கம்சனை
வஞ்சனையில்–வஞ்சனையிலே
செற்றவன்–கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன்–விளங்குகின்ற மதுதைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில்–வந்திடுவானாகில்
கூடலே! கூடிடு-.-

அற்றவன் மருத முறிய நடை
முன்பே தனக்கு அற்றவன்
அற்றுத் தீர்ந்தவன் -இவளுக்காகக் காணும் பிறந்தது –
பரித்ராணாய சாதூனாம் -என்று தானே அருளிச் செய்தான் அன்றோ

மருத முறிய நடை-கற்றவன்-
தன்னை அறியாத பருவத்தே விரோதியைப் போக்கின படி –
யமளார்ஜூநௌ
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-16-

கஞ்சனை வஞ்சனையில்  செற்றவன்
வஞ்சனையில் -தர்ம யுத்தமே வேணும் என்று பெருமாளைப் போலே இருந்தானாகில்
அவன் வஞ்சனமே தலைக் கட்டுமே –
அவன் நினைத்த வஞ்சனத்தை அவன் தன்னோடு போக்கின படி

திகழும் மதுரைப்பதி கொற்றவன் –
ராஜ்யத்துக்கு உக்ர சேனனை வைத்தானே யாகிலும்
இவனே ராஜா என்பதே இவள் பஷம் –

வரில் கூடிடு கூடலே-
ராஜாக்களுக்கு பிரேரகன் வேணுமோ –

————————————————————-

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே–4-7-

பதவுரை

அன்று–முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும்–வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும்–வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும்–ஏழு ரிஷபங்களும்
புள்ளும்–பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும்–வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன
(அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ–முடிந்து விழும்படியாக
முன்–எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன்–கொன்றொழித்த கண்ண பிரான்
வரில்–வரக்கூடுமாகில்
கூடலே! கூடிடு;

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
கூடல் கூடாத இன்று போலே ஸ்வயம் வரத்துக்கு பிரதிபந்தகமான –
அன்றும் இக்கூட்டரவுக்கு இன்னாதான செய் சிசுபாலனும்

நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
அவன் தனக்கே தனியே இன்னாதான செய்த இடங்கள் போராதே-
இவனை -இருவரைக் கண்டு நின்றது

நீள் மருதும் –
சாய்ந்தால் பிழைக்க விடாது –
பொய்ம்மாய மருதான அசுரரை
-பெரியாழ்வார் -3-1-3-

எருதும் –
இவனை நலிய நின்ற ஏழு எருதும்

புள்ளும் –
பகாசூரனும்-

வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன் வரில் கூடிடு கூடலே–
வென்றியை தருவதான வேலை யுடையனாய் -அதுவும் மிகையாம் படியான மிடுக்கை யுடையனான கம்சன் –

கஞ்சனும்
கீழ்ச் சொன்னவற்றுக்கு அடியான அவன் தன்னையும்

கொன்றவன்
ஏக பிரயோகத்தே விரோதிகளை அடையப் போக்கி அவசரப் பிரதீஷனாய்-
என்னை அடைய -சித்தமாய் – நின்றான்

இனி நீ கூடும் இத்தனை –

——————————————————————————————–

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-

பதவுரை

ஆவல் அன்பு உடையார் தம்–ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றி மேவலன்–நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன்–நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்–கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ண பிரான்
வரில் – வரக் கூடுமாகில்
கூடலே! கூடிடு.

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேவலன்
ஆவல் –
ஆவலுடையார் தான் -குணாத்வசாயமும் கிடக்கச் செய்தே –
நோன்பு நோற்பது –
காமனை ஆராதிப்பது –
சிற்றில் இழைப்பது-
பனி நீராடுவது –
கூடல் இழைப்பதான -இவை ஆவலாவது

அன்பு –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்பது
உறகல் உறகல் -என்பதான தமப்பனாருடைய அன்பு –

தங்கள் குடியில் உள்ளார் மனத்தோடு அல்லது மேவான் -என்கிறாள்
விரை சூழ் துவராபதிக் காவலன் –
ஆவல் இல்லாதாரோடும் பொருந்து மவன் கிடீர் –

ஷோடச ஸ்திரீ சஹஸ்ராணி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -31-17-18-
அவ்வூரில் உள்ள மணம் போராமே ஸ்வர்க்கத்தில் உள்ள மணமும் கூட்டிக் கொடுத்தான் இறே –
அதனாலே விரை சூழ் -விசேஷணம் –
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டுவரை நட்டான் -பெரிய திருமொழி –6-8-7-என்னக் கடவது இறே

காவலன் –
ஜகத் வியாபார லீலை பண்ணி –

கன்று மேய்த்துவிளையாடும் கோவலன் வரில்
சர்வச்ய ஜகத பாலௌ வத்ஸ பாலௌ பபூவது -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-35-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய் -10-3-10-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-

கோவலன் –
ராஜ்யம் பண்ணாமைக்காகவும்–
கன்று மேய்த்து விளையாட -திருவாய்ப்பாடிக்கு வருவதற்காக-

அவனது ரஷகத்வ சௌசலப்யங்களுக்கு குறை இல்லை ‘
எனது ஆசை அன்பு அபி நிவேசங்களுக்கும் குறை இல்லை –

கூடிடு கூடலே-
ஆகையால் நீ கூடி எங்களைக் கூட்டுவாயாக –

—————————————————————————-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

பண்டு–முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய்–(முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான)
கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன்–பெரு வேள்வியில் சென்று
அண்டமும்–மேலுலகங்களையும்
நிலனும்–கீழுலகங்களையும்
அடி ஒன்றினால்–ஒவ்வோரடியாலே
கொண்டவன்–அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில்–வருவானாகில்
கூடலே!–கூடிடு

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
யஜ்ஞ்ஞோபவீதமும் -க்ருஷ்ணாஜினமும் -முஞ்சியும் -பவித்ரமும் -தண்டும்
பரமபதத்தில் ஒப்பனையிலும் அழகியதா இருந்தபடி –

பண்டு மா வலி தன்பெரு வேள்வியில்-
கூடல் தலைக் கட்டியும் பெறாது இருக்க
வேள்வியின் நடுவே இவனைக் காணப் பெற்ற வேள்வி –

அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே-
அண்டமும் ஓரடியும்
நிலம் ஓரடியும் –
அவன் தன்னுடைமையை விடான் -நீ கூடுகையே குறை –

த்ரீணி பதா விசக்ரமே –என்றும்
மூன்றடி நிமிர்த்து -பெரியாழ்வார் -4-7-10-என்றும் உண்டாய் இரா நின்றது –

இது-இரண்டு அடிகளாலே அளந்தான் என்ற இது – இருக்கிறபடி ஏன் -என்று நஞ்சீயர் -பட்டரைக் கேட்க –
பரோ மாதரயா தனுவா வருதான ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
-உபே தே வித்ம ரஜசீ ப்ருதிவ்யா -விஷ்ணு தேவ தவம் பரமச்ய வித்சே —என்றும்
த்வே இதஸ்ய க்ரமேண ச்வர்த்த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யாதி
-த்ருதீயமச்தி நகிரா ததர்ஷதி வயஸ்சன பதயந்த பதத்ரிண-என்றும்
வேத புருஷன் தானே -இரண்டடியால் அளந்த இடம் எல்லாரும் அறியும் –
நீ மூன்று அடியால் அளந்த இடம் உனக்கே தெரியும் அத்தனை -என்று காணாமல் விட்டான்-
அவன் அளந்தமை யுண்டு –அவனுக்கே தெரியும் அத்தனை -என்று
அருளிச் செய்தார் என்று ஜீயர் அருளிச் செய்வர் –

————————————————————————-

பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-

பதவுரை

பழகு நால்மறையின் பொருள் ஆய–அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகுவாரணம் உய்ய அளித்த–மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார்–எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்–அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ண பிரான்
வரில்–வரக் கூடுமாகில்
கூடலே! கூடலே

பழகு நான் மறையின் பொருளாய்
அபௌருஷேயமான வேதங்களின் அர்த்தம் இவனே இறே
அல்லாதவை ஏக விஜ்ஞான நியாய சித்தம் –

வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
யதா சோம்யை கேன மருத் பிண்டேன சர்வம் ம்ருண்மயம் விஞாதம் ஸ்யாத்-சாந்தோக்யம் -6-1-4-

மத மொழுகு வாரணம் உய்ய வளித்த
சம தமாத்யுபேதம் அன்று -அகப்பட்ட இடரில் நின்றும் உய்ய

எம் அழகனார் –
ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் ததான -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-59-

அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் வரில் கூடிடு கூடலே
தங்குமேல்-என்று இருக்குமவர்கள்
இவர்களுக்கு அணி யாவது –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே
-8-7-
அப்போதே இவன் உதவா விடில் இனிப் பிதற்ற அமையும்

எம் அழகனார் –
வரிலும் முகம் கொடுப்பது இல்லை என்று இருந்தவர்கள் நெஞ்சில்
மறம் மாறும்படி வாழ்வுகள் செய்தும்
தாழ்வுகள் சொல்லியும் கலந்தவர்களோடே கலக்க வல்லவன்-
கோலப் பாதத்தையும் -அணி மிகு தாமரைக் கையையும்

தலை மிசை வைத்து வாழ்வுகள் செய்தும்
அடியேன் குடியேன் குழைந்து கலந்து கலக்க வல்லவன்

தானும் குழைந்து -கலப்பவர்கள் உடைய
நெஞ்கை குழைய வைப்பவன் என்றுமாம் –

அப்படி என் இன்னாப்பை தீர்த்து கலக்குமாகில் கூடிடு –

——————————————————————————-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

பதவுரை

ஊடல் கூடல்–ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல்–குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல்–(பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன்–அநாதி காலமாக
நீடு நின்ற–நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை–நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை–அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய–அருளிச் செய்த
பாடல் பத்தும்–பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு –ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை-(எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
ஊடலொடு கூடுகை -ஊடல் கூடல் –
ஊடி இருப்பார்கள் இறே பெண்கள் –
இவன் தன் குறைகளை அவர்கள் உணர்த்தும் படியும் —
எங்களை பிரிந்து நலிந்தாய் போல – உணர்த்தி –
அவன் பின்பு ஷாமணம் பண்ணி புணரும் படியும் –
உங்கள் ஆசை அன்பு காதல் வேட்கை அவா வளர்க்கத் தான் பிரிந்தேன்
என்றன போல்வன சொல்லி -புணர்வான் இறே

முன் -நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்-கூடலைக்-
இவனோடு ஊடுவதும் கூடுவதும் -இதுவே யாத்ரையாய் புகழை உடைய திருவாய்ப்பாடியில்
பெண்கள் இத்தனை வருடையவும் பாசுரத்தையும்

நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –
கிருஷ்ணனை
இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்

-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –

பாவம் இல்லை –
இவளைப் போலே இப்படி பட வேண்டா –
சொன்ன இத்தை அப்யசிக்க வல்லார்க்கு கூடல் இழைக்க வேண்டா –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: