ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி -41-61-பாசுரங்கள்–ஸ்ரீ உ -வே -திரு நகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் இயற்றி அருளிய திவ்ய பிரபந்தம் –

அருங்கலை யார் களி யாசான் அடியின்று அருள் புரியின்
நெருங்கலை யார் கலி செய்ய இனி யருள் நேடிடிலோ
மருங்கலை யார்கலி வாய்ந்து வழிப்பட வல்லுநர் யார்
இருங்கலை யார்கலி காயமதி யாண்டான் இதயமிதே –41-

அருங்கலை யார் களி யாசான் -அருமைக் கல்விக் கடலான ஆசார்யன்
அடியின்று -காரணம் இன்றி -நிர்ஹேதுகமாக
அன்றி இன்றி என் வினை எஞ்சிகரம் தொடர்பினுள் உகரமாய்வரின் இயல்பே -நன்னூல் -173- எனபது காண்க
அருள் புரியின்
நெருங்கலை யார் கலி செய்ய –கலி நெருங்குலை செய்ய யார் -கலி புருஷன் நெருங்க முடியாது -என்றபடி -நெருங்கலை -நெருங்குதலை
இனி யருள் நேடிடிலோ-அநு வர்த்த நத்தால் ஏற்படும் கிருபையைக் காணக் கருதிடிலோ –
மருங்கலை யார்கலி வாய்ந்து -மருங்கு அலையார் கலி வாய்ந்து -குருவின் பக்கத்தில் -பிரிந்து போகாதவர்களாய்-உத்சாஹம் வாய்ந்து
வழிப்பட வல்லுநர் யார் -அநு கூலராய் குருவிற்கு வசப்பட்டு நடப்பதற்கு சாமர்த்தியம் உடையவர்கள் யார் -எவரும் இல்லை -என்றபடி
இருங்கலை யார்கலி காயமதி -இரும் கலை ஆர் -மகா சாஸ்திர ஞானம் நிறைந்த -கலிகாய்-பாபத்தைப் போக்கும் -மதி -புத்தியை உடைய
யாண்டான் இதயமிதே –இதயம் -திரு உள்ளம் -ஆசான் அடி இன்றி அருள் புரியின் கலி நெருங்கலை ல்செய்ய யார் –
இனி அருள் நேடிடிலோ வல்லுநர் யார் -இது ஆண்டான் இதயம் -என்று முடிக்க –

ஆசார்யானது நிர்ஹேதுக கிருபைக்கு ஆலையின் கலியினாலும் நம்மைப் பாதிக்க முடியாது -இனி நாமாக ஆசார்யானது கிருபையைப் பெற
முற்படின் அது ஆராலும் ஆகாததே -ஆதலின் -சரம பர்வ நிஷ்டர்ராகிய மதுரகவி காட்டிய வழியே நமக்கு ஏற்றது எனபது –
ஆண்டான் திரு உள்ளம் ஆயிற்று -என்க –

————————————————————————————————————

இதக்கலை கற்ற எனக்கு நிகரார் என வெதிர்த்து
மதக்களிறு என்ன வருமிள காழ்வான் மடங்க வென்று
மதிக்க மிசையிருந்தாண்டான் வகித்து வணங்கினற்குக்
கதிக்கிதம் காண் என்று எதிமன் கழல் இணை காட்டினனே –42-

இதக்கலை -ஹிதத்தை உணர்த்தும் சாஸ்த்ரங்களை
மதக்களிறு என்ன -மதம் பிடித்த யானை என்னும்படி –
மடங்க -பங்கம் அடைய
வகித்து -சுமந்து
வணங்கினற்கு -அருளுமாறு வணங்கின மிளகு ஆழ்வானுக்கு
கதிக்கிதம் -மோஷத்திற்கு ஹிதம் -சாதனம் –
ஆண்டான் மடங்க வென்று மதிக்க மிசை ஏறி இருந்து -வகித்து வணங்கினற்கு -கதிக்கு இதம் காண் என்று எதிமன் -உடையவர் -கழல் இணை காட்டினான் -எனக் கூட்டுவது

மிளகு ஆழ்வான் கல்விச் செருக்குடன் ஆண்டானை வலுவில் வாதுக்கு அழைத்தார் -ஆண்டான் -நீ தோல்வி அடைந்தால்
என்ன செய்வாய் -என அவரை வினவினார்
தோற்றால் உம்மைச் சுமந்து திரிகிறேன் -என்று மிளகு ஆழ்வான் கர்வத்துடன் துணிந்து பதில் அளித்தார் –
தர்க்கம் நடந்தது -மிளகு ஆழ்வான் தோற்றார் -பேசின முதலியாண்டான் ஸ்ரீ பாதம் தாங்கித் திரிந்தார் -பின்னர்
செருக்கு அடங்கிப் பணிந்து தம்மை ஏற்குமாறு விண்ணப்பித்துக் கொண்ட மிளகு ஆழ்வானுக்கு
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் -என்று அவற்றைக் காட்டிக் கொடுத்தார் எனபது வரலாறு —

—————————————————————————————————-

காட்டும் படியில் இராமானுசன் தன் கழல் இணைகள்
கூட்டும் படியில் குறைவறும் செல்வம் கொடிய வினை
வீட்டும் படிமின் முதலி யாண்டான் அடி வேற்ற்டம் பற்
காட்டும் படி என்ன வந்தது உமக்குக் கழறுதீரே –43–

படியில் -ஒப்பில்லாத
கூட்டும் -சேர்க்கும்
படியில் -பூமியில்
வீட்டும் -அழிக்கும்
படிமின் -வணங்குகள்
பற்காட்டும்படி–கெஞ்சும்படி
கழறுதீர் சொல்லுங்கோள்

கழல் இணைகளைக் காட்டும் –
செல்வத்தைக் கூட்டும் –
கொடிய வினையை வீட்டும் –
முதலி யாண்டான் அடி படிமின்
வேறு இடம் பற்காட்டும்படி உமக்கு என்ன வந்தது –
கழறுதீர் -என்று கூட்டி முடிப்பது —

——————————————————————————————-

கழறலை யாண்டான் பெயரைக் கழறலை கன்மவளிச்
சுழறலை யாண்டா யினந்தோ சுழலலை தொல் பிறப்பாம்
அழறலை யாண்டாண்டு அலைதி நீ யாறலைப் பெய்தி தண் பூம்
கழறலை யாண்டான் அணியில் கழலும் கடும் பவமே–44-

கழறலை யாண்டான் -கழல் தலை ஆண்டான் -கழலினைத் தலையில் வைத்து ஆண்டவனாகிய த்ரி விக்ரமன்
இனி கழல் தலை எனப் பிரிக்காது -கழறு அலை -எனப் பிரித்து
நூல்களில் சொல்லப் படுகின்ற சமுத்ரம் எனப் பொருள் கொண்டு திருப் பாற் கடல் நாதனைச் சொல்லலுமாம்-
பெயரைக் கழறலை -பெயரைச் சொல்ல வில்லை
கன்மவளிச்-கன்மமாகிற காற்றினுடைய
சுழறலை -சுழல் தலை -எனப் பிரித்து -சுழலில் -என்றபடி -தலை -ஏழன் உருபு-
யாண்டா யினந்தோ சுழலலை -யாண்டு ஆயின் சுழலலை அந்தோ -எங்கே யானால் சுழலாது இருப்பாய் -அந்தோ -இரங்கல் குறிப்பு
அழறலை -அழல் தலை -நெருப்பில்
யாண்டாண்டு -எப்பொழுதும்
அலைதி நீ -அலைகின்றாய்
யாறலைப் பெய்தி -ஆறு அழைப்பு எய்தி -வழிப் பறித் துன்பத்தை படுகின்றாய்
தண் பூம் கழறலை யாண்டான் அணியில் கழலும் கடும் பவமே–முதலி யாண்டான் தனது அழகிய திருவடிகளால்
தலையில் அலங்கரித்தால் கொடிய சம்சாரம் நீங்கும் –

எம்பெருமான் திரு நாமத்தை நீ சொல்லவில்லை -அந்தோ
கன்மப் புயலில் எங்குப் போனால் சுழலாமல் இருப்பாய் –
பிறப்பு என்னும் நெருப்பிலே இருப்புக் கொள்ளாது அலைகிறாய் -வழிப் பறி யுண்டு துன்பப் படுகிறாய்
தலையில் தன் பூம் கழலை யணிந்து முதலி யாண்டான் ஆட்கொண்டால் உனக்கு இந்த சம்சாரத் தொல்லை நீங்கும்
என ஒருவனை முன்னிலைப் படுத்தி கூறியவாறு –

———————————————————————————–

கடும் தாபம் ஆற்றும் இராமானுசானாம் கதிர் ஒளியை
அடைந்தார் அமுதினை யூட்டு மருங்கலை யார்ந்துலகம்
நடந்தான் மனத்தளி போல் வரும் ஆண்டான் நளிர் மதிகை
விடும் தாழ்வில தெப் பொழுதும் மறுவினை மேவலதே –45

இது முதல் மூன்று செய்யுட்கள் ஆண்டானைச் சந்த்ரனாக உருவகம் செய்து அதனின்று வேற்றுமைப் படுத்துகின்றன

ஆண்டான் என்னும் நளிர் மதி கடுமையான தாபத்தைப் போக்கும் -ராமானுஜ திவாகரன் இடமிருந்து ஒளியை -ஞானத்தை அடைந்து
அருமையான அமுதத்தை -பகவத் அனுபவத்தை -ஊட்டும் -அருமையான கலை -சாஸ்திரம் -கள் நிறைந்து உலகை அளந்த
விஷ்ணுவின் அவனது தண்ணளி போலே குளிர்ந்து தோன்றும் –
ஆண்டான் விஷ்ணுவின் மனத்தின் கண் உள்ள தண்ணளி போலே அவதரிப்பர்–ஆயின் -பிரசித்த சந்தரன்
கை ஒழுக்கத்தை -விடும் தாழ்வு -குறை உடையது -மறுவினை -குற்றத்தை மேவுவது –
ஆண்டான் எனும் சந்த்ரனோ எப்பொழுதும் கை விடும் தாழ்வு இல்லாதது -எப்பொழுதும் மறுவினை மேவாதது -என்றபடி
–எப்பொழுதும் -என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
சந்தரன் இயற்கை ஒளி அற்றது -சூரியன் ஒளியினாலே அது பிரகாசிக்கிறது -அது தேவர்களுக்கு அமுதினை ஊட்டலும்
விஷ்ணுவின் மனத்தே தோன்றலும் வேதத்தில் கண்டவை -குரு தாரகமனம் செய்து ஒழுக்கம் கேட்டது புராண வரலாறு –

———————————————————————————————————–

மேவி விளங்கிடும் மேலவர் சென்னி விபுதருக்கு
நாவில் வழங்கிடும் நல்லமு தீயும் நவை கொளிருள்
தாவ விழுங்கிடும் ஆண்டான் எனும் ஒரு தண் மதி வேள்
பூவில் உளம் கெடும் பூதலம் காத்துப் புரந்திடுமே –46-

ஆண்டான் என்னும் தண் மதி -மேலவர் சென்னி மேவி விளங்கிடும்-ஆண்டான் என்னும் மதி பாதுகை யாதலின்
இராமானுசனைத் தொழும் பெரியோர் சென்னியில் மேவி உள்ளது –
மேம்பாடு உடைய மகா தேவன் சென்னியில் மதி மேவி உள்ளதும் காண்க –
ஆண்டான் என்னும் மதி -விபுதற்கு -அறிஞர்க்கு நாவில் வழங்கிடும் -வ்யவஹரிக்கப் படும்
நல்லமு தீயும் -நல்ல அமுதம் போன்ற உபதேசத்தையும் ஈயும் –
விபுதர்க்கு -தேவர்களுக்கு அம்மதி நாவில் வழங்கிடும் -கொடுத்திடும் -நல்ல அமிருதத்தை ஈயும் –
இம்மதி அறியாமை இருளைக் கபளீ கரித்து விடும் -அம்மதி குற்றமுள்ள இருள் தாவ -கெட -விழுங்கி விடும்
ஆயின் அம்மதி – வேள்-மன்மதன் -பூவில் -புஷ்ப பாணத்தினால் -உளம் கெடும் பூதலத்தை மேலும் கெடுக்கும் –
ஆண்டான் என்னும் தண் மதியோ அங்கனம் கெடுக்காது காத்து -தடுத்துப் பரி பாலிக்கும் -என்றபடி –

———————————————————————————————————

இடுமுறை யாரொளி யானுள் ளிறுகிய கல்லுருக்கி
விடுமிரிந்தோடிட வேறாம் ஒளி மிகும் வெண்மையிப்பார்
படருறப் போர்த்திடு மாண்டான் பனிமதி மித்திரனை
விடலரும் பண்பின தேறும் திருவினை மேவினுமே –47-

இடுமுறை யாரொளி யானுள் ளிறுகிய
பனி மதி கல்லுருக்கி விடும் -அந்தப் பனிமதி இடும் -கொடுக்கும் -உரை ஆர் -கீர்த்தி நிறைந்த நிலாவினால் உள்ளே இறுகிய
சந்திர காந்தக் கல்லையும் உருக்கி விடும் –
இந்தப் பனி மதி ஆண்டான் இடும் -உபதேசிக்கும் -உரை -வார்த்தையில் -ஆர்ந்த ஞான ஒளியினால் உள் மனம் ஆகிற
கல்லையும் உருக்கி விடும் –
அது வேறாம் -நஷத்ரம் முதலிய -ஒளி இரிந்து -கேட்டு -ஓடிட மறைய -ஒளி மிகும்
இது வேறு ஞான பரகாசங்கள் மறைய ஒளி மிகும் –
அது வெண்மை யிப்பார் படருறப் -பரவப்-போர்த்திடும் -இது வெண்மை -தூய்மை -சத்துவ குணம் -இப்பார் படருறப் போர்த்திடும்
ஆயின் அது ஏறும் திருவினை மேவும் மித்திரனை விடும் பண்பினது -அதாவது திரு -கலை -ஏற ஏற மித்திரனை -சூரியனை -விடும் பண்புடையது
இதுவோ அங்கனம் மித்திரனை -அநு கூலனை விட முடியாத பண்பு உடையது -என்றபடி –

கலை ஏற ஏற சுக்ல பஷத்தில் மித்திரனை விட்டு விலகுவதும் குறையக் குறைய கிருஷ்ண பஷத்தில் மித்திரனைக் கூடுவதும் சந்த்ரனது இயல்பு –
முற்றும் குறைந்த அமாவாசை அன்று மித்திரனை நன்கு கலந்து விடுகிறான் சந்தரன் -என்பர் –

——————————————————————————————————————–

உமக்குத் தயக்கம் என் ஏறு மினுங்கள் அனைவரையும்
சுமக்கும் துயம் எனும் தூய விரும்பு நெறி பிறழாது
இமைக்கும் பொழுதில் எதிமன் பதமாம் எழில் நகர் போய்
நிமிர்க்கும் துயரற ஆண்டான் எனும் ஒரு நீள் சக்டே –48-

இது முதல் மூன்று பாடல்கள் ஆண்டானைப் புகை வண்டியாக உருவகம் செய்கின்றன –

துயம் எனும் -த்வயம் எனும் மந்திரம்
தூய விரும்பு நெறி பிறழாது -சுத்தமான விரும்பப்படும் வழி -இரும்புப் பாதை எனத் தோற்றுவதும் காண்க –
இமைக்கும் பொழுதில் எதிமன் பதமாம் எழில் நகர்-எம்பெருமானார் திருவடி யாகிய அழகிய நகரம் –
யதி சக்ரவர்த்தி பதபத்ம பத்த நம் -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகரும்
நிமிர்க்கும் -பூர்ணர் ஆக்கும் -துயர் அற நிமிர்க்கும் -என்க
நீள் சக்டே-நீண்ட புகை வண்டி –
நீள் சகடு நெறி பிறழாது இமைக்கும் பொழுதில் எழில் நகர் போய் துயர் அற நிமிர்க்கும் -உங்கள் அனைவரையும்ம் சுமக்கும் -உமக்குத் தயக்கம் என் ஏறுமின்-என்று கூட்டி முடிக்க –

எத்தனை பேராயினும் சரி -த்வயம் கூறும் வழியில் எம்பெருமானாரோடு அனைத்துக் குறைவறுத்து உய்விப்பர் -முதலி யாண்டான் -எனபது கருத்து –
விஷ்ணுச் சேஷீ ததீயச் சுப குண நிலயோ விக்ரஹச் ஸ்ரீசடாரி ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி இமயம் ததீயம் –
நாராயணன் சேஷி -அவனது நல் குணங்கட்கு இடமான திரு மேனி நம்மாழ்வார் –
திரு ஆரும் எம்பெருமானார் அவரது அழகிய இணை யடிகளாக விளங்குகிறார் -என்றபடி
நாராயண சரணங்களாக எம்பெருமானாரைக் கொண்டால் த்வயம் கூறும் வழியில் எம்பெருமானாரோடு இணைதல் காணலாம் –

———————————————————————————————————-

கடுவினை தள்ளும் எதிமன் கழல் இணை காண்பதற்கு
வடுவினை விள்ளு நம் ஆண்டான் எனு நெடும் வண்டி வழிப்
படுமனை யள்ளல் படுகிலிர் ஏறுதிர் பாருலகீர்
கடுவினில் உள்ள புழு எனக் காலம் கழிப்பது என்னே –49-

கடுவினை தள்ளும் -கடுமையான வினைகளைப் போக்கும்
எதிமன் கழல் இணை காண்பதற்கு
வடுவினை விள்ளும்-தோஷத்தை நீங்கச் செய்யும் -குற்றமற்ற -என்றபடி
வழிப்படும்–புறப்படும்
மனை யள்ளல்-மனை வாழ்க்கைச் சேற்றில்
கடுவினில் -விஷத்தில்
உள்ள -இருக்கிற

பாருலகீர் -ஆண்டான் எனும் நெடும் வண்டி வழிப்படும் -எதிமன் கழலினை காண்பதற்கு -அதில் ஏறு திர –
மனை அள்ளல் படுகிலிர் -கடுவினில் உள்ள புழு வெனக் காலம் கழிப்பது என்னே என்று கூட்டிப் பொருள் கொள்க –

விஷ கிருமி போலே சம்சாரத்தில் வீணே காலத்தைக் கழிப்பதில் பயன் இல்லை -பரம புருஷார்த்தமான எம்பெருமானாரது
லாபத்துக்கு ஆண்டானைப் பற்றல் வேண்டும் எனபது கருத்து –

——————————————————————————————————-

கழி பெரு நல்லவர் அல்லவர்த் தாங்கிக் கனத்த நன்மை
பழி தரும் அல்லல் விலங்கல் துளைத்துப் பரமபத
வழி வரும் வண்ணம் உடையவர் வண்ண மலரடி போம்
தொழலுறும் அண்ணல் முதலி யாண்டான் இத் தொடர் வண்டியே –50-

கழி பெரு நல்லவர் -மிகவும் நல்லவர்
அல்லவர்த் தாங்கிக் கனத்த நன்மை -அல்லவர் -அதற்கு மாறுபட்டவர் -கனத்த நன்மை -பெரும் புண்ணியம் –
பழி தரும் அல்லல் விலங்கல் -பழியை உண்டு பண்ணுகிற -துன்பத்திற்கு ஹேதுவான பாபம்-ஆகு பெயர்
விலங்கல் -மலை –நன்மை அல்லல்கள் ஆகிய விலங்கல் -என்க –
முமுஷூவுக்கு புண்ணிய பாபங்கள் இரண்டுமே தடை யாதலின் இங்கனம் உருவகம் செய்யப் பட்டது –
மலையைக் குடைந்து புகை வண்டி போவது கண் கூடு –
பரமபத வழி வரும் வண்ணம்-அர்ச்சிராதி மார்க்கம் கிடைக்கும் படி –
உடையவர் வண்ண மலரடி போம் தொழலுறும் அண்ணல் முதலி யாண்டான் இத் தொடர் வண்டியே —
வண்ணம் -அழகிய
போம் -போகும் -செய்யும் என் முற்று
தொழல் உறும் -ஆஸ்ரயிக்கத் தக்க –

முதளியாண்டானாகிற இத் தொடர் வண்டி நல்லாரையும் பொல்லாரையும் எத்தனை புண்ய பாபங்கள் குறுக்கிட்டாலும்
உடையவர் திருவடிகளில் சேர்த்து முக்தி வழியில் செலுத்தியே தீரும் -என்றபடி
பேற்றுக்கு நன்மை ஹேதுவும் அன்று -தீமை விலக்கும் அன்று -ஆண்டானை முன்னிட்டு உடையவரோடு
கொள்ளும் உறவே அர்ச்சிராதி கதியில் செலுத்திப் பேறு பெறுவிக்கும் எனபது கருத்து –

———————————————————————————————————————-

தொடர்வினை வன் காற்று அறையச் சுழலுறு தொல் பிறப்பு
படுதலின் வீணே சுழன்று உருமாயும் இப்பாரிடத்தீர்
திட மனம் கொள்மின் எதிமன் திருத் தாள் நிலை என்னும்
வடிவனை யாண்டான் தனை ஒரு நாள் வலம் வந்திடற்கே —51–

தொடருகின்ற வினையாகிய பலத்த காற்று வீசுதலினால்-சுழலுகின்ற பண்டைப் பிறப்பு எனப்படும் சக்கிரதிற்கு உட்பட்டு
ஒரு பயனும் இன்றிச் சுழன்று ஸ்வரூப நாசம் அடையும் உலகத்தீரே —
எம்பெருமானாரது திருவடி நிலை என்று சொல்லப்படும் வடிவம் வாய்ந்த முதளியாண்டானை ஒரு நாள் பிரதஷிணம்
செய்வதற்குத் திடமான எண்ணம் கொள்ளுங்கோள் -என்றவாறு —
முதளியாண்டானை ஒரு நாள் சுற்றி வர நினைத்த மாத்ரத்திலேயே வீணே சுழன்று உருமாயும் நிலைமை ஓயும் எனபது குறிப்பு –
தமது பாதுகையை ஒரு நாள் வலம் வரக் கருதுபவருக்கு எம்பெருமானார் வீடு அருளுவர் எனபது கருத்து –

———————————————————————————————————–

வந்தெழு மோகம் எனும் அலை மோத மெய் வங்கமதில்
நந்தலில் நோயாம் சுமைகள் நசுக்க நவை பிறப்பாம்
அந்தமிலார் கலி வல்வினை யோட்ட அலைந்து உழல்வீர்
வந்திடிர் ஆண்டான் எனும் பெயர் வாய்ந்த நல் வான் கலமே –52-

இது முதல் மூன்று பாடல்கள் ஆண்டானை நாவாயாக உருவகம் செய்கின்றன –

மெய் வங்கமதில் -சரீரம் ஆகிய நாவாயில்
நந்தலில் -அழிவு இல்லாத
அந்தமிலார் கலி -முடிவு இல்லாத கடல்
வந்திடிர் -வந்து விடுங்கள்
வான் கலம் -பெரும் கப்பல்
மெய் வங்கமதில்
நவை பிறப்பாம்
அந்தமிள் ஆர் கலியில் மெய் வங்கமதில் வந்தெழு மோகம் எனும் அலை மோத-நந்தலில் நோயாம் சுமைகள் நசுக்க
வல்வினை யாகிய மாலுமி யோட்ட அலைந்து உழல்வீர்
ஆண்டான் எனும் பெயர் வாய்ந்த நல் வான் கலம் வந்திடிர்-எனக் கூட்டி முடிக்க –

குற்றமுள்ள பிறவிப் பெரும் கடலின் கண் உடல் எனும் வங்கம் ஏறி வந்து வீசும் மோகம் என்னும் அலைகள் மோத
அழியாது என்றும் உள்ள நோய்கள் என்னும் சுமைகளால் நசுக்குண்டு பலமிக்க வினை என்னும் மீகாமன் தனது இஷ்டப்படி ஓட்ட
அலைந்து உழல்கின்றவர்களே -ஆண்டான் எனும் பெயர் வாய்ந்த நல்ல பெரிய கலத்திற்கு வந்து விடுங்கள் -என்றவாறு –
வல்வினை ஓட்ட -என்ற இடத்து ஏகதேச உருவகம் -வான் கலம் என்றது மெய் வங்கத்தினும் வேறுபாடு தெரித்தற்கு -அது மேலைப் பாட்டில் தெளிவு –

————————————————————————————————-

கலன் அணி கஞ்ச மலர்வரும் காரிகை காதலனார்
நலனுடை யின்னருள் மாலுமி உய்த்தலின் நன்னெறியே
மலமறு பண்பு வகித்தெழு மாலலை வாதையின்றிச்
செலுமது தீரம் கடிதின் ஆண்டான் எனும் சீர் வங்கமே –53-

கலன் அணி -அணி கலங்கள் பூண்ட
கஞ்ச மலர்வரும் காரிகை -காதலனார் -தாமரைப் புஷ்பத்தில் அவதரித்த பிராட்டி கேள்வனார்
நலனுடை -நன்மை பயக்கும்
யின்னருள் மாலுமி உய்த்தலின் -செலுத்துதலினால்
நன்னெறியே செலுமது -என இயையும்
மலமறு -குற்றம் அற்ற
பண்பு வகித்து -குணங்களை தாங்கி
தெழு மாலலை-எழும் மயக்கம் ஆகிற அலைகளால்
வாதையின்றிச் -பாதை -கஷ்டம் -இல்லாமல் –
செலுமது தீரம் கடிதின் -விரைவில் கரை செலுமது –

ஆண்டான் எனும் சீர் வங்கம் -காதலனார் இன்னருள் ஆகிய மாலுமி உய்த்தலின் பண்பு வகித்து வாதை இன்றி
நன்னெறியே கடிதின் தீரம் செலுமது -எனக் கூட்டி முடிக்க –
நன்மை பயக்கும் மாதவனது திருவருள் ஆகிய மாலுமி நடத்துவதால் ஆண்டான் எனும் சீர் வங்கம் ஆத்ம குணங்களுடன்
மோக அலையினால் ஏற்படும் இடரின்றி விரைந்து கரை சேர்ந்து விடும் -என்றபடி –
முன் செய்யுளில் சொன்ன மெய் வங்கத்திலும் ஆண்டான் எனும் வங்கத்தினும் ஆண்டான் எனும் வங்கத்திற்கு உண்டான சிறப்பு இங்கே கூறப்படுகிறது –
அதனை ஓட்டுபவன் -வினை மாலுமி –இதனை ஓட்டுபவன் இன்னருள் மாலுமி –
அது வழிப் படராது -இது நல் வழிப் படரும்
அது நோய்கள் சுமக்கும் -இது பண்புகள் சுமக்கும்
அது மோக அலையினால் வாதைப் படும் -இது அங்கன் படாது –
சேதனர்கள் கடிதில் கரை ஏறத் திருமால் திருவருளால் இவ்வுலகில் திருவவதரித்தவர் ஆண்டான் எனபது கருத்து –

—————————————————————————————–

வங்கம் திருமால் எனும் பெயர் வாய்ந்தது மெல்ல வந்து
தங்கும் திருவெனும் தீவிலும் ஆன்மா தனி இனிக்கும்
மங்கும் துறையிலும் ஆண்டான் எனும் ஒரு வான் காலமோ
எங்கும் நிலாமல் விரைந்திடும் இன்பத் துறை முகமே –54-

வங்கம் திருமால் எனும் பெயர் வாய்ந்தது -திருமால் எனும் பெயர் வாய்ந்தது -ஆகிய -வங்கம் -என மாற்றுக
விஷ்ணு போதம் –வைகுந்தன் என்பதோர் தோணி –என்பன காண்க —
திரு எனும் தீவிலும் -ஐஸ்வர்யம் எனும் சம்சாரத்து இடைப்பட்ட தீவிலும் -ஆன்மா தனி இனிக்கும் –
-சேதனன் தன்னைத் தானே அனுபவித்து இன்பம் காணும்
மங்கும் துறையிலும் -மின்மினி போன்ற அற்பமான ஆத்ம அனுபவம் ஆகிய துறையிலும்
இன்பத் துறை முகமே-மஹா நந்த ரூபமான மோஷம் எனும் துறை முகம் –

திருமால் எனும் பெயர் வாய்ந்தது வங்கம் -திரு வெனும் தீவிலும் -ஆன்மா தனி இனிக்கும் மங்கும் துறையிலும் மெல்ல வந்து தங்கும்
ஆண்டான் எனும் ஒரு வான் காலமோ
எங்கும் நில்லாமல் இன்பத் துறை முகம் விரைந்திடும் –என்று கூட்டுவது –
இதில் திருமால் எனும் வங்கத்திற்கும் ஆண்டான் எனும் காலத்திற்கும் உள்ள வேற்றுமை காட்டப் படுகிறது –
திருமால் வங்கம் மெல்லச் செல்லும் –ஆண்டான் கலம் விரைந்திடும்
தேபு நந்த்யுருகாலேந தர்சநா தேவ சாதவ -என்று தேவரை விட சாதுக்கள் விரைவில் புனிதர் ஆக்குவர் என்றது காண்க –
ஐஸ்வர்யம் என்னும் தீவிலும் கைவல்யம் என்னும் துறையிலும் தங்குவது அது –இது அவைகளில் தங்காது அப்பால் பட்ட முக்தி என்னும்
பெரும் துறை முகத்திலேயே தங்குவது -அதனால் வான் கலம் ஆயிய்று –
ஐஸ்வர்யம் கைவல்யம் பகவல்லாபங்கள் எனப்படும் மூன்று புருஷார்த்தங்களையும் அவரவர் ருசிக்கு ஏற்பத் தந்து அருளுவன் எம்பெருமான் –
ஆண்டானோ அங்கன் அன்றி மோஷம் ஒன்றையே தந்து அருளுவர் -என்றபடி –
அற்பப் பலன்களையும் அழிக்கும் எம்பெருமானை விட பர புருஷார்த்தம் ஒன்றையே அழிக்கும் ஆண்டான் மிகச் சீரியர் என்று கருத்து –

———————————————————————————————-

துறவியர் கோன் தரு ஞானம் செயல் எனும் தூவியின் மண
பிறிவுற மால் பதம் என்னும் பெரு நெறி பெற்று உயர்ந்து
பிறவியாம் ஆழ்கடல் தாவிப் பெறுத்திட மேலை நிலம்
இறைவிடாது ஏகிடும் ஆண்டான் எனும் ஒரு விண் பொறியே–55 —

ஆகாய விமானமாக ஆண்டானை இச் செய்யுளும் அடுத்த செய்யுள்ளும் உருவகம் செய்கின்றன –

துறவியர் கோன் தரு ஞானம் செயல் எனும் தூவியின் -எம்பெருமானார் –ஞானம் அனுஷ்டானம் -சிறகுடன்
மண-பூமி -அங்கு உள்ளாரையும் ஆகு பெயரால் கொள்க –
பிறிவுற -பிரியும்படி –
பிரிந்தேன் பெற்ற மக்கள் -பெரிய திரு மொழி -6-2-4-/செறிந்தாரையும் பிரிந்தாரையும் -கரன் வதைப் படலம் -90-என்னும் பிரயோகங்கள் காண்க
மால் பதம் என்னும் பெரு நெறி -விஷ்ணு பதம் -ஆகாயம் -ஆகிய பெரிய வழி க்கு திருமால் திருவடி யாகிய பெரிய சாதனம் -என்பதும் கொள்க –
பெற்று உயர்ந்து -மேல் ஏறி -சிறப்புற்று என்றுமாம் –
பிறவியாம் ஆழ்கடல் தாவிப் பெறுத்திட -பெறும்படி செய
மேலை நிலம் -மேனாடு -பரம பதம் -என்பதும் கொள்க -மேலை நிலம் பெறுத்திட என மாறும் –
இறைவிடாது -சிறிதும் விடாமல் -தங்குதல் இல்லாமல் -ஆகாயத்தில் போகாது சிறிதும் நிற்க முடியாதன்றோ –
ஈஸ்வரனை விடாது -என்பதும் கொள்க –
செழும் பறவை தானேறி வான் ஏற வழி தருதலின் இறைவனை விட முடியாதன்றோ
ஏகிடும் ஆண்டான் எனும் ஒரு விண் பொறியே–விண் பொறி -ஆகாயத்தில் பறக்கும் யந்திரம் -ஆகாய விமானம் -என்றபடி —

ஆகாய விமானம் இரண்டு சிறகுகள் கொண்டது -ஆண்டான் எனும் விண் பொறியும் எம்பெருமானார் திருவருளால் வந்த

ஞானம் அனுட்டானம் என்னும் இரண்டு தூவி கொண்டது –
அது பூமியை விட்டுப் பிரிவது -இது நாட்டாரோடு இயல் ஒழிவது -அதாவது பூமியில் உள்ளாரோடு ஓட்டத்றுப் பிரிந்து நிற்பது –
தூ மனத்தார்க்கு உண்டோ பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும் உலகத்தாரோடு உறவு -ஞான சாரம் -13-என்றது காண்க –
அது விஷ்ணு பத -ஆகாயப் பெரு நெறியைப் பெற்று உயர்வது -இது விஷ்ணு பத -திருமால் திருவடிப் பெரு நெறியை -சிறந்த சாதனத்தைப் பெற்று உயர்வது
ஏனைய சாதனங்கள் போல் அல்லாமல் சித்தமாய்த் தாமதம் இன்றி உடனே பயனை அளித்தே தீருதலின் விஷ்ணு பதம் பெரு நெறி ஆயிற்று -என்க –
ந அர்ஹந்தி சரணசத் தஸ்ய கலாம் கோடிதமீம் அபி -என்றபடி ஏனைய சாதனங்களைப் பற்றினோர்
விஷ்ணு பதத்தைப் பற்றினோர்க்குக் கோடியில் ஒரு பங்கு கூட ஈடாக மாட்டாத உயர்வு -சிறப்பு -உள்ளமை காண்க –
அது கடல் தாவிப் போவது -இது பிறவிக் கடல் தாவிப் போவது –
சம்சாரமிவ நிர்மம-என்று மமதை யற்றவன் சம்சாரக் கடலைத் தாண்டுவதைக் காளிதாசன் உவமித்துக் காட்டுவது கண்டு அறியத் தக்கது –
அது மேலை நிலம் -மேனாடு -தேசாந்தரம் -என்றபடி -பெறும்படி செய்வது -இது மேலை நிலம் -மேம்பட்ட பரமபதம் -பெறும்படி செய்வது
இரண்டும் இடை விடாதவைகளாய் ஏகுவன –
இதனால் சேதனரையும் ஈஸ்வரனையும் சேர்ப்பித்தல் என்னும் ஆசார்ய க்ருத்யம் ஆண்டான் இடம் அமைந்துள்ளமை காட்டப் பட்டதாயிற்று –

—————————————————————————————–

விண்ணில் புகும் பொறி ஆண்டானை மேவி மிகுத்து எழுந்தால்
கண்ணில் படுவன யாவும் கடுகெனும் காட்சியவாம்
எண்ணில் படும் இரு ஞாலம் இரைக்கு என்று இயங்குதல் போல்
மண்ணில் படிந்து இனி மாசுறலேனிம் மலருலகே –56-

ஆண்டான் ஆகிய விண்ணில் புகும் பொறி யை -என்க
மேவி -பொருந்தி –
மிகுந்து எழுந்தால் -மிகவும் உயரச் சென்றால் -மிகவும் பெருமை உற்றால் –
எண்ணில் படும் -நினைவில் தோற்றும் –
இரு ஞாலம் இரைக்கு என்று இயங்குதல் போல் எண்ணில் படும்-என இயையும் –

ஆண்டான் எனும் விமானத்தில் ஏறி மிகவும் உயருவோம் -மேன்மை யடைவோம் -அங்கன் உயர்ந்தால் நம் கண்ணில் படும் எல்லாப் பொருள்களும்
கடுகு என்னும் படி மிகவும் சிரியவைகளாகக் காட்சி யளிக்கும் -ஆண்டானைப் பற்றினார்க்கு பிரமன் முதலியோரும் அற்பர்களாகவே தோற்றுவர் -என்றபடி
மேலே நாம் செல்லும் போது இவ்வுலகம் ஓடுவது போலத் தோற்றம் அழிக்கும் -அது போலே ஆண்டானைப் பற்றினாருக்கு இம்மண்டலம் உண்டியே உடையே
உகந்து ஓடுவது போன்று தோன்றும் -இங்கனம் மிகுந்து எழும் சந்தர்ப்பத்தை விட்டு இவ்வுலகம் -உலகத்தவர் -மண்ணில் -சம்சாரத்தில் -படிந்து அழுக்கு அடைவது என்ன பயன் கருதியோ -என்றவாறு –
ஆண்டானை அண்டி மாசற்ற உயர் வாழ்வு கொண்டிடாது இம்மண்டலத்தையே உலகம் மண்டி வீணே மாசுருவதே -என இரங்கிக் கூறியபடி –
ஆண்டானை ஆஸ்ரயித்து மாசு நீங்கிப் பிறவிப் பயன் பெறுக எனபது கருத்து –

———————————————————————————————————————-

மலை நின்று மற்றை மலை மிசை தாண்டு மடங்கலுடல்
நிலை நின்ற சீவன் எனப்பவம் தாண்டவு நீத்தவர் கோன்
உலைவின்றி நின்ற உறவினில் தாண்டி நாம் உய்தும் எனக்
கலை யொன்றி நின்ற முதலி யாண்டான் சொல் கழறினனே –57-

மலை நின்று மற்றை மலை மிசை தாண்டு மடங்கலுடல்
நிலை நின்ற சீவன் எனப்பவம் தாண்டவு நீத்தவர் கோன்
உறவினில் தாண்டி நாம் உய்தும் எனக்
கலை யொன்றி நின்ற முதலி யாண்டான் சொல் கழறினனே –57

மடங்கல் -சிங்கம்
உடல் நிலை நின்ற சீவன் என-பிரியாது உடலில் நிலை பெற்றுள்ள பிராணிகள் போலே
சீவன் -சாதியொருமை
பவம் -சம்சாரம்
நீத்தவர் கோன் -எம்பெருமானார் -நீத்தவர் கோன் பாவம் தாண்டவும் -என மாறும்
உலைவின்றி நின்ற -உலைந்து போகாமல் இறுகி நின்ற
உறவின் -சம்பந்தத்தால்
உய்தும் -உஜ்ஜீவிப்போம்
கலை ஒன்றி -சாஸ்திரம் பயின்று
நின்ற -அதற்குத் தக அனுஷ்டித்தலை உடைய
கழறினனே-அருளிச் செய்தாரே

ஒரு சிங்கம் ஒரு மலையில் இருந்து மற்று ஒரு மலைக்குத் தாண்டும் போது அதன் உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் ஜீவா ராசிகளும்
ஒரு சிறிது முயற்சியும் இன்றித் தாமே தாண்டி விடுவது போலே எம்பெருமானார் சம்சாரத்தைத் தாண்டியதும் அவருடன் உலையாத
உறவு படைத்த நாமும் தாண்டி உய்வு பெறுவோம் -என்று -கற்று அறிந்து நடக்கும் முதலியாண்டான் அருளிச் செய்தார் -என்றபடி –
ஒரு மலையினின்றும் ஒரு மலையிலே தாவும் சிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களைப் போலே பாஷ்யகாரர் சம்சார லங்கணம் -தாண்டுதல் -பண்ண
அவரோடு உண்டான குடல் துவக்காலே -சம்பந்தத்தாலே -நாம் உத்தீர்ணர் -தாண்டினவர் -ஆவுதோம் என்று முதலி யாண்டான் அருளிச் செய்த பாசுரம்
என்று ரகஸ்ய த்ரய சார ஸ்ரீ ஸூ க்திகள் இங்கே அநு சந்திக்கத் தக்கவை –

————————————————————————————————

கழறினது என்னை கவின் அரங்கன் முன் கலந்திடைப் பெண்
குழுவுடன் என்று வினவ வங்கிப் புரக் கோன் குறித்த
மொழி விஜ யஸ்வ எனுமது கேட்டு முருட்டு வட
மொழியினை விட்டிலை அங்கும் என்று ஆண்டான் மொழிந்தனனே –58-

கழறினது என்னை -சொன்னது என்ன –
கவின் அரங்கன் முன் -அழகிய நம் பெருமாள் எதிரே
கலந்திடைப் பெண் குழுவுடன் என்று
வினவ -கேட்ப
வங்கிப் புரக் கோன் -வங்கி புரத்து நம்பி
இடைப்பெண் குழுவுடன் கலந்து கழறினது என்னை என இயைக்க –
முருட்டு வட மொழி–விஜ யஸ்வ என்னும் சமஸ்க்ருத மொழி
அங்கும் -பெண்கள் குழுவுடன் நிற்கும் போதும்
க கவின் அரங்கன் முன் இடைப் பெண்
குழுவுடன் கலந்து ழறினது என்னை-என்று ஆண்டான் -வினவ
அதற்கு வங்கிப் புரக் கோன் பதிலாக குறித்த
விஜ யஸ்வ எனும் மொழி யது கேட்டு அங்கும்
முருட்டு வட மொழியினை விட்டிலை என்று ஆண்டான் மொழிந்தனனே-எனக் கூட்டிப் பொருள் கொள்வது –

வங்கி புரத்து நம்பி ஒரு கால் இடைப் பெண்கள் அண்டையில் இருந்து பெருமாளை சேவித்துக் கொண்டு இருப்பதை ஆண்டான் கண்டு
ப்ராப்யமான ஸ்ரீ வைஷ்ண சமுதாயத்தை விட்டு அவர்கள் அண்டையில் நிற்பான் என் -எனக் கேட்ப
ஏதும் அறியாத இடைப் பெண்களுடன் இருந்தால் பெருமாள் திருவருள் அப்பள்ள மடியிலே பாயும் என்று இருந்தேன் என்று நம்பி பதில் கூறவும்
அவர்கள் சொன்னது என்ன -தேவரீர் அருளிச் செய்தது என்ன -என ஆண்டான் வினவி அருள
அவர்கள் நூறு பிராயம் புகுவீர் பொன்னாலே பூணூல் இடுவீர் -என்றால் போலே சொல்லினர்
அடியேன் -விஜயஸ்வ -என்றேன் -என நம்பி பதில் இருக்க
ஆண்டான் -அங்கே போயும் முருட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லையே -எங்கு இருந்தாலும் நாம் நாம் காணும்
-இங்கே எழுந்து அருள்க -என்று அருளிச் செய்தார் எனபது ஐ திஹ்யம் –
வழுத்தி வழிபடுதல் அவரவர் தகுதிக்கு ஏற்ப அமையும் -பழகும் தமிழில் குழைந்து கூறும் பாவையர் அண்டையில்
நின்றும் நம்பி முருட்டு சமஸ்க்ருதத்தை விட்ட பாடில்லை –
ஏதும் அறியாத அடியேன் பழகும் தமிழில் வழுத்தும் இல்லாத இவ்வந்தாதி தகுதிக்கு ஏற்ப அமைந்து இருப்பது கண்டு
ஆண்டான் அகம் மகிழ்ந்து அருள் புரிவார் -எனபது ஒரு தலை –

———————————————————————————————————-

மொழியும் பெருமை முதலியாண்டான் பத மொய்ம்மலர் மேல்
குழையும் பரிவுள்ளடங்க கிலாது குதித்து எழுந்தே
இழையும் இனிய தமிழனில் ஏய்ந்த வந்தாதி யிதை
மொழியும் படி செய்திடும் ஒல்லை மூங்கையன் என்னையுமே –59-

மொழியும் பெருமை -பேசிப் புகல வேண்டிய பெருமை படைத்த
குழையும் பரிவு-குழைந்து போம்படி செய்யும் பக்தி
ஏய்ந்த அமைந்த

மொழியும் படி செய்திடும்
ஒல்லை -சீக்கிரமாக
மூங்கையன் -ஊமை போன்றவன்
மூங்கையன் என்னையுமே ஒல்லை மொழியும்படி செய்திடும் -என இயையும்

முதலியாண்டான் பத மொய்ம்மலர் மேல் -உள்ளடங்க கிலாது குதித்து எழுந்தே -இழையும் இனிய தமிழனில்
ஏய்ந்த வந்தாதி யிதை
மூங்கையன் என்னையுமே ஒல்லை மொழியும்படி செய்திடும்-என முடிக்க
பேசும் திறன் இன்மையின் மூங்கையன் எனப் பட்டது -என்னையுமே -இழிவு குறித்த ஏகாரம்
வருணிக்க வேண்டிய மகிமை வாய்ந்த முதலி யாண்டானது திருவடித் தாமரை மீது உண்டாகிய குழையும் படியான பக்தி
உள் அடங்க மாட்டாது குதித்து எழுந்து இழைகின்ற இனிய தமிழில் வாய்ந்த இவ்வந்தாதியை
ஊமை போன்ற என்னையுமே விரைவில் மொழியும் படி செய்து விட்டது -என்றபடி –
பேசும்படி செய்யும் பெருமை படைத்த ஆண்டான் மீது உண்டான பக்தி இந்த அந்தாதியைப் பாடுவித்ததே யன்றி
என் திறமையினால் இது பாடினேன் அல்லேன் -எனபது கருத்து –

———————————————————————————

என் பெரு நெஞ்சில் எதிபதி இன்னருள் பாய்ச்சியின்று
தன்புதம் தாங்கு முதலியாண்டான் பால் தனித்தமைந்த
அன்பினை வித்தித் தமிழ்க் கவி என்னும் அறும் கனியில்
வன் பெரு வையம் மகிழ்ந்திட வள்ளல் வழங்கினனே –60-

வள்ளலாகிய எதிபதி -எனது உள்ளமாகிய ஷேத்ரத்தில் தனது இனிய அருளாகிய நீரைப் பாய்ச்சி தனது திருவடி நிலையான
முதலி யாண்டான் மீது தனிப்பட்டு அமைந்த அன்பாகிற வித்தை விதைத்து -இந்தத் தமிழ்க் கவியாகிற அருமையான கனிகளை
இந்தக் கடிதான பெரிய உலகமும் மகிழுமாறு வழங்கினான் -என்றவாறு

ஆண்டான் பக்திக்கு அடி சொல்லுகிறது இப்பாட்டு -எம்பெருமானார் விதைத்த இப்பக்தி
கவிதைக் கனியாக மாறி இவுலகிற்குப் பயன்படுகிறது -என்க –

—————————————————————————————————————————————————–

வள்ளல் வழங்கினும் பூமா தமுதம் வலுவிலன்பன்
எள்ளவலேற்கும் இராமுசன் இதற்கு ஏற்ப வின்சொல்
அள்ளி யளிப்பினும் ஆன்றவர் ஆண்டான் அடி நசையே
கொள்ளும் திருமலை நல்லான் குளறல் கொளல் அழகே –61-

பூ மாது -ருக்மிணி
அன்பன் -குசேலன்
எள் அவல் -இகழப்படும் அவல் -வினைத்தொகை –
ஏற்கும் -ஏற்றுக் கொள்ளும் -வினை முற்று -வலுவில் ஏற்கும் என இயையும்
இராமானுசன் -பலராமன் தம்பி கண்ணன் -எம்பெருமானார்
இரட்டுற மொழிதலால் இதனை முன்னும் பின்னும் கூட்டி முன்னர் கூட்டியதற்கு கண்ணன் என்றும் பின்னர் கூட்டியதற்கு
எம்பெருமானார் என்றும் பொருள் கொள்க
இதற்கு ஏற்ப -இங்கனம் அவலைக் கொண்டதற்கு இசைய
ஆன்றவர் -பெரியார்
ஆண்டான் அடி -ஆண்டான் என்கிற திருவடி நிலை
நசை -ஆசை –

உருக்குமிணி சீருடை அமுதத்தை வழங்கினாலும் வள்ளல் இராமானுசன் அன்பானது இகழத் தகும் அவலை வலுவில் ஏற்றுக் கொண்டான்
இதற்கு ஏற்ப வள்ளல் இராமானுசன் ஆன்றவர் இன்சொல் அள்ளி அளிப்பினும் ஆண்டான் எனும் அடி நிலை நசையே கொள்ளும் அன்பன்
திருமலை நல்லானது இன்னாத குழறலைக்கொள்வது அழகியதே -என்றவாறு -கொளல் -கொள்ளுதல்
எள்ளவல் -என்பதற்கு ஏற்பச் சீர் அமுதம் எனவும் இன் சொல் என்பதற்கு ஏற்ப இன்னாத குளறல் எனவும் கொள்க
அன்புடையாறது கிடைத்தற்கு அறிதாதலின் வள்ளலும் எர்கின்றணன் என்க
தன் பால் அன்புடையாரத்தை இராமானுசன் எற்குமாயின் தன் அடி நிலையின்பால் நசை உடையாரத்தை ஏற்கக் கேட்க வேணுமோ
தம் திருவடி நிலையைப் புகழ்வதான இந்த அந்தாதியை அனுசந்தித்தால் எம்பெருமானார் மனம் உவந்து ஏற்று இன்னருள் புரிவர்
அவ்வின்னருளுக்கு இலக்காகி இதனை அனுசந்திப்பார் சதிராக வாழ்ந்திடுவர் என்று இதற்குப் பலம் கண்டு கொள்க —

வாழ்க அடி நிலை –வாழ்க இன்னருள் –வாழ்க எதிராசர் –

————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: