பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-6-சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த-

திரு அழுந்தூர் திருப்பதி -இரண்டாவது -மங்களா சாசன திருப்பதிகம் –

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி  வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே -7-6-1-

நரசிங்கமதாய் -என்னாமல்-சிங்கமதாய் -என்றது திரு முக மண்டலமே முக்கியம் என்பதால்
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஓயாது வேதம் ஓதுவதில் -சிருஷ்டி நடத்தும் விஷயத்தில் அயனை ஒத்தவர்கள் –

ஆஸ்ரிதர் உடைய விரோதி தொலையப் பெற்றோம் என்று உகந்த –
திரு நகங்களுக்கே இரை போராமையாலே திரு வாழி திருச் சங்கு ஆழ்வார்கள் இருந்த படியே விளங்கப் பெற்றவன் –

————————————–

கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை யடியார்க்கு
ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

அடியார்க்கு ஆ ஆ என்று இரங்கி -நீர்மையால் -தயையால் –
பரதுக்க துக்கித்வம் –
சக்தி இருந்தாலும் அநியாயமாக குழந்தையைத் துக்கப்பட வைத்தோமே என்கிற தாயைப் போலே
காவல் சோர்வால் -திரௌபதிக்கு எல்லாம் செய்தாலும்  கடனாளி  போலே நெஞ்சில் புண்ணுடனே எழுந்து அருளிற்று
ஸ்ரீ கஜேந்திர  ஆழ்வான் உடைய கால் புண்ணை தனது திரு பரிவட்டத்தாலே வேது கொடுத்து குளிரத் தடவிக் கொடுத்து
அருளிய அவன் திரு உள்ளத்தில் துக்கம் வாசோ மகோசரம் அன்றோ
அவிகாராயா சுத்தாயா என்பதை மட்டும் கொண்டு அவனுக்கு துக்கம் இல்லை என்பது
அவனை காஷ்ட லோஷ்ட ப்ராயனாக இசைந்தமைக்கு பர்யாயம் அன்றோ
ஆஸ்ரித விச்லேஷத்தில் விகாரம் இல்லை என்றால் அவ் வஸ்துவை அணைய ஆசைப் பட வேண்டாவே-

—————————————

உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி  யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

உடையான் -ஸ்வாமி
ஒலி நீர் -ஒலிக்கின்ற நீர் -கடல்
விடையான் -எருதை வாகனமாக யுடைய ருத்ரன் -பாணாசுர யுத்த விருத்தாந்தம்
அடையார் -தன்னை வந்து அடையாமல் இருப்பார்கள் -பகைவர் என்றபடி
பிரதிகூலங்களை குடியோடு களைந்து ஒழிப்பவன்-

———————————————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

ஆபத்துக்களை போக்க வல்ல ஆண் புலி –
பசு நெய்யை விரும்பி அமுது செய்யும் ஆ மருவி அப்பன் நித்ய வாசம் செய்ய கண்டு குறைகள் தீர்ந்தேன் –
திருவாய்ப்பாடி ஸ்தானத்திலே திரு அழுந்தூரைப் பற்றி நின்றான்
பொன்றாமை -பொன்றுதல் -அழிதல்
அதனுக்கு அருள் செய்த -தாமரைப் பூவைத் திருவடிகளில் சமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிய அருள்-

————————————————

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள்  நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன்  கண்டு கொண்டேனே-7-6-5-

அஞ்சன மலை நிற்பது போலே இங்கே நின்று சேவை சாதிப்பவனை அடியேன் சேவிக்கப் பெற்றேன்
ஆ மருவி அப்பன் இடம் ஆழ்வார் ஈடுபட்டு இருக்க திருக் கண்ணமங்கை எம்பெருமான் ஓடி வந்து
இங்கேயே சேவை சாதித்து அருளினான்
கண்ண மங்கையுள் நின்றானை -என்று அவனுக்கும் மங்களா சாசனம் செய்து அருளுகிறார்-

——————————————-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -7-6-6-

சர்வ ஸ்மாத் பரன்-யாம் கடவுள்  என்று இருக்கும் எவ்வுலகில்  கடவுளர்க்கும் ஆம் கடவுள் நீ -திருவரங்க கலம்பகம்
உரியானை யுகந்தான் -யானை உரி உகந்தான் -யானை தோலை உகந்து தரிக்கின்ற  ருத்ரன்
நடனம் ஆடும் பொழுது யானை யுரியைப் போர்த்துக் கொண்டு நடனம் ஆடுவானாம்
ப்ரஹ்மாதிகளாலும் உள்ளபடி அறியப் படாத ஸ்வரூப ஸ்வ பாவங்கள் யுடையவன்
வைதிகர்கள் அடி பணிய நிற்பவன்
நீல மணி போன்றவன் -அவனை சேவிக்கப் பெற்ற பரம ஆனந்தம் பெற்றேன்-

—————————————-

திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா
உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே –7–6-7-

ஸ்ரீ யபதியாய் -அனைத்துக்கும் அந்தராத்மாவாய் –ஒலி சேரும் மாருதத்தை
வாயு ஆகாசத்தில் நின்றும் பிறந்ததால்
பூர்வ பூர்வ பூதங்களின் குணமும் உத்தர உத்தர பூதங்களின் காணலாம் என்கிற ரீதியில்
தனது குணமான ஸ்பர்சமும் ஆகாச குணமான சப்தமும் உண்டே காற்றுக்கு
பூநிலாய ஐந்துமாய் -பாசுரத்தில் சிறந்த கால் இரண்டுமாய் -என்றதும் அனுசந்தேயம்
கருவார் கற்பகம் -கரு -அடியைச் சொன்னபடி -ஸ்வர்க்க லோகத்தில் ஆலம்பனம் ஒன்றுமே
இல்லாத கற்பகத் தரு போலே இன்றிக்கே பூமியிலே வேர் பற்று உடைத்தான கற்பகமாம் எம்பெருமான் –

———————————————–

நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன்
முலையாள வித்தகனை முது நான்மறை வீதி தோறும்
அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-8-

நிலை ஆளாக -நிலை நின்ற அடியவனாக -அவனே உபாய உபேயமாக பற்றி ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி வழு  விலா அடிமை செய்யப் பெற்றவனாக்கி அருள் செய்தான்
நிலமகள் தன் முலையாள வித்தகன் -ஸ்ரீ பூமிப் பிராட்டியார் உடைய திரு முலைத் தடத்துக்கு
ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஆச்சர்ய பூதனை –
பூமிப் பிராட்டிக்கு ஸ்ருங்கார ரசத்தில் தோலாதவன் என்றவாறு –
வேத கோஷம் மிக்க திவ்ய தேசம்
கலையார் சொற்பொருளை -சகல சாஸ்த்ரங்களில் சகல சப்தங்களுக்கும் அவனே பொருள்
சகல கலைகளிலும் புருஷார்த்தமாகப் பிரதிபாதிக்கப் படுபவன்
அலையார் கடல் -பாட பேதம்

———————————————————–

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

திருப் பேர் நகரிலும்
திருக் குடந்தையிலும்
அரவணை மீது பள்ளி கொண்டு இருப்பவனும்
நித்ய யுவதியான பெரிய பிராட்டியாருக்கு  நாயகனும்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
கார் காலத்து காள மேகம் போலே  இங்கே சேவை சாதித்து அருளுகிறான் -அவனைக் கண்டு களித்தேன் –

——————————————————–

திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல்  வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே –7-6-10-

மருவார் -பகைவருடைய
கறை நெடு வேல் -தானுகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -போது போக்காய் இருப்பதால்
ரத்தக் கறை கழுவதற்கு அவகாசம் இல்லை
பரம பதத்தை தாங்கள் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவார்கள்-

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: