ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -71-80– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது –

ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் –
அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் –

கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று –
இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது –

அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை –
இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் –

சர்வ காலத்திலும் ஸூலபனான படியை அனுசந்தித்தார் கீழ்
சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற
தீ வாய்–பயங்கரமான வாயையுடைய
அரவு–திருவனத்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேச்வரன்
வலம்புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக்கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழியானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத் தூக்கி யருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப –
இடத் திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது சர்வேஸ்வரனுடைய
திரு உலகு அளந்து அருளின  விஜயத்தாலே வந்த
ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக நின்று ஆர்த்துக்  கொண்டதாய்த்து –
உகவாதார் அடைய அந்த த்வநியிலே மண் உண்ணும் படிக்கீடாக நின்று கோஷித்த தாய்த்து-

எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி-
திரு ஆழியானது அப்படியே ஆர்த்துக் கொள்ள அவசரம் இன்றிக்கே 
நெருப்பை உமிழா நின்று கொண்டு நமுசி பிரப்ருதிகளை  வாய் வாய் என்று முடித்த தாய்த்து –

விடம்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் –
திரு வனந்த வாழ்வான் தனக்குப் படுக்கையான நிலை குலையாது இருக்கச் செய்தே
ப்ரதிபஷ நிரசனம் பண்ணிற்றாக வேணும் இறே பரிச்சலாலே-
அதுக்கு உறுப்பாகக் கிடந்த இடத்தே கிடந்து விஷத்தை உமிழா நின்றுள்ள பயாவஹமான வாயை உடையனான
திரு வநந்த வாழ்வான்  மேலே சாய்ந்து அருளக் கடவனான பிரதானனானவன் –

திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளா நின்றாலும்
இவன் திரு மேனிக்கு என் வருகிறதோ என்று
அனுகூலர் அஞ்ச வேண்டும்படியான சௌகுமார்யத்தை உடையனானவன் –

திசை யளப்பான்-
காடு மோடையுமான திக்குகளை அளக்கைக்காக –

பூவாரடி நிமிர்த்த போது-
புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைப் பரப்பின போது
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப இப்படிப் பட்டார்கள் என்கிறது –

பூவாரடி –
வெருமனிருக்கிலும் வயிறு எரிய வேண்டி இருக்கிற படியாலே பிராட்டிமார் பரியும் திருவடிகள் –
மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10–
பரிமளமும் பொறையும் தொடப் பொறாது ஒழிவதே –
மெல்லடி ஆற்றாமையாலே தொட வேண்டித் தொடப் பொறாமை யாலே கூச வேண்டும்படி இருக்கை-
பூவைப் பரப்பினால் போலே இருக்கை –

(ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் -7-4-1-ஆழி எழ

‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.
இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப.

எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-
அவனைப் போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்து கொண்டு
நமுசி முதலானவர்களை வாய் வாய் என்றது திருவாழி.

விடம் காலும் தீவாய் அரவு
கிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை
உமிழுமத்தனை அன்றோ திருவனந்தாழ்வானாலாவது?

அரவணை மேல் தோன்றல் –
திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன்.

திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-
ஒரு பூவினைக் கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது?
பூவை இட்டுப் பூவை கொண்டான் காணும். )

——————————————————————————

அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு
எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க-
அது வேண்டா காண்-
திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் –
ஆன பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

போதறிந்து –
காலம் அறிந்து –
ரஜஸ் தமஸ் ஸூ க்கள் கழித்து சத்வ நிஷ்டரான ரிஷிகள் ப்ராஹ்மமான முஹூர்த்தத்திலே யுணருமா போலே
வானரங்கள் ஆனவை காலம் அறிந்து உணர்ந்து போய்-ஏகாகிளைப் போலே உறக்கம் இல்லை –

வானரங்கள் –
நித்ய ஸூரிகள் பரியும் இடத்தே –

பூஞ்சுனை புக்கு –
பூத்த சுனைகளிலே புக்கு –
ரிஷிகள் குளிரைப் பாராதே அகமர்ஷணம் பண்ணுமா போலே –

ஆங்கு-
அவ்விடம் தன்னிலும் –

அலர்ந்தபோது –
கடுமொட்டாதல் -கழிய அலருதல் செய்யாமே செவ்விப் பூக்களை –

அரிந்து-
பறித்துக்

கொண்டு ஏத்தும் –
இவற்றைக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் -ஆனபின்பு

உள்ளம் -போது-
போது உள்ளம் –
உள்ள மேனியும் பிற்காலியாதே போது –
நாம் போய் செய்வது என் என்றால் நீயும் அப்படியே செவ்விப் பூக்களைக் கொண்டு –

மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல-
நீல மணி போலே இருக்கிற நிறத்தை யுடையனான திருவேங்கடமுடையானுடைய 
செவ்வித் திருவடிகளிலே கிட்டும்படி –

அணி-
அது செய்யும் இடத்தில் –

வேங்கடவன் பேராய்ந்து-கொண்டு
திருவேங்கடமுடையானுடைய திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு
இது என்ன நீர்மை என்று கொண்டு
அவன் திருவடிகளிலே கிட்டும்படி போதை யணிவோம்-
பூவைக் கொண்டு ஆஸ்ரயிப்போம்-
அன்றிக்கே –
அணி வேங்கடவன் என்று சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய்
வேங்கடவன் மலரடிக்கே செல்லும் போதும்  அணி என்றுமாம் –

————————————————

அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து –
அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின
பெம்மான்–ஸர்வேச்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
உய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

ஆய்ந்து உரைப்பன் –
அனுசந்தித்துக் கொண்டு செல்லா நிற்பன் -அவன் திரு நாமங்களை –

ஆயிரம் பேர் –
அது தன்னில் இன்ன திரு நாமங்கள் சொல்லக் கடவோம் –
இன்ன திரு நாமத்தை விடக் கடவோம் -என்ற ஒரு நியதி இல்லை –
தாய் பேர் சொல்லக் காலமும் தேசமும் பார்க்க வேணுமோ –
ஐஸ்வர் யாதிகளில் கை வைத்தார்க்கு இறே நியதி உள்ளது –
கைக்கு எட்டித்த ஒரு கண்ட சர்க்கரையை வாயிலுடுமா போலே –

ஆதி நடு அந்திவாய்-
முதலும் நடுவும் முடிவுமான போதிலே –
அப்படியவை செய்யும் இடத்திலே காலத்திலும் ஒரு நியதி  இல்லை –
த்ரிசந்தையிலும் என்றபடி –

வாய்ந்த மலர்-
புஷ்பங்களிலும் இன்னத்தைக் கொண்டு என்ற ஒரு நியதி அன்றியிலே
கிட்டின புஷ்பங்களைக் கொண்டு –

தூவி –
அடைவு கெடப் பரிமாறி –

வைகலும் –
இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் என்றும் ஒக்க ஆஸ்ரயிப்பன்-
காலம் எல்லாம் என்றபடி –
நாள் தோறும் உண்ண வேண்டுமாப் போலே –

ஏய்ந்த பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்-
சேர்ந்து பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும் சிவந்த கண்களையும் யுடைத்தான
குவலயா பீடத்தை நிரசித்த படியாகவு மாம் –

அன்றிக்கே –
ஏய்ந்த என்று
பிறை போலே ஏய்ந்து இருந்துள்ள கொம்புகளையும்
தர்ச நீயமான கண்களையும் யுடைத்தான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை நோக்கின படியைச் சொல்லுகிறதாக வுமாம் –

குவலயா பீடத்தை யானபோது
ஆஸ்ரயிப்பாருடைய விரோதிகளைப் போக்குகைக்கு உப லஷணம் ஆகிறது –

ஸ்ரீ கஜேந்த ஆழ்வானை யானபோது
ஆஸ்ரிதர் விஷயத்தில் அவனுக்கு யுண்டான வாத்சல்யத்தைச் சொல்லுகிறது –

கரி விடுத்த –
ஒரு பூ இழக்க மாட்டாமை முதலையின் வாயினின்றும் விடுத்த

பெம்மான் –
ஸ்வாமிக்கு–சர்வேஸ்வரனான -என் ஆயனுக்கு –
சேஷத்வ ஜ்ஞானம் துணியப் பண்ணுகிறபடி-

இறைக்கு –
வகுத்த ஸ்வாமிக்கு –

ஆட்பட துணிந்த யான்-
அடிமை செய்கையிலே அத்யவசித்து உள்ள நான் –
ப்ராப்யமான அடிமை செய்யத் துணிந்த அடியேனான நான் –

அவன் பிரதிபந்தகம் போக்க -நான் அடிமை செய்தேன் -என்கிறார் –

இப்படி விரோதி  நிரசன சீலன் ஆனவனுக்கு அடிமை செய்யத் துணிந்த யான் –
வாய்ந்த மலர் தூவி ஆய்ந்து உரைப்பன்
ஆயிரம் பேர் ஆதி நாடு அந்தி வாய் வைகலும் -என்று அந்வயம்-

——————————————————————–

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான
ஸூஹ்ருதம் பண்ணினேன்  நானே -என்கிறார்
நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9-
என்றாப் போலே யாயத்து இவர்க்கும் இது –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல்மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல்மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

யானே தவம் செய்தேன் –
நானே தபஸ் சைப் பண்ணினேன் ஆகிறேன் -சம்சாரிகளில் வாசி –

ஏழ் பிறப்பும் எப்பொழுதும்-
எல்லா ஜன்மங்களிலும் எல்லா அவச்தைகளிலும்
பகவத் சமாஸ்ரயணீயமான கவி  பாடுகை யாகிற இந்த லாபத்துக்கு அடியான
இந்த தபஸ்சைப் பண்ணினேன் நானே  –

பிராட்டி -ஈத்ருசன் து புண்யபாபம் -என்றாள்-
அளவில்லாத துக்கத்தைக் கண்டு இதுக்கடி யுண்டாக வேணும் என்றாள் இறே –
பாபமாவது இவளுக்கு அவர் நிக்ரஹம் இறே –

அப்படியே இவரும் இந் நன்மைக்கு அடி யுண்டு என்கிறார் –
பலத்தைக் கொண்டு நிச்சயிக்கிறார் –
எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6–

யானே தவம் உடையேன் –
அந்த தபஸ் ஸூ க்கு பலமான பேறு பெற்றேனும் நானே –

எம்பெருமான் –
இதுக்கடி இவன் எனக்கு சேஷி ஆகையாலே –

இவருடைய தபஸ்ஸூம் பலமும் இருக்கிறபடி –
போந்தேன் புண்ணியனே -பெரிய திருமொழி -6-3-4–
நாயன் புண்ணியமே இறே எனக்கும் புண்யம் –
நீ ஸ்வாமி யான பின்பு எனக்கு இவற்றில் இழக்க வேண்டுவது ஓன்று யுண்டோ –
தபஸ்ஸூம் தபஸ் சினுடைய பலமும் நானே யுடையேன் -என்கிறது -எத்தாலே என்னில் –

யானே இரும் தமிழ் நன் மாலை –
வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –

யானே தவம் உடையேன்  யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்-
அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச்
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன்   ஆனேன் –

பெரும் தமிழன்-அல்லேன் பெரிது –
த்ரமிட  சாஸ்த்ரத்தில் என்தனை அவகாஹித்தார் இல்லை –
வேறு சிலவர் எனக்கு ஒப்பு அல்லர் என்று சொல்லும் அவ்வளவேயோ தான் –

பெரிது-நல்லேன்-
நான் அறக் கை விஞ்சினேன் அல்லேன் –
என்னாகியே தப்புதல் இன்றி தனிக் கவி தான் சொல்லி -திருவாய் -7-9-4-என்கிற
இத்தை நினைத்து அருளிச் செய்கிறார் –

நல்லேன் பெரிது –
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–
நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –
நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்
என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –
ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

—————————————————————

நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன –
அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி –
ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து –
இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக திருமலை யிடை யாட்டம் நேர் பட்டபடி-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானையானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப்பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலையன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தான மான) பர்வதம்.

பெருகு மத வேழம் –
ஒரு வரையிடக் கடவது அன்றிக்கே
ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேலே எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனை யாய்த்து-
மும்மதம் என்ற ஒரு பிரதேச நியமம் இன்றிக்கே
கிண்ணகம் போலேயாய் சிம்ஹம் அஞ்ச வேண்டும்படி இருக்கை –
மதித்துச் சமைந்ததாகில் சிறிது அறிவுண்டாம் –
அறிவு கெட்ட சமயத்திலே ஒன்றால் தணியப் பண்ண ஒண்ணாத படியான மதத்தை யுடைத்தான ஆனையானது –

மாப்பிடிக்கு முன்னின்று-
ஸ்லாக்யமான பிடிக்கு முன் நிற்கும் ஆய்த்து-
அதுக்குப் பெருமை யாவது என் என்னில் –
இப்படி மத்த கஜமான இத்தைக் கையாளாக்கை-
எல்லா அளவிலும் இத்தைத் தனக்கு கையாளாக்கிக் கார்யம் கொள்ள வற்றாய் இருக்கை –

மாப்பிடி –
இத்தை இன்னதனைப் பட்டினி கொள்ளவற்று என்கை-
அதுக்குச் சாணைச் சீரையாய் இருக்கை –

முன் நின்று –
மதம் மிக்க சமயத்திலும் -க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-என்று
அத்தை அனுவர்த்தித்துக் கொண்டு நிற்கை -ப்ருகுடி படரைப் போலே நிற்கை –
இதினுடைய வியாபாரம் அதினுடைய புத்யதீனமாய் இருக்கை –
சர்வ நியந்தா வானவன் பாண்டவர்களுக்கு நியாம்யனானாப் போலே –

மாப்பிடிக்கு முன் நின்று –
தம்முடைய ஸ்வா தந்த்ரியத்துக்கும் ஈஸ்வர ஸ்வா தந்த்ரியத்துக்கும் அஞ்சாமைக்குப் பற்றாக –
அஞ்சாத மாத்ரமே அல்ல -அவன் ஸ்வா தந்த்ர்யமே நமக்கு உடலாகைக்கு அடி –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம்-ஆரண்ய -30-39-

இரு கண் இள மூங்கில் வாங்கி –
நான் உணர்த்தி அற்ற சமயத்திலும் அதுக்கு உகப்பு தேடா நிற்கும் ஆய்த்து-
இரண்டு கண் ஏறி இருப்பதாய் அத்தால் வரும் முற்றளவை யுடைத்தது அன்றிக்கே இருந்துள்ள மூங்கில் குருத்து –

இரு கண் –
பாதாளத்தில் கிட்டினாலும்  கண் இரண்டே

வாங்கி –
மலைகள் பொடியாம்படியான சமயமாய் இருக்கச் செய்தேயும் பிடிக்கு கார்யம் செய்கிறது ஆகையாலே
அவதானத்தோடு வைத்து வாங்குவாரைப் போலே வாங்கும் ஆய்த்து
மூங்கிலினுடைய மேன்மையையும்  களிற்றினுடைய ஸாவ தானத்தையும்  சொல்லுகிறது –
வெண்ணெய் வாங்கினாப் போலே -அதில் செவ்வியிலே சிறிது குறையில் அது கொள்ளாது என்று இருக்குமே –

அருகிருந்த தேன் கலந்து –
திருமஞ்சனத்துக்கு வேண்டும் உபகரணங்கள்  அவ்வவ் இடங்களிலே குறைவற்று இருக்குமாப் போலே
அங்கு பார்த்த பார்த்த இடம் எங்கும் போகய த்ரவ்யங்கள் குறைவற்று கிடக்குமாய்த்து –
மலை முளன்சு களிலே நிறைந்து நின்ற தேனிலே தோய்த்து –

கலந்து என்கையாலே
மூங்கிலும் தேனும் த்ரவ்ய த்ரவ்யங்கள் இரண்டு சேர்ந்தாப் போலே இருக்கை-

நீட்டும் –
அது முகத்தை மாற வைத்துக் கொண்டு ஸ்வீகரியாதே அநாதரித்து நிற்க –
இது கொடுத்தபடியே நிற்குமாய்த்து –
இதுக்குக் கொடுக்கையே புருஷார்த்தமாய் இருக்கிறபடி –
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்னுமா போலே யாய்த்து அதுக்குக் கருத்து –
இரந்து அது கொள்ளும்படி கொடுக்கும் –

நீட்டும் –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது -அயோத்யா -96-2-என்னுமா போலே

திருவேங்கடம் கண்டீர் –
இப்படிப்பட்ட திருமலை கிடீர் –

வான் கலந்த வண்ணன் வரை –
மூங்கில் குருத்தும் தேனும் ஏக ரசமாய்க் கொண்டு கலந்தால் போலே யாய்த்து
இங்கும் மேகத்தோடு கலந்து சேர்ந்த வடிவு இருக்கிறபடி –
மேகத்தினுடைய நிறத்துக்கும் அவனுடைய வடிவுக்கும் வாசி அறிந்து சொல்ல ஒண்ணாத படியாய் இருக்கும்
உபமான உபமேயங்கள் சத்ருசமாய் இருக்கை –

வான் கலந்த வண்ணன் வரை திருவேங்கடம் கண்டீர் -என்று அந்வயம்-

——————————————————————————–

கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு
இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன்  திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே
இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்-

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேரித்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

வரைச் சந்தன குழம்பும் –
நல்ல ஆகரத்தில் யுண்டான சந்தனக் குழம்பும் -நாற்றம் குறைவறும்படி அபிஜாதமான சந்தனமும் –
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பும்  -பெரிய திருமடல் –

வான் கலனும்-
அங்குத்தைக்கு ஈடான பெரு விலையனான வழகிய  திரு வாபரணங்களும் –
தேசமான அணிகலனும் -திருவாய் -4-3-2-

பட்டும்-
திருவரைக்குத் தகுதியாக சௌகுமார்யத்துக்கு சேரும்படியான நல்ல பட்டுக்களும் –

விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் –
பரிமளத்தால் மிக்கு இருப்பதாய்  தர்ச நீயமான வெளுத்த நிறத்தை யுடைய மல்லிகையும் –
சூட வேண்டாதே காண அமையும் –

நிறைத்துக் கொண்டு-
இவற்றை அடங்க கண்ட காட்சியிலே அவனுக்கு ஆதாரம் பிறக்கும் படிக்கு ஈடாக பாரித்துக் கொண்டு –
யசோதைப் பிராட்டி -அஞ்சனமும் கொண்டு வைத்தேன் -பெரியாழ்வார் -2-4-4-என்று
திருமஞ்சனத்துக்குப் பாரிக்குமா போலே –
சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி -திருவிருத்தம் -21-என்னும்படி
அடைவே எடுக்கும் முறையிலே எடுத்துக் கொண்டு –

ஆதிக்கண் நின்ற-
ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-

இத்தால்
இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –
இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன் -என்றபடி

உபாய  வஸ்து ஏது என்ன –
காரணந்து த்யேய -என்று ஜகத் காரண வஸ்து என்கிறதே –

வறிவன்-
இப்படி உபாச்யனுமாய் –
இவன் ஒருநாள் அல்ப அனுகூல்யம் பண்ணினால் பின்னை
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவ -பார உத் -47-22-என்கிறபடியே
பின்னை ஒரு நாளும் மறக்கக் கடவன் அல்லாத சர்வஜ்ஞ்ஞனும் ஆவான் -இத்தனை செய்தானாகில்
இதுக்கு மேற்பட இவன் செய்வது என் என்னும் ஜ்ஞானத்தை யுடையவன் –

அடி இணையே-
அவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே

ஓதிப் பணிவது உறும் —
ஸ்தோத்ரம் பண்ணி வணங்குவது உறும் –
ஸ்தோத்ரம் பண்ணித் தலையாலே வணங்கும் இது இவ் வாத்மாவுக்குச் சால  யுறும் -என்கிறார் –

உறும் –
சீரியதாய் – இப்போதும் இனிதாய் -என்றும் இனிதாம் –
கருப்புக் கட்டி தின்னக் கண்ட சர்க்கரை கூலி என்கை-

அப்ராக்ருத வஸ்துவை ஆஸ்ரயிக்கும் போது
அப்ராக்ருத த்ரவ்யங்கள் வேணும் என்று அஞ்ச வேண்டா கிடி கோள்-என்கிறார்  –

—————————————————————————–

இப்படி ஆஸ்ரயணத்தை அடைவு பட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே –
திரு உள்ளத்தைக் குறித்து
அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

உறும் கண்டாய் –
உறுதும் -என்கிற இத்தைக் குறைத்து உறும் என்று கிடக்கிறதாக்கி
பழைய உறுதும் என்கிற வற்றையே கொண்டு அவன் திருவடிகளை நாம் ப்ராபிப்போம் -என்றாதல் –
அன்றிக்கே –
இத்தை இதர லாபங்கள் அளவாக புத்தி பண்ணாதே -இதாகிறது சாலச் சீரி யது என்று கிடாய் –
இத்தைப் புத்தி பண்ணு -என்றது ஆகவுமாம் –

உறும் கண்டாய் –
ஷூத்ர புருஷார்த்தங்கள் யுடைய காலைப் பற்றிக் கொண்டு திரிந்த யுனக்கு
ஸூஹ் ருதானவனுடைய திருவடிகளை பற்றுகை உறும் –
அநாதி காலம் நாம் இளிம்பு பட்டபடியை அறிதி –

நல் நெஞ்சே –
எனக்குப் பாங்கான நெஞ்சே -என்னுதல்-
எனக்கு முன்பே பதறி வரும் நெஞ்சே -என்னுதல் –

உத்தமன் –
தன பேறாக வடிவைக் கொள்ளக் கடவ சர்வேஸ்வரன் –
நாம் வேண்டாத நாளும் நம்மைத் தொடர்ந்து திரிந்தவன் –

நல் பாதம்-
நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்
அவனுக்கும் திருவடிகளுக்கும் –

பொது நின்ற பொன்னங்கழல் -மூன்றாம் திரு -88-
சோஹம் தே தேவ தேவேச நார்ச்சனா தௌ ந ச  சாமர்த்யவான் க்ருபா மாத்ர  மநோ வ்ருத்தி ப்ரசீத மே-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-10-
தானே வந்து தலையிலே இருக்கும் திருவடிகள் –

உத்தமன் நற் பாதம் உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்-
அழகியதாய்  இருப்பது ஒரு தாமரைப் பூவாலே அவன் திருவடிகளைக் கிட்டலாம் கிடாய் –

இத்தால்
கனக்க ஓன்று கொண்டு ஆஸ்ரயிக்க வேண்டா என்றபடி –
அப்ராக்ருத புஷ்பம் தேடித் போக வேண்டா –
உறும் கண்டாய் ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும் சாத்தி உரைத்தல் தவம்-

இத்தால் 
ஆஸ்ரய வஸ்துவைப் ப்ராபிப்பதிலும்
ஆஸ்ரயணம் தானே நன்று என்னும் இடத்தை சொல்லுகிறது –
சாத்ய தசையிலும் சாதன தசைதான் நன்றாகச் சொல்லக் கடவது இறே

சாற்றி உரைத்தலான தவம் உறும் கண்டாய் –
இத்தைத் தவமாகச் சொல்லுகிறது ஈஸ்வரன் கருத்தாலே –

—————————————————————–

இப்படிப்பட்ட தபஸ் சை அனுசந்தித்து சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற
லபிக்கப் பெற்றான் சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்-

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்க தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திருநாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.

தவம் செய்து நான்முகனே பெற்றான் –
அநேகம் பேர் தபசைப்   பண்ணினார்களே யாகிலும் -அவை ஒன்றும் பலத்தோடு வ்யாப்தமாகப் பெற்றது இல்லை
ப்ரஹ்மா ஒருவனுமே தான் பண்ணின தபஸ்ஸூ  பலத்தோடு வ்யாப்தமாகப் பெற்றான் –

இவன் இனியது செய்ய
அவன் தவம் என்று இருக்கும் –
வணக்குடை தவ நெறி -திருவாய் -1-3-5–என்னக் கடவது இறே –

தரணி நிவர்ந்து அளப்ப –
சர்வேஸ்வரன் அந்ய அர்த்தமாகச் செய்த செயல் 
அவனுடைய தபஸ்ஸூக்குப் பிரயோஜன ரூபமாகக் கொண்டு தலைக் கட்டப் பெற்றது –
யாரேனுக்கும் கார்யம் செய்ய யாரேனுக்கும் பலித்துப் போவதே –

நான்முகனே   பெற்றான் –
ப்ரஹ்மாவைப் போலே தபஸ்ஸூ பண்ணிப் பலம் பெற்றார் யுண்டோ –

நீட்டிய பொற்  பாதம் –
பூமியை வளர்ந்து அளக்கைக்காக  நீட்டின ஸ்லாக்கியமான திருவடிகள் –
எட்டாதபடி பரணிட்டு இருக்கக் கிடீர் பலித்தது என்கை-

சிவந்த தன் கை யனைத்தும் ஆரக் கழுவினான் –
தன்னுடைய சிவந்த கைகள் அனைத்தும் ஆரும்படி விளக்கினான் –
அநேகம் கை படைத்ததால் உள்ள லாபம் பெற்றான் –

கை அனைத்தும் ஆர-
வயிறார என்னுமா போலே விளக்கின படி தான் ஏன் என்னில் –

கங்கை நீர் பெய்து –
கங்கையில் நீரை வார்த்து க்ருஹீத்வா தர்மபா நீயம் -ஈஸ்வர சம்ஹிதை -என்று
திருவடிகளை விளக்க அபேஷிதமான வாறே -தர்ம ஜலமானதைக் கையிலே கொண்டு –

அனைத்துப் பேர் மொழிந்து –
அவனுடைய எல்லா திரு நாமங்களையும் சொல்லி —
வாய் படைத்த பிரயோஜனம் பெற்றான் –

பின் –
பின்பு தபஸ் பலம் பெற்றான் அவன் ஒருவனுமே என்கிறார் –

கங்கை நீர் பெய்து- அனைத்துப் பேர் மொழிந்து –
சிவந்த தன் கை அனைத்தும் ஆரக் கழுவினான் –
பின் தவம் செய்து நான் முகனே பெற்றான் –
பின்னைத் திருவடிகளை விளக்கினான் -என்றுமாம் –

———————————————————————–

ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது –
தாயார் அபேஷிக்க மறுத்துக் காடேறப் போன
சக்ரவர்த்தி திருமகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்-

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன் திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரானுடைய
மொய் மலராள் தான்–அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப்பெருமான் மிகப்பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

பின்னின்று தாய் இரப்பக் கேளான்-
தாயாரான ஸ்ரீ கௌசல்யார் பின்தொடர்ந்து நின்று –
பிள்ளாய் நான் ஏக புத்ரையானவள் -உன்னைப் பிரிந்தால் ஜீவிக்க  வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று அர்த்திக்க –
அத்தைக் கேளாதே புறப்பட்டுப் போனான் -அதுக்கு மேலே –

பெரும் பணைத் தோள் முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் –
அத்யந்தம் ஸூகுமாரியான பெரிய பிராட்டியாரானவள் –
பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -ஆரண்ய -60-20-என்கிறபடியே –
இத்தோளை அணைந்த நான் பிரிந்து இருந்தும் ஜீவிக்க வல்லேனோ -என்று கொண்டு –
அக்ரதஸ் தேகமிஷ்யாமி -அயோத்யா -27-7–என்கிறபடியே
முற்பட்டு நின்று அர்த்தித்தாள் ஆய்த்து-
யஸ் த்வயா சஹ சச்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -அயோத்யா -30-18-
பெரும் பணைத் தோள் மொய்ம்மலராள் தன்னை இரக்க வேண்டும்படியான அழகும் சௌகுமார்யமும்-

இரப்பாள்   –
பெருமாள் ஆகிற கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த வேணும் என்று
நெருப்பிலே இடுமா போலே இந்த அதி ஸூ குமாரமான திருமேனியைக் கொண்டோ காடேறப் போகிறது -என்று
உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் –
உமக்கு முன்னே போகக் கடவேன் என்று ப்ரார்த்தியா நிற்க –

பெருமாள் கருமுகை மாலையை வெய்யிலிலே இடவோ என்று இருந்தார் –
அவள் தன்னை மறந்து பெருமாளையே நினைந்து இருந்தாள்-

சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் –
ஒரு பிரபந்தமானது தோள்களினுடைய குணங்களைச் சொல்லுகையாலே உப லஷணமாய் இருக்கும் ஆய்த்து –
சொல் என்கிறது ஸ்ரீ ராமாயணத்தை ஆய்த்து –
வீர்யவான் -பால -1-3-என்றும்
ஆயதாஸ்ஸ-கிஷ்கிந்தா -3-10-என்றும் சொல்லக் கடவது இறே-
பிணம் தின்னி அகப்பட -ஸூ குமாரௌ-ஆரண்ய -19-14-என்னும்படி இருக்கை-
இப்படிப்பட்ட தோள் நலத்தை யுடையனாய் ஒப்பில்லாத பிரதானனான அவன் –

தோன்றல் –
சௌகுமார்யம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

அவன் அளந்த நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-
அவன் அளந்த பூமிப் பரப்பு அடங்கலும் இத்தனைக்கும் நேர் –
அவன் அளந்த பூமி அவன் குணம் அத்தனைக்கும் நேர்
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மன்னும் வளநாடு கை விட்டு -பெரிய திருமடல் -என்கிறபடியே
இவர்கள் சொற்களை மறுத்து பித்ரு வசன பரிபாலன அர்த்தமாகப் போன  இதுக்கு ஒக்கும்

—————————————————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து
நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆனபடியாலே
பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்-

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத்திருவடிகளைச் சந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப்பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என்கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப்பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையேயன்றோ மிகச் சிறந்தது)

நேர்ந்தேன் அடிமை –
அவன் பக்கலில் யுண்டான அடிமையிலே நேர்ந்தேன் –
ஸ்வரூப அனுரூபமான கைகர்யத்தைக் கிட்டினேன் –

துணிந்தேன் -என்று கீழே -65- பாசுரத்தில் சொன்னபடி –
ஷத்ரியனுக்கு அபிஷேகம் நேர்பட்டால் போலே –

நினைந்தேன் அது ஒண் கமலம்-
அவனுடைய அழகிய திருவடிகளை ஸ்மரித்தேன்-
இவருடைய அபிஷேகம் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-7-என்றும்
மாலடி முடிமேல் கோலமாம் -குலசேகரன் -பெருமாள் -7-11-என்றும் சொல்கிறபடி
அடிமை ஆசைப்பட்டால் அடியை நினைத்து இருக்கும்  அத்தனை இறே –

திவ்யஜ்ஞா நோபபன் நாஸ்தே -ஆரண்ய -1-10- என்றும் –
த்ருஷ்ட்வ ஏவ ஹி ந சோகம் அப நேஷ்யதி ராகவ -அயோத்ய -83-9–என்றும் சொல்கிறபடியே –

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப் படிக்கோலம் கண்ட பகல் –
அழகு சேர்ந்த திருவடிகளைக் கண்டவர்களுக்கு –
அதுக்கும் அடியான வடிவழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ –
என் பட்டார்களோ -என்றபடி –

அன்றிக்கே –
ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்களாய் -அடியராய் -அவர்கள் ஆகிறார் தாமாய்-
நான் திருவடிகளில் அழகைக் கண்டு பட்டபடி கண்டால்
முன்பு அவ் வடிவழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் என் பட்டார்கள் என்றதாகவுமாம்

பண்டு வடிவழகை  அனுபவிக்கப் பெற்றவர்கள்
அப்போது திருவடிகளில் அழகைக் கண்டு என் பட்டார்களோ என்றுமாம் –

திரு யுலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு
ஸ்வா பாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: