ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84—-

அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று –
வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-

பதவுரை

அனைத்து உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த–(பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான் தன்–பெருமை தங்கிய திருவாழி யாழ்வானைத் திருக்கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பெருமையை–மஹிமையை
அறிவார் ஆரே–அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த–அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி–பரமபத மார்க்க மென்னத் தகுந்த சரம ச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்–நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்–நான் முகனும்
காணான்–அறியமாட்டார்கள்.
(அவர்களே அறிய மாட்டாத போது மற்ற பேர்கள் அறிய மாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)

சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல  நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –
உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –
கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –
அவன் இத்யாதி –
பண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் தேசத்தையும் கூட -அதாகிறது –திரு நாடு -என்றுமாம்
பேராழியான்-
கையும் திரு ஆழியுமான ஸ்ரீ கிருஷ்ணன்
அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி –
அவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –

————————————————————————–

தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை  ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் -என்கிறார் ஆகவுமாம்-

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

பதவுரை

பதி பகைஞற்கு ஆற்றாது–ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி,
பாய் திரை நீர்பாழி–பாம்பின அலைகளோடே கூடின நீரை யுடைத்தான கடல் போலே குளிர்ந்த திருப் படுக்கையை
மதித்து–புகலிடமாக நம்பி
அடைந்த–வந்து பற்றின
வாள் அரவம் தன்னை–ஒளி பொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து–ஆதரித்து
அவன் தன்–அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய–வலிமை தங்கிய சரீரத்திலே ஏற விட்டவனும்
மாமேனி மாயவனை அல்லாது–சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி
ஒன்று வேறொன்றை
என் நா–எனது நாவானது
ஏத்தாது–தோத்திரம் செய்யாது.

குல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –
குளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு அபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து
அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான ஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து
ஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது

பதிப் பகைஞற்கு
ஜ்ஞாதியாய்ப் பகைவன் ஆனவனுக்கு
பாய்திரை நீர்ப்பாழி
கடல் போலே பரந்த படுக்கை -என்றுமாம்
மதித்து
பெரிய திருவடி பக்கலிலே காட்டிக் கொடுக்கையே கார்யம் என்று அத்யவசித்து -என்றுமாம்
வல்லாகம் –
சத்ருவே யாகிலும் சரணம் என்றாற்கு நிர் பயமாய் இருக்கலான திரு யுடம்பிலே ஏற்றிய
வத்யதாம் -யுத்த -17-29-என்ற  மஹா ராஜரைக் கொண்டே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ரஷித்தால் போலே –
மா மேனி மாயவனை –
இவனை ரஷிக்கப் பெற்றோம் என்று பூரித்த திருவுடம்பை உடையனாய் –
ரஷண யுபாயத்தை யுணர்ந்த ஆச்சர்ய பூதனானவனை ஒழிய ஆஸ்ரிதர் ஆனவர்களைக் கை கழிய விட்டுக்-கடக்க நிற்கக் கடவ
ருத்ராதிகளான வேறு ஒரு சூத்திர தேவதையை -என்னுடைய நாவானது புகழாது-

————————————————————————–

ஏவம்விதமான எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

பதவுரை

தீக் கொண்ட செம் சடையான்–நெருப்புப் போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக–தகுதியாக
என்றும்–எந்நாளும்
பூ கொண்டு–புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று–அநுஸித்து
வல்ல ஆறு–தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த–துதிக்க
மகிழாத–(இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்–ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு–திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு–நாவினால்
மானிடம்–மனிதர்களை
பாடேன்–பாட மாட்டேன்

நா இத்யாதி
என்னுடைய நாவாலே மனுஷ்யரைப் பாடேன்
நலமாக இத்யாதி –
நெருப்புப் போலே சிவந்த ஜடையை யுடைய ருத்ரன்-
துர்மானத்தைப் பொகட்டு தானே எழு ந்து அருளி இருக்கிற விடத்திலே சென்று
அங்குத்தை சௌகுமார்யத்துக்கு அனுரூபமான செவ்விய பூக்களை
என்றும் தன்னுடைய சர்வ சக்தியையும் கொண்டு அழகிதாக வைத்த திருவடிகளிலே பணி மாறிக் கொண்டு  –
மகிழாத -இத்யாதி
இத்தால் முன்புத்தையில் காட்டில் ஒரு வாசி பிறவாத பொலிவுடையனான ஸ்ரீ வைகுண்ட நாதனுக்குத் தகுதியான பாட்டை
பாடக் கடவனாகக் கொண்டு மானிடம் பாடேன் -இத் அந்வய-

————————————————————————–

லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-
அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான  அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பதவுரை

பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்–(பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்–பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்)
கேட்ட மனுவும்–வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்
கருதி–அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்–நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன்–ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட–ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு–தத்துவங்களாம்.

பாட்டு -இத்யாதி –
பாட்டுக்களும் அவற்றுக்கு வ்யக்தமான ரூபமானவையும் –
இசையும் இயலும் என்னவுமாம் –
படுகதை இத்யாதி
உத் க்ரந்தமாகச் சொல்லும் கதைகளும் -அவற்றின் யுடைய பஹூ விதமான பொருள்களும்
பாட்டும் –
கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்-
அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள் என்றுமாம் –
ஈட்டிய தீயும் இரு விசும்பும்
ஒன்றிலே எல்லாம் யுண்டாம்படி பஞ்சீ கரணத்தாலே  சேர்க்கப் பட்ட அக்னியும்
பரப்பை யுடைத்தான ஆகாசமும்-இவை அண்ட காரணமான பூத பஞ்சகங்களுக்கும் உபலஷிதையான தேவாதி கார்ய லஷணங்களுக்கும் உப லஷணம்-
கேட்ட மனுவும் –
ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் –
ஓதி வருகிற நாலு வேதங்களும்
மாயன் –
ஆச்சர்ய பூதனானவனுடைய
தன மாயையில் பட்ட தற்பு-
தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு –
தத்த்வார்த்தம் –

————————————————————————–

என்னுடைய தோஷத்தையும் பாராதே எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-
என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

தற்பு என்னை -இத்யாதி –
என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே
பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
எற்கொண்ட-இத்யாதி
என்னை விஷயீ கரித்து சமஸ்த துக்கங்களும் போம்படி என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான்-
ஏற்கொண்டு-என்ற பாடமான போது என்னைப் பற்றி நிற்கிற பாபங்கள் -என்றுமாம் –
எவ்வினையும் மாயுமால் கண்டு –
அவன் விஷயீ காரத்தைக் கண்டே பாபங்கள் எல்லாம் நசித்தன –
எவ்வினையும் மாயுமால் கண்டு இதி பாடம்
என்னுடைய உக்திகளை எல்லா சேஷ வ்ருத்திக்களுமாக அனுசந்தித்து –

————————————————————————–

உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்
அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ -என்கிறார் –
திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க
நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

பதவுரை

காமன்–மன்மதனுடைய
உடல்–சரீரத்தை
கொண்ட–நீறாக்கின
தவத்தாற்கு–தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை–(மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த–தெரிவிக்க,
அங்கு–அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை–மிகவும் அசைந்து போனமையை
ஆய்ந்தால்–ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள்முடியான தன் பெயர்கேட்டிருந்தே–வண்டுகள் ஒலிக்கப் பெற்ற பூமாலயை
நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
கண்டு வணங்கினார்க்கு–நேரே கண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்–எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)

கண்டு இத்யாதி –
அவனை சாஷாத் கரித்துத் திருவடிகளிலே வணங்கினவர்களுக்கு என்னாமோ
அபிமத விஷயத்தை கடிப்பித்த காம சரீரத்தை தஹித்துப் பொகட்ட தபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த –
வண்டலம்பும் -இத்யாதி
வண்டுகளானவை  தேன் வெள்ளத்திலே  கிடந்து அலையும்படி இருக்கிற பூந்தாரை உடைத்தான-திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமான-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை யுடைய எம்பெருமான் திரு நாமங்களைக்
கேட்டிருந்து -அவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே
பரவசனாய்த் துவண்டபடி கண்டான் -என்றுமாம் –

————————————————————————–

எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-
பரமபதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் -என்கிறார் 

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனான
பெருமானை–ஸர்வேச்வரனை
அன்பினால்–ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு–அநுஸந்தித்துக் கொண்டு
வாய்ந்த மனத்து–(தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்–நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்–தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை
விரைந்து–சீக்கிரமாக
காண்பார்–காண விரும்பமுடையராய்
ஏய்ந்த–ஆத்மாவோடு செறிந்த
தம் மெய்–தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக–வியாதியாக
விரும்புவர்-எண்ணுவர்

ஆய்ந்து இத்யாதி –
சர்வேஸ்வரனை அனுசந்தித்து ச்நேஹத்தாலே பாங்கான ஹிருதயத்திலே இருத்த வல்லவர்கள் –
ஆதிப் பெருமானை –
உத்பாதகனான சர்வேஸ்வரனை –
ஏய்ந்த இத்யாதி –
இப்படி பிராப்ய ருசி பரிபூர்ணராய் இருக்கிற தாங்களும் ஆஸ்ரிதரான தங்களுக்கு என்றே கூறுபட்டு-
அவனை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டம் காண்கையில் யுண்டான விரைத்தலாலே பண்டு-
தேவோஹம் என்னும் படி தங்களோடு பிறிவற ச்நேஹித்து விட மாட்டாத உடம்பையும் வியாதியாக நினைப்பார் -என்கிறார்
குந்தமாக விரும்புவரே -நன்றாக நினையார் –
ஏய்ந்த -கூடி இருந்த
குந்தம் -வடுக பாஷையாலே வியாதி-
தம் வைகுந்தம் என்றது திருவடிகளிலே ஆஸ்ரயித்தவர்களேதாய்  இருக்கை என்று கருத்து –

————————————————————————–

லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது  –
இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

பதவுரை

உலகம்–சிறந்த பாகவதர்கள்
பரந்து–எங்குத் திரிந்து
பாடின–பாடின பாடல்களையும்
ஆடின–ஆடின ஆட்டங்களையும்
கேட்டு–கேட்டதனால்
படு நரகம் வாசல்–க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு–கதவுகள்
வீடின–விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மேல் ஒருநாள்–முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க–பிரளய வெள்ளம் பரவின போது
உலகம்–உலகங்களை யெல்லாம்
கரந்து–(திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த-துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்–கண்ண பிரானை
விரைந்து அடைமின்–சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்

விரைந்து இத்யாதி
ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய லோகங்கள் ஆனவை பரந்து
திரு நாமங்களை பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

————————————————————————–

நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-
என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

நீ–(ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி–நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து–என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை
விதை ஆக வித்தி–(பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை–எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்–விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்–மனமானது
கதவு என்றும்–எம்பெருமானை யடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில மையங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்–(மனமானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்–(ஆக விப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.

கதவு இத்யாதி
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்கிறபடியே-விஷயாந்தர பிரவணமான போது அவனை-
காண்கைக்கு கதவு போலே தகைவாய் பிரதிபந்தகமாய் இருக்கும்
மனஸ் என்றும்-காண்கை எளிதோ என்றும் துக்கப் படுகிற பொல்லாத சிந்தையைத் தவிர்ந்தேன்
விதையாக இத்யாதி
வித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள் குறைவற்ற நீ விளையப் பண்ணினாய்
அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-
நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து
நல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –
எம்பெருமானைப் பெறுகைக்கு மனஸ் அவிரோதி என்றும் இதுவே பரிகரமாகக் காணலாமோ என்றும்-ஹ்ருதய துக்கம் எல்லாம் தீர்ந்தேன் -என்கிறார் –
குதை -அசைகை-
வினை -தொழில் –
ஆவி -என்று பிராண வாசி சப்தத்தாலே தத் ஆஸ்ரயமான மனசை லஷிக்கிறது
விதி -வித்து-

————————————————————————–

ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் –
இது போலே இருக்கும் நன்மை யுண்டோ -என்கிறார்-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

பதவுரை

காம வேள் தாதை–மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்–மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து–தேவாதிதேவன்
என் உள்ளத்து–எனது நெஞ்சிலே
கலந்தான்–சேர்ந்து கொண்டான்
நான்முகனும்–பிரமனென்ன
என்ற இவர்கள்–என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத–நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்–இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)

கலந்தான் -இத்யாதி –
காமனுக்கும் கூட வழகுக்கு உத்பாதகனான எம்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்திலே கலந்தான் -இத்தோடு ஒக்கும் நன்மை யுண்டோ –
எனக்கு இத்தோடு ஒத்த நன்மை யுண்டோ -என்றுமாம் –
அலர்ந்த அலர்கள் -இத்யாதி
செவ்விப் பூக்களைக் கொண்டு ஆஸ்ரயித்து-வாயாலே ஸ்தோத்ரம் பண்ணக் கடவ ஈஸ்வர அபிமானிகளான சதுர்முகனும் ருத்ரனும் என்று 
இவர்கள் வாய் விட்டு ஏத்த மாட்டாத –
வேந்து-
லோகப் பிரசித்தரான இவர்கள் முழு மிடறு செய்து பரி பூரணமாய் புகழ மாட்டாத படியான ராஜாவானவன் –

————————————————————————–

ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில்  சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று –
தரிக்க மாட்டாதே இருக்கும் -சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார்-

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் த்ண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

பதவுரை

நேமியான்–திருவாழி யாழ்வானை யுடையவனும்
மால் வண்ணன்–வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான்
சார்ந்தவர்க்கு–தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில்
வேந்தர் ஆய்–அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
விண்ணவர் ஆய்–தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
மாது ஆய்–தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
மற்று எல்லாம் ஆய்–மற்றுமுள்ள எல்லா வகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்)
ஆற்றான்–ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்)
விண் ஆகி–ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய்
தண்ணளி ஆய்–அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய்–மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
பின்னால்–இவ்வளவுக்கு மேலும்
தன் கொடுக்கும்–தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர்–(இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்

வேந்தராய் -இத்யாதி –
ராஜாக்களாய்-தேவர்களாய் -ஸ்வர்க்காதிகளாய்-அனுக்ரஹமாய்-
தண்ணளியாய் –
அங்குள்ள ஸூகமுமாய் -என்றுமாம்
பந்துவான மனுஷ்யராய் மாதாவாய் ஸ்த்ரியாதி களான மற்றும் எல்லாமாய்
சார்ந்தவர் -இத்யாதி –
பிரபன்னராய்க்   கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்
பிரதிகூல நிரசன  ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
சரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்
ஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-
பிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது
யா கதிர் யஜ்ஞ  சீலா நாம்  -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச் செய்வது அறியாமல்
அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள் –

————————————————————————–

ருத்ரனும் எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பதவுரை

அதிரும் கழல் கால–ஒலிக்கின்ற வீரக்கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மன்னனை–ராஜாதிராஜனான
கண்ணனையே–கண்ண பிரானையே
நாளும்–எந்நாளும்
தொழ–தொழும் படியாக
காதல்–ஆசைப்படுவதையே
தொழில்–நித்ய கருமமாக
பூண்டேன்–ஏற்றுக் கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்–(விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்–(ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்–அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.

பிதிரும் மனம் இலேன் –
இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –
பிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –
பிஜ்ஞகன் இத்யாதி
ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்
அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –
ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட
ஸ்ரீ கிருஷ்ணனை-என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: