பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-8-செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த-

இதுவும் திரு அழுந்தூர் திருப்பதி  -நான்காவது -மங்களா சாசன திருப்பதிகம் –
திருப்பாற்கடலில் ப்ரஹ்மாதிகள் கூப்பீடு கேட்டு குறை தீர்க்க அன்றோ யோக நித்தரை செய்து அருளுகிறேன்
இந்த்ரியங்களுக்கு அஞ்சி கூக்குரல் இடும் உம்முடைய குறையைத் தீர்க்கேனோ  –
அதற்காக அன்றோ இங்கே திரு அழுந்தூரிலே   நின்று அருளுகிறோம் -என்று காட்டி அருள
திருப்தராய்
இவனே ஆஸ்ரயணீயன் -எல்லாரும் இவனையே ஆஸ்ரயித்து உய்யப் பாருமின் -காண்மின் என்று பாசுரம் தோறும் அருளுகிறார்-

——————————–

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும்  வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும்   இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர்  கோவே -7-8-1-

இயன்ற தன்மை  -இயற்கையாகவே அறிந்துள்ள குணத்தை யுடையராய்
ஷீராப்தி நாதனே இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
அநந்தன் என்னும் மாயோன் -ஆதி சேஷனுக்கும்  பெருமாளுக்கும் பெயர் -தேச கால வஸ்து பரிச்சேதம்  இல்லாதவன்
மாயோன் -அகடிதகடநா சாமர்த்தியம்
அந்தணர்கள் தப வாய்மையால் ஸ்ருஷ்டிக்கவும் வேதம் ஓதவும் பிரமனுக்கு ஒப்பாவார்
அணி -ஆபரணம் போல என்றவாறே-

——————————————————–

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி  பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-

வேத பிரதானம் பண்ணி அருளிய ஸ்ரீ ஹயக்ரீவ பெருமானும் இவனே என்கிறார்
பன்னு கலை நால் வேதம் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -ஆறு அங்கங்கள் உடன் கூடிய வேதங்கள் என்றபடி
செந்நெல் கதிர்கள் -வெண் சாமாரம் வீச -சங்கங்கள் ஒலிக்க-அன்னப் பறவைகள் பேடைகள் உடன் செந்தாமரை மலர்களில் வீற்று இருக்கும்
சங்கம் -நீரில் வாழும் உயிர்களில்  ஓன்று
கதிர் கவரி -கதிர்க்க வரி -பாட பேதங்கள் -செந்நெல் பயிர்கள்  தங்கள் கதிர்களாகிய கவரியை வீச-

———————————————————–

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ்  சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து  வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-3-

வேதத்தின் தாத்பர்யமான கைங்கர்யம் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருளியதை அருளுகிறார்
குலத்தலைய மத  வேழம்–நிலத்திகழும் மலர்ச் சுடரேய்-சரியான பாடம்
கொலைத்தலைய-நிலைத் திகழும் -லை எதுகைக்காக பாட பேதங்கள்
கொல்லும் தொழிலை  தன்னிடம் கொண்ட என்பது பொருள்
கோடு கைம்முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல நீடுயிர் மா –
நான்கு கால்கள் -துதிக்கை இரண்டு தந்தம் மஸ்தகம் வால் ஒன்பதாலும் கொல்ல வல்லதே
நிலையாக விளங்கும் பரவுதலை உடைய ஒளி வடிவமானவனே-

மலைத்தலைய கடற்காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் -அதனாலே பொன்னி
எம்பெருமான் அன்பர்கள் உள்ள இடங்களில் வந்து ரஷிப்பது போலே காவிரியும் வெள்ளத்தால் வேண்டும்
இடங்களில் வந்து பாயும் என்றது ஆயிற்று-

—————————————————

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை   வைத்து அருளிய வெம்மீசன் காண்மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும்   குயில் கூவ மயில்கள்  ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

கூப்பிட அறியாத பூமியை பிரளயத்தில் ரஷித்து அருளிய ஸ்ரீ வராஹ நாயானாரும் இவனே என்கிறார்
சிலம்பு முதற்கலன் அணிந்தோர் செங்கட் குன்றம் -சிறந்த ரத்னன்களை யுடைய மேரு மலை
ஆலுதல் -ஆரவாரித்தல்

————————————————————–

சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய   வெம்மாயோன் காண்மின்
இனமேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன்சொல்
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –7-8-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் போலேயும் ஸ்ரீ பூமிப் பிராட்டி போலேயும் இல்லாத நம் போல்வார்  விரோதிகளையும் போக்கி அருளுபவனும் இவனே –
சிறுக்கனுக்கு உதைவி அருளினானே
பெரும் சீற்றமும் வலிமையையும் கொண்ட -சினமேவும் அடல் அரியன் உருவமாகி
கண்டும் பிற்காலியாத மிடுக்கன் -திறல் மேவும் இரணியன்
அன்பு மிக்க தாய் போலே மனசிலே கொடுமையை கொண்ட பூதனை -மன மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
கிளி போன்ற இன் சொல்லையும் -அன்னப்பெடை போன்ற மென்னடையும் கொண்ட மடவார் –
அறிந்தும் அறியாதது போல் இருத்தல் மடப்பம்-

——————————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே -7-8-6-

பிரயோஜனாந்த பரர்களுக்கும் யாசகனாய் சென்று ரஷித்து அருளினவன் -சௌசீல்யன்-என்கிறார்
மாணுரு -மாணி யுரு-அன்றிக்கே மாட்சிமை தாங்கிய உரு என்றுமாம் -ஆலமர் வித்தின் அரும் குறள் ஆனான்
மூ வுலகத்தையும் ஈரடியால் அடக்க வல்ல பேருருவம் தன்னுள் அடக்கிக் கொண்டு இருந்த மாட்சிமை
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும் வரையாதே திருவடிகளால் தீண்டி அருளினவன் -உதாரன்
தான் அளந்த -தானே நேரில் சென்று அளந்த -தேவர்களின் துயரத்தைக் கண்ட பின் -காருண்யம் பரத்வம் சௌலப்யம்-

————————————————————-

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே -7-8-7-

சீதா -அயோநிஜத்வம்
இரு சுடர் மீதினியிலங்கா மும்மதிள் இலங்கை -திரு எழுக் கூற்று இருக்கை போலே
இங்கும் -பகலவன் மீதியங்காதா  இலங்கை
அந்தமில் திண் கரம் -இராவணன் பெருமாள் திருவவதாரம் முன்பு கொண்ட வலிமையால்
அந்தமில் திண் சிரங்கள் -மீண்டும் மீண்டும் முளைத்தனவாதளால்
புரண்டு வீழ -வீழ்ந்து புரள
எய்து உகந்த -பாகவத விரோதிகளை தொலைத்த ப்ரீதி யுண்டே
தமிழுக்கு செம்மை -செவிக்கு இனிய செஞ்சொல்-

——————————————–

கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ  விடை யடர்த்துக்   குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே –7-8-8-

ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் கொண்ட த்ரவ்யத்தை அல்லது செல்லாத தன்மையான்
குரவைக் கூத்து ராச க்ரீடை
குரவை என்பது கூறும் காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும்
எய்தக் கூறும் இயல்பிற்று என்ப -என்றும் சிலப்பதிகாரத்திலும்
குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக்கை கோத்து
அந்நிலை கொட்ப நின்று ஆடலாகும் -அடியாருக்கு நல்லார் உரை
பாக்கு மரங்களில் -முதிர்ந்த பழங்கள் -பவளத்தையும் -பசும் காய்கள் மரகத ரத்னத்தையும் –
விரிந்த பாளைகள் வெண் முத்துக்களையும் காட்டுமே-

———————————————-

ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில்  மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-9-

சேடு ஏறு -இளமை மிக்கு தோன்றுகின்ற -சேடு -அழகு -இளமை -பெருமை
திரு ஆழியைப் போலே நம்மையும் கை விடாதே தரித்து அருளுவான்
நெடியோன் -ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹம் மிக்கவன்
ஆடு  ஏறும் மலர்க் குழலார் -நறு மணம் மிக்க மலர்களை யுடைய கூந்தலை யுடைய மடவார் –
ஆடலில் வல்லார் இரு மருங்கிலும் ஏறி இருப்பப் பெற்ற திவ்ய தேசம் –

—————————————–

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10-

பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலமான பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான ஐஸ்வர்யம் பெறப் பெறுவார்கள்
ஒன்றினோடு -வ்யூஹ மூர்த்தி
நான்கும் -2-4-5-10- விலங்கான ரூபமாகிய விபவ மூர்த்திகள் பாசுரங்கள்
ஓர் ஐந்தும் -கஜேந்திர ரக்ஷண /வாமன /ராம /கிருஷ்ண திரு வவதாரங்கள் பாசுரங்கள்-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: