பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-
பதவுரை
பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம்
அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சிசெய்யுங்கள்.
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்-
சரீர விஸ்லேஷ சமனந்தரம் வடிம்பிட்டு நிற்கிறது நரகம் –
ஆகையாலே சம்சாரம் வடிம்பிட்டுக் கொண்டு திரிகிறபடி –
பேதுறுவீர்-
முன்னடி தோற்றாதே பாபத்தைப் பண்ணிப் பின்னை அனுதாபம் பிறந்து பேதுற்றுத் திரிகிற நீங்கள் –
முன்னால் வணங்க முயல்மினோ –
பின்னை செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –
முற்பட வணங்கிப் பின்னை தேக யாத்ரை பண்ணப் பாருங்கள் –
பால்யம் இறே பின்னை வணங்கச் செய்கிறோம் என்னுதல்-
யௌவனம் இறே இப்போது என் என்னுதல் -வார்த்தகம் இறே இனி என் என்னுதல் செய்யாதே
ஒரு ஷண காலமாகிலும் முற்பட்டுக் கொண்டு
ஒரு கை கால் முறிய வாகிலும் சென்று விழுங்கள் –
ஆஜகாம முஹூர்த்தேந-யுத்த -17-1-இதுக்கு பிரமாணம் என் என்னில் –
பன்னூல் அளந்தான்-
எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –
அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
சர்வ வேதா யத்ரைகம் பவந்தி -யஜூர் ஆரண்ய -3-11-
இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி –
வேதைக சமதி கம்யனாய் அரிதாய் இருக்குமோ என்னில் –
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்க அடியை வைத்து ஸூ லபனானவனுடைய திருவடிகளை –
கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
கருத்த கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் –
ஞாலத்தை எல்லாம் அளந்தான் –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –
அளந்தான் –
முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே வேண்டுவது –
சேவடி –
பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –
முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இறே –
அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-
பேதுறுவீர் –
செய்வற்றைச் செய்து இப்போதாக அஞ்சினால் லாபம் யுண்டோ –
பன்னூல் அளந்தானைக்
கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான்
அவன் சேவடி பின்னால்
அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -என்று அந்வயம்
—————————————————————————
அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் –
ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் –
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-
பதவுரை
முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேச்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்
அடியால் முன் கஞ்சனைச் செற்று –
திருவடிகளாலே மார்பிலே ஏறி மிதித்த்வன் –
அழகிய ஸூ குமாரமான திருவடியாலே கம்சனைப் பாய்ந்து –
என் தலையிலே வைக்க வேண்டாவோ –
கம்சன் வஞ்சிக்க நினைத்ததை அவனுக்கு முன்னே கோலிச் செற்று-
அவன் நினைத்ததை அவனோடு போம்படி பண்ணி –
அமரர் ஏத்தும் படியான்-
குடியிருப்பு பெற்றோம் என்று ப்ரஹ்மாதிகளால் ஏத்தும் ஸ்வ பாவத்தை யுடையவன் –
கம்சனாலே குடியிருப்பை இழந்த தேவர்கள் இறே-
கொடி மேல் புள் கொண்டான் –
ரஷணத்துக்கு கொடி கட்டி இருக்கிறவன் –
கொடி மேல் –
கருடத்வஜன்-என்னும்படி எடுக்கப் பட்ட பெரிய திருவடியை யுடையனாய் இருக்குமவன் –
தன்னை ஆஸ்ரயித்தாரைத் தனக்கு வ்யாவர்த்த விசேஷணமாகக் கொள்ளுமவன் –
நெடியான் தன் நாமமே ஏத்துமின்கள் –
ஒருகால் திரு நாமம் சொன்னால் -அவர்கள் மறக்கிலும் தான் அவர்களை ஒரு நாளும்
மறவாதவனுடைய திரு நாமங்களையே ஏத்துங்கோள்
ருணம் ப்ரவ்ருத்தம் -பார உத் -47-22-என்று இருக்குமவன் —
சர்வேஸ்வரன் என்றுமாம்
ஏத்தினால் தாம் வேண்டும் காமமே காட்டும் கடிது-
உந்தாம் அபேஷிதமான பிரயோஜனங்களையும் கொடுக்கும் –
பிரதிபந்தகம் போக்குகை -ஐஸ்வர்யம் -ஆத்மானுபவம் -தன்னைத் தருகை -எல்லாம் கிடைக்கும் –
கடிது –
தேவதாந்திர பஜனம் போலே பலத்துக்கு விளம்பம் இல்லை –
கடிது ஏத்துமின் -என்றுமாம் –
—————————————————————
கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே
நிரதிசய போக்யனாய்-பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் –
கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-
பதவுரை
கொடுநரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண் கொண்டு காண வொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்கு மேலும்
செய்கை–(அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரகவேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியையுடைய சங்கைத் திருக்கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின்வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்
கடிது கொடு நரகம் –
கொடிதான நரகம் தர்சனமே கடிது -அதுக்கு மேலே –
பிற்காலும் செய்கை கொடிது –
பின்பு அது செய்யும் செயல்களோ கடிது –
ருதிர ஆறுகளிலே பொகடுகை -வாள் போன்று இருந்துள்ள கோரைகளிலே ஏறிடுகை –
பிற்காலும் செய்கை கொடிது –
அத்தைக் காண்கைக்கு மேலே -அவர்கள் செய்வன பொறுக்கப் போகாது –
அன்றிக்கே
அவர்கள் வேஷம் காண்கையே போரும் -அதுக்கு மேலே -என்றுமாம் –
தென்னவன் தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து பின்னும்
வன் கயிற்றால் பிணித்து எற்றி பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-என்னக் கடவது இறே –
கொடிது என்று –
இவற்றை அனுசந்தித்து
அது கூடா முன்னம் –
அவை கிட்டுவதற்கு முன்னே –
வடி சங்கம் கொண்டானைக் –
கூரிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே ஆயுதமாகக் கொண்டவனை -ஆயுதம் இறே –
கூர்மைக்குச் சொல்ல வேணுமோ -அன்றிக்கே –
அதுக்கு கூர்மையாவது –
த்வநியிலே உகவாதார் முடிகை —
அன்றிக்கே
அழகாகவுமாம் –
கூந்தல் வாய் கீண்டானைக்-
கேசியின் வாயைக் கிழித்தவனை-கூந்தல் மா இறே –
கூந்தல் யுடையத்தைக் கூந்தல் என்கிறது –
கொங்கை நஞ்சு உண்டானை –
பூதனையை முடித்தவனை –பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல் –
விரோதி நிரசனம் சத்தா பிரயுக்தம் –
ஏத்துமினோ உற்று-
நெஞ்சாலே அனுசந்தித்து -வாயாலே ஸ்தோத்ரம் பண்ணுங்கோள் –
நரகம் கொடிது என்று அனுசந்திக்க -விரோதி நிரசன சீலனானவனைக் கிட்டி ஏத்தலாம் –
கடிது கொடு நரகம் –
தர்மபுத்திரன் கண்டு மோஹித்தான் இறே
வடி சங்கம் –
ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம்-ஸ்ரீ கீதை -1-19-
—————————————————————
என்னுடைய நெஞ்சு கண்டி கோளே-ஏத்து கிறபடி –
அப்படியே நீங்களும் ஏத்துங்கள் -என்கிறார் –
ஜகத் ரஷண ஸ்வ பாவனை நிரதிசய போக்யனானவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாராய்ப் போலே –
சந்த்யா வந்தனாதிகளைப் பண்ணிக் காட்டுமா போலே-
உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-
பதவுரை
உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆச்ரயியுங்கோள்.
உற்று வணங்கித் தொழுமின் –
கிட்டி அதிகாரிகள் அல்லோம் என்று அகலாதே நெருங்கி –
அபிமான ஸூ ந்யராய் திருவடிகளினாலே தொழுங்கள் –
திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயியுங்கள்-
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் –
பூம்யாதிகளானசகல லோகங்களையும் ஒன்றையும் பிரிகதிர் படாதபடி
திரு வயிற்றிலே வைத்து ஆபத்தே பற்றாசாக ரஷிக்கும்-
முகில் வண்ணன் –
ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே ரஷிக்குமவன் —
பிரஜைக்குப் பால் கொடுத்தால் தாய் யுடம்பு நிறம் பெறுமாப் போலே –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனாய்-பரம உதாரனானவன் -ரஷை வடிவிலே தோற்றுகை-
பற்றிப் பொருந்தா தான் மார்பிடந்து –
பொருந்தாத ஹிரண்யனைப் பிடித்தபடி பிணமாம்படி பிடித்து –
அவனுடைய மார்வி இடந்து –
அன்றிக்கே –
பற்றிப் பொருந்தா தான் மார்பிடந்து –
பிடித்த பிடியிலே துணுக் என்று திருவடிகளில் விழுமோ என்று பற்றி –
அவன் பொருந்தான் என்று அறிந்த பின்பு இடந்தான் என்றுமாம் –
பூம் பாடகத்துள் இருந்தானை –
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்க வேணும் என்று போக்யதை யுடைத்தான திருப் பாடகத்திலே
எழுந்து அருளி இருக்கிறவனை –
பூம் பாடகத்துள் இருந்தானை –
ஆஸ்ரிதருடைய பிரளயங்களை நீக்கி விரோதிகளுக்கு பிரளயம் யுண்டாககுமவன் வர்த்திக்கிற தேசம் –
ஹிரண்யர்கள் பலர் யுண்டாகையாலே சந்நிஹிதனானான் –
ஏத்தும் என் நெஞ்சு-
என் நெஞ்சானது ஏத்தா நின்றது –
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானில் இவருக்கு வாசி –
தீர்த்தம் பிரசாதியாதே அர்ச்சாவதாரத்தில் இழிகிறார் –
ஏத்தும் என் நெஞ்சு –
நீங்களும் ஏத்துங்கள் என்கிறார் –
பூம் பாடகம் -இத்யாதி
சிறுக்கனுக்கு உதவினபடி எல்லோரும் -எப்போதும் – காண வேணும் என்று இருக்கை –
—————————————————————————
ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி
என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –
அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-
என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-
பதவுரை
தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.
என் நெஞ்சமேயான் என் சென்னியான் –
அவனை இவருடைய நெஞ்சு விரும்பினவாறே இவருடைய சர்வ அவயவங்களிலும் அவன் இருந்தான் –
இவருடைய ஒரு பரிகரத்தை அங்கே வைக்க
அவன் இவருடைய சர்வ பரிகரத்திலும் புகுந்தான் -சர்வ அவயவங்களுக்கும் உப லஷணம்-
என் நெஞ்சமேயான் என் சென்னியான் —
என் நெஞ்சில் உள்ளான் –
தலைமேல் தாள் இணைகள் தாமரைக் கண் என் அம்மான் நிலை பேரான்
என் நெஞ்சத்து எப்பொழுதும் -திருவாய் -10-6-6-என்னுமா போலே –
தானவனை வன்னெஞ்சம் கீண்ட-
ஈஸ்வரோஹம் என்று திண்ணிய நெஞ்சை யுடையனான ஹிரண்யன் யுடைய நெஞ்சைக் கீண்ட –
வன்னெஞ்சம் –
தான் என்றாலும் ததீயர் என்றாலும் இரங்காத நெஞ்சு –
பகவத் பாகவத விஷயங்களில் ப்ராதிகூல்யத்தில் நெகிழாத நெஞ்சு –
நர சிம்ஹத்தின் யுடைய வடிவு கண்டத்திலும் நெஞ்சு நெகிழாதவன்-
திருவாழி வாய் மடியும்படி இருக்க -என்றுமாம் –
மணி வண்ணன் –
சிறுக்கனுக்கு விரோதி போகப் பெற்றது என்று நீல மணி போலே குளிர்ந்து ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
அதி ஸூ குமாரமாய் -ஸ்லாக்யமாய்-இருக்கை –
முன்னம் சேய் ஊழியான் –
சதேவ சோம்யேத மக்ர ஆஸீத் –சாந்தோக்ய -என்கிறபடியே
ஸ்ருஷ்டே -பூர்வ காலத்தில் அழிந்த ஜகத்தை
ஸ்ருஷ்டிக்கைக்காக காலோபல சித்தமான ஸூ ஷ்ம சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு நின்றவன் –
தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்திலே யுள்ளான் —
ஸ்ருஷ்ட்யர்த்தமாக பிரளய காலத்திலே உளனானவன் -என்றுமாம் –
ஊழி பெயர்த்தான் –
அவற்றை சம்ஹரித்தவன் -ஸ்ருஷ்டித்ததால் உள்ள கார்யம் பிறவாமை யாலே சம்ஹரித்தவன் –
கால நியதி அழிப்பானும் இவனே –
ஊழி பெயர்த்தான் –
காலோபல ஷித சகல பதார்த்தத்தையும் உண்டாக்கினவன் -என்றுமாம் –
உலகு ஏத்தும் ஆழியான் –
எல்லாரும் ஏத்தும் படித் திருப் பாற் கடலிலே அநிருத்த ரூபியாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவன்-அன்றிக்கே
எல்லோரும் ஏத்தும் படித் திரு வாழியை யுடையவன் -என்றுமாம் –
அத்தி ஊரான் –
திரு வத்தி யூரிலே நின்று அருளினவன் –
அத்தியூரான் என் நெஞ்சமேயான் –
திருப் பாற் கடலோடு ஒத்தது திரு வத்தி யூரும் –
ஆழியான் அத்தியூரான் என்னெஞ்சமேயான் –
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -பெரியாழ்வார் -5-4-10-என்னும்படியே –
—————————————————————————————–
உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-
பதவுரை
புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.
அத்தி யூரான் புள்ளை யூர்வான்-
அவனே கருட வாஹனன் –
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் –
அணியப்பட்ட மணிகளையும் துத்தி என்று பொறியையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுமவன் –
அனந்த சாயி –
இவை இரண்டாலும் சர்வேஸ்வரன் -என்றபடி –
முத்தீ மறையாவான் –
மூன்று அக்னியையும் சொல்லா நின்றுள்ள வேதத்தாலே சமாராத் யதயா பிரதிபாதிக்கப் பட்டவன் –
பகவத் சமாஸ்ரயண கர்மங்களை பிரதிபாதியா நின்றுள்ள வேதங்கள் –
அன்றிக்கே –
முத்தி மறையாவான் -என்றதாகில் மோஷத்தைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே பிரதிபாத்யன் ஆனவன் –
மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் –
அரியன செய்து அபிமானியான ருத்ரனுக்கும் ஈஸ்வரனும் ஆனவன் –
பெரிய கடலிலே பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை ஈஸ்வரனாக அபிமானித்து
இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரன் ஆனவன் –
விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் –
தேவ ராஜன் -என்றபடி –
(கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு )
எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் –
எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –
——————————————————————-
என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து
பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-
பதவுரை
செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.
எங்கள் பெருமான் –
ஆஸ்ரிதரான எங்களுக்கு நாயகன் –
இமையோர் தலைமகன் நீ-
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
செங்கண் நெடுமால் திரு மார்பா –
இவை எல்லாம் நித்ய ஸூ ரிகளுக்கு போக்யமானபடி –
செங்கண் நெடுமால் –
ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் –
வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –
திரு மார்பா –
ஸ்ரீ யபதியே -இமையோர் தலைமகனாய் வைத்து எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடி -பிராட்டி சம்பந்தம் –
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்-
விஸ்த்ருதமான படங்களையும் பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்குப் போக்குவிட
ஆயிரம் வாயையும் மூக்கையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் –
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு-
திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு -பரமபதம் போலே –
குடமூக்கில் கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான் –
————————————————————————————–
தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி –
அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் -என்றுமாம் –
கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-
பதவுரை
கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய்–சிறுகுழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட்கொண்டது (என்ன ஆச்சரியம்)
கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது-
தன்னைச் சிலர் எடுத்து வளர்க்க வேண்டும் குழவியாய்த் தான் வளர்ந்து –
பிள்ளையாய் வர்த்தியா நிற்கக் கிடீர் -ஸ்வ ரஷணம் தான் அறியாத யசோதா ஸ்த நந்த்யனாய்க் கிடீர் யுலகுண்டது –
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் –
அப்படி ஸ்த நந்த்யமாய் இருக்கிற அவஸ்தையிலே வயிற்றிலே யடங்க வைத்தது யுலகு ஏழும்-
தனக்கு ரஷகர் வேண்டி இருக்கிற தசையிலே ஜகத்துக்கு ரஷகன் ஆனவனை –
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகக் கொண்டவிறை-
இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி
நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன் –
என் நெஞ்சம் இடமாகக் கொண்டு குடமாடின படியே வந்து
என் நெஞ்சைத் தனக்கு இருப்பிடமாக கொண்டவன் யுண்டது யுலகு ஏழும் உள்ளொடுங்க –
—————————————————————————–
பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும்படியைச் சொல்லுகிறார் –
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-
பதவுரை
இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும்படியாக,
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.
இறை எம்பெருமான் அருள் என்று –
அஸ்மத் ஸ்வாமியான ஈச்வரனே அருள் என்று –இறை யருள் -ஏக தேசம் அருள் என்றுமாம் –
இமையோர்-
அரசு என்று இருந்தவர்கள் ஆபத்து வந்தவாறே -பராவரேசம் சரணம் வ்ரஜத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-35-என்னும்படியே
ஓன்று கெட்டவாறே அங்கு ஏறப் பாடி காப்பரை வளைப்பாரைப் போலே ஈச்வரோஹம் என்று
ஊதின களங்களை பொகட்டு-
முறை நின்று –
முறையை யுணர்ந்து -முறை தப்பாமே என்றுமாம் –
மொய் மலர்கள் தூவ –
தேவர்கள் அழகிய புஷ்பங்களைத் தூவி ஆஸ்ரயிக்க –
அறை கழல சேவடியான் –
த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடியை யுடைய சர்வேஸ்வரன் –
அறை கழல் என்று
எல்லா ஆபரணங்களுக்கும் உப லஷணம் -ஆபரண ஒலி-
செங்கண் நெடியான்-
புண்டரீகாஷன் -ஆஸ்ரித வ்யாமுக்தன் –
குறளுருவாய்-
ஆஸ்ரித அர்த்தமாக சுருங்கின வடிவை யுடையவனாய் -வடிவு கண்ட போதே பிச்சேறும் படியாய் இருக்கை –
இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -திருவாய் -7-5-6-இறே –
மாவலியை மண் கொண்டான் மால் —
மகா பலி பக்கலிலே மண் கொண்ட வ்யாமுக்தன் –
மா வடிவு –
பூமி அத்யல்பமாம் படி வளர்ந்தான் –
இமையோர் முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல் சேவடியான்
செங்கண் நெடியான் —
மால் குறள் யுருவாய் மாவடிவில் மண் கொண்டான் –
என்று அந்வயம் –
————————————————————————————
பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-
பதவுரை
மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வஸ்மாத்பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத்தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில்அடங்கி நிற்பதன்று.
மாலே –
சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் –
நெடியானே-
அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –
கண்ணனே-
கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்-
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –
ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –
அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –
மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –
பண்டு கன்றாலே விளவின் காயை விழ விட்டவனே –
கன்றையும் விளாவாயும் வந்த அஸூரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
என் தன் அளவன்றால் யானுடைய வன்பு –
இன்று ஆஸ்ரயித்த அளவன்று உன் பக்கல் ச்நேஹம் —
இத்தை அகம் சுரிப்படுத்த வேணும் -தரமி அழியப் புகா நின்றது –
ச்நேஹோ மே பரம -உத்தர -40-16-
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –
அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே –
ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply