ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி -1-20-பாசுரங்கள்–ஸ்ரீ உ -வே -திரு நகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் இயற்றி அருளிய திவ்ய பிரபந்தம் –

பூவில் தொடக்கி -மங்களம் என்பதால் -காப்பு செய்யுள் –
வண்டு -ஷட்பத நிஷ்டர்கள் -ஆச்சார்யர்கள் -தேக குணங்களும் ஆதரிக்கத் தக்கன ஆதலால் -ரமிய பொறி வண்டு -என்கிறார்

பூதூர முந்துறப் போந்திழி யாண்டான் புகழ் களிறும்
பூதூர வந்தமிழ் அந்தாதிப் பாவினில் போற்றிடற்குப்
பூதா ரமியப் பொறி வண்டு பாடிப் புகழ் செய் பெரும்
பூதூரன் புண்ணியன் பூம் கழல் சென்னிப் புணர்த்துவனே-

பூதூர முந்துறப் போந்திழி யாண்டான் –
பூ-பூமி தூரம் முந்துற -வெகு தூரம் முன்னேறும்படி போந்து -வந்து -இழி -திருவவதரித்து அருளிய -ஆண்டான் -முதளியாண்டனுடைய
புகழ் களிறும் -புகழ்கள் -சீர்மைகளை –
இறும் பூதூர -ஆச்சர்யம் உண்டாம்படி
வந்தமிழ் அந்தாதிப் பாவினில் போற்றிடற்குப்
பூதா ரமியப் பொறி வண்டு பாடிப் புகழ் செய் –
பூ -புஷ்பங்களில் -தூ -சிறகுகளை யுடைய ரம்யா -அழகான -பொறி -புள்ளிகளையுடைய வண்டு -வண்டுகள் பாடிப் புகழ் செய் -இசை பாடிப் பரவும்
பெரும் பூதூரன் புண்ணியன் -ஸ்ரீ பெரும் பூதூரில் திரு வவதரித்தவரும் -உபாய ஸ்வரூபமான எம்பெருமானாரின்
பூம் கழல் சென்னிப் புணர்த்துவனே-
அழகிய திருவடிகளை எனது தலையில் சேர்விப்பன்-

———————————————————————-

திருமகள் கேள்வன் திருவடி நிலையாகிய ஸ்ரீ சடகோபரின்
ஸ்ரீ பாதத்திற்கு ரஷையாய் அமைந்த ஸ்ரீ ராமானுஜரின்
ஸ்ரீ பாதுகையாகிய முதலி யாண்டானது திருவடியை முதலில் சூடுவோம்
எனக் குரு பரம்பரை ஒருவாறு அனுசந்திக்கப் பட்டுள்ளமை -காண்க –பாதுகா பரம்பரை கூறப்பட்டமையும் கவனிக்க –

அழகு அறிந்தவராய் வல்வினை கெட அம்புயத்தாள்
கொழுநன் அடிநிலை யாம் சடகோபர் குளிர் நளினக்
கழலின் அரணாம் இராமானுசர் திருக் கால் நிலையாய்த்
தொழு நல குலன் அம் முதலியாண்டான் அடி சூடுவமே -1-

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறுமானோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடம் கடலை மேயார் தமக்கு –பெரிய திருவந்தாதி-31-பாசுரத்தின் உட்கருத்தைக் கொண்டு முதல் இரண்டு அடிகள்

அழகு -உபாயம் -கர்மத்தினால் அன்றி சர்வேஸ்வரனால் பாபத்தைப் போக்குகை இங்கே அழகு என்னப்பட்டது
வல்வினை கெட அழகு அறிந்தவராய் -எனவே இப்பொருள் தோன்றுவதை உணர்க –
வல்வினை கெட அழகும் அறிந்தவராய் -என மாற்றுக
அறிந்தவராய் -என்னும் எச்சம் -அடிநிலை யாம் -என்னும் இடத்தில் உள்ள ஆம் -என்னும் வினை கொண்டு முடிந்தது -ஆம்-ஆகும்
அம்புயத்தாள் கொழுநன் -திருமகள் கேள்வன் –
அடிநிலை -பாதுகை
கழலின் அரணாம்-ஸ்ரீ பாத ரஷையாம்
தொழு நல் குலன் -தொலைத் தகுந்த நல்ல திரு வம்சத்திலே திருவவதரித்தவர் –
சூடுதல் -தலைக்கு அணியாகக் கொள்ளுதல் –
சூடுதல் கூறவே அடி எனபது மலர் ஆயிற்று –
முதலியாண்டான் திருவடி நம் சென்னிக்கு மலர்ந்த பூ -என்க-

திருமகள் கேள்வனது ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ சடகோபன்
ஸ்ரீ சடகோபர் ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ ராமானுஜன் –
ஸ்ரீ ராமானுஜன் ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ முதலியாண்டான் –ஸ்ரீ வைஷ்ண சம்ப்ரதாய ஸ்ரீ பாதுகா பரம்பரை –

————————————————————————————————–

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் அயோத்தியர் கோன் புதல்வன்
காட்டில் இளையவன் புரி பணி இன்பம் கருதலால்
மீட்டும் இடைக்குடிக்குப் பின்னவனாயினும் வெல்கிலனாய்
வீட்டுக் குரியன் முதலியாண்டான் என மீண்டனனே–2-

வீட்டுக் குரியன் -பரம புத்தத்துக்கு உரிமை பூண்டவன்
புதல்வன் கருதலால் மீட்டும்– இடைக்குடிக்குப் பின்னவனாயினும் வெல்கிலனாய் முதலியாண்டான் என மீண்டனனே–என்று கூட்டிப் பொருள்
வெல்கிலனாய்-கார்யத்தில் வெற்றி பெறாதவனாய் –

—————————————————————————————————

மீண்டவன் முத்தண்டு அதிபதி தாளிணை மேவி நின்று
வேண்டிய நற்பணி பண்ணி விளங்கினன் வெங்கலியில்
ஆண்டதன் பாதுகம் என்னவும் அன்னவன் வென்று அரங்கம்
மீண்டு அருளும் தனை மேலுற வைணவம் ஆண்டனனே –3-

மீண்டவன் முத்தண்டு அதிபதி தாளிணை மேவி நின்று -அங்கனம் மீண்ட ஸ்ரீ முதலி யாண்டான் எம்பெருமானார்
வேண்டிய-விரும்பிய -நிறைய என்னவுமாம்
வெங்கலியில்-நற்பணி பண்ணி விளங்கினன்
ஆண்டதன் பாதுகம் என்னவும் -ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் கொடுக்கப் பட்ட தனது பிரதிநிதியாக ஆண்ட பாதுகை என்று சொல்லும்படியாகவும்
பிற்பட்டுப் பணி புரிதலோடு ஸ்ரீ பாதுகையே ஆளவும் மீண்டனன் -என்றும் சொல்லும் படியாக என்றதாயிற்று
அ ன்னவன் வென்று அரங்கம் -அந்த எம்பெருமானார் திக் விஜயம் செய்து ஸ்ரீ ரெங்கத்துக்கு
மீண்டு அருளும் தனை மேலுற வைணவம் ஆண்டனனே –
மீண்டும் எழுந்து அருளுகிற வரையிலும் ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யம் ஆண்டனன் –
இளையனாய் இலக்குவன் போலே பணி புரிய விரும்பி மீண்டு பலராமனுக்குத் தம்பியாயினும் பணி இன்பம் கண்டிடாத ஸ்ரீ ராமன்
கொடிய கலி காலத்திலே முதலி யாண்டானாய் எம்பெருமானாருக்கு நற்பணி புரிந்து அடிமை இன்பம் கண்டு விளங்கினான் -முதல்
இரண்டு அடிகளில் கூறப்பட்ட பொருள்
மேலும் தான் இல்லாத காலத்தில் அழகுற அரசாண்ட தனது ஸ்ரீ பாதுகை போலவும் ஆக ஆசைப் பட்டனனாம் ஸ்ரீ ராம பிரான்
அக்குரையையும் எம்பெருமானார் ஸ்ரீ ரெங்கத்தை விட்டுத் திக் விஜயத்திற்கு எழுந்து அருளி இருக்கும் போது அவருக்குப் பதிலாக
முதலி யாண்டானாய் ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யத்தை நன்கு நிர்வஹித்துத் தீர்த்துக் கொண்டான் -எனபது
பின்னிரண்டு அடிகளில் கூறப்பட்ட பொருள் –

—————————————————————–

ஆண்டவன் பாதுகம் ஆழ் கடல் வையம் திருத்தொணாது
மீண்டிடும் மாறன் அடி நிலை மேதினி யொண் பொருளே
காண்டலை வேண்டும் கவினுறு கோலேதி காவலன் தாள்
பூண்டிடும் அந்த முதலி யாண்டான் தனிப் போற்றுவமே –4-

ஆண்டவன் பாதுகம் ஆழ் கடல் வையம் திருத்தொணாது மீண்டிடும்
ஸ்ரீ சடகொபனே ஆண்டவன் பாதுகம் -அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -என்று திருத்த ஒண்ணாது மீண்டமை காண்க –
மாறன் அடி நிலை -ஸ்ரீ ராமானுஜர்
மேதினி -பூமி -ஆகு பெயராய் பூமியில் உள்ளோரைக் கூறும்
யொண் பொருளே -அவ் வொண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன் -என்றபடி ஸ்ரீ ராமானுஜர் உலகத்தார் மஹார்த்தத்தைத் தெரிந்து கொள்வதை விரும்புதல் காண்க
கவினுறு கோலேதி காவலன் தாள் -கவின் உரு கோல் எதி காவலன் -அழகிய முக்கோல் ஏந்தும் எதிராஜர்
பூண்டிடும் அந்த முதலி யாண்டான் தனிப் போற்றுவமே அப்படிப்பட்ட -அதாவது -எதி காவலன் திருவடிகளை அணியாகக் கொண்ட –
இனி -திருவடிகட்கு அணியாய் -அழகு செய்கிற என்றலுமாம் -மற்றும் சொல்ல முடியாத பெருமை உடைய என்னளுமாம் —

எம்பெருமானார் ஸ்ரீ பாதுகை உலகைத் திருத்த முடியாததாயிற்று –
ஆழ்வார் பாதுகையோ உலகினர்க்குப் பொருள் தெரிவிப்பதிலேயே இருப்பதாயிற்று
எம்பெருமானார் ஸ்ரீ பாதுகையோ முதலியாகும்படி ஆண்டு வருகிறது –
ஆதலின் ஒப்பற்ற அப்பாதுகையாகிய முதலி யாண்டானைப் போற்றல் வேண்டும் -என்றபடி –

—————————————————————————————-

போற்றுவம் வம்மின் முதலி யாண்டானைப் புவியில் உள்ளீர்
நாற்றிசையும் புகழ் நண்ணும் இராமானுசன் அடிக் கீழ்
ஏற்றுயர் வாழ்வு மற்று எங்கணும் தாழ்வு தவிர்ந்த வற்காம்
பேற்றினை எய்தலின் பாதுக மா நிலை பெற்றதற்கே –5-

போற்றுவம் வம்மின் முதலி யாண்டானைப் புவியில் உள்ளீர்
நாற்றிசையும் புகழ் நண்ணும் இராமானுசன் அடிக் கீழ்
ஏற்றுயர் வாழ்வு-உயர் வாழ்வு ஏற்று -என மாறுக
மற்று எங்கணும் -வேறு எந்த இடத்திலும்
தாழ்வு தவிர்ந்த வற்காம் பேற்றினை -தாழ்வு தவிர்ந்து அவர்க்கு ஆம் பேற்றினை -அந்த ஸ்ரீ ராமானுகற்கு உபயோகப்படும் பயனை
பெற்றுதற்குப் போற்றுவம் -என இயைக்க –
புவியில் உள்ளீர்-மற்று எங்கணும்-தாழ்வு தவிர்ந்து
நண்ணும் இராமானுசன் அடிக் கீழ் -உயர் வாழ்வு ஏற்று
அவர்க்கு ஆம் பேற்றினை
எய்தலின் பாதுக மா நிலை பெற்றதற்கே
முதலி யாண்டானைப் போற்றுவம் வம்மின்-என்று கூட்டிப் பொருள் கொள்க –
தாளிணைக் கீழ் அன்றி மற்று எங்கும் பாதுகைக்குத் தாழ்வு தானே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்ற ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாக்கை நினைக்க –

————————————————————————

பெற்றவன் சீரெதி நாயகன் பேரருள் நூல்கள் எலாம்
கற்றவன் காமுறு நல் ஒழுக்கத்தினன் கைப்ப்படுமோர்
நற்றவன் நானிலத்தீர் எம தாண்டானளிரடியே
உற்றவம் நீங்குமின் உங்கட்கு இல்லை மற்றுறு துணையே –6-

நற்றவன் -நல்ல தவத்தை உடையவன் -தவம் -சரணா கதி
நளிர் அடி -குளிர்ந்த திருவடி
உற்று -ஆஸ்ரயித்து
அவம் -வீணாதல்
அவம் நீங்கல் -பயன் பெறல் –

———————————————————————————————————-

உறு துணை யாண்டான் ஒருவன் செய் தீங்கின் உடையவர் காண்
நெறி படர் காலத் தடியிணை நீழலின் நீங்கலர் ஊண்
பெறுகிலர் வாடப் பெரிது நீ கொங்கிற் பிராட்டியகத்து
அறு சுவை யுண்டி அடி நிலை யாகி அளித்தனையே –7

ஒருவன் -சோழ அரசன் -பெயர் சொல்லவும் நாக்கூசசதலின் ஒருவன் என்றது
வாய் விட்டுச் சொல்ல ஒண்ணாத் தீங்கு ஆதலின் அடை கெடாது தீங்கு எனப்பட்டது –
நீங்கலர் -வினையால் அணையும் பெயர் -ஊண் பெறுகிலர் -முற்று எச்சம் -பெரிதும் வாட என மாறுக –

சோழ அரசனால் துன்புறுத்தப் பட்ட ஸ்ரீ ராமானுஜர் பரிவாரத்தோடு காட்டின் வழியே நடந்து கஷ்டப்பட்டு கொங்கில் பிராட்டி
திரு மாளிகையை நடந்தார் –அப்பொழுது பசியால் வாடிய அடியார்கள் கொங்கில் பிராட்டி காட்டிய ஸ்ரீ ராமானுஜர் பாதுகையால்
ஐயம் தீர்ந்து அந் நல்லாள் இல்லத்தில் அமுது செய்து பசியாறினர் எனபது வரலாறு –
உடையவர் அடி நிழலை விட்டு நீங்காதவர்கள் பசியால் வாட -அவ்வடியைத் தாங்கும் பாதுகை அன்னார் பசி வாட்டத்தைப் போக்கி
உறு துணையாவது என்க-பாதுகைக்கும் முதளியாண்டானுக்கும் அபேதம் கருதி இது கூறியது என்று உணர்க –

——————————————————————————————————

அளித்தனை யாண்டான் எதிபதி யாணையின் அன்று ஒரு கால்
துளித்தனை யன்பும் செலுத்தலர் தூய நெறிப் படரார்
களித்தனை வோரும் நலநெறி காணக் கழல் இணைகள்
குளித்தனை சாளக் கிராமப் படித்துறை கூடி நின்றே –8

கழல் இணைகள் குளித்தல் -திருவடிகளை நனைத்தல் –
குளித்தனை -குளித்தவனாய் -முற்று எச்சம் –அளித்தனை என்பதோடு முடிந்தது –
ஆண்டான் எதிபதி ஆணையில் அன்று ஒரு கால் சாளக் கிராமப் படித்துறை கூடி -சேர்ந்து -நின்று துளித்தனை –
யன்பும் செலுத்தலர் தூய நெறிப் படரார் கள்
அத்தனை வோரும் நலநெறி காணக் கழல் இணைகள்
குளித்தனை -அளித்தனை -என்று கூட்டி முடிக்க

உடையவர் மேலை நாடு எழுந்து அருளும் வழியில் சாளக் கிராமத்தில் உள்ளார் திருந்துமாறு அவர்கள் தீர்த்தம் கொள்ளும் துறையில்
எம்பெருமானார் நியமனத்தால் ஆண்டான் திருவடி விளக்கினாராக -அனைவரும் திருவடிகளை ஆச்ரயித்து உய்ந்தனர் எனபது வரலாறு –

———————————————————————————————

கூடலர் வெல்லும் குறை கழல் மன்னவர் முன்னருளை
நாடுநர் சென்னி நயந்தவர் தாள் நிலை தாங்குதல் போல்
ஏடுறு கீர்த்தி இராமானுசன் முன்னடி நிலையாம்
பீடுறு செம்மல் முதலியாண்டான் தனைப் பேணுவமே -9-

கூடலர் -பகைவர் –
நாடுநர் -எதிர்பார்ப்பவர்கள் -ந-பெயரிடை நிலை
ஏடு உறு கீர்த்தி -நூல்களில் குறிப்பிடத் தக்க புகழ்
அருளை நாடுநர் மன்னவர் முன் அவர் தாள் நிலை நயந்து சென்னி -தலையில் -தாங்குதல் போலே நாமும் இராமானுசன் முன்
அடி நிலையாம் பீடுறு செம்மல் முதலியாண்டான் தனைப் பெனுவம் என்று கூட்டுக –

மன்னவர் அருளை வேண்டுபவர் அவர் எதிரே பாதுகையைத் தாங்குவது போலே யதிராஜர் அருளை நாடும் நாமும்
அவர் எதிரே பாதுகையான முதலி யாண்டானைப் பேணல் வேண்டும் -என்க –
இதனால் ஆசார்யன் முன்னிலையில் சிஷ்யராகிய ஆண்டானைப் புகழ்தல் தக்கதே எனச் சமர்த்தித்த வாறாம்-

—————————————————————————————————————————–

பேணலம் மாற்புணர் வின்பும் பிரிவித் துயருமலால்
காணலர் கண்ணனின் காதலர் காயக் கலப்பினரைப்
பேணலர் ஆண்டான் துறவியர் பெம்மான் பெரும் பரிவன்
பேணலம் நின் வயிற் காண்பதி யாதெனப் பேசெனெக்கே–10-

பேண நலம் மால் புணர்வு இன்பம் -பேணத் தக்க நன்மையை உடைய எம்பெருமானோடு கலந்த ஆனந்தமும் –
பேணலம்-பேண நலம் -பேணும் அன்பு
காயக் கலப்பினர் -தேக பந்துக்கள்
துறவியர் பெம்மான் -எம்பெருமானார்
பெரும் பரிவன் -பரம பக்தர் –

ஆண்டான் கண்ணனின் காதலர் -பக்தர் -மாலுடன் புணர்வு இன்பமும் பிரிவுத் துயருமலால் வேறு இன்ப துன்பங்களைக் காண மாட்டார்கள் –
தேக பந்துக்களைப் பேணவும் மாட்டார்கள் -ஆயின் பெரும் பக்தரான எம்பெருமானாரோ தேக பந்துவான உம்மைப் பேணும் படியான
நலமும் கொண்டார் -அங்கனம் நும் வின் கண்ட அவரது நலத்தை யாது -எப்படிப் பட்டது -என்று அடியேனுக்கு அருளிச் செய்ய வேணும் -என்றபடி
எம்பெருமானார் தம்பால் புரியும் பரிவு ஆண்டானாலும் பேச இயலாதது எனபது கருத்து –
இனி பேணலம் என்பதற்குப் பேணத் தக்க நலம் -நன்மை -பக்தி -எனப் பொருள் கொண்டு ஆண்டானிடம் உள்ள நலம்
எம்பெருமானாரும் பேணும்படி அமைந்து இருத்தலின் அதனை ஆண்டானாலும் எடுத்து இயம்ப ஒண்ணாது என்னலுமாம்-
பக்தி இல்லாத ஏனைய சம்சாரிகளின் உறவு போல் அன்றி நலத்தால் மிக்க ஆண்டானோடு உண்டான உடல் உறவு விடல் அரிதாயிற்று என்று உணர்க
பாகவதர்கள் விஷயத்திலே ஏற்படும் கூடல் இன்பமும் பிரிவுத் துன்பமும் கண்ணன் இன்ப துன்பங்களை விட
வேறல்ல வாதலின் ஆண்டானை விடுதல் துன்பம் தருதலால் விடுகிலாது அவரை எம்பெருமானார் பேணினார் என்க –

————————————————————————————————

பேசினன் கண்ணன் பிறருறு மின்பமுபேரிடரும்
வீசில மற்றவர்க்கு அவ்வித மின்பிடர் மேவிடினும்
மாசிலன் யோகியர் மன்னன் என்றான் ஆண்டான் மனமருவும்
நேசன் என் நீங்கலன் நின்தனை நீத்தவர் நாயகனே –11

கண்ணன் கீதையில் பிறர் உறும் இன்பமும் பேரிடரும் மற்றவர்க்கு -வேருபட்டவர்க்கு -அதாவது சம்பந்தம் இல்லாதவர்க்கு -வீசில –
அவ்விதம் யோகியர் மன்னன் இன்பு இடர் மேவிடினும் மாசிலன் என்று பேசினன் –
ஆயின் நீத்தவர் நாயகன் மனமருவும் நேசனாய் நின்தனை என் நீங்கலன் -என்று கூட்டுவது
வீசில -பரவவில்லை -நீத்தவர் -துறந்தார் -நீத்தவர் நாயகன் -எம்பெருமானார்
இறை நிலை உணர்ந்த பரம பக்தரான எம்பெருமானாரும் பேணும் படியான பெருமை பேசப்பட்டது கீழே –
இங்கே தம் நிலை -ஸ்வ ஸ்வரூபம் உணர்ந்து எதிலும் தமக்குத் தொடர்பின்மை கண்டு முற்றும் துறந்த முனிவரான
எம்பெருமானாரும் தொடர்பு அறுத்து நீங்க முடியாத பெருமை கூறப்படுகிறது –
கண்ணன் பேசினது இது -ஆத்மௌபம் யேந சர்வத்ர சமம் பச்யதி யோ அர்ஜூன
ஸூகம்வா யதிவா துக்கம் ச யோகீ பரமோ மத -என்று
தனக்கு நேரும் மாகப் பேறு இழவுகளால் வரும் இன்ப துன்பங்களைப் பிறருக்கு நேர்ந்தவை போலே என்னுமவனே
பரம யோகி என்று இதற்கு எம்பெருமானார் பாஷ்யம் இட்டு அருளினார்
ஒருவனுக்கு நேரும் இன்ப துன்பங்கள் பிறரைப் பாதிப்பது இல்லை -ஏன்-அவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை –
அவ்விதமே தன்னை உணர்ந்த சிறந்த யோகி தனக்கு நேரும் ஸூ க துக்கங்களால் பாதிக்கப் படுவது இல்லை -ஏன் –
அறிவு வடிவனான அவனுக்கு இடையே கன்மத்தால் வந்த ஸூ க துக்கங்களில் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை அவன் உணருகிறான்
ஆகவே தொடர்பு இன்மை கொண்டு நிலை குலையாதவன் பரம யோகி என விளக்கம் காண்க –
ஆண்டான் அத்தகைய பரம யோகியான நீத்தவர் நாயகனே உம்மிடம் மனமருவும் நேசனாய் உம்மை ஏன் துறக்க வில்லை -என்றபடி –
வெறும் உடல் உறவு மாத்ரமன்றி பகவானோடு வேறுபடாத பாகவதர் ஆதலின் ஆத்ம சம்பந்தமும் கலந்து இருத்தலின்
ஆண்டான் உறவு எம்பெருமானார்க்கு விடற்கு அரியதாயிற்று-என்று அறிக –
ஆண்டான் எம்பெருமானாருக்கு சஹோதரி புதல்வர் -சந்யசிக்கும் போது ஆண்டானைத் தவிரத் தாம் சந்யசித்தத்தாகக் எம்பெருமானாரே
அருளிச் செய்வர் -மனமருவு நேசத்துக்கு அடி -பகவத் பாகவத கைங்கர்யத்துக்கு உறு துணை யாதல் -அது அடுத்த பாட்டினால் விளங்கும் –

——————————————————————————————————————————

நாயக நாண் மலர் நங்கை தமர் பணி நண்ணிடவும்
ஆயகன் ஞானம் அருமறை காணவும் அந் தமிழில்
வாயாக வுள்ளுறை உட்கொளவும் மீதி மன்னனுக்குத்
தீயகல் கேள்வி முதலி யாண்டான் உறு சீர் துணையே –12

ஆய் அகல் ஞானம் -ஆராயும் விசாலமான ஞானம்
அருமறை காணல்-உப நிஷாத்தின் உட்பொருளைத் தெரிதல் –
அகம் -தமிழுக்குத் தனிச் சிறப்பாய் அமைதலின் அந் தமிழில் வாய் அகம் -எனப்பட்டது -வாய்த்து இருக்கிற அகம் -என்க -வினைத்தொகை –
தீ அகல் கேள்வி -தீமை நீங்கிய கேள்வி யறிவு –

பகவத் பாகவத கைங்கர்யத்துக்கும் -அதனைப் பயனாகக் கொண்ட உபய வேதாந்த நிர்வாஹத்துக்கும்
எம்பெருமானாருக்கு முதலி யாண்டான் உறு துணை -என்றதாயிற்று –

——————————————————————————————————————

துணை என்று உறவினர் சொத்துப் பறித்திடச் சூழ்ந்து நிற்பர்
அணை என்று அணுகுவர் அல்லல் படுத்திட ஆயிழையார்
துணை என்று எதிபதி கோல் போற்றுறவாத் தர முடையோன்
புணை என்று அடைதிர் முதலியாண்டானைப் புகும் இன்பமே –13

முதல் துணை சஹாயத்தையும் -இரண்டாம் துணை நண்பனையும் குறித்தன -கோல் போல் துணை என்று எதிபதி
துரவாத் தரமுடையோன் ஆகிய முதலி யாண்டான் என்க –
துறவிகட்கு கோல் சகாவாகக் கூறப்படுதல் காண்க –
த்ரி தண்டத்தை விடில் அன்றோ நம் முதலி யாண்டானை விடுவது -என்று எம்பெருமானார் அருளிச் செய்தமை பிரசித்தம் –
புணை -தெப்பமாய் -பற்றுக் கோடு இங்கே குறிக்கப் படுகிறது –

————————————————————————————————————————-

இன்பங்கண் நேரினும் இன்னல்கள் ஏறினும் இந்நிலத்தீர்
என் பங்கம் எந்தை இராமானுசன் அடியேய் நிலையாம்
அன்பங்கண் ஆர்ந்த முதலி யாண்டான் என் முடி யமர
மன் பங்கயத்தாள் வழங்கு நற் பங்கயத்தாள் உடனே –14

ஏறினும் -அதிகமானாலும்
என் பங்கம் -என்ன குறை
அம கண் அன்பு ஆர்ந்த என இயையும்
அம கண் -அழகிய கண் -ஆர்ந்த -நிறைந்த
மன் -மால்
பங்கயம் தாள் -தாமரை போன்ற திருவடிகளை -பங்கயத் தாளுடன் -ஸ்ரீ லஷ்மீ தேவியுடன் –
வழங்கும் -கொடுக்கும் —செய்யும் என் -வினை முற்று –
இராமானுசன் அடியேய் நிலையாம் முதலி யாண்டான் என் முடி அமர மன் பங்கயத்தாள் உடன் பங்கயத்தாள் வழங்கும் –
இந் நிலத்தீர் இனி இன்பங்கள் நேரினும் இன்னல்கள் ஏறினும் பங்கம் என் -என்று கூட்டுக
பெற வேண்டியதைப் பெறுதலால் இடையே வரும் இன்ப துன்பங்களுக்கு இடைய வேண்டா -எனபது கருத்து –

——————————————————————————————————–

உடன் உறைந்து எம்பெருமானார் கரமதிலுள் அடங்கித்
திடமுடை வைணவம் வாய்ந்து பவித்திரம் சேர்ந்து எதிக்கும்
விடலரும் தன்மையின் மால் என நூல்கள் விளம்புதலின்
படர் புகழ் ஆண்டான் த்ரிதண்டு எனச் சொற் படைத்தனனே –15

மால் என -விஷ்ணு என்று –சொல் -பேர்
எம்பெருமானாருக்கு ஆண்டான் த்ரி தண்டமாகவும் ஆழ்வான் பவித்ரமாகவும் கொள்ளப் படுவர் –
அதில் ஆண்டான் த்ரி தண்டமாகக் கொள்ளப் படுவதன் கண் உள்ள பொருத்தம் காட்டப் படுகிறது இப்பாட்டில் –
த்ரி தண்டம் எதிராசர் கூடவே இருப்பது -ஆண்டானும் எதிராசருடன் உறைபவர் –
த்ரி தண்டம் கைக்குள் அடங்குவது -ஆண்டான் எம்பெருமானார் கைக்குள் -வசத்தில் -இருப்பவர் –
த்ரி தண்டம் திடமான வைணவம் -மூங்கில் மூங்கில் சம்பந்தம் வாய்ந்தது –ஆண்டான் -திடமான வைணவம் ஸ்ரீ வைஷ்ணவத் தன்மை வாய்ந்தவர் –
த்ரி தண்டம் -ஜல -பவித்ரத்தோடு சேர்ந்தது -ஆண்டான் பவித்ரம் -பரி சுத்தம் சேர்ந்தவர் –
த்ரி தண்டம் எதிக்கு விட முடியாதது -ஆண்டான் எதியாகிய எம்பெருமானாருக்கு விட முடியாதவர்-
த்ரிதண்டம் விஷ்ணு ஸ்வரூபம் -விஷ்ணு ரூபம் த்ரி தண்டாக்க்யம் சர்வதா தாரயேத் எதி -என்ற பிரமாணம் காண்க –
முதலியாண்டான் ஸ்ரீ ராமனுடைய திரு வவதாரம் ஆதலின் விஷ்ணு ஸ்வரூபர்-
இனி -அஹமேவ த்விஜஸ்ரேஷ்ட நித்யம் பிரசன்ன விக்ரஹ-பகவத் பக்த ரூபேண லோகான் ரஷாமி சர்வதா -என்றபடி
பக்தராகிய ஆண்டான் விஷ்ணு ஸ்வரூபம் என்னலுமாம் –

———————————————————————————————-

படைத்தவன் வேள்வி வரும் பரன் பண்ணில் பரவசனாய்க்
கொடுத்தவர் கோயில் விரைந்து உழி கூரத் தவருடன் நீர்
கிடைத்தவர் ஆயினீர் ஆண்டான் கிளர் நீர் அரங்கற்கு மண்
ணிடைத் தவராசன் எனின் மனத்து ஏறுவீர் மூவிருமே –16-

படைத்தவன் -பிரமன் -வேள்வி வரும் பரமன் -தேவப் பெருமாள் –
பிரமன் செய்த வேள்வியில் தேவப் பெருமாள் தோன்றியதாகக் காஞ்சி ஸ்தல புராணம் கூறும்
பண்ணில் -திருவரங்கப் பெருமாள் அரையர் பாடின இசையில்
பரவசனாய்க் கொடுத்தவர் -ஈடுபட்டு மெய் மறந்த படையால் கொடுக்கப் பட்ட எம்பெருமானார்
கோயில் விரைந்து உழி -ஸ்ரீ ரங்கத்திற்கு விரைவாக எழுந்து அருளும் போது
கூரத் தவருடன் நீர் கிடைத்தவர் ஆயினீர் -ஆண்டான் கிளர் நீர் அரங்கற்கு -ஸ்ரீ கூரத் தாழ்வான் உடன் அரங்கற்குக் கிடைத்தவர் ஆயினீர் என இயையும்
மண்ணிடைத் தவராசன் எனின் -உலகத்தில் எதிராசன் என்றால் எம்பெருமானார் ஆழ்வான் ஆண்டான் என்ற மூன்று பெரும் நினைப்பில் வருதல்
மனத்து ஏறுவீர் மூவிருமே –

திருவரங்கத்திற்கு எதிராசரை அழைத்து வரும்படி அனுப்பப் பட்ட திருவரங்கப் பெருமாள் அரையர் பாடிய பண்ணில்
பரவசராய்த் தேவப் பெருமாள் எதிராசரை அரையரிடம் கொடுத்து அனுப்பினார்
தமது மடத்துக்கு கூடப் போகாதே சந்நிதியிலே இருந்தே கோயில் நோக்கி உடனே விரைந்தார் எதிராசர்
-அவரை ஆழ்வானும் ஆண்டானும் பின் தொடர்ந்தனர்
எதிராசர் ஒருவரை வேண்டினான் அரங்கன் -அதருஷ்ட சாலியான அவனுக்கு மூவர் கிடைத்தனர் -அது சரி தான்
தாண்டும் பவித்ரமும் சேராமலா எதிராசர் தோன்றுவார் -ஆண்டானும் ஆழ்வானும் இல்லாமலா எம்பெருமானார் தோன்றுவார்
-ஆக பெயர் அளவிலே மூவரே தவிர மூவரும் சேர்ந்து ஒருவரே என்றதாயிற்று –

———————————————————————————————————-

மூவா முதல்வன் முது நீர் அரங்கன் கொளுமமுதை
ஆய்வான் அமர்ந்தருள் ஆண்டான் அரும்பால் அளித்த பின்னீ
ஆர்வாய்க் கனிந்த நாவற்பழம் தந்தது அறிந்து முக்கோல்
கோவா குலமாய் மருந்து கொடுத்ததும் கூறு எளிதே –17-

மூவா முதல்வன் -முதுமை யுராத காரண பூதன் – கொளும்-கொள்ளும் –
அமுதை ஆய்வான் -அமுது செய்வதைக் கவனிப்பதற்காக
நாவற்பழம் தந்தது -நாவற்பழத்தை அமுது செய்யப் பண்ணியது -உம்மை தொக்கது
முக்கோல் கோ -முனி -எம்பெருமானார்
ஆகுலம் -கலக்கம் -எளிதே -எளிதன்று என்றபடி
கூறு -அருளிச் செய்க –
கூற எளிதே -என்பதன் தொகுத்தல் விகாரமாகக் கொண்டு கூறுதற்கு எளிதன்று என்றபடி யாகவுமாம்-ஏ-எதிர்மறை குறிப்பது –
கோயிலில் பெருமாள் அமுது செய்வதைக் கவனிக்கும் படி எம்பெருமானார் முதலி யாண்டானை நியமித்து அருளினார் –
ஒரு கால் பெருமாளுக்குப் பாலமுது சமர்ப்பித்த பிறகு நல்லன நாவற்பழங்களை யமுது செய்வித்தார் ஆண்டான் –
அதை யறிந்து எம்பெருமானார் பெருமாளுக்கு என்ன வாகுமோ என்று கலங்கி மருந்து அமுது செய்வித்து அருளினார் எனபது வரலாறு –
பாலமுது செய்த பிறகும் நல்ல பழங்களை கண்ட முதலி யாண்டான் அவற்றை யமுது செய்வித்தார் –
அதற்குக் காரணம் ஆர்வம் உடைமையே -அது நல்லனகள் காணில் கண்ணனுக்கு என்று ஈரியாய்-இருக்கச் செய்கிறது
எம்பெருமானாரது பரிவோ கலங்கி மூவா முதல்வனுக்கும் என்ன நேருமோ என்று மருந்து கொடுத்துப் பரிஹரிக்கும் படி செய்கிறது
இத்தகைய மனோ பாவத்தைப் பற்றி என் போன்றவர் என்ன கூற இருக்கிறது –

——————————————————————————————————

எளிவரும் கண்ணன் இயம்பிய வார்த்தை யரும் பொருளை
அளிமுரலார் திருக் கோட்டியூர் நின்றறு திங்களின் பின்
தெளிவுறலால் திருக் கோட்டிய நம்பி திருப்பியதும்
களிவர ஆண்டான் உனக்கு எதி காவலன் காட்டினனே -18-

எளிவரும் கண்ணன் -எளிமை யுடைய கண்ணன்
இயம்பிய வார்த்தை -சரம ஸ்லோகம்
யரும் பொருளை
அளிமுரலார் -வண்டுகளின் ஒலி நிறைந்த
திருக் கோட்டியூர் நின்று -திருக் கோட்டியூரில் இருந்து
இதனைத் திருப்பியதும் -என்பதோடு இயைக்க
திருப்பியதும் -திருப்பி அனுப்பியதும்
தெளிவுறலால் -கலக்கம் தீர்ந்து தெளிந்தமையால்
திருக்கு -குற்றம்
களிவர -ஆனந்தம் உண்டாக
வார்த்தை யரும் பொருளை எதி காவலன் உனக்குக் காட்டினனே -என்க –

ஆண்டான் அறு திங்களின் பின்-தெளிவுறலால்-
திருக்கு ஒட்டிய –அளிமுரலார் கோட்டியூர் நம்பி
திருக் கோட்டியூர் நின்று திருப்பியதும்
எதி காவலன் களிவர உனக்கு எளிவரும் கண்ணன் இயம்பிய வார்த்தை யரும் பொருளை காட்டினனே -என்று கூட்டி முடிக்க –

முதலி யாண்டான் சரம ஸ்லோக அர்த்தம் பெறுவதற்காக ஆறு மாதங்கள் காத்துக் கிடந்தது தெளிவுற்று திருக் கோட்டியூர் நம்பியால்
ஸ்வரூப சிஷை செய்யப் பெற்று -மீண்டு வந்து எம்பெருமானார் இடம் அதனைப்பெற்றார் எனபது வரலாறு –

———————————————————————————————–

காட்டி யரங்கன் கழல் இணை காணக் களித்தடிமை
பூட்டும் புனிதன் இராமானுசனத் துழாய் முகத்தின்
வாட்டம் தணிய வழங்கலும் சீதன மாதென நீ
வீட்டுப் பணிகளும் ஆண்டான் விரும்பினை வெள்கிலையே-19-

கழல் இணை காணக் காட்டி என இயைக்க –
சீதன மாது -ஸ்திரீ தனமாகக் கொடுக்கப் பட்ட பணியாட்டி
வீட்டுப் பணிகளும் -வீட்டு வேலைகளும்
விரும்பல் -செய்ய ஆசைப் படுதல்
வெள்கிலை -கூச்ச முற்றிலை-

பெரிய நம்பி திருமகள் அத்துழாய் எம்பெருமானார் இடம் -ஆற்றுக்குப் போகத் துணை வேண்டுமானால் உன் சீதன
வெள்ளாட்டியை அழைத்துச் செல் -என்று மாமியார் கடிந்து கூறியதாக வருத்தத்துடன் கூற –
அவர் ஆண்டானைச் சீதன வெள்ளாட்டியாகக் கொடுத்து அனுப்பினார் –
ஆண்டான் சிறிதும் கூசாது ஆற்றுக்குத் துணையாகச் சென்று வீட்டு வேலைகளும் செய்ய முற்பட்டார் எனபது வரலாறு –

———————————————————————————————————

வெள்ளுரை வீணர்க்கு மேன்மேல் விளம்புவர் மேவலர் மெய்
உள்ளலர் கூசலர் ஊமைக் குளறுவா யொத்து நின்றே
ஒள்ளறி வோங்கிய ஆண்டான் உறவும் ஒளிந்தனர் வாய்
விள்கிலர் கூகை போல் அஞ்சி நடுங்கி விடிந்த பின்னே –20-

வெள்ளுரை -அர்த்தம் அற்ற பேச்சு
வீணர்க்கு மேன்மேல் விளம்புவர்
மேவலர் -புற மதத்தவர்
மெய் உள்ளலர் -சத்தியத்தை நினையாதவர்களாய்-முற்று எச்சம்
கூசலர் -கூசாதவராய் -முற்று எச்சம்
உளறுவாய்-வாயினர்க்காகி வந்தது
விள்கிலர்-திறவாதவராய்-முற்று எச்சம்
கூகை -கோட்டான் –

மேவலர் மெய் உள்ளலர் ஊமைக்கு உளறுவாய் ஒத்து நின்று வீணர்க்கு வெள்ளுரை மேன்மேல் விளம்புவர்
ஒள்ளறி வோங்கிய ஆண்டான் உறவும் -அவர்கள் விடிந்த பின் கூகை போல் அஞ்சி நடுங்கி வாய் விள்கிலர் ஒளிந்தனர் -என்று கூட்டுவது –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: