ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -25-36–

ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே
அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

பதவுரை

மதியாது–உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்–நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்–(மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப் படுத்திக் கொண்டாய்
மற்றும்-அதற்கு மேலும்,
வயிரம்–வயிரமாகிற ரத்னத்தை
வகையால்–ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து–இளகச் செய்து
உண்ணும்–உண்பவனும்
தான் என்னும்–தனக்கு மேற்பட்ட பலிஷ்டர் ஆருமில்லை யென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி–மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு–சத்ருத்வ முறையை
ஒழித்தாய்–போக்கினாய்
வகையால்–இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே–உனக்கு ஸித்திப்பதொரு பலன் உண்டோ? (எல்லாம் ஆஸ்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.

வகையால் இத்யாதி –
நல்ல உபாயத்தாலே அவனை ஒரு சரக்காக மதியாதே பூமியை வாங்கிக் கொண்டாய்-

மற்று -இத்யாதி –
வெறும் இவ் வுபாயத்தாலே சித்திப்பது ஓன்று யுண்டோ –
அங்கன் அன்றிக்கே –
ஈச்வரனான எனக்கு ஏற்கப் போருமோ என்று நினையாதே அழகைக் காட்டி மஹாபலி மதியைக் கெடுத்து இருந்த
அவ்விரகாலே-மண்ணை அளந்து கொண்டு இந்த்ரனுக்குக் கொடுத்தாய் -என்றுமாம்

வகையால் -இத்யாதி –
உபாயத்தாலே வைர போஜனனான மகாபலி நான் என்று அபிமானித்து இந்த்ரனோடே அவனுக்கு யுண்டான  சாத்ரவத்தை போக்கினாய் –
வயிரம் குழைத்து உண்கை என்று சாத்ரவமே ஜீவனமாய் இருக்கை-

மற்றும் வகையால் வருவது ஓன்று யுண்டோ என்று இறுதியில் அந்வயிப்பது –

————————————————————————–

இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று
அவன் படியை வெளியிடுகிறார்-

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்கு மாறு–26-

பதவுரை

கடல் வண்ணா-கடல் போன்ற திருநிறமுடைய பெருமானை!
யான் தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை–அடியேனால் ஆஸ்ரயிக்கப்படும் தெய்வம்
(நீ தவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்–சேர்த்துக் கட்டின ஜடையை யுடையனான ருத்ரன்
கரி கண்டாய்–ஸாக்ஷி காண்
யான்–இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை–உன்னை
எற்றைக்கும்–எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு–ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டு கொள்–கடாக்ஷித்தருள வேணும்.

மற்று -இத்யாதி
இப்படி இருக்கிற உன்னை ஒழிய வேறு சிலரை ஆஸ்ரயணீயமாக யுடையேன் அல்லேன் –
என்னும் இடத்துக்கு=ருத்ரன் சாஷி -என்கிறார்

எம்பெருமான் அழகிலே பிணிப்புண்ட ஆழ்வார் இப்படி யுன்னை யனுபவிக்க வல்லேனாம் படி
பார்த்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம் –

மற்று -இத்யாதி –
உன்னை ஒழிய வேறு தொழப் படுவாரை நானுடையேன் அல்லேன் என்னும் இப் பாசுரத்துக்கு-
எல்லாரையும் கும்பீடு கொள்ளும் ருத்ரன் சாஷி –

எற்றைக்கும் -இத்யாதி
கடல் வண்ணா -கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே

உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-
நான் விடாதே யுன்னை அனுபவிக்க வல்லேனாம் படி பார்த்து அருள வேணும் –

கற்றைச் சடையான் –
அவனைத் தொழாமைக்கு நிபந்தனம் –
அவன் தானும் சாதகனாய் ஜடையைத் தரிக்கையாலே -என்று கருத்து-

————————————————————————–

எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு
இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான்
என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்-

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

பதவுரை

பேதை காள்–மூடர்களை!,
மால்–எம்பெருமான்
தான் புகுந்த–தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்–(எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்–வேறொன்றை
பேறு ஆக–புருஷார்த்தமாக
கொள்வனோ–நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்–நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத–ஸேவிக்க முடியாததும்
தார்–புஷ்பங்களினால் அர்ச்சிக்கப் பட்டதும்
அகலம்–போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை–திருவடியை
யான் காண வல்லேற்கு–ஸேவிக்கும் படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது–இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.

மாறன் –
நீர்மையாலே மாறுபட்டவன் –
அறிவு கேடர்காள்-ஆஸ்ரித வ்யாமுக்தனானவன் புகுந்து
பவ்யமான நெஞ்சை யுடையவன் என்னும் இதுவும் ஒரு பேறாகக் கொள்வேனோ  –

-நீறாடி தான் காண மாட்டாத –
பேரளவு யுடையனான ருத்ரன் காண மாட்டாத –

தார் அகல சேவடியை யான் காண வல்லேற்கு –
தாரை யுடைத்தாய் அகன்று சிவந்து இருந்துள்ள திருவடியை
நான் காண வல்லேனான பின்பு

மால் தான் புகுந்த மட நெஞ்சம் –
அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு

கடல் வண்ணா –
நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது பேறாகக் கொள்வேனோ –
ஒரு லாபமோ -என்கிறார்

இது மாறன் புகுந்த மட நெஞ்சம் –
மால் தான் புகுந்த மட நெஞ்சம் –

அதவா –
சர்வேஸ்வரன் தானே விரும்பிப் புகுந்த பவ்யமான நெஞ்சு –

ருத்ரன் காண மாட்டாத நிரதிசய போக்யமான திருவடிகளை
நான் காண வல்லேன் -என்கிறது –

பேறாகக் கொள்வனோ -என்றுமாம்
இது வது என்றத்தை மாறி வைப்பது –

பேதை காள் நீராடி தான் காண மாட்டாத தாரைகள சேவடியை காண வல்லேனான இதுக்கு-
மற்று மாறன் புகுந்த மட நெஞ்சம் ஆனதுவும் பேறாகக் கொள்வேனோ -இத் அந்வயம்-

————————————————————————–

பிராட்டியோட்டை சம்ஸ்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே
ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

பதவுரை

இலங்கை–லங்கா புரியானது
ஈடு அழிய–சீர் குலையும் படியாக
கட்டிய–(வானர சேனையைத் துணை கொண்டு) கட்டின
சேது–திருவணை
இது–இது காண்மின்,
விலங்கு–திர்யக் யோநியிற் பிறந்தவனான
வாலியை–வாலியை
வீழ்த்தது–முடித்தது
எய்தான்–அம்புகளைச் செலுத்தின இராம பிரானுடைய
இது–இப்போது நடந்த செயல் காண்மின்,
இலங்கை தான்–லங்கா புரியானது
ஒடுங்க–அழியும் படியாகவும்
வில் நுடங்க–சார்ங்க லில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க–(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலை யணிந்து கொண்டிருந்த
இராவணனுடைய உடல் ஒழியும் படியாகவும்
உகப்பு–விலையான வியாபாரம்
இது–இது காண்மின்

இது-இத்யாதி-
இலங்கை கட்டுக் குலையும்படியாகக் கட்டின சேது இது –

திர்யக்கான வாலியை வீழ்த்தது இது –
இது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான
ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –

இது -இத்யாதி –
வில் வளையும் காட்டில் இலங்கை அழியவும் குளிர்ந்த தாரை யுடையனான
ராவணன் படும்படியாகவும் எய்தவனுடைய ப்ரீதியிது-

தண் தார் இராவணன் –
தேவர்களுக்கு வைபரீத்யம் பண்ணுகைக்கு மாலை இட்டவன்

உகப்பு
ஆஸ்ரித அர்த்த பிரவ்ருத்திகளே யுகப்பது-என்கிறார் –

————————————————————————–

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-
தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்

ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின சக்கரவர்த்தி திரு மகனுடைய
வடிவு தேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் –

உகப் புருவம் தானே யொளி யுருவம் தானே
மகப் புருவம் தானே மதிக்கில் –மிகப் புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

பதவுரை

மிக–மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஒசணையான்–ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காத வழி நீளமிருக்கப் பெற்ற கும்ப கர்ணன்
வீழ–ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு–சீறிக் கொண்டு
ஒரு கணையால்–ஒரு பாணத்தினால்
எய்தானவன்–அடித்து முடித்தவனான இராம பிரானை
மதிக்கில்–சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே–மநோஹரமான திரு மேனியை யுடையவன் அவனே
ஒளி உருவன் தானே–தேஜோ மயமான திரு மேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே–மிகவும் ஆச்சரியமான வடிவை யுடையவனும் அவனே.

உகப்புருவன் -இத்யாதி –
தர்சநீயமான ரூபத்தை யுடையவன் தானே –
எல்லாருக்கும் பிரியத்தைப் பண்ணுகிறவன் தானே -என்றுமாம் –
தீப்தேந ஸ்வேந தேஜஸா -என்கிறபடியே -அத்யுஜ்ஜ்வலமான வடிவை யுடையவன் தானே-ஆராயப் புகில்

பரிச்சேதிக்க ஒண்ணாத வடிவை யுடையவன் தானே –
பரம பதத்தில் ஸூ ரி போக்யமான வடிவை யுடையவன் தானே -என்றுமாம் –

மிக -இத்யாதி –
விக்ருத வேஷன் ஆகையாலே மிக்கு இருந்துள்ள புருவங்கள்
ஒன்றுக்கு ஓன்று யோஜனை அளவுடையனான-
கும்ப கர்ணன் விழும்படிக்கு ஈடாக ஓர் அம்பாலே சீறிக் கொண்டு எய்தானவன் –

————————————————————————–

அப் பேர் அழகோடு -கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தாமே –
என்னை யடிமை கொண்டவன் –
என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவ்வளவு அன்றிக்கே

நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்
இனி திருப் பாற் கடலில்
திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை -என்கிறார்-

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

பதவுரை

என்னை ஆளி–என்னை ஆட் கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்–ஸ்ரீரங்கநாதன்
என்னை–என்னை
அரங்கில்–ஸம்ஸாரமாகிற நாடக சாலையில்
எய்தாமல்–பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்–காத்தருள்வன்,
அவன்–அப்பெருமான்
என்னது–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
நின்றான் இருந்தான்–நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
(ஆன பின்பு இனி)
அவன்–அப் பெருமான்
வெள்ளத்து–திருப்பாற் கடலில்
அரவு–அப் பெருமான்
வெள்ளத்து–திருப்பாற் கடலில்
அரவு அணையின் மேல்–சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே–பொருந்துவனோ? (பொருந்த மாட்டான்.)

கோயிலிலே வந்து ஸூலபனானவன் என்னை அடிமை கொண்டான் –
இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் .
திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –

அரங்கு –
சம்சாரம் ஆகிற நாடக சாலை –

————————————————————————–

எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன்
எம்பெருமானே யான பின்பு-
அபரிமித துக்க பாக்குகளான பூமியில் உள்ளார் எல்லாரும்
எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

பதவுரை

மேல்–முன்பொருகால்
நான்முகன்–பிரமன்
அரனை–ருத்ரனைக் குறித்து
இட்ட–கொடுத்த
விடு சாபம்–சாபத்தை
தாரகையுள்–இந் நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன் தான்–எம்பெருமானே
ஒழித்தான்–போக்கி யருளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை–நித்ய ஸூரி நாதனான ஸ்ரீமந் நாராயணனை
ஏத்தாத–வாய் கொண்டு வாழ்த்த மாட்டாத
பேய்காள்–அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு–பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக் கூடிய)
மாயம்–ஆச்சரியமான துக்கங்களை
பேசில்–சொல்லப் புகுந்தால்
கதை–ஒரு மஹா பாரதம் போலே பரந்திருக்கும்.

மேல் -இத்யாதி –
பண்டு ப்ரஹ்மா ருத்ரன் இட்ட சாபத்தை அவன் மகன் தான் ஒருவன் இங்கனே படவாகாது என்று-
சர்வ சேஷியான தானே  இரங்கி துக்கத்தைப் போக்கினான் –

தரித்ரியிலே சர்வேஸ்வரன் ஏத்தாத ஹேயராய் யுள்ளீர்
ஜனிக்கும் கர்ப்பத்தினுடைய வாச்சர்யம் பேசில் பெரும் பரப்பு –

ப்ரஹ்மா தான் ருத்ரனை வழிய விட்ட சாபத்தை
பூமியிலே சர்வேஸ்வரனான நாராயணன் போக்கினான் –

அப்படி ருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்
உங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள்
பேசி முடிக்க ஒண்ணாது -என்கிறார் -என்றுமாம் –

————————————————————————–

அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே
மண்டி நசித்துப் போருவார்கள் –
ஆன பின்பு -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான
எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

பதவுரை

கதை பொருள்தான்–(உலகத்தில்) உபஹரிக்கப் படுகின்ற பொருள்கள் யாவும்
உதைப்பு அளவு போது போக்கு இன்றி–ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்–எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள–ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
(அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)
வாய்ந்த குணத்து–திருக் கல்யாண குணங்களில்
படாதது–ஈடுபடாத வஸ்து
வதை பொருள் தான்–அபதார்த்தமே யாகும்,
(ஆகையாலே)
ஆய்ந்த குணத்தான்–சிறந்த திருக் குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி–திருவடிகளை
அடைமின்–ஆஸ்ரயியுங்கோள்

கதை இத்யாதி –
சகல சப்தங்களின் யுடைய அர்த்தங்களும் அவன் சங்கல்பத்தாலே உண்டாய்த்தின –
லோகத்தில் சொல்லப் படுகிற பதார்த்தங்கள் -என்றுமாம் –

உதைப்பளவு -இத்யாதி –
அரை ஷணமும் இவனை ஒழியச் செல்லாத படியாய்

உதை -நொடி –

வதை -இத்யாதி –
அவனுடைய குண விஷயம் அல்லாதன நிஷித்தங்கள்-
சேதனர் பர ஹிம்சை பண்ணுகிற இதுக்கு ஹேது
அவனுடைய குண அனுசந்தானத்தைப் பண்ணாமை -என்றுமாம் –

அடைமினோ -இத்யாதி
ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனானவன் திருவைடிகளை அடையுங்கோள்   –

அன்றிக்கே –
சாஸ்த்ரங்களால் சொல்லப்பட்ட தேவ திர்யகாதிகளான ஆத்மாக்கள் எல்லாம்
ஒரு ஷண காலமும் ஒழியாமே-
எப்போதும் சத்தை பெற்றுச் செல்லுகிறது அவனுடைய சங்கல்ப்பத்தாலே –

இங்கனே இருக்கச் செய்தே விஷய ப்ரவணராய் நசிப்பான் என் என்னில் –
அவனுடைய ஆச்சர்ய குணங்களில் படாமை –
ஆன பின்பு -கல்யாண குணகனானவன் திருவடிகளை அழகிதாக அனுசந்தியுங்கோள் -என்கிறார் –

வதை பொருள் தான் –
நசித்துப் போகிற வஸ்துக்கள் தான் –

————————————————————————–

தாம் கிருஷ்ண  சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

பதவுரை

(எம்பெருமான்)
குறிப்பு–(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்
அடி–திருவடியாலே
சகடம்–சகடாஸுரனை
சாடி–ஒழித்தும்
அரவு-காளிய நாகத்தை
ஆட்டி–வாலைப் பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை–குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து–பற்றிக் கொண்டு
பின்னைக்கா–நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு–கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து–முசுப்பை
ஒசித்து–கொம்பை முறித்தொழித்தும்
பேய்–பூதனை யென்னும் பேய்ச்சியினுடைய
முலை–முலையில் தடவி யிருந்த
நஞ்சு–விஷத்தை
உண்டு–அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி–அழகிய பவளம் போன்ற வாயையும் தோளையும் வுடையளான
இறுத்து–முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்–தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலை நிறுத்திக் கொண்டான்.

திருவடிகளாலே சகடத்தை நிரசித்து
காளிய மர்த்தனம் பண்ணி
குவலயா பீடத்தைப் பிடித்து அதினுடைய கொம்பை அநாயாசேன பிடுங்கி
பூதநா ஸ்தந பானம் பண்ணி
அழகிய பவளம் போலே இருக்கிற அதரத்தையும்
தோள்களையும் யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
வலிதான ஏறுகளின்   உடைய ககுத்தை  முறித்து
இச் செயல்களாலே ஜகத்துக்கு சேஷி யானவன்

குறிப்புக் கோப்பின்னும் ஆனான் –
ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தையும் புதுக்கினான் -என்கிறார்-

————————————————————————–

என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை
இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

பதவுரை

கோட்டியூர் மேயானை–திருக் கோட்டியூரில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை–திரு மலையில் நித்ய வாஸம் பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த–ஸ்துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு ஆசை
நன்மை பயக்க–(எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு குதூஹலம்,
மெய் வினை–சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்–வியாதிகளும்
எய்தாமல்–வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான்–தானே அவற்றைப் போக்கி யருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப் பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வெறுப்பனோ–மறந்திருப்பனோ.

குறிப்பு -இத்யாதி –
சர்வ ஸூலபனாய்க் கொண்டு திருக் கோட்டியூரிலே மேவினவனை எனக்கு ஏத்த நினைவு –
எனக்கு நினைவும் மென்மேல் என உஸ்ராயங்களும் யுண்டாக –
எனக்கவை வேணும் -என்றுமாம் –

வெறுப்பனோ -இத்யாதி –
தானே வந்து திருமலையிலே நின்று அருளினவனை –
சரீரத்தில் வியாதிகளும் அதுக்கு ஹேதுவான பாபங்களும் வாராதபடி
தானே போக்கும் ஸ்வபாவனான அவனுடைய திருவடிகளை –
இப்படி ஸூலபனான அவன் திருவடிகளை விட்டு இருக்க வல்லேனோ -என்கிறார் –

அன்றிக்கே
குறிப்பு இத்யாதி –
என் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-
திருவேங்கடமுடையானையும்  ஏத்துகை-
ஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன –
வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி
சம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –

————————————————————————–

திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே
ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு

இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் உடையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
(இப்படி யிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே
சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம்
பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை  அளந்த  ஆயாசமோ -என்கிறார் –
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது
வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்

நீளோதம்-பெரிய ஓதம் –

————————————————————————–

எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –
அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம் என்று பார்த்துத்
திருக் குடந்தை தொடக்கமான-
திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

பதவுரை

நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை–திருக் குடந்தையிலும்
வெஃகா–திரு வெஃகாவிலும்
திரு எவ்வுள்–திரு வெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை–சேஷ சயனத்தின் மீது
பால் கடல்–திருப்பாற் கடலிலும்
ஆதி நெடுமால்–ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரன்
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
அரங்கம்–திருவரங்கத்திலும்
பேர்–திருப் பேர் நகரிலும்
அன்பில்–அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்–பள்ளி கொண்டிருக்கின்றான்
(எதுக்காக வென்னில்)
அணைப்பார் கருத்தன் ஆவான்–அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.

நாகத்தணை -இத்யாதி –
திருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –
முதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –

ஆதி நெடுமால் –
சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்

அணைப்பார் கருத்தனாவான் –
ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –
அவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் –
இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்
பல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது -அவ்வவ தேசங்களிலே
ஆஸ்ரயிப்பார்  யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: