பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-9-கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்-

திரு சிறு புலியீர் சல சயனப் பெருமாள் மங்களா சாசன திருப்பதிகம்
இதில் ஈடுபட்ட ஆழ்வார் பலரை நோக்கி -பாஹ்ய குத்ருஷ்டிகள் பக்கல் புகாமல் சிறு புலியூர் பெருமான் அடிகளையே
அடைந்து வாழ்ந்து போமின் என்று உபதேசிப்பதும்
அத்தை தாம் அனுஷ்டித்துக் காட்டுவதுமாக செல்லுகிறது இத் திரு பதிகம்-

———————————————–

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல  சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே –7-9-1-

ஸ்வா தந்த்ர்யம் கூடாது பரதந்த்ரராக   இருக்க வேணும் என்று உபதேசித்து
அடுத்து அந்ய சேஷத்வம் கழித்து அவனுக்கே அற்றுத் தீர்ந்த அடியாராக உபதேசிக்க வேண்டுமே
மனம் கள்ளம் விள்ளும் மனம் கருதி -என்கிறார்
கள்ளம்  -தன்னை தனக்கே சேஷம் என்று கொண்டு இருக்கை
கழல் -யாரானும் ஒருவனுடைய பாதம்
அடுத்த யோஜனையில்
கள்ளம் -எம்பெருமானுக்கே உரிய ஆத்மவச்துவை தேவதாந்த்ரங்களுக்கு ஆக்குவது
கழல் -எம்பெருமானுடைய திருவடிகள்
சல சயனம் திவ்ய தேசத்திலும் என்னுடைய உள்ளத்திலும் பொருந்தி
நித்ய வாஸம் செய்து அருளும் எம்பெருமானை சிந்தனை பண்ணுமின் —

வியாக்ரபாதர் -என்னும் முனிவருக்கு பால சயனமாய் சேவை சாதித்த ஸ்தலம் என்பதால்
சிறு புலியூர் ஷேத்ரத்தின் திரு நாமம்
சல சயனம் -சலம் -மாயை -உறங்குவான் போல் யோகு செய்து அருளும் எம்பெருமான் –
சல சயனம் திருக் கோயிலின் திரு நாமம்
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடித்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -போலே
சிறு புலியூர் சல சயனத்துள்ளும் என் உள்ளத்துள் உள்ளும் உறைவாரை -என்கிறார்
உள்ளீர் -ஏவல் பன்மை வினை முற்று -உள்ளுதல் -த்யானம் பண்ணுதல்-

———————————

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர்  வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர்  சிருபுலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2-

சமண மதத்தில் ஒரு விரதம் உண்டு -பெரும் சோறு உண்ணுதல் -வெஞ்சோறு உண்ணுதல் –
வேகு சோறு உண்ணுதல் இப்படி சில சோறுகளைத்   தின்று தெருவில் திரிவார்களாம் –
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவர் -என்றார் -2-1- திருமொழியில்
இப்படிப் பட்ட பஹிஷ்டர்களின்  வாய் மொழிகளை திரஸ்கரித்து விட்டு வந்து உற்றது பற்றுமின் –
திருவில் பொலி மறையோர் -திரு -என்று ஐஸ்வர்யத்தை ஆகவுமாம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை யாகவுமாம்
உருவக் குறள் அடிகள் -ஸ்ரீ வாமன மூர்த்தியாய் திரு அவதாரம் செய்து அருளினவனே இங்கே  நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான் –
அடிகள் -ஸ்வாமி-

—————————————–

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

வகுத்த விஷயத்தில் தொண்டு படுமின் என்று உபதேசித்து
தமது அத்யவசாயத்தையும் வெளியிட்டு அருளி
நான் இருக்கிற படி கண்டு நீங்களும் அப்படியே இருந்து வாழ வேண்டாமோ -என்கிறார்
பணியும் சிறு தொண்டீர் -தகுதி அற்றவர்களை பணியும் நீசர்களே -என்றுமாம்
அத்தை தவிர்ந்து வகுத்த விஷயத்தில் பணிமின் என்றுமாம் –
தீர்த்தங்கள் மது உடன் பெருகுவதால் நசையால் வண்டுகள் வந்து மொய்த்து  ரீங்கரிக்கும் –
ஈக்கள் வண்டோடு மொய்ப்ப வரம்பிகந்து ஊக்கமே மிகுந்து உள் தெளிவின்றியே
தேக்கெறிந்து வருதலிற்றீம்புனல் வாக்கு தேனுகர் மாக்களை மானுமே -கம்பர் ஆற்றுப் படலம் -21-

—————————————-

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு  ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே -7-9-4-

தம்முடைய உறுதியை வெளியிட்டு அருளுகிறார்
இது கேட்டு அவர்கள் திருந்தக் கூடும் என்று நினைத்து அருளிச் செய்கிறார் ஆகவுமாம்
ஏறாளும் இறையோனும் திசை மகனும் திரு மகளும் கூறாளும் தனியுடம்பன் -என்றும்
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் -என்றும்
இந்தரனுக்கு அந்தர்யாமியாய் இருந்து நிர்வஹிப்பவனும் இவனே
-மழுவாளி -தமப்பன் பிறர் என்று பாராதே கொல்லுகைக்கு பரிகரமான மழுவை உடைய ருத்ரனுக்கு
தன் திருமேனியிலே இடம் கொடுத்து கொடு நிற்கிற சீலத்தை உடைய சர்வாதிகன் –
சலசயனத்தானாய் உனது அடி அல்லது -தப்பான பாடம்
சலசயனத்து ஆனாயனது -என்றே வ்யாக்யானத்துக்குப் பொருந்தும் –
கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும் அனுபவிக்கலாம் படி
அவ்வதாரத்தின் படியே வந்து சாய்ந்தவன் – அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் –
அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –

————————————

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே -7-9-5-

நந்தா நெடு நரகத்திடை -நணுகா வகை உனது அடியேற்கு அருள் புரியே -என்று அந்வயம்-
-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்றபடி புகாதபடி உனது அடியேனுக்கு அருள் புரிய வேணும்
ப்ரஹ்மாதிகளும் இங்கே-வந்து எந்தாய் என்று இறைஞ்சி துதிக்கும் இடம் –

—————————————

முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும்  சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே –7-9-6-

சிறு புலியூரும் வேண்டா –
அங்கு உள்ள சல சயனத் திருக் கோயிலும் வேண்டா –
அதில் உள்ள பெருமானும் வேண்டா –
அத்திருக் கோயிலையே தொழுவதையே இயற்கையாக வுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு வடிகளே சரணம்
என்று இருப்பாருக்கு துயர் எல்லாம் தொலைந்து விடும் -என்கிறார்
இங்கே வயலுக்கும் ஊருக்கும் வாசி இல்லை
நீலோற்பலங்கள் -பெண்களின் கண்கள்
அரக்கலாம்பல் -அவர்களின் அதரம்
தாமரைப் பூக்கள் -அவர்கள் முகங்கள்
ஆக உள் வீதிகளுக்கும் வெளி நிலங்களுக்கும் வாசி தெரிவரிதாம் –

—————————–

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7-

சேய் ஓங்கு -மிகவும் உயர்ந்ததாய்
இத் தலத்து பெருமாளை திரு மால் இரும் சோலை மலை யுறையும் மாயா -என்பதால் இவனே அவன் என்கிறார்
நான்கு வேதங்கள் -திவ்ய தேசங்கள் -அடியார் மனம் -உறைபவன் இவனே
ப்ரத்யஷம் -திவ்ய தேச வாஸம்
வேத வாஸம் அடியார் மனச் வாஸம் -சாஸ்திர சித்தம்
உன் இருப்பிடம் இன்னது என்று நீயே சோதி வாய் திறந்து அருளிச் செய்ய வேண்டும்
சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டிய அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
கண்ணால் கண்டு அனுபவிக்கலாம் படியான அர்ச்சா ரூபங்களையும்
நெஞ்சாலே அனுபவிக்கலாம் படி அந்தர்யாமியாய் இருக்கும் வடிவங்களையும்
ஒரு காலே சேவை சாதிப்பித்த படியாலே கண்டு ஆச்சர்யப் படுகிறார் –

இத்தால் சொல்லிற்று ஆயத்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே-இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

————————————————-

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே   தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே -7-9-8-

மாதர்களின் கண் அழகில் ஈடுபட்டு அழிந்து போகாமல் உன் திறத்தில் ஈடுபட்டு உய்வு பெற வேண்டி
உன்னைத் தொழுகின்றேன் -உபேஷியாமல் அருள் புரிய வேண்டும்
கிளி போன்ற சொற்களை யுடைய மடவார்
மடவார்களை கண்டு கிளி பயிலும் என்றுமாம்-

—————————————————-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை  யுருவா  பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9-

-இனிமை கனிந்த நெஞ்சினராலே அனுசந்திக்கும் பாசுரம் –
ஆழ்வார் திரு உள்ளம் விளங்க வாயாராக விளிக்கின்றார்
காணும் பொழுதே சகல தாபங்களும் தீரும்படி பெரிய காள மேகம் போன்ற திரு உருவத்தை யுடையவனே –
தீய புத்தி கம்சன் போல்வாருக்கு கிட்ட ஒண்ணாத படி நெருப்பு போன்றவனே
அக்ரூரர் விதுரர் மாலாகாரர் போல்வாருக்கு -மெய்யன்பர்களுக்கு தண்ணீர் போலே விரும்பத் தக்க ரூபத்தை யுடையவனே –
மலை போலே எல்லை காண ஒண்ணாத பிரகாரத்தை யுடையவனே
நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடு வானாய்-சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் –
தாயாய்த் தந்தையாய்  மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -இத்யாதிப்படியே எல்லா வடிவும் ஆனவனே
இப்படி ஜகதாகாரானாய் இருப்பதும் தவிர கூராழி வெண் சங்கேந்தி -என்கிற
அசாதாராண வடிவுகளையும் யுடையவனே
பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சிறு புலியூர் சல சயனத்து பரம போக்யனே-
உன் திருவடிகளே சரணம் -என்கிறார் ஆயிற்று –

——————————

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –7-9-10-

செல்வம் மிக்க திரு வீதிகள் –
பாரார் -பூமியில் பிறந்தார் எல்லாரும் இது கற்க அதிகாரிகள் -என்றது ஆயிற்று
இத் திருமொழியை வாயாலே சொல்லி  ஆஸ்ரயிக்கவே பாபங்கள் தாமாகவே
நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று விட்டுப் போம்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: