பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-10-பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை-

திருக் கண்ண மங்கை திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –

கீழ் திரு மொழியிலே -அருளாய் -அருள் புரியே -என்று பிரார்த்தித்த ஆழ்வாருக்கு
தன் படிகளை விசதமாகக் காட்டிக் கொடுத்து அருளி
ஆழ்வீர் திருக் கண்ண மங்கையிலே வாட்டும் பூர்ண அனுபவம் பண்ணலாம் -என்று நியமிக்க
அப்படியே அங்கே போந்து பரம ஆனந்தம் பொலிய பேசுகிறார் –

ஆருரோஹ ரதம்  ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ  –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-
அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் —
இத் திருமொழியின் போக்யத்வம் அனுபவ ரசிகர்களுக்கே அனுபவ போக்யமாகும்  –

————————-

பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

பெண்ணை -ஸ்திரீயைப் போலே பாரதந்த்ர்யமே வடிவாய் இருப்பவன்
பெரும் புறக் கடல் புறம் -இடம் -எல்லை இல்லா இடத்தை யுடைய –
அனைத்துக்கும் உறைவிடமாய் இருந்து கம்பீரமாய் –
புறம் -வெளிப்பட்டது என்று கொண்டு பூமியில் வெளிப்பட்ட கடல்களில் விலஷணமாய்-
கடல் போன்றவன் என்னாத கடலாகாவே சொன்னது உவமை ஆகுபெயர்
பெண்ணை ஆணை -அரசன் அந்தபுரத்தில் மனைவிக்கு விதேயனாய் இருந்தாலும்
சீரிய சிங்காசனத்தில் ஆண் புலியாய் இருப்பானே
ஆண் அல்லன் பெண் அல்லன் -என்றது  -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மை நிலை –
இங்குச் சொல்வது குணத்தைப் பற்றி
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை -முனிவருக்கு தன்னை சிந்திப்பார்க்கு என்றபடி
பத்தர் ஆவியை -பக்தர்களுக்கு தன்னை விட்டு ஜீவிக்க ஒண்ணாதபடி
திரு நின்ற ஊர் பெருமாள் திரு நாமமும் திருக் கண்ண மங்கை பெருமாள் திரு நாமமும் பத்தராவி பெருமாள் –
அரும்பினை யலரை –
இரண்டு அவஸ்தையும் ஒரு காலே சூழ்த்துக் கொடுக்கலாம்படி இருக்கிறவனை –
யுவா குமார –
திருவாய் மொழி -3-1-8- மலராது குவியாது -ஈடு வியாக்யானம் –
அரும்பினை அலறி என்னலாம் படியாய் இருக்கும் -யுவா குமார -என்கிறபடியே ஏக காலத்திலே
இரண்டு அவஸ்தையும் சொல்லலாய் இருக்கை
யௌவனமும் கௌமாரமும் -என்பர் -அது இல்லை –
யுவா அகுமாரா -கௌமாரம் இன்றியே யௌவன மாத்ரமெயாய் யுள்ளவனை
கௌமாரம் கழியத் தக்கதாய் -யௌவனம் வந்து குடி புகத் தக்க தான நடுப்பருவம் என்றபடி
அடியேன் மனத்தாசையை -நித்ய அனுபவமாய் இருந்தாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா வமுதம் –
ஆசைப் பெருக்குக்கு விஷயமாய் இருப்பவன்
அமுதம் பொதி இன் சுவைக் கரும்பினை -அமுதமே நீராகப் பாய்ச்சி சுவை மிக்க கரும்பு போலே இனியன்
கனியை -அப்போதே நுகரலாம்படி பக்குவ பலமாய் இருப்பவன் –

—————————————-

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே –7-10-2-

மெய்ந்நலத் தவத்தை-விலஷண பக்தி யோகத்தை பிறப்பித்தவன் –
பக்தி யோகத்துக்கு விஷயமாகக் கூடியவன்
திவத்தைத் தரும் மெய்யை-பரமபதத்தை தரவல்ல பிரபத்தி யோகத்தை பிறவிப்பித்தவன் –
அதற்கு இலக்காமவன்
பொய்யினைக் -பக்தி பிரபத்தி இல்லாதார்க்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் அறிய ஒண்ணாது இருக்குமவன்
கையிலோர் சங்குடைமைந்நிறக் கடலை கடல் வண்ணனை-பக்தி பிரபத்தி நிஷ்டர்களுக்கு காட்சி கொடுப்பவன் 
கடல் போலே காம்பீரம் உள்ளவன்
மாலை-சர்வ ஸ்மாத் பரன்
ஆலிலைப் பள்ளிகொள் மாயனை-அகடிகட நா சமர்த்தன் –
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்-
முக்காலங்களிலும் போக்யதை குன்றாதே  -காலப் பகுதிகளுக்கும் நிர்வாஹகன்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் -இனிமை தானே வடிவு எடுத்தவன்
கண்ண   மங்கையுள்   கண்டு கொண்டேனே –

——————————-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று   நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-

ஈஸ்வர அபிமானியான ருத்ரனை திருமேனி ஒரு புறம் தனது பேறாக வைத்து அருளும் சீலவான்
வேறு புகல் அற்ற அடியார் திறத்தில் நிர்ஹேதுக கிருபை பண்ணி அருள்பவன்
சூர்ய சந்த்ரர்களுக்கும்  நியாமகன் -காலப் பகுதிகளுக்கும் நிர்வாஹகன்
திருவேங்கட திருமலையை இருப்பிடமாக கொண்டவன்-

———————————————–

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-

அந்தர்யாமியாய் இருந்தும் தோஷங்கள் தட்டாமல் உஜ்ஜ்வலனாய் இருப்பவன்
இப்படிப்பட்ட தன்மையைக் காட்டி என்னை ஆட்கொண்டவன்-

தெள்ளியார் -தெளிவான அறிவு பெற்றவர்கள்

————————————————

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினைக் நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-5-

திருப் பிரிதியில் எழுந்து அருளி இருக்கும்  ஸ்வாமியும் இவனே
காளை போலே மேணானித்து இருப்பவன்
குருமா மணி -ஸ்ரீ கௌஸ்துபம் -குருமா மணிப்பூண் குலாவித் திகழும் திரு மார்வு -பெரியாழ்வார்
காற்றினை புனலை -பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமி-

காற்றினைப் -ஸ்வ ஸ்பர்சத்தால் வரும்ஸூகமாய் இருக்கிறவனை —புனலைச் -தாரகம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————-

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

துரங்கம் -குதிரை வடிவாய் வந்த அசுரன் -கேசி
துப்பன் -நினைத்த படி செய்ய வல்ல சமர்த்தன் -சத்ய சங்கல்பன் என்றபடி
செப்பினை -அணி கலன்கள்  வைக்கும் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு  பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும்   தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்  -அணிகலன்கள் சீர்மை பெரும் இடம்
சுடர் வான் காலன் -பிராட்டியைச் சொல்லிற்றாக வுமாம் -விவரணம் -திரு மங்கை மணாளன்
தேவனை-பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே உண்டான ஒத்து மஞ்சளும் செம்பஞ்சிக் குழம்பும்
மாளிகை சாந்தின் நாற்றமுமாயக் கொண்டு திரு மேனியிலே புகர் தோன்ற நின்ற நிலை –

அந்தணர் கற்பினை -கற்பு -நீது நெறிக்கும் கல்விக்கும் பெயர்-

————————————————–

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-7-

திருத்தன்  -பூர்ண திருப்தி யுள்ளவன் -அவாப்த சமஸ்த காமன்
திசைமுகன் –நான் முகன் –என்னாமல் திசை நான்முகன் தமிழ் வழக்கு
அப்பில் ஆர் அழலாய் நின்ற -தண்ணீரில் -படபாக்னி

———————————————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்   கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-8-

ஆஸ்ரித விரோதிகள் திறத்தில் வெஞ்சினக் களிறு
இராவணன் போல்வாருக்கு விஷம் விபீஷணன் போல்வாருக்கு அமிர்தம்
விரும்பும் அன்பர்க்கு சென்னிக்கு மலர்ந்த பூ -நச்சுவார் உச்சி மேல்
என்னுடை சூழல் உளானே -என் அருகில் இலானே -என் ஒக்கலையானே-என் நெஞ்சினுளானே
என்னுடைத் தோள் இணையானே-என்னுடை நாவினுளானே -என் கண்ணினுளானே-என் நெற்றி உளானே –
என் உச்சி உளானே -திருவாய் -1-9-
தோன்றல் -சிறு பிள்ளையும் -பெரு வீரனும்

—————————————–

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-

பசு வேத்தி சிசுர் வேத்தி வேத்தி கான ரசம் பணி -பசுக்களும் குழந்தைகளும் பாம்பும் கூட அறியும் பண் -ஸ்ப்ருஹணீயம்
பாலுள் நெய்யினை -கரந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து உளன் –
மாலுருவாய் நின்ற விண்ணினை  -பரமபதம் -த்ரிபாத் விபூதி -நித்ய விபூதி நிர்வாஹகன் –
இந்த பரப்பைத் தெரிவிவிக்கும் விசேஷணம்
மண்ணினை -சர்வம் சஹா-செய்த குற்றங்களைப் பொறுப்பவன்
அலை நீரினை -குஹப் பெருமாள் விதுரர் மாலா காரர் போவார் இடம் பாயும் தண்ணீர் போன்றவன் –
மா மதியை -ததாமி புத்தி யோகம் தம் ஏனமாம் உபயாந்திதே
மறையோர் தங்கள் கண்ணினை -வேறு எங்கும் பட்டி புகாமல் தன்னையே இலக்காக கொண்டு
இருக்கும் படி கண்ணை விட்டுப் பிரியாதவன் –

—————————————————————————————–

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

விண்ணுலகத்தில் தேவர்களே விளங்கி மகிழ்வார்கள்
சொல்லின்பமும் பொருள் இன்பமும் எம்பெருமானையே வணங்கப் பண்ணுமே
கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
நீ கற்கலாம் -என்றும் பாடபேதம்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: