ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -31-40– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அவனுடைய அப்ராக்ருதமான திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர் -என்கிறார்-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து————31-

பிரான் என்றும்
இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷி -உபகாரகன் -என்றும்
தன்னையே வணங்கும்படி பண்ணினவன் -உணரும் போதே -என் நாயகன் செய்த படி என்-என்று உணருகை –
நாளும் பெரும் புலரி என்றும்-
மலட்டு சம்சாரத்திலே பாழே போக்குகிற காலத்திலே-பகவத் அனுபவத்துக்கு ஈடாய் இருப்பதொரு நாள் யுண்டாவதே-இது ஒரு நல் விடிவு இருக்கும் படியே –
அத்ய மே சபலம் ஜன்ம ஸூ ப்ரபாதா ச மே நிசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-என்கிறபடியே ஆதரித்துக் கொண்டு –
பிரான் என்றும் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் –திருவாய் -1-7-6-
பெரும் புலரி –
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் -திருப்பல்லாண்டு -12
பெரும் புலரி –
ஷூ த்ர ஜந்துக்களை  நினைத்துக் கழிக்கிற எனக்கு சர்வேஸ்வரனை நினைக்க ஒரு காலம் விடிவதே -என்று
வணங்குகைக்கு ஈடான  காலத்தைக் கொண்டாடுகிறார் –
குரா நற் செழும் போது கொண்டு –
இவன் இடுவது எல்லாம் பூவாம் படி தன்னை யமைத்துக் கொண்டு சந்நிஹிதனானவன் திருவடிகளிலே
அங்கு யுண்டான புஷ்பங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர் –
குரா நற் செழும் போது-
குராவினுடைய நன்றாய் செவ்வியை  யுடைத்தான பூவைக் கொண்டு -காட்டிலே வாழ்வார்க்குக் காட்டில் பூ வமையும் இ றே-
வராகத் தணி யுருவன் பாதம் –
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே காட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –
அணி யுருவன்
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இ றே –
பணியுமவர் கண்டீர்-
ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் –ஸ்ரீ கீதை -9-2-என்னும்படியே சாதனா தசையிலே இனிதாய் இருக்கும் படி –
பலத்துக்குப் பலம் இ றே –
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து-
அவர்கள் நீல ரத்னம் போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை மகிழ்ந்து காணப் பெறலாம்

————————————————————————–

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

மகிழ்ந்தது சிந்தை-
இதுக்கு முன்பு ப்ரீதி புதியது உண்டு அறியாத மனசானது -அவனை அனுசந்தித்து மகிழப் பெற்றது –
இத்தால் எனக்கு அங்குப் போய் மகிழ வேண்டா -என்கிறார் –
திருமாலே-
மகிழப் பண்ணின விஷயம் இருக்கிறபடி –ஆனந்தாவஹமாய் இ றே ஸ்ரீ யபதித்வம் இருப்பது –
மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி
மற்றை அவயவங்கள் –அனந்தரம் -வாக் இந்த்ரியமானது உன் திருவடிகளை ஏத்தி மகிழப் பெற்றது –
திருமாலே -என்றத்தை மேலோடு கூட்டி ஸ்ரீ யபதியான உன்னுடைய திருவடிகளையே போற்றி மகிழப் பெற்றது –
மகிழ்ந்தது அழலாழி சங்கமவை பாடியாடும்தொழிலாகும் சூழ்ந்து துணிந்து-—–
பிரதிபஷத்தின்  மேலே அழன்று அக்னியை உமிழா நின்றுள்ள திருவாழி பாஞ்ச ஜன்யம் ஆகிற அவற்றைப் பாடி யாடுகை யாகிற
தொழிலாலே வ்யாப்தமான தேஹமானது துணிந்து மகிழ்ந்தது –
சூழ்ந்த ஆகமானது அத்யவசித்துக் கொண்டு உகக்கப் பெற்றது
சூழ்ந்து துணிந்து சிந்தை மகிழ்ந்தது -சூழ்ந்து துணிந்து மற்றும் மகிழ்ந்தது -என்று அந்வயிப்பது-நின் பாதம் போற்றி என்றது எங்கும் அந்வயிக்க வுமாம் –

————————————————————————–

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது –

 

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கமணிந்தவன் பேருள்ளத்துப் –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருத னானவன்-திரு நாமத்தை அனுசந்திக்கையிலே துணிந்தது ஹ்ருதயமானது -என்னுதல்-
உள்ளம் என்று லஷணையால்-அனுசந்தானத்தைச் சொல்லுகிறது –
அன்றிக்கே -உள்ளத்து சிந்தனையானது -ஹ்ருதயத்திலே மநோ ரதமானது-துழாய்  அலங்கல் அங்கம் அணிந்தவன் பேர் துணிந்தது -என்னுதல் –
துழாய் அலங்கல் அங்கம் –
துணிவித்துக் கொண்ட பரிகரம்-
அங்கம் அலங்கல் –
இனி அங்கமானது சரீரமானது எப்போதும் –
பலகால் -பணிந்ததுவும் வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே-
வேய்களாலே பிறங்கு கிற  -மிக்கு இருந்துள்ள சாரலுண்டு -பர்யந்தங்கள்-அவற்றை யுடைய திரு மலையிலே வர்த்திப்பானாய்
தன் அழகாலே  நம்மை ஈர்த்துக் கொண்டுள்ள திரு வேங்கடமுடையானையே –
வாய் திறங்கள் சொல்லும் வகை துணிந்தது –
என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனுடைய திறங்களைத் துணிந்தது -அவனிடை யாட்டங்களைச் சொல்லும் பிரகாரத்திலே துணிந்தது –
வேங்கடவனையே –
நம்மை யல்லது அறியாது இருக்கிற அவனை அல்லது துணியாது –
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் அணிந்தவன் பேர் உள்ளத்து –
அங்கம் பலகால் பணிந்ததுவும் வேய் பிறங்கு சாரல் வேங்கடவனையே –
அவன் திறங்களை வாய் சொல்லும் வகை துணிந்தது என்று அநவயம்-

————————————————————————–

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

சௌந்தர்யத்துக்கு தோற்று  அடிமைப் படும்படி நீ என் முன்னே க்ருஷீ பண்ணினாய்  –
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்-
ஆசூரப் பிரக்ருதியானவன் யாதொரு பிரகாரத்தினால்  இரங்கிக் கொடுக்கும் –அந்தப் பிரகாரத்தாலே பண்டே பூமியை இரந்து அளந்து கொண்ட உன்னுடைய திருவடிகளை –
வகையால் –
ராவணனோ பாதி வத்யனாய் இருக்க  மஹா பலியானவனை அழியச் செய்யாதே
அவன் பக்கலிலே ஔதார்யம் கிடக்கையாலே பாம்பும் சாவாமே கோலும் முறியாமே அவனும் தன்னது என்று தர வுகக்குமாகில் தருவான் –
நாமும் நமக்கு இல்லாதது ஓன்று பெற்றோம் ஆனால் ஆகாதோ –
பூமியை இரந்து கொள்வோம் –
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே விரகு பார்த்த படி –
இரந்து அளந்தாய் –
அன்புக்கு ஏற்கவே கிருஷி பண்ணின படி –
முன்னே வகையால் அவனி இரந்து அளந்தாய் -என்று அநவயம் –
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு-
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -மிகவும் செறிந்த ச்நேஹத்தை யுடையேனாய்க் கொண்டு
சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இதுக்கு அடி என் என்னில் –
ன் பாக்கியத்தால் இனி–
தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் –என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –

————————————————————————–

அப்படித் தானே வந்து -அர்த்தியாய் -மேல் விழுகிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களிலே
சங்கத்தைப் பண்ணி -துக்கானுபவம் பண்ணாதே
அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும் ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் –
இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்-

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது————–35-

இனிது என்பர் காமம்-
நாட்டார் காமத்தை இனிதாகச் சொல்லா நின்றார்கள்
அது தானும் இவர் தேசிகர் வாயிலே கேட்டு அறியும் அத்தனை –
இனிது என்பர் என்றபடியாலே தமக்கு இதில் அந்வயம் இன்றிக்கே இருந்தபடி –
காம தந்த்ரம் போமவர்கள் சொல்லும் அத்தனை -என்றபடி -சோதரர் தாங்கள் தின்னுமவற்றை இனிது என்னுமா போலே –
அதனிலு மாற்ற இனிது என்பர் தண்ணீரும் –
அதில் காட்டிலும் இனிதாகச் சொல்லா நின்றார்கள் தண்ணீரை -அதாகிறது காம ரசத்தில் காமராய்ப் போந்தவர்களும் ஜலம் கொண்டு இ றே பிராண தாரணம் பண்ணுவது –
அந்நாதிகள் பேதித்தாலும் பேதியாதே பொதுவாய் இருக்குமது இ றே இது
ஆப ஏவ ஹி ஸூ மனச-என்னும்படியே விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அறத் தண்ணீரில் வந்தால் பாகம்  ஸூ மனஸ் ஸூ க்களாய் இருப்பார்கள் –
அதுவும் இவர்க்கு வேண்டா -விஷய ப்ரவணர் காமத்தை இனிது என்னா நிற்பர்கள்-
சரீர போஷண பரர தண்ணீரை நன்று என்னா நிற்பர்கள்
இவர்க்கு இரண்டிலும் அந்வயம் இல்லை –
இவர் நின்ற இடம் அவர்களால் அறிய ஒண்ணாதாப் போலே இ றே அவர்கள் நின்ற நிலை இவர்க்கு அறிய ஒண்ணாது இருக்கும் படி
என்பர் –
இவர் இந்த நாட்டிலும் இல்லையே
எந்தாய் –
இவருடைய காமமும் தண்ணீரும் இருக்கும் படி -எல்லாம் ஒன்றேயான விஷயமாய்த்து இவர்க்கு –
வாஸூதேசஸ் சர்வம் -இதி ச மஹாத்மா -ஸ்ரீ கீதை -7-19-
உண்ணும் சோறு பருகும்  நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -7-1-1-
இனிது என்று-
அதஸ்மின் தத் புத்தி பண்ணி தண்ணீர் என்று அக்னியிலே ஒதுங்கி ஸ்ரமமார நினைப்பாரைப் போலே
பாக்ய ஹானியடியாக இ றே சப்தாதி விஷயங்களிலே ருசி பிறப்பது –
காம நீர் வேளாது-
ஸ்வத இனிமை இன்றிக்கே இருக்க போகய புத்தி பண்ணி காமத்தையும் தண்ணீரையும் ஆசைப் படாதே
நின் பெருமை வேட்பரேல்-
உன்னுடைய குணங்களை ஆசைபடுவர்கள் ஆகில்
இது தான் பரிச்சின்ன போகமுமாய் -தான் அனர்த்தாவஹமுமாய் இருக்கையாலே இங்கு இருக்கும் நாளைக்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும்
அங்கன் அன்றிக்கே -ஸ்மர்தவ்ய விஷயத்தின் யுடைய ரச்யதையாலே சாதன தசையே தொடங்கி ரசிப்பதை
இனி பிராப்தி சமயத்திலே வந்தால் அபரிமித போக்யமாய்க் கொண்டு இவனால் உண்டு அறுக்க ஒண்ணாத படி
எஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த வல்லி -7-யென்னும்படியாய் இருக்கும் –
நின் பெருமை வேட்பரேல்-
தவிர ஒண்ணா தாகில் அனுபவம் என்னாகிலும் செய்ய அன்றோ வடுப்பது -அப்படிச் செய்கை அன்றிக்கே –
சிறிது நின் பெருமை வேட்பரேல்-
அதில் பரப்பு எல்லாம் ஆசைப்பட வேண்டாம்
அவன் நல்ல வளவை அனுசந்திக்கவே என்றும் ஒக்க ரஷகமாய் இருக்கும்
கீழில் அவை போலே ஒரு கை கால் முறியச் சென்று விழ வேண்டா -இதுக்கு மித்ர பாவம் அமையும் –
சேம நீர் ஆகும் —
அது தான் ரஷகமான ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கும் –
ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-3-என்று இருக்கும் இவ்விஷயத்தில் ப்ராதிகூல நிவ்ருத்தி ரஷையாம்
மற்றைய விஷயத்தில் ஆனுகூல்யமும் விநாசம்
சப்தாதி விஷயங்களில் அபி நிவேசம் மிக்காலும் -புத்தி நாசாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -6-3-என்னப்  பண்ணும் –
பகவத் விஷயத்தில் போலியான ஆசை யுன்டாகில் -அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-3- என்று இருக்கும்
கௌந்தேய பிரதிஜாநீஹி  ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31–என்று
அர்ஜுனா நீ இவ்வர்த்தத்துக்கு பிரதிஜ்ஞை பண்ணு –
தோற்று ஓடிப் போகும் ருத்ராதிகளையோ பற்றுகிறது -எதிரி கையிலே ஆஸ்ரிதனைக் காட்டிக் கொடுத்துப்
போவாரையோ பற்றுகிறது -அவன் மார்பில் அம்பைத் தன மார்விலே ஏற்கும் அவனை யன்றோ பற்றுகிறது –

————————————————————————–

நாட்டார் செய்கிறபடி செய்கிறார்கள் -நெஞ்சே நீ முன்னம் அவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்துக் கொண்டு ஸூகமே இருக்கப் பார் -என்கிறார்
-பூமிப்பார் பூமிக்கிறார்கள்-நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்-
அதி ஷூத்ர ரானர்கள் ஈச்வரோஹம் என்று தங்களைப் பெரியாராக அபிமாநித்தாலும் பின்னையும் அது சிறுமையே யாய்த் தலைக் கட்டும் –
அறியாரும் தாம் அறியார் ஆவர் –
தாங்கள் அஜ்ஞராய் இருக்கச் செய்தேயும் தங்களை சர்வஜ்ஞராக அபிமானித்து இருக்குமது
பின்னையும்  பழைய அஜ்ஞானத்தோடே தலைக் கட்டும் –
அறியாரும் தான் அறியார் ஆவர் –
அவர்களுக்கு நாம் சாதிக்க வேண்டா -தாங்களே சாதித்து வைப்பார்கள்
அறியாமை-இத்யாதி
நாம் இனி அறிவுடையார் போன வலி போவோம்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன -பெரிய திரு -7-4-4-
அதாவது -அவனாலே அவனை அறிந்து -அவனாலே அவனைப் பெற விருக்கை –
அறியாமை –
சர்வேஸ்வரன் செயலைச் செய்தான் என்று தோற்றாத படி –
மண் கொண்டு –
பூமியை அளந்து கொண்டு
மண் உண்டு-
அனந்தரம்  அது தன்னை வயிற்றிலே வைத்து நோக்கி –
மண் உமிழ்ந்த-
பின்னையும்
அது தன்னை வெளி நாடு காணப் புறப்பட உமிழ்ந்து
இத்தால் தானே தன்னைத் தரும்படிக்கும்
சம்சாரப் பிரளயத்தில் நின்றும் எடுக்கும் படிக்கும் உதாஹரணம்
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானை -திருவாய் -1-10-5-
மாயன் என்று-
இவ்வளவே அன்றிக்கே ஆஸ்ரித விஷயங்களில் பண்ணும் ரஷணங்களுக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய சக்தி யுக்தன் -என்றபடி –
எண் கொண்டு-
அனவரதம் அனுசந்தித்து
ச்வீகார மாதரத்தையே பற்றி -என்றுமாம் –
எண் நெஞ்சே இரு
மா ஸூ ச -என்ற அனந்தரம் இருக்குமா போலே நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-
நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் -அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

————————————————————————–

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜன்மங்கள் அடைய வ்யர்த்தம் என்கீறார் –
சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாதாகில் ஜன்மங்கள் வ்யர்த்தங்கள் என் தான் -நம்மை ஆஸ்ரயியாத போது அவை யடங்க வ்யர்த்தமாக வேணுமோ என்னில் -என்னிருந்த படி இதுவன்றோ -என்கிறார்-

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு——————37-

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே-
மிகக் குளிர்த்தியை யுடைத்தாய் திரு நாபீ கமலத்தில் யுண்டான பெரிய மலரினுள்ளே –
இரு மலர் –
ப்ரஹ்மாவுக்கு இருக்கப் பரப்பு போந்து இருக்கை-அன்றிக்கே
இருமை பெருமையாய் பரப்பை யுடைத்தாய் -குளிர்ந்து -இரு மலர் என்று விலஷணமான பூவினுள்ளே -என்றுமாம் –
அன்றிக்கே திரு மலர் என்றாக்கி -அதனுடைய காந்தியைச் சொல்லுற்று ஆகிறது –
திருந்து திசை மகனைத் தந்தாய் –
இவ்வருகு யுண்டான ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் இடத்தில் சர்வேஸ்வரன் அடிக்கடியும் கேட்க வேண்டாதபடி
சாமர்த்தியத்தை யுடைய சதுர்முகனைத் தந்தாய் –
சிருஷ்டிக்க உபக்ரமித்து போய்க் கேட்டு வர  வேண்டாதபடி  யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை –முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -ஸ்வேதா -6-18-சரண்யன் என்றபடி –
தந்தாய் –
சிருஷ்டி நமக்கு உபகாரமாம்படி தமக்கு கார்யங்கள் ஆய்த்ததே –
பொருந்திய நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல்-
புறம்பு உள்ளார் எல்லாம் ஒருவரோடு ஒருவர் பொருந்தி இரார்கள் -எல்லாரும் பொருந்தும்படி இருப்பான் சர்வேஸ்வரனே யாய்த்து –
அவனை என்றும் பொருந்தி இ றே இருப்பது -இத்தலையிலே பணியே தேட்டம் –
இப்படிப்பட்ட அவன் திருவடிகளை ஏத்திப் பணியா வாகில் பல்வகைப் பட்ட ஜன்மங்களும் –
நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல்
உன் நினைவைத் தப்பி உனக்கு உறுப்பாகாதே போமாகில்  -ஸ்ருஷ்டத்வம் வனவாசாய -அயோத்யா -40-5-அடிமை செய்யப் பெற்ற போது எந்நாளும் நாளாகும் -பணியும் அன்று இ றே ஜன்ம பலமாவது-
பல் பிறப்பும்-
கர்ம நிபந்தனமாக பிறக்கும் பிறப்புக்கள் –சென்று சென்றாகிலும் கண்டு -திருவாய் -3-9-10–
ஓன்று அல்லா ஓன்று பலிக்கும் என்று அன்றோ பல சிருஷ்டிகளைப் பண்ணுகிறது
ஏதங்கள் –
ஏதங்கள் -என்கிறது -புருஷ பேதம் தோறும் துக்கங்களும் பேதித்து இ றே இருப்பது –
புருஷர்களுக்கு எல்லாம் யுண்டான துக்கங்கள் எனக்கு ஒருவனுக்கு யுண்டாம் –
பணியாவேல் –
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்னா வாகில் -எமக்கு ஏதங்கள்  -வ்யர்த்தங்கள்-
ஜென்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது உன்னை ஆஸ்ரயிக்கை இ றே –
அதற்குப் புறம்பான பின்பு  அவை யடைய வ்யர்த்தம் என்கிறார் –
யத் முஹூர்த்தம் ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயதே சா ஹாநி தன்மஹச்சித்ரம் சா ப்ராந்திஸ் சா ச விக்ரியா -காருட பூர்வ -222-22-

————————————————————————–

இனி எந்த ஜன்ம பலமாகி யாகிறது -எங்கனே செய்தால் என்னில் பிறர்க்கு ஆனவற்றைத் தனக்காக அபிமானித்து இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும் நாம் கொள்ளும் காரியமும் -என்கிறார்
அர்த்தத்தை புருஷார்த்தம் என்று புத்தி பண்ணி இராதே ஸ்ரீ யபதியை அனுபவிக்குமதுவே எல்லார்க்கும் செய்யப் படுவது -என்கிறார்-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து————-38-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே-
இது ஒழித்து விநியோகம் கொள்ளுவார் இன்னார் என்று அறியாதே இவன் எனக்கு என்று கொண்டு இருக்கும் ஆய்த்து-
இரு நிதியம்  எமக்கு என்று ஏமாந்து இராதே-
பிறர்தான குருவான த்ரவ்யத்தை -தனக்காக அபிமானித்து -அனந்தரம் -பகவத் பஜனம் பண்ணி யமாதிகள் தலையிலே அடி இட்டு
ந பிபேதி குதச்ச ந -தைத் ஆன -9-1- என்று இருப்பாரைப் போலே  நிர்ப்பரராய் இராதே
எமக்கு என்று –
தனக்கும் பிறருக்குமாய் இருப்பதை பற்றுவதே -எம்பெருமானுக்கு என்று இருப்பதைத் தனக்கு என்று இருப்பதே –
இரு நிதியம் –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்ச ந -தைத் ஆனா -9-1–என்கிற விஷயம் கிடக்க
துக்கோத்தரமான கழஞ்சு செம்பை ஆசைப்படுவதே -அது நினைத்த போதே பிடித்து துக்க ரூபம்
இங்கு அதசோ பயங்கதொ பவதி -தை ஆன -6-
தமக்கென்றும் சார்வம் அறிந்து –
எமக்கு என்றும் ஒக்க புகலிடமாய் இருக்கும் என்னும் இடத்தை புத்தி பண்ணு –
நமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து -இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –
நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்தது –
நமக்கு என்றும் தஞ்சம் ஸ்ரீ யபதியே என்னும் மனசை யுடையராய் கொண்டு –
நமக்கு என்றும் அனுபாவ்யன் ஸ்ரீ யபதியே என்னும் நெஞ்சைப் படைத்து –
மாதவன் என்பதோர் அன்பு தனை யுற்று இருந்தேன் -நாச் -12-1-
மாதவன்
பிராப்ய ஸ்வரூபம்
மனம் படைத்து
விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -ஜிதந்தே -அவர்களை இவன் இன்று படைக்க வேண்டா -சித்தம்
மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஓத்து-——
அவன் திரு நாமங்களைச் சொல்லுகையே நாவால் ஓதப்படுவதும் –
அம்மிதுனத்துக்கு வாசக சப்தத்தைச் சொல்லுகையே வாக் இந்த்ரியத்துக்கு ஏற்ற இது
உச்சரிக்கும் மந்த்ரம் வ்யவஸ்திதமாய் இருக்கை
ஹரிரேகஸ் சதாத் யேய -ஹரி வம்சம் -138-8-
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே-திரு நெடும் -4-

————————————————————————–

நாவினால் ஒதுகையாகிறது தான் எங்கனே செய்கை என்னில் -சகல வேத சஙக்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தங்களில் சொல்லுகிற மரியாதை குறையாமல் ஆஸ்ரயிக்க வல்லார் அங்கனே யாஸ்ரயிப்பது –
அது மாட்டாதவர்கள் அப்பரப்பு எல்லாத்தாலுமாக சங்க்ருஹீதமான அர்த்தம்  ஸ்ரீ யபதியானவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே –
ஆனபின்பு அவ்வழியாலே பற்றப் பாருங்கோள்-என்கிறார் –
இந்த்ராதிகளையும் ஆஸ்ரய ணீ யாராக வேதாந்தங்களிலே சொல்லா நின்றனவே -நீரும்  ப்ராமாணிகராய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பதியே சமாஸ்ரயணீயர் என்று
சொல்லுகிற படி எங்கனே என்னில் உங்களுக்கு அபிதா நவ்ருத்தியாய் தாத்பர்ய ஜ்ஞானம் இல்லாமல் சொல்லுகிறி கோள்-
தாத்பர்ய ஜ்ஞானம் யுன்டாகில் அவர்களைச் சொல்லுகிற இது  விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே -என்று இருங்கோள் என்கிறார்  –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
வேதத்தின் யுடைய அர்த்தம் எல்லாத்தாலும் கூட தாத்பர்யமாக நினைத்துத் தலைக் கட்டின அம்சம் –
நான் சொல்லப் புகுகிற இவ்வளவே -வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15–
பொருள் முடிவும் –
பிரயோஜனத்தின் எல்லை –
உத்தமன் பேர் ஏத்தும் திறம்-
வேறு ஒருக்கால் தனக்கும் பாங்கான போ து அவனை அனுசந்திக்கப் -பின்பு இவன்  கலங்கின சமயத்திலும் அவன் தானே தெளிந்து இருந்து இவனை அவ்வருக படுத்த வல்லவன்
திரு நாமங்களை ஸ்தோத்ரம் பண்ணும் பிரகாரம் –
ஸ்திதே மனசி ஸூ ஸ் வஸதே  சரீரே சதி யோ நர தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம்-என்கிறபடியே
இவன் பக்கலிலே ஒரு கால் ஸ்ம்ருதி மாதரம் யுண்டாக பின்னையும் இவனுக்கு ஸ்மரிக்க ஒண்ணாத தசையிலும் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே
உணர்ந்து இருந்து நோக்க வல்லவன் திரு நாமத்தைச் சொல்லுமதுவே –
உத்தமன் பேர் ஏத்தும் திறம்-
எல்லாவற்றுக்கும் பிரகாரியாய் இருந்துள்ள அவனுடைய திரு நாமத்தை ஏத்துகை –
உத்தமன் –
எல்லா இசையும் பன்னுமவன்
உத்தர்த்தும் அர்ஹசி ஹரே புருஷோத்தமோசி-முகுந்த மாலா -34-என்றும்
யோ மாமேவம் அசம்மூடோ ஜா நாதி புருஷோத்தமம்  ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவேன பாரத -ஸ்ரீ கீதை -15-19-என்றபடி
தன்னை ஒழிந்தது அடைய பிரகாரமாக யுடைய பிரகாரி -என்று அறிகை
பேர் –
கீழ்ச் சொன்னபடிக்கு வாசக சப்தம் -அதாகிறது திரு மந்த்ரம் –
அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு
சர்வம் அஷ்டாஷராந்தச்தம் -ஹாரீத ஸ்ம்ருதி -3-45-
ஒமிதீதம் சர்வம் -அகாரோவை சர்வா வாக் –
அறிமின் ஏழைகாள் –
வேறேயும் அறியப் படுவதொரு விஷயம் யுண்டாக  நினைத்து இருக்கிற சபலர்காள்-நீங்கள் இத்தை அறியுங்கோள்-
ஏழைகாள் –
இது உங்களுக்கு உபதேசிக்க வேண்டும்படியாய் இருப்பதே –
வகுத்த விஷயம் குறைவற்று இருக்க பாஹ்ய விஷயங்களிலே பிரவணராய் இருப்பதே –
சப்த மாதரத்தையே புத்தி பண்ணி தாத்பர்ய வ்ருத்தியாலே பர்யவசான வ்ருத்தி அறியாது இருக்கிற அஜ்ஞர் என்றுமாம் –
ஒத்ததனை வல்லீரேல்-
வேதத்தில் சொல்லுகிற மரியாதை குறையாமல் அனுஷ்டிக்க வல்லி  கோளாகில்-
அறிமின் –
அப்படி அறியுங்கோள்-சங்க அத்யயனம் பண்ணி வேதாந்த ஸ்ரவணத்தாலே  தாத்பர்யம் அறிய வல்லி கோளாகில் –
ஏழைகாள் -ஒத்தனை வல்லீரேல் உத்தமன் பேரோதும் திறமான இத்தனையே ஒத்தின் பொருள் முடிவும் -இத்தை புத்தி பண்ணுங்கோள் –
நன்றதனை மாட்டீரேல்-
நன்றாக அதில் சொல்லுகிறபடியே மாட்டி கோளாகில் உப நயனாதி சம்ஸ்காரம் முன்னாக சங்க அத்யயனத்தைப் பண்ணி அதில் அர்த்த ஜ்ஞானத்தை யுடையி கோளாய்
பின்னை அவற்றில் சொல்லுகிறபடியே சாதனங்களை கண்ணழிவற அனுஷ்டித்த அனந்தரம் சாஷாத் கரிக்குமது மாட்டிற்றிலி கோளாகில்
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –
அந்த அப்பரப்பு எல்லாவற்றாலும் கூட சங்ஷேபித்ததாய் யற்ற பொருள் ஸ்ரீ யபதியுடைய திரு நாமத்தைச் சொல்லுகையே –
மாதவன் –
நிரூபக தர்மம் -அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –
பகவத்  பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-
இத்தைச் சுருக்கு என்கையாலே நன்றதனை மாட்டீரேல் -என்ற இடத்திலும் பரப்பு எல்லாவற்றையும் நினைத்துச் சொல்லுகிறது –

————————————————————————–

கீழே வேதாந்தத்தால்   நிச்சயித்ததான அம்சம் இது என்றாரே -இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக் கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் –
அவனை ஒழிந்தது ஒன்றுக்கு ஒரு வஸ்துத்வம் இன்றிக்கே இருந்தது -ஆனபின்பு பற்றப் படுவான் அவனேயாய் இருந்தது –
அதுதானும் ஓரளவிலே வந்தவாறே செய்கிறோம் என்று இராதே கடுகச் செய்யப் பாருங்கோள்  -என்கிறார்-

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்————–40-

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார் நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் –
சுலாவி நின்று -ஐயார் சுருக்காக   வாங்கி வேருக்கா முன் நீர் நினைமுன் –
எங்கும் ஒக்க வியாபித்து இருக்கிற ச்லேஷமானது -பிராண வியோக சமயத்திலே வந்து திரண்டு வலிக்கக் கடவதாய்  இருக்கும் –
அப்போது இவன் அவனை ஸ்மரிக்க ஆசைப்பட ஒண்ணாத படி கரணங்கள் அவிதேயமாய் இருப்பதொரு போதாயும் இருக்கும் இ றே-
ஆனபின்பு அவ் வெளிமைப் படுவதற்கு முன்பே அவனை கடுக்க ஸ்மரித்துக் கொடு நிற்கப் பாருங்கோள்-
சுருக்காக வாங்கி –
பஞ்சவித வாயுவை யுடைத்தான சரீரம் -சுருக்குப்பை போலே ஒன்றாக சுருங்க வலிக்கை –
சுலாவி நின்று –
உடம்பு எங்கும் தானேயாம் படி  வியாபித்து இத்தால் தப்பாமே கொல்லுகை –
ஐயார் நெருக்கா முன் –
ச்லேஷமா வந்து நெருக்குவதற்கு முன்னே –
நீர் நினைமின் –
இத்தைப் புத்தி பண்ணுங்கோள்–செய்கிறோம் எண்ணப் பற்றாது என்கிறார்
மாளுமோர் இடத்திலும்  -வணக்கொடு மாள்வது வளமே -திருவாய் -1-3-8-
உபாசகனுக்கு அந்திம ஸ்ம்ருதி வேணும்
பிரபன்னனுக்கு காஷ்ட பாஷாண சந்நிபனாக வேணும்
இரண்டும் தப்பி நின்றார்க்கு அந்திம தசையில் த்வயத்தின் யுடைய நினைவு பிறத்தல் கீழ்ச் சொன்ன வற்றிலும் நன்று
என் தான் இப்படி அவன் ஒரு கை கால் முறிய ஸ்மரிக்க வேண்டுகிறது என் என்னில் –
திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் –
மறந்து இருக்கலாம் படியோ அவ்வடிவு அழகு இருக்கிறது -என்கிறார்
நெடும் காலம் ஆஸ்ரயிக்கப் பெற்றிலோம் -அதுக்கு மேலே தோஷ பூயிஷ்டர் என்று அஞ்ச வேண்டாம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -116-14-என்னுமவள் கூட இருக்கிறாள் –
பெரிய பிராட்டியாராலே விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையவன் திருவடிகளை நினைமின் –
அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்-
பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான ப்ராக்ருத போகங்க ளால் ஒரு பிரயோஜனம் இல்லை –
ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற சப்தாதி போகங்க ளால்  வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை
மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இ றே
அன்றிக்கே -பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தே கை விடப் போகாத வர்த்த ஸூகத்தால் பிரயோஜனம் இல்லை என்றுமாம் –
அங்கன் அன்றிக்கே -அந்த சப்தாதி போகங்கள் தானே அவ்வளவு யுண்டு -அவ்வளவும் அறிந்தாலும்
பின்னையும் அறியாதார் படியேயாய்த் தலைக்கட்டும்படி
பண்ணக் கடவதான போகங்களில் வருவதொரு பிரயோஜனம் இல்லை –
அதாகிறது -சந்த்ருச்யதே  வாப்ய கம்யதே வா தாஜ்ஞ்ஞானம் அஜ்ஞ்ஞானம் அதோன்யது துக்கம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-என்னக் கடவது இ றே
ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இ றே
பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இ றே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்
அதில் இங்கு நீர் நினைமின் என்ற மாத்திரமாய் இருந்தது
இங்கு அறிந்தும் என்று அதனிடைய எல்லை அளவும் சென்று நின்றது
அர்த்த ஸூ கம் ஸூ கம் அன்றோ என்னில் உத்தேச்யத்தை அறியாதபடி அனர்த்தத்தைப் பண்ணும் –
தான் பிரயோஜனப் படாத மாத்திரமே அன்று -புருஷார்த்த விரோதியுமாம் -என்றபடி –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: