ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -81-90– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே –
அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச்  சொல்லுகிறார் –

கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன்.
(அதாவது என்னவென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

பகல் கண்டேன் –
விடிவு கண்டேன் –
முன்படங்க இருள் போலே காணும் –
காளராத்திரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன் –
ஸூ ப்ரபாதா ச மே நிசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2-

ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் –
முன்பு பகல் கலவாது –
பின்பு இரவு கலவாது –

நாரணனைக் கண்டேன்-
வடுகர்   வார்த்தை போலே  தெரிகிறது இல்லை –
எங்களுக்குத்  தெரியும்படி சொல்லீர் -என்னச் சொல்லுகிறார் –

அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன் –
அநாதி மயயா ஸூ ப்த-என்கிற உறக்கம் பிரகிருதி அன்று இறே
இளைய பெருமாளுடைய ஸ்தா நீயன் ஆத்மா –
அங்கும் -சதா பஸ்யந்தி ஜாக்ருவாம் சமிந்ததே -ருக் அஷ்ட -1-2-7-

சவிபூதிகனான சர்வேஸ்வரனை  கண்டேன் –
உபய விபூதி யுக்தன் இறே -போக்குவரத்து இல்லாத ஆதித்யன் –
நியாம்யனானவன் அல்லன் -நியாமகன் –
பீஷோதேதி ஸூர்ய-தைத் ஆன -8-என்றும் –
சாஸ்தா ஜனா நாம் -தைத் ஆற -3-11-என்றும் சொல்லக் கடவது இறே –

கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை-
இந்த்ரியங்கள் சஹ காரியாய் அவ் வழியாலே காஷியாகை அன்றிக்கே
நெஞ்சாலே முழு மிடறு செய்து காணப் பெற்றேன் –
இந்த்ரியங்களால் கலக்க ஒண்ணாத படி மானசத்தால் யுள்ள ஜ்ஞானத்தாலே அழகிதாகக் கண்டேன் –

மெய்யே -மிகக் கண்டேன்-
பிரத்யபி ஜ்ஞார்ஹமாம்படி அழகிதாகக் காணப் பெற்றேன் –
எத்தைக் கண்டது என்னில் –

ஊன் திகழும் நேமி –
அழகிய வடிவைக் கொண்டு இருப்பதான திரு வாழி-என்னுதல்-
சத்ருக்களைக் கொன்று சத்ரு சரீரங்க ளிலேவிளங்கும் -என்னுதல் –
எம்பெருமான் திரு மேனியிலே விளங்கும் என்னுதல் –
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழி -திருப்பல்லாண்டு 2-

யொளி திகழும் சேவடியான்-
ஒளி திகழா நின்ற திருவடிகளையுமுடையவனாய்-

வான் திகழும் சோதி வடிவு –
வானிலே நித்ய  விபூதியிலே நிரவதிக தேஜோ ரூபமான வடிவு அழகு யுடையவனானவனைக் காணப் பெற்றேன் –

அன்றிக்கே –
வான் திகழும் என்றது –
மேகத்தோடு ஒக்கத் திகழா நின்றுள்ள வடிவை என்றதாக வுமாம் –
வானிலே திகழும் சோதி வடிவு கிடீர் இங்கே இருக்கக் காணப் பெற்றது –

——————————————————————————-

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ –
அவ் வடிவிற்குத் தகுதியான நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -நாராயணனைக் கண்டார் -என்றார் –
இப்போது  ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் நாராயணனை அல்ல –
திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –
பிரபையோடே காணப் பெற்றேன் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செல்வி படிகோலம்–சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவைத்தும்
ஞாலத்தாள்–பூமிப்பிராட்டியானவள்
அடிக்கோலி–பாரித்துக்கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

வடிக்கோலம்-
கோலம் தனை வடித்து –
அதில் நன்றான அம்சம் ஆய்த்து
இங்குத்தை அழகாய் இருப்பது –

இதில் ருஷீஷாம்சமான கோலமுடையார் யாரோ -என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் –
ஜகத்தில் அழகு எல்லாம் கோதாகப் பிறந்தவன் அழகு இங்குத்தைக் கோது –

வாள் நெடுங்கண் மா மலராள்-
இப்படிப்பட்ட வடிவு அழகையும் ஒளியையும் யுடைத்தாய்ப் பரந்து இருந்துள்ள கண்களையும் யுடையளாய்
போக்யதைக வேஷையுமாய் யுள்ள பெரிய பிராட்டியார் ஆனவள் –

வாள் -ஒளி –
ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்கள் –
போக்தாக்களுக்கு எல்லை காண முடியாமை –
த்ரைலோக்ய ராஜ்யம் சகலம் சீதாயா நாப் நுயாத் கலாம் -சுந்தர -16-14-
வாள் நெடுங்கண்  என்று வடிவிலே வாசி –

மா மலராள்-
பரிமளம் உபாதானம் ஆனவள் –
சௌகுமார்யத்தையும்
சௌகந்த்யத்தையும் சொல்லுகிறது –

செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
எம்பெருமானுடைய செவ்வியே படியான கோலத்தைக் கண்டு ஒரு நாளும் விட மாட்டாதே வர்த்திக்கும் ஆய்த்து –

செவ்வி –
அப்போது அலருகிற பூப் போலே இருக்கை –

படிக் கோலம் –
ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு –
அரும்பினை அலரை  -திருவாய் -7-10-1-என்றும்
சதைக ரூபரூபாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-என்றும்
சொல்லுகிறபடியே அவ் வடிவு அழகு தான் இருப்பது –

கண்டு அகலாள் பன்னாள்-
நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் —
இறையும் அகலகில்லேன்  –என்று ஷண காலமும் பிரிய சக்தி அன்றிக்கே இருக்கும் ஆய்த்து –
கண்டு பல நாளும் அனுபவியா நிற்கச் செய்தே அகல மாட்டாள் ஆய்த்து –
ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –
வைத்த கண் வாங்க மாட்டாமையும் –
கால் வாங்க மாட்டாமையும் –

அடிக்கோலி ஞாலத்தாள் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் அவனை அனுபவிக்கையிலே அடிக்கோலி இழிந்தாள் ஆய்த்து –
அதாகிறது –
பெரிய பிராட்டியாருக்கு விஷயம் அவன் ஒருவனும் இறே
இவளுக்கு அனுபாவ்ய வஸ்து அச் சேர்த்தி யாகையாலே
அதுக்கு ஈடாக அகலப் பாரித்துக் கொண்டு இழிந்தாள் ஆய்த்து –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருவனுமே –
இவளுக்கு விசிஷ்டமாக அவளோடு கூடினவன் என்று விஷய பூயஸ்தையாலே அடிக்கோலி -என்கிறது –

ஞாலத்தாள்-
ஷமையே வடிவானவன்  –

பின்னும் நலம் புரிந்தது என் கொலோ-
பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற விஷயம் என்று அறிந்த பின்பும் –
ஆழங்கால் என்று அறிந்தே கிடீர்
தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால் கரையில் நிற்கிறவனுக்கு புகாதே போக வன்றோ வடுப்பது –
எல்லாரிலும் அளவுடையளான பெரிய பிராட்டியார் குமிழ் நீருண்ணும் விஷயமானால்
இவள் அகலப் போக அன்றோ அடுப்பது –
இங்கனே இருக்கச் செய்தே இவள் பின்னையும் மிக்க விருப்பத்தைப் பண்ணுகைக்கு ஹேது ஏதோ என்னில் –
ஹேது சொல்லுகிறது –
மேல் அறிந்தோம் இறே இதுக்கடி –

கோலத்தால் இல்லை குறை-
இருவர் கூடினால் பாத்தம் போராத படியான விஷயம் இன்றிக்கே
எல்லாரும் திரண்டு வந்து அனுபவியா நின்றாலும் எல்லை காண ஒண்ணாத படி
புக்கார் புக்காரை எல்லாம் கொண்டு முழுகும்படி அழகு குறைவற்று இருக்கும் இறே
கரையிலே நிற்பாரையும் இழுத்துக் கொள்ள வற்றான வடிவு அழகு இருக்கிறபடி

தருனௌ ரூப சம்பன்னௌ-ஆரண்ய -19-14-என்று
இலளோ –தன் பிரக்ருதியாலே கெட்டாள்-
நின்றார் நின்ற நிலைகளிலே அகப்படும் விஷயம் –
இதர விஷயங்கள் இருவருக்கு அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு என்கிறது –
கிண்ணகத்திலே இழிவாரைப் போலே எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும்படி பரப்பு யுண்டாகையாலே
இவ்விஷயத்தை அனுபவிப்பார்க்கு பிரியமே யுள்ளது –

——————————————————————

கீழே -74- பெரும் தமிழன் நல்லேன்   பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் –
இங்கே நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி –
நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது –
என்ன சாஹசிகனோ  -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலே என்னோடு ஒப்பார் உண்டோ என்றார் –
இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ ச நாதமாக அனுசந்திக்கையாலே
அங்குத்தைக்கு விசத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் –

பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6-

நல்லேன் பெரிது  -என்றார்
ஐஸ்வர் யத்தைக் கண்டு வெருவித்- தீயேன் என்கிறார் –

பேசிற்றும் தப்பாய்
பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி-
இது இறே நான் செய்தபடி என்கிறார் –
குறையாகக் கூறினேன் –
வெஞ்சொற்கள் கூறினேன் –
பரிபூர்ண விஷயத்தை அபரிபூர்ணமாகச் சொன்னேன் –
அதுக்கு மேல் கேட்டார் செவி கன்றும்படி வெட்டிதாகவும் சொன்னேன் –

குறையாக –
கடலைக் கண்டான் என்னும் காட்டில் கரை கண்டான் ஆகான் இறே –
அத்தலையில் பெருமையாலும் -இத்தலையில் சிறுமையாலும் குறை-

வெம் சொற்கள் –
அவன் திரு உள்ளம் நோம்படி யாக வார்த்தை சொன்னேன் –

கூறினேன் –
காணப் பெறாத விஷயத்தைக் கிடீர் பேசித்து பரிச்சேதித்தேன்-

கூறி –
இங்கனே செய்தாலும் இறே –
அநந்தரம்
சைதன்ய க்ருத்யமாய் இருப்பதொரு அனுதாபம் ஆகிலும் விளையப் பெற்றதாகில் –
இது தன்னை கர்த்தவ்யம் என்றும் இருந்தேன் –

மறை யாங்கு என உரைத்த மாலை –
இவை  எல்லாத்தாலும் வருவது ஓன்று இல்லை இறே –
சொல்லப் பட்டவன் தான் மறப்பான் ஒருவனாகப் பெற்றதாகில்
வாய் திறந்து ஏதேனும் ஒன்றைச் சொன்னான் ஆகில் –
அது வேத சப்தமாம்படி இருப்பான் ஒரு சர்வேஸ்வரன் ஆய்த்து
வாக் விவ்ருதாஸ் ச வேதா -முண்டகம் -2-1-4-என்று சொல்லப் படுகிற சர்வாதிகனை –

அங்கன் அன்றிக்கே –
அர்த்தங்களை யுள்ளபடி சொல்லப் போந்த வேதங்களும் அது என்று சொல்லும் அத்தனை போக்கி
இது என்று கொண்டு  பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பிரபாவத்தை யுடைய சர்வேஸ்வரனை –

வேதங்கள் ஆங்கு என்று சொல்லிப் போனவனை என்றுமாம் –

இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் –
நான் பாடின கவி பாட்டுக்குத் தரமாக இவற்றால் ஆவது ஓன்று இல்லை இறே
ஆகிலும் ஏதேனும் ஒன்றைப் பரிசிலாக எனக்குத் தாராது ஒழியுமோ என்று இருந்தேன் –
விசத்ருசமாகச் சொன்ன அளவேயோ —
ஓன்று சொன்னேனாய் அதுக்குப் பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன் –

எனைப் பகலும்-
அநேக நாள் எல்லாம் –

மாயன் கண் சென்ற வரம் –
ஆச்சர்ய பூதனான அவன் பக்கல் யுண்டான பிரசாதம் –

இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் –
பண்டு கவி பாடினார்க்கு அவன் கொடுத்து வருமத்தைக் கொண்டு
நம் பக்கலிலும் ஏதேனும் செய்யானோ என்று இருந்தேன் –

இவர் பின்னை ஒரு பிரயோஜனத்துக்காக கவி பாடுவாரோ என்னில்
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு விசேஷ கடாஷம் பண்ணும் -அதுவும் ஸ்வரூபம் என்று இருப்பரே

சென்ற வரம் –
வரத்தை இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் -என்கிறார் -என்றுமாம் –

—————————————————————-

மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் –
அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி –
ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே
வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேச்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட–நரசிங்க வுருக்கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

வரம் கருதி-
தேவதைகள் பக்கல் தான் பெற்ற வரபலத்தை புத்தி பண்ணி –
ஓட்டை ஓடத்தை விஸ்வசிக்குமா போலே –

தன்னை வணங்காத வன்மை-
அத தேவதைகளுக்கும் அடியாய்
சர்வேஸ்வரனான தன்னை வணங்கக் கடவன் அல்லன் என்னும் அபிசந்தியை யுடையனான
த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயந்து கஸ்யசித் -யுத்த -36-11-

உரம் கருதும்-
தன்னுடைய வெட்டிமையால் வந்த மிடுக்கை புத்தி பண்ணி இருக்கிற

ஊக்கத்தவனை –
வரபல புஜ பலங்களை யுடையனாகையாலே வந்த மேணாணிப்பை யுடையவனை —
துரபிமானத்தை யுடையவனை –
ஊக்கம் என்று நிலை

மூர்க்கத்தவனை –
என்ற பாடமான போது மௌர்க்யத்தை யுடையவனை –

நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட –
இதுக்கு முன்பு யுள்ளது ஒன்றாலும் படாது இருப்பேன் என்று வேண்டிக் கொள்ள –
முன்பு இல்லாத நரத்வ சிம்ஹத்வங்களைக்  கொண்டு தோற்றி அவனை நிரசித்து அருளின பெருமை –
இரண்டையும் பிணைத்துக் கொண்டு தோற்றுகை –

நரம் கலந்த சிங்கம் –
சேர்ப்பாலும்   கண்ட சக்கரையும் சேர்ந்தாப் போலே இருக்கை –
வெறும் மனிச்சாதல் -சிம்ஹமாதல் காணிலும் உபேஷிக்க வேண்டி இருக்கை –

திருவன் –
விருத்தமான வடிவு அழகு இரண்டையும் சேர்ந்த பின்பும் காந்தி மிகைத்துத் தோற்றின படி –
ஸ்ரீ மத்தாய் இருக்கை –
அழகியதாய் இருக்கை
அழகியான்  தானே  அரி யுருவன் தானே -நான்முகன் -22-
நார சிம்ஹவபு ஸ்ரீ மான் -என்னும்படியே –

அடி இணையே-
அவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளே –

அங்கண் மா ஞாலத்து அமுது–
அழகிய இடத்தை யுடைத்தான  மஹா ப்ருதிவியிலே புஜிக்கப் பெற்ற அம்ருதம் -என்கிறார் –
ஒரு தேச விசேஷத்திலே போனால் புஜிக்கத் தக்க  அம்ருதம் சம்சாரத்திலே மிகவும் போக்யம் என்கிறார் –

திருவன் –
பிரஜைகள் யுடைய விரோதி போக்குவது தாய்க்காகவே என்றுமாம் –
பர்த்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய -30-39-

அங்கண் மா ஞாலம் –
திரு அவதாரத்துக்கு ஈடான நிலம் –

——————————————————–

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்
சொல்லப்பட்ட–சொல்லப்பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால்
ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

அமுதென்றும் –
ரசோ வை ச -தை ஆன -7-1-என்றும் –

தேன் என்றும் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -ருக் மண்டலம் -1-21-154-என்றும் –

ஆழியான் என்றும்-
போக்யனுமாய் விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் இருக்கை –

அமுதென்றும் இத்யாதி –
அம்ருதத்தோடும் தேனோடும் பர்யாய சப்தம் போலே காணும் ஆழியான் -என்கை-

அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –
அஸூர பய பீதராய் தேவர்கள் சரணம் புக்க அன்று கடலைக் கடைந்து
பிரயோஜனாந்தர பரர்காக அம்ருதத்தைக் கொண்டு கொடுத்தவன்
தன்னை வேண்டா உப்புச் சாறு வேணும் என்றவர்களுக்கு -அது தேடிக் கொடுக்குமவன் –

உகந்தான் –
தன்னை உகந்திலர் என்று முனியாதே  
ஏதேனுமாக நம்மை அர்த்திப்பதே  என்று அதுக்குத் தான் உகக்கை –
உதாரா  சர்வ ஏவை தே-ஸ்ரீ கீதை -7-18-

அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் –
அவனையும் தேவர்கள் அம்ருதத்தையும் ஒழிய இவருடைய அம்ருதம் -அவனைப் பேசும் சொல்லு –

சொன் மாலை –
அவை -எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு –
எல்லா போக்யதையும் தன்னுடைய போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –
இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே
அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து
திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன் –

ஏத்தித் தொழுதேன் –
அறிந்து கவி பாடினேன் அல்லேன் –
ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –

சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று –
யஸ்மின் அக்ருத்ரிமகிராம் கதிரேகண்டா-என்று
பிரமாணங்களாலே சொல்லப் பட்ட நன் மாலை –
விலஷணமான எம்பெருமானை சர்வ சப்தங்களுக்கும் வாச்யனானவனை
வசஸாம் வாச்யமுத்தமம் -ஜிதந்தே -9-

ஏத்தி நவின்று –
மிகவும் ஆதரித்து ஏத்தினேன் –
ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

—————————————————————–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான  வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–(அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து
அதனால் பெற்ற பயன் என்சொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வப்ரயத்நத்தால் என்ன பேறு பெறமுடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காணமுடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்?
(அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை)

நவின்றுரைத்து-
மிகவும் ஆதரித்துத் திரு நாமங்களைப் பலகால் சொல்லி –

நாவலர்கள்-
பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகள்-

நாண் மலர் கொண்டு-
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –

ஆங்கே பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் –
அவ்விடத்தே ஆஸ்ரயித்தவர்கள் என்ன பிரயோஜனம் பெற்றார்கள் –
பெற்றார் தான் சாதன அனுஷ்டானம் பண்ணிப் பெறும் பேறு என்ன பேறு –

பயின்றார் தம்-
இப்படி நெருங்கி  சாதன  அனுஷ்டானம் பண்ணினார் யுடைய –
பயின்றார் ஆகிறார் பயின்றவர்கள் -ஆஸ்ரயிக்கிறவர்கள் –

மெய்த் தவத்தால் –
ஸ்வ யத்னத்தால் உடம்பு நோவப்  பண்ணின தபஸ் ஸால்-

காண்பரிய மேக மணி வண்ணனை-
ஸ்வ யத்னத்தால் காண்பரிய மேக– மேகம் போலேயும்
நீல மணி போலேயும் ஸ்ரமஹரமான வடிவை யுடையவனை –

யான் எத் த்வத்தால் காண்பன் கொல் இன்று-
அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ் ஸூ பண்ணிக் கண்டேன் –
அவன் காட்ட கண்டேன் இத்தனை இறே
ஒரு தபஸ்ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக்  கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-

காண்பன் கொல் இன்று –
நேற்று நினைக்கில் அன்றோ இன்று அடி அறியலாவது  –

—————————————————————-

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் –
நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –
இப் பேறு இன்று பெற்றேன் அல்லேன்  என்கிறார்-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து
திருக்கோட்டி எந்தை திறம்–திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–கை தொழவும் பெற்றேன், (ஆனபின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்று ஆ அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்)

இன்றா அறிகின்றேன் அல்லேன் –
இன்றாக அறிகிறேனோ –
இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் –
பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –

இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை –
இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ –
பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –

அன்று-
பண்டே சாதன அனுஷ்டானத்துக்கு யோக்யதையும் இல்லாத அன்று –

கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்-
கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்த கண்டேன் –

கண்டேன் கை தொழுதேன் –
அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அன்வயிக்கப் பெற்றேன் –
அறியாக் காலத்துள்ளே -அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3-
கர்ப்ப பூதாஸ் தபோத நா -ஆரண்ய -1-21-
ஜாயமா நம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதந சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -பார -சாந்தி -358-73-

திருக் கோட்டி எந்தை –
திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-

திருக் கோட்டி எந்தை –
ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே   பூரணமாகக் கண்டேன் –

எந்தை திறம் –
என் ஸ்வாமி இடையாட்டம் –

—————————————————————————————

அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது
வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி–பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக்கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திறம்பிற்று –
ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –

இனி அறிந்தேன் –
இப்போது அறிந்தேன் –

தென்னரங்கத்து எந்தை-
அர்ஜூனனுக்கு மாமேகம் என்று உன்னால் சாதிக்கப்படும் அசேதனமான க்ரியா கலாபங்களை விட்டு
பரம சேதனனாய் உன்னைப் பெறுகைக்கு  யத்னம் பண்ணுகிற சித்த ஸ்வரூபனான என்னையே பற்று -என்றான் –
அது ஒருவனுக்கு ஒரு காலத்திலே என்னாத படி சர்வர்க்கும் சர்வ காலத்திலும் –
மாமேகம் -என்று இருக்கிறவர் -பெரிய பெருமாள் –

மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –
மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –

செம்மை யுடைய திருவரங்கர் -நாச் -11-10-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச் -11-3-
அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும்  –

திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் –
அவனையே யுபாயமாகப் பற்றினர்வர்களுக்கு அல்லால் –

திறம்பா வழி-
ஏக பதத்தால் நிர்ணயித்த வழி –
பர வியூஹ  விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள் பக்கலிலே 
கண்ணழிவு  சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் –
அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை என்று கருத்து –
தேவதாந்த்ரங்கள் என்றுமாம் –

திறம்பாச் செடி நரகை –
தானே தூறு மண்டப் பண்ணின சம்சாரத்தை –

திறம்பா –
அனுபவிக்க அனுபவிக்க மாளாதே இருக்கை-

நீக்கித் தான் செல்வதன் முன் –
இத்தைக் கழித்து  போமவர்களுக்கு -இப்படி செல்வதற்கு முன்பே –

தான் செல்வதன் முன் –
இஸ் சர்வஜ்ஞன் சர்வ சக்தி இவ்வெளிய பிரதி பந்தகங்களைக் கடந்து செல்லாது ஒழிகிறானே-
தானே சம்சாரத்தை நீக்கிச் செல்லுகைக்கு இவனுக்குக் காலம் போராது-
பாபம் பண்ணின காலம் அநாதி யாகையாலே –

வானோர் கடி நகர வாசற் கதவு-
நித்ய ஸூரிகளுடைய அரணை யுடைத்தாய் இருந்துள்ள கலங்கா  பெரு நகரில்  வாசல் கதவு –

அரண் -என்று காவலாய் –
அத்தால்
ஸ்வ யத்ன சாத்தியம் அல்லாத வான் -என்றபடி
நயாமி பரமாம் கதிம் —
அநே நைவ வஹி –
அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –

கடி நகரம் –
கடி என்று பரிமளமாய்-போக்யதை யாகவு மாம் –
ஒளியை யுடைத்தான நகரம் என்றுமாம் –

இது திறம்பிற்று -இனி அறிந்தேன் -தப்பிற்று  என்னும் இடம் அறிந்தேன் –
அவனாலே அவனைப் பெறுதல் 
அவனாலும் தன்னாலுமாக அவனை இழத்தல் -த
ன்னாலே அவனை இழத்தல் –
பிரதிகூலராய் இழப்பாரும்
அனுகூலர் என்று பேரிட்டு கொண்டு பிரதிகூலராய் இழப்பாரும்
ஆக இழக்கை இரண்டு விதம் –

—————————————————————-

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

பதவுரை

முன்–முற்காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து-
சீற்றத்தை யுடைய கம்சனை -தலை மயிரைப் பற்றி முன்னே முடித்து என்னவுமாம் –

கதவி –
நெருப்புக் கதுவித்து என்னுமா போலே –

முன் காய்ந்து –
அவன் நினைத்தவற்றை அவன் தன்னோடு போம்படி பண்ணி -அன்றிக்கே
கதவி -கோபித்து
கதம் சிறந்து -என்று அச் சினம் தானே அழகியதாய் இருக்கை என்றுமாம் –

அதவிப் போர் யானை ஒசித்துப –
ஆனை வ்யாபரியாத படிக்கு ஈடாக அடர்த்துக் கொம்பை ஒசித்து –
எற்றுவது-ஓட்டுவதாய் -இளைக்கப் பண்ணிக் கொம்பை வருத்தமற வாங்குகை-
இது தேவகியாருக்கும் ஸ்ரீ வஸூ தேவருக்கும் உபகரித்தபடி –

பதவியாய்-
பதவியையாய்-நீர்மையை யுடையையாய் –
அம்மிடுக்கை யுடைய நீ குணம் காண்கையாலே நீர்மையை யுடையையாய் -அன்றிக்கே –
கம்சனைக் கொன்றாப் போலே மூலை யடி அன்றிக்கே வழிபாடுடனே -என்றுமாம் –

பாணியால் –
கொடுத்து வளர்ந்த கையாலே –

நீரேற்றுப-
தன்னத்தைப் பெறாப் பேறாகக் கொள்வதே –
பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்
ஒரு கால் -என்றும் பாடம்
ஐஸ்வர் யம் தோற்றக் கொண்டாயோ -அர்த்தித்வம் தோற்ற -மாணியாய் அன்றோ கொண்டது –

மாணியாய் –
இரப்பிலே தகண் ஏறின படி -ஸ்ரீ வைகுண்டமே தொடங்கி இரப்பிலே மநோ ரதித்தான் –
பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்-
கொடுத்து வளர்ந்த கையாலே -உதக ஜலத்தை ஏற்று வாங்கி –
முன்பு ஒரு காலத்திலே கொடுக்கையில் தீஷித்து இருந்த மஹா பலியை
இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்ம சாரியாய் கொண்டு பூமியை அவன் பக்கல் நின்றும் வாங்கிக் கொண்டிலையோ –
உன்னை ஆஸ்ரயித்த இந்த்ரன் விரோதியைப் போக்கிக் கார்யம் செய்திலையோ -என்றபடி –

—————————————————————————————-

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று
நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன –
எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேச்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதிதேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

மண்ணுலகம் ஆளேனே-
ஓரடி வர நின்றால் பூமியை ஆளுகை எனக்கு ஒரு பணியோ–
அதுவும் பெற்றேனே அன்றோ என்கை-

வானவர்க்கும் வானவனாய்- விண்ணுலகம் தன்னகத்து மேவேனே –
நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாய் பரமபதத்தே இருக்கை பணியுண்டோ –

வானவர்க்கும் வானவனே –
நித்ய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் யுண்டான வாசி யுண்டாகை-

மேவனே –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே -ஸ்ரீ வைகுண்ட நாதன் தாட்பாலைக் கொடுத்து விடும் அத்தனை –
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே -திருவாய் -4-3-11–
இரண்டும் இவனுக்கு விதேயமாக்குகை –
அர்த்த தச்ச  இத்யாதிவத் -யுத்த 116-24-

அன்றிக்கே –
வானவர்க்கும் வானவனே –
ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யம் பெற்றேன் அன்றோ என்றுமாம் –

திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை-நண்ணி-கை தொழுத பின்-
ஸ்ரீ யபதியாய்- வத்சலனாய் -எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக் கை தொழுத  பின் போக மோஷத்தில்
எனக்கு ஒரு குறை யுண்டோ -ஒன்றிலே எல்லாம் யுண்டான விஷயம் –

திருமாலை –
ப்ரஹ்மசாரி எம்பெருமானையோ நான் பற்றியது –

செங்கண் நெடியானை –
தலை சாய்ந்தாரை நோக்கும் படியும் -ருணம் பிரவ்ருத்தமிவ மே-பார உத் -47-22-என்று
இருக்கும் படியும்

எங்கள் பெருமானை-
அப்ராப்த விஷயத்தைப் பற்றினேனோ -அஸ்மத் ஸ்வாமின்  –

கை தொழுதேன் –
உபய விபூதியும் தன்னதாகை தொழுகையோடு வ்யாப்தம் –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: