பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-10-கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன்-

அவதாரிகை –
கீழ்த் திருமொழியில் –
தம்முடைய வெறுமையைச் சொல்லி சரணம் புகுந்து –
அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் -அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் -என்று பலகாலும் பிரார்த்தித்தார் –
அஹங்காரம் மமகாரம் முதலிய விரோதிகள் கழிந்து பரபக்தி பெருகினால் அன்றோ கைங்கர்யம் பெறலாவது-
அதற்காக அஹங்கார மமகாரம் முதலிய விரோதிகளை போக்கி அருள வேணும் என்றும்
பக்தி சம்பத்தை தந்து அருள வேணும் -என்றும் பிரார்த்திக்கிறார் இதில் –

எம்பெருமானாரும் சரணாகதி கத்யத்தில் -த்வத் பாதார விந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே -என்று சரணம் புகுந்த பின்பு
ஸ்தூல சூஷ்ம ரூபமான பிரகிருதியைக் கழித்து தர வேணும் என்றும்
பரபக்தி முதலியவற்றை பிறப்பிக்க வேணும் என்றும் பிரார்த்தித்தது இங்கு அனுசந்திக்கத் தகும் –

————————————————————–

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–

மிகப் பெரிய கடலையே அகழாக யுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய
சரீரம் இரு பிளவாக பிளவுருமபடியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே என்று
ஸ்ரீ ராம பிரானாக விளிக்கின்றார் திரு வேங்கடமுடையானை –
அவனும் இவனும் ஒருவனே என்கிற ஒற்றுமை நயம் தோற்றுதற்க்காக -என்கை –
இராவணனால் குடியிருப்பு இழந்து கிடந்த தேவர்கள் எல்லாரும் களித்து வந்து தொழும் படியான
திருவேங்கட மலையிலே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானே –
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு பெரும் துக்கம் என்று உணர்ந்த என்னுடைய இவ் இடரை போக்கி அருளாய் -என்கிறார் –
கண்ணார் கடல் -வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும்படியான அழகிய கடல் -என்றும் உரைக்கலாம் –

———————————————————-

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-

புற்றானது என்றைக்கும் துஷ்ட சர்ப்பங்கள் மாறாதே யுறையும் இடமாக இருப்பது போலே
இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு வந்ததால்
அவர்களையும் தொலைத்த படி சொல்லுகிறது இப்பாட்டில் –
மாலி யானவன் முதலில் பெரிய திருவடியை கதையால் அடித்து துரட்ட -பிறகு
பெருமாள் அளவற்ற சீற்றம் கொண்டு பெரிய திருவடி மேலே ஏறிக் கொண்டு போர்க்களத்திலே எழுந்து அருளி
திருவாழியை பிரயோகித்து ஒழித்தான் –
இலங்கைப் பதிக்கென்று இறையாய -என்றும் பாட பேதம் –

குலம் மாள -என்னாமல் குலம் கெட்டவர் மாள -என்றதனால் பல அரக்கர்கள் மூளைக்கு ஒருவராய்ச் சிதறி ஓடினார்கள்
என்பதும் பலர் மாண்டு ஒழிந்தனர் என்பதும் விளங்கும் –
விலங்கல் குடுமி –
சேணுயர் வேங்கடம் -என்றால் போலே திருமலையின் உயர்த்தியைச்  சொல்லுகிறது இந்த விசேஷணம்-
வானத்தின் மீது சஞ்சரிக்கின்ற ஸூர்ய சந்த்ரர்கள்  விலகிப் போக வேண்டும்படியான சிகரத்தை யுடைய திருமலை -என்கை –
விலங்கல் என்று மலைக்குப் பேர் யுண்டாகையாலே-குடுமி -சிகரத்தை யுடைய –
திருவேங்கடம் விலங்கல்   -திருவேங்கட மலையிலே என்றும் உரைக்கலாம் ஆயினும் அது சிறவாது
அலங்கல் துளப முடியாய் அருளாய் –
ஆர்த்தர்களை ரஷிப்பதற்கு என்று  தனி மாலை இட்டு இருக்கிற உனக்கு என்னுடைய
விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய கார்யம் அன்று -அருள் செய்ய வேணும் அத்தனை -என்கை –

—————————————————–

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

மற்ற  பேர்களை ரஷிக்க நான் சக்தன் ஆயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரஷித்தல் எனக்கு எளிது அன்றே –
இஃது அருமையான கார்யம் ஆயிற்றே -என்று எம்பெருமான் திரு உள்ளமாக
பிரளய காலத்தில் கடல் சூழ்ந்த உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து இட்டு
இளையதொரு  ஆலந்தளிரின் மேலே திருக் கண் வளர்ந்து அருளின அகடிதகடநா  சமர்த்தனான உனக்கு அரிதான காரியமும் யுண்டோ –
எல்லாம் எளிதே காண் என்பாரே போலே வடதள சாயி விருத்தாந்தத்தை ப்ரஸ்தாவிக்கிறார்-
அந்த சக்தி விசேஷம் எல்லாம் தோற்ற திருமலையிலே சேவை சாதிக்கின்ற என் ஆராவமுதமே அருள் புரியாய் -என்கிறார் –

————————————————-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

திருமலையில் எழுந்து அருளி இருக்கிற இருப்பில் பரத்வ சௌலப்யங்கள் இரண்டும் ஒருங்கே
விளங்குகின்றன என்ன வேண்டி -இரண்டுக்கும் பிரகாசமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளில் கூறுகின்றார் –
திரு வாய்ப்பாடியிலே ஆய்ச்சிகள் உறிகளின் மேலே சேமித்து வைத்த நெய் முதலிய கவ்யங்களை
அமுது செய்தாய் என்று சொன்ன முகத்தால் சௌலப்ய குணத்தையும்
குறளாகி மாவலி இடத்துச் சென்று நீரேற்று பெற்று ஈரடியாலே உலகு அளந்தாய் என்று
சொன்ன முகத்தாலே பரத்வத்தையும் பேசினார் ஆயிற்று –

திரு வேங்கடமலை பூ மண்டலத்திலே உள்ளதாகையாலே நம் போன்ற  மனிசர்கள் சென்று சேவிப்பதற்கு பாங்காய் இருப்பது போலே
விண் தோய் சிகரத் திரு வேங்கடம் ஆகையாலே நித்ய ஸூரிகளும் வந்து சேவிப்பதற்கு பாங்காய் இருக்கும் –
ஆனதுபற்றியே -மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் வைப்பு -என்று திருமழிசைப் பிரானும் –
மந்திபாய் வடவேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்று திருப்பாண் ஆழ்வாரும் அருளிச் செய்தது –
நித்ய ஸூரிகள் பரத்வத்திலே சர்வ காலமும் பழகினவர்கள் ஆகையாலே சௌலப்யத்தை காண விரும்பி வருவார்கள்
மனிசர்கள் பரத்வத்தை காண விரும்பிச் செல்வர்கள் –
இரண்டு குணங்களும் அங்கே குறையற்றவை என்று இப்பாசுரத்தினால் காட்டினார் ஆயிற்று –

திருவேங்கடம் மேய அண்டா -என்ற விளியும் இங்கே பொருத்தமாக அமைந்தது –
அன்டன் -என்று இடையனுக்கும் தேவனுக்கும் பெயர்
உறி மேல் நறு நெய்  அமுதாக யுண்ட அண்டா -என்று யோஜித்து-இடையனே -என்னுதல் –
குறளாய் ஈரடியாலே நிலம் கொண்ட அண்டா -என்று யோஜித்து -தேவனே -பரம புருஷனே என்னுதல் –
இரண்டு யோஜனையாலும் பரத்வ சௌலப்யங்கள் விளியிலும் விளங்கின படி –

————————————————–

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-

பக்தர்களின் சத்ருக்களின் இடத்தில் சீற்றமும் பக்தர்கள் இடத்தில் வாத்சல்யமும் விளங்க
திரு வேங்கட திருமலையில் சேவை சாதிக்கிற படியை பேசுகிறார் –
தூணின் உள்ளே நரசிம்ஹமாய்த் தோன்றி இரணியன் யுடலைப் பிளந்து எறிந்து
சிறுக்கனான  ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அருள் செய்தாப் போலே அடியேனுக்கும் அருள் செய்ய வேணும் என்கிறார்-

தூணூடு அரியாய் வந்து தோன்றி என்னும் அளவே போதுமாய் இருக்க தூணாயதநூடு-என்று
தூணாய் இருக்கிற வஸ்துவின் யுள்ளே என்று சொல்லுகைக்கு கருத்து என் என்னில்
முன்பே நரசிம்ஹத்தை உள்ளே அடக்கி வைத்து கட்டின கம்பம் இது -என்று சொல்ல ஒண்ணாத படி
வெறும் தூணான அதனுள்ளே என்பதாம் –
அரி-சிங்கம்-பேணா அவுணன் -சர்வேஸ்வரனை மதியாத இரணியன் என்றும் –
பாகவத சிகாமணியான ப்ரஹ்லாத ஆழ்வானை மதியாத இரணியன் என்றுமாம்

சேண்-அகலம் -ஆகாசம் உயர்ச்சி -தூரம் -நீளம் –
கோள் நாகணையாய்-கோள் -மிடுக்கு -திரு வநந்த ஆழ்வானுக்கு மிடுக்காவது –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் -என்றபடி
பலவகை அடிமைகளுக்கும் உரிய வடிவங்களைக் கொள்ளுதற்கு பாங்கான சக்தி –
குறிக்  கோள் -ஓர் அடியானும் உளன் என்று திரு உள்ளத்திலே வைத்து இரு -என்றபடி
திரு வநந்த ஆழ்வானைப் போலே என்னையும் அத்தாணிச் செவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாய்-எனபது உள்ளுறை –

———————————————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது
இனி மேல் பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக் கட்டின படியைச் சொல்லுவதாக செல்லுகிறது –
அடியேன் இடரைக் களையாயே -என்றும்
அடியேற்கு அருளாயே -என்றும் –
அடியேனுக்கு அருள் புரியாயே -என்றும் –
குறிக்கோள் எனை நீயே -என்றும்
பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான் -அடியார்களைத் தேடித் திரிகிற நான் இங்கனே பிரார்த்திக்கிற
உம்மை உபேஷித்து இருப்பேனோ -என்று சொல்லி ஆழ்வார் திரு உள்ளத்திலே வந்து புகுந்தான் –
இதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அனுபவிக்கிறார் –
எம்பெருமான் வந்து தனது நெஞ்சிலே புகுந்தவாறே தாம் சம்சாரத்தில் நின்றும் விலகி விட்டதாகவே நினைத்துப் பேசுகிறார் –

மன்னா -என்றது மனிசப் பிறவிக்கு  அடை மொழி –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -என்றபடி மின்னலைக் காட்டிலும் அஸ்திரமான இந்த மானிடப் பிறவியில் நின்றும்
என்னை நீக்கித் தன்னையே ஒக்க அருள் செய்யும் எம்பெருமான் என் நெஞ்சிலே வந்து புகுந்து நிற்கிறான் காண்மின் -என்கிறார் –
தன்னாக்கி -தன்னைப் போலே என்னையும் மலர்ந்த ஜ்ஞாநாந்தங்களை யுடையவனாக்கி என்றாவது –
தனக்கு சேஷமாக்கி என்றாவது – யுரைக்கலாம்
மின்னார் முகில் சேர் -பெருமாளும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்திக்கு யுவமை இட்ட படி –

————————————

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-

அண்ணா அடியேன் இடரைக் களையாயே-என்று முதல் பாட்டிலே தாம் பிரார்த்தித்த படியே
தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது
முன்பு நப்பின்னை பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாய் இருந்த ஏழு ரிஷபங்களை வலி அடக்கினது போலே
இருக்கையாலே அதனைப் பேசி இனியராகிறார் –
மானினுடைய நோக்குப் போன்ற நோக்கை யுடையளான நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொள்வதற்காக அவளுடைய தந்தையின்
கட்டளைப் படி ஏழு ரிஷபங்களையும் கொன்று ஒழித்த பெரு மிடுக்கனே –
அன்று அவளுக்கு எவ்வளவு  போக்யமாய் இருந்தாயோ எனக்கும் அவ்வளவு போக்யமாய் இருப்பவனே –
திரு வேங்கடமுடையானே -அந்த நப்பின்னைப் பிராட்டியையும் கூட்டிக் கொண்டு
என் மனத்தே வந்து குடி கொண்டு இருக்கின்றாயே -இப்படியும் ஒரு திருவருள்   உண்டோ என்கிறார் ஆயிற்று –
எதிர் வந்த ஆனேழ் விடைகளை-மானேய் மட நோக்கி திறத்து -செற்ற அணி வரைத் தோளா-என்று அந்வயம்-

————————————————-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-

இப்படி என் நெஞ்சில் நப்பின்னை பிராட்டி யோடும் கூட வந்து புகுந்தானான பின்பு இவன் திருவடிகளில்
கைங்கர்யம் பண்ணுகை ஒழிய வேறு ஒன்றும் நான் அறியேன் -என்கிறார்-

எம்பெருமான் சிலருக்குச் சேயன் -சிலருக்கு அணியன் –
சேயன் என்றால் தூரத்தில் இருப்பவன் -அணியன் என்றால் சமீபத்தில் இருப்பவன் -என்கை-
தன்னை உகவாதாருக்கு அவன் எட்டாதவன் -தன்னை உகந்தாருக்கு அவன் கையாளாய் இருப்பவன் –
துரியோதனர் திறத்திலும் பாண்டவர் திறத்திலும் இதனைக் காணலாம் –
சிறிது பக்தி யுடையாருக்கும் அவன் அணியன் என்பதை என்னைக் கொண்டு அறியலாம் என்பவர் போலே –
என் சிந்தையுள் நின்ற மாயன் -என்கிறார்
என்னுடைய ஹிருதயத்திலே வந்து நித்ய வாசம் பண்ணுகிற ஆச்சர்ய சீலன் அணியன் எனபது சொல்ல வேணுமோ என்கை –

மணி வாள் ஒளி வெண்டரளங்கள் வேய் விண்டுதிர்-எனபது திருவேங்கட திருமலைக்கு விசேஷணம்
யானைகளின்  கும்ப ஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்களும் மணிகளும் யுண்டாவதாக நூல்கள் கூறும் –
வேய்களானவை விண்டு விரிந்து வாள்-ஒளி-பொருந்திய மணிகளையும்
ஒளியும் வெண்ணிறமும் பொருந்திய தரளங்களையும் -முத்துக்களையும் –
உதிர்க்கும் இடமான திருமலையிலே எழுந்து அருளி இருக்கிற சர்வ ஸூலபனுடைய திருவடிகளைத் தவிர வேறு ஒன்றும் அறியேன் –
தரளம் -முத்து வடசொல் –

———————————————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார்
வந்து என் மனம் புகுந்து மன்னி நின்றாய் -என்று ஒரே வாக்யமாக சொல்லி விடலாம் ஆயினும்
தம்முடைய ஆனந்தம் நன்கு விளங்குமாறு
வந்தாய் –என் மனம் புகுந்தாய் –மன்னி நின்றாய் -என்று தனித் தனி வாக்யமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார் –

வந்தாய் –
பரமபதம் -திருப் பாற் கடல் முதலான அசாதாரணமான ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய்
என் மனம் புகுந்தாய் –
வந்த இடத்திலும் ஜ்ஞாந அனுஷ்டானங்களில்  சிறந்த யோகிகளின் மனத்தை தேடி ஓடாமல்
நாயினேனுடைய மனத்தை தேடிப்பிடித்து வந்து புகுந்தாய் –
மன்னி நின்றாய் –
இனிய இடங்களில் நாம் சுகமாய் இருப்பதை விட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப்பட்டு கிடப்பான் என் -என்று
வெறுத்து நெஞ்சை விட்டு நீங்கப் பாராமல் -இதனில் சிறந்த ஸ்தானம் வேறு ஓன்று நமக்கு இல்லை –
என்று கொண்டு என் நெஞ்சிலே ஸ்திரப் பிரதிஷ்டையாக இருந்து விட்டாய் –
அப்ராக்ருதனான நீ   மிகவும் ஹேயமான என் நெஞ்சிலே வந்து புகுந்ததனாலே 
உன்னுடைய தேஜஸ்ஸூக்கு எள்ளளவும் குறை இல்லை
முன்னிலும் தேஜஸ்ஸூ விஞ்சுகின்றது என்பார் -நந்தாத கொழும் சுடரே -என விளிக்கின்றார் –
நந்துதல் -கெடுதல் –நந்தாத  -கெடாத
சிந்தா மணியே –
காம தேனு கல்ப வருஷம் முதலானவை  போலே நினைத்த மாத்ரத்திலே அபீஷ்டங்களை எல்லாம் தரக்கூடிய
ஒரு மணிக்கு சிந்தா மணி என்று பெயர்
அது போலே சர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவனே -என்றபடி
இப்படிப் பட்ட உன்னை இனி நான் ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரிய மாட்டேன் என்று
தமக்கு பரபக்தி வாய்ந்த படியைப் பேசினார் ஆயிற்று –

—————————————–

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

திரு மலையிலே வில்லும் கையுமான  வேடர்கள் நிறைந்து கிடப்பதாக வருணிப்பதன் கருத்து யாது என்னில்
ஆழ்வார் மங்களா சாசன பரர் ஆகையாலே தம்மைப் போன்ற மங்களா சாசன பரர்கள் திருமலையிலே பலர் உளர் என்றபடி
பரமபதத்திலும் நித்ய ஸூரிகள் அஸ்தானே பயத்தைச் சங்கித்து பரியும் போது
திருமலையிலே ஸ்ரீ குஹப் பெருமாள் போன்ற வேடர்கள் அஸூர ராஷச மயமான இந்நிலத்திலே எந்த வேளையில் யாரால் என்ன தீங்கு
எம்பெருமானுக்கு நேர்ந்து விடுமோ என்று அதி சங்கை பண்ணி எப்போதும் ஏறிட்ட கையும் வில்லுமாய்
இருப்பார்கள் ஆகையாலே அதனை உவந்து ஆழ்வார் அருளிச் செய்கிறார்
பெரியாழ்வார் மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா என்று எம்பெருமானுடைய
அளவிறந்த சக்தி விசேஷத்தை அறிந்து சொல்லச் செய்தேயும்
அதி  சங்கையின் மிகுதியாலே பல்லாண்டு பல்லாண்டு என்றால் போலே
இவரும் மல்லார் திரள் தோள் மணி வண்ணன் என்று அறிந்து வைத்தும் அதி சந்கையினால்
மங்களா சாசனத்தில் நிஷ்டை யுடையராய் இருப்பார் எனபது இப்பாட்டால் அறியத் தக்கது
இப்பாட்டில் ஆழ்வார் பல்லாண்டு பாடுவதாக இல்லையே என்று நினைக்க வேண்டா
மங்களா சாசன பரர்கள் திரு மலையிலே உள்ளார் -என்று சொல்லுவதும் பல்லாண்டு பாடுகையில் அந்வயிக்கும்
திருவேங்கடமுடையானை திரு மங்கை ஆழ்வார் கவி பாடின இப்பாசுரங்களை ஓத வல்லவர்கள் நித்ய ஸூரிகளைப் போலே
நித்ய கைங்கர்யம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவார்கள் என்று இத்
திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலை கட்டுகிறார் –

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: