ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -61-70– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கரு மாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத் தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்து கொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணித்தார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப-
ஒரு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே ஒரு திருவடிகளானது நின்றாப் போலே நின்று –
பூமிப் பரப்பை அடங்க மறைத்துக் கொண்டது –

ஓர் பாதம் –
ஒரு திருவடிகளை இப்படிச் சொன்னால்
அநந்தரம் மற்றைத் திருவடிகள் இன்னபடி செய்தது என்று  நம்மைப் போலே
அடைவுபட இருந்து ஓர் ஓன்று ஓன்று என்று கணக்கில் சொல்ல வல்லார் ஒருவர் அன்றே –

நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –
ஏற்ற பொருள் பெற்றவாறே கண்ட தோளானவை திக்குகள் எங்கும் வியாபித்துக் கொண்டன – என்று
விவஷிதர் இத்தைச் சொல்லா நின்றார்கள் –
கையிலே நீர் விழுந்தவாறே அலாப்ய லாபம் போலே வளர்ந்த தோளானது திக்குகள் எல்லாம் அளந்தன என்பர் –
இன்று இத்தைக் கேட்கைக்கு அன்று எங்கே போனேனோ –

அன்று கரு மாணியாய் இரந்த கள்வனை –
ஸ்ரமஹரமான  நிறைத்தை யுடையையாய் -இரப்பு பெறில் அல்லது போகாதனாகத் –
தன்னைப் பேணாதே -இரப்பிலே தகணேறப் பண்ணிக் கொடு வந்தபடி

மாணியாய்-
உடையார் சூட்டினா வோடாகாதே –
திருமலையைக் கல் என்றால் வாயைக் கிழியார்களோ-

இரந்த-
அவன் தன்னுடையது என்ன -அவன் பக்கலிலே இரந்தான் ஆய்த்து-

கள்வனே –
இப்படிப்பட்ட வடிவழகைக் கொடுவந்து   மகா பலியை சர்வச்வாபஹாரம் பண்ணினான் ஆய்த்து –

கள்வனே –
மஹா பலியையோ இவரையோ களவு கண்டது –
அவன் தன்னை வைத்தான் இறே-ஆத்ம அபஹாரிகளுடைய ஆத்ம அபஹாரி –
இவ்விடத்தில் தந்தாமது பெறுவார்க்கும் நேர்  கொடு நேர் கிடையாது -நீ அப்படி செய்கைக்கு ஹேது

உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு —
மஹா பலி பக்கல் கிடந்த பூமியை மீட்டுக் கொடுத்தது இந்த்ரன் ஒருவனுக்குமாகச் செய்த செயல் அன்றிக்கே
உன் திருவடிகளிலே ந்யஸ்த பரர் ஆனவர்கள் இச் செயலை அனுசந்தித்து –
இனி நமக்கு ஒரு கர்த்தவ்யம் இல்லை என்று கொண்டு நிர்ப்பரராய் –
மார்பிலே கைவைத்துக் கொடு கிடந்தது உறங்குகைக்காக செய்த செயல் இறே

த்வத் அக்ரே சரணாகதாநாம் பராபவ ந தேநு ரூபா -ஸ்தோத்ர ரத்னம் -25-என்று கொண்டு
சொன்ன அலாபம் தம்மளவிலே போகாதாப் போலே
லாபம் உள்ளதும் எங்கும் ஒக்கக் கிடக்கக் கடவதே –
எங்கனம் தேறுவர் உமரே -திருவாய் -8-1-4-என்னக் கடவது இறே

ஒரு நாள் பட்டர் தம்மிலே இருந்து -இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்ட பின்பு
தங்களை தேக யாத்ரையில் ஊன்ற நின்று நிர்வஹிக்குமது இல்லை –
அங்கனே இருக்கச் செய்தே இவர்கள் தாங்கள் ஸூகமே ஜீவித்து ஒரு குறையற்றுச் செல்வதாக நிற்பர்கள்-
இதுக்கடி என் தான் -என்று விசாரித்து அருளிப்
பின்னையும் தாமே இதுக்கடி அறிந்தோம் இறே
ஒரு சர்வ சக்தி பக்கலிலே தங்கள் பரத்தை ஏறிட்டுத் தாங்கள் நிர்ப்பரராய் இருப்பர்கள்-
அநந்தரம் அவன் தூது போயும் -சாரத்தியம் பண்ணியும் -தான் அர்த்தியாயும் -இப்படி இவர்கள் கார்யம் நிர்வஹியா நிற்கும்
ஆன பின்பு அவர்களுக்கு ஒரு குறை இல்லை இறே என்று அருளிச் செய்தார் –

—————————————————————————————-

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருந்துள்ள அவனை அனுசந்தித்து அவனே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி –
என் அபேஷிதத்தைத் தருவானாகக் கொண்டு அவனையே பற்றினேன் -என்கிறார் –
நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே
நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது-

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆச்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

பேறு ஓன்று முன்னறியேன் –
இதுக்கு முன்பு ஒரு நாளும் இந்த பகவல் லாபம் அறியப் பெற்றிலேன் –

பெற்றறியேன் –
இவ்வறிவு இல்லாமையாலே இதுக்கு முன்படங்க இப் பேற்றை இழந்து போனேன் –
அறிந்து ஆசைப் பட்டார்க்கு வருமதிறே -அதுவும் இல்லை
அறியாமையும் பெறாமைக்கும் நிதானம் இருக்கும்படி சொல்லுகிறார் –

பேதமையால்-
ஐயே அறிவு கேடு என்ன பண்ணாதது தான் –

மாறென்று சொல்லி வணங்கினேன் –
இதுக்கு முன்பு அடங்கலும் உள்ளே புகுர நில்லாதே புறம்பே நின்று பண்ணின கர்மங்களின் பலமானது
என் பக்கலில் வாராதபடி அவற்றுக்கு அவன் தடையாக ஆஸ்ரயித்தேன்-
முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்
அவன் நம் விரோதிகளுக்கு பிரதிபடமான படிக்கு நிதர்சனமாக அருளிச் செய்கிறார் மேல் –

ஏறின் பெருத்த எருத்தம் கோடோசிய –
எருத்துக்களினுடைய  பெருத்த எருத்துண்டு -பெரிதான ககுத்துக்கள் அவையும் கோடுகளுண்டு கொம்புகள்
அவையும் முறியும்படிக்கு ஈடாக –

பெண் நசையின் பின் போய்-
நப்பின்னைப் பிராட்டி பக்கலில் யுண்டான ஆசையைப் பின் சென்று –
நப்பின்னைப் பிராட்டியைப் பெறலாம் என்ற நசையினால் தன்னைப் பேணாமை –

எருத்து இறுத்த –
எருதுகளினுடைய கழுத்தைத் திருகின -பற்றினாருக்குப் பிராட்டிமாருக்கு பரியுமா போலே பரியும் –

நல் ஆயர் ஏறு–
தன்னோடு ஒத்த பருவத்தை யுடையரான இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் மேலானவனை –
மாறென்று சொல்லி வணங்கினேன்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே
என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி
எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன்  –

———————————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் -அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறது
ஆபத்து ஒரு தலையானால் -பிராட்டிமார்களோடு -அபிமானிகளோடு வாசி யறத் தானே போக்கும் என்கிறார் –
இத்தால் எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் –
அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் –
தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது-

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
வீடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலைவாய் நிறைய–பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக்கையாலே
கீறியெடுத்து அளித்த்–ஒண் குருதி
அழகிய ரத்தத்தாலே–கண்ட பொருள்
அக் கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை –
எருதுகள் ஏழையும் வேற்று முடித்த ஸ்வாமி யானவன் –

எரி உருவத்து ஏறேறி –
அக்னி வர்ணனுமாய் -ரிஷப வாகனனுமான ருத்ரன் –

ஏறேறி –
கைக் கொள் ஆண்டிகளைப் போலே

பட்ட விடு சாபம் –
முற்பாடு செய்வான் என்று அனுமதி பண்ணி இருந்த ப்ரஹ்மா-அறுத்த அநந்தரம்-
நீ பதகியாவாய்  -கபாலம் உன் கை விட்டுப் போகாது ஒழிவது-என்று சபித்தான் –

இடு சாபம் –
கபாலீத்வம் பவிஷ்யசி -மாத்ச்ய -182- -என்று இட்ட சாபத்தை –
இவன் உத்கர்ஷம் பொறாமை -ப்ரஹ்மா தலையை அறுக்கச் சொல்லி வைத்துப் பழி இட்டான் –

பாறேறி யுண்ட –
கழுகும் பருந்தும் பாறும் என்று கொண்டு சில பஷி விசேஷம் ஆய்த்து-
இவை மேல் விழுந்து புசியா நின்றுள்ள-கழுகும் பருந்தும் பாறுமுகத் திரிந்தபடி –

தலை வாய் நிறையக் –
தலையிடமாவது நிறையும்படிக்கு ஈடாக –

கோட்டங்கை-
கோடின கையாலே -சிராங்கித்த கையாலே –

யொண் குருதி கண்ட பொருள் சொல்லில் கதை–
அது நிறைந்து இவன் கையினின்றும் விட்டுப் போம்படிக்கு ஈடாக தன் திருமாபில்
வாச நீரை வாங்கி அதிலே தெறித்தான் ஆய்த்து-

ஒண் குருதி
அழகிய குருதி -குங்குமத்தோடு கூடின ஒப்பு –

அங்கை –
பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கையாலே

ஒண் குருதி –
தஸ்ய ரக்தச்ய நிஸ்ருதா -மாத்ச்ய -182-என்று
திரு மேனியில் ரத்தத்தை வாங்கித் தெறித்தான் என்றும் சொல்லுவர் –
ஒப்பானாலோ என்னில் 
அத்தோடு இத்தோடு வாசி இல்லை -ஒப்பு இல்லாதவனுக்கு வரும் ஒப்பாகையாலே –

கண்ட பொருள் சொல்லில் –
அர்த்த ஸ்திதி இருந்தபடி சொல்லப் பார்க்கில்

கதை –
அது ஒரு மகா பாரதம் -ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா –

இவ்விடத்தில் நம் பிள்ளை அருளிச் செய்வதோர் வார்த்தை யுண்டு -அதாகிறது
நஞ்சீயர் ஒரு நாள் என்கையிலே மாம் பழத்தைத்  தந்து -இத்தைக் கொடு போய்
நம்பி திரு வழுதி நாடு தாசர்க்கு கொடுத்து வாரும் -என்று போக விட –
அப்போது இப்பாட்டு நம்பி பணியா நிற்க கேட்ட வார்த்தை –
ஏழு கோக்களை வதித்தவன் பிராயச் சித்தியாய் ஒருவன் வாசலிலே நின்றான் என்னக் கேட்டிலோம்-
ஒருவன் பிராணன் உடன் இருந்தவன் தலையை அறுத்து -அத்தாலே பாதகியாத் திரிய –
அவனுடைய ப்ரஹ்ம ஹத்யையும்  தன்னுடைய ஸ்பர்சத்தாலே போக்கினான் இவன் –
இது இறே இவனுக்கும் அவர்களுக்கும் யுண்டான நெடு வாசி இருக்கிறபடி -என்றார்
தலையை அறுத்துப் பாதகியான அவனோ ஈஸ்வரன் –
சாபத்தைப் போக்கினவனோ –
தலை அறுப்புண்டு சோச்யன் ஆனவனோ பார்த்துக் கொள்ளும் அத்தனை –

——————————————————————————————-

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ணபிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரு பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏலத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பருமொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே-
இதிஹாச புராணங்களில் நின்று பார்க்கச் சொல்லிற்றானது 
சர்வ ஸூ லபனான உன்னுடைய  குண சேஷ்டிதங்களுக்கு  வாசகமான திரு நாமங்களே –

இதையம் இருந்தவையே ஏத்தில்-
அப்பரப்பு எல்லாம் கொண்டு அன்றியே -அதில் தாத்பர்யம் அறிந்து கொண்டு ஸ்துதிக்கில்-
அன்றிக்கே –
இதிஹாச புராணங்கள் யுடைய ஹ்ருதயம் இருந்தபடி சொல்லில் –
அவற்றில் நிர்ணீதமான அர்த்தம்  உன்னுடைய திரு நாமத்தைச் சொல்லுகை -என்றுமாம் –

கதையின் பெரும் பொருள் என்றார் இப்போது –
முன்பு ஒத்தின் பொருள் முடிவு –39-என்றார் –
கதையின் திருமொழி யாய் நின்ற திருமாலே –
உபநிஷத் சித்தமான ஏதேனுமாக ஒரு வித்யா விசேஷங்களில் யுண்டான சப்தங்கள்
ஸ்ரீ யப்பதிக்கு வாசகமாயாய்த்து இருப்பது –
அர்த்தத்துக்கு போதகமான சப்தம் -அவனையும் அவளையும் காட்டக் கடவதாய் இருக்கும் –
அர்த்தம் அவனே சப்தம் இவளே யாய்த்து இருப்பது
அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-18-என்னக் கடவது இறே

உன்னைப்-
இதிஹாச புராணங்களாலே பிரதிபாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள உன்னை

உன்னைப் பருமொழியால் காணப் பணி-
இப்படிப்பட்ட சப்த த்வாரா உன்னைக் காண்கை அன்றிக்கே –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத் -என்கிறபடியே
பெரு மிடறு செய்து கொடு காணும் படியாக பார்த்து அருள வேணும் –

உன்னைக் கண்டு ஹ்ருஷ்டனாய் ஏத்தப் பண்ணி அனவாபதியான சொல்லால் அன்றிக்கே –
குறைவற்ற சொல்லாலே ஏத்தி அனுபவிக்கப் பண்ணி அருள வேணும் –
கண்டு பேசும் போது இறே சப்தம் குறைவறப் பேசலாவது-
தேவரீருடைய பிரசாதத்தாலே லப்தமான திவ்ய சஷூஸ் ஸாலே
ஸ்பஷ்டமாய்க் காணும்படி பார்த்து அருள வேணும் -என்கிறார் –
கதையின் திரு மொழியாய் நின்ற என்கிற இடத்திலும்
கதை என்று இதிஹாசாதிகளைச் சொல்லிற்று ஆகவுமாம் –

—————————————————————————————–

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் –
பெற்ற அம்சம் உன் பக்கல் ருசி -என்கிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திருமெனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி
ஆங்கே இருந்து ஏத்திவாழும் இது துணிந்தேன்–அவ் விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்யவஸாயங்கொண்டேன்.

பணிந்தேன் திரு மேனி –
ஸ்வரூப குணங்களில் காட்டிலும் திரு மேனி என்றால் போர விரும்பி யாய்த்து இவர்கள் இருப்பது –
உன் திருமேனியைக் கண்டு விழுந்தேன் –

பணிந்தேன் –
அழகை அனுசந்தித்து -த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் -யுத்த 36-11-

திருமேனி –
நிர்விசேஷ சின்மாத்ரம் என்றாப் போலே சிலவற்றை உத்தேச்யமாக நினையாதே
திரு மேனியே ப்ராப்யம் என்று இருக்கப் பெற்றேன் –
திரு மேனி கண்டேன் -பொன் மேனி கண்டேன் என்னும் சொல்லை
சேஷ பூதர் ஆகையாலே பணிந்தேன் -என்கிறார்

பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் –
கைகளாலே செவ்வித் தாமரைகளைக் கொண்டு ஸ்நேஹத்தை யுடையனாய்க் கொண்டு
உன்னுடைய சிவந்த திருவடிகளிலே  இவற்றை இட்டு ஆஸ்ரயித்தேன் –

கையால் –
அது படைத்த பிரயோஜனம் பெற்றேன் –

அணிந்தேன் –
ஜெயித்தார்க்கு அடிமை செய்கை ப்ராப்தம் இறே-

அன்பாய்த் துணிந்தேன்-
ஞான கார்யம் அல்ல -அபி நிவேசத்தாலே துணிந்தேன் –

புரிந்து ஏத்தி -யுன்னைப் –
எழுந்து அருளா நின்றால் முன்பே சேவித்துப் புரிந்து உன்னைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணி –

புகலிடம் பார்த்து –
புக்கு அருளும் இடத்தே பின்பைக் கண்டு

ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது-
பின்னைப் போக மாட்டாதே உன் அன்பைக் கண்டு –
அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸ்ம்ருதி மாறாதே இங்கனே செல்ல வேணும்
என்று கொண்டு ஏத்தி அனுபவிக்கும் அதிலே துணிந்தேன் -வ்யவசிதன் ஆனேன் –

அங்கன் அன்றிக்கே –
திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு –
அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –
புகலிடம் என்கிறது –
அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே 
அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் –
சாயா வா சத்வம் அநு கச்சேத்-பரம சம்ஹிதை -என்று
அங்கு அடிமை செய்யும் படிகளை மநோ  ரதித்து இருப்பன் -என்றுமாம் –

—————————————————————————

பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும்
அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் –

ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி –
சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை-
ஏத்துகையிலே துணிகையே யன்று-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது-
சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடு ஒரு மிடரான நெஞ்சே –
நாம் முன்பு அனுசந்தித்து இருக்கும் ஆகாரம் ஒழிய சர்வேஸ்வரன் இப்போது காட்டின இதுவே கிடாய் இதுக்கு ஸ்வரூபம் –
சம்சாரம் ஆகிறது துக்க ரூபமாய் இருக்கை கிடாய் –
இத்தைக் கனக்க நினைத்து இருந்தது எல்லாம் நம்முடைய ப்ரமம் கிடாய் –
பகவத் பிரசாதம் யுடையார்க்கு இறே பிரத்யஷிக்கிற தோஷமும் தோஷமாய்த் தோற்றுவது-
தன்னைக் காட்டினவோபாதி இது தன்னையும் தானே காட்ட வேணும் –

இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது –
பகவத் அனுபவத்தில் வந்தால் எல்லா ஸூகங்களும் யுண்டாய் இருக்குமாப் போலே யாய்த்து –
இதில் எல்லா துக்கங்களும் யுண்டாய் இருக்கும் படி –
நெடும் காலம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே எல்லா துக்கமும் பட்டது இது கிடாய் –
பரமபதத்திலே எம்பெருமானாலே எல்லா ஸூகமும் யுண்டாமாப் போலே இதுவும் –
அபூத பூர்வம் மம பாவி கிம் வா சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம் -ஸ்தோத்ர ரத்னம் -25-
தரமி லோபம் பிறந்தது இல்லை –
அங்குத்தைக்கு அசாதாரணமாய் இருக்கச் செய்தே நாம் அனுபவித்ததை எல்லாம் கண்டாய் இறே –

இது கண்டாய் நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக் காரணமும் –
வகுத்த சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களைச் சொல்லுகைக்கும் –
நரக பிரவேசம் பண்ணாமைக்கும் 
நான் கீழ்ச் சொன்ன
இவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணும் இதுவே கிடாய் –
எம்பெருமான் தன்னையும் பற்றுவித்து புறம்பையும் விடுவிக்குமா போலே –
இத் தோஷ தர்சனமும் தன்னையும் விடுவித்து எம்பெருமானையும் பற்றுவிக்கும் –

வல்லையேல் காண்-
விழித்து இருக்கச் செய்தே சிலர் பதார்த்த க்ரஹணம் பண்ண மாட்டார்கள் ஆய்த்து –
இப்படியே தன்னை யறியா நிற்கச் செய்தேயும் 
தோஷம் நெஞ்சிலே படாத படி பண்ணும் யாய்த்து இவ்விஷயங்கள் தான்
ஆன பின்பு இவற்றைத் தப்பாதபடி வருந்தி இத்தைக் காணப் பார் –
அனுபவியா நிற்கச் செய்தே  விடப் போகாது ஒழிகிறது பாபம் இறே –
ப்ரத்யஷம் அகிஞ்சித் கரமாம் விஷயம் இறே –

நன்று என்றால் ருசி பிறக்கிறவோபாதி
தீது என்றால் அருசி பிறக்க வேண்டாவோ –

அத்தலை சாத்யம் அல்லாமையாலும்
சம்சாரத்துக்கு அடி இதில் ருசி ஆகையாலும்
இவனுக்கு வேண்டும் அம்சம் இதுவே என்று கருத்து
மன ஏவ  மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அவன் உளனாய் இருக்க –
அநிஷ்டத்திலே இவன் இஷ்டம் பண்ண
அத்தைத் தவிர்த்து சாஷாதிஷ்டம் தருவானாய் நின்றான் –

நம்மாழ்வார் இமையோர் தலைவனான படியை முந்துறக் கண்டார்
அதுக்கு எதிர்தட்டான பொய் நின்ற ஞானம் தொடக்கமான வற்றை-
பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்  விடுவிக்க வேணும் -என்கிறார் –

————————————————————————————-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக்கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறுகிளை கிளர்ந்து வரக்கூறிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் வடிவு–67 –என்றும் பாடமாம்

கண்டேன் திருமேனி –
எம்பெருமானுடைய அழகிய திரு மேனியைக் காணப் பெற்றேன் –
ஆழ்வார்கள் பஷத்தால் குணாதிகள் ஆநு ஷங்கிதம்-தன்னடையே வருவது

யான் கனவில் –
இந்த்ரிய த்வாரா இட்டு நீட்டிக் காண்கை அன்றிக்கே
நெஞ்சாலே  அவ்யவதாநேந காணப் பெற்றேன் –
ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம் பிரசரிக்கைக்கு ஆனைத்தாளான மனச்ச்சாலே பிற்பட்டு
பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே –
ஸ்வப்ன தீ கம்யம் -மனு ஸ்ம்ருதி -12-122-என்னும்படியே
நெஞ்சில் பார்க்க அழகிதாக அனுசந்திக்கலாகை –
ஸ்வப்ன கல்பமாய் அதிலும் விசத தமமாய் பிரத்யஷியா நின்றால்
விலஷணமுமாய்  இருக்கையாலே மீளாது இருக்கை-

ஆங்கு அவன் கைக்-
அப்படிப்பட்ட அழகுடைய அவன் திருக் கையிலே

கண்டேன் கனலும் சுடர் ஆழி –
பிரதிபஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள திரு வாழியைக் கண்டேன் –
அபாதிதமாகக் கண்டேன் –

கண்டேன் உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும் மறு நோய் செறுவான் வலி-
நித்தியமான ஆத்ம வஸ்துவைத் தொற்றிக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களைப் போக்குவித்துப்
பின்னையும் மறுவலிட்டு வாராதபடிக்கு ஈடாகப் போக்கும் மிடுக்கை யுடையவனைக் கண்டு கொண்டேன் –
மறுவலிடும் வாசனை என்னுதல்-

வலி கண்டேன் –
சேதனன் ஆகையாலே இரண்டு இடத்திலும் இவனுக்கு ஸ்வபாவ ஜ்ஞானமே வேண்டுவது –
அஞ்சுகைக்கும் அச்சம் கெடுக்கைக்கும்-

————————————————————————————–

பிரயோஜ  நாந்தர பரரே யாகிலும் தன் பக்கலிலே வந்து அர்த்தித்தால் பொறுக்க   மாட்டாமை -ஆளிட்டு அந்தி தொழாதே
உடம்பு நோவத் தான் ஆயாசித்தே யாகிலும் அவர்களுக்கு கார்யம் செய்து  கொடுக்குமவன் -என்கிறார் –

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச்சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது –

இத்தால்
நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் –
அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது –
தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை –
அவன் பக்கல் தட்டில்லை –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலிமிக்க–மஹாபலசாலிகளாய்
வாள் எயிறு–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட்படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள்வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மதயானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள-
பலத்தாலே மிக்கு இருப்பாராய்-ஒளியை யுடைத்தான எயிறுகளையும் யுடையராய் –
தாங்கள் சாயுதருமாய் இருப்பாருமான ஆசூரப் பிரகிருதிகள் முடியும்படிக்கு ஈடாக –
அசுரர் பலம்  நசிக்கவும் -தேவர்களுக்கு பலம் யுண்டாகவும் –

வலிமிக்க வாள் வரை மத்தாக –
ஒரு சர்வ சக்தி நின்று நெருக்கிக் கடையா நின்றால் தான் பிதிர்ந்து போகாத படி பலமே மிக்கு –
ஒளியை யுடைத்தான மந்த்ரம் மத்தாக –
மிடுக்கையும் யுண்டாக்கி மத்தாகக் கொண்டு

வலி மிக வாணாகம் சுற்றி –
இசித்துக்  கடையா நின்றால் அறாத படியான பலத்தையும் –
மலையோடு தேய்ப்புண்கையாலே  வந்த புகரையும் யுடைத்தான வாசூகியைச் சுற்றி –
நாற்கால் கடைந்தால் இற்றுப் போகாதபடி மிடுக்கைக் கொடுத்து –

மறுகக் கடல் கடைந்தான்-
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படிக்கு ஈடாகக் கடைந்தான்-
தாழியில் தயிர் பட்டது பட்டது –
அவன் தான் யார் என்னில் –

கோணாகம் கொம்பொசித்த கோ –
நம் வேர்ப் பற்றிலே நலிய நினைத்து வந்த மிடுக்கை யுடைய
குவலயா பீடத்தின் யுடைய கொம்பைச் சலித்த சேஷீ-
தன்னுடைய விரோதியைப் போக்கி எழுதிக் கொண்ட படி யாதல் –
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான் -என்னுதல் –

இச் செயலாலே எல்லாரையும் எழுதிக் கொண்டவன் –
இப்படிப்பட்ட அவன் கிடீர் கடல் கடைந்தான் –

———————————————————————————–

அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ-
நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன்
திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்-

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூமண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பலபல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

கோவாகி –
இதுக்கு அடங்க நிர்வாஹகராய் -ஒரு ஈஸ்வரனுக்கு யுண்டான அபிமானம் அத்தனையும் போருமாய்த்து –
அவனுடைய ஐஸ்வர்யத்தை அனுகரிக்கிறவர்கள் இறே-
உபய விபூதி யுக்தனுக்கு போலியாக பௌண்டரகாதி களைப் போலே –
தேவேந்த்ரஸ் த்ரிபுவனம்-அர்த்தமேக பிங்க -சர்வர்த்திதம் த்ரிபுவனகாம் ச கார்த்த வீர்ய –
வைதேக பரம பதம் பிரசாதய விஷ்ணும் சம்ப்ராப்த சகல பல ப்ரதோஹி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-47-

மாநிலம் காத்து-
பரப்பை யுடைத்தான பூமியை நோக்கி –

நம் கண் முகப்பே மாவேகிச செல்கின்ற மன்னவரும் –
நம் கண் வட்டத்திலே காணக் காண ஆனை குதிரை தொடக்க மானவற்றை ஏறி நடத்துகிற ராஜாக்களும் –

பூ வேகும் செங்கமல நாபியான் சேவடிக்கே –
பூக்கள் தள்ளுண்ணும் படியான செவ்வியை யுடைய கமலத்தை நாபியாக உடையவனுடைய சிவந்த திருவடிகளிலே

பூ மேவும் -என்ற பாடமாய்த்தால்
போக்யதை பொருந்தி இருக்கிற படி யாகிறது –

ஏகும் என்ற போதைக்கு
ஒருக்காலும் செவ்வி மாறாத படியான பூவுக்கு –
அனந்தர ஷணத்திலே செவ்வி மாறும்படியான பூக்கள் நேர் நிற்க மாட்டா விறே –

ஏழ பிறப்பும் தண் கமலம் ஏய்ந்தார் தமர் –
ஜன்மங்கள் தோறும் அவன் திருவடிகளிலே குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு  ஏய்ந்தாரான தமர் -என்னுதல்
ஏய்ந்தார் யுடைய  தமர் கிடீர் -என்னுதல் –

இப்படி யாஸ்ரயித்த சேஷபூதர் கிடீர்
மா வேகிச் செல்கின்ற மன்னவராகிறார் –

————————————————————————————————————

இப்படி இருக்கிறவர்கள் தன்னை அனுகூலித்த அன்று
அவர்களுடைய ஹ்ருதயங்களுக்கும் உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும்
ஒரு வாசி வைத்து பரிமாறான் அவன் என்கிறார் –

அன்றிக்கே –
தனக்கு நல்லவர்களுக்காக அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –
ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது

ஆக –
அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும்
ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு  ராஜ்யத்தைக் கொடுக்கும் –
தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது-

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

தமருள்ளும் –
இதில் முற்பட்டது ஆஸ்ரிதருடைய ஹ்ருதயம் ஆகையாலே உத்தேச்யம் இது –
இத்தால்
அவ்வோ இடங்கள் போலும் அன்றிக்கே இவர்கள் ஹ்ருதயங்க ளிலே ஒரு வாசி தோற்றப் பரிமாறும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் யுடைய ஹ்ருதயங்கள் –

தஞ்சை –
தஞ்சை மா மணிக் கோயில் –

தலை யரங்கம் –
திருப்பதிகளில் பிரதானமாய் -பரமபதத்தோடே ஒக்க எண்ணலாம் படியான பெரிய கோயில் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை -அரங்கமேய அந்தணனை -திரு நெடும் தாண்டகம் -14- என்றும்
கட்கிலீ திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -திருவாய் -7-2-3-என்றும் சொல்லக் கடவது இறே-

தண் கால்-
திருத் தண் கால் ஆகிறது திரு மங்கை ஆழ்வார் யுடைய வால்லப்யத்தை -வலிமையை -அழித்த இடம் இறே –
தண்கால் திறல் வலியை -பெரிய திரு மடல் -என்றார் இறே –

தமருள்ளும் தண் பொருப்பு –
நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது -திருவாய்-9-3-8-என்று
தங்களுக்கு வைப்பாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வ ஸ்வமான தேசம் இறே –

வேலை –
எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் —
ப்ரஹ்மாதிகளுக்கே யாய் இருக்கையாலே விசேஷணம் இட்டிலர்-

தமருள்ளும் மா மல்லை –
ஆஸ்ரிதனுக்காகத் தரைக்கிடை கிடக்கிற திருக் கடல் மலை –

கோவல் –
திருக் கோவலூர் -மூன்று ஆழ்வார்களையும் நெருக்கின இடம் –
தங்கள் நெருக்கு உகந்த இடம் இறே –

மதிள் குடந்தை –
அரணை யுடைத்தான திருக் குடந்தை -திரு மழிசைப் பிரான் உகந்த இடம்  –

என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் –
இவற்றை எல்லாம் பிரதிபஷத்தைப் பக்க வேரோடு வாங்கிப் பொகட வல்ல என் ஸ்வாமி யான
தசரதாத் மஜனுக்கு  வாஸ ஸ்தானம் என்னா நின்றார்கள் –
மிடுக்காலே பிரதிகூலரை அழியச் செய்தவன் –
அனுகூலரை எழுதிக் கொண்ட இடங்கள் –
இப்படி சக்திமானாய் இருக்கிறவன் இவர்களை அனுகூலித்து மீட்கைக்காக வந்து இருக்கிற தேசங்கள் இவை –

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: