கா என்று கொண்டு வெறுமனே தலையிலே ஏறிடுகிறது என் –
தந்தாமுக்கு என்னவும் ஒரு நன்மை வேண்டாவோ என்ன
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார் –
தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன –
இப்படிச் செய்வார் உண்டோ என்னில் –
அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்-
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-
பதவுரை
(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)
கடை நின்று -இத்யாதி
ஜகத்தடையக் கடையாய் கிடக்கிறபடியை அனுசந்திக்கிறார் –
கா என்ன மாட்டாதார் படும் பாடு –
கடை நின்று –
அவ்வோ தேவதைகளின் வாசல்களைப் பற்றி நின்று –
கடைத்தலை இருக்கை இங்கே யாவதே –
அமரர் கழல் தொழுது நாளும்-
நாள் தோறும் அவ்வோ தேவதைகளின் காலிலே குனிந்து
அமரர் –
தன்னில் காட்டில் நாலு நாள் சாவாதே இருந்ததுவே ஹேதுவாக –
கழல் தொழுது –
ஆருடைய கடல் தொழக் கடவவன் –
யாவந்த சரனௌ பிராது –சிரசா தாரயிஷ்யாமி நமே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா -98-8-என்று
வகுத்த கழல் ஒழிய –
நாளும் –
சக்ருதேவ -என்று இருக்க ஒண்ணாதே
அந்ய சேஷத்வம் ப்ராமாதிக மாகவும் பெறாது ஒழிவதே
உபாயங்களால் பெருத்து -உபேயங்களால் சிறுத்து இருக்கும் இதர விஷயத்தில்
பகவத் விஷயத்தில் உபாயம் வெருமனாய் உபேயம் கனத்து இருக்கும்
அதுக்கடி அங்கு பிச்சைத் தலையணைப் பிச்சைத் தலையர் ஆஸ்ரயிக்கிறார்கள்
இங்கு ஸ்ரீ யபதியை அடிமைக்கு இட்டுப் பிறந்தவர்கள் ஆஸ்ரயிக்கிறார்கள் –
அவர்கள் பக்கலிலே
இடை நின்ற வின்பத்தராவர் –
நிரதிசய ஸூக ரூபமான போக பூமியிலே போய்ப் புகுமத்தையும் இழந்து
அதுக்கு யோக்யதை யுடைத்தான சம்சாரத்திலும், நிலையும் குலைந்து
நடுவே யுண்டாய் -அவர்கள் கொடுக்க வல்ல ஸ்வல்ப பலத்தை ப்ராபிப்பர்
அதாகிறது
அஸ்த்திரமான ஸூகத்தை ப்ராபியா நிற்பார்
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த ஜந்து சிற்றின்பத்தை ஆசைப்படுவதே
சம்சாரத்தில் வாசி இழக்கிறோம் என்றும்
போக பூமியில் புகப் பெறு கிறிலோம் என்றும்
அவற்றை லந்த நெஞ்சாறாலாலே அந்ய பரனானவன்
துஸ் சீல தேவதைகளாலே உன் பசலை அறுத்துத் தா எனபது
ஆட்டை அறுத்துத் தா
இடைவிடாதே ஆஸ்ரயி என்பார்கள்
கரணம் தப்பில் மரணம் இறே-
அங்கன் அன்றிக்கே
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்த்ரங்களும் திரு வாசலில் நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பெறுகையே பிரயோஜனமாக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
ஷூத்ரமான பிரயோஜனங்களைக் கொண்டு போவார் -என்றுமாம் –
புடை நின்ற நீரோத மேனி –
பூமியைச் சூழப் போந்து கிடக்கிற கடல் ஓதம் போலே இருக்கிற வடிவை யுடையையாய் –
நெடுமாலே-
அபரிச்சேத்யனானவனே-
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –
நின்னடியை யாரோத வல்லார் அவர்–
தேவர் திருவடிகளில் அழகை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் தான் ஆர் –
ப்ராப்யமானவன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
உன் நீர்மையை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
————————————————————————–
ஆனால் -பின்னை அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க கடவது அன்றோ –
அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப் போகா நின்ற பின்பு
இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் –
மற்றை நிர்வாஹத்துக்கு அவர்களும் அவனைப் பற்றியோ திரிவது என்னில் –
அங்கனே அன்றோ செய்வது -என்கிறார்-
அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-
பதவுரை
எண்ணில்–(எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆச்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளி யிருக்கின்ற இடத்தைத் தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?
அவர் இவர் என்று இல்லை –
சிறியார் பெரியார் என்று இல்லை –
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான தேவர்களோடு -அவர்களை ஆஸ்ரயித்த மனுஷ்யரோடு வாசி அற-
பெற்ற தாய்க்கு ஆகாத பிரஜை யுண்டோ –
அரவணையான் பாதம்-
ஷீரார்ணவ சாயியான சர்வேஸ்வரன் திருவடிகளை –
சர்வேஸ்வரத்வ லஷணம் ஆவது -அநந்த சாயித்வம் போலே காணும் –
புருஷகாரம் அங்கே யுண்டு -யத்ர ராமஸ் ஸ லஷ்மண-யுத்த -17-1-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11- என்றும்
நாகணைக்கே சென்று -நாச் -10-9- என்றும் சொல்லக் கடவது இறே
எவர் வணங்கி ஏத்தாதார் –
ஆஸ்ரயியாதார் ஆர் -வேறு ஒருவன் காலிலே விழாத படியான
வைபவம் யுடையவனைப் பற்ற வேண்டாவோ –
எண்ணில்-
ஆராயில் –
பவரும்-இத்யாதி –
இவர்கள் அன்றோ நாட்டுக்கு ஆஸ்ரயணீயாராய் பிரசித்தராகிறார் –
இவர்கள் தாங்கள் செய்கிறபடி இது வன்றோ –
பவரும் செழும் கதிரோன்-
பரம்பின அழகிய சஹச்ர க்ரணனான ஆதித்யன் –
ஒண் மலரோன்-
திரு நாபீ கமலா ஸ்தானனான ப்ரஹ்மா-
கண்ணுதலோன் -என்றே
லலாட நேத்ரனான ருத்ரன் -இவர்கள் அன்றோ
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து—-
நாடோறும் அவன் புக்கிடம் புக்கு -வடிம்பிட்டு -அவனையே ஆஸ்ரயிக்கையே
ஸ்வ பாவமாக யுடையராய் -இருக்கிறார்
நாளும் தொழும் தகையார் –
முறுக்கொழியில் கொட்டொழியும் என்று -தொழுகை மாறில் பிரயோஜனங்களும் மாறும்
என்று தொழும் தகையார்
தொழுகையே ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே -இது வகுத்தது என்று இராதே –
பிரயோஜனங்களைக் கொண்டு இழப்பதே –
பலத்தைக் கூலியாக்கி த்யாஜ்யமான ஐஸ்வர்யத்தைப் பலமாகக் கொள்வதே -என்ன தர்ம ஹாநி-
————————————————————————–
ஆனால் பின்னை அதிக்ருதாதிகாரமோ –
அளவுடைய தேவர்கள் ஆஸ்ரயித்து -அல்லாதார் இழந்து போம் அத்தனையோ -என்னில்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை –
எத்தனையேனும் செல்ல -ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற திர்யக் யோநியிலே உள்ளது ஓன்று அன்றோ –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து -பிரதிபந்தகம் அவனாலே நீங்கி
அவன் தேசத்தைப் பெற்றுப் போந்தது -என்கிறார்
ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து
கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று –
இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது
தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு————–13–
பதவுரை
தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானை யானது
சூழ் கயம் புக்கு–(கரை காண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின
எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.
தொடரெடுத்த மால் யானை –
வல்லியை முறித்துக் கையிலே கொண்டு ச்வரை சஞ்சாரம் பண்ணுகிற மத்த கஜமானது
விலங்கை முறித்து எடுத்துப் பொகட்டுத் திரியும் பெரிய யானை -என்றுமாம்
மால் யானை –
மத்தித்து இருந்துள்ள யானை –
பாடாற்ற மாட்டாமை -என்றுமாம் –
சூழ் கயம் புக்கு –
பெரிய பரப்பை யுடைத்தாய் -கண்ணால் கரை காண ஒண்ணாத பொய்கையிலே புக்கு
சூழ் கயம் –
புக்காரை துஷ்ட சத்வங்களாலே சூழ்க்க வல்ல கயம்-
கயம் புக்கு –
தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு –
அஞ்சி-
முதலையால் வந்த இடருக்குப் பயப்பட்டு -ஸ்வ பலம் உள்ள போது-அதுவும் ப்ரஹ்மாதிகளோடு ஒக்கும்
பரமாபதமாபன்ன-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–அவனிலும் சீரிய ஆபத்து
சர்வ சக்தியில் காலோடு கட்ட வல்ல ஆபத்து இறே
இவன் தன்னைப் பொகட்ட வாறே அவனும் தன்னைப் பொகட்டான்-
படரெடுத்த பைங்கமலம் கொண்டு –
படர் -படர்ந்து -பரப்பு மாற அலர்ந்து –
எடுத்த -ஓங்கிய
பைங்கமலம் -அழகியதாய் இருந்த தாமரை -என்னுதல்
அன்றிக்கே –
குளிர்ந்து இருந்துள்ள பூவை அத்யாதரத்தோடே வாங்கி
அன்று இடர் அடுக்க-
அங்கே முதலையாலே ஆபத்தானது வந்து ப்ரஸ்துதமாக
இடர்-வேறு பரிஹாரம் இல்லாத துக்கம் –
அஞ்சி
அநந்தரம் இப்பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே பணிமாறப் பெறு கிறிலோம்-என்று
அஞ்சி -அதுக்குப் பரிகாரமாக
ஆழியான் பாதம் பணிந்து அன்றே –
சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயித்தது அன்றோ –
ஆழியான் –
க்ராஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-81–அனந்யப் பிரயோஜனர் திறத்து இருக்கும் படி –
பைங்கமலம் -பூவைப் பூவாக வாங்கின படி
ஆழியான் -துரிதம் போக்குகைக்கு பரிகரம் யுடையவன் –
வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப பண்டு–
முன்பு அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய ஸ்தானமான பரம பதத்தைப் பிராபித்தது –
நித்ய ஸூரிகளோடே கூடி இருக்கிறவனுடைய படுக்கையிலே ஏறப் பெற்றது
ஆன பின்பு -இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்கிற நியதி யுண்டோ –
அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் சர்வாதிகாரம் அன்றோ -என்கிறார் –
————————————————————————–
இங்கனே அவன் சர்வ சமாஸ்ரயணீயனாயற்ற பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே
பகவத் பஜனத்தைப் பண்ணி -உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தும் அடங்க பாவனமாம்படி பண்ணுங்கோள்-என்கிறார் –
அவன் படி இதுவான பின்பு –
சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து –
திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூத்தம் ஆக்குங்கோள் -என்கிறார் –
பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-
பதவுரை
பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப் போடும்படி
விம்மி வளர்ந்த நான்கு திருத் தோள்களை யுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.
பண்டிப்பெரும் பதியை யாக்கி-
முன்பு இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து -என்னுதல்-
பழையதான சம்சாரத்தை வளர்த்து -என்னுதல் –
அன்றிக்கே –
பண்டி -ஆகிற பெரிய ஸ்த்தானத்தை யுண்டாக்கி –
அதாகிறது
பெரிய ஊர் போலே வயிற்றைப் பெருக்கி -என்னுதல் –
பண்டு ஒருத்தர் -இதாகிறது -ஜங்கம விமானம் காண் என்று சொல்லித் திரியும் -என்று
நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஈஸ்வரனையும் ஆத்மாவையும் அழிய மாறி உடம்பை வளர்ப்பதே -என்கை-
பழி பாவம் கொண்டு –
ததர்த்தமாக பழிகளும் பாபங்களும் கொண்டு -வளர்க்கிறதும்
யுடம்பை –தேடுகிறது பழியும் பாவமும் –
அமூலமாயும் -சமூலமாயும் வருமவற்றுக்கு எல்லாம் ஒரு ஆஸ்ரயமாய்-
பிரமாதிகமாக வருமவற்றையும் -பிரகிருதி வச்யனாய் புத்தி பூர்வகமாக வருமவற்றையும்
ஏறிட்டுக் கொண்டு இருப்பர்கள் இறே-
பழியாவது ஏறிடுமது-
பாவமாகிறது நிஷித்தமாக அனுஷ்டிக்குமது –
பழி-அந்ய சேஷத்வம் –
பாவம் ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் –
இங்கு வாழ்வாரைக் கூறாதே –
இஹ லோகத்திலே வாழும் மனிசரை ஏத்தித் திரியாதே –
தேஹாதிரிக்த வஸ்துவும் ஓன்று உண்டு என்று இருக்கில் –
அவ்வருகே பரலோக பிராப்தியும் -அங்கே ஒரு போகமுமாய் இருப்பது –
காண்கிறத்துக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கையாலே
இங்குற்றை நாலு நாளை வாழ்வே யாய் இருக்கும் இறே –
இப்படிப்பட்ட ஹேயரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
உனக்கு ஒரு பழி யுண்டோ பாவம் யுண்டோ என்று அவர்களை ஸ்தோத்ரம் பண்ணாதே –
இங்கு வாழ்வாரை –
துக்கத்திலே ஸூக பிரதிபத்தி பண்ணுகை-
பேதைகாள் –
மதி கேடர்காள்-கண்டது அல்லது அறியாதே இருக்குமவர்காள் –
த்ருஷ்டத்தில் ஐஸ்வர்யத்தையும் ஒன்றாக நினைத்து இருக்கிற அறிவு கேடர்காள்-
எண்டிசையும் பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் –
திருக் கைகள் எட்டுத் திக்கிலும் போய் வியாபித்து விம்ம வளர்ந்த படி –
திக்குகளானவை அழித்துப் பண்ண வேண்டும்படியாய் வந்து விழுந்தது ஆய்த்து
இப்படி ஜகத் ரஷண அர்த்தமாக திரு வுலகு அளந்து அருளினவனுடைய திரு நாமத்தைச் சொல்லி –
தீர்த்த கரராமின் திரிந்து-
ஜகத்துக்கு அடங்க ஸூபாவஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
திரிதலால் தவமுடைத்து இத்தரணி தானே -பெருமாள் திருமொழி -10-5
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-
அவனாலும் செல்லாத -திருத்த முடியாத -நிலத்தை அவன் பேரைக் கொண்டு செலுத்திடு கோள்-
அவர்கள் தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்குமா போலே
இவர்கள் தாங்களும் க்ருதார்த்தராய் நாட்டையும் க்ருதார்த்தம் ஆக்குகிறபடி –
யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைவ ஹ்ருதி ஸ்தித தேந சேத விவாத ஸ்தே மா கங்காம் மா குரூன் க ம -மனு -8-92-
திரிந்து தீர்த்தக்காரர் ஆமின் –
உங்களுடைய சஞ்சாரத்தாலே லோகத்தை பாவனம் ஆக்குங்கோள்-
பிள்ளானுக்கு மூத்த தேவப் பிள்ளை பட்டரைக் கண்டு -பந்துக்களான நீங்கள் இங்கே இருக்க
ஆர் முகத்திலே விழிக்க மேனாட்டுக்குப் போகிறேன் -என்று அழ –
பட்டர் -த்ருணத்துக்கும் அகப்பட பரமபதம் கொடுத்த சக்கரவர்த்தி திருமகனுக்கு பிள்ளைகளுக்கு -குசலவர்களுக்கு –
திரு நாடு கொடுக்கையில் அருமை இல்லை இறே-
ஜகத்தை ரஷிப்பிக்கைக்கு அன்றோ பிள்ளைகளை வைத்துப் போயிற்று –
அப்படி அத் தேசத்துக்கு ஒருவர் இல்லையே -என்று அருளிச் செய்து அருளினார் –
————————————————————————–
ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் –
அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று
கிருஷ்ண அவதாரத்திலும் ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து
அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் –
இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்-
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—————–15-
பதவுரை
வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி –
கொடிதான யுத்தத்திலே சாரத்யம் பண்ணியும் -படை பொருத்தியும் சஞ்சரித்தது –
அது தன்னிலும் தான் பிரதானனாய்ச் சிலரைக் கார்யம் கொண்டு தெரியப் பெற்றதோ –
ஜயம் உள்ளது அவன் தலையிலேயாய் -அம்பு விழுவது தன் மேலேயாம்படி முன் நின்றான் ஆயிற்று –
இனி யுத்தத்திலே ரதியைச் சீற நினைத்தவன் சாரதியை இறே முந்துற தலை அழிப்பது
அவனை உயர வைத்து -எதிரிகள் சாயுதராய் வர –
தான் உடம்புக்கு ஈடிடாதே சாரத்யம் பண்ணித் திரிந்தான் ஆயிற்று –
வெஞ்சமத்துத் தேர் கடவி -திரிந்தது-
படை பொருத்தித் திரிந்தான் ஆயிற்று -பகதத்தன் விட்ட அம்பு திரு மேனியிலே பட்டது இறே –
உரஸா பிரதி ஜக்ராஹ பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -பார -த்ரோண-29-18-
அர்ஜுனன் மார்பில் அம்பு படாமல் தன் மார்பையோக்க –
அவன் மார்பில் அம்பு படாமல் பிராட்டி மார்பை ஏற்றபடி –
அக்ரதஸ் தே கமிஷ்யாமி -அயோத்யா -27-7-அடியாரைக் காக்க முன் செல்பவள் -என்னுமவள் இறே
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய்-
மாயா மிருகத்தின் பின் போய் தன்னுயிரை யாய்த்துப் பிரித்தது –
கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே படர்ந்தானை -பெரிய திருமொழி -2-5-6-என்னக் கடவது இறே –
பிராட்டிக்கு ஆகர்ஷமான பொறியை -புள்ளியை -யுடைத்தான மறியானது திரிய –
அத்தைப் பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன
துஷ்ட மிருகம் ஆகையாலே பிடி கொடாதே கை கழியப் போக -தானும் அதன் பின்னே ஓடித் திரியக் கார்யம் பார்த்தான் ஆய்த்து-
பிராட்டியோட்டை பிரிவளவும் செல்ல விளைத்தது இறே
மான் பின் போய்ப் பிரிந்தது சீதையை –
ரஷிக்கிற இடத்தில் இருவரும் கூட இருந்து ரஷிக்கப் பெற்றோமோ –
கூடி இருப்பதுவும் பரார்த்தமாக –பிரிவதுவும் பரார்த்தமாக –
சீதையை –
பிராட்டியை -ப்ராணேப்யோ கரீயசீ -ஆர -10-21-என்னும் விஷயத்தை –
புரிந்ததுவும் கண் பள்ளி கொள்ள-
அனுஷ்டித்ததுவும் -என்னுதல்-ஆதரித்ததும் என்னுதல் –
கண் பள்ளி கொள்ள –
கண் -என்றது இடமாய் -அதாவது
தறைக் கிடை –
த்ருணா சயனே அநு சிதே-பால -22-23-என்று என்றும் கூப்பிடும் படியானவன் இறே
இருப்பதுவும் கூடத் தேட்டமாம்படி கிடக்கிறான் —
காட்டிலும் அடைவு படத் திரியப் பெறாது ஒழிவதே –
கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ காகுத்தா -பெருமாள் திரு -9-3-
இன்று இப்படி போகவிட வல்ல நான் அறிந்து பொறுக்கும் படிக்கு ஈடாக வளர்க்கப் பெற்றிலேன் –
கண் பள்ளி கொள்ள –
பிராட்டியைப் பிரிந்த சோகத்தாலே இளைய பெருமாள் பர்ண சய்யையைப் படுக்க
அதுவும் அறியாதே தறை யிலே கண் வளர
அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–
திரு அநந்த ஆழ்வான் மேலே சாய்ந்தாலும் திரு மேனிக்கு என் வருகிறதோ என்று
அனுகூலர் அஞ்சும்படியான சௌகுமார்யம் உடையவனுக்கு அழகிதாக வந்து விழுந்தது –
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு -திருப் பல்லாண்டு -9- என்னா நின்றார்கள் இறே
தாளால் உலகம் அளந்த அசைவே கொல் வாளா கிடந்து அருளும் வாய் திறவான் –
நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத் தணை – நான்முகன் -35-
குளிர்ந்த இடத்தே படுக்கைக்கு அடி ஸ்ரமத்தின் யுடைய அதிசயம் என்று இருக்கிராறிவர்
அழகியதே –
இஜ் ஜகத் ரஷணம் பண்ணப் பெறாதே யாய்த்து இருக்கிறது –
அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு –
திரு வநந்த ஆழ்வான் மேல் பள்ளிக் கொள்ளக் கடவ ஸூகுமாரனானவனுக்கு
தறைக் கிடை கிடக்க வேண்டுவது –
நல்லுயிரைப் பிரிந்து திரிவது
அயல் யேசும்படி யுத்தத்திலே திரிவதாய் ஜகத் ரஷணம் பண்ணுகை சால அழகியதாய் இருந்ததீ
இஃது ஒரு ஆஸ்ரித ரஷணம் இருக்கும்படியே
முதல் அழியவோ ஆஸ்ரித ரஷணம் பண்ணுவது -என்று நோவு படுகிறார் —
————————————————————————–
அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி
நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ –
இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால்
இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் –
எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க
நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ -என்கிறார் –
அகர்ம வச்யனானவன் கர்மவச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ –
ஆன பின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ-
தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-
பதவுரை
தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருதாலும்
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்
மாலை–அப்பெருமானை
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;
(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்;)
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.)
தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்-
பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்றும் –
தவாஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -60 -என்றும் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
இவ்வாத்மா தனக்குக் கூருபட்டது சேஷத்வம் –
எம்பெருமானுக்கு கூருபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் –
ஆத்மதாச்யம் ஹரேஷ் ஸ்வாம்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னக் கடவது இறே-
தான் அறியானேலும்-
இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் –
தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் –
சமயக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
தான் அறியானேலும் –
இப்படி பிரமாண பிர சித்தியாலும்
ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள் எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-
மனத்தடைய வைப்பதாம்-
செய்கிறார் செய்யும் இத்தைக் கண்டாகிலும்
எம்பெருமானை ஆஸ்ரயிப்பது-
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரோ ஜன -ஸ்ரீ கீதை -3-21-என்னும்படி யாகிலும்
சர்வேஸ்வரனை ஹ்ருதயத்திலே வைப்பது –
அங்கனே அன்றிக்கே
மனத்து அடைய வைப்பதாம் மாலை –
இங்கனே இருக்கச் செய்தே இவனுடைய ஹ்ருதயத்திலே சர்வேஸ்வரன் தன உடைமையைப் பெறுவானாக வந்து
புகுரப் புக்கால் விலக்காத மாத்ரமே உண்டாய் இருப்பது –
அவன் மால் இறே -அவன் வ்யாமுக்தன் ஆகையாலே தானே வந்து மேல் விழப் புக்கால்
அப்போது இடம் கொடுப்பது இவ்வளவே இறே இவனுக்கு வேண்டுவது
இனி மேல் உள்ளது அவனுக்கே பரமாய் இருக்கும் இறே –
வடுக நம்பி -எம்பெருமானைப் பெறுகைக்கு சாதனங்கள் ஒன்றும் தேட வேண்டா –
அசலகத்திலே ஸ்ரீ வைஷ்ணவன் திருநாமம் இட சஹிக்க அமையும் -என்றார் –
ந ச மாம் யோப்ய ஸூ யதி-ஸ்ரீ கீதை -18-67-
நஞ்சீயர் -திருவரங்கப் பெருமாள் தாசர்க்கு -எம்பெருமான் என்றால் நெஞ்சு நமக்குத் தகையாதபடி பண்ணின
இத்தை மறவாதே கொள்ளும் -என்று அருளிச் செய்தாராம் –
இத்தால் –
ஒரு ருசி மாதரம் இவன் தலையில் உண்டாமது ஒழிய பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றபடி
இதுக்குத் திருஷ்டாந்தம் மேல் -அதாகிறபடி எங்கனே -என்னில்
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லாள் –
காடான திடரை ஏரியாகப் ப்ரவர்த்தித்து -வருகிற நீரைப் புறம்பு போகாத படி
தகைததுக் கொள்ள வேண்டுவதே யன்றோ ஏரிக்கு உள்ளது
இத்தனை போக்கி -மாரி யார் பெய்கிற்பார் மற்று –
வர்ஷம் இவன் அதீனமோ –
அதுக்குக் கடவனான பர்ஜான்யன் -அன்றோ என்கிறார்
இவன் சேதனனான வாசிக்கு அத்வேஷ மாதரம் உண்டானால்
அவ்வருகான ப்ராப்தியைப் பண்ணித் தர்வான் அவன் அன்றோ –
அன்றிக்கே
இங்கனே ஒருபடியாக நிர்வஹிப்பாரும் உண்டு –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -முண்டக -1-1-10- என்றும்
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -ஸ்வே-6-8-என்றும் சொல்லுகிறபடியே
ச்வதஸ் சர்வஜ்ஞன் ஆனவனுக்கு இவன் அடிமை யானதும் -சர்வ நிர்வாஹகன் ஆனதும் –
இவன் அறியாத படியாலே தனக்கு சேஷத்வ ஜ்ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும்
சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு வந்து வைப்பதாமீ -என்று ஷேபமாக்கி
அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் –
இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ –
இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ
அவன் தானே ருசி ஜனகனாயும்
பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி
இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ -என்றபடி
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமிது
மனுஷ்யரை பிரேரித்து ஏரி கல்லுவிப்பானும்
அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று –
இந்த்ரனை இடுவித்து மழை பெய்விப்பானும் அவன் தானே அன்றோ –
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமிது –
ஹிருதயத்தில் அவித்ய கர்ம வாசன ருசிகளைத் தவிர்க்குமது இ றே-அவன் செய்யுமது
அதுவும்
மாரி யார் பெய்கிற்பார் மற்று –
குணாவிஷ்காரம் பண்ணுவானும் அவனே அன்றோ
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி பெய்கிற்பார் மற்று யார் -என்று
பொருள் சொல்லும் போது திருஷ்டாந்தம் கிடையாது –
பகவத் பராவண்ய அனுசந்தானம் கனத்து இருப்பார்க்குச் சொல்லில் பரிக்ரஹிக்கும் அத்தனை போக்கி அல்லது –
நினைத்தபடி சொல்லலாம் பொருள் அன்று
அதவா
எம்பெருமான் தனக்கு இவன் அடிமைப் பட்டது அறிந்திலனே ஆகிலும் -தனக்கு அடைத்தத்தைச் செய்வான்
வேதாந்தத்தில் பழக்கத்தாலே சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் என்று அறிந்து இருந்தால் என்றுமாம்
மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும்
ருசி மாத்ரமே உடையானாகை என்றும்
ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்
ஓன்று பட்டரது
ஓன்று திருமலை நம்பியது
ஓன்று ஆழ்வானது-
————————————————————————–
இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –
நாட்டில் ஆஸ்ரயணீயராய் பிரசித்தரான ப்ரஹ்மாதிகளும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமத லாபம் பெற்ற பின்பு
இனி நமக்குஎல்லாம் ஆஸ்ரயணீயன் அவனே அன்றோ என்கிறார்
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர -மகா நாராயண உபநிஷத் -11-13-என்றபடி
இவர்களும் அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அன்றோ
லப்த ஸ்வரூபர் ஆகிறது என்று கீழே -12 பாசுரத்தில் சொல்லிற்று –
பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் -என்கிறத்திலே
ஒன்றிலே சேஷிகள் இல்லை என்கிறது அங்கு
இங்கு ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறது
அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று
இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது
பெரிய கிழாய் கிழாயானாரும் வெறுமை காட்டி அன்றோ பெறுகிறது -என்கிறார்-
மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-
பதவுரை
வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆச்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாவர்?
மற்று ஆர் இயலாவார் –
சர்வேஸ்வரனை ஒழியஓர் இயற்றியால் அறியப்படிவார் யார் –
வேறு ஆஸ்ரயிக்கப் படுவார் யார்
இத்தாலே அவனே ஆஸ்ரயணீயன் -என்றபடி
வானவர் கோன் மா மலரோன்-
தேவர்களுக்கு எல்லாம் பிரதானனான இந்த்ரன் –
திரு நாபி கமலத்தை வாச ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மா –
சுற்றும் வணங்கும் தொழிலானை –
நேர் கொடு நேர் ஆஸ்ரயிக்கப் பெறாதே கடக்க நின்று பாடே பக்கமே ஆஸ்ரயிக்கும் படியான
தொழிலை யுடையவன் -என்னுதல்
அனுகூல வ்ருத்திகளைப் பண்ணும் தொழிலை யுடையவன் என்னுதல்
ஈஸ்வரனுடைய சேஷ்டிதங்களை அவர்கள் சுற்றி வணங்குவர் என்னுதல்
இவர்களும் அவனை ஆஸ்ரயித்து இறே தந்தாம் அபிமதம் பெறுகிறது –
தொழிலானை –
ஆஸ்ரயணீய பிரகாரங்களை யுடையவனை -இவர்கள் இப்படிப் படா நிற்க
மாற்றார் இயலாவார் –
வேறு யத்னம் பண்ண வல்லார் யார் -என்றுமாம்
ஒற்றைப்பிறை யிருந்த செஞ்சடையான் –
ஒற்றைப்பிறை -தனிப்பிறை -ஒப்பிலாத பிறை என்றபடி
ஒரு பிறையை சிவந்த ஜடையிலே தரித்தானாய் -ஸூக பிரதானனான ருத்ரன் ஆவவன்
பின் சென்று மாலைக் கொண்டு –
தன் நெஞ்சிலே மாலைக் கொண்டு -சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொண்டு
பின் சென்று –
அவனை அனுவர்த்தித்து
குறை இரந்து-
அநந்தரம்-தன்னுடைய குறையை அபேஷிதது
தான் முடித்தான் –
அத்தைத் தலைக் கட்டப் பெற்றான் –
தன்னுடைய அபேஷிதங்களைப் பெற்றான் –
ஆன பின்பு அவனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ என்கிறார் –
————————————————————————–
தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீயனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –
அவனை ஒழிந்த அல்லாதார் சிலர் நோக்கும் போது தந்தாம் ஸ்வரூபம் குறையாதே நின்று நோக்குவார்கள் –
அங்கன் அன்றிக்கே தன்னை அழிய மாறி நோக்கும் -என்கிறது
கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-
பதவுரை
குறள் உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம–பூமி முதலிய லோகங்களை
கொண்டத–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒருகாலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்
கொண்டது இத்யாதி –
அவன் ஜகத் ரஷணம் பண்ணும் படிகள் சொல்லுகிறது –
அரியத்தைச் செய்து -இது பிராப்தம் செய்தோம் -என்று இரா நின்றான் –
கொண்டது உலகம் குறள் உருவாய் –
ஆஸ்ரிதர்க்காக வாமன வேஷத்தைக் கொண்டு -தன்னை அர்த்தி யாக்கி யாய்த்து லோகத்தை கொண்டது –
தன்னது தான் கொள்ளும்போது இரந்து கொள்ள வேணுமோ –
இரந்து கொள்ளும் போது தானே நின்று கொண்டால் ஆகாதோ –
கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது –
நாட்டில் ஒருவர் கொள்ளாத நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டாய்த்து –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் மார்பில் உகிரை நாட்டிற்று –
கோள் அரி-பெரு மிடுக்கன் ஆன நரசிம்ஹம்-
ஒரு வடிவைக் கொண்டு இவ்விரோதியைப் போக்கல் ஆகாதோ
ஒண் திறலோன் –
ஒள்ளிய மிடுக்கு
மார்வத்து உகிர் வைத்து –
கை தொட்டு ஆஸ்ரிதர் விரோதிகளைப் போக்கும் படி
உகிர் வைத்து –
திரு ஆழியை இட்டுக் கீண்டால் ஆகாதோ –
இத்தனை விவேகம் உண்டாகில் சங்கல்பமே யமையாதோ –
உண்டதுவும் தான் கடந்த ஏழ் உலகே –
ஒரு அனுகூலர்க்கு பிரகலாதனுக்கு -உதவவிட்டால் ஆகாதோ –
வயிற்றிலே வைத்ததுவும் ஒரு நாள் தன் திருவடிகளுக்கு உட்பட்ட பூமியையே –
அன்றிக்கே ஒரு-
தாமரைக்கண் மால் –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் -அனைத்துலகும் உடைய அரவிந்த லோசன்னை -திருவாய் -6-5-10-
ஸ்ரீ வாமனனாய் இரந்து கொண்டது பூமியை –
ஸ்ரீ நரசிம்ஹமமாய் ஹிரண்யனுடைய மார்பைக் கீண்டது
ஒரு நாள் தான் அளந்து கொண்ட ஏழுலகை உண்டது –
வான் கடந்தான் –
அபரிச்சேத்யனானவன்-
வானிலும் பெரியன வல்லன் -திருவாய் -1-3-10-என்கிறபடியே
ஆகாசத்தை அளவிடிலும் தன்னை அளவிட ஒண்ணாதவன் –
அன்றிக்கே –
வான் -என்று வானில் உள்ளாரை ஆக்கி நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் -என்றுமாம்
வை லஷண்யம் பார்த்தால் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு
அன்றிக்கே –
வான் கடந்தான் -வானை அளந்தவன் -ஸ்வர்க்கத்தை யளவிட்டவன் -என்றுமாம் –
செய்த வழக்கு
இப்படி தான் செய்ததை தான் ரஷகன் ஆகையாலே
தன்னுடமைக்காகச் செய்கையால் ப்ராப்தம் செய்தோம் -என்று இரா நின்றான்
வான் கடந்தான் செய்தனவானவை ப்ராப்தம் –
அதாகிறது –
பிறர்க்கு ஒரு செயல் செய்தானே இருக்கை அன்றிக்கே கடவப்படி செய்தான் என்று தோற்றி இருக்கை-
ஸ்வாமி யான முறையாலே செய்தான் –
உடையவன் உடைமையை ரஷிக்கை பிராப்தம் இறே –
————————————————————————–
அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் –
இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் –
வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி——————19-
பதவுரை
திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது)
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததே யென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்
வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்-
ரஷணம் பண்ணுகை வழக்கே யாகிலும் -ஸ்ரீ வாமனனாய் நிரதிசய ஸூ குமாரனான நீ
வலிதான சகடத்தை நிரசித்தது அப்ராப்தம் கிடாய் –
பிள்ளையாய் இருந்து பெரிய சகடத்தை முறித்தது வழக்கன்று –
வலி சகடம் செற்றாய் –
வலியாலே சகடத்தை பங்கம் பண்ணினாய் -என்றுமாம்
இத்தால் செய்தது வழக்காமோ -என்றபடி
செற்றாய் –
வெற்றி உண்டானது பாக்கியம் –
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –
செய்ததற இது உற்றது -இனி ப்ராப்தமாம் இத்தனை அன்றோ என்னில் -இது இறே நானும் வேண்டா என்கிறது
அது செய்தற்றேதே யாகிலும் அத்தைப் பிராப்தமாக புத்தி பண்ண வேண்டா
நீ மதிக்க வேண்டா –
இத்தைச் செய்தால் அனுதாபம் இன்றிக்கே ஒழிவதே –
இவரும் இது பிராப்தம் என்று அனுமதி பண்ணுவார் ஆகில் அவன் இன்னம் அதிலே கை வளரத் தொடங்குமே
புழுக் குறித்தது எழுத்தான மாத்திரம் அது –
ஒருக்கால் இங்கனே வாய்த்ததாகில் இது கடவதோ
குழக்கு அன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை –
அதுக்கு மேலே நீ ஒன்றைக் கொண்டு ஒன்றை எறிந்தாயான படி எங்கனே –
அவை இரண்டுக்கும் நினைவு ஒன்றே அன்றோ –
ஒரு அசுரனான குழக் கன்றைக் கொண்டு அசுரவடிவேத் தீதான விளவின் காய்க்கு எறிந்தாயான இது தப்பு
இருவரும் கூடி கிருத சங்கே தரை வந்து தீங்கு செய்யிலோ என்று வயிறு பிடிக்கிறார்
திரு மாலே-
பிராட்டியும் நீயுமாய் இருந்து போது போக்கை அன்றோ உன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த செயல்
இவை யுனக்குப் போருமோ
அன்றிக்கே
பிராட்டி பரிய இருக்கும் விஷயம் படும் பாடே என்றும்
திருமாலே -ஜகத்து அநாயகம் ஆகாதோ
மங்களாந்ய பிதத் யுஷீ -பால -16-21-
பார் விளங்கச் செய்தாய் பழி——
பாரிலே -பூமியிலே பிரகாசிக்கும்படி பழியைச் செய்தாய் -தப்பைச் செய்தாய்
பழி-
விபூதியிலே ஏக தேசத்தை ரஷிக்கப் புக்கு உபய விபூதியையும் இழக்கப் பார்த்தாய்
தம்முடைய ச்நேஹத்தால் வழக்கன்று -பழி என்று இருக்கிறார்
எம்பெருமான் தான் புகழ் என்று இரா நின்றான் –
இவர் இது அந்யதா ஜ்ஞானம் என்று இருக்கிறார் –
————————————————————————–
பகவத் பஜனத்திலே அடி இட்டாரோடு –
தலைக் கட்டப் பெற்றாரோடு -வாசி அற
எல்லாரும் க்ருதக்ருத்யர் -என்கிறார் –
கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து –
இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் –
பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்-20-
பதவுரை
பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்னராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).
பழி பாவம் கை யகற்றிப் –
நாட்டார் பழி சொல்லுமவையும் -அதன் நிபந்தனையும் தவிர்த்து
பழி பாவம் –
தான் செய்யாது இருக்க வந்தேருவதான அப கீர்த்தியும் –
புத்தி பூர்வகமாகப் பர ஹிம்சா ரூபமாக அனுஷ்டிக்கையால் வந்த பாபமுமான -இவற்றைக் கை கழியப் பண்ணி –
அடி யுண்டாயும்-அடி இன்றிக்கேயும் உள்ள விரோதிகளைப் போக்கி –
இவன் செய்யாதே இருக்கச் செய்தே வந்தேறுமதுக்கு பலம் புஜிக்க வேணுமோ என்னில் –
அது தானும் ஒரு பாப பலம் இறே-
ஆகையாலே அது தனக்கு யோக்யமான நிலையைக் குலைத்துக் கொண்டு நிற்க வேணுமே
பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம்-
எப்போதும் உன்னை சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே வழி பட்டு நின்றாராய்-
ஆஸ்ரயிப்பார் வாழ்வராம் – -அவர்கள் வாழ்வு பெறுவாராம் –
உபாய அனுஷ்டானம் வாழ்வாய் -புருஷார்த்த சித்தியும் வாழ்வாய் இருக்கை-
ந ஸூகாத் ஸூகம் லப்யதே -என்கிறது இல்லையாகாதே -சாதனா சாத்திய விபாகம் இல்லை –
மாதோ –அந்தோ –
இஃது ஒரு இடைச் சொல் இருக்கிறபடி –
இது அவ்விஷயமாய் ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் என்கிறது –
வழுவின்றி-இத்யாதி –
சர்வேசவரனுடைய திரு நாமங்களை விச்சேதம் இல்லாத படி -அழகிதாக அனுசந்தித்து
அழகிதாகச் சொல்லுகைக்கு அடியான -வழுவு இன்றி -பழுது இன்றிக்கே இருக்கிற
நாராயணன் உடைய திருநாமங்கள் –
நாரணன் தன் நாமங்கள் –
தாய் பேர் சொல்லுமா போலே –
நன்குணர்ந்து –
பக்தியாலே உணர்ந்து
நன்கேத்தும்-
ஏத்தினால் அல்லது செல்லாமை –
காரணங்கள் –
ஹேதுக்கள்-அவை யாவன –
இதுக்கடியான பக்தியை யுடையராய் –
அதுக்கடியான ருசியை யுடையராய் –
அதுக்கடியான ஸூ க்ருதத்தை யுடையராய் –
அதுக்கடியான பகவத் கடாஷத்தை யுடையவர் ஆனவர்களும்
பழி பாவம் கை யகற்றி -பலகாலும் நின்னை வழி வாழ்வார் ஆனவர்களும் வாழப் பெறுவார்
இவ்விரண்டு அதிகாரிகளும் அழகியதாக அனுசந்திக்கப் பெறுவர்கள்-
இத்தால் –
உனக்குப் பரியப் பிறந்தார் உன் பிரசாதம் உடையார் அன்றோ -என்றபடி
தாரணங்கள் தாமுடையார் –
என்ற பாடமான போது-தாரணம் -என்றது த்ருதி யுடையார் –
அதாவது
பகவத் விஷயத்திலே யூன்றி த்ருதியை உடையராய் இதர விஷயங்களால் சலிப்பிக்க ஒண்ணாதே இருக்கை –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply