ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி -21-40-பாசுரங்கள்–ஸ்ரீ உ -வே -திரு நகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் இயற்றி அருளிய திவ்ய பிரபந்தம் –

விடிந்தது ஞாலம் விளிந்தது வெங்கலி மேவலருட்
படிந்தது பாயிருள் பண்டிதர் ஞானத் துறை படிய
நடந்தது நல்லாறு எதிபதி நாயிறு காய் கதிரே
படர்ந்தது போன்று படிமிசை யாண்டான் பரந்ததுமே –21

பாயிருள்-பரந்த இருள்
நல்லாறு-சத் சம்ப்ரதாயம்
எதிபதி நாயிறு காய் கதிரே -எம்பெருமானார் ஆகிய சூரியனது காய்கின்ற கிரணம்
படர்ந்தது -பரவினது
பரந்ததும் -பிரசித்தி யடைந்ததும் –

———————————————————————————————-

பரந்த நன் ஞான முதலியாண்டான் சிரி பாடியத்தைத்
தருந்தவன் ஏவலின் சிந்தையின் ஆவலின் தானடந்து
திருந்திட மேவலர் ஐந்திடம் நாரணர் சீர் அனைத்தும்
பொருந்திட நாட்டினன் பூங்கழல் போக்கும் பொருந்தவமே–22-

சிரி பாடியத்தைத் தருந்தவன் -ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்த முனிவராகிய எம்பெருமானார்
ஏவலின் சிந்தையின் -திரு உள்ளம் போலே
மேவலர் -மற்றை மதத்தவர்
ஐந்திடம் -தழைக்காடு, தொண்டனூர் ,கதுகலம் ,விஜயாபுரம் , பேலூர் -என்னும் ஐந்து இடங்களில்
நாரணர் -முறையே -கீர்த்தி நாராயணன் ,ஸ்ரீ மண் நாராயணன் ,வீர நாராயணன் ,விஜய நாராயணன் ,கேசவ நாராயணன் -என்னும் ஐந்து நாராயணர்களை
சீர் அனைத்தும் பொருந்திட நாட்டினன் -சிறப்புக்கள் எல்லாம் நிரந்தரமாய் நடக்கும் படி பிரதிஷ்டை செய்தவர் -வினையால் அணையும் பெயர்
பொருந்தவமே–பொருந்தும் அவன் -எனப் பிரிக்க –

சிரி பாடியத்தைத் தரும் தவன் -ஏதலின் ஆவலின் சிந்தையின் தானடந்து
மேவலர் திருந்திட நாரணர்ஐந்திடம் சீர் அனைத்தும்
பொருந்திட நாட்டினன்
பரந்த நன் ஞான முதலியாண்டான்
பூங்கழல் பொருந்து அவம் போக்கும் -என்க —

எம்பெருமானார் நியமனத்தால் எழுந்து அருளி ஐந்து இடங்களில் அங்கு உள்ளாரைத் திருத்தி
முதலி யாண்டான் பஞ்ச நாராயண பிரதிஷ்டை செய்து அருளினார் -எனபது வரலாறு –

—————————————————————————————————–

அவமே பிறப்பைக் கழிக்கும் அளியத்த மாநிடங்காள்
நவமேய் வியப்புப் பொறி பல கண்டும் நவையில் நைந்தீர்
பவமே கடத்தும் பெருங்கலன் ஆண்டான் பரிந்து அருளின்
திவமே எடுத்துச் செலும் பொறி சீரெதி சேகரனே –23-

நவமேய் வியப்புப் பொறி -புதுமை பொருந்திய வியக்கத் தக்க யந்திரங்கள்
நவையில் நைந்தீர் -குற்றம் மெலிந்தீர்
பவம் -சம்சாரம்
பெருங்கலன் -பெரிய கப்பல்
ஆண்டான் பரிந்து அருளின்
திவம் -பரமபதம்
எடுத்துச் செலும் பொறி -ஆகாய விமானம் –

மாநிடங்காள் கண்டும் நவையின் நைந்தீர் ஆண்டான் பரிந்து அருளின் சீர் எதிசெகரன் பெரும் கலனும் பொறியும் ஆவான் -எனக் கூட்டுக –
பெரும் கலன் என்பதற்கு ஏற்ப -பவம் எனபது சம்சார சமுத்ரம் எனக் கொள்க -இஃது ஏகதேச உருவகம்
கடத்தும் என்றமையின் அநிஷ்ட நிவ்ருத்தியும்
எடுத்துச் செலும் பொறி -என்றமையின் இஷ்ட பிராப்தியும் சொல்லப் பட்டன –
இப்பெரும் கலனும் பொறியும் கொண்டு நவை நீங்குமின் -எனபது குறிப்பு எச்சம் –

——————————————————————————————————

கரம் காலில் சாடிக் கடியவும் ஆண்டான் கருணை நின்பால்
வரும் காறும் வாடிப் பசியினுன் வாசலில் மாழ்கி நிற்கும்
அரும் காதல் நம்பி வழுதி வள நாட்டு அடியரைப் போல்
மருங்கு ஆதரத்தொடு அழைத்து நாயேற்கும் வழங்கு அருளே –24–

கரம் காலில் சாடிக் கடியவும் -கையினாலும் காலினாலும் கோபிக்கவும்
வரும் காறும் -வருகிற வரையிலும்
வாடிப் பசியினுன் வாசலில் -பசியின் வாடி உன் வாசலில் -என மாற்றுக
மாழ்கி நிற்கும் -வருந்தி இருக்கும்
அரும் காதல் -பக்தி யுடன்
நம்பி வழுதி வள நாட்டு அடியரைப் போல் -நம்பி திரு வழுதி வளநாடு தாசர்
மருங்கு -பக்கத்தில்
வழங்கு -கொடுக்க -வேண்டற்பொருள் வியங்கோள்

நம்பி திரு வழுதி வளநாடு தாசரை முதலி யாண்டான் கோபித்துக் கையாலும் காலாலும் துகைத்து இழுத்தவாறே
அவர் திண்ணையில் பட்டினியாய் ஒரு நாள் முற்றும் வேறே எங்கும் போகாதே கிடந்தார் –
ஆண்டான் மறு நாள் பட்டினியாய் வாசலில் கிடப்பதை அறிந்து அழைத்து -நீ போகாதே கிடந்தது -என் என்று கேட்ப
அதற்கு அவர் ஒரு நாள் பிடி சோறு இட்டவன் எல்லாப் படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறதில்லை நாய்
-நான் எங்கே போவது -என்றார் எனபது ஐதிஹ்யம் –

———————————————————————————————-

அருளாரும் ஆசான் அளித்திடும் ஆணைக்கு அநு குணமாத்
தெருளாரும் சீடன் செயலின் தருமக் கிழத்தி நேர்வான்
உருவாவன் உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால்
அரு அறமாம் நினைப்பாய் என ஆண்டான் அருளினனே –25-

அருளாரும் ஆசான் அளித்திடும் ஆணைக்கு -அருள் நிறைந்த ஆசாரியன் உத்தரவுக்கு
அநு குணமாத்-தக்கவாறு
தெருளாரும் சீடன் செயலின் தருமக் கிழத்தி நேர்வான் -தெளிவு நிறைந்த சீடன் தருமா பத்தினிக்கு சமமாவான்
உருவாவன் -சரீரமாவான் –
உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால் அரு அறமாம் -நினைத்த படி -நினைவு ரூபமாய் இருந்து உருவற்ற ஸூஷ்ம தர்மமும் ஆவான்
நினைப்பாய் என ஆண்டான் அருளினனே -இப்படி அருளிச் செய்தார் –

சீடன் ஆசான் அளித்திடும் ஆணைக்கு அநு குணமாகச் செயலின் தருமக் கிழத்தி நேர்வான்
சீடன் ஆசான் உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால் உரு ஆவான் –
சீடன் நினைப்பாய் அரு அறம் ஆம் என ஆண்டான் அருளினான் –

——————————————————————————————-

அருளி ராமானுசன் ஆசான் அடியார் இளம் பெருமாள்
மருளி ராமானசன் ஆண்டான் மருவு நன் கூற மன்னன்
மருவி ராமானுசன் கைச் சுகம் கண்டவன் மைந்தன் இங்கே
ஒருவிரா மாண்பில் நஞ்சீயரும் வாய் மொழி ஒதினரே –26-

ஆண்டான் -கருணை நிறைந்த எம்பெருமானார் உமக்கு ஆசார்யர்
இளைய பெருமாள் என்பவர் உம்முடைய சீடர்
மதி மயங்காத மனம் படைத்த கூரத் தாழ்வான் பழகும் நண்பர்
எம்பெருமானார் தம் கையில் வைத்துக் கொண்டாடின படியால் அவர் கைச் சுகம் கண்டவன் மைந்தன் –
நீங்காத மதிப்புடைய நஞ்சீயரும் இங்கே திருவாய்மொழி ஓதினர் –
அடியார் -சீடர்
மருள் இரா -மயக்கம் இல்லாத
மா நசன் -மனம் உடையவன்
மருவு நன் -பழகுபவன்
மருவு -பொருந்துகிற
ஒருவு இரா -நீங்குதல் இல்லாத -ஒருவு -தொழில் பெயர் -இரா ஈறு கெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம்

முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் -அவரைக் குழந்தைப் பருவத்தில் எம்பெருமானார்
கட்டில் அடங்காத பிரேமத்துடன் கையிலே எடுத்துக் கொண்டாடி அருளினார் எனபது வரலாறு –
நஞ்சீயர் திருவாய் மொழி யோதியது ஆண்டான் இடம் எனபது ஐதிஹ்யம் -கந்தாடை யாண்டான் இடம் என அரும் பதங்கள் கூறுகின்றன –

—————————————————————————————–

ஒதினார்க்கு ஆண்டான் ஒருமுறை யுன்பால் உணர்கிலராய்
ஓதினர் மீளவும் மந்திரம் எம்பார் உனை யடைந்தே
ஏதம் என்பாலது நீ பொறுக்கு என்ன இருவரும் கை
ஈதலின் ஏறல் எளிது எனல் ஆர்க்கும் எளிதலதே –27-

ஒரு முறை உன்பால் ஒதினருக்கு -என இயையும்
ஆர்க்கும் -சிறப்பு உம்மை
எளிது அலது -சுலபம் ஆனதன்று
முன்னரே ஆண்டான் இடம் மந்திர உபதேசம் பெற்று இருந்த ஒருவர்க்கு அதனை அறியாது மீண்டும் மந்திர உபதேசம் செய்து விட்டார் எம்பார் –
பின்னர் விஷயம் அறிந்து ஆண்டான் இடம் எழுந்து அருளி அடியேனது குற்றத்தை மன்னித்து அருளால் வேண்டும் என வேண்டினார்
அதற்கு ஆண்டான் -கிணற்றில் விழுந்த ஒருவனை இருவர் கை கொடுத்து எடுத்தால் ஏறுமவனுக்கும் எடுப்பவருக்கும் சுலபமாய் இருக்குமே
நீர் மந்திர உபதேசம் செய்ததில் என்ன தவறு இருக்கிறது -என்று அமைதியாகப் பதில் அளித்தார் எனபது ஐதிஹ்யம் –

————————————————————————————————————-

அலர் நங்கை தங்கும் அரங்கனைப் பல்லிளித்து அண்டி நின்று
பலனங்கை யாண்டான் படைத்தது என் கூரப் பதியொடு எனும்
வலனங்கை முத்தண்டு ஒளிர் வடிவேயுள் வடுக நம்பி
கலன் எங்கன் ஆண்டான் கழித்தன கொண்டு களித்தனனே –28-

அலர் நங்கை தங்கும் அரங்கனைப் பல்லிளித்து அண்டி நின்று பலனங்கை யாண்டான் படைத்தது என் கூரப் பதியொடு –
ஆண்டான் கூரப் பதியொடு -திருமகள் தங்கு அரங்கனை அண்டி நின்று-பல்லிளித்து அம் கை பலன் படைத்தது என் -என இயையும்
எனும் -என்று கூறும் -இதனை வடுக நம்பியோடு சேர்க்க –
வலனங்கை -வலத்திருக்கை –
முத்தண்டு ஒளிர் வடிவேயுள் வடுக நம்பி -த்ரி தண்டம் பிரகாசிக்கிற எம்பெருமானார் திவ்ய மங்கள விக்ராஹத்தையே நினைக்கின்ற வடுக நம்பி -வினைத் தொகை –
கலன்-பாண்டங்கள் –
எங்கன் ஆண்டான் கழித்தன -முதலி யாண்டான் உபயோகித்து விடப்பட்டன -பலவின் பால் பெயர் –
எனும் வடுக நம்பி ஆண்டான் கழித்தன கலன் எங்கன் கொண்டு களித்தனன் என்று கூட்டி முடிப்பது கொண்டு களித்தனனே –

மோஷத்திற்கு உட்பட எம்பெருமானாரே உடையவர் ஆதலின் அவர் தாராதது இல்லை –
ஆழ்வானும் ஆண்டானும் அரங்கனை யண்டிப் பல்லிளித்துப் கெஞ்சிப் பெற்ற பயன் யாது –என்று வடுக நம்பி பரிஹசித்தாராம்
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்தியும்
அதன் வியாக்யானமும் இங்கு அனுசந்திக்கத் தக்கன –
வடிவே -ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது -முக்கோல் ஏந்திய உடையவர் வடிவை யன்றிச் செங்கோல்
உடைய வடிவை -திருவரங்கச் செல்வனை -மனத்தில் கொள்ளார் -என்றபடி
தேக பந்துக்கள் சிலர் சின்னாள் தம் திரு மாளிகையில் இருந்து பின்னர் ஊர் சென்றனராக வடுக நம்பி தம் திரு மாளிகையைத்
தூய்மைப் படுத்தி ஆண்டான் ஆண்டு களித்த பழைய பாண்டங்களைக் கொணர்ந்து உபயோகித்துக் குறை தீர்ந்து மகிழ்ந்தார் -என்ப
-விலஷணமான ஆசார்ய சம்பந்தம் வாய்ந்தவர் ஆண்டு கழித்தன பழையன வேனும் தூயனவே எனபது வடுக நம்பி திரு உள்ளம் –
ஏதோ ஒருகால் அரங்கன் முன் பல்லிளித்தாலும் எம்பெருமானார் உறவே ஆண்டான் இடம் உறைந்து உள்ளது என்பதை உணர்க —

——————————————————————————————-

களி வண்டு அறைகின்ற தண் துழாய்க் கண்ணி யரங்கன் என்னும்
தெளி தண்டுறை நின்று தீர்த்தமது ஆடத் துயம் எனும் பேர்
ஒளி கொண்டுரை நின்ற மந்திரமுட் செல்படி எனத் தண்
ணளி மண்டுறைகின்ற ஆண்டான் அகமதில் கொண்டனனே –29-

அறைகின்ற -சப்திக்கின்ற
ஒளி -ஞானம் –
உரைநின்ற -கீர்த்தி நிலை பெற்ற
தண்ணளி -கிருபை
மண்டுறைகின்ற -மண்டு உறைகின்ற -என்க-மண்டு -மண்டுதளாக -நிறைந்து -என்றபடி –
அகமதில் -திரு உள்ளத்தில்

களிக்கும் வண்டுகள் முரலும் திருத் துழாய் மாலையை யணிந்த
திருவரங்கம் எனப்படும் தெளிந்த குளிர்ந்த துறையில் இருந்து நீராடுவதற்கு
த்வயம் என்னும் பெரிய ஞானப் பிரகாசத்துடன் கீர்த்தி பெற்ற மந்த்ரத்தை அத்துறையுள் இறங்குவதற்கு உரிய படி என்று
தண்ணளி நிறைந்து உறைகின்ற முதலியாண்டான் திரு உள்ளத்தில் கொண்டார் என்றவாறு –
மந்திர ரத்னம் எனப்படும் த்வயத்தைக் கொண்டு திரு வரங்க நாதரை அனுபவிப்பார் -என்றபடி –
பிரமாணத்தில் சிறந்தது த்வயம் –ப்ரமேயத்தில் சிறந்தது அர்ச்சை எனபது கருத்து –

———————————————————————————————————–

கொண்டலை யாண்ட விராமானுசன் அருள் கூர்ந்து ஒகுகால்
பண்டலை யாண்ட பழ மறையாம் எழுத்தின் பொருளை –
மண்டலை யான்டாற்க்கு அருளிட மைந்தன் மருவியதை –
மண்டலை யாண்டு அறிந்து அன்னது -வாங்கினர் பட்டருமே -30-

கொண்டலை யாண்ட -மேகத்தை ஒத்த -விராமானுசன் அருள் கூர்ந்து ஒகுகால்
பண்டலை யாண்ட பழ மறையாம் -பண்ணைத் தன்னிடம் உபயோகிக்கும் பழைய வேதம்
பழ மறையாம் எழுத்தின் பொருளை -பண்டைய வேதமாக விரியும் எழுத்து -பிரணவம் -ஓங்கார பிரபவா வேதா -என்றது காண்க –
மண்டலை யான்டாற்க்கு -பூமியில் தலைவரான முதலி யான்டானுக்கு
அருளிட மைந்தன் மருவியதை -கந்தாடை யாண்டான் -அதை மருவி
மண்டலை -நன்றாய் அனுபவித்தலை -தொழில் பெயர் –
யாண்டு -அங்கு
அறிந்து அன்னது -அப்படிப்பட்ட எழுத்தின் பொருளை –
வாங்கினர் பட்டருமே –

இராமானுசன் அருள் கூர்ந்து எழுத்தின் பொருளை ஆண்டாற்கு அளிப்ப –
மைந்தன் அதை மருவி மண்டலை அறிந்து பட்டரும் ஆண்டு அன்னது வாங்கினர் -எனபது –
எம்பெருமானார் ஒருகால் உகந்து அருள் கூர்ந்து பிரணவ அர்த்தத்தை ஆண்டானுக்கு அளிக்க
அதனை அவர் மைந்தன் பெற்று அனுபவிப்பதை அறிந்து
அவ்வரும் பொருளை அவர் இடம் இருந்து பட்டர் பெற்றார் எனபது ஐதிஹ்யம் –

—————————————————————————————————–

பட்டரைப் பூத்திடும் நம் பெருமாளின் பதமலரே
மட்டறு மா மகிழ் வேய்ந்திட வாய்ந்த வழி வடிவம்
நெட்டுறு நற்பேறு உடையவர் நீங்கின் உசாத் துணையாம்
விட்டில ஐம்படை என்று எமதாண்டான் விளம்பினனே –31-

பட்டரைப் பூத்திடும் -அரை பட்டு பூத்திடும் -என மாற்றுக -திருவரையிலே புஷ்பித்தது போலே பட்டு நம்பெருமாளுக்குப் பொருந்தி அழகு தருதல் காண்க
மட்டறு -அளவு இல்லாத
-ஏய்ந்திட -பொருந்த
வழி -உபாயம்
நெட்டுறு நற்பேறு -நீண்ட பெரிய நல்ல பலன் –
நீங்கின் உசாத் துணையாம் -பிரிந்து இருந்தால் பேசிப் பழகும் துணையாம்
விட்டில ஐம்படை -நீங்காதனவாகிய ஐம்படை -ஐம்படை உசாத் துணையாம் -என இயைக்க –

ஒரு கால் நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் கோடை கொண்டாடி உலாவி அருளும் போது வினவிய ஆழ்வானை நோக்கி
அனுபவ ஆனந்தத்தின் பெருக்காய் அமைந்த உபாயமாக நம் பெருமாள் திருவடி மலர்களையும் –
உபேயமாகத் திரு மேனியையும்
எம்பெருமானார் இல்லாத காலத்து உசாத் துணையாக நம்பெருமாள் ஏந்திய ஐம்படை களையும் கொண்டு இருப்பேன் –
என்று முதலியாண்டான் அருளிச் செய்ததாகக் கூறப்படுகிறது –

—————————————————————————————————————–

விளம்பிடும் ஐந்து நிலையினும் பண்பின் மிகுதியினால்
உளம்படு மன்பர்கள் உன்னும் வண்ணம் உருக் கொளலால்
வளம்படு வானம் வருதிரை வாரிதி மன்னு நிலை
இளம்படி யர்ச்சைக்கு அமிசம் என்று ஆண்டான் இயம்பினனே –32-

விளம்பிடும் ஐந்து நிலையினும் பண்பின் மிகுதியினால் -சாஸ்த்ரங்களில் சொல்லப்படும் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம்
என்று ஐந்து நிலைகளிலும் -குண உத்கர்ஷம் -இருட்டறையிலே விளக்குப் போலே வாத்சல்யாதி குணங்கள் அர்ச்சையிலேயே மிக்கு விளங்குகின்றன –
உளம்படு மன்பர்கள் -மனத்தில் உண்டான பக்தியை உடையவர்கள்
உன்னும் அவ வண்ணம் -நினைத்த படியே
உருக் கொளலால் -வடிவம் எடுத்துக் கொள்ளுதலால்
வளம்படு வானம் -செழிப்பு உடைய பரம பதம்
வருதிரை வாரிதி -அலை வீசும் ஷீராப்தி
மன்னு நிலை
இளம்படி யர்ச்சைக்கு -இன்று எழுந்து அருளப் பணிய இளைய -புதிய -திவ்ய மங்கள விக்ரஹத்தை உடைய அர்ச்சை நிலை க்கு –அமிசம் என்று ஆண்டான் இயம்பினனே –

எம்பெருமான் பக்தர்களுக்காக ஐந்து நிலைகள் கொள்கிறான் -அவற்றுள் எல்லாக் குணங்களும் புஷ்கலங்களாய் இருப்பதாலும்
பக்தர்கள் விரும்பிய படி எல்லாம் வடிவும் எடுப்பதாலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று அல்லாமல் எல்லாரும் கண்டு களிக்கும் அர்ச்சையே முக்கியமானது –
பரதவ வ்யூஹாதிகளை இன்று எழுந்து அருளப் பண்ணிய அர்ச்சையின் ஒரு பகுதியாகவே கொள்ளல் வேண்டும் -என்றபடி –
இங்கு -அங்குத்தைக்கு -பரமபத நாதனுக்கு உகந்து அருளின இடத்தை -அர்ச்சாவதாரத்தை -விபூதியாக சேஷமாக நினையாதே
இங்குத்தைக்கு -அர்ச்சாவதாரத்துக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்-என்று பணிக்கும் ஆண்டான் -ஈட்டு ஸ்ரீ ஸூ கதிகள் காணத் தக்கது –

———————————————————————————————–

இயம்பரும் அன்பினர் ஆண்டான் எதிரும எம்பார் இவர்கள்
பயம் பெறப் பல்கும் திரு நாட குழுவினுள் பட்டு நின்று இந்
நயம் பெரு நாளுள் புகுதலில் தப்பினர் நம்பெருமாள்
சயம் பெறுக என்று வழுத்தித் தழுவினர் தண்டன் இட்டே –33-

இயம்பரும் அன்பினர் –இயம்பரும் -சொல்ல முடியாத -இயம்ப அரும் அன்பராகிய
ஆண்டான் எதிரும எம்பார் இவர்கள் -எதிரும் -சந்திக்கும்
பயம் பெறப் பல்கும் -அச்சம் அடையும்படி பெருகும்

ஆண்டானும் எம்பாரும் ஆகிய இவர்கள் –
பயம் பெறப் பல்கும் திரு நாட குழுவினுள் பட்டு நின்று இந்
நயம் பெரு நாளுள் புகுதலில் -நாளில் உள்புகுதலின் -தப்பினர் நம்பெருமாள்
சயம் பெறுக என்று வழுத்தித் தழுவினர் தண்டன் இட்டே –என்று கூட்டி முடிக்க –

நம்பெருமாள் உத்சவம் கொண்டாடி அருளி தீர்த்தவாரியாகி உள்ளே எழுந்து அருளின வன்று மாலை ஆண்டானும் எம்பாரும் சந்தித்து
அஹங்கார மமகார தூஷிதராய் இருப்பார் பத்துக் கோடிப் பேர் நடுவே அதி ஸூ குமாரமான திரு மேனியைக் கொண்டு பத்து நாள்
எழுந்து அருளி நம் பெருமான் -அபாயம் இன்றி ஆஸ்தானத்துக்கு எழுந்து அருளித் தப்பின படி கண்டீரே -என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டு தழுவிக் கொண்டதாக ஐதிஹ்யம் –

—————————————————————————————

தண் திருக்கில் மனத்து ஆச்சானோடு மன்னி தண் திருப்பேர்
வண்டு இருக்கும் திருக் கோயிலில் மண்டலின் கண் துயிலைக்
கொண்டு இருக்கும் குணக் கொண்டலை யண்டி நீ கண்டிலை கைக்
கொண்டிருக்கும் அந் நடை கொண்டிலை யாண்டான் குண திசைக்கே –34-

தண் திருக்கில் மனத்து -குளிர்ந்த குற்றம் அற்ற மனமுடைய -தண் மனம் -திருக்கு இல் மனம் -என்று இயையும்
ஆச்சானோடு மன்னி தண் திருப்பேர் -ஆச்சானுடன் பொருந்தி குளிர்ந்த திருப்பேர் என்னும் திருப்பதியின் கண் உள்ள
வண்டு இருக்கும் திருக் கோயிலில் -பூக்கள் மாறாது இருத்தலின் என்றும் வண்டுகள் வாஸம் செய்யும் சந்நிதி அழகிலேயே
மண்டலின் -நன்கு அனுபவிப்பதனால்
கண் துயிலைக் கொண்டு இருக்கும் குணக் கொண்டலை -கண் துயிலைக் கொண்டு இருக்கும் நற்குணம் வாய்ந்த மேகம் போன்ற
எம்பெருமானை -வண்டு இருக்கும் திருக் கோயில் ஆதலின் அப் பூம் சோலையில் கொண்டல் வந்து படிந்தது -என்க
யண்டி -நெருங்கி
நீ கண்டிலை -உல் புகுந்து சேவித்திலை-
கைக் கொண்டிருக்கும் -ஏற்றுக் கொண்டு இருக்கும் -கை -தமிழ் உபசர்க்கம் –
அந் நடை கொண்டிலை யாண்டான் குண திசைக்கே –நடை -யாத்ரை -குண திசை -கீழ் திசை –
குண திசைக்குக் கைக் கொண்டு இருக்கும் நடை கொண்டிலை -என இயையும் –

ஆச்சானும் ஆண்டானும் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து கீழ் திசை நோக்கி எழுந்து அருளும் போது திருப் பேரைக் கண்டு உட்புக்குத் திருவடி
தொழவும் மாட்டாதே -அதனை விட்டு மேலும் கிழக்கே போகவும் மாட்டாதே திகைத்து நின்றனர் -என்பது ஐதிஹ்யம் –
பூவியல் பொழிலும் கோயிலும் கண்டு ஆவி உள்குளிர அப்படியே எதுவும் செய்ய மாட்டாது நின்றனர் -எனபது கருத்து –

—————————————————————————————–

மற்றது என் பேச மதிக்கும் தவமுனி மன்னிரவில்
உற்றதும் பள்ளி யொருமுறை ஒண் தமிழ்ப் பாவுரைப்ப
நற்றவன் ஆண்டான் உருகினன் நைதலின் நான் மறையே
சொற்ற விப்பா வெனத் தோன்றிடும் என்றவன் சொல்லிடினே –36-

தவமுனி மன்னிரவில் உற்றதும் பள்ளி -எம்பெருமானார் பள்ளி உற்றதும் -படுக்கை அடைந்ததும் –
நற்றவன் ஆண்டான் -நல்ல பாக்யசாலி
உருகினன் -முற்று எச்சம் –
சொற்ற -சொன்ன
அவன் -அந்த எம்பெருமானார் –
மதிக்கும் தவ முனிவன் இரவில் பள்ளி உற்றதும் ஒண் தமிழ்ப் பா உரைப்ப –
அதனைக் கேட்டு -நல் தவன் ஆண்டான் உருகினன் நைதலின்
சொற்ற இப்பா நான் மறையே வெனத் தோன்றிடும் என்றவன் சொல்லிடின் மற்றது என் பேச -எனக் கூட்டுவது

எம்பெருமானார் இரவில் திவ்ய ப்ரபந்தம் அனுசந்திப்பது வழக்கம் -ஒரு நாள் பள்ளிக் கட்டிலில் ஒரு பாட்டை அனுசந்திப்பதைக் கேட்டு
முதலியாண்டான் பரவசராய் ஈடுபட்டு உருகினார் -அதனைக் கண்ட எம்பெருமானார் -வேதம் வால்மிகி வாயிலாக ஸ்ரீ ராமாயனமாய் வந்தது போலே
ஆழ்வார் வாயிலாகத் திருவாய் மொழியாய் அது வந்து திருவவதரித்தது -அதனால் அன்றோ இவர் பரவசரானார் -என்று அருளிச் செய்தார் எனபது வரலாறு –
திருவாய் மொழியை வேதம் எனத் தீர்மானிப்பதற்கு எம்பெருமானாரே இவர் பரவசமானதைக் காரணமாகக் காட்டுவாராயின்
நம் போன்றவர் இவர் பெருமை பற்றிப் பேச என்ன இருக்கிறது என்க –

——————————————————————————–

சொல்லரும் பாவலர் நங்கை துணைவன் துணை யடிமேல்
பல்லரும் பாவலர் நா வீறுடைய பராங்குசன் தன்
நல்லரும் பாவலரும் கொள் கருத்தை நனியினிப்பச்
சொல்லரும் பாவலன் தொல் புகழ் ஆண்டான் துணை நமக்கே –37-

சொல்லரும் பாவலர் நங்கை துணைவன் வருணிக்க முடியாத -பாவு அலர் நங்கை -பரந்த மலரிலே வசிக்கும் திருமகள் –
துணை யடிமேல் –கேள்வனுடைய இரண்டு திருவடிகள் விஷயமாக
பல்லரும் -பல் அரும் பா -பழ அருமையான பாடல்கள்
பாவலர் நா வீறுடைய பராங்குசன் தன்-அலர் -விரியும் -நா வீறு -வாக்கு வன்மை
நல்லரும் பாவலரும் -நல்ல அருமையான பாக்களில் வல்ல புலவர்களும் -இனி -நல்லவர்களும் என்னவுமாம் –
கொள்-ஏற்கும் –
சொல்லரும் பாவலன் -சொல் அரும்பு ஆவலன் -சொல்லுவதில் அரும்புகின்ற ஆவலை உடையவன் -சொல்லுகிற அரிய பாவலன் -என்னவுமாம்

சொல்லரும் -என்று வருணிக்க இயலாமையை அலர் நங்கை துனைவனுக்குச் சேர்க்க –
திருமாலவன் கவி -யாதலின் -நங்கை துணைவன் -எனப்பட்டது –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன ஆயிரம் -ஆதலின் -அடிமேல் –பா -எனப் பட்டது
பராங்குசன் தன் கருத்தை என இயையும் -அக்கருத்து நல்லரும் பாவலரும் கொள்வது -என்க

பராங்குசன் கருத்தைச் சொல்வதில் ஆவல் பூண்டு பேர் படைத்த முதலி யாண்டானே திரு வாய் மொழியின்
கருத்தை அரிய நமக்குத் துணையாவார் எனபது கருத்து –
ஆண்டான் இனிப்பச் சொல்லும் கருத்துக்களை அடுத்த இரண்டு பாடல்களில் காண்க –

————————————————————————————————–

நமக்கருள் கூர் குருகூர்ச் சடகோபர் நமன் தமரால்
தமக்கலைப் பூணுணும் அவ்வல்லல் கண்ணன் தவிர்த்தனனா
அமைக்கும் அவ்வல்லல் அவன் கரம் விட்டதாகக் கொண்டடியார்
தமக்கும் தகும் என ஆண்டான் அமைவுரை சாற்றினனே –38-

நமன் தமரால் -யம தூதரால்
அலைப் பூணுணும் அவ்வல்லல் -அலைப் பூண் உணும் அவ்வல்லல் -அலைப்புண்டுபடும் அந்தத் துன்பம்
தவிர்த்தனனா -போக்கினனாக
அமைக்கும் அவ்வல்லல் -அருளிச் செய்து வைத்த அந்தத் துன்பம்
அவன் -அந்தக் கண்ணன்
கரம் விட்டதாகக் கொண்டடியார் தமக்கும் -கை விட்டதாகக் கொண்டு பாவித்து பாகவதர்களுக்கும் பொருந்தும் –

நமன் தமரால் நேரும் அல்லல் பாகவதர்களுக்கு இல்லை என நூல்கள் சொல்லும் -அங்கன் இருக்க -நம்மாழ்வார் அவ்வல்லலைத் தமக்குக் கண்ணன்
தவிர்த்ததாகக் கூறுவது எங்கனம் பொருந்தும் -என்ற கேள்விக்கு ஆண்டான் இருத்த விடை இப்பாடளில்கூரப் படுகின்றது

பகவத் சம்பந்தம் உடையாருக்கு அவ்வல்லல் இல்லை எனபது உண்மையே -ஆனால் கண்ணனைப் பிரிந்து வருந்தும் நம்மாழ்வார் ஆற்றாமை
மீதூர்ந்து ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரன் தம்மைக் கை விட்டதாகவே நினைத்து விட்டார் –
விடவே பகவத் சம்பந்தம் நீன்கினமையினால் நமன் தமரால் நேரும் அல்லலும் வந்தது தான் என்று அவர் பாவித்தார் –
கண்ணன் வந்து கலக்கவே -வந்ததாகப் பாவித்த அவ்வல்லலைக் கண்ணன் அகற்றி விட்டதாகக் கூறுவது பொருந்தும் எனபது ஆண்டான் அருளிய விடை –
இங்கு -தலைப் பெய்காலம் -என்ற திருவாய் மொழிப் பாசுரமும் -பகவத் அலாபமேயான பின்பு யம வச்யதையும் வந்ததே யன்றோ -என்று
அந்த யம வச்யதை போம்படியாக -என்று ஆண்டான் நிர்வஹிக்கும் படி -என்ற ஈடு வியாக்யானமும் அறிதற்கு உரியன –

————————————————————————————————————————

சாற்றிடும் ஒத்தல் எம் பெம்மான் தனக்குளம் ஒத்திருத்தல்
மாற்றொரு பற்றறும் தன்மை கண் வானத்து வைத்தல் அன்பர்
ஆற்றலை மாற்றல் அழகினில் உற்றார் அழிப்பெனவும்
மாற்றுரை யாண்டான் மகிழ வழங்கி யருளினனே –39-

சாற்றிடும் -சொல்லப்படும் -எம் பெம்மான் தனக்கு -எனபது முன்னும் பின்னும் கூட்டக் கடவது –
எம் பெம்மான் தனக்கு ஒத்தல் -எம் பெம்மான் தனக்கு உளம் ஒத்திருத்தல் -என்றதாயிற்று
எம் பெம்மானோடு ஒத்தே -திருவாய் மொழி -8-8-6-என்னும் இடத்து ஒத்தலாவது உளம் ஒத்து இருத்தல் எனவும்
கண் வானத்து வைத்தல் -மற்று ஒரு பற்று அறும் தன்மை -அதாவது ஆகாசத்தை நோக்கி அழுவன் -திருவாய் மொழி -5-8-4- என்னும் இடத்து –
ஆகாசத்தை நோக்குதலாவது -வேறு பற்று அற்ற தன்மையை நினைத்தால் -நிராலம்ப நதையைப் பார்த்தல் -எனவும்
உற்றார் அழிப்பு -அழகினில் அன்பர் ஆற்றலை மாற்றல் -அதாவது -உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் -திருவாய் மொழி -5-6-7-என்னும்
இடத்து உற்றார்களை சௌந்தர்யாதிகளால் அழித்தல்-வழி இழந்து ஈடு படச் செய்தல் -எனவும்
மாற்றுரை ஆண்டான் மகிழுமாறு அருளினார் -எனபது –
ஆண்டான் அருளும் மாற்றுரையின் விளக்கத்தை வல்லார் வாய்க் கேட்டு மன மகிழ்க -இங்கு விரிப்பில் பெருகும் –

———————————————————————————————–

அருந்தவன் ஆண்டான் புதுவை மன் சொல்லை அறைந்து குரு
தரும் தவறில் நலத்தார்க்கு விண் என்னலும் தானியல்பாய்
வரும் தவலில் லருள் வாயும் குருவே மதுர கவி
இருந்த வழி என ஆழ்வான் இயம்பி அருளினனே –40-

புதுவை மன் சொல்லை அறைந்து குரு-பெரியாழ்வார் -குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அநு கூலராய் -என்னும் திரு வாக்கை -பிரமாணமாகச் சொல்லி
தரும் தவறில் நலத்தார்க்கு -குற்றம் இல்லாத நன்மையாளரான சிஷ்யர்களுக்கு
குரு தவறு இல் நலத்தார்க்கு விண் தரும் -என இயைக்க –
தரும் -செய்யும் என் வினை முற்று -விண் -மோஷம் -என்னலும் -என்று சொன்ன அளவிலே
தானியல்பாய் வரும் -தானே இயற்கையாக உண்டான -நிர்ஹேதுகமான -என்றபடி –
தவலில் -தவழ இல் -கேடு இல்லாத எஞ்ஞான்றும் உள்ள
அருள் வாயும் குருவே -க்ருபா மாத்திர பிரசன்னா ஆசார்யனே
மதுர கவி
இருந்த -முடிவு கட்டிக் கைக் கொண்டு இருந்த
வழி -முக்தி சாதனம் –
என ஆழ்வான் இயம்பி அருளினனே —

புதுவை மன் சொல்லை அறைந்து குரு தவறு இல் நலத்தார்க்கு விண் தரும் என்னலும் ஆழ்வான் தான்
இயல்பாய் வரும் தவல் இல் அருள் வாயும் இல் நலத்தார்க்கு விண் தரும் என்னலும்
ஆழ்வான் தான் இயல்பாய் வரும் தவல் இல் அருள் வாயும் குருவே மதுரகவி இருந்த வழி என இயம்பி யருளினன் -என்று கூட்டி முடிக்க –

பெரியாழ்வார் ஸ்ரீ ஸூ க்திப்படி குருக்கள் அநு கூலராய் நடப்பவர்க்கே முக்தி அருளுவர் என்ற ஆண்டானைப் பார்த்து
மதுரகவி காட்டும் தொல் வழியில் செல்லும் நமக்கு நிர்ஹேதுக கிருபை உடைய ஆசார்யனே முக்தி சாதனம் என்று ஆழ்வான் அருளிச் செய்தார் என்ப –

அனுவர்த்தன பிரசன்ன ஆசார்யனாலே மோஷம் எனபது ஆண்டான் திரு உள்ளம் –
க்ருபா மாத்திர பிரசன்ன ஆசார்யனாலே மோஷம் எனபது ஆழ்வான் திரு உள்ளம் –
அதனை ஏற்று அருளினார் ஆண்டான் -அதுவே அடுத்த பாசுரத்தில் பேசப் படுகிறது –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: