(மூன்று பிரமாணங்கள்
ப்ரத்யக்ஷத்துக்கு கண் இத்யாதிகள் உபகரணங்கள் -இவை அறிவிக்காதே
அனுமானம் -ப்ரத்யக்ஷம் முன்பே ஆனால் தானே
சாஸ்திரம் -வேதம் -ஸப்த பிரமாணம்
இவன் அதீந்தர்யன் -காது குத்த ஒத்துக் கொள்ளாமல் -ஸாஸ்திரத்தாலே அறிய வேண்டுமே
ஆச்சார்ய உபதேசம் இதன் மூலம் தானே
ஆகவே ஒத்துக் கொள்கிறான் -அந்த மரியாதை கொடுக்க –
இத்தை புரிய வைக்கவே இந்த பதிகம் -)
போய்ப்பாடுடைய பிரவேசம் –
கீழே -தாயார் வாய்ச் சொல் கருமம் கண்டாய் -என்றும்
தீமை செய்து அங்கம் எல்லாம் புழுதியாக யளைய வேண்டா -என்றும்
பலவிடங்களிலும் சொல்லிற்று கேட்கிறார் இல்லை -என்று இருக்கையாலும் –
ஆஸ்ரித பரதந்த்ரனான அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்றும் போதும்
ஆஸ்ரித வசனம் கேட்க வேணும் என்னும் தாத்பர்யம் தோன்ற வேணும் என்று
ஸ்ரவண இந்த்ரியத்திலே சம்ஸ்கார ஸூஷி யுண்டாக அவன் ஆசரித்து காட்டுகையாலே
இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான நிரபேஷ பிரகாசகம் ஒருபடிப் பட்டு இருக்கும் –
அவன் இப்படி ஆசரித்தான் என்றால் -இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான சாபேஷராய் இருக்கும்
தேக இந்த்ரியங்கள் ஜன்ம சித்தமாக யுண்டாய் இருக்கச் செய்தேயும்
த்ருஷ்டாத்ருஷ்ட ரூபமான பதார்த்தங்களை ஜன்ம சித்தமான அந்த இந்த்ரியங்களாலே குறிக் கொண்டு கிரஹிக்கும் போதும்
1-பிரமாணிகரான பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
2-பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களுக்கு
சேர்ந்த வர்த்தமான ஆச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
3-இவ் வனுஷ்டானம் தான் இல்லை யாகிலும்
திராவிட வேதத்துக்கு கருத்து அறியும் மூதுவர் நிர்ணயித்த வாச்ய வாசக சம்ப்ரதாயத்தாலே
வ்யாபக த்வாரா வாசக வாச்யங்களை பிரதம மத்யம நிகமன பர்யந்தமாக
அர்த்த தர்சனம் பண்ணுவிக்க வல்லவர்களுடைய அனுதாப வசனங்களாலும்
அனுதாப ஹேது வானால் இறே செவி வழியே கலை இலங்குவது
ஸ்ரோதாச -(வக்தா ஸ்ரோதாச துர்லப )
அனுதாப ஹேதுவான அர்த்த் க்ரஹண சப்த மாத்ரங்களை வருந்தியும் குறிக் கொண்டு க்ரஹிக்கைகாக இறே
அந்த ஸ்ரவண இந்த்ரியத்துக்கு சம்ஸ்கார ஸூஷி யுண்டாக்கிற்று என்று –
(நீ என் செவியின் உள் புகுந்து -ஆழ்வார்
ஸ்ருத்வா –ருக்மிணி தேவியும்
நவவித பக்தி முதலில் ஸ்ரவணம்
காது திறந்தே இருக்குமே -வாயைப் போலே திறக்க வேண்டாமே )
அத்தை நினைத்து
அந்த ஸூஷியை பல காலும் தொட்டுப் பார்க்க வேணும் இறே
உன் செவியில் புண்ணைக் குறிக் கொண்டு இரு-என்று இறே லோக உக்தியும் –
—————————————————————————
போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா யுன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ வுன்னைக் காது குத்த
ஆயப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –2-3-1-
பதவுரை
பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிரா நின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோ வென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.
(உரையாடல் போலவே அழகாக சாதிக்கிறார் )
போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் –
பாடுடைய நின் தந்தையும் -போய்த் தாழ்த்தான் –
புத்ர ரஷணத்திலும் -ஸ்வ ஜன ரஷணத்திலும் -இடம் பட நெஞ்சை யுடையவனான உன்னுடைய பிதாவும்
பசுக்கிடையில் சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று
போய் வரவு தாழ்த்தான் -என்று இவள் சொன்னவாறே
அவன் வந்தால் விளையாடப் போமோ -அதுக்கு முன்பே போக வேணும் -என்று
இவன் உத்யோகித்த அளவிலே –
பொரு திறல் கஞ்சன் கடியன் -என்று இவன் உத்தியோகத்தை நிஷேதிக்கிறாள்
திறல்-பலம் –
இந்த்ராதிகளை வென்று வந்தவன் ஆகையாலே கர்வோத்தரனாய்
உன்னளவில் மிகவும் கடியனாய் இருப்பான் அவன் –
அவன் ஆரை வர விடும் -எது செய்விக்கும் -என்று -தெரியாது –
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா –
அதுக்கு நல் விரகு அறிந்து காக்க வல்ல
கூர் வேல் கொடும் தொழிலரானவரும் இங்கு இல்லை –
இவ் ஊரில் விளையாடுகிற பிள்ளைகளை எல்லாரையும் சிலர் காக்கிறார்களோ-
அவர்கள் நடுவே விளையாடுகிற என்னை
அவன் வரவிட்டவர்கள் யுண்டாகிலும் என்னைக் குறித்து அறிய வல்லார்களோ -என்ன
கடல் வண்ணா -யுன்னைத்-
உன் நிறம் யுன்னைக் கோள் சொல்லிக் காட்டிக் கொடாதோ என்ன
செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும் ஊரிலே அவர்கள் கண்டால் தான் வருவது என்-என்ன –
ஆனாலும் தனியே போய் எங்கும் திரிதி –
அது (தனியே போய்) செய்கிறேன் இல்லை –
பிள்ளைகள் நடுவே நின்று விளையாடி வருகிறேன் -என்ன
உன் வார்த்தை அன்றோ –
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே-
பேய்முலைக்கும் பாலுக்கும் வாசி அறியாமல் யுண்டவன் அன்றோ –
உன்னை நலிவதாக வந்தவர்கள் பிள்ளைகளுடைய வேஷத்தை எடுத்துக் கொண்டு விளையாடுவாரைப் போலே தோன்றுவார்கள்
அந்த பேய்ப்பாலுடைய வீர்யத்தாலே உனக்கு அறிவு கேடு விளைந்து அவர்களோடேயும் விளையாடக் கூடும் -என்ன –
ஆனால் தான் வந்தது என்
நான் – கேசவ நம்பீ காண்
என்னுடைய சௌர்யாதி குண பூர்த்தி லேசத்திலே கேசி பட்டது அறியாயோ -என்ன-
அது தன்னாலே அன்றோ மிகவும் பயப்படுகிறேன்
(நாரதரே பயப்பட்டாரே
நீயோ பயப்படாமல் நானாச்சு என்று போனாய் )
நம்பி -என்றது
விஷாத அதிசய ஸூசகம் –
வுன்னைக் காது குத்த ஆயப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் —
நானே அன்று காண் –
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் காண் -வாராய் -என்ன
வந்தவர்களை நீ உபசரித்து சமாதானம் செய்தால் அன்றோ நான் வர வேண்டுவது என்ன –
வந்து காது குத்தினால் அன்றோ அவர்களை உபசாரத்தோடு உபசரிப்பது
அடைக்காய் முதலான உபஹார த்ரவ்யங்கள் எல்லாம் திருத்திப் பாரித்து வைத்தேன் -என்கிறார் –
——————————————————————————
வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர்ப்பாத கிண்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா விங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகுமுடைய கனகக் கடிப்பும் இவையா –2-3-2-
பதவுரை
நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.
வண்ணப் பவள மருங்கினில் சாத்தி –
நிறமுடைத்தான வண்ணம் -அதாவது சாதிப் பவளம் –
பவளத்தை திரு வரையிலே சாத்தி –
மலர்ப் பாத கிண்கிணி யார்ப்ப –
விகசிதமான தாமரை போலே இருக்கிற
பாதச் சதங்கை மிகவும் சப்திக்க –
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா விங்கே வாராய்
உன்னை வந்து அணுகி தொழுகை தானே பிரயோஜனமாய் இருக்குமவர்கள் –
அதாவது அவன் பக்கலில் ப்ரீதி ரூபத்திலே யாதல் –
ஹித ரூபத்திலே யாதல் –
நண்ணுகை யாவது பிராப்தி பர்யந்தமாக கிட்டுகை
இப்படி இருப்பார் உடைய ஹிருதயத்தில்
நின்றும் இருந்தும் கிடந்தும் -பெரிய திருவந்தாதி -35-
பிரியாத நாராயணா –
இவருடைய நாராயணா சப்தார்த்தம் இப்படி போலே காணும் இருப்பது
ஆகை இறே வாராய் -போகாய்-என்று கதி ஆகதிகளுக்கு யோக்கியம் ஆக்கலாய் இருப்பது –
யோகத்தில்
கதி ஆகதியும் -ஆஸ்ரயணமும்-அனுவர்த்தனமும் -நியாம்யன் ஆக்குகையும் கூடாது இறே
இங்கே வாராய் –
நான் அழைக்கிற இடத்தே வாராய் –
எண்ணற்கு அரிய பிரானே-
எண்ணுமவர்களுக்கும் கிட்டவும் கூட அரியன் ஆனவனே –
இன்ன சாதனத்தை அனுஷ்டித்தால் -அத்தாலே இன்ன பலம் கிடைக்கும் என்று எண்ணி இருக்கையும்
இன்ன சாதனத்தாலே உன்னைக் கிட்டலாம் என்று இறே எண்ணி இருக்கையும் –
எண்ணியே போம் இத்தனை –
பிரானே –
சிந்தை பிரியாமையும்
எண்ணற்கு அரியன் ஆகையும்
தம் பேறாய் இருக்கை –
திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய-இடுகைக்கு அன்றோ –என்ன
எரியாமே காதுக்கு இடுவன் –
கண்ணுக்கு நன்றும் அழகுமுடைய கனகக் கடிப்பும் இவையா —
திரி ஏற்றிக் காது பெருக்கினால் உனக்கு இடுவதாய் –
கண்ணுக்கு நன்றாய்
அழகும் யுடைத்தான கனகக் கடிப்பும்
இவையா –
இவை இருக்கிறபடி பாராய் -என்று கொண்டாடுகிறார் –
உபாதான கௌரவத்தாலே வந்த நன்மை யன்றிக்கே
பணித்து இருத்தத்தால் வந்த அழகு தோன்றி இருக்கிறபடி பாராய்
கனகம் -பொன்
ஆ -கொண்டாட்டம் –
——————————————————————–
வையம் எல்லாம் பெறும் பொற் கடிப்பு அளவேயோ
காது பெருக்கினால் இடுகைக்கு
மகார்க்கமான மகரக் குழையும் கொண்டு வைத்தேன் -என்கிறார் –
வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியையிடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய விவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் –2-3-3-
பதவுரை
உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீயபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸி லே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு
இங்கே வாராய்:-.
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
பூமி எல்லாம் பெறும் பெரு விலைய-
சமுத்ரத்திலே வாழுகிற மகரம் போலே இருக்கையாலே -மகரக் குழை -என்கிறது –
வார் -நெடுமையும் -சூழ்ச்சியும் -ஜலமும் –
மகரக் குழை -காதுப் பணி
கொண்டு வைத்தேன் -சமைத்துக் கொண்டு வைத்தேன் –
வெய்யவே காதில் திரியையிடுவன் –
கண்டூதி சமிக்கும் படி வெச்சாப்போடே (அல்ப உஷ்ணத்தோடே )திரியை இடுவன் –
ஏவ காரம் -வெய்யத் திரியையே -என்று காட்டுகிறது –
மெய்யவே -என்ற பாடம் ஆகிற்றாகில்
நீ ஒன்றைக் காட்டி ஒன்றை இடக் கூடும் -என்று அவன் இறாய்க்க
என் வார்த்தை மெய்யை யுடைத்தாயே காண் இருப்பது -என்கிறாள் –
நீ வேண்டியது எல்லாம் தருவன்-
நீ விரும்பின வெல்லாம் தருவன் –
ஒரு பழம் பணியாரம் அபூபாதிகள் இறே அவன் வேண்டுவது –
உய்ய விவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
இவ் வாயர் குலத்தில் உள்ளார் உஜ்ஜீவிக்கலாம் படி அவதரிக்கையாலே
மிக்க தேஜஸ் சையும் பெற்று
ஆயர்க்கு கொழுந்தும் ஆனவனே —
திரு வாய்ப்பாடியிலே ஒருவருக்கு ஒரு வ்யசனம் உண்டானால் வாடுவது கிருஷ்ணன் முகம் இறே –
(கொழுந்து -ஆயர் கார்யம் இவன் காரணம் )
மையன்மை செய்து இள வாய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் –
இள வாய்ச்சியரை சௌந்தர்யத்தாலே மயக்கும்படியான வியாபாரங்களை செய்து
அவர்களை அநவரத சிந்தனை பண்ணுவிக்க வல்ல
மாதவனே –
ஸ்ரீ யபதியே
உன்னை அநவரத சிந்தனை பண்ணுவிக்க வல்லள் அவள் இறே
இங்கே வாராய் –
அங்கே நில்லாதே இங்கே வாராய் –
————————————————————————————-
உன் தரத்தரான பிள்ளைகள் காது பெருக்கித் திரிகிறபடி பாராய் -என்கிறாள்-
வண நன்றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கிக்
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய விக்கடிப்பிட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் –2-3-4-
பதவுரை
இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.
குண நன்றுடைய ரிககோபால பிள்ளைகள் –
வண நன்றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கிக்
நன்றான நிறத்தை யுடைத்தான
கடிப்பிட்டுக் காது வடிந்து
தாழப் பெருக்கி திரிவாராய்
தாய்மார் தமப்பன்மார் சொல்லிற்றுச் செய்யும் குணவான்களாய் திரிகிற படி பாராய்
நீ சொல் கறையாய் இரா நின்றாயே –
கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் –
சிலருக்கு ஸூலபனுமாய் துர்லபனுமாய் இரா நின்றாயே நீ –
கோபாலர் பிள்ளைகளையும் கண்டாயே –
இணை நன்று அழகிய விக்கடிப்பிட்டால் இனிய பலாப் பழம் தந்து
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்
ஸ்வ பாவமே அழகியதான இவ்வயிரக் கடிப்புகளை உன் காதிலே இட்டால்
உனக்கு இனிய பலாப் பழம் தந்து –
சுண நன்றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் —
சுணங்கை யுடைத்தாய்
நன்றாய் அழகியதான முலையை உண்ணத் தருவன் –
சுணங்கு -முலை மேல் தோன்றும் நிறம்
நன்று -மார்த்வம் –
சோத்தம்பிரான் இங்கே வாராய் —
ஸ்தோதாக்களுக்கு எளியனாய்
மகா உபாகாரகனாய் இறே இருப்பது –
——————————————————————————
சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன வப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் –2-3-5-
பதவுரை
பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!-க்ருத்ரிம செயல்களால் பூர்ணன்
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).
சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் –
உன்னை ஸ்தோத்ரம் செய்து இரந்து கொண்டாலும் வருகிறாய் இல்லை -என்ன
நீ அழைக்க நான் வந்தால்
குணம் கொள்ளாமல்
நேற்று என்னை அடித்தவள் அன்றோ நீ -என்ன –
சுரி குழலாரொடு நீ போய் கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடுவனோ நம்பீ
அதுவோ பருவத்தால் இளையருமாய்
சுரி குழல் படைத்தவரோடு நீ போய்
கை கோத்து
குரவை பிணைந்து
இருவருக்கு ஒருவனாய் வளைய நின்றாடும் குரவை கூத்தாடி வந்தால்
உன்னை குணம் கொண்டிடுவேனோ -என்றவாறே –
அது நம் குறை யன்றோ -என்று வந்து கிட்டினான்
கிட்டின அளவிலே ப்ரீதையாய்
குணம் கொண்ட நம்பீ -என்று இவள் திரியிடப் புக
அவன் இசையாமையாலே –
திரியிட வொட்டில் பேர்த்தும் பெரியன வப்பம் தருவன் –
நீ சிறிது சிறிது என்று பொகட பொகட விரும்பும்படி பெரிதான அப்பம் தருவன் -என்றவாறே
அவன் இசைய –
பிரானே -என்று தானும் கொண்டாடி –
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் –
வேய் போலே பசுத்து இடவிய தோளை யுடையவர்கள் விரும்பும் படி குழல் படைத்த
விட்டுவே -நீ இங்கே வாராய்
விஷ்ணு சப்தம் சாதாரண வ்யாவ்ருத்தமான படி தோன்ற
நீ இங்கே வாராய் என்று பிடித்து திரி இடுகிறாள்
கேசவனை -விட்டுவே -என்கிறாள்
கரும் குழலாலே -பிரசஸ்த கேசன் -என்றது பின் நாட்டின படி-
————————————————————————————–
விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –
விண்ணெல்லாம் கேட்க வழுதிட்டாய் யுன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன்
புண்ணேதும் இல்லை யுன் காதுமறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே –2-3-6-
பதவுரை
விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.
விண்ணெல்லாம் கேட்க வழுதிட்டாய் யுன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண் தின்றாய் என்று ஆய்ச்சி அடித்தவாறே
ஆ -என்ன
ஆகாசம் எல்லாம் தன் குரலாம்படி அழப் புகுந்தான் –
அழுதவாறே -சுவடு நாக்கில் காணில் குறி இடக் கடவோம் என்று பார்த்தாள்
இவன் தின்றிலோம் என்றவாறே பார்க்கக் கூடும் இறே
இவனும் விரும்பித் தின்று இறே தின்றிலேன் என்பது
இவன் அங்காந்த வாயையும் நாக்கையும் உற்றுப் பார்த்த வாறே முன்பு கண்டால் போலே
வாக் இந்திரிய த்வாரா மண் எல்லாம் கண்டு
நம்முடைய பிள்ளை என்று இவனை நலிந்தோமே என்று தன் மனஸ்ஸாலே அஞ்சி
இவன் நம்முடைய பிள்ளை அன்று -மது சூதனே என்று இருந்தேன் என்னா
அரும் தெய்வம் -என்றதை மறந்தால் போலே மறந்து –
புண் ஏதும் இல்லை என்றாள் இறே
காது மறியும்
மறிகை யாவது தண்டு புரளுகை
கையிலே திரியை எடுத்து ஓர் அல்பமும் நோவாத படி இடுகிறேன் –
இறைப் போது பொறுத்து இரு
இறை-க்ஷணம்
இவள் இட -அவன் பொறுத்த படியாலே ஸ்தோத்ரம் செய்து
நம்பீ –பூர்ணனே
ஸூலபனே -எனக்கு உபகரித்த உபகாரகனே
கடல் போலும் நிறத்தை உடையவனே
காவலனே -ரஷ்யமாய் ரஷிக்கும் அவனே என்கிறார் –
(காப்பாற்றப்பட்டவனாய் இருந்து
எனக்கு பேர் கொடுத்து ரஷித்தவனே என்கிறார் -)
———–
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –
பதவுரை
முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?
முலை இத்யாதி
முலை உண்ணாய் என்று பலகாலும் சொன்னவாறே
முலையும் மற்றும் நீ தரும் அபூபாதிகளும் வேண்டேன் என்று இவன் கழிய ஓடிப்போய் விட நின்றவாறே
இவள் பிடிப்பதாகச் செல்ல
இவளைக் கண்டவாறே காதில் கடிப்பையும் பறித்து இவள் முன்னே பொகட்டு
நான் ரக்ஷகன் அல்லேனோ ரஷ்ய வர்க்கம் நோவுபடப் பார்த்து இருப்பேனோ -என்னா
மலையை எடுத்து
மலையைப் பிடுங்கி எடுத்து
நல்ல குடை பெற்றோமே என்று மகிழ்ந்து
கல் மாரி காத்து
பட்டர் -கல் மாரி யாகையாலே இறே கல்லை எடுத்தது –
நீர் மாரி யாகில் கடலை எடுக்கும் போலே காணும் என்று அருளிச் செய்தார்
பசு நிரை மேய்த்தாய்
இன வாநிரை பாடி அங்கே ஒடுங்க -என்கிறபடியே
அங்கே என்றது
கன்று காலி மேய்க்கிற இடங்கள் எல்லாம் மலை கவிக்கையாலே
வர்ஷத்தால் வந்த வியசனம் தோன்றாத படி தன் இஷ்டத்திலே மேயும்படி மேய்த்தான் என்றபடி –
சிலை ஓன்று இறுத்தாய் –
ஸ்ரீ வட மதுரையிலே ஆதல்
ஸ்ரீ மிதிலையில் ஆதல்
த்ரி விக்ரமா
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யம் போக்கினவனே
(கீழ் லோகம் மேல் லோகம் இரண்டுக்கும் இங்கே ஸ்வாபதேசம் )
திரு ஆயர்பாடிப் பிரானே
கல் மாரி காத்த உபகாரகன் ஆகையாலே -திரு ஆயர்பாடிப் பிரானே -என்கிறார் –
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே
தலை செவ்வே நில்லாத போதே என்னுதல்
நீ தலை நின்று உத்தர ப்ரத் யுத்தரம் சொல்லாத காலத்திலே என்னுதல்
உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே
ஏற்கவே செய்யாதே விட்டிட்ட என் குற்றமே யன்றோ
உன்னை வெறுக்கிறது என்
——–
என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –
பதவுரை-
(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )
என் குற்றம் இத்யாதி –
நான் புற்று மண் உண்டேனாக -நீ என்னைப் பார்த்தும் பிடித்தும் அடித்தும் அனைவருக்கும் காட்டிற்று இலையோ
ஆகையால் என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் –
வன் புற்று-இத்யாதி
நீ சேராதவை சேர்க்கக் கொடி கட்டினவன் அன்றோ –
வலிதான புற்றிலே பாதகமான பீதியாலே கிடக்கிற பாம்பையும்
அதுக்கு ஜென்ம சத்ருவான திருவடியையும் சேர்த்துக் கொடி யாக்கிக் கொண்டும் –
வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டும்
கொடும் கோளால் நிலம் கொண்டு அத்தை நியாயம் ஆக்க வல்ல பூர்ணன் அல்லையோ –
அது என்
த்ரி இடாத போது உன் காதுகள் தூறும்
துன்புற்றவன வெல்லாம் மெய்யே தீர்க்க வல்ல உபகாரகனே
அவன் திரியிட ஓட்டில் இவளுக்கு எல்லா கிலேசமும் தீரும் போலே காணும் –
திரியிட்டு விட்டால் காண் குண ஹானியால் அபூர்ணனான உன்னோடு நான் வார்த்தை சொல்லுவது –
அப்போது அன்றோ என் துன்பம் தீருவதும் –
———-
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –
பதவுரை
சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.
மெய் -இத்யாதி
நீ தான் களவு கண்டாய் அன்றோ -என்றவாறே
இவ்வூரார் பலரும் சொல்லக் கேட்டேன் என்கிறாள் –
அவர்கள் சொல்வது எல்லாம் மெய்யோ என்ன
அவர்கள் அசத்தியம் சொல்லுவதும் இல்லை
நீ சத்யம் சொல்லுவதும் இல்லை
அவர்கள் தான் என் சொன்னார் என்ன
வெண்ணெய் தொடுப்புண்டாய் என்று சொன்னவாறே
உனக்கு இது தகுமோ என்று நான் புத்தி பண்ணினேன் காண் -என்ன
அவர்கள் தான் தொடுப்புண்ணக் கொண்டார்களோ என்ன –
கண்டோம் -என்றார்கள் காண் -என்ன
ஆனால் கண்ட போதே என்னைப் பிடித்துக் கொண்டு வந்து
உனக்குக் காட்ட வேண்டாவோ என்ன –
அவர்களால் உன்னைப் பிடிக்கப் போமோ
நான் தான் உன்னைப் பிடிக்க வல்லேனோ என்ன
நீ தான் என்னைப் பிடியாது இருந்தாயோ
கட்டாது இருந்தாயோ
முடியாது இருந்தாயோ
சத்ரு மித்ர உதாசீனாத்மகமான ஜகத்தில் பலரும் காணக் காட்டாது இருந்தாயோ
மெய் இத்யாதி –
பொய்யை மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதி –
வெண்ணெயைக் களவு கண்டாய் என்று அடாப் பழி சொல்லி
என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் எல்லாரும் காணக்
கரை உரலோடே கட்டி அடித்திலையோ
இப்போதும் அது செய்ய வன்றோ நீ என்னைப் பிடிக்கத் தேடுகிறது என்ன –
நான் முன்பு செய்தவை சொல்ல வேண்டா காண்
செய்தவை சொல்ல வேண்டாவோ என்ன
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
நான் செய்தவற்றைச் சொல்லி நீ மந்த ஸ்மிதம் பண்ணி எனக்கு எட்டாமல் இருந்தால் உன் காது தூரும் –
சிரீ தரா -வாராய் -என்கிறாள்
அவன் எத்தனையேனும் முக்தனாய் நின்ற காலத்திலும்
சிரீ தரா -என்றால் ஒழிய வசீக்ருதன் ஆகான் போலே காணும்
இந்நின்ற காரிகையார் சிரியாமே
உன் தரத்தில் பெண்களாய்
உனக்கு அபிமதைகள் யானவர்கள் –
விடு காது -சுணை காது -என்றால் போலே சில பேர்கள் இட்டுச் சிரியாதபடி
இந்தக் கையில் திரியை இடு கிடாய்
கரை யுரல் -சுற்றணையான யுரல்
தொடுப்பு -களவு
———–
காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே -2-3 10- –
பதவுரை
காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்த போது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’
காரிகை இத்யாதி
சிரிக்கிற காரிகையாருக்கும் திரியிட வந்து நிற்கிற உனக்கும் ஏதேனும் சேதம் உண்டோ –
திரியிட்டால் என் காதுகள் வீங்கி எரியுமாகில் -என்று பிடி கொடாமல் ஓடப் புகுந்தவாறே
உன்னை வெறுக்கிறது என் -ஏற்கவே செய்யாதே என் குறை யன்றோ -என்று வெறுக்கிறாள் –
தாரியாதாகில்
நெருக்கி இட்ட திரியைக் காது பொறாதாகில் உனக்குத் தலையிலே நோவு உண்டாகக் கூடும் என்று
உன் வசத்திலே விட்டுவிட்ட என்னுடைய குற்றம் அன்றோ –
அது கிடக்கிடு
உன் தரத்தரான நம் தெருவில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கித் திரியவும் கண்டாயே
ஏர்விடை செற்று
உன்னோடு பொருவதாக எதிர்ந்த ஆஸூரமான ருஷபங்களை நிரன்வய நாசமாக்கி
இளம் கன்று எறிந்திட்ட
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரரை விளாவான அஸூரர்கள் மேலே எறிந்திட்ட
விருடீகேசா
இந்திரியங்களை விஷயங்களில் செல்லாமல் ஸங்கல்பத்தாலும் ஸவ்ந்த்ர்யத்தாலும் நியமிக்க வல்லவனே
என் தன் கண்ணே
என்கிறார்
இவருக்கு எவ்வஸ்தையிலும் கண்ணாவான் அவன் போலே காணும் –
——–
கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –
பதவுரை
குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –
கண்ணை இத்யாதி –
கடி கமழ் பூம் குழலார்கள்–கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கி–
பரிமள பிரசுரமான பூக்களாலே அலங்க்ருதமான குழலை உடையவர்கள்
தங்களுக்கு கண்ணான உன்னைத் தங்கள் கண் குளிரும்படி -கண் கலவி உண்டாகும்படி
உன்னுடைய சமுதாய சோபையை முழுதும் நோக்குகை இறே எங்கும் நோக்குகை யாவது –
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே
இப்படி நோக்கியவர்களுடைய அபிமத அனுரூபமான எண்ணம் கடவாமல் அதுக்குள்ளே இருந்து
அவர்களுக்கு நிரதிசய போக்யமாம் படியான பெருமையை உடையவனே –
எங்கள் அமுதே
எங்களுக்கு சத்தா தாரகன் ஆனவனே –
உண்ணக் கனிகள் தருவான்
நீ விரும்பி அமுது செய்யும் படியான நாவல் பழம் முதலானவை எல்லாம் தருவன் –
கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
கடுப்பு ஓர் அல்பமும் நோவாமே காதுக்கு இடக் கடவேன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா
ஸகடாசூரனுடைய கோர்வைகள் எல்லாம் குலையும் படி தள்ளி
ஜகத்துக்குக் காரணமான உன்னை நோக்கித் தந்தவனே –
இங்கே வாராய்
————
வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 – –
பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –
வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை-நோவத் திரிக்கில்
உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்–
வாராய் வாராய் என்று நீ பல காலும் அழைக்கிறது என்
வா என்று சொல்லி என் கையைப் பிடிப்பதாகவும்
வன்மையோடு என் காது நோம்படி கடிப்பைத் திருகி விடுவதாகவும் அன்றோ நீ அழைக்கிறது –
நான் வரக் கொள்ள -நீ கடிப்பைத் திரிகில் எனக்கு அன்றோ நோவுவது –
உன் காதில் ஏதேனும் நோவு உண்டாமோ -என்றவாறே
உன் காதில் ஓர் அல்பமும் நோவாதபடி இடுகிறேன் வாராய் என்ன –
ஓம் காண் -உன் வார்த்தை அன்றோ
காதுகள் நொந்திடும் -வர மாட்டேன் -என்று ஓடப் புகுந்தவாறே –
நாவற் பழம் கொண்டு வைத்தேன்
உனக்கும் பின்னைக்கும் வைத்தேன் –
இப்போதும் உனக்கு வேண்டும் பழங்கள் கொண்டு வைத்தேன்
இவை காணாய்
இவை இருக்கிற படி பாராய்
நம்பீ
பூர்ணனே
நிரபேஷதையால் வந்த பூர்த்தியை உடையவனே
முன் வஞ்ச மகளை சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா
பூதனா சகடங்களை நிரசித்த பரமபத நிலையன் -என்னுதல்
என்னாலே கட்டப் பட்டவன் -என்னுதல்
இங்கே வாராய்
———-
அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம்
அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –
பதவுரை
அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இட விரும்பி
திருமாலை–ஸ்ரீய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச்சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய பழமையான-அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம் – யசஸ்ஸை யுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்–அந்தரங்க கிங்கராவார்
வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டி
வடிந்து தாழும்படியாகக் காது பெருக்கி ஒரு மட்டிலே அமைத்துத்
திரு மகரக் குழை சாற்ற வேண்டி
சீரால் அசோதை
சீர்மை குன்றாமல்
பிள்ளை கன்றாமல்
திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
ஸ்ரீ யபதியை
மகரக் குழை இட வேண்டிச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
இவருடைய திரு உள்ளத்திலே இறே அவன் சொன்ன சொற்கள் நின்று விளங்குவது
அவள் ஒரு கால் நின்று இவனைப் பார்த்து ஒரு கால் தன் க்ருஹ கார்யத்தில் ஒருப்படுவதாய் இறே
இவர்க்கு அவன் தன்னோடே இறே எல்லா யாத்திரையும்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன்
பூமியில் உள்ளாருடைய ஹ்ருதயங்கள் நிறையும்படி –
பழையதான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி
ஸ்ரீ வைஷ்ணவ சிஹ்னமான கேசவாதி நாமங்களாலே அருளிச் செய்தது
ஆகையால் இறே ஆராத அந்தாதி ஆயிற்று –
பன்னிரண்டும் வல்லார்
இப் பன்னிரண்டு பாட்டையும் சாபிப்ராயமாக வல்லார்கள்
ஆராமை ஆவது
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அப்போது விரும்பிக் கற்றால் போலவே
அதிருப்த போகமாய் இருக்கை
அவன் தான் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் ஆனால் போலே
அச்சுதனுக்கு அடியாரே
தன் படிகள் ஒன்றும் நழுவ விடாதவனுக்கு அடியராகப் பெறுவர் –
(பெருமைகள் ஒன்றும் குறையாமல் -நழுவ விடாமல் அவதரிப்பவன் அன்றோ )
—————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.