இவர்களுடைய பரிகர சம்பத்தி இருந்தபடி -கண்டோமுக்கு நேர் கொடு நேர் நரகத்தில் புக வழி அற்று இருந்தது
இங்கனே இருக்கும் இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி என் என்று விஸ்மயப் படுகிறார் –
நன்கு ஏத்தும் போது தாம் தாம் உண்டாக வேணுமே -என்னில்-
தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–
பதவுரை
தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தந்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத்தக்க அருமையான செயலாயிருக்கின்றது.
தாமுளரே -இத்யாதி
சத்தையை யுண்டாக்கி மற்றுள்ள உப கரணங்களையும் சேதனர்க்கு யுண்டாக்கிக் கொடுக்கையாலே –
தந்தாமை யுண்டாக்கி -வைத்தானே –
விசித்ரா தேக சம்பந்தி ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்தா பாதாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்று
தேஹத்தை பண்டே தந்து வைத்தானே –
தங்களை சிருஷ்டித்துக் கொள்ள வேண்டாவே –
தம் உள்ளம் உள் உளதே –
சத்தை யுண்டானால் உண்டாம் ஹிருதயத்தையும் தேட வேண்டாதபடி தனக்கு விதேயமாக்கி வைத்தானே –
தனக்குப் புறம்பு அன்றே ஹ்ருதயம் –
சித்தத்தைப் பற்றுவார்க்கு சித்தமே அமையுமே –
உள்ளுகை அரிது என்னில்
தாமரையின் பூ உளதே –
தாமரை புறம்பே யுண்டே –
அல்லோம் என்று இவன் போகிலும்-புறம்பே போக ஒண்ணாத படி பண்டே அவை யுண்டாய்த்தே –
ஆகிறது -தான் புறம்பே போய் தேடுமதான புஷ்பமும் -தனக்கே தேட வேண்டாத படி -அவன் குறைவறுத்து வைத்தானே –
இவனுடைய விபூதிக்கும் புறம்பு அன்றே பூ –
ஏத்தும் பொழுது உண்டே –
ஆஸ்ரயணீயத்துக்கு ஈடான காலமும் குறைவற்றுக் கிடந்ததே
பூப் பறிக்கச் சோம்பில் யேத்துகைக்கு ஈடான காலமும் ஈஸ்வரன் தானே யுண்டாக்கி வைத்தானே –
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே-
வாமனைக் குறைத்து வாமன் -என்கிறது -இவன் இடுமது கொள்ளுகைக்குத் தான் இரப்பாளனாய்
வருமவனுடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளில் சேர்க்கும்படியான தலையை யுண்டாக்கி வைத்தானே
வாமன் –
எல்லார் தலையிலும் கால் வைக்க உகக்குமவனாய்த்-தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியாய் வருவுமவன் –
மருவுகையே வேண்டுவது
திரு மருவு தாள் –
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ரா லாஞ்சனம்-சரணாம் புஜத்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -31-என்கிறபடியே
சேஷித்வ பிரகாசமாய் இருக்கை –
திருப் பொலிந்த சேவடி -பெரியாழ்வார் திரு -5-4-7-என்னக் கடவது இறே –
மருவு சென்னியரே –
சேஷத்வ ப்ரகாசகமான தலையை யுண்டாக்கி வைத்தானே –
திருவடிகளை வைத்தால் விலக்காத தொரு தலையை யுடையரே –
நான் என்று இருக்கை ராவணனோ பாதி -அடியேன் என்று இருக்கை விபீஷணனோ பாதி
இருந்தபடி இதுவான பின்பு
செவ்வே அரு நரகம் சேர்வது அரிது–—
கொடிதான சம்சாரத்துக்கு வேர் வழி போகை அரிது -இங்கனே இருக்க –
இவர்கள் தேடிக் கொண்டு போகிற வழி இருக்கிறபடி என் –
இப்படி உப கரணங்கள் குறைவற்று இருக்கச் செய்தே நரகத்துக்கு நேர் வழி கிடையாது
அரு நரகம் –
சம்சாரம் –
அஜ்ஞருக்கு இறே யமனுடைய நரகம் –
விவேகம் யுடையாருக்கு சம்சாரமே நரகம் –
நிரயோ யஸ் த்வயாவி நா -அயோத்யா -30-18-
தேஹ சேத ப்ரீதிமான் மூட பவிதா நரகேபி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-63-
அப்படி அல்லாமல் உடலிலே ஆசை அற்றவனாக இருப்பவனுக்கு சம்சாரத்துக்கு வழி காண் கிறிலோம்-
————————————————————————–
இப்படி அரிதாய் இருக்கச் செய்து கொண்டதிது-
இவர்களுக்கு ஒரு பரிகரம் இன்றிக்கே இருந்ததே யாகிலும் தன் பரத்தில் தான் ந்யச்த பரனாய் இருக்கவே –
எளிதாக இவர்கள் ஆஸ்ரயித்தாகளாய் கொண்டு தலைக் கட்டலாய் இருக்கிறது கிடீர் –
சர்வேஸ்வரன் ப்ரபாவத்தைப் பார்த்த வாறே -என்கிறார் –
சம்சாரிகளுக்கு ஆஸ்ரயிக்கை எளிதாய் இருந்ததோ என்னில்
எளிதாம் வழி சொல்லுகிறார் –
சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால்
எல்லாம் ஸூலபம் இறே என்கிறது-
அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22-
பதவுரை
(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண் கோடு–வெண்ணிறமான தந்தங்களை யுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி
அரியது எளிதாகும் –
அரியதாவது -பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் -பகவத் பஜனமும் –
இவை இரண்டும் எளிதாகும் -என் செய்தால் -என்னில் –
ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால் –
ஆற்றலாலே -என்கிறது
சக்தியாலே -என்னுதல் –
பொறையாலே என்னுதல் –
சக்தியான போது அவனுக்கு சக்தி வைகல்யம் இல்லாமையாலே இவன் பரத்தை தன் பக்கலிலே மாற்றிக் கொண்டு
இவனுடைய பேற்றுக்கு பிரதி பந்தகங்கள் ஆனவற்றையும் போக்கி
தன்னைக் கொடுக்கைக்கு யுடலாகிறது –
இவன் தலையிலே ஒரு தேவை இடுகிறது என் —
எல்லாம் நாமே ஏறிட்டுக் கொண்டு செய்வோம் என்பான் ஒரு பர சக்தியைப் பெற்றால் –
இவன் அசக்தி தீரத் தன் சக்தியைக் காட்டி ரஷிக்கை –
அன்றிக்கே -பொறை யானபோது –
இவன் பெறாமைக்கு பண்ணி வைக்கும் ப்ராதி கூல்யங்களை தன் கிருபையாலே
பொறுத்துக் கொடுக்கைக்கு யுடலாய் இருக்கை
மாற்றிப் பெருக முயல்வாரைப் பெற்றால் –
இவனுடைய சர்வ ரஷணங்களையும் தன் தோளிலே ஏறிட்டுக் கொண்டு இவனுக்குப் பேற்றிலே அந்வயமாம் படி –
தன் பேறாகக் கொண்டு ஆஸ்ரிதன் பக்கல் உள்ள அல்ப அனுகூல்யத்தை –
அஜ்ஞனாய் அசக்தனானவன் இத்துணை செய்து உகக்கப் பெற்றோம் -என்று
மிகவும் உத்சாஹிப்பாரைப் பெற்றால் அரியது எளியதாகும்
இத்தாலே
அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி
இதுக்குத் திருஷ்டாந்தம் –
கரியதோர் வெண் கோட்டு மால் யானை –
கறுத்த நிறத்தையும் வெளுத்த கொம்பையும் பெரிய வடிவையும் உடைத்தான ஆனையானது-
வென்றி முடித்தது அன்றே தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து-
பொய்கையிலே புக்கு பூவைப் பறித்த அவ்வ0ளவில் முதலையாலே நோவு பட்டு
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே இடப் பெற்றிலோம் என்னும் இழவு தீர
அவன் தான் அரை குலையத் தலை குலைய இவ்வளவும் வந்து
இத்தை எடுத்துக் கொடு போய் குளிர்ந்த கரையிலே வைக்க
அப்போதே அவன் திருவடிகளிலே பணிமாறித் தன் விரோதியையும் போக்கப் பெற்றது இல்லையோ –
ஆனபின்பு அதிலும் ஒரு குறையில்லை –
வடிவில் கருப்பும் கொம்பிலே வெளுப்பும் கொண்டு கொள்ளுகிற பிரயோஜனம் என் என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால் அதின் வடிவு அழகும் -அவயவமும் மாதாவுக்கு ஸ்மாரகமாய்
இருக்குமாப் போலே இருக்கும்
கோட்டு என்று கரைக்குப் பேர்
தடம் -குளிர்த்தி
குளிர்ந்த கரையிலே மா மலரைக் கொண்டு தாழ்ந்தன்றே வென்றியை முடித்தது –
புஷ்பத்தைக் கொண்டு திருவடிகளிலே பணிந்தன்றே விஜயத்தைப் பெற்றது –
அவன் பிரசாதத்தாலே அன்றோ -என்கிறது
அன்றிக்கே –
தண் தொட்டு மலர் என்று பாடமான போது குளிர்ந்த இதழை யுதைத்தான பெரிய மலராலே என்கிறது –
எம்பெருமான் ஏறிட்டுக் கொள்ளாத போது முதலை வாயிலே கிடந்தான் –
அவன் ஏறிட்டுக் கொண்டவாறே துக்கம் நீங்கிற்று
அனுக்ரஹம் உள்ள போது ரஷ்யத்துக்கு மிடுக்காய் இருக்கும்
நிக்ரஹம் பிறந்த போது சத்ருக்களுக்கு மிடுக்காய் இருக்கும்
அனுக்ரஹம் உள்ள போது -தோஷாமஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகராத் -ஸ்ரீ கீதை -12-7-
நிக்ரஹம் உள்ள போது -ஷிபாமி அஜஸ்ரம ஸூபான் ஆஸூரீஷ் வேவ யோ நி ஷூ -ஸ்ரீ கீதை -16-19-
ஆதலால் -அரியது எளியதாகும் -எளிதாகைக்கு இவன் செய்வது என் என்னில் –
விலக்காமை
ஆற்றலால் மாற்றிப் பெருக முயல்வார் என்று லாபம் நம்மதான பின்பு எல்லாவற்றையும்
ஈஸ்வரன் பக்கலிலே ஏறிடுகிறது என் –
நாமே பஜிப்போம் என்பான் ஒரு அதிகாரியைப் பெற்றால் -என்றுமாம் –
————————————————————————–
இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் –
ஐஸ்வர்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -கைவல்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் –
ஸ்வ ப்ராப்தி அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -என்கிறார்-
தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-
பதவுரை
தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.
தாழ்ந்து –
த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –
அவன் திருவடிகளிலே வணங்கி –
இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய –
இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –
வரம் கொண்டு –
இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று
அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு –
வரம் கொண்டு –
ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே –
தக்க வகைகளால்-
இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல்
அதிகார அனுகுணமாக -என்னுதல்
தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும்
கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்
வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –
வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும் என்று இருப்பாரை வாழ்விக்கும் –
இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-
தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-
யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால்
அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –
இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அ
து தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –
அக்குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –
தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து-
அடியே தொடங்கித் தலை யளவும் செல்லப் பழுத்துக் கிடக்கிற விளாவினுடைய பழத்துக்கு கன்றை எறிந்து –
தீங்கு நினைத்த அத்தை -அது தன்னோடு போம்படி பண்ணின படி –
இத்தால்
வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள் என்றபடி
வேற்று வுருவாய் –
அதுக்கு மேலே கோ சஹச்ர ப்ரதாதாரம் -யுத்த -21-7-என்று சொல்லுகிறபடியே
உதாரனான தான் தன்னை அர்த்தி யாக்கி நின்றபடி யாதல் –
ஸ்ரீ யபதியானவன் அர்த்தியாய் நின்றபடியாதல் –
சிறு காலைக் கட்டிப் பெரிய காலாலே அளந்து கொண்டபடி யாதல்
ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட அவன் –
பூமியை அளந்து தன கால் கீழே இட்டுக் கொண்டவன் -வேணும் என்று இருப்பாரைப் பெற்றால் விடுமோ –
ஞாலம் அளந்து அடிக்கீழ் கொண்ட –
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –
————————————————————————–
இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ –
அடியே துடங்கி இவன் சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்-
அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-
பதவுரை
நல்நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.
அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்-
சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு வெறும் இவனுடைய அனுஷ்டானமே அன்று கிடாய் –
இவனுடைய நன்மைக்கு அடி அவனுடைய பிரசாதம் கிடாய் –
வெறும் இவனுடைய க்ரியா மாத்ரமே யன்று என்றும்
இவனுடைய நன்மைக்கு அடி –அவனுடைய நிர் ஹேதுக விஷயீ காரமே –
இவனுடைய அனர்த்தத்துக்கு அடி அவனுடைய நிக்ரஹமே-
ஆக –
இவனுடைய நன்மை தீமைக்கு அடி அவனுடைய நிக்ரஹ அனுஹ்ரங்களை ஒழிய
வேறு புண்ய பாபங்கள் இல்லை என்கிறார் –
சம்சார மோஷங்கள் என்றுமாம் –
நன்னெஞ்சே –
அவன் புண்ய பாபங்களுக்கு அடி என்றால்
அதுக்கு உடன்படும்படியாய் விதேயமான நெஞ்சே –
பகவத் விஷயம் சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே –
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் –
நமக்கு வேணும் என்னப் பண்னுவானும் அவன் கிடாய் –
தன்னைப் பெறுகைக்கும் இழக்கைக்கும் பொதுவான இந்த்ரியங்களுமாய் நின்றானும் அவன் கிடாய் –
நாமே உளன் என்ற போதைக்கும்
ஒரு ஈஸ்வரன் உளன் என்ற போதைக்கும்
பொதுவான இந்த்ரியங்களும் அவனிட்ட வழக்கு –
இந்த்ரியங்களை விஷயப் பிரவணம் ஆக்கி கெடுப்பாரைக் கெடுக்கவுமாம்-
தன் பக்கலிலே ப்ரவணமாக்கி ரஷிப்பாரை ரஷிக்கவுமாம் –
விலங்கும் அவன் கையது முடியும் அவன் கையது-
ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபாயந்தி தே-ஸ்ரீ கீதை 10-10- -என்னவுமாம்
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நரதமான் ஷிபாமி அஜஸ்ரம் அஸூ பான்
ஆ ஸூ ரீஷ்வேவ யோ நிஷ-ஸ்ரீ கீதை -16-10-என்னவுமாம்
அவன் கண்டாய் காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் –
தன்னை இழக்கைக்கு பரிகரமான பஞ்ச கங்களையும் உபகரணமாகக் கொண்டு –
இவற்றை யுண்டாக்குவானும் அவன் கிடாய் –
காற்று இத்யாதி –
தவிர்க்க வேண்டும்படியான யான வுடம்பு -சம்சார ப்ரவர்த்தகனும் அவன் என்கிறது –
தைவீஹ் ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத் யந்தே மாயா மேதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்னும் அவனையே பற்றியே சம்சார சம்பந்தம் அறுக்க வேணும் என்கிறது –
காற்று -இத்யாதி
சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான சரீரத்துக்கு ஆரம்ப கங்களான
வாயு அக்னி ஜல ஆகாச பூமிகள் ஆகிற பூத பஞ்சகம் –
தத் கார்யமான பெரிய பர்வதங்கள் ஆகிற அவற்றை அடியிலே யுண்டாக்குவானும் அவன் கிடாய் –
காரோதச் சீற்றத் தீ யாவானும் சென்று —–
சம்ஹார காலத்தில் யுகாந்தாக்னியாய் கொண்டு சென்று இவற்றை சம்ஹரிப்பானும் அவன் கிடாய்
காரோதச் சீற்றத் தீ -என்கிறது
படபா முகாக்னியை
அதாவது
தன்னை அவிக்க கடவதான நீரை யகப்பட தஹிப்பது இன்று இயுகாந்தாக்னியாய் கொண்டு சென்று
இவற்றை சம்ஹரிப்பானும் அவன் கிடாய்
காரோதச் சீற்றத் தீ -என்கிறது படபா முகாக்னியை
அதாவது தன்னை அவிக்க கடவதான நீரை யகப்பட தஹிப்பது இன்று இறே
ஆக
த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் அவன் என்றபடி
————————————————————————–
அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் –
இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது –
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-
பதவுரை
விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.
சென்றது இலங்கை மேல் செவ்வே –
மாயா மிருகத்தைக் காட்டி வழி எல்லா வழியே கொண்டு போனவனைப் போல் அன்றியே
பத்தும் பத்தான தன் ஆண் பிள்ளைத் தனத்தாலே வேறே காண எடுத்து விட்டு அழித்த படி –
சென்றது இலங்கை மேல் செவ்வே —
சங்கல்ப்பத்தால் அன்றிக்கே நேரே கால் நடையை இலங்கையிலே நடந்தது -அபியாதா -அயோத் -1-29- என்றபடி –
இலங்கை மேல் –
இந்த்ராதிகளும் பேர் சொல்ல வயிறு பிடிக்கும் ஊரிலே நதியாதே எடுத்துச் சென்றான் -வீரமே துணையாகச் சென்ற படி –
தன் சீற்றத்தால் கொன்றது இராவணனைக் –
ப்ரஹர்த்தா ச -அயோத்யா -1-29- என்கிறபடியே
வர பலத்தாலே பூண் கட்டின பையல் தலைகளைத் தன் கோபத்தால் அறுத்துப் பொகட்டான் ஆயிற்று –
தன் சீற்றத்தால் –
கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன் -தான் கோபமிட்ட வழக்காய் முடித்தது இராவணனை –
ஈஸ்வரத்வம் பின்னாட்டிலிரே -சங்கல்பம் உதவுவது –
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே சீற்றம் உதவிற்று –
கூறுங்கால் –
அவன் படிகளைச் சொல்லப் புக்கால் –
நின்றதுவும் வேயோங்கு தண் சாரல் வேங்கடமே –
அவ்வோ காலங்களில் உதவாதார்க்கும் இழக்க வேண்டாத படி அவன் சந்நிஹிதனாய்க் கொண்டு நின்றதுவும் –
ஓங்கின வேய்களையுடைத்தாய்ச் ஸ்ரமஹரமான பர்யந்தங்களையும் உடைய திரு மலையே –
நின்றதும் வேங்கடமே –
அவதாரத்துக்கு பிற்பாடர் ஆனவர்கள் இழக்க ஒண்ணாது என்று
அவர்கள் விரோதியைப் போக்குகைக்காக திரு மலையிலே வந்து நின்றது –
பிராட்டியை மீட்டாப் போலே ஆத்மாபஹாரம் மீட்கைக்கு எடுத்து விட்டு நிற்கிறபடி –
விண்ணவர் தம் வாயோங்கு தொல் புகழான் –
இங்கு வருவதற்கு முன்பு அவன் இருக்கும் இடம் சொல்லுகிறது –
நித்ய ஸூரிகளுடைய ஸ்தோத்ரத்தாலே ஓங்கின ஸ்வா பாவிகமான புகழை யுடையவன் –
நித்ய ஸூரிகளாலே ஸ்துதிக்கப் படுகிற பழைய புகழை யுடையவன் -என்றுமாம் –
திரு மலையிலே நீர்மைக்கு ஸ்திதுக்கிம் படி யாக வுமாம்
அன்றிக்கே
கீழ்; ராமாவாதாரம் ஆகையாலே -ராவண வத சமநந்தரம் ப்ரஹ்மாதிகளாலே-
சீதா லஷ்மி பவான் விஷ்ணு -யுத்த-117-27-என்று
ஸ்துதிக்கப் படுகிற புகழை யுடையவன் என்றுமாம் –
வந்து –
தன்னைக் கொடுக்கைக்கு அர்த்தியாய் வந்தபடி –
விண்ணவர் தம் வாயோங்கு தொல் புகழான் வந்து நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே –
————————————————————————–
கீழ் ப்ரஸ்துதமான மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் –
வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26
பதவுரை
படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்யவாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.
வந்தித்து –
அவனை வந்தித்து -அபிமதமான ஸூந்யராய் அவனை ஆஸ்ரயித்து-
அவனை வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி –
பகவத் ப்ராப்திக்கு விரோதிகளாய்க் லொண்டு வழி நின்ற நடுவே நின்று தகைக்கிற ஸ்ரோத்ராதி விஷயங்களில்
போகாத படி உபசயாத்மகமுமாய் அஸ்திரமான தேஹத்துக்கு உள்ளேயாம் படி நியமித்து –
ஐம்பூதம் ஐந்தும் –
பூதங்களையும் இந்த்ரியங்களையும் ஜெயித்து –
ஆர்வமாய் –
அவன் பக்கலிலே அபி நிவேசத்தை யுடையராய்
உந்திப்படி யமரர் வேலையான் –
அஹமஹமிகயா ஒருவருக்கு ஒருவர் ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதி தேவதைகளுக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் –
பண்டு அமரர்க்கு ஈந்த –
பழை யரான நித்ய ஸூரிகளுக்குக் கொடுத்து -என்னுதல்
முன்பு அவர்களுக்கு கொடுத்தது -என்னுதல்
கீழ் ஆஸ்ரயித்தவர்களுக்கு-
படி யமரர் வாழும் பதி –
பூ ஸூரரான வைஷ்ணவர்கள் வர்த்திக்கிற திரு மலை –
அவர்கள் அனுபவித்து வாழுகிற திருமலை
வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் வந்தித்து உந்திப் படியமரர் வேலையான்
படியமரர் வாழும் பதி கிடீர் -பண்டு அமரர்க்கு ஈந்தது -என்று அந்வயம்-
இது பிள்ளை அமுதனார்க்கு பட்டர் அருளிச் செய்த பாட்டு-
————————————————————————–
அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும்
செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் –
அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு -என்கிறார் –
பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்————-27-
பதவுரை
பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை
மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.
பதி யமைந்து நாடிப் –
ஸ்தானத்திலே யூன்றி –
திருமலையிலே பொருந்தி –
பரம ப்ராப்யமான தேசம் இன்னது என்று நிச்சயித்து என்றுமாம் –
பதி -என்று ஹிருதயமாய் -ஹ்ருதயத்தாலே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –அயோத்யா -31-25-என்று அத்யவசித்து -என்றுமாம்
நாடி –
ஆராய்ந்து எங்கே எங்கே என்று தேடி –
பருத்து எழுந்த சிந்தை-
அதடியாகப் பணித்துக் கொண்டு கிளருகிற மநோ ரதமானது-
பருத்து எழுந்த –
விஸ்த்ருதமாய்க் கிளர்ந்த –
மதி உரிஞ்சி –
சந்திர பதத்துக்கு அவ்வருகு பட்டு –
வான் முகடு நோக்கி –
அண்ட பித்தியில் சென்று கடாஷித்து
கதி மிகுத்து –
வேகத்தை மிகுத்து என்னுதல்-
கதிர் மிகுத்து என்று பாடமாகில் ஒளியை மிகுத்து என்னுதல் –
அங்கு கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே-
அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு படருகிற கொழுந்து போலே யாய்த்து –
மால் தேடி ஓடும் மனம் –
சர்வேஸ்வரனைத் தேடிக் கொண்டு -மேல் விழுகிற திரு உள்ளமானது இருக்கிறபடி –
மால் –
கரை கட்டாக் காவேரி போலே பூர்ணனாய் -சர்வாதிகனான சர்வேஸ்வரனைத் தேடின படி –
மால் தேடி ஓடும் மனம் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-திருவாய் -9-3-7-என்னுமா போலே –
————————————————————————–
இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்த வாறே –
பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே
அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக
ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது –
இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது –
இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே
அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-
பதவுரை
எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.
மனத்துள்ளான்-
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -பெரியாழ்வார் -5-4-10-என்னும்படியே –
வேங்கடத்தான் மா கடலான்-
இதுக்கு உறுப்பாக முன்பு வர்த்தித்த திருப் பாற் கடலும் திரு மலையும் இருக்கிறபடி –
திருமலையில் நிற்கைக்காக திருப் பாற் கடலிலே சாய்ந்தாப் போலே யாய்த்து
இவர் திரு உள்ளத்தே புகுருகைக்காகத் திரு மலையிலே நின்று அருளின படியும் –
மற்றும் நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-
கீழ்ச் சொன்ன இவை போலே ஓன்று இட்டுச் சொல்ல ஒண்ணாத படியான
போக்யதையால் மிக்க பெரிய கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளின படி
இங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்த படி என் தான் –
சம்சாரிகளைப் பெற்று அல்லது போகேன் என்று வளைப்புக் கிடக்கிற படி –
அப்ராப்ய மநஸா சஹ –தை ஆனா -9-1-என்கிற வித்தை நினைக்கிலும் இவ்விடம் நினைக்கப் போகாது –
நீள் அரங்கம் –
பரப்பை யுடைய கோயில் -என்னவுமாம் –
எனைப் பலரும் தேவாதி தேவன் எனப்படுவான் –
வேதங்களும் வைதிக புருஷர்களும் எல்லாம் -தமீச்வராணம் பரமம் மகேஸ்வரம் -ஸ்வே -6-7-என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் பிரசித்தமாகச் சொல்லப் படுகிறவன்
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் —
முன்பு ஒரு கால விசேஷத்திலே கேசி வாயைக் கிழித்த பிள்ளை -என்னுதல்
மனிச்சு என்னுதல் –
நெஞ்சிலே புகுராமைக்கு வரும் விக்நம் போக்குவானும் தானே
தேவா திதேவன் எனப்படுவானாய் —
மா கடல் நீர் உள்ளானாய்-
மா வாய் பிளந்த மகனாய் –
நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளானாய் –
வேங்கடத்தானவன் மனத்து உளனானவன் –
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி
பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப் போவது வருவதாக ஒண்ணாது என்று
திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –
————————————————————————–
மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே –
அது தன்னிலும் திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் –
மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——————-29-
பதவுரை
தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்து விட்டாய்.
மகனாக கொண்டு எடுத்தாள்-
ஒரு வாசி தோற்றாத படி தாயாரே ஒசழக்காக எடுக்குமா போலே வந்து எடுத்துக் கொண்டாள் ஆய்த்து-
ஸ்ரீ மதுரையிலே புக்கு மகனாய் -திரு வாய்ப்பாடியிலே மகனான அத்தைக் கொண்டு
இவளும் பிள்ளையாக அனுகரித்துக் கொண்டாள் ஆயிற்று –
மாண்பாய கொங்கை-
நெஞ்சாலே நிறைந்தத்தை பாலாலே நிறைந்ததாகப் பண்ணி –
அத்தாலே தர்ச நீயமான கொங்கையை -அழகியதான முலையை –
அகனார உண்பன் என்று உண்டு –
இவனும் ஒரு வாசி தோற்றாதபடி உண்டான் ஆய்த்து -அவள் நிலை இறே இவனதும்
அவள் முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆனாப் போலே இவனும் முலை யுண்டு அல்லது தரியாதானாய் உண்டபடி –
வயிறு நிறைய உண்பன் என்று யுண்டான் யாய்த்து –
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் –
மகனான உன்னைத் தாயான யசோதைப் பிராட்டி விஸ்வசியாத படி தொட்டாய்-
மகன் என்றாலும் -தாய் -என்றாலும் கிருஷ்ணன் பக்கலிலும் யசோதைப் பிராட்டி பக்கலிலும் நிற்கும்
புத்திர ச்நேஹம் என்றால் சக்கரவர்த்தி பக்கலிலே கிடக்குமா போலே –
அவனும் விரும்பி முலை யுண்ணா நிற்க -இவளும் விரும்பி முலை கொடா நிற்கிலும்
பூதனை மடியிலே இருந்தானாகத் துணுக்குத் துணுக்கு என்னும்படி பண்ணினாய் –
நீ வளர்ந்த பின்பும் உன்னை நினைத்து வயிறு எரியும்படி பண்ணினாய்
அன்றிக்கே –
நாட்டில் ஒரு பிள்ளைகளையும் ஒரு தாய்மாரும் விஸ்வசியாத படி பண்ணினாய் -என்றுமாம்
அதாகிறது –
பிள்ளையைப் பெற்ற அனந்தரமே இவன் பூதனை கையிலே அகப்பட்டான் -நாம் இழந்தோம் -என்று
அஞ்சும்படியாய் இருக்கை-
திருத்தினாய் –
தொட்டுக் கொண்டாய்
தென்னிலங்கை நீறாக வெய்தழித்தாய் நீ—-—-
பருவமும் நிரம்பி -ஆச்சர்ய ஸ்ரமங்களும் பண்ணிச் செய்தாய் அது –
பருவம் நிரம்புவதற்கு முன்னே இச் செயலைச் செய்தாய் என்று பயப்படுகிறார்
அப்படி வளர்ந்து இச் செயலைச் செய்தாலோ என்ன –
என் பிள்ளை போனவன் பூசலிலே வென்று மீளும் என்று தோற்றும் படியான பருவத்திலே தான் செய்யப் பெற்றதோ
கூரம்பன் அல்லால் -நான் முகன் -8-என்று மார்பிலே கை வைத்து இருக்கலாமே
கீர்த்தி பூதாம் பதாகாம் யோ லோகே ப்ரமயதி கின்நாம துர்லபம் தஸ்ய -அயோத்யா -44-7- என்று
சொல்லும்படியான -இலங்கையைப் பொடிபடும்படி வில்லைக் கொண்டு வ்யாபரித்து அழித்த நீ –
மகனைத் தேறாத வண்ணம் திருத்தினாய் –
————————————————————————–
கீழே ஸ்ரீ கிருஷ்ண விஜயத்தையும் ஸ்ரீ ராம விஜயத்தையும் அனுசந்தித்தார் –
அநந்தரம்-அத்தோடு சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்துப் ப்ரீதர் ஆகிறார்-
நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—————-30-
பதவுரை
பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.
நீ அன்று உலகளந்தாய் –
கொடுக்க உகப்பானான மஹா பலி பக்கலிலே உன்னை இரப்பாளனாய் ஆக்கிச் சென்று -ஜகத்தை அடங்க இரந்து-
திருவடிகளாலே அளந்து கொண்டாய் என்னா நின்றார்கள் –
இத்தால்
மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –
நீண்ட திருமாலே-
அபரிச்சேத்யனான ஸ்ரீ யபதியானவனே-
நீண்ட திரு மாலே –
நீ பெறாதது பெற்றாப் போலே பூமியை அளந்தாய்
அபரிச்சேத்யனான உன்னைப் பரிச்சேதிக்கும் படி பண்ணுவதே –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் –
அப்படி இரந்து செல்லுகைக்கும் ஒருவர் இல்லாமையாலே பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே
ஒட்டிக் கிடந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு புக்கு இடந்து ஏறினாய் என்று பிரமாணிகர் சொல்லா நின்றார்கள்
நீ யன்று காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் –
பிராட்டிக்காக செய்த செயல்களைச் சொல்லுகிறது –
சர்வ விஷயமாக பண்ணின வியாபாரங்க ளோடு வாசி அற நினைத்து இருக்கிறபடி
துர்வாச சாபத்தால் நஷ்ட ஸ்ரீ கராய் கொண்டு இந்த்ராதிகள் சரணம் புக்க அன்று சர்வ சக்தியான நீ
கருத்த நிறத்தை யுடைத்தான கடலை பிராட்டியை லபிக்கைக்காக முற்படக் கடைந்து
அது தன்னை அடைப்பதும் செய்தாய்
பின் அடைத்தாய் மா கடலை
அப்படிக் கடைந்த கடல் தன்னையும் அவள் தனக்காக அடைத்தாய் –
பேரோத மேனிப் பிரான்–—
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை
பேரோத மேனி
கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி
பிரான் –
கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்
அன்றிக்கே –
மா கடல் பெரும் கடல்
நீர் வெள்ளம் போலே இருந்துள்ள வடிவு அழகை யுடைய உபகாரகனே என்னவுமாம்
பேரோத மேனிப் பிரான் நீ அன்று உலகு அளந்தாய்
இவ் வுடம்பைக் கொண்டோ காடும் மோடையும் அளப்பது –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply