ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–

பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய     நாமங்களைச்-சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் -என்கிறார் –

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

மலை இத்யாதி
மலையை ஆமையின் மேலே வைத்து வாசூகியைக் கயிறாகச் சுற்றி
அந்த மலையினுடைய தலையை ஆமையான தான் ஒரு கையாலே பற்றி
தளும்பாமே கடலை யடையக் கடைந்த சர்வேஸ்வரனுடைய திருநாமம் –
கூறுவதே -இத்யாதி
சொல்லுவதே எல்லாருக்கும் சொல்லு-கூறப் பட்டது தகுதி யாது என்றபடி
கூறுவதே எல்லாருக்கும் கொள்ளப் படுவது என்னவுமாம்
அலையாமல்  பீறக் கடைந்த
பிறிகதிர் படாமே பயன்படும்படி நெகிழக் கடைந்த –
அம்ருத மதனம் சொன்னது -கடல் கடைந்தும் அவர்கள் அபேஷிதம் செய்யும் என்கை-

————————————————————————–

சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –
எப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

கூற்றம் இத்யாதி –
எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும்
கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும்
அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும்
காரணம் அறிந்தேன் –
தீ மாற்றம்
கொடிதான் சொற்கள் என்றுமாம் –
அது – காரணம்- ஏது என்னில் –
ஆற்றங்கரை -இத்யாதி
திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய
உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது –
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –

————————————————————————–

அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் பரம பதத்திலும் இல்லை -என்கிறார் –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார் ஆகவுமாம்-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

எனக்கு இத்யாதி
பகவத் ஏக போகனான என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை
எம்பெருமானும் தன் ஐச்வர்யத்துக்கு தானே ஒப்பாம் இத்தனை யல்லது
ஜ்ஞானத்துக்கு என்னோடு ஒவ்வான் –
புனக்காயா   -இத்யாதி
தன்னிலத்தில் நின்ற காயம் பூப் போல நிரதிசய போக்யமான திரு நிறத்தை யுடைய வுன்னை வேறு அறிவார் இல்லை –
என் மதி இத்யாதி
உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –

————————————————————————–

எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

விலை இத்யாதி
ஒரு வயிறு சோற்றுக்காக அடிமை புகுவர்
வியாதிகளை நீர் வார்ப்பித்துக் கொண்டு ஜீவித்துத் திரிவர்
தலை யறுத்துக் கொடுக்கக் கடவதாக ஆள்பட்டு தேவதைக்கு பலியாத் திரிவர்
தலை அறுப்புண்கைக்கு ஆளாய்  -அவர்கள் இட்டது வயிற்றுக்குப் போறாமை இரந்து திரிவர் என்றுமாம் –
பகவத் அனுபவத்துக்கு தக்கவர் இ றே இவர்கள் என்று உபாலம்ப உக்தி –
முலைக்கால் இத்யாதி
முலை வழியே விஷ பானத்தை பண்ணுவித்த பூதனையை முடித்த செயலாலே ஜகத்தை அடிமை கொண்டு இப்படி உபகாரகனான ராஜாவை விசேஷித்து ஏத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர் –
இப்படி அவிசேஷ ஜ்ஞாரானவர்கள் தன்னை ஆஸ்ரயிக்க தந்த வுடம்பைக் கொண்டு அந்ய பரராகையாலே பாப புக்குகள்-இருக்க மாட்டாதே இருந்து வைத்துத் தனிசு கொண்டு –கடன் பட்டு -உண்பாரோடு ஒப்பர் -என்றுமாம் –

————————————————————————–

ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-
நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53

கல்லாதவர் இத்யாதி
தயா சத்யம் சௌசம் ச ராஷசானாம் ந வித்யதே -என்று அறிவு கேடர் எல்லாரும் திரண்ட இலங்கையைக் கட்டழித்த காகுத்தனை ஒழிய வேறு ஒரு தேவதையைத் தஞ்சமாக யுடையேன் அல்லேன்
பொல்லாத தேவரை –
காணிலும் உருப்பொலார்-திருச்சந்த விருத்தம் -69-என்கிறபடியே விரூப தேவதைகளை –
தேவர் அல்லாரை
அல்லாத தேவதைகளை -தேவதைகள் என்ன ஒண்ணாதவர் என்றுமாம் –
திருவில்லா இத்யாதி
அஸ்ரீகரான தேவதைகளை தேவதைகளாகத் தேறாதே கொள்ளுங்கோள்-

————————————————————————–

சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்-

தேவராய் நிற்கும் அத்தேவும் அத தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

தேவர் -இத்யாதி –
தேவர்களே நிற்கின்ற வேண்டற்பாடும்-
அத்தேவதைகளில் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளாய் நிற்கிற பழையதான செயலும்
யாவரித்யாதி -எல்லாருமாய்க் கொண்டு
மற்றும் மனுஷ்யாதிகளுமாகக் கொண்டு   -நிற்கிற இது எல்லாம் சர்வேஸ்வரனுக்கு சேஷம் என்று அறியாதார் கற்கின்றது எல்லாம் வ்யர்த்தம் –

————————————————————————–

இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து -ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் -உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

கடை நின்று இத்யாதி –
இதர தேவதைகள் வாசலிலே நின்று அந்த தேவதைகள் காலை நாள் தோறும் தொழுது பரிமித ஸூகங்களைப் பெறுவர் –
புடை இத்யாதி –
பூமியைச் சூழ்ந்து இருந்துள்ள நீரோதம் போலே இருக்கிற திருமேனியை யுடைய சர்வேஸ்வரனே -உன்னைப் பேச வல்லார்கள் யார் –
இடை நின்ற இன்பம் –
நடு முறியும் ஸூகத்தை யுடைராவர் –
இடமுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற திரு மேனியையும்
அபரிச்சேத்யமான மஹிமாவையும் யுடைய சர்வேஸ்வரனே
சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை சத்த கீர்த்தனம் பண்ணி ஆஸ்ரயிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்றுமாம் –
அவர் என்றது
சர்வ கந்த ரஹிதராய்-ரஜ பிரக்ருதிகளாயும் தம பிரக்ருதிகளாயும் உள்ளவரை –

————————————————————————–

இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56

அவரிவர் இத்யாதி –
இன்னார் இனையார் என்று இல்லை -அழகுக்குக் காமனுக்கும் கூட உத்பாதகன் ஆனவனுக்கு ஒருவரும் எதிர் இல்லை -கண்டி கோளே-
உவர் இத்யாதி –
கடலில் விஷத்தை பஷித்த ருத்ரன் வாணனுக்கு பிரதிபஷத்தை வென்று தருகிறேன் என்று ஓரம் கொடுத்து-அந்த வாணன் சாஷியாக வருகே நிற்கவே-சபரிகரனாகத் தோற்றான் -அதிகம் மே நிரே விஷ்ணும் -பால -74-19-இதிவத்-

————————————————————————–

அவனுடைய ச்வீகாரம் தான் புண்ய பலமாய்   அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று -அவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன-
அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ச்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

ஒருங்கு இத்யாதி –
சொல்லும் பஷத்தில் சேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .
ஒருங்கு இருக்கை யாவது பல வ்யாப்தமாய் இருக்கை -என்றுமாம் –
மருங்கு இருந்து இத்யாதி –
வேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் -இது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –
நெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –
பெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –
மருங்கு இருந்த வானவர் –
அப்ரசித்தமான தேவதைகள் -தாரகை தான் -தரணிதான் -என்னவுமாம் –

————————————————————————–

அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த எம்பெருமான் பக்கலிலே-தமக்குப் பிறந்த ச்நேஹத்தை அருளிச் செய்கிறார்-

என்நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்தாய்
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு – 58-

என் நெஞ்சம் -இத்யாதி –
என் ஹிருதயத்திலே மேவி என் அஜ்ஞானத்தைப் போக்கி எனக்கு உபகாரனானவன் .
ராஜாக்கள் பயப்படப் பண்டு ஒரு நாள் பூமியை அளந்து கொண்டான் –
என் நெஞ்சம் மேயான் -இத்யாதி
என் நெஞ்சம் இருப்பிடமாக மேவினவனைத் தனக்கு ரஷகனாக நினைத்து இராத
ரிஷப வாஹனனுடைய கொடிதான பாபத்தைப் போக்கி அத்தாலே தான் உளனானவனுக்கு -ச்நேஹத்தை பண்ணினேன் –
மன்னஞ்ச-
அசூரனான மகா பலி போல்வார் அஞ்சும்படிக்கு ஈடாக -என்றுமாம் –

————————————————————————–

தம்மளவில் இல்லாதபடி எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை -என்கிறார்-

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

அன்பு இத்யாதி –
எனக்கு ச்நேஹித்து எனக்குப் பரம போக்யனானவனே-
சேஷ பூதனான எனக்கு உன் அனுபவ ஸூ கத்தை விளைத்தவனே –
இவற்றால் எனக்கு வந்த ஸூ கமும் ஆனவனே –
மற்றும் எல்லா பந்தமும் நீ யானவனே
இவை எல்லா வற்றுக்கும் அடியாக ஸ்ரீ யபதி யானவனே –
கிளரொளி -இத்யாதி
மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –
அனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –
இவருடைய ச்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ச்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்
இவருக்கு தன்னுடைய அனுபவ ஸூ கத்தையும் கொடுத்து
இன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து
நீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா
என்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –

————————————————————————–

இவர் தன்னை விடில் செய்வது என் என்று எம்பெருமான் அதி சங்கிக்க
விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

ஆள் -இத்யாதி
எனக்கு அடியார் ஆவார் யுண்டோ என்று இது வெள்ளாமை யாகத் தேடித் திரிகிறபடியை கண்டு உனக்கு அடியேனாக வேணும் என்று
உன் திருவடிகளையே பார்த்துத் திரிகிற என் ஸ்வ பாவத்தை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
கேட்பார்க்கு -இத்யாதி
புக்கு அநு பவிக்கில் அநு பவிக்கும் இத்தனை போக்கி ஆராயப் புகில் அளவிட ஒண்ணாத வைலஷண்யத்தை யுடையையாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே-
உன்னை விரும்பும் அத்தனை மனசை உன் பக்கல் நின்றும் வாங்கேன் -த்வாம்ருதஸ் யந்தி நி -ஸ்தோத்ர ரத்னம் -27-இதிவத்
கேட்பார் இத்யாதி
நிரதிசய பக்திமான்கள் அல்லீரோ
குறைவாளராக சொல்லுவான் என் என்று எம்பெருமான் அருளிச் செய்தானாக கொண்டு-துர்ஜ்ஞேயனாய் இருந்து வைத்து சர்வ ஸூலபனாய்க் கோயிலிலே கண் வளரா நிற்க-ப்ராக்ருத விஷயங்களில்  நின்றும் மனசை விடுகிறிலேன்
நான் உன்னை விரும்புகை என்று ஒரு பொருள் உண்டோ என்றும் சொல்லுவர் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: