ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –
ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 -10-9 –
பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-3-7-
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை–3-5-5-
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-
கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –
எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே –5-2-3-
—————————-
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே––நாச்சியார் –11-8-
————————
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே-பெருமாள் திருமொழி -2-3-
———–
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்தது முன் கடைந்த பெற்றியோய் –திருச்சந்த விருத்தம்–28-
——————————
ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -திருச்சந்த விருத்தம்-114-
—————————-
வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் -ஸ்ரீ பெரிய திருமொழி–1-1-4-
ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க —
என் தலைவன் –வதரியாசசிராமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-
ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள – (வரம் கொள்ள -)
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவாய் நினைவார் என் நாயகரே –2-6-3-
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செலும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின்னாகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவலையம் கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்து இருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-1-
இவள் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-2-
என் தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-3
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-4-
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-5-
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-6-
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-7-
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-8-
வன முலையாளுக்கு என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-9-
இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை –பாடல் வல்லார் பழ வினை பற்று அறுப்பாரே -2-7-10-
இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –திரு வயிந்திர புரமே-3-1-1-
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-
வையணைந்த நுதிக் கொட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம வின்னகரே சேர்மினீரே -3-4-3-
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் —
நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே — –4-4-8-
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை—நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-
மண்ணிடந்து ஏனமாகி –நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -–4-6-2-
வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8–
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை —
தவமுடையார்கள் ஆள்வர் இக்குரை கடலுலகே –4-10-10-
மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
வானும் மண்ணும் நிறையைப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்தந் தன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-
ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய பெருமானைத் தன்னடியார் மனத்து என்றும்
தேனாகியமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-3-
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-
பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-
நரனே நாரணனே திரு நறையூர் நம்பி எம்பெருமான் உம்பராளும்
அரனே ஆதி வராகம் முனனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-4-
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திருவுருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய எம்மீசன் காண்மின் -7-8-4-
பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் -7-8-10-
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் –குறுங்குடியே –9-6-3-
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-
——————————————-
கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!—ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4-
——–
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்–20–
—————
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரமெய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-
ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-
சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என்னருகில் இலானே –1-9-2-
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே -2-8-7-
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–4-2-6-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்–4-5-10-
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –5-6-1-
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவர மங்கலத் தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்தருளே –5-7-6-
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-
ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்கு றைந்தது கடைந் தடைத் துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-
என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-
தானே உலகெல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே––10-5-3-
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என்னன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -10-10-7-
——–
இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-2-
பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ யளந்த மண் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-9-
என்னுள்ளம் ஓவாது எப்போதும் —கேழலாய் பூமி இடந்தானை ஏத்தி எழும் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-25-
இடந்தது பூமி –பேரோத வண்ணர் பெரிது –ஸ்ரீ முதல் திருவந்தாதி-39-
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் -உராய் உலகளந்த ஞான்று -வராகத்
தெயிற்றளவு போதாவாறு என் கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி -ஸ்ரீ முதல் திருவந்தாதி-84
ஊனக் குரம்பையின் உள் புக்கிருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள் தோறும் ஏனத்துருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-91-
———————————————————————————–
நீ யன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே நீ யன்று உலகிடந்தாய் என்பரால்
நீ யன்று காரோதம் முன் கடைந்து பின்னடைத்தாய் மா கடலை பேரோத மேனிப்பிரான் -இரண்டாம் திருவந்தாதி–30-
பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும் குரா நற் செழும் போது கொண்டு வராகத்
தணி யுவன் பாதம் பணியுமவர் கண்டீர் மணியுருவம் காண்பார் மகிழ்ந்து –இரண்டாம் திருவந்தாதி-31-
மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்நெஞ்சே இரு –இரண்டாம் திருவந்தாதி–36
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து -இரண்டாம் திருவந்தாதி-47
——————————————————————–
புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——மூன்றாம் திருவந்தாதி–45-
கேழலாய் மீளாது மண்ணகலம் கீண்டு அங்கோர்
மாதுகந்த மார்வதற்கு பெண்ணகலம் காதல் பெரிது –மூன்றாம் திருவந்தாதி-54
——————————————
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்—நான்முகன் திருவந்தாதி -70-
வகையால் மதியாது மண் கொண்டாய்
—————————-
நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே
பொலிந்த எமக்கு எல்லா விடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப்பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலங்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -திரு விருத்தம் -39-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும்கேழ்பவருளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -திரு விருத்தம் -45-
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத் துருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –99-
—————————————-
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் –ஸ்ரீ திருவாசிரியம்–6-
—————————————————
யாமே யாருவினையோம் செயோம் எண் நெஞ்சினார்
தானே அனுக்கராய்ச் சார்ந்து ஒளிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு -பெரிய திருவந்தாதி -7-
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடமுன் படைத்தான் என்பரால் -பாரிட
மாவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகாவாலவை -42-
—————————————–
ஏழ உலகு எயிற்றினில் கொண்டனை –திருவெழு கூற்றிருக்கை
——————————-
மன்னிவ் வகலிடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை -பெரிய திருமடல்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply