தன் முகத்து -பிரவேசம் –
கீழே யசோதை -அழேல் அழேல் -என்ன -அழுத படியாலே அழுகை ஆற்றுகைக்காக
நிலா முற்றத்தே கொண்டு புறப்பட்டு அம்புலி அம்மானைக் காட்ட
அழுகையை மறந்து -அத்தை பிடித்துத் தா -என்ன –
இவன் கன்றாமைக்காக -இப்போதே பிடித்துத் தருகிறேன் -என்று இவள் -அம்புலி வா -வா -என்று
பலகாலும் அழைத்த பாசுரத்தாலே
அவன் அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற லீலா ரசம் கொண்டாடுகிற பிரகாரத்தைக் கண்டு
நாம் வேண்டாம் என்று நியமிப்போம் ஆகில் இவன் கன்றும் –
இவன் தன்னை உளனாக்கிக் கொள்ளவும் வேணுமே
உளனாம் போது மேன்மையும் நீர்மையும் நடக்க வேணுமே – என்று
இவனுடைய லீலா ரசத்தை அனுமதி பண்ணி
விண் தனில் மன்னிய மா மதீ-என்று –
மங்களா சாசன பரராய்
சூழ்ந்து இருந்து ஏத்துகிறவர்களையும் அழைக்கிறார் –
மா மதீ -என்றால்
மதியை யுடையவர்களை காட்டுமோ என்னில்
விஜ்ஞானம் யஞ்ஜம் தநுதே-
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச –
என்கிற ந்யாயத்தாலே காட்டும் இறே –
(மதி மட்டும் இருந்தால் அவனை ரக்ஷிக்க பிரார்த்திப்பார்கள்
மா மதி -அவனுக்கு பொங்கும் பரிவால் மங்களா ஸாஸனம் செய்பவர்
மதி -ஞானம் -தானே -ஞானம் உடையவர்களைக் காட்டுமோ என்னில்
தைத்ர்யம் -ஞானம் தபஸ்ஸைப் பண்ணும் விஞ்ஞாதனைச் சொல்லுமே
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போல் – )
மங்களா சாசன பரராய் இருக்கும் திருவடியும் பெருமாள் திரு உள்ளம் கன்றாமைக்காக
இவ் வஸ்துவை யுண்டாக்கிப் பரிய வேணும் என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது அன்றோ கார்யம்
கடுக அழைத்து அருளீர் என்றான் இறே
மங்களா சாசனம் தான் அவன் யாதொன்றில் உற்ற காலத்து
அங்கு ரசிக்கவும் வேணுமே
அது கார்யம் அன்றாகில் விலக்கவும் வேணும்
கார்யம் அன்று என்ன ஒண்ணாதே
இது அவதாரத்தில் மெய்ப்பாடு ஆகையாலே
(கடல் அரசனைக் கூப்பிட்டது ராமாவதாரம்
கடலில் பிறந்த சந்த்ரனைக் கூப்பிட்டது கிருஷ்ணாவதாரம் )
மன்னிய மா மதியைப் பிடித்துத் தா -என்று அவன் சொல்லி ஆசரிக்கையாலே
ஆச்சார்ய முகத்தாலே ஆர்க்கும் ஜ்ஞானம் யுண்டாக வேணும் -என்று காட்டுகிறது என்னவுமாம்
ஆச்சார்யன் தானும் மன்னிய மா மதி யுடையவர்களையும் அழைத்துக் காட்டும் இறே –
——————————————
நான் யுனக்கு அம்புலி யம்மானைப் பிடித்துத் தருகிறேன் என்று
ஸ்தாலாந்தரத்திலே கொண்டு போய் வைக்க
அங்கு புழுதியைக் கண்டவாறே
அத்தை அளைந்து விளையாடுவது –
பூர்வ ஸ்ம்ருதியாலே -அத்தைப் பிடித்துத் தர வேணும்
என்பதான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
தன் முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன் முகக் கிண் கிணி யார்ப்ப புழுதி அளைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை யிள மா மதீ
நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ –1-4-1-
பதவுரை
இள–இளமை தங்கிய
மா மதி–அழகிய சந்திரனே!
தன் முகத்து–தன் முகத்தில் (விளங்குகிற)
சுட்டி–சுட்டியானது
தூங்க தூங்க–பல காலும் தாழ்ந்து அசையவும்
பொன் முகம்–அழகிய முகத்தை யுடைய
கிண் கிணி–சதங்கைகளானவை
ஆர்ப்ப–கிண் கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்–(முற்றத்தில்) தவழ்ந்து போய்
புழுதி–தெருப் புழுதி மண்ணை
அளைகின்றான்–அளையா நிற்பவனும்
என் மகன்–எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்–கண்ண பிரானுடைய
கூத்தினை–சேஷ்டைகளை
நின் முகம்–உன் முகத்தில்
கண் உள ஆகில்–கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ–நீ இங்கே பார்த்துப் போ.
தவழுகையால் உச்சி மணிச் சுட்டி முன்னே தூங்கத் தூங்க
தவழ்ந்து போகையாலே திருவரையிலே சாத்தின கிண்கிணி த்வனிக்க
புழுதி அளைகின்ற பிரகாரத்தைக் கண்டு பிரியப் பட்டு
எம் மகன் கோவிந்தன் -என்று இவன் விளையாடுறதை
நோக்கிப் போ நோக்கிப் போ என்ன
அவன் நோக்காமையாலே
உன் முகத்தில் கண் உளவாகில் கண் படைத்த பிரயோஜனம் பெற நீ இங்கே நோக்கிப் போ என்கிறார் –
நோக்காமைக்கு அடி உன்னுடைய அத்யந்த சைசவம் இறே
கதிர் ஜ்ஞான மூர்த்தியினாய் -திருவாய் -6-2-8-
உனக்கு ஓன்று உணர்த்துவான் நான் -திருவாய் -6-2-5-என்னுமா போலே
நித்ய விபூதியிலும் திருதிய விபூதியிலும்-உண்டான ஜ்ஞான விசேஷங்கள்
தமக்கு விதேயம் ஆகையாலே அவற்றை அழைத்து இவனுக்கு உணர்த்துகிறார் –
(நித்ய விபூதியில் உள்ள ஞானமும் திவ்ய தேச ஞானமும் ஆழ்வார் சொன்னபடி கேட்க்கும்
திரு வாய்ப்பாடி திருதிய விபூதி
லீலா விபூதியில் உள்ளார் தானே உண்டியே உடையே என்று உகந்து ஓடுவார்
அவனுக்கே உபதேசம் இப் பாட்டுகளில் -)
(கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கறியும்; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்;
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க, எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே–6-2-5-)
(பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம் தோழி மார் விளையாடப் போது மின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-)
அழைக்கை யாவது –
அங்குத்தை படிகளை தம்முடைய திரு உள்ளத்திலே சேர்த்து உபதேசிக்கை இறே
அன்றிக்கே
அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்ற
அவன் நடத்துக்கிற லீலா ரசத்தை தாமும் கொண்டாடுகிறார் என்னவுமாம் –
—————————————————————————
என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட வுறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-2-
பதவுரை
மா மதீ !
எனக்கு–(தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது–விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்–எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்–என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்–தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி–பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்–அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு–மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட–விளையாட
உறுதியேல்–கருதினாயாகில்
மஞ்சில்–மேகத்திலே
மறையாது–சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா–உகந்து ஓடி வா.
என்னுடைய சிறுப்பிள்ளை
எனக்கோர் இன்னமுது -அந்த அமிருதத்தில் வ்யாவருத்தி
எம்பிரான் -எனக்குப் புத்திரனாய் -என் மலடு நீங்க திருவவதரித்த மகா உபகாரகன் –
தனக்குத் தகுதியான சிறுக் கைகளாலே பல காலும் சுட்டிக் காட்டி அழைக்கின்றான்
என் சிறுக் குட்டனான அஞ்சன வண்ணன் ஆடலோடு
மாமதி யான நீயும் விளையாட அறுதி இட்டாய் ஆகில்
மஞ்சில் மறையாதே –
மேகத்தில் சொருகாதே
(அவர் விளையாட்டில் நாம் கை கொடுக்காமல் ஆத்மா ராமன் –
இந்திரிய வசங்களில் சிக்கிக் கொள்கிறோம் )
மா மதீ
முற்பட இள மதி என்று இப்போது மா மதீ என்கையாலே
காலக்ருத பரிணாமம் தோற்றுகிறது-
அபிமத விஷயத்திலே ஓடிச் செல்லுமா போலே
மகிழ்ச்சியோடு ஓடி வா -என்கிறார் –
—————————————————-
பிள்ளை முகத்தில் குளிர்ச்சிக்கு
சந்தரன் குளிர்ச்சி ஒவ்வாது -என்கிறார் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே யம்புலீ கடிதோடிவா–1-4-3-
பதவுரை
அம்புலி–சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி–ஒளி பொருந்திய
வட்டம்–மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து–நாற்புறமும் சுழன்று
எங்கும்–எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து–ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்–இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்–என் மகனான கண்ண பிரானுடைய
முகம்–திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்–பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்–ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்–திருவேங்கடமலையிலே
வாணன்–நின்றாக வாழுமவனான இக் கண்ண பிரான்
உன்னை விளிக்கின்ற–உன்னை அழைக்கிற
கை தலம்–திருக் கைத் தலத்தில்
நோவாமே–நோவு மிகாத படி
கடிது ஓடி வா–சீக்கிரமாய் ஓடிவா.
ப்ரபாவானான ஒளி வட்டம் சற்றும் எங்கும் சோதி பறந்து சூழ்ந்து
உயரத்தில் நின்று போக்கு வரத்து செய்து திரியிலும்
என் மகன் முகத்தில் குளிர்ச்சிக்கும் பிரசந்ததைக்கும் நேர் ஒவ்வா
சாமர்த்தியமும் சர்வ காரணத்வமும் யுடையவன்
(அழகு குண சேஷ்டிதம் -மா முனிகள்
இங்கு சர்வ சக்தித்வம் சர்வ காரணத்வம்
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -இங்கு )
திருமலையிலே நித்ய வாசம் செய்து அருளும் ஸூலபன்
கானமும் வானரமுமாயின வற்றுக்கு முகம் கொடுத்து
உன்னை அநாதரித்து இறே
அவன் வாய் திறவாது இருக்கிறது
இப்படியாயிருக்க
நீ அவன் அழைக்கவும் பெற்று வாராது இருக்கிறாயே
உன்னைக் குறித்து அழைக்கிற திருக் கைத்தலம் நோவாதே
அம்புலீ கடித்து ஓடி வா –
————————————————————
சக்கரக் கையன் தடம் கண்ணால் மலர விளித்து
ஒக்கலை மேலிருந்து யுன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அருதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் –1-4-4-
பதவுரை
சந்திரா—சந்திரனே!
சக்கரம்–திருவாழி ஆழ்வானை
கையன்–திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்–(என்) இடுப்பின்மேல்
இருந்து–இருந்து கொண்டு
தட கண்ணால்–விசாலமான கண்களாலே
மலர் விழித்து–மலரப் பார்த்து
உன்னையே–உன்னையே
சுட்டிகாட்டும்–குறித்துக் காட்டுகின்றான்;
தக்கது–(உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்–அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத–பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்–மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே–கபடம் பண்ணாமல்
வா கண்டாய்–வந்து நில்கிடாய்.
திருக்கையிலே -கருதும் இடம் பொருது -திருவாய்மொழி -10-6-8-திரு வாழியை யுடையவன் –
இடமுடைத்தான திருக் கண்களாலே முழு நோக்காகப் பார்த்து
மத்யம அங்கத்திலே இருந்து
உன்னையே குறித்துக் காட்டும்
தக்கது அருதியேல்
கண் படைத்தாய் ஆகில் இத்தைக் காண்
கண்ணுக்குத் தகுதி இவனைக் காண்கை காண்
சந்திரா சலம் செய்யாதே
எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கிற நீ
இவனுக்கு வெறுப்புச் செய்யாதே
நபும்சகத்வமும் மலடும் அல்லையேல் வா
ஓன்று பெற்று மலடு ஆவாரும் உண்டு போலே காணும்-
(சந்திரனுக்கு புதன் பிள்ளை -தனி மரம் தோப்பு ஆகாதே
என் தாய் மலடி அல்லள் -ஆளவந்தார் மூன்று கேள்விகளில் ஓன்று )
——————————————————————
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியோல்
புழை யிலவாகாதே நின் செவி புகர் மா மதீ–1-4-5-
பதவுரை
புகர்–தேஜஸ்வியாய்
மா–பெருமை பொருந்தி யிரா நின்ற
மதீ–சந்திரனே!
அழகிய வாயில்–அழகிய திருப் பவளத்திலே
ஊறல்-ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்–அம்ருதத்தோடே கூடி
தெளிவுறா–உருத் தெரியாததாய்
மழலை முற்றாத–மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற
இளஞ் சொல்லால்–இளம் பேச்சாலே
உன்னை கூவுகின்றான்;
குழகன்–எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்–ச்ரிய: பதியான இக் கண்ண பிரான்
கூவக் கூவ-(இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்–நீ போவாயேயானால்
நின் செவி–உன் காதுளானவை
புழை இல–துளை யில்லாதவையாக
ஆகாதே–ஆகாதோ?
(ஆகவே ஆகும்)
அழகு விளங்கா நின்றுள்ள திருப் பவளத்திலே
ஊறா நின்ற வாக் அம்ருதத்தோடே கூடி –
உருத் தெரியாததாய்
முற்றா மழலையான இளம் சொல்லாலே உன்னை அழைக்கின்றான்
கொடுத்தார் கொடுத்தார் முலைகளும் உண்டு
எடுத்தார் எடுத்தாரோடு எல்லாம் நீர்மை தோன்ற சிரித்து
உறவாடி இருப்பானான
சர்வாதிகன் அழைக்க அழைக்க நீ போவுதியாகில்
புழை யிலவாகாதே நின் செவி-
புழை -ஸூ ஷிரம்
உன்னுடைய ஸ்ரவண இந்த்ரியத்துக்கு பிரயோஜனம் இல்லை யாகாதோ
புகர் மா மதீ-
உன்னுடைய பிரகாசம் லோகப் பிரசித்தம் அன்றோ –
—————————————————————–
தண்டோடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் ஆறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –1-4-6-
பதவுரை
விண் தனில்–ஆகாசத்திலே
மன்னிய–பொருந்திய
மா மதீ!–பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு–‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்–திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்–ஏந்தி யிரா நின்றுள்ள
தட–விசாலமான
கையன்–கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி–திருக் கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்–கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்–(இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட–அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்–ஸ்தந்யமானது
அறா–ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா
ஆயுத கோடியிலும்
ஆபரண கோடியிலுமாய் இருக்கிற பஞ்ச ஆயுதங்களை
இடமுடைத்தான திருக் கையிலே யுடையவன்
ஏந்தும் -என்கையாலே –
போக ரூபமாய்
பூ ஏந்தினால் போலே இருக்கை-
நித்தரை கொள்வானாக கருதினதுக்கு ஸூசகம் இறே கொட்டாவி
எல்லாருடைய கருத்துக்களையும் குலைத்து வருகிற நித்தரை இவன் கருதலலின் வசம் ஆகையாலே
இவன் வியாபாரங்கள் எல்லாம் இப்படி இறே
நான் வந்து முகம் காட்டும் அளவும் உறங்காமல் நோக்க ஒண்ணாதோ -என்று நினைத்து இருக்கிறாய் ஆகில்
உண்ட முலைப் பால் ஜரிக்கும் போது உறங்க வேணும் இறே
ஜரிக்கை யாவது –
நம்முடைய வசன பரிபாலனம் செய்யார்கள் ஆகில் சங்கல்பம் தன்னிலே கிடக்கிறார்கள் -என்று
இழவோடே நசை அறுகை இறே
(ஸ்ருஷ்டித்து திருத்தலாம் நப்பாசை போய் பிரளயம் -தான் ஜரிக்கை )
உறக்கம் ஆவது
லீலா வியாபாரங்களில் நிர் பரத்வம் இறே
அனஸ்னன் -என்றால்
இவன் ஒன்றை இங்கே புஜிக்க கூடுமோ என்னில்
அஸ் நாமி -கீதை -9-26- என்று சொன்னான் இறே
(மரம் – இரண்டு பறவைகள் -உண்ணாமல் ஒளி விஞ்சி -இருக்குமே -என்னில்
இங்கு உண்ட முலைப்பால் –
பத்ரம் பலம் தோயம் இத்யாதிகள் பக்தி உபஹ்ருதம் -இருந்தால் உண்ணுவானே -)
சம்சாரிகளுடைய போக வியாபாரங்களில் அவன் ஸ்வ கரண நியமனம் செய்து இருக்கிறாப் போலே
நாமும் அவனுடைய லீலா வியாபாரங்களை கண்டு அனுபவிக்க வாருங்கோள் என்று
த்ரி பாத் விபூதியிலே ஒருப் பட்ட ஜ்ஞானம் உடையவர்களை அழைக்கிறார் –
மா மதீ -என்றது பக்தியை
ஜ்ஞான சப்த வாச்யையுமாய் இறே பக்தி தான் இருப்பது
(மதி ஞானம்
மா மதி ஞானம் முற்றிய பக்தி )
பிள்ளை உறங்கா வல்லி தாசரை மகா மதிகள் என்று இறே எம்பார் போல்வார் அருளிச் செய்வது
விரைந்தோடு வாருங்கோள்
மா மதீ -என்றது
ஜாதி ஏக வசனம்
——————————————————————————–
உறங்கக் கருதினவன் உறங்கிய போதே உணர்ந்து
பூர்வ ஸ்ம்ருதியாலே-அம்புலியைப் பிடித்துத் தா -என்ன
பல காலும் அழைக்க நீ வாராமையாலே
கோபிக்கவும் கூடும்
கடுக வா என்கிறாள் –
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்
ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-7-
பதவுரை
மா மதீ!
பாலகன் என்று–‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்–திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்–முன்பொரு காலத்திலே
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
வளர்ந்த–கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்–அந்த சிறுப் பிள்ளை யானவன்
இவன்–இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்–(இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து–(உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்–(உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை–இம் மஹா புருஷனை
மதியாதே–அவ மதியாமல்
மகிழ்ந்து ஓடி வா–.
பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
சிறுப் பிள்ளை என்று பரிபவித்து விஷ்ணு படராலே நலிவு படாதே கொள் –
பல விடங்களிலும் உன் பரிபவத்தை போக்கினவன் அன்றோ இவன் –
அவன் யாதொரு ஜன்மத்திலே தாழ நின்றாலும்
உனக்கு உத்தேச்யரான ப்ரஹ்ம ஈஸாநாதிகளுக்கும்
வர வேண்டி இறே இருப்பது இவன் அழைத்தால் –
பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் –
முன்பே ஒரு காலத்தில் வடதள சாயி யுடைய அகடிதம் கேட்டு அறியாயோ –
அவன் என்று அறியாய் இவனை –
மேல் எழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல் –
இவன் கோபிக்குமாகில் உனக்கு மேலே எழப் பாய்ந்து உன்னையும் கைக் கொள்ளும்
இதில் சம்சயம் இல்லை –
ஒண் மிதி இத்யாதி -திரு நெடும் தாண்டகம் –
அடி பட்டது கைப் பட அரிதோ –
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –
இவனுடைய வ்யாமோஹத்தை பாராதே நீ
ஆஜ்ஞா பரிபாலனம் பண்ணுகிற கர்த்ருத்வத்தாலே தாழ்ந்து வருகிறோம் –
(அவன் இட்ட பணி -வேலையை முடித்து பின்பு காலம் தாழ்ந்து வருகிறேன்) என்னாதே
அவன் வ்யாமோஹத்துக்கு ஈடாக –
நம்மை அழைக்கப் பெற்றோம் என்று மகிழ்ந்து கடுக ஓடி வா –
————————————————————————-
சிறியன் என்று எண்ணி இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1-4-8-
பதவுரை
நிறை மதி–பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை–எனக்குச் சிங்கக் குருகு போன்ற கண்ண பிரானை
சிறியன் என்று–(உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல்–அவமதியாதே;
சிறுமையில்–(இவனுடைய) பால்யத்தில் நிடந்த
வார்த்தையை–செய்கையை
மாவலி இடை சென்று கேள்–மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்;
(இப்படி யுள்ளவன் விஷயத்தில்)
சிறுமை பிழை கொள்ளில்–சிறுமை நினைத்தலிது மஹா அபாரதம் என்று நினைத்தாயாகில்
(அப்போது) நீயும்;
உன் தேவைக்கு–(அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு
உரியை–தகுந்தவனாவாய் ;
(அதெல்லாமப்படி நிற்க;)
நெடு மால்–ஸர்வ ஸ்மாத் பரனான இவன்
விரைந்து உன்னை கூவுகின்றான்
(‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. )
சிறியன் என்று எண்ணி இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
இதற்கு முன்பு சிறியனான நிலைகளிலே எழப் பாய்ந்தது உண்டோ -என்று நினைக்கிறாய் ஆகில்
அவன் சிறுமைப் பெருமை அறிந்திலை –
மகா பலி பாதாள லோகத்தில் கர்ம பாவனையாலே வந்த ஔதார்ய செருக்குப் போய்
ப்ரஹ்ம பாவனையோடு இருக்கிறான் –
அங்கே சென்று கேட்டுக் கொள் –
என் இளம் சிங்கத்தை சிறியேன் என்று இகழாதே கொள் –
சிறுமைப் பிழை கொள்ளில்-
அவன் சிறியனாக வேண்டிற்று நம்முடைய பெருமையாலே
வந்த அபராதத்தாலே -என்று கொள்ளுவுதியாகில் –
நீயும் உன் தேவைக்கு உரியை காண்-நிறை மதீ-
நானும் தேவைக்கு உரியேனோ-என்று நினைக்கிறாய் ஆகில்
உனக்கும் பராதீன கர்த்ருத்வம்
விஹிதமாய் இருக்கிலும்
அது தானும் ஆஜ்ஞா ரூப கைங்கர்யமாய் இருக்கும் –
அத்தை தர்சி
நிறை மதி அன்றோ நீ
ஆஜ்ஞா ரூப கைங்கர்யத்தில் நீ அறியாதது உண்டோ
பீதி மூலமாகவும் வர வேணும் காணும்
என்று தான் ஸ்வ அதீனனாய் இருந்தாய் –
(பூரணமான ஞானம் உடையவன் அன்றோ –
நற் செல்வன் -அந்தரங்க சேவை செய்ய நித்ய கைங்கர்யம் தள்ளி வைக்கலாமே
பீஷாஸ்மாத் இத்யாதி -பீதி மூலமும் உண்டே
என்றுமே பராதீனன் அன்றோ
ஆஸ்ரித பாரதந்த்ரம் தானே ஏறிட்டுக் கொள்வான் அவனே )
நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –
உன்னளவே இல்லை காண்
அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தால் வந்த வ்யாமோஹம்
அந்த வ்யாமோஹத்துக்கு ஈடாக கடுக வா –
—————————————————————————
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் யுன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு யுன்னை எறியும் ஐயற வில்லை காண்
வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-9-
பதவுரை
மா மதீ!;
தாழியில்–தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய்–வெண்ணெயை
தட–பெரிதான
கைஆர–கை நிறைய (அள்ளி)
விழுங்கிய–அமுது செய்த
பேழை வயிறு–பெரு வயிற்றை யுடையவனான
எம்பிரான்–என் கண்ணபிரான்
உன்னை கூவுகின்றான்;
(இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக)
ஆழி கொண்டு–திருவாழியாலே
உன்னை எறியும்–உன்னை வெட்டி விடுவேன்;
ஐயுறவு இல்லை–ஸம்சயமே யில்லை;
(இதில் நின்றுந் தப்பி)
வாழ உறுதியேல்–வாழக் கருதினாயாகில்
மகிழ்ந்து ஓடிவா
தாழியில் வெண்ணெய்-
நெடுமால் உன்னைக் கூவுகின்றான் -என்கிற வ்யாமோஹம் –
நிரந்குச ஸ்வா தந்த்ர்ய கார்யமாய் இருக்குமோ -என்று நினைக்கிறாய் ஆகில்
இது சாஷாத் வ்யாமோஹம் அன்று –
அது தான் எது என்னில்
தாழியில் வெண்ணெய் -என்றது தேக குணத்தால் வந்த தன்னேற்றம்
சிறு மா மனிசர் –திருவாய் -8-10-3-என்னுமா போலே-
அன்ன பானாதிகளாலே தரிக்கிற தேஹத்தால் வந்த சிறுமை-
பெருமையாம்படி ஆத்ம குணத்தால் ஸூரிகளோடு ஒக்க வந்த மகத்வம்-
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -73-என்கிற மகத்வத்தையும் உடையவர்கள் இறே –
வெண்ணெய் -என்கிறது -வெண்ணெய் இருந்த பாத்ரம் இறே தாழி யாகிறது —
சம்சாரிகள் உடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும் –
(ஆக்கையின் வழி உழல்வார்கள் )
முமுஷூக்களுடைய தேக குணம் ஆத்ம குணத்தை பின் செல்லும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் முமுஷூக்களாய் இருந்தார்களே யாகிலும்
இவர்களுடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும்-
(பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹ குணத்தை பின் தொடர்ந்து
ஆழ்வார்களின் ஆத்ம குணங்கள் பின் செல்லுமே
கண்ணனுக்கே ஆமது காமம் -என்று இருப்பவர்கள் )
தாழியில் வெண்ணெய் -என்றது
ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லுகிற ஆழ்வார்களை —
இவர்கள் விரும்புகை இறே சாஷாத் வ்யாமோஹம் ஆவது
தடங் கை –
பருவத்துக்குத் தக்க கை அன்றோ -என்னும்படி
வெண்ணெயைக் கண்டவாறே கைகள் விரிந்த படி –
ஆர விழுங்கிய –
வயிறார விழுங்கிய –
பேழை வயிற்று எம்பெருமான் –
முலைப்பால் ஜரிக்குமது அன்றே –
உண்டொத்த திரு வயிற்றன்-பெரிய திருமொழி -11-6-9-என்னவும் ஒண்ணாதே
வயிறு பிள்ளை பரமன்றே -பெரிய திருமொழி -10-7-5-என்கையாலே
புக்க த்ரவ்யத்துக்கு தக்கபடி உதைத்துக் காட்டுமே –
பேழை -பெருமை –
எம்பிரான் –
எங்கள் குலத்துக்கு மகா உபகாரகன் ஆனவன்
அவன் கூவுகிறது தன் குறை தீர வன்று காண்
உன் குறை தீர
உன் குறை தீர தன் குறை தீரும் காண் –
(நம் துயர் அறுத்து தன் துயர் அறுத்துக் கொள்ளுமவன் அன்றோ )
கண்டாய் யுன்னைக் கூவுகின்றான் –
ஆழி கொண்டு யுன்னை எறியும் ஐயற வில்லை காண் வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –
ஆதித்யனை மறைத்து பகலை இரவாக்கின ஆழ்வானை ஏவி விடுமாகில்
இரவைப் பகலாக்கவும் கூடும் என்றும் இராய்
முன்பே பாரத யுத்தத்துக்கு நாளிட்ட போது நீ நின்ற நிலையைப் பாராய்
அது ஒரு கார்யப் பாட்டாலே ஒரு கால் செய்தான் ஆகில் அந்த ஹேது எனக்கு உண்டோ –என்று சந்தேஹிக்க வேண்டா –
அது தான் வேண்டிற்றும் அவர்கள் வச வர்த்தி யாகாமை யன்றோ
அது உனக்கும் இல்லையோ –
அத்தை தர்சியாய்
வாழ -இத்யாதி –
வாழுகையாவது-
நீ இப்போ நிற்கிற நிலை தன்னிலே -கரிஷ்யே வசனம் தவ –கீதை -18-73- என்கை இறே –
த்யஜ த்யஜ்ய -என்ற உன் முற்பட்ட நிலையை குலைத்து
அவன் மீண்டும் அதிலே நிறுத்தினால் அது பழைய நிலையாமோ
தவ -வசனம் -என்ற போதே மற்று ஒன்றிலே நிறுத்திலும் நிற்க வேணும் இறே
பழைய நிலையில் -மாஸூச என்ன ஒண்ணாதே
(முற்பட்ட நிலை -சாஸ்த்ரா ஆஜ்ஜைப்படி செய்வது
வா கூப்பிட ஓடுவது –இப்பொழுது நிலை
ஆசையுடன் திருவடியில் சேர்த்துக் கொள்ள கூப்பிட போகாமல் இருந்தால்
மீண்டும் பழைய நிலை ஆகாதே )
வாழ வுறுதியேல்-
வாச வர்த்தியாய் வாழ வேணும் என்று இருந்தாய் ஆகில்
மா மதி இத்யாதி –
அறிவுடையார்க்கு எல்லாம் வேணும் காண்
இந்த பாரதந்த்ர்யத்தாலே வந்த மகிழ்ச்சி –
———————————————————————-
நிகமத்தில்
இந்த திருமொழி கற்றாற்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி யுரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழிவை
இத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடம் இல்லையே –1-4-10-
பதவுரை
மை–மை யணிந்த
தட–விசாலமாயிரா நின்ற
கண்ணி–கண்களை யுடையளான
அசோதை–யசோதை யானளவள்
தன் மகனுக்கு–தன் மகனான கண்ணனுக்கு
ஒத்தன சொல்லி–நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி
உரைத்த–(சந்திரனை நோக்கிச்)சொன்ன
இவை மாற்றம்–இப் பாசுரத்தை
ஒளி–ஒளி பொருந்திய
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
வித்தகன்–(மங்களாசாஸந) ஸமர்த்தரான
விட்டு சித்தன்–பெரியாழ்வாராலே
விரித்த–விரித்து அருளிச் செய்யப்பட்ட
தமிழ்–த்ராவிட பாஷா ரூபமான
இவை–இப் பாசுரங்கள் பத்தையும்
எத்தனையும்–ஏதேனுமொரு படியாக
சொல்ல வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–துன்பமொன்று மில்லை.
மைத் தடம் கண்ணி யசோதை –
ஒப்பனைக்கு உப லஷணம்-
தன் மகனுக்கு இவை ஒத்தன சொல்லி யுரைத்த மாற்றம் –
பிள்ளை சீறாமல் ஒப்பித்து -தன் மகன் -என்கிறார் –
அவன் நினைவுக்கும் சொலவுக்கும் ஒத்தன சொல்லி –
அதாவது
அதி தூரத்தில் ஓடுகிற அம்புலியை பிடித்துத் தர வேணும் என்ன –
அவனுக்கு பிடித்து தருகிறேன் -என்று சொல்லி –
பிடிக்கை தனக்கு அசக்யமாய் இருக்கையாலே பல காலும் வர வேணும் என்று இவள் உரைத்தாள் இறே –
அம்புலியை இவள் உரைத்த மாற்றத்தை –
ஒளி புத்தூர் வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழிவை –
அந் நில மிதி தானே ஜ்ஞான பிரகாசத்தை யுண்டாக்குகையாலே-ஒளி புத்தூர் -என்கிறார் –
திரு மாளிகைக்கு ஸ்ரீ வில்லி புத்தூர் -என்ற திரு நாமம் இறே
(ஸ்ரீ நாச்சியார் திரு மாளிகை இத் திவ்ய தேசம்
ஸ்ரீ நாச்சியார் கோயில் ஸ்ரீ திரு நறையூர் )
வித்தகன் -சமர்த்தன் –
மயர்வற நதி நலம் பெறுவதற்கு முன்பே திரு நந்தவனம் செய்து
திருத் துழாயை பறித்து -திருமாலை சாத்தின சாமர்த்தியம் இறே
அன்றிக்கே
மங்களா சாசன பிரேமத்தை திரு உள்ளத்திலே யுடையவர் -என்னுதல்-
விட்டு சித்தன் –
இவருடைய நிலை வடபெரும் கோயில் யுடையான் திரு உள்ளத்திலே கிடைக்கையாலே யாதல் –
அரவத் தமளிப்படியே அவன் தான் இவர் திரு உள்ளத்திலே எப்போதும் கிடைக்கையாதலாலே யாதல் –
(அறிவார் உயிர் ஆனாய்
வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார்களே எனக்கு ஆத்மா என்னும் அவன் –
சர்வாத்மாவாக தானே இருந்தும் )
விரித்த தமிழிவை
என்று இவை தன்னை யசோதை பிராட்டி சொன்ன பாசுரங்களை வியாஜமாக கொண்டு
சகல சாஸ்திரங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக விரித்தது -இறே
தமிழ் -என்று
தேசியான பாஷையாலே அருளிச் செய்தது இவர் கிருபை இறே –
இத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடம் இல்லையே —
இத்தனையும் -என்றது –
அநந்த வேத சாஸ்த்ரங்களில் சொல்லுகிற
அர்த்தங்கள் எல்லாம் ஓதி அறியப் பெற்றிலோம் -என்கிற கிலேசம்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி இப் பத்து பாட்டையும் பாவ பந்தத்தோடு சொல்ல வல்லவர்களுக்கு
எங்கனே கிலேசம் யுண்டாவது-
அது இல்லை -என்கிறார் –
———————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.