ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–

எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே -என்கிறார் –
ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்-

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

வான் இத்யாதி –
ஆகாசமும் -சஞ்சரிக்கிற அக்னி -காற்று -பெரிய கடல் -மலைகள்
தாங்களே சஞ்சரியா நின்றுள்ள சந்திர  ஸூர்யர்களும் –
மேல் வர்த்தியா நின்றுள்ள மேகங்களும் -திக்கு எட்டும் –ஆவரணமும்-இப்படியான அண்டம்-ஸ்ரீ யபதியானவன் சங்கல்ப்பத்தாலே யுண்டாய்த்து-
அகைப்பு -என்று வாழ்ச்சியாய்-அதாவது –
திரு வுள்ளத்திலே உத்தியோக ரூபமான சங்கல்பம் -என்றபடி –

————————————————————————–

மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –
அதுவும் பண்ணினான் அவன் தானே -ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் –

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

அகைப்பில் -இத்யாதி
அளவில்லாத மனுஷ்யரை ஷட் சமயங்களைக் காட்டி தப்ப ஒண்ணாத படி யகப்படுத்தினான் -ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
உகைக்கும் இத்யாதி –
ரஷியாதே விடுமாகில் அங்கனே ஆஸ்ரயிக்கையும்-மற்றுள்ள அழைப்புகளும் அப்போது முடியும் –
ஆறு சமயம் புகைத்தான்
ஆறு சமயத்தாலும் மதி கெடுத்தான் என்றுமாம் –
அழைப்பு -ஆஹ்வானம் –

————————————————————————–

லோக வ்ருத்தாந்தம் ஆனபடியாகிறது என்று கை வாங்கி-தமக்குத் திருமலையையும்
அங்கு நின்று அருளுகிற திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண-
திருவேங்கடமுடையானைக் காண வேணும் என்று கூப்பிடா நிற்பன் –
இழைப்பன் திருக் கூடல் கூடமலைப்பேர் அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு
மலையிலே பெரிய அருவிகள் மாணிக்கங்களைக் கொண்டு இழிய-மின்னித்து என்று ஆனைகள் பயப்பட்டு -வரை எனப் பெயர் தருகிற பெரும் பாம்பின் வாயிலே புகும்படியான வெற்பைப் பிராபிக்க வென்று கூடல் இழையா நிற்பன் –
மாணிக்கத்தின் ஒளியை நெருப்பு என்று கருதி யானை வெருவும் –
மின்னாகக் கருதிப் பாம்புகள் புற்றிலே ஒடுங்கும் -என்னவுமாம் –
மழைப் பேரருவி -என்று பாடமான போது
நிரந்தர வர்ஷத்தாலே வெள்ளம் இட்டுப் பெருகுகிற திரு அருவிகள் ஆனவை என்று பொருளாகக் கடவது –

————————————————————————–

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் -நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில் ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க் க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்
இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –
பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

————————————————————————–

எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-நான் திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

காணல் உறுகின்றேன் கல்லருவி –
காண வேண்டி இரா நின்றேன்-ஒலியை யுடைத்தான அருவிகளில் –
முத்துதிர
அருவிகளில் முத்துதிர என்றுமாம் -கல்லிலே யருவி முத்துதிர -என்றுமாம்
ஒண விழவில் ஒலி அதிர -பேணி வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய் திருவேங்கடம் அதனைச் சென்று –
திருவோணத் திரு நாளில் ஒலி முழங்க -எல்லாரும் ஆதரித்து உன்னைப் ப்ராபிக்கிற வேங்கடவனே -நீ என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் –
திருமலையைச் சென்று பேணி வரு வேங்கடவா -என் பக்கலிலே யாதரித்துக் கொண்டு வருகிறவனே-என்றுமாம் –
சென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் –
இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே -அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –
சம்பத்தாவது திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-திருவேங்கடமுடையானுக்கு திருப் பல்லாண்டு பாடுவாரும் வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –

————————————————————————–

நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் -நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –
திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை நின்று –
அற வுயர்ந்து இருக்கிற திருமலையைச் சென்று விடாதே ஆஸ்ரயியுங்கோள் –
திருமலையை உத்தேசித்து வழி போக்கையும் -சென்றால் அடிமை செய்கையும் –
புருஷார்த்தம் -என்று கருத்து –
உயர்த்தி சொல்லிற்று -புருஷார்த்த லாபத்துக்கு முட்டச் செல்ல வேண்டாதே புறப்பட்ட வாறே தோற்றுகை-திருமலையைக் கண்டுகொண்டு அதுவே பாதேயமாகப் போகலாம் -என்றுமாம் –
வினை கெடுக்கும் நீர்மையால்என்றும் கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-
சகல துக்கங்களையும் கெடுக்கும் ஸ்வ பாவத்தாலே திரு நாபி கமலத்திலே பிறந்த சதுர்முகனும் த்ரி நேத்ரனும் திருவடிகளிலே-தாமரைப் பூவைக் கொண்டு நிரந்தரமாக ஆஸ்ரயியா நின்று அவ்விடத்திலே கிஞ்சித் கரித்து ஸ்தோத்ரம் பண்ணுவர்கள் –
திருவேங்கடமுடையானை பிரயோஜனாந்தரபரும் ஆஸ்ரியா நிற்பார்கள் –
அநந்ய பிரயோஜனரான நீங்கள் திருமலையை ஆஸ்ரயியுங்கள் என்கிறார் ஆகவுமாம் –

————————————————————————–

பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே  அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

மங்குல் இத்யாதி –
மேக பதத்தளவும் உயர்ந்த சிகரங்களை யுடைத்தான-வடக்கில் திருமலையிலே நின்று அருளினவனை-ராத்ரியிலே காப்பிடுகைக்காக புகுந்தார்கள் சந்த்ரனை ஜடையிலே வைத்த ருத்ரனும்-திரு நாபி கமலத்திலே பிறந்த ப்ரஹ்மாவும்-
பக்தி பாரவச்யத்தாலே திரு முத்தின் குடை தொடக்கமான சமாராதன உபகரணங்களைக் கொண்டு
தத் சர்வம் தர்ம வீர்யேண  யதாவத் சப்ரச்பச்யாதி -பால -3-4-என்னும்படி திருமலையிலே-வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து சந்த்யா காலத்திலே ப்ரஹ்மாதிகள் பணி கண்டு அருளுகைக்கு-சத்ராத் யுபகரணங்களைக்  குடையாகப் பிடித்துக் கொண்டு
திரு வந்திக் காப்பு அணிகைக்குப்   புகா நிற்பார்கள் -என்கிறார் –
ஏறத் தாங்குவித்துக் கொண்டு –
ஏறத் தாங்குகிறது தாங்கள் கண்டு கொண்டு போகைக்காக-

————————————————————————–

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹிதகாமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க  பிராப்யம் திருமலை -என்கிறார் –

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

புரிந்து இத்யாதி
மனசை வழிப்படுத்தி புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -அழகிய திருவடிகளை ஆஸ்ரயித்து விடாதே நிற்க-வ்யக்தமாய் நின்றவனுடைய குளிர்ந்த திரு அருவிகளை யுடைய திருமலையே-திரு நாட்டில் உள்ளாருக்கும் சம்சாரிகளுக்கும் வைப்பு -பரம ப்ராப்யம் –

————————————————————————–

திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீ யமாய் இருக்கிற திருமலையை
எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி  கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

வைப்பன் -இத்யாதி –
பெரிய சந்த்ரனை அழகிய விளக்காக வைப்ப திருவேங்கடமுடையானுக்கு என்றே எப்போதும்-வாங்குகைக்குக் கை  நீட்டா நின்றுள்ள யானையை எங்கும் வேடு சூழ்ந்து கொள்ள அவர்களோடு எதிர்த்துக் குறவர் வில்லெடுக்கும் திரு மலையை
நாடு வளைத்து ஆடுதிரேல் நன்று –
நாட்டில் உள்ளார் சூழ்ந்து ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் நன்று –

————————————————————————–

திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி திருமலையை  அனுபவிக்கிறார் –

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

நன் மணி -இத்யாதி –
ச்ப்ருஹணீயமான நிறத்தை யுடையவனுடைய ஊர் -ஆளியும் -மிடுக்கை யுடைத்தான சிம்ஹமும் -பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -நாநா வர்ணமான மணி நீரோடு சஞ்சரித்து அருளுகிற காடும் வானரமும் வேடுமுடைய வேங்கடம்
திரு வருவிகள் பெருகப் புக்கால் இவை எல்லாவற்றையும் உடைத்தாய் இருக்கை-
நீருக்கு இறாய்த்து மரங்களிலே ஏறுகிற வானரமும் வேடரும் -என்றுமாம் –

————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து
பரம ப்ராப்யமான திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48-

வேங்கடமே -இத்யாதி
திருமலையையே அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் பரம ப்ராப்யமாகக் கொண்டு தொழுவதும்-சம்சாரிகளுடைய சரீரத்தில் யுண்டான துக்கங்களையும் துக்க ஹேதுவான பாபங்களையும் போக்குவதும் திருமலையே
வேங்கடமே -இத்யாதி
பிரதி கூலரான அசுரர்கள் படும்படியாகத் தன்னுடைய திருவாழி யாகிற ஆயுதத்தோடு தேவர்களை ரஷிக்கும்-அவனுடைய ஸ்தானம் திருமலை –
மெய்ம்மையால் –
பரம ப்ராப்யம் ஆகைக்காக –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: