திருப்பள்ளி எழுச்சி-திவ்யார்த்த தீபிகா -ஸ்ரீ P.B.A. ஸ்வாமி கள்

திருமாலை ஆண்டான் தனியன்–

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
மத்வா
ப்ராபோதீகீம்
ஸூ க்திமாலாம்
அக்ருததம் பகவந்தம் பக்தாங்க்ரிரேணும் ஈடே

யார் ஒரு ஆழ்வார் பர வா ஸூ தேவ மூர்த்தியான பெரிய பெருமாளை
ராஜோபசார யோக்யராக நினைத்து திருப்பள்ளி யுணர்த்துமதான திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தாரோ -அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை துதிக்கின்றேன் –

————————————————————————–

திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது..

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

வண்டுதிணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி வுணர்த்தும் பிரான்
தொண்டர் அடி பொடி
வுதித்த ஊர்-
மா மறையோர் மன்னிய சீர்
மண்டங்குடி
தொன் நகரம்
என்பர்-

வண்டுகளானவை நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற காலணிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் -கண் வளர்ந்து அருளுகிற
பெரிய பெருமாளை திருப்பள்ளி யுணர்த்துமவராய்-பரம உபகாரகராய்
தொண்டர் அடிப் பொடி என்னும் திரு நாமம் உடையவரான ஆழ்வார் திருவவதரித்த தேசமாவது
சிறந்த வைதிகர்கள் பொருந்தி வாழ்வதற்கு இடமான சீர்மையை யுடைய திரு மண்டங்குடி என்கிற அநாதியான நகரமாகும்
என்று பெரியோர் கூறுவர்-

————————————————————————–

பொழுது விடிந்தமைக்குள்ள அடையாளங்களையும்
திருப்பள்ளி யெழுந்திருக்க வேண்டிய காரணங்களையுங்கூறி உணர்த்துகின்றார்.

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்தது ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——–1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அரங்கத்தம்மா!–கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்-கன் இருள் அகன்றது-
அம்காலை பொழுதாய்–மா மலர் எல்லாம்-விரிந்து மது ஒழுகின-
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர்
இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும் அதிர்தலில்
எங்கும் அலை கடல் போன்று உளது
பள்ளி எழுந்து அருளாயே—-

திருவரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் ஸ்வாமியே –
ஸூர்யனானவன் கிழக்குத் திக்கிலே -உதய கிரியின் கொடு முடியிலே வந்து கூடினான்
இரவில் அடர்ந்து இருந்த இருளானது நீங்கி ஒழிந்தது –
அழகிய காலைப் பொழுது வர -சிறந்த புஷ்பங்கள் எல்லாம் விகாசம் அடைய -தேன் வெள்ளம் இடா நின்றன –
தேவர்களும் ராஜாக்களும் ஒருவருக்கு ஒருவர் முற்கோலி வந்து திரண்டு
திருக் கண் நோக்கான தெற்கு திக்கிலே நிறைந்து நின்றார்கள்
இவர்களோடு கூட வந்த இவர்களது வாகனமாகிய பெரிய ஆண் யானைத் திரள்களும்
பெண் யானைத் திரள்களும் பேரி வாத்தியங்களும் சப்திக்கும் போது
எத்திசையும் அலை எறியா நின்ற சமுத்திர கோஷத்தை ஒத்து இருந்தது –
ஆதலால் திருப் பள்ளியை விட்டு எழுந்து அருள வேணும் –

மஹாராஜன் பள்ளி கொண்டிரா நின்றால் அவனை உணர்த்துகைக்குச் சிற்றஞ்சிறுகாலையில்
ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப் போலே ஸூர்ய பகவான் தன் கிரணங்கள் எல்லாவற்றோடும்
கீழ்த் திசையில் உதயகிரியினுச்சியில் வந்து அணையா நின்றான்;
உடனே, செறிந்துகிடந்த இருள் சிதறிப் போயின:

இருள் நீங்கினவாறே “சிற்றஞ்சிறுகாலை” என்னும்படியான அழகிய ப்ரஹ்ம முஹூர்த்தம் ஆக,
தாமரை முதலிய மலர்களெல்லாம் விகஸித்துக் தேனொழுகா நின்றன;

இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும்
தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத் தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே
வந்து திரண்டு “எம்பெருமான் திருப்பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்”
என்னுமாசையாலே திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.

இவர்களுடனே வந்த பெரிய யானைத் திரள்களும் இனம் பிரியாத பேடைகளும்
வாத்ய கோஷங்களும் இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது சந்த்ரோதயத்தில் கடல் போலே கிளராநின்றது.

உபய விபூதி நாதரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளி இவர்களுக்கு முகங்கொடுத்தருளி
அடிமை கொண்டருள வேணுமென்பது கருத்து.

குணக்கு + திசை – குணதிசை
திசையோடு திசைப்பெயர் சேர உயிர் மெய்யும் ககரவொற்றும் நீங்கிற்று,
சிகரம் – பரிவாரம் என்ற வடசொல் திரிபு.
கனவிருள்-ஸிந என்ற வடசொல் கனவெனத் திரிந்தது.
ஆய் = ஆக என்னும் எச்சத்திரிபு.
மது – வடசொல் திரிபு
“மது விருந் தொழுகின” என்னும் அத்யாபக பாடம் வ்யாக்யாநத்துக்குச் சேராது.
களிறு + ஈட்டம் – களிற்றீட்டம் முரசு – ஹ ரஜ என்ற வடசொல் திரிபு.

————————————————————————–

 

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே———–2-

பதவுரை

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

குண திசை மாருதம்-கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி இதுவோ கூர்ந்தது
மலர் அணை பள்ளி கொள் அன்னம் ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி எழுந்தன
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி-
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—

கீழ் காற்றானது செழுமை தங்கிய கொடியை யுடைத்தான முல்லைச் செடியில் யுண்டான
அழகிய மலர்களை அணைந்து கொண்டு -இதோ -வீசுகின்றது –
புஷ்ப சயனத்திலே உறங்குகின்ற ஹம்சங்கள் ஆனவை -மழை போலே சொரிகிற பனியாலே நனைந்த
தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக் கொண்டு உறக்கம் விட்டு எழுந்தன –
தனது காலை விழுங்கின முதலையினுடைய பாழி போன்ற பெரிய வாயில் உள்ள வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற-
அம் முதலையினுடைய பல் விஷத்திற்கு மிகவும் நோவு பட்ட கஜேந்திர ஆழ்வானுடைய பெரிய துக்கத்தைப்
போக்கி அருளின அரங்கத்தம்மா -திருப் -பள்ளி எழுந்து அருளாய் –

ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,
கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது

இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை
உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.

கஜேந்திராழ்வானை அன்று கொடிய ஆபத்தில் நின்றும் விடுத்துக் காத்தருளினாற்போலே
இன்று அடியோங்களைக் காத்தருள்வதற்காக தேவரீர் திருப்பள்ளி விட்டெழுந்தருள வேணுமென்கிறது.

[விழுங்கிய இத்யாதி.]
முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.

கூர்ந்தது= கூர்தல்…
மிகுதல், அதிகமாதல்.
மாருதம் – வடசொல்
பள்ளி கொண்டன்னம்” என்ற சிலர் பாடத்தில்,
பள்ளி கொண்ட + அன்னம் எனப் பிரித்து, தொகுத்தல் விகாரமாகக் கொள்க.
ஈன் பனி – உண்டான பனி என்னுதல், பெய்கிற பனி என்னுதல்.
பிலம்-ஸூனாம். புரை – உவமவுருபு.
பேழ்-பெருமை.
விடம்-விஷம்.
அருந்துயர்-மற்றொருவராலும் போக்க அரிதான துயர்.

————————————————————————–

முதற்பாட்டில்,
கதிரவன் கீழ்த் திசையில் உதய கிரி சிகரத்திலே வந்து சேர்ந்தான் என்றது.
இப் பாட்டில்
நேராக உதித்துத் தனது தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக் கொண்டு வந்து தோன்றினான் என்கிறது.

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-3

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன-துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி படர் ஒளி பனி மதி இவன் பசுத்தனன்
பாய் இருள் அகன்றது-
வைகறை மாருதம் இது -பைம் பொழில் கமுகின் மடல் இடை கீறி வண் பாளைகள் நாற கூர்ந்தது-
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

கண்ட விடம் எங்கும் ஸூர்ய கிரணங்கள் ஆனவை பரவி விட்டன —
ஆகாசத்தில் நெருங்கிய நஷத்ரங்களினுடைய மிக்க தேஜஸ்சானது குறைவு பட்டதுமன்றி
மிக்க ஒளியை யுடைய இக் குளிர்ந்த சந்திரனும் ஒளி மழுங்கினான்
பரந்த இருட்டானது நீங்கிற்று —

இந்த விடியில் காற்றானது பசுமை தங்கிய சோலைகளில் உள்ள பாக்கு மரங்களினுடையம் மடலைக் கீற –
அத்தாலே
அழகிய பாளைகள் ஆனவை பரிமளிக்க –
அப் பரிமளத்தை முகந்து கொண்டு வீசா நின்றது –

பெருத்த மிடுக்கை யுடைத்தாய் தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள திரு வாழி ஆழ்வானை
அழகிய பெரிய திருக் கையிலே யுடைய அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாய் –

கண் பார்வை புகுமிடமெங்கும் ஸூர்ய கிரணங்கள் பரவிவிட்டன;
நக்ஷத்திரங்கள் ப்ரகாசம் குன்றிப் போய் விட்டது;
நக்ஷத்ராதிபதியான சந்திரனும் வைவர்ணிய மடைந்தான்; [பகல் விளக்குப் போலாயினன் என்றபடி.]

பாக்குச் சோலைகளில் மடல்விரிந்த பாளையின் பரிமளத்தை முகந்து கொண்டு
விடியற் காற்றானது மிகுதியாக வீசாநின்றது;

கையுந் திருவாழியுமான தேவரீருடைய அழகை நாங்கள் கண்டு களிக்கும்படி திருப்பள்ளி யுணர்ந் தருளவேணு மென்கிறது.

“பனி மதி, படரொளி பசுத்தனன்” என்றும் அந்வயிக்கலாம்.

வியாக்கியாந ஸ்ரீஸூக்தி –
“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”

பாயிருள் =பாய்தல் – வியாபித்தல்.
பசுமை + பொழில்-பைம் பொழில்;
“ஈறு போதல் இடை யுகரம் இய்யாதல், ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்,
தன்னொற்றிரட்டல் முன்னின்ற மெய் திரிதல், இனமிகலினையவும் பண்பிற்கியல்பே” என்பது நன்னூல்.
“வண் பானைகள்” என்றவிடத்து, பாளைக்கும் வண்மையாவது ஒளதார்யம்–
தன் பக்கலுள்ள மணத்தைக் கொடுக்கை என்றும் கொள்ளலாம்.
வைகறை -விடியற்காலம்.

————————————————————————–

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-

பதவுரை

மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்–ஈட்டிய இசை திசை பரந்தன-
வயலுள் சுரும்பினம் இரிந்தன
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–

உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை மேய்கைக்கு கட்டவிழ்ந்து விடுகிற இடையர் -ஊதுகிற
புல்லாங்குழலின் நாதமும்
எருதுகளின் கழுத்தில் கட்டி உள்ள மணிகளினுடைய ஓசையும்
ஆகிய இவ்விரண்டும் கூடின த்வநியானது திக்குகள் எங்கும் பரவி விட்டது –

கழனிகளில் உள்ள வண்டுகளின் திரள் ஆரவாரத்திக் கொண்டு கிளம்பின –

ராஷச வர்க்கத்தை உருவழித்த அழகிய சார்ங்கத்தை யுடைய தேவாதி தேவனே
விச்வாமித்ர மகார்ஷியினுடைய யாகத்தை நிறைவேற்றுவித்து அவபிரத ஸ்நானம் செய்வித்து அருளின
விரோதிகளை ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய் அயோத்தியா புரியை ஆளுகையாலே
எங்களுக்கு ஸ்வாமி யானவனே -அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாய்-

இளங்கன்றாயிருக்கச் செய்தேயும் ஓங்கி யிருப்பனவான எருமைக் கன்றுகளை
மேய்ச்சலுக்காகக் கட்டவிழ்த்து விடுகிற இடையர் ஊதுகிற புல்லாங்குழலோசையும்,
சேக்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும்
இவ் விரண்டும் விரவிய த்வநியானது எத் திசையும் பரவி விட்டது.

சோலைக்குள் மாத்திர மன்றியே வெளி நிலமான வயலில் தடாகங்களிலுண்டான
தாமரை முதலியவற்றில் வண்டுகளானவை ஆராவாரஞ்செய்து கொண்டு சிதறின;

தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!
இன்று எங்கள் காரியமும் சிறிது செய்வதற்கு பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறது.

[இரிந்தன சுரும்பினம்.]
பொழுது விடிந்து பூக்கள் அலர்ந்த பிறகு வண்டுகள் வந்து படிந்து தேனைப் பருகி விட்டு
ஆர்த்துக் கொண்டு கிளம்பி விட்டன- என்றும்,
நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே
ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்
இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றும் கருத்துரைக்கலாம்.

இரிதல்- சாய்தல், ஓடுதல்.

“வேள்வியுங் காத்து” என்பது சிலர் பாடம்.
அவபிரதம்-அவப்ருதமென்னும் வடசொல் திரிபு; யஞ்ஞபாகாதிகளின் முடிவில் செய்யும் ஸ்நாநம்
அயோத்தி – அயோத்யா

————————————————————————–

கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே
பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே——-5-

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

பூம் பொழில்களின் வாய் புட்களும் புலம்பின -கங்குல போயிற்று -புலரி புகுந்தது
குண திசை கனை கடல் அரவம் கலந்தது-
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த– அம் அலங்கல் தொடையல் கொண்டு -அமரர்கள்-அடி இணை பணிவான் புகுந்தார்
ஆதலால் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே-

பூத்து இரா நின்றுள்ள சோலைகளில் உள்ள பறைவைகளும் உணர்ந்து ஆரவாரம் செய்யா நின்றன –
இரவானது கழிந்தது -ப்ராத காலமானது வந்தது –
கீழ்த் திசையிலே கோஷம் செய்கிற கடலினுடைய ஓசையானது வியாபித்தது –
தேனைப் பருகிக் களிக்கின்ற வண்டுகளானவை சப்தியா நிற்கிற பலவகைப் பூக்களாலே தொடுக்கப்பட்ட
அழகிய அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு தேவர்கள் –
தேவரீருடைய திருவடி இணைகளிலே பணி மாறுகைக்காக வந்து நின்றனர் –
ஆகையால் சர்வ ஸ்வாமின் -லங்கேஸ்வரனான விபீஷண ஆழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமான் –
அஸ்மத் ஸ்வாமியே -திருப்பள்ளி எழுந்து அருளாயே-

வயலுள் வண்டுகள் உணர்ந்தது பகவத் ப்ரவணர் உணர்ந்ததொக்கும் என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
உறங்குகைக்கே அதிக ஸாமக்ரியுள்ள ஸம்ஸாரிகள் உணர்வதன்றோ அருமை.

பொழில்களின் வாய்=வாய்-ஏழனுருபு.
அரவம் என்ற வடசொல் விகாரம்.

————————————————————————–

 

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——-6-

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

மணி நெடும் தேரோடும் இரவியர் -இறையவர் பதினொரும் விடையரும்
மருவிய மயிலினன் அரு முகன் – மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு -தேரும்- பாடலும் -ஆடலும் -குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய கோயில் நின் முன் -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—

விலஷணமான -பெரிதான தேரோடு கூட பன்னிரண்டு ஆதித்யர்களும் –
ஜகத்துக்கு நிர்வாஹகர்களான ஏகாதச ருத்ரர்களும்
பொருந்திய மயில் வாகனத்தை யுடைய ஸூப்ரஹ்மண்யனும்
மருத் கணங்களான ஒன்பதின்மரும்
அஷ்ட வசுக்களும் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு வந்து நெருங்கி நிற்க –
இவர்களுடைய வாகனமான குதிரைகள் பூண்ட ரதங்களும் பாட்டும் கூத்துமாய்
தேவ சேனா சமூகங்கள் வந்து புகுந்து நெருங்கி இருக்கிற திரளானது பெரிய மலை போன்ற கோயிலிலே
தேவரீர் திருக் கண் நோக்கத்திலே நிற்கின்றது –
திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

த்வாதசாதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள, தேவஸேநாபதியான ஷண்முகன், மருத்துக்களாகிற தேவதைகள்,
அஷ்டவஸுக்கள் மற்றும் சொல்லிச் சொல்லாத தேவதைகளெல்லாம்
பரிகாஸமேதராய், தேவாரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதில் முதற் கடாக் ஷவீக்ஷணத்தை விரும்பி
“நான் முற்பட நான் முற்பட” என்று திரண்டு வந்து நின்றார்கள்;
திருப் பள்ளி யுணர்ந்தருளிக் கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.

————————————————————————–

 

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

எம்பெருமான் உன் கோயிலின் வாசல்-இந்திரன் தானும் ஆனையும் வந்து
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்-அரும் தவ முனிவரும் மருதரும் இயக்கரும்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க-திரு வடி தொழுவான்-
மயங்கினர்-அந்தரம் பாரிடம் இல்லை மற்று -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

எமக்கு ஸ்வாமி யான தேவரீருடைய திருக் கோயிலின் வாசலிலே
தேவேந்த்ரனும் -அவனது வாகனமான ஐராவத யானையும் வந்து இருப்பதுமன்றி
அண்டத்துக்குள் இரா நின்ற தேவர்களும் இவர்களுடைய பரிவாரங்களும்
மகா தபச்விகளுமான சநகாதி மகார்ஷிகளும் –
மருத் கணங்களும் யஷர்களும் கந்தர்வர் நெருக்கவும் வித்யாதரர்கள் தள்ளவும்
தேவரீருடைய திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர் –
ஆகாசமும் பூமியும் அவகாசம் அற்று இரா நின்றது –
திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

அந்தரம் என்றும், அண்டம் என்றும், ஆகாசம் என்றும், தேவலோகத்துக்குப் பேர்.
முனிவரும் மருதரும் இயக்கரும் திருவடி தொழுவான் மயங்கினர் என்று அந்வயம்.
சுந்தரர்- அழகுபொருந்தியவர் என்றபடி.
விச்சாதரர்- விஸயாயா என்ற வடசொல் திரிபு.
நூக்குதல்- தள்ளுதல்.
இயக்கர்-யக்ஷ என்ற வடசொல் திரிபு.

முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும்
அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

————————————————————————–

 

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——8-

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வழங்க-வம்பவிழ் வானவர் வாயுறை மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா–எம்பெருமான் ஏற்ப்பன வாயின
படி மெய்க்கலம் காண்டற்கு நன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர்-
இரவியும் துலங்கு ஒளி பரப்பி தோன்றினன்-
இருள் அம்பர தலத்தில் நின்று போய் அகல்கின்றது -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-

தேவரீருக்கு சமர்ப்பித்தர்காக -பரிமளம் மிக்க அறுகம் புல்லும்
சிறந்த சங்க நிதி பத்ம நிதிகளும் -கையிலே யுடையராய்க் கொண்டு தேவர்களும் –
காம தேனுவும் ஒளி பொருந்திய கண்ணாடி முதலாக ஸ்வாமியான தேவரீர் கண்டு அருளுகைக்கு
தகுதியாய் உள்ளவையான உப கரணங்கள் எல்லாவற்றையும் கொண்டு
மக ரிஷிகளும் தும்புரு நாரதர்களும் வந்து நின்றார்கள் –
இதுவும் அன்றி ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

“வம்பவிழ்” என்பதை வானவர்க்கே அடைமொழியாக்கி,
நித்ய யெளவநத்தை யுடைய தேவ ஜாதிகள் என்றும் பொருள் கொள்ளலாம்.
படிமைக்கலம்- திருவாராதந உபகரணம்.
நிதி, கபிலா, தும்புரு நாரதர், ரவி, அம்பரதலம் -வட சொற்கள்.

————————————————————————–

 

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி–யாழ் குழல் -திசை-முழவமோடு இசை கெழுமி–கீதங்கள் பாடினர்
கின்னரர் கெருடர்கள்–கந்தருவர் அவர் –மாதவர் வானவர் சாரணர் இயக்கர்–சித்தரும் – திருவடி தொழுவான்-
கங்குலுகள் எல்லாம் மயங்கினர்-ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள–அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

குற்றமற்ற சிறு பறையும் –
ஒற்றைத் தந்தியையும் யுடைய வாத்தியமும்
மத்தளமும் வீணையும் புல்லாங்குழலுமாய்
திக்குகள் எல்லாம் இவற்றினுடைய முழக்கத்தோடு
இசைமாட்டிப் பாட்டுப் பாடக் கடவரான கின்னர்களும் கருடர்களும் கந்தர்வர்களும் இதோ மற்றுள்ளவர்களும்
மகரிஷிகளும் தேவர்களும் சாரணர்களும் யஷர்களும் சித்தர்களும்
தேவரீருடைய திருவடிகளில் வணங்குகைக்காக இரவெல்லாம் நெருக்கத்தில் வருந்தி மோஹம் உற்றனர்-
ஆகையாலே அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருளுகைக்காக -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

வாத்தியங்களுக்குக் குற்றமில்லாமையாவது-நாதம் நன்கு உண்டாகும்படி அமைதியாயிருக்கை.
எக்கம்-தாள மென்றுங்கூறுவர்.
முழவம்- ‘பெரு வாயன்’ என்றொரு வாத்ய விசேஷமுண்டு; அதனைச் சொல்லிற்றாகவுமாம்;
அப்போது- யாழ் குழல் முழவங்களிலுண்டான நாதமானது திசைகள் தோறும் வியாபிக்கும் படி
கிந்நராதிகள் கீதங்களைப் பாடாநின்றனர்;
கெந்தரும் இவர்-கெந்தர்வர்களும் இதோ அருகே வந்திரா நின்றார்கள் எனப்பொருள் கொள்க.
சாரணர்-தேவ ஜாதியிலே உலாவித் திரியுவர்கள்.

விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

கீதம் –ஹீதம்
‘கந்தருவர்’ என்பது மோனையின்பம் நோக்கிக் “கெந்தருவர்” என்றாயிற்று.
நாளோலக்கம் – பிராத: காலத்திலே சீரிய சிங்காசனத்திலே பெரிய கோஷ்ட்டியாக எழுந்தருளியிருந்து
எல்லாரையும் குளிரக் கடாக்ஷிக்கும் ஸதஸ்ஸு.

————————————————————————–

 

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே——–10

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

புனல் – சூழ் அரங்கா!–கடி மலர் கமலங்கள் மலர்ந்தன–கதிரவன் கனை கடல் முளைத்தனன்-
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி–துகில் உடுத்து ஏறினர்-
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே——

திருக் காவேரித் தீர்த்தத்தாலே சூழப் பட்ட திருவரங்கத்திலே திருக் கண் வளர்ந்து அருளுமவனே –
பரிமளமுடைய தாமரைப் பூக்களானவை நன்றாக மலர்ந்து விட்டன –
தாமரையை மலர்த்த வல்ல சூரியனானவன் கோஷம் செய்கையையே இயல்பாக வுடைய கடலிலே
உதய கிரியிலே வந்து தோன்றினான்
உடுக்கை போன்ற ஸூஷ்மமான இடையை யுடைய மாதர் தமது சுருண்ட மயிர் முடியை நீர்ப் பசை அறப் பிழிந்து உதறிவிட்டு
தம் தம் ஆடைகளை உடுத்திக் கொண்டு கரை ஏறி விட்டார்கள் –
ஒழுங்காகத் தொடுக்கப் பெற்ற திருத் துழாய் மாலையும் பூக்குடலையும் விளங்கா நிற்கப் பெற்ற தோளை யுடைய
தொண்டர் அடிப் பொடி -என்ற பெயரை யுடைய தாசனை –
கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்ரம் -என்று திரு உள்ளம் பற்றி அங்கீ கரித்து அருளி
தேவரீருடைய நித்ய கிங்கரரர்களான பாகவதர்களுக்கு ஆளாக்க வேணும் –
அதற்காக திருப் பள்ளியை விட்டு எழுந்து அருள வேணும் –

கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்
“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.

கதிரவன் கடலில் முளைத்தான் என்பதும் மலையினுச்சியில் முளைத்தான் என்பதும் உபலக்ஷணமெனப்படும்;

[துடியிடையார் இத்யாதி]
“கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் …. அணியரங்கன்” என்கிற ஸமாதியாலே சொல்லுகிறபடி.
ஆயர்மாதர் விடியற் காலத்திலே எழுந்து
கோழியழைப்பதன் முன்னம் குடைந்து நீராடபோருகையில் நீயும் அவர்கள் பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு, அரவேரிடையார் இரப்ப
“மங்கை நல்லீர்! வந்து கொண்மின்” என்று மரமேறியிருக்க,
“தோழியும் நானுந் தொழுதோம்” என்பது,
“கோலங்கரிய பிரானே! குருந்திடைக்கூறை பணியாய்” என்பது ஆக
இப்படி நிகழும் ரஸாநுபங்களை நீ இழந்தாயாகிறாயே;
அவ்வாய்ச்சிகள் நீராடித் தலை துடைத்துத் துகிலுடுத்துக் கரையேறி விட்டார்களே என்கிறது.

[கூடையும் பொலிந்து தோன்றிய தோள்.]
“ஆழியுஞ்சங்கு முடைய நங்களடிகள் என்று எம்பெருமானுக்கு லக்ஷணமாகத் திரு வாழி திருசங்கு
அமைந்தாற்போலே
ஆழ்வார்க்கு லக்ஷணமாகப் பூக்குடலை அமைந்தபடி என்று
வந வாஸத்திலே மண் வெட்டியும் கூடையுமிறே இளைய பெருமாளுக்கு நிரூபமாகச் சொல்லிற்று.

[உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்.]
எம்பெருமானளவிலே நிற்பதோடு
ஸம்ஸாரத்திலே மாய வன் சேற்றள்ளல் பொய்ந் நிலத்தில் கால்தாழ்ந்து நிற்பதோடு ஒரு வாசியில்லை;
பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.

[பள்ளி யெழுந்தருளாய்.]
தேவரீர் பள்ளிக் கொண்டிருப்பது ஸம்ஸாரிகளைப் போலே சோர்வு சோம்பலாலன்றே;
‘எவனைப் பிடிக்கலாம்? எவனை திருத்தலாம்?” என்று யோகு செய்யுமுறக்க மித்தனையன்றோ?
அந்த யோக நித்திரைக்கு பலன் கை புகுந்த பின்பும் உறங்கக் கடவதோ?
உணர்ந்தருளலா காதோ?’ என்கிறார்.

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமி கள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: