பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-1-வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து-

அவதாரிகை –
பகவத் விஷயத்தை அனுபவித்துக் கொண்டு போகச் செய்தே ஆனந்தம் தலை மண்டிக் கொண்டு
இப்படிப்பட்ட அனுபவம் எல்லாருக்கும் இல்லையே இருக்க –
நமக்கு மாதரம் கிடைக்க வேண்டிய காரணம் யாது -என்று ஆராய்ந்து –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்றபடி
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சு தான் முதலடி என்று துணிந்து
இப்படிப் பட்ட நெஞ்சானது தீய விஷயங்களில் செல்லாது
ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷயத்தில் சென்று சேர்ந்ததே என்று உவந்து
அந்த நெஞ்சைக் கொண்டாடுதல் நம் ஆழ்வார்கட்கு உள்ளது ஓன்று –

நம் ஆழ்வாரும் திருவாய் மொழியிலே –
நெஞ்சமே நல்லை நல்லை -உன்னைப் பெற்றால் என் செய்யோம் -இனி என்ன குறைவினம் -என்றும்
ஊனில் வாழ் உயிரே-நல்லை போ உன்னைப் பெற்று -வானுளார் பெருமான் மதிசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
என்று அடிக்கடி நெஞ்சைக் கொண்டாடுவர் –
அப்படியே இவ்வாழ்வார் தாமும் இத் திரு மொழியில் ஒவ்வொரு பாட்டிலும் தமது திரு உள்ளத்தை விளித்து
திருவேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே-என்று சொல்லி உகக்கிறார்-

நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே -என்றும்
இனி நான் உன்னை என்றும் விடேனே -என்றும் பகவத் விஷயத்தில் நான் ஈடுப்படும்படியாக
அவன் திறத்து அடிமைத் தொழில் பூண்டது நீ  அன்றோ நெஞ்சமே -என்று
ஒருகால் சொன்னது போல் ஒன்பதின் கால் சொல்லி நெஞ்சைப் புகழ்கின்றார் –
தம்மில் காட்டில் நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுவது கவி மரபு -நெஞ்சைத் தூது விடுவதாகவும் சொல்லுவார்கள் இறே
நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போது போக்குவதற்கு இவ்விருள் தரும் மா ஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல்
உண்டியே உடையே உகந்து ஓடுகிறவர்களாய்  இருப்பதால் உசாத் துணையாவது நெஞ்சைத் தவிர
வேறு இல்லாமையாலே அந்த நெஞ்சை நோக்கித் தானே வார்த்தை சொல்ல வேண்டும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார்
ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவது எனபது பக்தர்களுக்கு ஒரு நல் போது போக்காக அமைந்ததாம்
நெஞ்சு பிரிந்து போயிற்றதாகச் சொல்லுவதும் இப்படியே
ஆக -இத் திருமொழியால் தமது நெஞ்சைப் புகழ்ந்து பேசும் முகத்தால் திரு வேங்கடமுடையானை அனுபவித்து இனியராகிறார் –

————————————————

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

என் நெஞ்சமே -நீ வானவர் தங்கள் சிந்தை போலே திரு வேங்கடமுடையானுக்கு இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே-என்று உகந்து பேசுகிறார் –
இவ் விருள் தரும் மா ஞாலத்திலே பிறந்த என்னுடைய நெஞ்சாக நீ இருந்தும் இந்த மண்ணோருடைய நெஞ்சு
எப்படி துர் விஷயங்களையே சிந்தை செய்கிறதோ –
அப்படி நீ விஷயாந்தரங்களைச் சிந்தியாமல் ஒரு நாளும் சம்சார நாற்றமே கண்டு அறியாத நித்ய ஸூரிகளின் நெஞ்சு போலே
திரு வேங்கடமுடையான் திறத்திலே அடிமைத் தொழில் ஏற்றுக் கொண்டாயே –
உன்னுடைய பாக்யமே பாக்கியம் -என்றவாறு –

அந்த திருவேங்கடமுடையான் எப்படிப் பட்டவன் என்னில்-
மாதவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை-மிக்க அதிர்ஷ்ட சாலிகளான
மனிசர் யுண்டு -பொய்கையார் -பூதத்தார் -பேயார்-புகழ் மழிசை ஐயன் -அருள் மாறன்-சேரலர் கோன் -துய்ய பட்டநாதன் –
அன்பர் தாள் தூளி- நற் பாணன் –
அவர்கள் திரு உள்ளத்திலே பரம போக்யமாய்ப் பொருந்தி இருந்து நித்ய வாசம் பண்ணுமவன் –
அநந்ய பிரயோஜனரான பக்தர்களுடைய நெஞ்சை விட்டு பிரியமாட்டாத பெருமாள் -என்கை-

இன்னமும் எப்படிப் பட்டவன் என் என்னில் –
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி -திருமலையில் உள்ள
வேடர் குறவர் முதலானோர் தாங்கள் சமையல் செய்து கொள்வதற்கு அகில் மரங்களை வெட்டி இட்டுத் தீயை யுண்டாக்குவார்கள் –
அதன் புகையானது திருமலை எங்கும் பரவி கம கம என்று பரிமளித்துக் கொண்டு இருக்கும்
அப்படிப்பட்ட ஸூகந்தமான திருமலையிலே எழுந்து அருளி இருப்பவன் –
கானவர் இடு  காரகில் -என்ற இடத்து –
அதி பரி சயாத வஞ்ஜா சந்தத கம நாத நாதரோ பவதி -மலயே பில்ல புரந்த்ரீ சந்தன தருகாஷ்ட மிந்தனம் குருதே -என்ற
பண்டித ராஜனுடைய ஸூபாஷிதம் ஸ்மரிக்கத் தகும்
அதிக பரிசயம் செய்தால் அவமானம் யுண்டாகும் -அடிக்கடி வீட்டுக்குச் சென்றால் அலஷியம் யுண்டாகும் –
பொதிக மலையில் குறத்திகள் சந்தனக் கட்டைகளை சமையலுக்கு விறகாக உபயோகப் படுத்த காண்கிறோம் இறே
கானவரட்கு கார் அகில் எளிய சரக்காய் இருப்பதால் அவர்கள் அவற்றை இட்டுச் சமைப்பார்கள் –
அவர்கள் ஸ்வ அர்த்தமாக செய்து கொண்ட அக்காரியமும் பரார்த்தமாகித்
திருமலையிலே பரிமளிதமாகி செய்கின்றது என்கிறார் ஆயிற்று
நாற்றத் துழாய் முடி நாராயணனுக்கும் நறு நாற்றமூட்டுகிற படி-

மேவி -இது வினை எச்சம் அன்று -மேவியவன் என்னும் பொருள்தான பெயர்ச் சொல் –
இ -பெயர் விகுதி -நாடோடி -பிறை சூடி -குதிரை யோட்டி போலே –
மாண் குறளான அந்தணர்க்கு -தன்னுடையதான பூமியைப் பெறுதற்கு தான் யாசகனாய் வந்து நின்ற பெருமானுடைய குறை தீர –
நெஞ்சமே நீ அவனுடைய வஸ்துவாக அமையப் பெற்றாயே
வாமன பிராமணனாக வந்ததால் அந்தணர்க்கு-எனப்பட்டது
அன்றியே -அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் -திருக் குறள் -30-
அழகிய தண்மை யுடையவன் -மகா தர்மிஷ்டன் –
முதல் அடியில் இனிது  வந்து  -இனிது உவந்து -என்றும் பிரிக்கலாம் –
வானவர்கள் தம் சிந்தையில் உறைவது போலே மாதவமானார் தங்களுடைய சிந்தையிலும்
அமர்ந்து உறைகின்றான் -என்றும் பொருள் சொல்லலாம் ஆயினும் –
என் நெஞ்சே நீ வானவர் தங்கள் சிந்தை போலே திரு வேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே -என்று
அன்வயித்து பொருள் கொள்ளுதல் சிறக்கும் –
இனிது உவந்து -என்பதை இரண்டாம்   அடியிலோ  ஈற்று அடியிலோ  அன்வயித்து கொள்ளலாம் –

மாதவமானவர் தங்கள் சிந்தை யிலே இனிது  வந்து  அமர்ந்து உறைகின்ற வெந்தை-என்றும்
இனிது வந்து அடிமைத் தொழில் பூண்டாயே -என்றும் அன்வயிக்கலாம்
மானவர் -மனுஷ்யர்
மாண் குறளாய-பாடம் எதுகைக்குச் சேராது -பிராசீன பாடமும் அன்று  –

————————————————————-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

நெஞ்கமே -திருமலை அப்பனுடைய திருக் குணங்களின் வாசி அறிந்து நீ அவன் திரத்திலே அடிமைத் தொழில் பூண்டாயே –
நாம் பந்துக்கள் என்றும் தாயாதிகள் என்றும் சில ஆபாச பந்துக்களைக் கற்பித்துக் கொண்டு அவர்களுக்கு நன்மை செய்வதும்
சிலர் சத்ருக்கள் என்று கொண்டு அவர்கட்கு தீமை செய்வதுமாக இருக்கின்றோமே –
இப்படி அல்ல எம்பெருமானுடைய ஸ்வ பாவம் –
அவன் எப்படிப் பட்டவன் என்றால் -உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் –தேவா நாம் தான வாநஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்று
எல்லார் திறத்திலும் வாசி அற்ற அன்புடையவனாகச் சொல்லப் படுபவன் –
இன்னமும் எப்படிப் பட்டவன் -என்றால்  -உகந்தவர் தம்மை மண் மிசைப் பிறவியே கெடுப்பான் -தன்னை யார் உகக்கின்றார்களோ
அவர்களை சம்சாரத்தில் நின்றும் களைந்து எடுத்து நித்ய ஸூரிகள் உடைய திரளிலே நிறுத்துமவன்-
அது கண்டு அடிமைத் தொழில் பூண்டாயே -என்று அன்வயம்
இப்படிப் பட்ட எம்பெருமானுடைய ஸ்வ பாவத்தைக் கண்டறிந்து –
அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தம் -என்று கொண்டாயே -என்கை –

உகந்தவர் தம்மை -என்கிறதுக்கு -தன்னிடத்தில் எவர் ப்ரீதி பண்ணுகிறார்களோ அவர்களை -என்றும் –
எம்பெருமான் தான் எவர்கள்  இடத்தில் ப்ரீதி வைக்கிறானோ அவர்களை -என்றும் கொள்ளலாம் –
அவனுக்கு பஷபாதித்வம் வந்திடும் என்று நினைக்க வேண்டா
ப்ரியதம ஏவஹி வரணீயோ பவதி -என்று ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்தபடி -தன் பக்கல் அன்பு  செய்வாரையே தான் உகப்பான் –
என்னுடைய நெஞ்சம் என்று கௌரவ வார்த்தை
குறத்திகளும் வண்டுகளும் குறிஞ்சி முதலிய பண்களை பாடும் திருமலை
குறிஞ்சி என்றும் மருள் என்றும் பண்களின் பெயர்
அன்றிக்கே மருள் -அடை மொழியாக்கி -மதி மயக்கம் பண்ணும் குறிஞ்சி என்ற பண் என்னவுமாம்-

அறவன் –
தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு
தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற பரம தார்மிகன் -பெரிய வாச்சான் பிள்ளை –

———————————————————

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏந்தி உகந்து உகந்து தொண்டரோங்கள் பாடியாட -என்றபடி
அப்படிப் பட்ட தொண்டர்களையும் அவர்கள் சம்பந்தம் உடையார்களையும் பரம பதத்தில் கொண்டு சேர்கிற
மகா குணம் கண்டு அடிமை பூண்டாய்-

இண்டை கொண்டு -என்னாமல்-இண்டை யாயின கொண்டு -என்றது
சுத்த பாவத்துடன் கொள்ளும் ஏதாவது புஷ்பம் என்றபடி
செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இருவாட்சி என்பன வேண்டாம் –
பூ மாலை என்று பேர் பெற்றவற்றைக்  கொண்டு -பெரிய வாச்சான் பிள்ளை
பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி  நன்னீர் தூய  புரிவதுவும் புகை பூவே  -திருவாய் -1-6-1-
அகில் புகையோ கருமுகைப்  பூ  வேண்டாம் -ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் அமையும்
செதுகை இட்டு புகைக்கலாம் -கண்டகாலிப் பூவும் சூட்டலாம்  -பட்டர்

ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயேத்-
கையில் முள் பாயுமே என்பதால் சாஸ்திரம் -தயையால் -நிஷேதித்தது  –
அத்யந்த பக்தி யுக்தாநாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரமம்-பக்தி எல்லை கடந்தால் நூல் வரம்பில்லை –

ஜீவித காலத்திலும் பின்பும் சம்பந்தி சம்பந்திகளுக்கும் புருஷார்த்த சித்தி யுண்டு
வண்டுகள் வாழும் சோலை வாய்ப்பு கொண்ட திரு வேங்கட மலையையும் பரமபதத்தையும் ஆண்டு வரும்
உபய விபூதி நிர்வாஹகனுக்கு அடிமைத் தொழில் பூண்டாய்

———————————————————

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

பாவியாது -அலை பாயாமல் திண்ணிய அத்யவசாயம் கொண்டாய் -பாவிதல் -ஆராய்தல் –
திருவவதரித்து இங்கே அடிமை கொண்டு -அவ்வளவில் திருப்தி பெறாமல் -பரம பதத்தில் கொண்டு போய் அருளி
மேலும் கைங்கர்யம் கொள்பவன் -கோபால கிருஷ்ணன்
கோவி நாயகன் -கோபிகளுக்கு நாதன்
அவனே திருவேங்கடமுடையான் –
கொண்டல் உந்து உயர் வேங்கட மலை -மேகங்களை சென்று தள்ளும்படி அவ்வளவும் வளர்ந்த சிகரங்களை யுடைய திருவேங்கடம் –
வானவர் ஆவியாய் இருப்பார் -வானவர் -ஞானி என்று கொண்டு -ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்றவாறே –

—————————————————————–

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-5-

போதி -அரச மரம் -புத்தர்கள் தேவதை இருப்பிடம் -கிளையும் கப்புமாக வளர்ந்ததால் பொங்கு போதி
பிண்டி -அசோக மரம் -ஜைனர்கள் தேவதை இருப்பிடம் -நோன்பியர் -அமணர்
வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் -தானவர் அசுரர்கள் என்றும் ஸ்தானவர்-இவ்விலகத்தார் என்றும்
அங்கண்-புண்டரீகாஷன் என்றபடி –

——————————————————–

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

துவரியாடை -காஷாயம்
மட்டையர் -மொட்டைத் தலையர் -தலையில் பூச்சி வந்து ஜீவா ஹிம்சை யாகக் கூடாது என்பதால்
மேல் விழுந்து சோறுகளை தின்று பெரும் கூட்டமாக இருந்து -உண்டியே உகந்து ஊன் மல்கி மோடு பருத்து
இப்படி இன்றி திருவேங்கடமுடையானுக்கு அடிமை பூண்டு வாழப் பெற்றாயே-

கண்ணார் விசும்பிடை அமரர் -விசாலமான பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு தலைவன்
கவரி மான்கள் கூட்டமாகச் சேர்ந்து இருக்கிற திருமலை-வேங்கடம் கோயில் கொண்ட அமரர் நாயகனுக்கு அடிமை பூண்டாயே-

————————————————————–

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-7-

தருக்கு -யுக்திவாதம் -சாஸ்த்ரங்களுக்கு இணங்காத உக்தி வாதங்களால் மத ஸ்தாபனம்  செய்வர்
தருக்கினால் சமண்  செய்பவர்
பெரும் சோறு உண்ணுவர் -வேகு சோறு உண்ணுவர்
அலக்கண் -துன்பம்
வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு -வைதிகர்கள் வணங்கும்படி சூர்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருப்பவன் –
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ -முப்போதும் அனுசந்திக்கிறோம் இறே-

———————————————————

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் -சம்சாரிகள் வார்த்தை
பர வாசுதேவன் -எட்டா நிலத்தில் இருப்பவன் -தூரஸ்தன் -என்றும்
அர்ச்சாவதாரன் சமீபம் -அலஷ்யம் தோற்ற பேசுவர்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதார சௌலப்யம் அறியாமல்
வியூஹ அந்தர்யாமியும் நெஞ்சுக்கு எட்டாதவன் -எப்படி உபாசிப்பது
என்று எல்லாம் பேசுவர்
இப்படி அவன் குணங்களை எல்லாம் இகழ்ந்து பேசுவர்
மத யானை கும்ப ஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்கள் உண்டாகுமே -வேய்கள் நின்று வெண்  முத்தமே சொரி வேங்கடம்
வெண் தரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கட மா மலை என்றார் கீழ் திரு மொழியிலும்
அந்த முத்துக்கள் ஒளி வழி காட்ட அப்பன் இங்கே வந்து புகுந்தான்
ஆயர் நாயகன் -கிருஷ்ணனே திருவேங்கடமுடையான் –

——————————————————

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காணகிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-9-

கூடியாடி உரைத்ததையே யுரைத்தாய் -தனது நெஞ்சின் பூர்வ அவஸ்தையை சொன்னபடி –
நேற்று வரை எப்படிபோது போக்கித் திரிந்தாய்  இன்று எப்படி ஆனாய் -ஆச்சர்யம் தோன்ற அருளிச் செய்கிறார் –

பக்திக்கு போக்கு வீடாக பாடியும் ஆடியும் -பலரும் பணிந்து ஏத்தி அவ்வளவிலும் காண முடியாதவனை –
பிரமன் சிவன் இந்த்ரன் போன்றார் மேவித் தொழும் திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமை பூண்டாயே-

காணகிலா -காணகிலார் -பாட பேதம்
காணகிலா -திருவேங்கடமுடையானுக்கும் -ப்ரஹ்மாதிகளுக்கும் விசேஷணம்
ஆடு தாமரையோன் -வெற்றியை யுடைய ப்ரஹ்மன்-உலகைப் படைக்க வல்ல சமர்த்தன் –
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு வவதரித்து ஆடின விடாய் தீர  திருமலையில் வந்து நிற்பவன்
பண்டு ஆடின சுவடு இந்த நிலைமையிலும் தோற்றா நிற்கும்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் -வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும் -அனுசந்தான சேர்த்தி அழகு திரு நெடும் தாண்டகம் –

———————————————————————–

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி  இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

மின்னு மா முகில் மேவு
பெருமாளும் பிராட்டியும் கூடி வாழும் வாழ்ச்சியை சூசிப்பிக்கிறது
மதுகைடபர்களை அழித்து அன்னமாய் -ஹம்ச ரூபியாய் -ப்ரஹ்மனுக்கு உபதேசித்து அருளினவனான
திரு வேங்கடமுடையான் விஷயமான
இப்பத்தையும் ஓத வல்லார் பரமபதத்தை இருப்பிடமாக கொள்ளப் பெறுவார்கள் –
கன்னி -அழிவு இல்லாமை

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: