ஸ்ரீ யபதியான சர்வாதிக வஸ்துவினுடைய திவ்ய அங்கங்களை திருப்பாதம் தொடங்கி அனுபவித்த க்ரமம் சொல்லுகிறது
அயன் அலர் கொடு தொழுதேத்த -என்னும்படி -ஹம்ச வாஹனான சதுர முகன் பஹு முகமாக அனுபவித்தாப் போலே
முநி வாகநரான இவரும் ஏக முகமாக இரண்டு கண்ணாலும் கண்டு அனுபவித்தார் –
உவந்த உள்ளத்தார் ஆனார் —
சௌந்தர்ய சாகரத்திலே மக்நர் ஆனார் –
இவருக்கு அழகு அஜ்ஞ்ஞானத்தை விளைத்தது ஆய்த்து –
அத்ருஷ்டம் த்ருஷ்டம் ஆகையாலே த்ருஷ்டம் அத்ருஷ்டம் ஆய்த்து –
அணி அரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தலா –
பாவோ நாந்யாத்ர கச்சதி –
கட்கிலீ என்னும் வடிவை இறே கண்ணால் கண்டு அனுபவித்தது
காணாதவையும் கண்ட வஸ்துவிலே உண்டு இறே –
மைப்படி மேனியை அனுபவித்து மற்ற விஷயங்களை காணாக் கண்ணாய் இருக்குமவர்-
இவர் அடியார் ஆகையால் அடியே தொடங்கி அனுபவிக்கிறார்
ப்ரஹ்மா அபிமானி ஆகையால் முடியே தொடங்கி -அனுபவித்தான் –
——
வீணையும் கையுமாய் சேவிக்கிற இவர் -சேமமுடை நாரதனாரும் ஒரு வைகைக்கு ஒப்பாகார்
பெரியாழ்வார் அவதாரத்தில் அனுபவம் இவருக்கு அர்ச்சாவதாரத்திலே
அவர் -பாதக்கமலம் என்றத்தை -இவர் திருக் கமல-பாதம் என்றார்
அவர்-பீதகச் சிற்றாடை யொடும் -என்றத்தை -இவர் -அரைச் சிவந்த வாடையின் மேல் -என்கிறார்
அழகிய உந்தியை —-அயனைப் படைத்த தோர் எழில் உந்தி –
பழம் தாம்பால் ஆர்த்த உதரத்தை —–திரு வயிற்று உதர பந்தம் –
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வை -திரு வார மார்வு என்றும்
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டத்தை –முற்றும் உண்ட கண்டம் -என்றும்
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலத்தை -கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் -என்றும் –
செந்தொண்டை வாயை –செய்ய வாய் என்றும்
கண்கள் இருந்தவா –என்றத்தை -அப்பெரிய வாய கண்கள் என்றும்
உருவு கரிய ஒளி மணி வண்ணன் -என்றத்தை -எழில் நீல மேனி -என்றும்
குழல்கள் இருந்தவா -என்றத்தை -துளவ விரையார் கமழ் நீண் முடியன் -என்றும் அருளிச் செய்தார்-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் இறே பெரிய பெருமாள் –
முனி ஏறி தனி புகுந்து –
இந்த மஹா போகத்திலே தாம் ஏகராய் உள் புகுந்து-பாட்டினால் —அநுபவத்துக்கு பாசுரம் இட்டுப் பேசின –
அமலனாதிபிரான் -என்கிற
பிரபந்தத்தின் பாட்டுக்களாலே —அண்டர் கோன் அணி அரங்கனைக் கண்டு வாழுமவர் யாய்த்து -இவர் –
பின்பு இவ் வநுபவத்துக்கு பட்டர் தேசிகர் ஆனார்-
கண்டு வாழும் –
காட்சியாக வாழ்ச்சியாக வாழுகிற
பாணர் தாள் பரவினோம்-
————————————————————————————————
பிரணவம் போலே அதி சங்குசிதமாய் இருத்தல்
வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்பு கூடாய் இருத்தல்
செய்யாதே பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய் இருக்கும்
திருவாய் -மொழியும்–அமர்சுவை -யாயிரம் -என்றும்–பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் —ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன–ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன —
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –
திரு நெடும் -தாண்டகமும்–பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்–அதுக்கும் அவ்வருமைகள் உண்டு –
திருமாலைக்கு–அவ்வருமைகள் இல்லையே யாகிலும்–தம்முடைய லாப அலாப ரூபமான
ப்ரிய அப்ரியங்களை–ப்ரதிபாதியா -நிற்கும்-
பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே —
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே–புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்–
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –
பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே —அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடிவருட–
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே–
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –
—————————————————————-
வேதம் போலே முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்திலே மண்டி அர்ச்சையும் தொட்டுக் கொண்டு போந்தார்கள் –
ஸ்ரீ வால்மீகி பகவானைப் போலே ஸ்ரீ குலசேகர பெருமாள் ராமாவதாரத்திலே ப்ரவணராய்
அர்ச்சாவதாரத்தையும் அனுபவித்தார் –
ஸ்ரீ பராசர பகவானையும் ஸ்ரீ வேத வியாச பகவானையும் போலே
நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆழ்வார் திருமகளாரும் கிருஷ்ணாவதாரத்தில் மண்டி
அர்ச்சாவதாரத்தை அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் -தேவதாந்தர பரதவ நிரசனத்திலே தத் பரராய் இருந்தார் –
திருமங்கை ஆழ்வார் பரத்வத்தை காற்கடைக் கொண்டு அர்ச்சாவதாரத்திலே இழிந்து –
அது தன்னிலும் -தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் -பாடி பரபரப்பாய் திரிந்தார் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பெரிய பெருமாளை அனுபவியா நிற்கச் செய்தே
பரோபதேசம் -பண்ணுவது பரத்வ ஸ்தாபனம் பண்ணுவது –
இவர் பெரிய பெருமாளை பூரணமாக அனுபவிக்கிறார்
மற்ற ஆழ்வார்களுக்கு முன்புள்ள ஜன்ம பரம்பரைகளில் உண்டான துக்க அனுபவ
ஸ்மரணத்தாலும் -ஸ்வரூப அநுரூபமான பகவத் போகத்தின் உடைய அலாபத்தாலும்
கிலேச அனுபவம் கலாசி நடவா நின்றது –
இவருக்கு பெரிய பெருமாள் அர்ச்சா ரூபியாய் இருக்கச் செய்தேயும் தம்முடைய சௌந்தர்யத்தை
சாகரத்தை ஆவிஷ்கரிக்க லாவண்யம் ஆகிற மரக்கலத்தாலே எங்கும் ஒக்க அனுபவிக்கிறார் –
பல்லாண்டு போற்றி என்று பாவிக்க வேண்டாமல் இவருக்கு ஜன்ம சித்தம் ஆய்த்து-
———————————————————–
பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது
அந்யத்ர-என்கிறது —மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமாபோலே–
கொடுபோக நினைத்த தேசத்தின் பேரும் கூட தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை—அறியாதபடியும்
பெரிய பெருமாள் உடைய அழகும் ஐஸ்வர்யமும் பரம பதத்தில் முகிளிதமாய் இருக்கும்
அவதாரத்திலே ஈரிலை பெறும் -இங்கே வந்த பின்பு தழைத்தது
தன்னை உகந்தாரை தாம் அனுபவிக்கை அன்றிகே தான் என்றால் விமுகராய் இருப்பாரும்
கூட-அனுபவிக்கலாம் படி இருக்கையாலே நீர்மையால் வரும் ஏற்றம் இங்கே உண்டே
வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை ஆற்றில் தண்ணீரோ பாதி ஆற்றுக்கு உள்ளே
கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர வாறான அவ்வாறு இவ்வாறாய்த்து காணும் –
இவர் தமக்கு ப்ராப்யரும் ப்ராபகரும் ருசி ஜனகரும் விரோதி நிவர்த்தகமும் எல்லாம்
பெரிய பெருமாளே என்று இருப்பர் .
அனுபாவ்யரான பெரிய பெருமாள் தம்மைப் பார்த்தாலும் –பரத்வம் போலே தேச விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
வ்யூஹம் போலே தத் ப்ராயமால் இருத்தல் –விபவம் போலே கால விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
அந்தர்யாமித்வம் போலே அசஷூர் விஷயமாய் இருத்தல் –அர்ச்சாவதாரங்கள் போலே –
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது இருத்தல் –
அங்கு வர்த்திக்கும் பேர் -சிலைக்கை வேடரேயாய் பயங்கரராய் இருத்தல் –பெரிய ஏற்றமேற வேண்டி இருத்தல் –
வருந்தி பெரும் கூட்டத்தோடு போய் ஏறினால் -கானமும் வானரமும் வேடுமேயாய்-மேலை வானவர் இன்றிக்கே இருத்தல் –
செய்கை அன்றிக்கே
இத் தேசத்தில் -இக்காலத்தில் -எல்லார் கண்ணுக்கும் விஷயமாய்க் கொண்டு-
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நின்ற திருவரங்கம் –என்கிறபடியே
எல்லார்க்கும் நின்ற நின்ற நிலைகளிலேயே ஆஸ்ரயிக்கலாம் படி-சர்வ சுலபருமாய்
வன் பெரு வானகம் -இத்யாதிப் படி -உபய விபூதியையும் நிர்வஹித்துக் கொண்டு-போருகிற மேன்மையை உடையராய் –
இப்படி சர்வாதிகாருமாய் -சர்வ சேஷியுமாய் -சர்வ ரஷகருமாய் -சர்வ சமாஸ்ரயணீ யருமாய் —
நிரதிசய போக்ய பூதருமாய் -இருப்பவர் –
———————————————————–
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத் தலை யிருந்து வாழும் சோம்பராய் இருக்கிற லோக சாரங்க மஹா முனிகளை அருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன
அவரும் -அருள் பாடு அருள் பாடு -என்று சொல்ல –
இவரும் -அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –
அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டு பாடி -திருப் பிரம்புக்கு உள்ளே பத்தாம் பாட்டு பாடித் தலைக் கட்டுகிறார்-
இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம் மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-
———————————————————-
ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்தில் வர்ஷித்து -அங்கு நின்றும் காவேரி யாறாய் போந்து இழிந்து
கால்களாய் புகுந்து போய் நாட்டாருக்கு உபயுக்தமாம் போலே –
பரம பதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும் -திருமலையிலே வந்து இழிந்து –
தெற்கு நோக்கி வந்து -பள்ள நாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற மதுர வாற்றின் இடை புகுந்து
ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-
அமலன் –
தன்னை வந்து கிட்டின போதும்
பெரிய பெருமாளுக்கு பிறந்த வைலஷண்யம் கண்டு
அவனுடைய ஹேய ப்ரத்ய நீகதையை முதலில் –
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி –
துயர் அறு சுடர் அடி -இறே-
ஆதி –
கல்யாண குண யோகம் –
பெற்ற பாவிக்கு விடப் போகுமோ –
தாம் அடியான் என்றும் ஆதி சப்தம் சொல்லும் –
என் பேற்றுக்கு முற்பட்டவன்
அழிந்த ஜகத்தை உண்டாக்கினாப் போலே ஸ்வரூபத்தை அழித்துக்கொண்ட என்னை உண்டாக்கி-
ஆக-அமலன்-ஆதி -இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லுகிறது
பிரான்
எனது நிகர்ஷம் பாராதே கீழ் செய்து அருளிய -மேலும் பண்ணப் புகுகிற உபகாரகன்
அடியாருக்கு என்னை ஆட் படுத்த -விமலன்
எனக்கும் என்றும் பிறருக்கு என்றும் திரிந்த என்னை
தனக்கும் தன் அடியாருக்கும் ஆக்கின பரி சுத்த ஸ்வபாவன்
தலையைப் பிடித்து கால் கீழே இட்டுக் கொண்டான் -வஸ்துவின் சீர்மையாலே
அடியார்க்கு ஆம் இத்தனை என்று –
அடியாருக்கு -சேஷத்வமே பிரதம நிரூபகம்
பாகவத சேஷத்தளவும் சென்றால் மீளப் போகாதே
சேஷித்வத்தின் எல்லையில் தான் நின்று சேஷத்வத்தின் எல்லையில் என்னை ஆக்கி அருளினான்
தம்மை வஹித்த அளவில் லோக சாரங்க முனிவருக்கு இவர் சேஷ பூதர் ஆனது
திருத் துழாய் திரு அபிஷேகத்தில் இருந்தாலும் சேஷத்வம் குலையாதே-
விண்ணவர் கோன்
த்ரிபாத் விபூதியாக தன்ன தாலாட்ட இருக்கிறவன் கிடீர்
கதிர் பொறுக்கி ஜீவிப்பாரைப் போலே நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னை
நித்ய சூரிகள் ஒக்க ஆம்படி விஷயீ கரித்தான் –
உடன் கூடுவது என்று கொலோ ஆசைப்பட வேண்டாதபடி அங்குத்தை குழாத்தையும் காட்டித் தந்தான் –
கோன் -அவர்களாலும் எல்லை காண முடியாது -இருப்பவன்-
விரையார் பொழில் வேம்கடவன்
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம்
சர்வ கந்த -என்கிற வஸ்து போலியான பரிமளத்தை கண்டு கால் தாழ்ந்தான் –
பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர் -ஆற்றில் அமிழ்ந்துகிறவன் இங்கே –
ஆழம் காலிலே இளைப்பாற தேடுமா போலே -அது மடு வாகிறது அறியாமல் –
வரத்து சொல்லி கவி பாடுகிறார்
நிமலன் –
அர்த்தித்வம் இன்றிக்கே -நிர்ஹேதுகமாக -தானே பச்சை இட்டு உபகரிகையால் வந்த ஔஜ்வல்யம் –
நின்மலன்
தன் பேறாக செய்தான் –
உடையவன் உடைமையை பெற்றால் நமக்கு என்ன -ஆத்ம லாபம் தன்னதாம் படி –
நீதி வானவன் –
இப்படி புகுர நிறுத்துகைக்கு அடி -சேஷ சேஷித்வங்கள் மாறாத நித்ய விபூதி வாசனை
அங்கு கலங்குவாறும் இல்லை கலக்குவாறும் இல்லை –
அளப்பரிய ஆரமுதை யரங்கமேய அந்தணனை போலே
நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
இப் பாசுரம் கேட்டுப் போலே காணும் திருமங்கை ஆழ்வார் திரு மதிள் செய்தது
ரஷகமாகப் போரும்படியான மதிளை உடைய பெரிய கோயில் –
அம்மான்
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூரணமாவது
திருமலை போக்யதை நிலம் அல்லாமையாலே கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ள மடையாலே பள்ளத்தே விடுமா போலே திருவேம்கடமுடையான்
வடக்கு திருவாசல் வழியே வந்து புகுந்தான்
திருக் கமல பாதம்
ஆதித்யன் சந்நிதியில் தாமரை அலருவது போலே
ஆஸ்ரிதர் சந்நிதியில் அலரும் திருவடிகள் –
தளிர் புரையும் திருவடிகள் –
அம்மான் திருக் கமல பாதம்
பிராப்யமும் பிராபகமும்-
வந்து
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -வழி வந்தானும் தானே பற்றினானும் தானே –
உபாய பூர்த்தி சொல்லுகிறது-
என் கண்ணின் உள்ளன –
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே –
கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளித்தாலும் உள்ளே பிரகாசிக்க தொடங்கிற்று –
ஒக்கின்ற –
ப்ரத்யஷ சாமாநாகாரமாய் இருத்தல் –
பிரயோஜனம் இரண்டு தலைக்கும் ஒத்திரா நின்றது
அங்குத்தைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி –
அமலன் -உயர்வற உயர் நலம் உடையவன்
ஆதி -யவன்
பிரான் -மயர்வற மதி நலம் அருளினன் –
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் இவர்க்கு அவை தானே வந்து நின்றன –
———————————————————————————————
அவன் இவரை விஷயீ கரித்து -தொடர்ந்து வந்து -தம் திரு உள்ளத்திலே ப்ரகாசித்த படியை சொல்லி
இனி தாம் மேல் விழுந்தபடி சொல்லுகிறார் –
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் -புகுந்ததிற் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய் –
தான் அறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்கு குற்றமாம் –
போக்யதை அளவு பட்டதும் அல்ல -ஆசையும் அளவு பட்டது அல்ல –
கடலோதம் கிளர்ந்து அலைக்கப் புக்கால் -உள்ளே கிடந்த தோர் துரும்பு கடலை அளவிட்டு அல்லவே
ஈன்று அணித்தான நாகு -தன் கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலில் தானே தன்
முலையை அதின் வாயிலே கொடுக்கும் -பின்பு சுவடு அறிந்தால் கன்று தானே இது
காற் கடைக் கொள்ளிலும் மேல் விழும் இறே-
உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-
உவந்த உள்ளத்தனாய் –
பிரஜை பால் குடிக்கக் கண்ட மாதாவைப் போலே உகக்கிறான் -ஆழ்வாரை
அகப்படுதுகையால் வந்த ப்ரீதி
சர்வேஸ்வரன் -அவாப்த சமஸ்த காமன் -ஸ்ரீயபதி -அவாக்ய -அநாதர -பூரணன் –
உலகம் அளந்த
கதா புன -என்றும் -படிக்களவாக நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
அபேஷியாய் இருக்க -பெரிய பிராட்டியார் கூசிப் பிடிக்கும் மெல்லடிகளால் -காடு மேடுகள்
என்று பாராதே -சேதன அசேதன விபாகம் பாராதே –
வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே -ஸ்த்ரி பும்ஸ விபாகம் அற -ஞான அஞ்ஞான விபாகம் அற பரப்பினால்
இப்படி உபகரிப்பதே என்று உகக்க பிராப்தமாய் இருக்க -இவர்கள் அறிவு கேடே ஹேதுவாக -விலக்காது
ஒழியப் பெற்றோமே என்று இரட்டிக்கப் புகுந்த திரு உள்ளத்தனாய் –
உகக்க அறியாமை -வன் மாய வையம் -என்பதால் இறே
பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போகும்படி திருவடிகளை வைத்து
எதிர்தலை அறியாது இருக்க தானே வைக்கிறது வாத்சல்யம் இறே
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்கிறது வாத்சல்யம் அன்றோ
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே-
அண்டம் உற
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும்படி அபேஷிதம் பெற்று வளர்ந்த படி –
அண்டம் மோழை எழ –
நிவர்ந்த
பூ அலர்ந்தால் போலே
நீண் முடியன் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்று தோற்றும் படி தரித்த முடி
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -என்று திருவடி
வளர்ந்ததை காட்ட இருக்க -திருவடி வளர்த்தி சொல்வது ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற –
அர்த்திதத்தை பெற்ற உகப்பு திரு உள்ளத்தில்
அவன் தான் அறிய உகக்க ஒண்ணாதே –
திருக்கையிலே நீர் விழுந்தவாறே அந் நீரே பற்றாசாக வளர்ந்து அளந்து கொண்டான்
நிகர்ஷம் பாராதே -அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து -புகுந்து
சித்தம் ராகாதி தூஷிதமாய் இருக்கையாலே கால் பொருந்தி இருக்க மாட்டானே
அந்த விரோதி போக்குபவனும் அவனே-
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை -காகுத்தன்
கண்ட காட்சியிலே ஜிதம் என்று இருக்குமவன் -எதிரிட்ட பையல்களை முடிக்கைக்கு
செவ்விய சரத்தை உடையவன் –
விடும் போது அம்பாய் படும் போது காலாக்னி போலே இருக்கை –
பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லாது நில்லாத வெம்மை –
அவன் தன்னைப் போலே ஆய்த்து அம்புகளும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –
கோ குணவான் -சீலம் சொல்லி கச்ச வீர்யவான் -வீரத்தை சொன்னது போலே
மாம் அஹம் இரண்டையும் சொன்னார்
உலகம் -அளந்து திருவடிகள் விக்ரமித்தபடி
கவர்ந்த வெங்கணை காகுத்தன் -திருத் தோள்கள் ப்ராக்ரமித்த படி –
காகுஸ்தன் -குடிப்பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்ததும் வீர ஸ்ரீ காட்டி -அருளியதும்-
கடியார் -பொழில் அரங்கத்தம்மான்
உலகம் அளந்த ஸ்ரமமும் -ராஷச வாத ஸ்ரமமும் தீர பரிமளம்
சோலை உடைய கோயிலே அந்த திருவடிகளையும் திருத் தோள்களையும் நீட்டிக் கொண்டு சாய்ந்து அருளினான்
கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல்
இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே –
கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேண்டுமோ என்று வயிர் பிடிக்க வேண்டாதபடி இவன் கண் வளர்ந்து அருளுகிற படி –
சர்வகந்த–கண் வளர்ந்து அருளுகையாலே கடியார் பொழில்
இத்தால் போக்யதை சொல்லிற்று-
என் சிந்தனை
திருவடிகளின் சுவடு அறிந்து பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஓலக்கத்திலே காண்பாரைப் போலே
முதல் -பாசுரம் -பாதம் -வந்து என்று சாதனா பாவம் சொல்லி -இதில்
சென்றதாம் -அதிகாரி ஸ்வரூபம் -தம் திரு உள்ளம் மேல் விழுந்ததாக சொல்கிறார்-
————————————————————
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3-
மந்தி பாய் –
வேரே பிடித்து தலை அளவும் பழுத்த பலா பழங்கள் தாவும் மந்தி போலே –
பெரிய பெருமாள் உடைய திவ்ய அவயவங்களிலே இவர் ஆழம் கால் படுவது -போலேயும்
பரமபதமும் திருமலையும் திரு அயோத்யையும் திருச் சோலையையும் இவனுக்கு ஒரு போகியாய் இருக்கிறபடி –
எங்கும் மாறி மாறி தங்குகை –
திரு பீதாம்பரத்தின் அழகின் மிகுதி திரு நாபீ கமலத்தில் வீச
தன்னுடைய மேன்மையும் அழகையும் காட்டி இவர் மனஸை தன் பக்கலிலே இழுத்துக் -கொள்ள
அனுபாவ்யதை எல்லை கண்டு மீளாமல் சாபல்யத்தால் இழுப்புண்கிறார்
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேம்கடம் –
எந்நாளோ நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு -என்று திருவேம்கடமுடையான் திருவடிகளைக்
காண பிரார்த்தித்து –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தன் திருக்கையால்
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டிக் கொடு நிற்கிறவனுமாய்
தானோங்கி நிற்கின்றான் த்ண் அருவி -வேம்கடம்
அவனே இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்கிறார்-
மா மலை
போக்யதையின் -மிகுதியை சொல்லுகிறது –
பரன் சென்று சேர் -சேஷி ரஷகத்வ சித்த்திககவும்
முன்னம் -அடைமினோ -சேஷபூதர் ஸ்வரூப சிததிககாகவும்
வந்து சேரும் ஸ்லாக்யதையை சொல்லுகிறது ஆகவுமாம் –
சூரிகள் சீல குணம் அனுபவிக்க வரலாம்படி உயரத்தை சொல்லுகிறதாகவுமாம் –
உபய விபூதியும் ஒரு மூலையில் அடங்கும் என்றுமாம்-
அரங்கத்து அரவின் அணையான்
அங்கு நின்றும் இங்கே சாய்ந்தபடி
பரம பதத்தின் நின்றும் அடி -ஒற்றினான் திருமலை அளவும் பயணம் உண்டாய் இருந்தது
அங்கும் நின்றும் வடக்கு திருவாசலாலே வந்து கோயிலிலே சாய்ந்தான்
இனி சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்பான் –
ராமாவதாரத்தே பிடித்து அடி ஒற்றினான் -ராவண வதம் பண்ணி தெற்குத் திரு வாசலாலே வந்து சாய்ந்தான்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்கு கிடக்குமவர் இவர்
அந்தி போல் நிறத்தாடை அரைச் சிவந்த ஆடை -என்றது பின்னாட்டுகிறது
சிவந்த ஆடை ஆபரணம் போலே கழற்ற முடியுமே -அந்தி போல் நிறத்தாடை சஹஜம் என்கிறார் –
ஓர் எழில் உந்தி –
பிரசவ அந்தமான அழகு போல் இன்றி -பிரமனை உண்டாக்கிய பின்பு ஒளியும் அழகும் மிக்கது -இளகிப் பதிக்கை –
சௌந்தர்யம் ஆகிய பெரிய ஆறு -திருமுடி யாகிற மலைத்தலை யினின்றும்
அகன்ற திரு மார்பாகிற தாழ் வரையிலே வந்து குதி கொண்டு -அங்கே பரந்து கீழ் நோக்கி
இழிந்து -சிற்றிடை யாகையாலே அங்கே இட்டளப் பட்டு -பின்பு
திரு நாபியாய் சுழி யாறு பட்டது
அடியேன்
இந்த அழகுக்கு தோற்று அடியேன் என்கிறார் -பதிம் விச்வச்ய பிரமாணாத்தால் அல்ல –
குணைர்த் தாஸ்யம் உபாகத ராய் சொல்லு கிறாரும் அன்று
உயிர் -என்கிறது மனஸை
வடிவு அழகு ரசித்து போக்யமாய் இருக்கையாலே இன் உயிர் என்கிறார்
சிலரை உண்டாக்குகிறது கிடீர் என்னை அழிக்கிறது
ப்ரஹ்மாதிகளை உண்டாக்கும் நாபி -அடியேன் -என்று இருப்பாரை அழிக்கும்
——————————————
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-
நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற நமஸ் ஸில் அர்த்தத்தை மறை பொருளாக
அனுசந்திகிறார்
மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன
மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை
ருஷிகள் கொண்டைக் கோல் கொண்டு ஆடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப் புக்கன
குரங்குகள் கூத்தாட்டாதல் இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக் யோநிகளுக்கு நிலமாகை-
வண்டு பாட மா மயில் ஆடு
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்யசூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-
கோயிலிலே சோலைகள் நித்ய வசந்தமாய் மது ஸ்பீதமாய் இருக்கையாலே
அந்த மதுவை கழுத்தே கட்டளையாக பானம் பண்ணி
அந்த ஹர்ஷதுக்கு போக்கு வீடாக வண்டுகளானவை கல்வியால் வரும் அருமை இல்லாமையாலே
பாட்டை மதுரமாம் படியாக -தென்னாதெனா -என்று முரலா நிற்க
சிந்துக்கு ஆடுவாரைப் போலே ஸ்லாக்யமான மயில்கள் ஆனவை -இவ் ஊரில் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை யாகையாலே ஆலித்து ஆடா நிற்கும்-
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
அந்த திருப் பீதாம்பரத்திலும் செல்ல ஒட்டாதே -திரு நாபீ கமலத்தின் நின்றும் வர வீர்த்து
இதுக்கு ஆச்ரயமான திரு வயிற்றிலும் போக ஒட்டாதே தான் மேலே விழுந்து ரஷித்து
தன் ஏற்றம் அடைய தோற்றும்படி -மத்த கஜம் போலே செருக்காலே பிசகி நின்று உலவா நின்றது –
என்னுடைய பெரிய
ஹ்ருதயத்தில் நின்று அழகு செண்டேறா நின்றது
ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே ஏக தேசத்திலே
வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீ மத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகடி தகடநா சக்திகளுக்கு அடையவளைந்தான் போலே
யிருக்கிற உதர பந்தம் தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே வெளியில் போலே
இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார்
————————————————————–
தம் திரு உள்ளம் திரு நாபீ கமலத்தில் சுழி யாறு படுகிற படியைக் கண்டு
திரு நாபீ கமலத்துக்கு ஆச்ரயமான திரு வயிறும் -இந்த திரு நாபீ கமலத்துக்கு
வெறும் ப்ரஹ்மா ஒருவனுக்கு இருப்பிடமான மேன்மையும் அழகும் அன்றோ உள்ளது –
இதுக்கு ஆச்ரயமான நம்மைப் பார்த்தால் –
பக்த முக்த நித்ய ரூபமான த்ரிவித சேதனருக்கும்
த்ரி குணாத் மகமாயும் சுத்த சத்வாதமகமாயும் -சத்வ சூன்யமுமாயும் உள்ள அசேதன வர்க்கத்துக்கும்
ஆரச்யமான மேன்மையும் -ஆஸ்ரிதர்க்கு கட்டவும் அடிக்க்கவுமாம் படி எளியோமான
சௌலப்ய நீர்மையையும் உடையோமான ஏற்றத்தாலே பட்டம் கட்டி அன்றோ நாம் இருப்பது
என்று தனக்கு திரு நாபீ கமலத்தில் உண்டான ஏற்றத்தையும் காட்டி -திரு நாபீ கமலத்தில்
ஆழங்கால் படுகிற் என்நெஞ்சை தன் பக்கலிலே வர இசிக்க -அத் திரு வயிற்றை ஆச்ரயமாகப்
பற்றி நிற்கிற திரு உதர பந்தநம் தன் பக்கலிலே வர ஈர்த்து மேலிட்டு நின்று தம் திரு உள்ளத்திலே
ச்வரை சஞ்சாரம் பண்ணுகிற படியைச் சொல்லுகிறார்-
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-
சதுர மா மதிள் சூழ் –
ஈஸ்வரன் நேர் நிற்கவும் எதிரிடப் பண்ணின மதிள் இறே
இவ்வழகையும் அரணையும் விஸ்வசித்து இறே பையல் பெருமாளோடே எதிரிட்டது
இது தானிட்ட மதிள் என்று அறிந்திலன்
அரணுக்கு உள்ளே இருக்கச் செய்தே பெருமாளோடே எதிர்க்கையாலே இது தான் அழிகைக்கு உடல் ஆய்த்து –
அவ்வரணை விட்டுப் பெருமாள் தோளையே அரணாகப் பற்றின ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
கச்த ஏவ வ்யதிஷ்டத -என்று ஆகாசத்திலே நிலை பெற்று நின்றான் இறே-
ஓத வண்ணன் –
ராவண வதம் பண்ணி -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முடி கொடுத்து -க்ருதக்ருத்யனாய்
ப்ரஹ்மாதிகள் புஷ்ப வ்ருஷ்டியும் ஸ்தோத்ரமும் பண்ண -வீர ஸ்ரீ தோற்ற
ஸ்ரமஹரமான வடிவோடே நின்ற நிலை
ஓத வண்ணன் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறது ஆகவுமாம் –
இத்தால் பிரதிகூலரை அம்பாலே அழிக்கும் -அநுகூலரை அழகாலே அழிக்கும் -என்கை-
ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ச்யாமளமான
திருமேனியை உடையவன் –
மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மியுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ் ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே –
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள்
காலப் பண்கள் பாட -பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள்
ந்ருத்தம் பண்ண -இக்கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய
திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை
வெளி இடா நின்ற திரு வயிற்றில் -திரு உதர பந்தம் -என்று திரு நாமத்தை உடைத்தான
திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப்
பண்ணா நின்றது
இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –
———————————————————
ஸ்ரீ நாராயண சப்தார்தம் உள்ளீடாகப்
பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால் நிகரில்லாத திரு மார்பை அனுபவிக்கிறார் –
அந்த திரு வயிற்ருக்கு ஒரு கால விசேஷத்திலே காதா சித்கமாக சகல அண்டங்களையும்
வைத்ததால் உண்டான மதிப்பும் -ஒரு கால் யசோதைப் பிராட்டி கட்ட அத்தால் வந்த
சௌலப்யமும் இறே இருப்பது -அப்படி யன்றே திரு மார்பு –
ஸ்ரீ வத்ஸ ஸம்ஸ்தாந தரமநந்தேச சமாச்ரிதம் -ப்ரதாநம் –என்றும்
ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ காலமும் சேதன அசேதனங்களை ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப முகத்தாலே தரித்துக் கொண்டு இருக்கிற
பெரிய மதிப்பையும் -அவனுடைய ஸ்வரூபாதி களுக்கு நிரூபக பூதையாய் -நீர்மைக்கு
எல்லை நிலமாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற
ஏற்றத்தையும் உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலையை தரித்துக் கொண்டு இருக்கிற
ஆகாரத்தையும் உடைத்தாய் –
அக்கு வடமுடுத் தாமைத்தாலி பூண்ட வனந்த சயனன் -என்கிறபடியே யசோதை பிராட்டி
பூட்டின ஆபரணங்களையும் உடைத்தாய் இறே இருப்பது-
ஆகையாலே –
அந்த திரு மார்பானது -திரு வயிற்றில் காட்டில் தனக்கு உண்டான ஆதிக்யத்தையும்
சௌலப்யத்தையும் திருவாரம் உள்ளிட்ட ஆபரண சேர்த்தியால் வந்த அழகையும் உடையோம் நாம் அன்றோ –
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-
பாரமாய –
மலக்கு நா வுடைய
நம்மாழ்வாரும் வகை சொல்ல மாட்டாதே -தொன் மா வல் வினைத் தொடர் -என்று திரளச்
சொன்னாப் போலே -இவரும் பாரமாய -என்கிறார் -கர்மத்தின் உடைய கனத்தினாலே
தன் வாரமாக்கி வைத்தான் –
தான் -என்றால் பஷ பதிக்கும்படி பண்ணினான் –
என் கார்யம் தனக்கு கூறாக என் பேரிலே தனக்கு இருப்பென்று தன் பேரிலே
எனக்கு இருப்பாக்கின படி –
வைத்ததன்றி –
இந்த நன்மைகளுக்கு மேலே –
என்னுள் புகுந்தான் –
பின்னையும் தன் ஆற்றாமையாலே விடாய்த்தவன் தடாகத்தை நீக்கி உள்ளே
முழுகுமா போலே -என் உள்ளம் புகுந்தான் -என் ஸ்வரூப ஜ்ஞானம் குலையாதபடி என் நெஞ்சிலே வந்து புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –
அநாதி காலம் இழந்த வஸ்துவைப் பெறுகைக்கு அகர்ம வச்யனான ஈஸ்வரன் தானே –
அவதார ஷேத்ரமான அயோத்யையும் விட்டு –
ஆஸ்ரீதன் இருப்பிடமான லங்கையிலும் போகாதே –
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டிலே –
அதி கோரமாய் -அதி மஹத்தாய் இருப்பதொரு தபஸை பண்ணினானோ -அறிகிலேன்
அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ் ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் –
திரு வார மார்பதன்றோ –
பெரிய பிராட்டியாரையும் ஹாரத்தையும் உடைத்தான -மார்வன்றோ
தமக்கு பற்றாசாகத் தாய் நிழலிலே ஒதுங்குகிறார்
சிறையில் இருந்தே சேர விடப் பார்க்கிறவள்
மார்பிலே இருந்தால் சேர விடச் சொல்ல வேணுமோ
ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –
அடியேனை ஆள் கொண்டதே –
ராஜ்யம் இழந்த ராஜ புத்ரனை அழைத்து முடி சூட்டுமா போலே –
அழகிலே அழுந்தின என்னை -அவன் குணம் கிடீர் பிழைப்பிததது -என்கிறார் –
அழகிலே அழுந்தினாரை குணத்தைக் காட்டிப் பிழைப்பிக்கலாம் –
குணத்திலே அழுந்தினார்க்கு குணமே வேணும் –
நீரிலே அழுந்தினார்க்கு நீரை இட்டுப் பிழைப்பிக்க விடும் இத்தனை யன்றோ உள்ளது
இத்தால் -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தான் என்றபடி –
தம்மையையும் தம் உடைமையையும் நமக்கு ஆக்கினவர்க்கு
நம்மையையும் நம் உடைமையையும் அவர்க்கு ஆக்கின முறை
முதுகு தோய்த்தோம் இத்தனை யன்றோ என்று எல்லாம் செய்தும் தான் ஒன்றும் செய்திலனாய்
இறே அவன் இருப்பது –
அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -என்னக் கடவது இறே –
அறியேன் -என்றவர் தாமே
சர்வதா இக் கனத்த பேற்றுக்கு ஒரு ஹேது வுண்டாக வேணும் என்று விசாரித்து
அறிந்தேன் என்கிறார் மேல் –
அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ வடியேனை யாட் கொண்டதே –
இவருடைய விரோதியைப் போக்கி
உஜ்ஜீவிப்பைக்கைக்காக வாய்த்து இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
இவருடைய பேறு தன்னதாம்படி தாம் பண்ணுகைக்கு உண்டான ப்ராப்தியைச் சொல்லுகிறது
இப் பேற்றுக்கு ஆற்றங்கரையைப் பற்றிக் கிடந்து தபஸ் பண்ணினானும் அவனாய் இருந்தது –
இல்லையாகில் எனக்கு இக்கனவிய பேற்றுக்கு வேறு உபாயம் உண்டாக மாட்டாதே-
அடியேனை –
ஞான ஆனந்தங்களுக்கு முன்னே சேஷத்வம் பிரதம நிரூபகமான என்னை யன்றோ-
ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –
முடிக்கு உரியவனை முடி சூட்டுமா போலே -என்னுடைய
ஸ்வரூப -விரோதியையும் ஆஸ்ரயண விரோதியையும் -உபாய விரோதியையும்
உபேய விரோதியையும் -போக விரோதியையும் -போக்கி
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது –
தன்னுடைய மேன்மையையும் அழகையும் -காட்டி -என்னை அநந்யார்ஹமாம் படி பண்ணி
பெரிய பிராட்டியாரை இடுவித்து -ந கச்சின்நா பராத்யதி -என்னப் பண்ணி
பெரிய பெருமாளை யிடுவித்து -என்னுடைய விரோதி பாபங்களை சவாசனமாகப்
போக்குவித்து -அவர் தம்முடைய போக்யதையை என் நெஞ்சிலே பிரகாசிப்பித்துக் கொண்டு
புகுரும்படி பண்ணி என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது அந்தத் திரு மார்பு அன்றோ
என்னைப் போலே இருப்பார் -வேறே சிலரைத் திருத்தி அடிமை கொள்ளுகைக்கு
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்வும்
மரகத வுருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும் ஆய சீர்
முடியும் தேசும் -என்று தாம் கிடக்கிற ஊருக்கு அலங்காரமான ஆற்றழகு தொடங்கி
காட்ட வேண்டிற்று -எனக்கு மார்பு ஒன்றுமே யமைந்தது –
ஈஸ்வரன் உடைய
இரக்கத்தின் ப்ராதான்யத்திலே தாத்பர்யமாகவுமாம்
இப்படி ஷூத்ரனான என் திறத்தில் இறங்கினவன் தான் –
தேற ஒண்ணாத -திருவில்லாத் தேவரில் ஒருவன் அல்லன் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பன் -என்னும் -இடத்தையும் –
சேஷபூதரான தமக்கு -ஸ்ரீ தரனே கைங்கர்ய பிரதிசம்பந்தி என்னும் இடத்தையும்
திறம்பாத சிந்தைக்கு சிக்கெனக் காட்டிக் கொடுக்கிறார் –
அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம்படி -சர்வ சாஹிஷ்ணுவாய்க் கொண்டு -கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சௌலப்ய காஷ்டையோடு விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான
பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும்
அழகு வெள்ளத்துக்கு அணை கோலினால் போலே இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான
திரு மார்வன்றோ ஸ்வா பாவிக சேஷித்வ அநுபவ ரசிகனாய்
அதுக்கு மேலே குணைர் தாஸ்ய முபாகதனுமான என்னை ஸ்வரூப அநு ரூபமான
ஸ்தோத்ராதி சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய் நின்றது –
இப்பாட்டில்
பதங்களின் அடைவே
நாராயண சப்தத்தில் விவஷிதமான அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
இஷ்ட -ப்ராபகத்வமும் –
உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் -படியும்
நித்ய -கிருபையும்
உபாயத்துக்கு பிரதானமான சௌலப்யமும்
ப்ராப்யத்துக்கு பிரதானமான ஸ்வாமிதவமும்
சர்வ அநு குணமான ஸ்ரீயபதித்வமும்
பூஷண அஸ்த்ர ரூபங்களாக புவனங்களை தரிக்கிற போக்ய தமமான விக்ரஹ யோகமும்
நார சப்தார்த்தமான தாஸ பூதன் ஸ்வரூபமும்
தாஸ்ய பலமாக பிரார்த்திக்கப்படும் கைங்கர்யமும்
அனுசந்தேயம்
————————————————————–
இப் பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-
சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற திருக் கழுத்தானது-
இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும்
திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –
இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார்
ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே -அவ் வாபரணங்கள் அழுத்த
அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும்
நாம் அல்லோமோ -அது வும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட
மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ –
என்றாப் போலே தன்னுடைய ஆபரண சோபையையும் -யௌவனத்தையும் -ஆபன் நிவாரகத்வத்தையும்
காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வாச நீர் கொடுத்தவன் -என்கிறபடியே
தீர்த்த சேவையாலும் -தன் தபசாலும் -தன் சக்தி மத்தையாலும் போக்க ஒண்ணாத வலிய துயரை
பிராட்டி புருஷாகாரமாக தன் மார்பில் வாச நீரால் போக்கினது -தம்முடைய துயரை போக்கினதுக்கு
நிதர்சநமாய் இருக்கையாலே அவனை உதாஹரணம் ஆக்குகிறார் –
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம் –
அவனுடைய துயரத்தைப் போக்கினாப் போலே என்னுடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-
பெரிய பெருமாளுக்கு ஆபரணமாய் ஊருக்கும் ஆபரணமாய் இருக்கும் சோலை
சோலைக்கு ஆபரணமாய் இருக்கும் வண்டுகள் –
வண்டுகளுக்கு ஆபரணமாய் இருக்கும் அழகிய சிறகு -என்கை
உண்ட கண்டம் -சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருக்குமா போலே
இவற்றின் உடைய ரஷணம் தனக்கு தாரகமாய் இருக்கிறபடி
இப்பாட்டால் –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொல்லுகிறபடியே சர்வ வ்யாபகத்வ சக்தியும் உண்டு என்கிறார் –
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-
அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்சாசதகோடி விச்தீரணையான
மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –
ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம்
இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனியே சொல்லுகை போக்யமாய் இருக்கையாலே
பெரிய பெருமாள் திருக் கழுத்தைக் கண்டால் பிரளய ஆபத்தில் ஜகத்தை எடுத்துத்
திரு வயிற்றிலே வைத்தமை தோற்றா நின்றது ஆய்த்து –
அடியேனை உய்யக் கொண்டதே
முன்பு பெற்ற கைங்கர்யத்துக்கு விச்சேதம் பிறவாதபடி நோக்கிற்று
என்னை சம்சாரத்தில் ஒரு நாளும் அகப்படாதபடி பண்ணிற்று –
இப்பாட்டால்
ஆபத் ஸகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார்
—————————————————-
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-
கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7-
கையினார் சுரி சங்கனலாழியர்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும்
ப்ரதி பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம்
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நிவ்ய தாரயத் -என்றும் –
தீய அசுரர் நடலைப்பட -முழங்கும் என்றும் சொல்லுகிறபடியே விரோதி வர்க்கத்தை
தன் த்வநியாலே தானே நிரசிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
கருதுமிடம் பொருது -என்கிறபடியே விரோதி வர்க்கத்தை -கூறாய் நீறாய் நிலனாய் –
என்கிறபடியே அழியச் செய்யும் திரு வாழியையும் தரித்துக் கொண்டு இருக்கிறது
என்னுடைய அறுக்கலறாப் பாபங்களை போக்குகைக்கு அன்றோ –
திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக்கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –
நீள் வரை –
மலையை கடலை ஒப்பாக சொல்லும் இத்தனை இறே
நீட்சி போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -அதுக்கு மேலே ஒப்பனை அழகு –
துளப விரையார் கமழ் நீண் முடி -பரிமளம் மிக்கு இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடையருமாய்
எம்மையனார் -உறவு தோற்றுகை -எனக்கு ஜனகரானவர்
அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-
துளப விரையார் கமழ் நீண் முடி –
பெரியவர்கள் கார்யம் செய்தவன் உம்முடைய கார்யம்
செய்யப் புகுகிறானோ என்ன -வெறும் ப்ரஹ்ம ருத்ராதி களுக்கே சேஷி என்று அன்றே அவன்
முடி கவித்து இருக்கிறது -பிசு நயந் கில மௌளளி -பதிம் விச்வச்ய -என்றும் சொல்லுகிறபடியே
உபய விபூதி நாதன் அன்றோ –
துளப விரையார் கமழ்-
சர்வ கந்த வஸ்துவுக்கு தன் கந்தத்தாலே மணம் கொடுக்க வற்றாய்
மேன்மைக்கு உடலாய் இருக்கிறபடி –
நீண் முடி -என்னளவும் வந்து என்னை விஷயீ கரித்த முடி –
எம்மையனார் –
ருத்ரனனுக்கு பௌத்ரனாய் இருப்பதொரு பந்த விசேஷம் உண்டே -உமக்கு அது
இல்லையே என்று சொன்னதுக்கு உத்தரம் சொல்லுகிறார் -அவனுக்கு பௌத்ரத்வ நிபந்தநம்
ஒன்றுமே யன்றோ உள்ளது -மாதா பிதா ப்ராதா -இத்யாதிப் படியே சர்வவித பந்துத்வமும்
உள்ளது எனக்கே யன்றோ –
எம்மையனார் –
என்னைப் பெற்ற தமப்பனார்
பிரஜை கிணற்றிலே விழுந்தால் கூடக் குதிக்கும் தாயைப் போலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்கிற பொது வன்று
திரு வரங்கத்துள் ஓங்கும் -இத்யாதிப் படியே பெரிய பெருமாள் தாமே என்கிறார்
அணி அரங்கனார் –
அலங்காரமான கோயிலிலே வந்து சாய்ந்தவர்
ஆபரணம் ஆனது பூண்டவனுக்கு நிறம் கொடுக்கிறது -இவ் ஊரும் ரஷகனுக்கு நிறம்
கொடுக்கிறது ஆகையாலே சொல்லுகிறது
அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-
செய்ய வாய் –
ஸ்திரீகளுடைய பொய்ச் சிரிப்பிலே துவக்குண்டார்க்கு இச் சிரிப்பு
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ
திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –
ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க
ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்
மாயனார் –
அங்கன் அன்றிக்கே கிடந்ததோர் கிடைக்கை கண்டும் -என்கிறபடியே இன்று
நாமும் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே -மல்லாந்து
என்ன ஒண்ணாதே யிருக்கிற ஆச்சர்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்
மாயனார் செய்ய வாயையோ என்னை சிந்தை கவர்ந்ததுவே
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே பிற்காலிக்கிற என்னை -ஸ்வா பாவிக சௌந்தர்யத்தையும்
போக்யதையும் உடைய திருப்பவளமானது தன்னுடைய் ஸ்மிதத்தைக் காட்டி
அருகே சேர்த்துக் கொண்டு என்னுடைய மனஸ்ஸை அபஹரித்தது
என்னை சிந்தை கவர்ந்ததுவே -உழக்கைக் கொண்டு கடலின் நீரை யளக்கப் புக்கு
அது தன்னையும் பறி கொடுத்தேன்
என்னை -கல்லை நீராக்கி -நீரையும் தானே கொண்டது
இப்பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார் –
————————————————————-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8
செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும்
நாம் அல்லோமோ -மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற
வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது -ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ
அக வாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ -அது கிடக்க யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ -அதுக்கு மேலே
புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் –
புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது நம்மோட்டை
சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –
செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-
பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்க தேடின ஹிரண்யனை
தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே தமோ குணம் ஹிரண்யன்
என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது அப்படியே இருக்கிறவனை -அங்கு அப்பொழுதே
அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே -ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை
கிழித்துப் பொகட்டான் என்கிறார்
பரியனாகி வந்து –
பகவத் குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே சேஷத்வத்தை அறிந்து மெலிந்து இராமே –
சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –
பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை -ஊட்டி இட்டு வளர்த்த
பன்றி போலே உடம்பை வளர்த்தான் இறே –
வந்த –
இப்போது தாம் வயிறு பிடிக்கிறார்-
அவுணன் உடல் கீண்ட -நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட
உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் -குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின
பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-
பிரான் –
ப்ரஹ்லாதனுக்கு எளியனான நிலையும் ப்ரஹ்மாதிகளுக்கு அரியனான நிலையும்
இரண்டும் தமக்கு உபகாரமாய் இருக்கிறது
அரங்கத்தமலன் –
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே வந்த சுத்தி —
ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த சுத்தி ஆகவுமாம்
முகத்து –
அவனுடைய முகத்து
கரியவாகி –
விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை-
இப்படி தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் உமக்கு எளியனாய் இருக்கைக்கு அடி என் என்னில் –
ஆதி –
காரண பூதன் -பஹூ புத்ரனானவன் விகல கரணனான புத்திரன் பக்கலிலே போர
வத்சல்யனாய் இருக்குமா போலே -இவனும் ஜகத் காரணனாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய அஞ்ஞான அசக்திகளை திரு உள்ளம் பற்றி என்னளவிலே போர வத்சல்யனாய் இருக்கும் –
ஆதி –
தான் முற்கோலி உபகரிக்குமவன்-
அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தமக்கு உபகரித்த படியை நினைத்து பிரான் என்கிறார் அல்லர்
தேவர்களுக்கு கிட்ட அரியனாய் இருக்கச் செய்தே ப்ரஹ்லாதனுடைய விரோதியை முற் பாடனாய்ச்
சென்று போக்கின உபகாரத்தை நினைத்துச் சொல்லுகிறார்
ஆதிப் பிரான் –
ப்ரஹ்லாதன் -சர்வ காரணம் -என்ன ஹிரண்யன் அதுக்கு பொறாமல் –
இந்தத் தூணில் உண்டோ அந்த காரண பூதன் -என்று துணைத் தட்டி கேட்க –
ப்ரஹ்லாதனும் சர்வ அந்தராத்மான் காண் அவன் -ஆகையால் இதிலும் உண்டு -என்ன –
அங்கு அப்பொழுதே -என்கிறபடியே அவன் தட்டின தூணிலே வந்து நரசிம்ஹ ரூபியாய் தோன்றி
அவன் தட்டின கையைப் பிடித்து -பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்பிடந்தான் -என்கிறபடியே
அவனைக் கதுப்பிலே அடித்து -அவன் மார்பைக் கிழித்து ப்ரஹ்லாதனுடையப்ரதிஜ்ஞா வாக்யத்தை க்ரயம் செலுத்தி
தன்னுடைய காரணத்வத்தையும் ஈச்வரத்வத்தையும் நிலை நிறுத்தின உபகாரத்தைப் பற்றி சொல்லுகிறார் ஆகவுமாம் –
அரங்கத்தம்மான் –
நரசிம்ஹ வ்யாவ்ருத்தி -அதாவது -ஒரு கால விசேஷத்திலே -ஒரு தூணின்
நடுவே வந்து தோன்றி ப்ரஹ்லாதன் ஒருவனுக்கு வந்த விரோதியைப் போக்கின வளவு இறே அங்கு உள்ளது –
இங்குக் கிடக்கிற கிடை-எல்லாக் காலத்திலும் எல்லாருடைய விரோதிகளையும் போக்குகைக்கு
அணித்தாக வந்து இரண்டு தூணுக்கும் நடுவே கிடக்கிற கிடையாகையாலே வ்யாவ்ருத்தமாய் இருக்கும் இறே-
புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடம் உடைத்தாய் இருக்கை
மிளிர்ந்து –
திரை வீசிக் கரையாலும் வழி போக ஒண்ணாது இருக்கை
செவ்வரி யோடி –
ஸ்ரீ ய பதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை
நீண்ட -செவி யளவும் அலை எறிகை
அப்பெரிய வாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப்பெரிய வாய கண்கள் -என்கிறார் –
இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி இருக்கை –
ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் ஸ்ரீ பட்டர் -அதாவது –
ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ஸ்ரீ ராம ஸ்ரீ க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண் இரண்டாய்-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ -இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக
வேண்டாவோ என்று பார்த்து -எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ஸ்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே
போவதாக முற்பட அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள் அளவும் நீண்டு இருக்கிறபடி –
அப்பெரியவாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிகே இருக்கையாலே
அப்பெரியவாய கண்கள் -என்கிறார் –
பேதைமை செய்தனவே –
ஸ்ரீ ராம சரம் போலே முடிந்து பிழைக்க வொட்டுகிறன வில்லை –
மதி எல்லாம் உள் கலங்கும்படி பண்ணிற்று –
என்னைப் பேதைமை செய்தனவே -அவன் அக் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –
என்று இருந்த கடாஷங்களுக்கு இலக்கானார்க்குத் தெளிவைப் பிறப்பிக்க கடவதாய் இருக்க
எனக்குள்ள அறிவு தன்னையும் அழித்தது -இனி தாமரைக் கண்களால் நோக்காய் -என்பார்க்கு
எல்லாம் அழகிதாக ப்ரார்த்திக்கலாம்
என்னைப் பேதைமை செய்தனவே -இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –
இத்தால் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே வுண்டு என்கிறார் –
————————————————————-
ஊரழி பூசல் போலே திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-
இவர் கலம்பகன் மாலை சூடுவாரைப் போலே இந்த அவயவங்களுக்கு
ஆச்ரயமான நம்மை அவற்றோடே கூட அனுபவிக்க பெற்றிலரே –
இனி மற்றை ஆழ்வார்களைப் போலே பரக்க பேசி நின்று அனுபவிக்கவும் அல்லர்
ஆன பின்பு இந்த அவயவங்களோடும் ஆபரணங்களோடும் சேர்ந்த சேர்த்தியால் வந்த அழகும்
ஸ்வாபாவிக சௌந்தர்யத்தால் வந்த அழகுமான நம்முடைய சமுதாய சோபையை
இவரை அனுபவிப்பிக்க வேணும் என்று பார்த்து -ராஜாக்கள் உறு பூசலாய் கொலையிலே
பரந்து தங்களுடைய சதுரங்க பலத்தையும் சேர்த்துக் கொண்டு அணி அணியாகச் சிலர் மேலே ஏறுமா போலே –
இந்த திரு மேனியானது -அவயவங்களையும் -ஆபரணங்களையும்
சேர்த்துக் கொண்டு தன்னுடைய சமுதாய சோபையைக் காட்டி -உய்விட மேழையர்க்கும்
அசுரர்க்கும் அரக்கர் கட்கும் எவ்விடம் -என்று கொண்டு மேல் விழுந்து தம்முடைய
திரு வுள்ளத்தைக் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள தாம் அதிலே யகப்பட்டு நெஞ்சு இழிந்த படியைச் சொல்லுகிறார் –
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-
ஒரு பாலகனாய் –
யசோதாள் தநந்தயனான ஸ்ரீ கிருஷ்ணனனும் முரணித்து இருக்கும்படி
இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும்
பிரளயத்தில் தன் அகடிதகடநத்தோடு ஒக்கும் -என்னை அகப்படித்தன படியும்-
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து இந்த ஜகத்தை அடைய ரஷித்தருள அந்த அகடிதகடநா
சமர்த்யமுடைய வனுக்கு என்னுடைய விரோதியைப் போக்கி எனக்கு ஜ்ஞானத்தைப்
பிறப்பித்த விது சால அகடிதமாய் இருந்ததோ என்கிறார்-
அரங்கத்தரவினணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்கக் கிடக்கிற படி
அந்த ஆலின் இலையில் நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை காணும்
அந்த உறவு ஒன்றுமே இவர் அச்சம் கெடுக்கிற வித்தனை காணும்
இப்ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான் என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்படி கிடக்கிற விடம்
அரவின் அணையான் –
பிரளயத்தில் தன் வயிற்றில் புகா விடில் ஜகத்து ஜீவியாதது போலே
சம்சாரிகள் தன் முகப்பே விழியா விடில் தனக்குச் செல்லாதான படி-
நிறை கொண்டது என் நெஞ்சினையே –
எனக்கு அகவாயில் காம்பீர்யத்தைப் போக வடித்தது
ஐயோ –
பச்சைச் சட்டை இட்டுத் தனக்கு உள்ளத்தைக் காட்டி எனக்கு உள்ளத்தை அடைய கொண்டான் –
நான் எல்லாவற்றையும் அநுபவிக்க வேணும் என்று இருக்க எனக்கு
அநுபவ பரிகரமான என் நெஞ்சைத் தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே -ஐயோ -என்கிறார் –
ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித்தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த
என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே முன்புற்ற பூர்ணத்வ் அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை
கழித்து இப்பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று-
இப் பாட்டால் வட தள சயநமும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு -என்கிறது –
—————————————————————————-
நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே –
தம்முடைய நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே ஆந்த ராளிகராய் –
உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி
அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-
அந்த விபீஷணன் ராஜ்ய காங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற இளைய பெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிச்ரேஷ்டரான மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக
அவரும் எப்போதும் பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று
உபதேசிக்கக் கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர
கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே பெரிய பெருமாள் பாடே
எல்லாம் இல்லையோ -ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை
அனுபவிக்க ச்ரத்தை யில்லை -எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10-
கொண்டல் வண்ணனை –
தாபத் த்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் –
அத்ரௌசயாளுரில சீதள காளமேக என்கிறபடியே வர்ஷூகமான காளமேகம் மேகம் போலே
இருக்கிற திரு நிறத்தை வுடையவனை –
பன்னீர்க்குப்பி போலே உள்ளுள்ளவை எல்லாம் புறம்பே நிழல் இட்டபடி-
கொண்டல் வண்ணனை-
தம்முடைய பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களை இவர் அனுபவிப்பதாக திரு உள்ளத்தில்
பாரிக்கிறபடியை அனுசந்தித்து இது என்ன ஔதார்யம் என்று அந்த ஔதார்ய குணத்தை
நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் –
அங்கன் இன்றிக்கே –
சாம்சாரிகமான தாப த்ரயத்தாலே விடாய்த்த விடாய் தீரும்படியாக
அத்ரௌ சயாளு ரிவ சீதள காள மேக -என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலே
இருக்கிற நிறத்தை உடையவன் -என்கிறார் ஆதல்
ஸ்ரமஹரமான வடிவை நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் ஆதல் –
வண்ணம் -என்று ஸ்வபாவம் ஆதல் -நிறம் ஆதல் –
நம் ஆழ்வாரும் -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி வுய்ந்தவன் -என்றார் இறே-
கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப் பவளத்தை உடையவனை –
சக்ரவர்த்தித் திருமகன் ஆகில் வெண்ணெய் உண்ண ஒட்டார்கள் என்று கருத்து –
கோவலன் –
ஆபிஜாத்யம் -பெருமாளுக்கு கட்டுண்பது அடி வுண்பதாகக் கிடைக்குமோ –
வெண்ணெய் வுண்ட வாயன் -களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும்-
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே -கொண்டல் வண்ணனாய் என்னுள்ளம் கவர்ந்தானை
யசோதைப் பிராட்டி வுடைய நெஞ்சிலே பண்ணின ச்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை
அந்த திருவாய்ப்பாடியிலே பெண்கள் உறிகளிலே வெண்ணெயை வைத்து கள்ளக்
கயிறு உருவி இட்டு வைத்துப் போவர்கள் அந்த உறிகளின் குறி அழியாது இருக்க
அந்த வெண்ணெய்களை வெறும் தரை யாக்கினாப் போலே யாய்த்து -அரங்கம் தன்னுள்
கள்வனார் நான் குறி அழியாது இருக்க என்னுடைய சிந்தையை அபஹரித்த படி-
என் உள்ளம் கவர்ந்தானை –
வைத்த குழி அழியாது இருக்க -வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினாப் போலே
என்னுடைய சரீரம் குறி அழியாது இருக்க என்னுடைய மனஸை அபஹரித்தான் –
கலம் இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து -இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி –
என் உள்ளம் கவர்ந்தானை-என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை
யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ச்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை –
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே
யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-
கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர்மமத்வம் தோற்றுகிறது -இப்படி
பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர்மமத்தோடே சேர்ந்த இம்மமகாரம் அநபிஜ்ஞர் மமகாரம் போலே தோஷம் ஆகாது
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ யபதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மேனியிலே ஸ்ரீ திருமலை முதலாக ஸ்ரீ கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ஸ்ரீ ராம ஸ்ரீ க்ருஷ்ண ஸ்ரீ வாமன ஸ்ரீ வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப் போலே –
பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
அம்ருத பானம் பண்ணினாரை பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ –
இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
வடிவில் பசை இல்லை என்று போகவோ –
சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
மேன்மை இல்லை என்று போகவோ –
சௌலப்யம் இல்லை என்று போகவோ –
போக்யதை இல்லை என்று போகவோ –
அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ –
இப்பாட்டில் கிருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டு என்கிறார் –
—————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .