இத் திருமொழியும் பிராட்டி அவஸ்தையாய் செல்லுகிறது –
தலையிலே பூ வாடி -மதுவும் சுவறிப் போய் இருந்தாலும் வண்டுகள் பழைய வாசனையால் வர
உனக்கு என்ன யுணவு யுண்டு இங்கு -பழையபடி பூவும் மதுவும் யுண்டாகும் படி செய்யப் பாராய்
திருக்கண்ண புரத்து எம்பெருமான் திரு அபிஷேகத்தின் மேல் சாத்திக் கொண்டு இருக்கிற திருத் துழாயிலே படிந்து
அங்கு உள்ள பரிமளத்தை இங்கே கொண்டு வந்து ஊது –
பிறகு இங்கு உனக்கு உண்ணக் கிடைக்கும் என்கிறாள் பரகால நாயகி –
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துவளின் வாசமே
வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் – 11-1-9- மேலே அருளிச் செய்வர்
அவன் சம்ச்லேஷம் கிடைக்கப் பெறா விடிலும் அவனுடைய சம்பந்தம் உடைய வஸ்து ஏதேனும் கிடைக்கப் பெற்றாலும் தரிப்புண்டாகுமே
மாணிக்க வாசகர் இத் திரு மொழி ஒற்றி -திருக் கோத்தும்பி -பதிகம் 20 பாடல்கள் கொண்டது பாடி இருக்கிறார்
அங்கு கோத்தூம்பீ -முடிவுடன் உள்ளது -இங்கே கோற்றும்பீ-என்று உள்ளது –
ஸ்வாபதேசம்
சப்தாதி விஷய நிஸ் சாரத்தையும் —பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும்–சிஷ்யருக்கு அறிவிக்கிறார்
———————————————————————————————-
விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-1-
கோல் தும்பீ-கொம்புகளில் திரிகின்ற தும்பியே –
தும்பி-வண்டுகளில் ஒரு சாதி -மரக் கொம்புகளிலே மதுவுக்காகத் திரியும்
மது உண்ண விருப்பம் யுண்டாகில் எனக்கு சத்தையை யுண்டாக்கப் பார்
நித்ய சூரிகள் நிர்வாஹகன் -அணுக முடியுமா என்று கூசாதே -திரு மார்வன் –
புருஷகார பூதை அருகில் இருக்க கூசாதே சென்று புகுரலாம்
பரத்வ நிலைய விட்டு இங்கே சந்நிஹிதன் ஆனான் -அனைவரும் அணுகி அருள் பெறவே –
தெய்வத் தண் அம் துழாய் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும்
நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -திருவிருத்தம் -52-
எவ்வகையாலும் தரிப்பும் உவப்பும் யுண்டாகுமே
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் –
செவ்வி மாறாதே பரிமளத்தை உடைத்தாய் இருக்கிற திருத் துழாயிலே படிந்து அங்குத்தை
பரிமளத்தை கொடுவந்து இங்கே ஊது –
———————————
வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ -8-4-2-
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண் அம் துழாய் கொண்டு என்னெறி மென் குழல் மேல் சூட்டீரே -நாச்சியார் -13-2-
தலையிலே சூட்ட அபேஷித்தாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி
இப்பரகால நாயகி அங்கன் அன்றிக்கே துழாயில் படிந்து வந்து ஊதினால் போதும் என்கிறாள் –
————————-
விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ -8-4-3-
திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து திரியுமாவை போலே விண்ட மலர்கள் தோறும்
ஊதித் திரிவதனால் என்ன பேறு பெறப் போகிறாய்
நித்ய சூரிகளும் வந்து வணங்கும் திருக் கண்ணபுரத்தில் சந்நிதி பண்ணி அருளும் பெருமான் திருத் துழாய் மாலையிலே
தங்கி இருந்து அங்கு உள்ள பரிமளத்தை இங்கு கொணர்ந்து ஊதுவாயாகில் ஸ்த்ரிமாயும் அநல்பமாயும் உள்ள மதுவைப் பருகலாமே-
வண்ணந்திரிவும் மனங்குழையும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் -நாச்சியார் -12-7–என்று
சூட்டினால் தான் நோய்கள் தீரும் என்றால் சூடிக் கொடுத்த பிராட்டி
இங்கு அங்கன் அன்றிக்கே துழாயில் படிந்து வந்து ஊதினால் போதும் என்கிறாள் காண்மின்
அண்ட முதல்வன் -அண்டங்கட்கு முதல்வன் –
அண்டம் எனப்படும் பரம பதத்துக்கு முதல்வன் என்றுமாம் –
———————–
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வுயந்துய்யக் கொண்ட
தண் தாமரைக் கண்ணன் -விரஹப் பெரும் கடலில் வீழ்த்தி வருத்துகின்றான்
ஆமையாய் இருந்து மந்தர மலையைத் தாங்கி தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் எனக்கு
சோதி வாயமுதம் தராது வஞ்சனை செய்கின்றான்
நரசிம்ஹ மூர்த்தியாய் பேரருள் செய்த பிரான் எனக்கு சிறிதும் அருள் செய்கின்றிலன்
நான் உடம்பு வெளுத்து வருந்திக் கிடக்க காள மேகத்தில் காட்டிலும் பொலிந்து தோன்றுகின்றான்
இங்கே எளியனாய் சேவை சாதித்து அருளியும் பாவியேனான என் திறத்தில் அந்த எளிமையை காட்டு கிறிலன்
என்னை துடிக்க விட்டு சர்வ ரஷகன் என்று தோற்றுமாறு தனித் திருத் துழாய் மாலை சாத்தி உள்ளான்
அதிலே படிந்து பரிமளத்தை முகர்ந்து ஊதுவாய் ஆகில் உய்ய விரகு யுண்டு-
—————————-
ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ -8-4-5-
தேவர்கட்கு இரங்கி கூர்மாவதாரம் செய்து அருளி அவர்களுடைய ஜீவனத்தை நிர்வஹித்து அருளினவன்
அத் தேவர்களைப் போலே பிரயோஜநாந்தரத்தை நெஞ்சாலும் நினையாதே
அவனைப் பரம பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என்னுடைய ஜீவனத்தை நிர்வஹியாது இருக்கின்றான் -இருக்கட்டும்
அவன் இங்கே இருக்கும் இருப்பிலே அணிந்து இருக்கும் மாலையில் உள்ள திருத் துழாயில் நீ சென்று படிந்து
அதன் பரிமளத்தை கொணர்ந்து ஊது
உய்யப் பெறுவேன் -நீயும் வாழப் பெறுவாய்
ஏரார் மலர் எல்லாம் -கண்ட மலர்கள் -வெறும் நிறம் கண்டு பிரமிக்காமல் என்றபடி-
——————————–
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-6-
புகுவதற்கு அதிகாரியோ என்று மயங்காதே
பெரிய பிராட்டி நித்ய வாசம் செய்து சேர்ப்பாள்
பிராப்தி பிரதிபந்தகங்கள் இருந்தாலும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
மகா வராஹமாகி பூமியை கோட்டால் குத்திக் கொணர்ந்த வீறுடையவன்
உதவுவதே ஸ்வரூபம்
உதவாதே இருந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்
அவனுடைய ஆதி ராஜ்ய ப்ரகாசகமான திரு அபிஷேகத்தின் மேல் உள்ள செவ்வித் துழாயிலே படிந்து ஊது என்கிறாள்-
——————————–
வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-7-
தன் உடைமையைப் பெற தானே யாசகனாய் சென்றவன்
விரோதிகளை கிழங்கு எடுக்க சங்கல்பித்துக் கொண்டவன்
கல்கி அவதாரம் செய்து மண்ணின் பாரம் நீக்கப் போகிறவன்
மது கைடபர் அசுரர்களை மாய்த்தவன்
இக் குணங்களுக்கு அடி ஸ்ரீ யபதியாகையாலே
ரஷிதா ஜீவலோகச்ய ஸ்வ ஜனச்ய ச ரஷிதா -ரஷணத்துக்கு தனி மாலை சூடி இருப்பவன்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதார முகத்தாலும் ரஷகத்வத்தை வெளியிட்டு அருளி இங்கே
நித்ய சந்நிதி செய்து அருளி சர்வ ரஷகனாய் இருக்குமவன்
இப்பொழுது என்னுடைய ரஷணத்தில் சோர்வு அடைந்து உள்ளான் -இருக்கட்டும்
அவன் மாலையில் திருத் துழாயில் படிந்து ஊது
தாமம் -மாலை
——————————-
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –8-4-8-
ராஷச குலத்துக்கு மிருத்யுவாய் திருவவதரித்து இலங்கை பாழாளாக படை பொருது அந்த வீரப்பாடு தோன்ற
நித்ய சந்நிதி பண்ணி இருப்பவனுடைய
திரு அபிஷேகத்தின் மேல் உண்டான திருத் துழாயிலே அவஹாகித்து வந்து ஊதாய்-
—————————-
நந்தன் மதலை நிலமங்கை நற் துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ -8-4-9-
நந்தகோபன் திருக்குமாரன் -மண்ணின் பாரம் நீக்கி அருளி
துஷ்ட ஜனங்களை நிரசித்து
இனியாகிலும் பிறந்து நம்மை அடைவார்களோ என்னும் நப்பாசையால் மீண்டும் மீண்டும் சிருஷ்டித்து அருளி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியுமானவன்
சர்வ கந்த -நித்ய ஸூகந்த வாசிதன் -காயாம்பூ நிறம் யுடையவன்
அவன் கதிர் முடி மேல் கொந்து நறுந்துழாய் கொண்டு ஊது
கொந்து -கொத்து
கந்தம் கமழுதம்-காயாவுக்கு இட்ட விசேஷணம் அன்று -காயா வண்ணனுக்கு இட்டது-
—————————
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -8-4-10-
தொண்டர்களுக்கு இத் திருமொழியைப் பாடுதலே ஸ்வயம் பிரயோஜனம்
ஆழ்வார் தமது குறை தீரப் பெற்றால் தொண்டர்கள் எல்லாரும் தம் குறை தீரப் பெற்றதாக நினைப்பார்கள்
ஆதலால் அந்த மகிழ்ச்சியினால் இத் திரு மொழியை உவந்து பாடுவார்கள்
அப்படி செய்விக்க வேணும் என்று தும்பி போலாரான பாகவதர்களை வேண்டுகிறபடி –
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –
————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-