திருவழுந்தூர் திருப்பதி -முதலாவது-மங்களா சாசன திருப்பதிகம் –
உபரி சரவஸூ -முனிவர்களால் சபிக்கப் பட்டு -தேர் அழுந்தி -இப் பெயர் பெற்ற திவ்ய தேசம்
ஆ மருவி யப்பன் –
———————————————
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழிய மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-
அத்யந்த அதிசய உக்தி யாகங்கள் செய்வதற்கு முன்னமே மழை பொழியும் என்றது
முந்து வானம் மழை பொழியும் -தவறான பாடம்– பொழிய என்பதே பிராசீன பாடம்
மூவா வுருவின் – -சக்தி வாய்ந்த யௌவன சாலிகள் என்றபடி
அந்தி மூன்றும் -ப்ராதஸ் ஸ்வநம் -மாத்யந்தின ஸ்வநம் -சாயம் ஸ்வநம்-
—————————————————————–
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே–7-5-2-
குருகுகள் திரள் திரளாக மீன்களைப் பிடிக்க நீர் நிலைகளிலே வந்து இழிந்து
தம் வாய்க்கு அடங்கக் கூடிய சிறு மீனைப்-ஆரல்- பிடித்து கதுப்பிலே அடக்கிக் கொண்டு இருக்கச் செய்தே
வேறு ஒரு பெரிய மீன் -நெடு வாளை-வந்து தோற்ற அதைப் பிடிக்க அஞ்சி ஓடிப் போய் பின்னையும் ஆசையினால் வந்து கிட்டா நிற்கும்
இதன் உட்கருத்தை பெரிய வாச்சான் பிள்ளை -பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதிரதர் மகா ரதர் -என்று இங்கனே
ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று
சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –
——————————————————————–
செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3-
வண்டுகள் குருக்கத்திப் பூக்களை விட்டு ஸ்திரீகளின் கூந்தல் கற்றைகளில் மது பானம் பண்ண எருகின்றனவாம்
ஐம்பால் -ஐந்து பண்புகள் கொண்ட கூந்தல் -சுருண்டு -நீண்டு -அடர்ந்து -கறுத்து-நறு மணம் கொண்டு இருத்தல் –
————————————————————————-
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-
பரிவர் யாரும் இல்லாமல் ஆலிலை துயின்றுள்ளானே என்ற சிந்தனையே காரணமாக என்னுள்ளம் புகுந்து அருளினான்
மானச அனுபவம் மாத்ரமே அன்றி கண்ணுக்கும் விஷயமாய் ஹிருதயம் வேறு ஒன்றிலும் போகாத படி
இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளினவன்
பிள்ளைக்கு இரை தேடப் போகும் பொழுதும் பெடையுடன் செல்லுமாம் புள்ளு-
———————————————————–
பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே —-7-5-5-
சூர்ய சந்த்ரர்களுக்கு நிர்வாஹகன்
சங்கல்ப சக்தியால் பகலை இரவாக்கவும் இரவை பகலாக்கவும் வல்லவன்
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் -பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் -சாத்விகர்களுக்கு ஜாயமான கடாஷம் அருளி ராஷசருக்கும்
தாமசருக்கும் தோன்றாமல்
இப்படி ஜகத் ரூபியாய் இருந்தாலும் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாக
இங்கே சேவை சாதித்து அருளுகிறான்-
காற்று தூள் மேகப்படலம் கார் காலத்தில் இருக்குமே –
-கொடிகளில் கட்டிய துணிகளின் அலைச்சலால் காற்று
திரு வீதியில் செல்வத் தேர்கள் சஞ்சாரத்தால் தூள்
மாதர்கள் கூந்தல் பரிமளத்துக்கு அகில் புகைப்படலம்
நித்யமும் வர்ஷா காலமாய் தோற்றும் –
——————————————-
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே –7-5-6-
என்னை பெறுகைக்கு நெடு நாள் சமயம் பார்த்து பெற்றதால் அலாப்ய லாபம் பெற்றால் போலே சந்தோஷித்து
தாமரைப் பூ மலர்ந்தால் போலே திருப்பவளத்தை திறந்து ஸ்மிதம் செய்தருளி
அதிலே என்னை ஈடுபடுத்தி ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு போக்கு இல்லை என்று தோற்ற நின்றவர்
கண்ணுக்கு இலக்காக இங்கே சேவை சாதித்து அருளுகிறார் –
போழ்க-மேகத்தின் வயிற்றைக் கீண்ட அளவிலே
மாடங்களில் பாதுகாப்புக்கு உறுப்பாக சூலங்கள் நாட்டப்பட்டு இருக்குமே -ஒக்கம் சொன்ன படி –
சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசை சூலம் செழும் கொண்டல் அகடிரிய -3-9-4–என்றார்
ஸ்ரீ வைகுண்ட விண்ணகர் திருப் பதிகத்திலும்-
மாதர்கள் ஆடும் ஆரவாரம் இடையறாது செல்லுகின்றதாம்-
——————————————-
மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல்போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே –7-5-7-
இது முதல் மேல் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வாருக்கு நாயகி பாவனை –
என்னுடன் கலவி செய்ய திரு உள்ளம் கொண்டு -மாலைப் பொழுதிலே வந்து சேர்ந்து -மென் மலர்ப் பள்ளியிலே தங்கி
அதிலே பொருந்தாமல் -திருப்தி படாமல் -என்னுடைய ஹிருதயத்திலே ஏக தத்வமாகப் புகுந்து
கலவி பிரிவுடனே சேர்ந்து அல்லது இருக்க மாட்டாமையாலே பிரிவை பிரஸ்தாபித்து
அவ்வளவிலே என் கண்களில் நீர் பெருக –
இப்பைப் பட்ட நாயகியை எங்கனம் பிரிவேன் என்று கலங்கி கால் பெயர்ந்து போக மாட்டாதே நின்றவர்
நித்ய வாசம் செய்து அருளும் இடம் இத் திவ்ய தேசம்
இங்கே திரு வீதிகளும் கடல் போலே விசாலமாய் பெருமை பொருந்தி இருக்கும்
சாந்திட்டு வெண்ணிறமாய் இருக்கும் மணி மாடங்கள் விண்ணுலகத்து அளவும் ஓங்கி இருக்கும் –
கரும்பாலைப் புகை சூர்ய கிரணங்களை மறைத்து எங்கும் நிழல் செய்யும் –
——————————————
வஞ்சி மருங்கிலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற்பாவைமார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே –7-5-8-
கனவிலே வந்து கலந்து -இடை நோவ -பூர்ண சம்ச்லேஷம் செய்து அருளி -பிரிந்து போனவர் மற்றுள்ள
அன்பரோடும் நனவிலே -ப்ரத்யஷமாக
கலவி செய்ய வந்து நிற்கிற இடம் இது
மருங்குல் இடை -இரட்டைச் சொற்கள்
மாதர்கள் அணிந்த பொன்மயமான நூபுரங்கள் சப்தம் ஓயாது இருக்கும் –
கை கூப்பி நின்றார் -நான் அஞ்சலி செய்யப் பெற்று நின்று கொண்டு இருந்தவர் -என்றபடி-
———————————————–
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே-7-5-9-
என்னுடைய பஞ்ச இந்த்ரியங்களையும் தன வசமாக்கிக் கொண்டவர் -ஜிஹ்வே கீர்த்தய கேசவம் இத்யாதி
மேனி அழகையும் கொள்ளை கொண்டவர்
அரையில் பரியட்டம் தங்காத படி பண்ணிப் போந்தவர் -தலைவர் வாழும் இடம்
புனிதர் -எதிர்மறை லஷணம்-பெண்ணை படுகொலை பண்ணி -ப்ரணய ரோஷம் தோற்ற அருளிச் செய்கிறார்
வயல்களிலும் பாட்டும் கூத்தும் நடை பெறுகின்றன –
———————————————-
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10-
குவளைக் கண்கள்
ஆம்பல் அதரம்
தாமரைப் பூக்கள் முக மண்டலம் –
ஓத வல்லார்கள் பாவங்கள் தொலைந்து போம்-
—————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply