ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -13-24–

மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்
எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

வீடு இத்யாதி –
மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு
மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும் வேதை க சமதி கம்யனுமாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-

————————————————————————–

இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள்  சொல்லுவதைக் கேட்டு
அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

நாராயணன் -இத்யாதி –
சர்வ சேஷி -என்னை ஆளுகிறவன் சம்சாரத்தில் சேராதபடி என்னைக் காக்கும் ஸ்ரீ யபதி யானவன் தன்-திருநாமங்களை வாயாலே சொல்லுகைக்கு பாக்ய ஹீனராய்
அசந்நேவ-என்னும்படி அசத் ப்ராயராய் ஹேயரான சமயாதிகள்
வேறே சிலவற்றைச் சொல்லக் கேட்டு அவற்றை ஆசைப் பட்டு அத பதித்துப் போவார் அநேகர் –
ஆழ்வார்
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள் ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்
திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே இவ்வர்த்தத்துக்கு இசையாத ஏகா யனனை நினைத்து அருளுகிறார் என்று -பட்டர் –பிணச் சமயர் என்கிறது -தேவதாந்திர பரரையும்-உபாயாந்தர பரரையும் -அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –

————————————————————————–

இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்
ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே  அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் –

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பல தேவர் இத்யாதி –
ப்ரஹ்மாதிகள் ஏத்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய திருவடிகளை   புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு வணங்கி ஸ்துதிக்க வல்லராகில்
நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்
நீர்- விஷ ஜலம் -நீல கண்டன் -என்றபடி –

————————————————————————–

உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன –
நான் எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷபாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்-

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

நிலை -இத்யாதி –
தரித்து இருக்கும் என்னுடைய ஹ்ருதயம்
பாரத சமரத்தின் அன்று தேவர்களுக்குத் தலைவனாய்
ராஜாவாய் இருக்கிற தாமே எதிரியாகவும்
பல ராஜாக்கள் யுத்தத்திலே படும்படியாகவும்
ஆதித்யன் மறையும்படியாகவும்
பூமியடைய மறையும்படியாகவும்
ரதாங்கத்தாலே மறைத்தவராலே-

————————————————————————–

நம்மளவே அன்று -எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியை -என்கிறார்-

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

ஆல்-இத்யாதி
ஆகம பிரசித்தமான வட விருஷத்தின் கீழே இருந்து தர்ம மார்க்கத்தை ஆப்தரான நாலு சிஷ்யர்களுக்குப் போன யுகத்தில் சொன்னான் –
பகவத் ஜ்ஞானம் அறிக்கைக்கு ஈடான தபஸ்சை யுடையவன் –
ஞாலம் -இத்யாதி –
ஆஸ்ரிதர் அபேஷிதங்களை முடித்துக் கொடுப்பதும் செய்து
அவர்கள் அபேஷிதங்களை அறிவிக்க அணித்தாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுவதும் செய்து
பூமியைத் திரு வயிற்றிலே வைத்து ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுவதும் செய்தவனைத் தான் ஆஸ்ரயிக்கும்படியை –
இத்தாலும் பகவத் பரத்வமே பிரசித்தம் -என்கிறார் –
நாலு சிஷ்யர்களுக்கு என்றது
அகஸ்த்யர் புலஸ்தியர் -தஷ -மார்க்கண்டேயர் களுக்கு -என்றபடி  –
மெய்த் தவத்தோன் -ருத்ரன் –

————————————————————————–

பகவத்  சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

மாறாய -இத்யாதி
எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை  இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்    அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

————————————————————————–

எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்-ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷபாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

ஆஸ்ரிதர் பக்கல் பஷபாதத்தாலே ஹிரண்யன் தபஸ் சைப்பண்ணி ப்ரஹ்மாவால் பெற்ற வரத்தை வ்யர்த்தம் ஆக்குவதும் செய்து
அவனுடைய ரஷண அர்த்தமாக திரு ஆழியைத்தரித்தவன் அல்லையோ  –
ஆனபின்பு ஆஸ்ரிதரான எங்களை யுகந்து சாம்சாரிக துரிதம் தட்டாமல் ரஷிப்பாயும் நீ –
காக்க வேணும் என்று நினைப்பாயும் நீ –
ரஷை தான் என்றுமாம் –
ஆஸ்ரயிப்பார் எல்லாருக்கும் ஸ்ரீ வைகுண்டத்தைக் கொடுப்பாயும் நீ-

————————————————————————–

இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் -நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

நீயே இத்யாதி –
சகல லோகங்களும் உன்னாலே உண்டாக்கப் பட்டன –
அவற்றின் யுடைய ஸ்திதி உன்னாலே –
தபஸ் சாலே தேவர்கள் ஆனவர்களுக்கும் தேவனும் நீயே –
அத்யுஜ்ஜ்வலமான அக்னியும் குல பர்வதங்களும் திக்குகளும்
அண்டத்திலும் யுண்டான சந்திர ஸூர்யர்களும் ஆகிற இவையும் நீ இட்ட வழக்கு-

————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு--21-

இவை -இத்யாதி –
பெரிய வாயைத் திறந்து புறப்பட விட்ட எரி இவை –
பிலவாய்-பெரிய வாய் -என்றுமாம்
இவையா இத்யாதி –
வென்றது ஆச்சரியத்திலே
சீற்றத்தாலே எரிவட்டம் போலே இருக்கிற திருக் கண்கள் இவை –
மிகவும் ஜ்வலியா நிற்பதும் செய்து
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நரசிம்ஹத்தின் யுடைய மிக்க வழகியவை –
இவை இவை என்றது நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு
சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –
நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –

————————————————————————–

ஆனபின்பு சர்வ காரணமான நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

அழகியான் இத்யாதி-
அழகியான் அவனே –
ஆர் என்னில் நரசிம்ஹாம் ஆனவனே
இவ்வாத்மா தன்னிலும் காட்டில் பழையனாய்-இதுக்கு ரஷண உபாயங்களை அறிந்து வைத்து இருக்கிறவனை ஆஸ்ரயிங்கள்-
குழவியாய் இத்யாதி –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஒரு சிறு பிள்ளையாய் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷித்து எல்லா லோகங்களுக்கும் காரணம் ஆனவனே
பிரளயத்திலே மங்கிப் போகிற ஆத்மாக்களை மத்ச்யமாய் ரஷித்து இதுக்குக் காரணம் ஆனவன் –
வடசய நாத்ய ஆச்சர்யங்களாலே காரணமாய் நின்றவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் ஆகவுமாம்-
குழவி -இத்யாதி –
சர்வேஸ்வரனான தான்   வட தள  சாயியாய் பிரளயகாலத்திலே இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷித்து -எல்லா லோகங்களுக்கும் காரணமாய் –
அவாந்தர பிரளய காலத்திலே மத்ச்யமாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி சகல ஆத்மாக்களையும் ரஷிக்கைக்கு அடியாய்
அழகிய வடிவோடு நரசிம்ஹமமாய்   வந்து திருவவதாரம் பண்ணி அருளி -ஆஸ்ரித விரோதியான ஹிரண்யனைப் பிளந்து அருளி
இப்படி சகல ஆத்மாக்களோடும் பழகி இருக்கிறவன் திருவடிகளிலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

————————————————————————–

அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்
அவை எல்லா வற்றையும் எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

வித்தும் இட -இத்யாதி –
பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி -ருசியைப் பிறப்பித்து -பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி வைத்த படியாலே யாத்ருச்சிகமாக ஸூ க்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –
மொய்த்து -இத்யாதி –
அவன் வடிவைக் காண வேணும் என்கிற அபேஷை   பிறக்கிற
பின்னோடே-திரண்டு எழுந்த கார் காலத்தில் மேகம் போலே கருத்து இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரன் திரு மேனியை
நீர் கொண்டு எழுந்த காளமேகமானது காட்டும்
அன்றிக்கே –
சம்சாரம் ஆகிற பழம் புனத்திலே ஈர நெல் வித்தி -என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ
அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே முன்னின்று பிரப்பியா நிற்கும் -என்றுமாம் –

————————————————————————–

ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன
யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய   சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

நிகழ்ந்தாய் -இத்யாதி
யுகம் தோறும் அவ்வோ காலங்களிலே சேதனர் உகந்த நாலு நிறத்தை உடையனாய்
இரண்டு பஷத்திலும் யுள்ள சேனையை முடியும்படி உபேஷித்தாய்-
மது கைடபர்களை இகழ்ந்தாய் -என்றுமாம் –
புகழ்ந்தாய்-இத்யாதி –
கொடிதான யுத்தத்திலே அர்ஜூனனை நீ தானே சேனாபதியாய் உன் திரு உள்ளத்தில் படியே யுத்தத்தைப் பண்ணும்படியாகப் புகழ்ந்தாய்  –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: