ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-4-தன் முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்

தன் முகத்து -பிரவேசம் –

கீழே யசோதை -அழேல் அழேல் -என்ன -அழுத படியாலே அழுகை ஆற்றுகைக்காக
நிலா முற்றத்தே கொண்டு புறப்பட்டு அம்புலி அம்மானைக் காட்ட
அழுகையை மறந்து -அத்தை பிடித்துத் தா -என்ன –
இவன் கன்றாமைக்காக -இப்போதே பிடித்துத் தருகிறேன் -என்று இவள் -அம்புலி வா -வா -என்று
பலகாலும் அழைத்த பாசுரத்தாலே அவன் அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற லீலா ரசம் கொண்டாடுகிற பிரகாரத்தைக் கண்டு
–நாம் வேண்டாம் என்று நியமிப்போம் ஆகில் இவன் கன்றும் –
இவன் தன்னை உளனாக்கிக் கொள்ளவும் வேணுமே
உளனாம் போது மேன்மையும் நீர்மையும் நடக்க வேணுமே – என்று
இவனுடைய லீலா ரசத்தை அனுமதி பண்ணி
விண் தனில் மன்னிய மா மதீ-என்று -மங்களா சாசன பரராய்
சூழ்ந்து இருந்து ஏத்துகிறவர்களையும் அழைக்கிறார் –

மா மதீ -என்றால் மதியை யுடையவர்களை காட்டுமோ என்னில்
விஜ்ஞானம் யஞ்ஜம் தநுதே-
தத் குணசாரத்வாத் தத் வ்யபதேச –
என்கிற ந்யாயத்தாலே காட்டும் இறே –
மங்களா சாசன பரராய் இருக்கும் திருவடியும் பெருமாள் திரு உள்ளம் கன்றாமைக்காக
இவ்வஸ்துவை யுண்டாக்கிப் பரிய வேணும் என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது அன்றோ கார்யம்
கடுக அழைத்து அருளீர் என்றான் இறே
மங்களா சாசனம் தான் அவன் யாதொன்றில் உற்ற காலத்து
அங்கு ரசிக்கவும் வேணுமே
அது கார்யம் அன்றாகில் விலக்கவும் வேணும்
கார்யம் அன்று என்ன ஒண்ணாதே
இது அவதாரத்தில் மெய்ப்பாடு ஆகையாலே

மன்னிய மா மதியைப் பிடித்துத் தா -என்று அவன் சொல்லி ஆசரிக்கையாலே
ஆச்சார்ய முகத்தாலே ஆர்க்கும் ஜ்ஞானம் யுண்டாக வேணும் -என்று காட்டுகிறது என்னவுமாம்
ஆச்சார்யன் தானும் மன்னிய மா மதி யுடையவர்களையும் அழைத்துக் காட்டும் இறே –

——————————————

நான் யுனக்கு அம்புலி யம்மானைப் பிடித்துத் தருகிறேன் என்று
ஸ்தாலாந்தரத்திலே கொண்டு போய் வைக்க
அங்கு புழுதியைக் கண்டவாறே
அத்தை அளைந்து விளையாடுவது -பூர்வ ஸ்ம்ருதியாலே -அத்தைப் பிடித்துத் தர வேணும்
என்பதான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

தன் முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன் முகக் கிண் கிணி யார்ப்ப புழுதி அழைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை யிள மா மதீ
நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ –1-4-1-

தவழுகையால் உச்சி மணிச் சுட்டி முன்னே தூங்கத் தூங்க
தவழ்ந்து போகையாலே திருவரையிலே சாத்தின கிண்கிணி த்வனிக்க
புழுதி அளைகின்ற பிரகாரத்தைக் கண்டு பிரியப் பட்டு
எம் மகன் கோவிந்தன் -என்று இவன் விளையாடுறதை
நோக்கிப் போ நோக்கிப் போ என்ன
அவன் நோக்காமையாலே
உன் முகத்தில் கண் உளவாகில் கண் படைத்த பிரயோஜனம் பெற நீ இங்கே நோக்கிப் போ என்கிறார் –
நோக்காமைக்கு அடி உன்னுடைய அத்யந்த சைசவம் இறே
கதிர் ஜ்ஞான மூர்த்தியினாய் -திருவாய் -6-2-8-
உனக்கு ஓன்று உணர்த்துவான் நான் -திருவாய் -6-2-5-
என்னுமா போலே நித்ய விபூதியிலும் திருதிய விபூதியிலும்-உண்டான ஜ்ஞான விசேஷங்கள்
தமக்கு விதேயம் ஆகையாலே அவற்றை அழைத்து இவனுக்கு உணர்த்துகிறார் –
அழைக்கை யாவது -அங்குத்தை படிகளை தம்முடைய திரு உள்ளத்திலே சேர்த்து உபதேசிக்கை இறே
அன்றிக்கே
அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்ற அவன் நடத்துக்கிற லீலா ரசத்தை தாமும் கொண்டாடுகிறார் என்னவுமாம் –

—————————————————————————

என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட வுறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –14-2-

என்னுடைய சிறுப்பிள்ளை
எனக்கோர் இன்னமுது -அந்த அமிருதத்தில் வ்யாவருத்தி
எம்பிரான் -எனக்குப் புத்திரனாய் -என் மலடு நீங்க திருவவதரித்த மகா உபகாரகன் –
தனக்குத் தகுதியான சிறுக் கைகளாலே பல காலும் சுட்டிக் காட்டி அழைக்கின்றான்
என் சிறுக் குட்டனான அஞ்சன வண்ணன் ஆடலோடு
மாமதி யான நீயும் விளையாட அறுதி இட்டாய் ஆகில்
மஞ்சில் மறையாதே –
மேகத்தில் சொருகாதே
மா மதீ
முற்பட இள மதி என்று இப்போது மா மதீ என்கையாலே
காலக்ருத பரிணாமம் தோற்றுகிறது-
அபிமத விஷயத்திலே ஓடிச் செல்லுமா போலே
மகிழ்ச்சியோடு ஓடி வா -என்கிறார் –

—————————————————-

பிள்ளை முகத்தில் குளிர்ச்சிக்கு சந்தரன் குளிர்ச்சி ஒவ்வாது -என்கிறார் –

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே யம்புலீ கடிதோடிவா–1-4-3-

ப்ரபாவானான ஒளி வட்டம் சற்றும் எங்கும் சோதி பறந்து சூழ்ந்து
உயரத்தில் நின்று போக்கு வரத்து செய்து திரியிலும்
என் மகன் முகத்தில் குளிர்ச்சிக்கும் பிரசந்ததைக்கும் நேர் ஒவ்வா
சாமர்த்தியமும் சர்வ காரணத்வமும் யுடையவன்
திருமலையிலே நித்ய வாசம் செய்து அருளும் ஸூலபன்
கானமும் வானரமுமாயின வற்றுக்கு முகம் கொடுத்து
உன்னை அநாதரித்து இறே அவன் வாய் திறவாது இருக்கிறது
ஆயிருக்க நீ அவன் அழைக்கவும் பெற்று வாராது இருக்கிறாயே
உன்னைக் குறித்து அழைக்கிற திருக் கைத்தலம் நோவாதே
அம்புலீ கடித்து ஓடி வா –

————————————————————

சக்கரக் கையன் தடம் கண்ணால் மலர விளித்து
ஒக்கலை மேலிருந்து யுன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அருதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் –1-4-4-

திருக்கையிலே -கருதும் இடம் பொருது -திருவாய்மொழி -10-6-8-திரு வாழியை யுடையவன் –
இடமுடைத்தான திருக் கண்களாலே முழு நோக்காகப் பார்த்து மத்யம அங்கத்திலே இருந்து
உன்னையே குறித்துக் காட்டும்
தக்கது அருதியேல்
கண் படைத்தாய் ஆகில் இத்தைக் காண்
கண்ணுக்குத் தகுதி இவனைக் காண்கை காண்
சந்திரா சலம் செய்யாதே
எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கிற நீ
இவனுக்கு வெறுப்புச் செய்யாதே
நபும்சகத்வமும் மலடும் அல்லையேல் வா
ஓன்று பெற்று மலடு ஆவாரும் உண்டு போலே காணும்-

——————————————————————

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியோல்
புழை யிலவாகாதே நின் செவி புகர் மா மதீ–1-4-5-

அழகு விளங்கா நின்றுள்ள திருப்பவளத்திலே
ஊறா நின்ற வாக் அம்ருதத்தோடே கூடி –
உருத் தெரியாததாய்
முற்றா மழலையான இளம் சொல்லாலே உன்னை அழைக்கின்றான்
கொடுத்தார் கொடுத்தார் முலைகளும் உண்டு
எடுத்தார் எடுத்தாரோடு எல்லாம் நீர்மை தோன்ற சிரித்து
உறவாடி இருப்பானான
சர்வாதிகன் அழைக்க அழைக்க நீ போவுதியாகில்
புழை யிலவாகாதே நின் செவி-
புழை -ஸூ ஷிரம்
உன்னுடைய ஸ்ரவண இந்த்ரியத்துக்கு பிரயோஜனம் இல்லை யாகாதோ
புகர் மா மதீ-உன்னுடைய பிரகாசம் லோகப் பிரசித்தம் அன்றோ –

—————————————————————–

தண்டோடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் ஆறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –1-4-6-

ஆயுத கோடியிலும்
ஆபரண கோடியிலுமாய் இருக்கிற பஞ்ச ஆயுதங்களை
இடமுடைத்தான திருக் கையிலே யுடையவன்
ஏந்தும் -என்கையாலே -போக ரூபமாய் பூ ஏந்தினால் போலே இருக்கை-
நித்தரை கொள்வானாக கருதினதுக்கு ஸூசகம் இறே கொட்டாவி
எல்லாருடைய கருத்துக்களையும் குலைத்து வருகிற நித்தரை இவன் கருதலலின் வசம் ஆகையாலே
இவன் வியாபாரங்கள் எல்லாம் இப்படி இறே
நான் வந்து முகம் காட்டும் அளவும் உறங்காமல் நோக்க ஒண்ணாதோ -என்று நினைத்து இருக்கிறாய் ஆகில்
உண்ட முலைப்பால் ஜரிக்கும் போது உறங்க வேணும் இறே
ஜரிக்கை யாவது –
நம்முடைய வசன பரிபாலனம் செய்யார்கள் ஆகில் சங்கல்பம் தன்னிலே கிடக்கிறார்கள் -என்று
இழவோடே நசை அறுகை இறே
உறக்கம் ஆவது லீலா வியாபாரங்களில் நிர்பரத்வம் இறே
அனச்னன் -என்றால்
இவன் ஒன்றை இங்கே புஜிக்க கூடுமோ என்னில்
அஸ் நாமி -கீதை -9-26- என்று சொன்னான் இறே
சம்சாரிகளுடைய போக வியாபாரங்களில் அவன் ஸ்வ கரண நியமனம் செய்து இருக்கிறாப் போலே
நாமும் அவனுடைய லீலா வியாபாரங்களை கண்டு அனுபவிக்க வாருங்கோள் என்று
த்ரி பாத் விபூதியிலே ஒருப்பட்ட ஜ்ஞானம் உடையவர்களை அழைக்கிறார் –

மா மதீ -என்றது பக்தியை
ஜ்ஞான சப்த வாச்யையுமாய் இறே பக்தி தான் இருப்பது
பிள்ளை உறங்கா வல்லி தாசரை மகா மதிகள் என்று இறே எம்பார் போல்வார் அருளிச் செய்வது
விரைந்தோடு வாருங்கோள்
மா மதீ -என்றது ஜாதி ஏக வசனம்

——————————————————————————–

உறங்கக் கருதினவன் உறங்கிய போதே உணர்ந்து
பூர்வ ஸ்ம்ருதியாலே-அம்புலியைப் பிடித்துத் தா -என்ன
பலகாலும் அழைக்க நீ வாராமையாலே கோபிக்கவும் கூடும்
கடுக வா என்கிறாள் –

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்
ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-7-

பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
சிறுப்பிள்ளை என்று பரிபவித்து விஷ்ணு படராலே நலிவு படாதே கொள் –
பலவிடங்களிலும் உன் பரிபவத்தை போக்கினவன் அன்றோ இவன் –
அவன் யாதொரு ஜன்மத்திலே தாழ நின்றாலும் உனக்கு உத்தேச்யரான ப்ரஹ்ம சனகாதிகளுக்கும்
வர வேண்டி இறே இருப்பது இவன் அழைத்தால் –

பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் –
முன்பே ஒரு காலத்தில் வடதள சாயியை யடைய அகடிதம் கேட்டு அறியாயோ –
அவன் என்று அறியாய் இவனை –

மேல் எழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல் –
இவன் கோபிக்குமாகில் உனக்கு மேலே எழப் பாய்ந்து உன்னையும் கைக் கொள்ளும்
இதில் சம்சயம் இல்லை –
ஒண் மிதி இத்யாதி -திரு நெடும் தாண்டகம் –
அடிபட்டது கைப்பட அரிதோ –

மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –
இவனுடைய வ்யாமோஹத்தை பாராதே நீ
ஆஜ்ஞா பரிபாலனம் பண்ணுகிற கர்த்ருத்வத்தாலே தாழ்ந்து வருகிறோம் -எண்ணாதே
அவன் வ்யாமோஹத்துக்கு ஈடாக -நம்மை அழைக்கப் பெற்றோம் என்று மகிழ்ந்து கடுக ஓடி வா –

————————————————————————-

சிறியன் என்று எண்ணி இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1-4-8-

சிறியன் என்று எண்ணி இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
இதற்கு முன்பு சிறியனான நிலைகளிலே எழப் பாய்ந்தது உண்டோ -என்று நினைக்கிறாய் ஆகில்
அவன் சிறுமைப் பெருமை அறிந்திலை –
மகா பலி பாதாள லோகத்தில் கர்ம பாவனையாலே வந்த ஔதார்ய செருக்குப் போய்
ப்ரஹ்ம பாவனையோடு இருக்கிறான் –
அங்கே சென்று கேட்டுக்கொள் –
என் இளம் சிங்கத்தை சிறியேன் என்று இகழாதே கொள் –

சிறுமைப் பிழை கொள்ளில்-
அவன் சிறியனாக வேண்டிற்று நம்முடைய பெருமையாலே
வந்த அபராதத்தாலே -என்று கொள்ளுவுதியாகில் –

நீயும் உன் தேவைக்கு உரியை காண்-நிறை மதீ-
நானும் தேவைக்கு உரியேனோ-என்று நினைக்கிறாய் ஆகில்
உனக்கும் பராதீன கர்த்ருத்வம்
விஹிதமாய் இருக்கிலும்
அது தானும் ஆஜ்ஞா ரூப கைங்கர்யமாய் இருக்கும் –
அத்தை தர்சி
நிறை மதி அன்றோ நீ
ஆஜ்ஞா ரூப கைங்கர்யத்தில் நீ அறியாதது உண்டோ
பீதி மூலமாகவும் வர வேணும் காணும்
என்று தான் ஸ்வ அதீனனாய் இருந்தாய் –

நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –
உன்னளவே இல்லை காண்
அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தால் வந்த வ்யாமோஹம்
அந்த வ்யாமோஹத்துக்கு ஈடாக கடுக வா –

—————————————————————————

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் யுன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு யுன்னை எறியும் ஐயற வில்லை காண்
வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-9-

தாழியில் வெண்ணெய்-
நெடுமால் உன்னைக் கூவுகின்றான் -என்கிற வ்யாமோஹம் -நிரந்குச ஸ்வா தந்த்ர்ய கார்யமாய் இருக்குமோ -என்று நினைக்கிறாய் ஆகில்
இது சாஷாத் வ்யாமோஹம் அன்று –
அது தான் எது என்னில்
தாழியில் வெண்ணெய் -என்றது தேக குணத்தால் வந்த தன்னேற்றம்
சிறு மா மனிசர் –திருவாய் -8-10-3-என்னுமா போலே
அன்ன பானாதிகளாலே தரிக்கிற தேஹத்தால் வந்த சிறுமை
பெருமையாம்படி ஆத்ம குணத்தால் ஸூ ரிகளோடு ஒக்க வந்த மகத்வம்
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -73-என்கிற மகத்வத்தையும் உடையவர்கள் இறே –
வெண்ணெய் -என்கிறது -வெண்ணெய் இருந்த பாத்ரம் இறே தாழி யாகிறது —
சம்சாரிகள் உடைய ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லும் முமுஷூக்களுடைய தேக குணம் ஆத்ம குணத்தை பின் செல்லும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் முமுஷூக்களாய் இருந்தார்களே யாகிலும்
இவர்களுடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும்
தாழியில் வெண்ணெய் -என்றது ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லுகிற ஆழ்வார்களை —
இவர்கள் விரும்புகை இறே சாஷாத் வ்யாமோஹம் ஆவது

தடங்கை –
பருவத்துக்குத் தக்க கை அன்றோ -என்னும்படி
வெண்ணெயைக் கண்டவாறே கைகள் விரிந்த படி –

ஆர விழுங்கிய –
வயிறார விழுங்கிய –

பேழை வயிற்று எம்பெருமான் –
முலைப்பால் ஜரிக்குமது அன்றே –
உண்டொத்த திரு வயிற்றன்-பெரிய திருமொழி -11-6-9-என்னவும் ஒண்ணாதே
வயிறு பிள்ளை பரமன்றே -பெரிய திருமொழி -10-7-5-என்கையாலே
புக்க த்ரவ்யத்துக்கு தக்கபடி உதைத்துக் காட்டுமே –
பேழை -பெருமை –
எம்பிரான் –
எங்கள் குலத்துக்கு மகா உபகாரகன் ஆனவன்
அவன் கூவுகிறது தன் குறை தீர வன்று காண்
உன் குறை தீர
உன் குறை தீர தன் குறை தீரும் காண் –
கண்டாய் யுன்னைக் கூவுகின்றான் –

ஆழி கொண்டு யுன்னை எறியும் ஐயற வில்லை காண் வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –
ஆதித்யனை மறைத்து பகலை இரவாக்கின ஆழ்வானை ஏவி விடுமாகில்
இரவைப் பகலாக்கவும் கூடும் என்றும் இராய்
முன்பே பாரத யுத்தத்துக்கு நாளிட்ட போது நீ நின்ற நிலையைப் பாராய்
அது ஒரு கார்யப் பாட்டாலே ஒரு கால் செய்தான் ஆகில் அந்த ஹேது எனக்கு உண்டோ –என்று சந்தேஹிக்க வேண்டா –
அது தான் வேண்டிற்றும் அவர்கள் வசவர்த்தி யாகாமை யன்றோ
அது உனக்கும் இல்லையோ –
அத்தை தர்சியாய்
வாழ -இத்யாதி –
வாழுகையாவது-நீ இப்போ நிற்கிற நிலை தன்னிலே -கரிஷ்யே வசனம் தவ –கீதை -18-73- என்கை இறே –
த்யஜ த்யஜ்ய -என்ற உன் முற்பட்ட நிலையை குலைத்து
அவன் மீண்டும் அதிலே நிறுத்தினால் அது பழைய நிலையாமோ
தவ -வசனம் -என்றபோதே மற்று ஒன்றிலே நிறுத்திலும் நிற்க வேணும் இறே பழைய நிலையில் -மாஸூச என்ன ஒண்ணாதே
வாழ வுறுதியேல்-
வாச வர்த்தியாய் வாழ வேணும் என்று இருந்தாய் ஆகில்
மா மதி இத்யாதி –
அறிவுடையார்க்கு எல்லாம் வேணும் காண் இந்த பாரதந்த்ர்யத்தாலே வந்த மகிழ்ச்சி –

———————————————————————-

நிகமத்தில்
இந்த திருமொழி கற்றாற்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி யுரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழிவை
இத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடம் இல்லையே –1-4-10-

மைத்தடம் கண்ணி யசோதை –
ஒப்பனைக்கு உப லஷணம்-

தன் மகனுக்கு இவை ஒத்தன சொல்லி யுரைத்த மாற்றம் –
பிள்ளை சீறாமல் ஒப்பித்து -தன் மகன் -என்கிறார் –
அவன் நினைவுக்கும் சொலவுக்கும் ஒத்தன சொல்லி –
அதாவது
அதி தூரத்தில் ஓடுகிற அம்புலியை பிடித்துத் தர வேணும் என்ன –
அவனுக்கு பிடித்து தருகிறேன் -என்று சொல்லி –
பிடிக்கை தனக்கு அசக்யமாய் இருக்கையாலே பல காலும் வர வேணும் என்று இவள் உரைத்தாள் இறே –
அம்புலியை இவள் உரைத்த மாற்றத்தை –

ஒளி புத்தூர் வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழிவை –
அந்நில மிதி தானே ஜ்ஞான பிரகாசத்தை யுண்டாக்குகையாலே-ஒளி புத்தூர் -என்கிறார் –
திரு மாளிக்கைக்கு ஸ்ரீ வில்லி புத்தூர் -என்ற திரு நாமம் இறே
வித்தகன் -சமர்த்தன் –
மயர்வற நதி நலம் பெறுவதற்கு முன்பே திரு நந்தவனம் செய்து
திருத் துழாயை பறித்து -திருமாலை சாத்தின சாமர்த்தியம் இறே
அன்றிக்கே
மங்களா சாசன பிரேமத்தை திரு உள்ளத்திலே யுடையவர் -என்னுதல்-
விட்டு சித்தன் -இவருடைய நிலை வடபெரும் கோயில் யுடையான் திரு உள்ளத்திலே கிடைக்கையாலே யாதல் –
அரவத் தமளிப்படியே அவன் தான் இவர் திரு உள்ளத்திலே எப்போதும் கிடைக்கையாதலாலே யாதல் –
விரித்த தமிழிவை
என்று இவை தன்னை யசோதை பிராட்டி சொன்ன பாசுரங்களை வியாஜமாக கொண்டு
சகல சாஸ்திரங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக விரித்தது -இறே
தமிழ் -என்று தேசியான பாஷையாலே அருளிச் செய்தது இவர் கிருபை இறே –

இத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடம் இல்லையே —
இத்தனையும் -என்றது -அநந்த வேத சாஸ்த்ரங்களில் சொல்லுகிற
அர்த்தங்கள் எல்லாம் ஓதி அறியப் பெற்றிலோம் -என்கிற கிலேசம்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி இப்பத்து பாட்டையும் பாவ பந்தத்தோடு சொல்ல வல்லவர்களுக்கு
எங்கனே கிலேசம் யுண்டாவது-அது இல்லை -என்கிறார் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: