ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -1-12–

ஸ்ரீ சர்வேஸ்வரன் –
லோக த்ருஷ்டியாலும் –
வேத த்ருஷ்டியாலும் –
பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் –
மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –

திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே –
ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் –

சதுர் முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத்வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-
ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று
பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———————————————–

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

பதவுரை

நாராயணன்–பரம புருஷனானவன்
நான்முகனை–பிரமனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்–அந்தப் பரமனும்
தான்–தானே
முகம் ஆய்–முக்கியனாயிருந்து
சங்கரனை–சிவனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
ஆழ் பொருளை–(ஆகவே, முழு முதற் கடவுள் ஸ்ரீமந் நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்–அடியேன்
முகம் ஆய்–முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு–இத் திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்–உங்கட்கு அறிவிக்கத் தொடங்குகின்றேன்
ஸம்ஸாரம் வர்த்தகம் அவர்களது -அதனால் நான்முகன் முக்யர்
நிவர்த்தகம் இவரது -இதனால் இவர் முக்யர்
நீர்–நீங்கள்
தேர்ந்து–ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்–(இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.

நான் முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி
ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –
ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –

அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –

ஆழ்  பொருள்
மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –

சிந்தாமல் -இத்யாதி
நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

————————————————————————–

ஸ்ருதி பிரக்ரியையால்  நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள்  கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –

இதில் –இதிஹாச பிரக்ரியையால்
சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு

ப்ரஹ்மாதி களுக்கு   சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்

தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ
ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற
ஸ்லோகத்திற் படியே ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

பதவுரை

தேருங்கால்–“ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று–பர தெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந் நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை–அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்–ஒருவரும் அறியமாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே–(வேத வேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
எத் தவம் செய்தார்க்கும் –(எப்படிப்பட்ட ஸாதநாநுஷ்டா நாங்களைப் பண்ணினவர்கட்கும்
முடிவது–முடிவில் பலனையளிப்பது
ஆழியான் பால் அருள்–எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.

தேரும் இத்யாதி –
நிரூபித்தால் ஈஸ்வரன் ஒருவனே என்று சொல்லா நிற்பார்கள் –
எத்தனையேனும் அளவுடையாரும் அவன் பெருமையை யுள்ளபடி அறியார்கள் –
ஆராயப் புக்கால் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இதுவே –
ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும்
எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

————————————————————————–

ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்
முட்டக் காண வல்லார் இல்லை –
நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

பதவுரை

(எம்பெருமான்)
பாலில்–திருப்பாற் கடலில்
கிடந்ததுவும்–சயனித்தருளு மழகையும்
அரங்கம்–திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்–பொருந்தி வாழ்வதையும்
பண்டு–முன்பொருகால்
ஆலில்–ஆலந்தளிரில்
துயின்றதுவும்–பள்ளி கொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்–யார் அறிய வல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை–இப் பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
வானவர் தம் மெய் பொருளை–நித்ய ஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை– (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள்
கண் வளரும் அரும் பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
யான் அறிந்த ஆறு–அடியேன் அறிந்த விதம் என்ன!

பாலில் இத்யாதி –
ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-

சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-

ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு
வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –

சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து
ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –

ஞாலத்தொரு பொருளை -என்றது
கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்
ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே
அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை -என்றுமாம் –

————————————————————————–

சர்வேஸ்வரனோடு ஒக்க  வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று
ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –

பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து
என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன்
-என்கிறார் என்றுமாம் –

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

பதவுரை

ஆறு–கங்கா நதியை
சடை–தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்–மறையச் செய்து தாங்கிக் கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கோன் தன்னோடும்–தேவாதி தேவனான ஸர்வேஸ் வரனோடு
கூறு உடையன் என்பதுவும்–ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே–அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை–வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறு பெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை–எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸர்வ ஸப்த வாச்யனாய்) உள்ளவனுமான
எம்மானை–எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்–சுருங்கப் பேசினேனித்தனை.

ஆறு- இத்யாதி
திருவடிகளை விளக்கின கங்கா ஜலத்தைத் தலையிலே தரித்து
சாதகனான ருத்ரன் ப்ரஹ்மா சர்வேஸ்வரன் உடன் ஒக்க ஈஸ்வரர்கள் என்னும்
இதுவும் கொள்ளப் படுவதோ –

அன்றிக்கே
ஜகத் ஐஸ்வர் யத்தை  கூறுடையர் என்னும் இவ்வர்த்தம் கொள்ள முடியுமோ என்றுமாம்

வேறு -இத்யாதி
ஆதித்ய சன்னிதியில்  நஷத்ரங்கள் யுண்டாய்-வைத்தே
இல்லாதார் கணக்கானாப் போலே தன்னுடைய உயர்த்திக்கு ஈடாக சகல பதார்த்தங்களும் யுண்டாய்
வைத்தே இல்லாதார் கணக்காம் படி நிற்பதும் செய்து 
தனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத்  திரளச் சொன்னேன்

எப்பொருட்கும் சொல்லானை –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்

————————————————————————–

நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று எம்பெருமான் அருளிச் செய்ய-
இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து திருவவதாரம் பண்ணி
ரஷகன் ஆகையாலே
-என்கிறார் –

எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இறே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று
எம்பெருமான் அருளிச் செய்ய-

ஜகத்து அவனுக்கு   பிரகாரம் என்னும் இடத்துக்கு உறுப்பாக-
உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-
சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் ஆகையாலே
சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறா
ர் -என்றுமாம் –

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

பதவுரை

தொகுத்த வரத்தன் ஆய்–(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்–ஒருவரிடத்திலும் தோல்வி யடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்–மார்பை
வகிர்த்த–இரு பிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்–வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்–திருக் கைகளை யுடைய
மாலே-ஸர்வேஸ்வரனே!,
நீ–நீ,
உகத்தில்–பிரளய காலத்தில்
உள் வாங்கி–(உலகங்களை யெல்லாம்) உப ஸம்ஹரித்து உள்ளே யிட்டு வைத்து
ஒரு நான்று–(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில்
உயர்த்தி–(அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச் செய்து
நீயே–இப்படிப்பட்ட நீயே
நான்கும்–(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால் வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்–அந்தராத்மாவானாய்
அறி–இதனை அறிவாயாக.

தொகுத்த -இத்யாதி –
திரட்டின வரபலத்தை உடையனாய்-வரப்ரதாக்களான ப்ரஹ்மாதி களுக்கு
தோலாது இருக்கிற ஹிரண்யன் யுடைய உடலை இரு  கூறு செய்து
வளைந்த திரு வுகிரோடு கூடின திருத் தோள்களை யுடையையாய்
ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சானவனே-

இதுக்கு கருத்து –
அவதாராதி களாலே பிரதிகூலரை நிரசித்து-ஜகத் ரஷகனானாய் –
இனி அந்த ரஷ்ய ஜந்துக்களிலே ஒருவன் ஈஸ்வரன் ஆக மாட்டான் -என்று

உகத்தில் -இத்யாதி –
ஒருக்கால் வந்து யுகம் தோறும் திருவவதாரம் பண்ணுதி –

சிருஷ்டி என்றுமாம் –

சிருஷ்டி காலத்திலே கார்யரூப ஜகத் பரிணதனான நீ என்றுமாம் –

உள் வாங்கி நீயே –
சம்ஹரிக்கிறாய் நீயே –

தன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்

அரு நான்கும் ஆனாயறி-
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-

இத்தை புத்தி பண்ணு

தோலா தான் மார்வம் -என்றது
பகவத் பரத்வம் பொறாதார் வத்யர் என்றும் படியைக் காட்டினார் –

———————————————————–

இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத
பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-

பதவுரை

சமணர்–ஜைநர்கள்
அறியார்–உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர்–பௌத்தர்கள்
அயர்த்தார்–பிரமித்தார்கள்
சிவப்பட்டார்–சைவ மதஸ்தர்கள்
சிறியார்–மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்–இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய–பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை–ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை–திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
ஏத்தாதார்–(இவர்கள்) ஸ்துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்–ஆகையினாலே
இன்று–இப்போது
ஈனவரே–(இவர்கள்) நீசர்களே யாவர்.

அறியார் -இத்யாதி –
சமணர் என்றும் அறியார்

பௌத்தரும் மதி கெட்டார்-

சொல்லப் புகில் எம்பெருமானுடைய ஈஸ்வரத்வம் அறிய அளவில்லாதார்
அவனுடைய விபூதி பூதனான சிவ சம்பந்தி களானார்கள்

வெறி -இத்யாதி –
சர்வ கந்த -என்னும்படி நிரதிசய போக்யனாய்-
குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனாய் –
அதுக்கு அளவன்றிக்கே -ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமுக்தனாய்
அதுக்கடியாக ஸ்ரீ ய பதியானவனை –

ஏத்தாதார்  ஹேயரே –
ஈனவரே
   –

ஆதலால் இப்போது-

————————————————————————–

அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-
நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே
உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

பதவுரை

நாரணனே–நாராயணனே!,
இன்று ஆக–இன்றைக்காகவுமாம்
நாளையே ஆக–நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக–இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்–உன்னுடைய கிருபை
என் பாலதே–என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக–நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்–நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ–நீயும்
என்னை அன்றி இலை–என்னை யொழிய வேறொரு ரஷ்யனை உடையை யல்லை காண்.

இன்றாக -இத்யாதி –
இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –

நன்றாக -இத்யாதி –
அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை
அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு
வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –

என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய்
உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே

அப்படியே
நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்

நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை அன்றி இலை-
இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று
நடுவே
பிரமாணத்தைப்-நாரணனே -என்று  பேர்த்திடுகிறார்-

இங்கனே இருக்கை எனக்கு ஸ்வரூபம் -என்றுமாம் –

————————————————————————–

நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-
உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க
உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-
தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை–8-

பதவுரை

என் நெஞ்சே-எனது மனமே!
ஈசனை வென்ற–ருத்ரனை ஜயித்த
சிலை கொண்ட–வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா–பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்–கொத்துப் போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை–லங்கா புரியை
ஈடு அழித்த–சீர் கெடுத்த
கூர் அம்பன் அல்லால்–கூர்மை தாங்கிய அம்புகளை யுடையவனான இராம பிரானைத் தவிர்த்து
குறை–விரும்பத் தகுந்த
மற்ற துணை–வேறொரு துணைவன்
இலை–நமக்கு இல்லை.

இலை துணை -இத்யாதி –
பகவத் விஷயத்திலே அபிமுகமான நெஞ்சே

பண்டு ருத்ரனைத் தான் வென்ற வில்லை
ஸ்ரீ பரஸூராமாழ்வான் கையில் நின்றும் வாங்கின சர்வேஸ்வரன் –

செங்கண்-
தேவர்களுக்கு  வந்த  விரோதிகள் பக்கல் சீற்றத்தாலே சிவந்த திருக கண்களை யுடையனாகை-

சோர வித்யாதி –
ஒன்றுக்கு ஓன்று சேராதே கொத்தான பத்துத் தலையை யுடைய ராவணனதான
அப்ரவிஷ்டமான லங்கையைக் கிட்டி யழித்த கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது
நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –

————————————————————————–

அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில்
அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக  மாட்டார் –
எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –

நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து
எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

பதவுரை

பிரமதேவன்
குறை கொண்டு–நைச்யாநுஸந்தானம் செய்து கொண்டு
குண்டிகை நீர்–கமண்டல தீர்த்தத்தை
பெய்து–வார்த்து
மறை கொண்ட–வேதங்களிலுள்ள
மந்திரத்தால்–புருஷ ஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி–மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு–(எம்பெருமான் உலகளந்தருளின) அக் காலத்தில்
அண்டத்தான் சே அடியை–அந்த ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற–விஷ கண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்–விளக்கினான்.

குறை  இத்யாதி –
தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை தெரிவித்து
சதுர் முகன் தன்னுடைய குண்டிகையில் தருவித்த தர்ம தேவதையான நீரை வார்த்து
வேதத்தில் ஸ்ரீபுருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு ஸ்துதித்து

விஷ பாநத்தால் வந்த பாதகம் வாராது ஒழிய வேணும் என்று
பாதகியான ருத்ரன் சிரஸ்ஸிலே ஏறும்படி கழுவினான்

சர்வேஸ்வரன் திருவடிகளை லோகத்தை அளந்து கொண்ட தசையிலே

அண்டத்தான் சேவடியை –
அண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திருவடிகளை –
ப்ரஹ்மன்  கழுவினான் –

————————————————————————–

எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்
ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

பதவுரை

ஆங்கு–பரமபதத்திலே
ஆரவாரம் அது கேட்டு–(நித்ய முக்தர்களுடைய) ஸாம கான கோஷத்தைக் கேட்டு
(அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து)
அழல் உமிழும்–விஷாக்நியைக் கக்குகின்ற
காண–ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே–ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
(நாம் ஸமர்த்தரேயாவோம்)
மா மலரான்–சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்–அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி–அழகிய திருமேனியை
யாம்–அநந்ய பக்தரான நாம்
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடைய ருத்ரனும்
வாழ்த்து–(எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே–அஸமர்த்தர்களே.

ஆங்கு ஆரவாரம் -இத்யாதி
லோகத்தை யளக்கிற தசையில் ஆரவாரத்தைக் கேட்டுத் தன் பரிவாலே
பிரதி பஷத்தின் மேலே அழலை யுமிழ்வதும் செய்து
மேகம் போலே அழகிய சீலத்தை யுடையனான திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவனுடைய
ஸ்ப்ருகஹணீயமான திரு மேனியை நாம் காண வல்லோம் அல்லோமோ –

மா மலரான் -இத்யாதி –
தாமரைப் பூவைப் பிறந்தகமாக யுடைய ப்ரஹ்மாவும்
சாதகனான ருத்ரனும் வாழ்த்த மாட்டார்கள்

அன்றிகே
பூங்காரரவு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-
பரிவின் கார்யம் ஆகையாலே
அடிக் கழஞ்சு பெறும் படியாய்   இருக்கிற
அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான் -என்றுமாம் –

————————————————————————–

ஆன பின்பு எம்பெருமானை
சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11-

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்–திருத்துழாய் மாலை
மன்னு–பொருந்தி யிருக்கப் பெற்ற
நீள் முடி–நீண்ட திரு வபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேஸ்வரனை
வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
வண் கை கூப்பி மதித்து–அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மகுடம் தாழ்த்தி–தலையை வணக்கி
தண் மலரால்–குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
வணங்கு மின்கள்–ஆஸ்ரயியுங்கள்,
வாய்–(உங்களுடைய) வாய்
வாழ்த்துக–(அவனைத்) துதிக்கட்டும்,
கண்–கண்கள்
காண்க–(அவனையே) ஸேவிக்கட்டும்
செவி–காதுகள்
கேட்க–(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.

வாழ்த்துக -இத்யாதி
வாயாலே வாழ்த்துங்கோள் –
கண்ணாலே காணுங்கோள் –
செவியாலே கேளுங்கோள்-
அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்

சூழ்த்த -இத்யாதி
சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து
ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய்
இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து
நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி

வழா –
வழுவாதே
நழுவாதே -என்றபடி

————————————————————————–

எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன
நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-
ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

பதவுரை

மதியார்–உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்–நால் வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ–சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்,
மதி–சந்திரனுடைய
கோள்–துன்பத்தை
விடுத்தாய்–போக்கி யருளினாய்
மடு–ஒரு மடுவிலே
கிடந்த–(சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை–பெரிய முதலையினாலுண்டான
கோள்–(கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்–நீக்குவதற்காக
ஆழி–திருவாழியை
விடற்கு–(அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்–நினைத்தருளினாய்
இரண்டும்–முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்–ஒன்றை யொன்று விட்டுப் போய்
இரண்டின்–அவ்விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு-சாப மோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்.

மதித்தாய் -இத்யாதி
உன்னை நினையாதார் தேவாது சதுர்வித யோநிகளிலே போய் விழும்படி சங்கல்ப்பித்தாய் –

வேதத்தில் சொல்லுகிறபடியே உன்னை அறியாதார் நசிக்கும்படி மதித்தாய் -என்றுமாம் –

அக்கோடியிலே உள்ளான் ஒருவனான சந்த்ரனை
அல்ப அநு கூல்யத்தைக் கொண்டு ஷயத்தைப் போக்க வேணும் என்று கருதிப் போனாய் –

மடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக
திருவாழியை விடுக்கைக்கும்
இரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –

இரண்டும்  போய் இரண்டின் வீடு
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய்
ஸூகிகளாம்படி -என்றுமாம்-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: