இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -1-20–திவ்யார்த்த தீபிகை சாரம்–

ஸ்ரீ யபதியை
சாஷாத் கரிக்க ஆசை -பரமபக்தி -கூடினால் சுகம் பிரிந்தால் துக்கம் -என்றுமாம்
சாஷாத்கரித்தல் -பர ஜ்ஞானம் -பூர்ண சாஷாத்காரம்
இடையறாது அனுபவிக்க ஆசை -பரம பக்தி -அனுபவம் பெறா விடில் நீரை விட்டு பிரிந்த மீன் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை
தர்சனம் பரபக்திஸ் ஸ்யாத் பரஜ்ஞானம் து சங்கமம்
புநர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே
பொய்கை ஆழ்வாருக்கு பரபக்தி விஞ்சி இருக்கும் என்றும்
பூதத்தாழ்வாருக்கு பரஜ் ஞானம் விஞ்சி இருக்கும் என்றும்
பேயாழ்வாருக்கு பரம பக்தி விஞ்சி -இருக்கும் என்பர் பூர்வர்
மூன்றும் முக்தியிலே விளையக் கூடியதாயினும்
ஆழ்வார்களுக்கு மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் இங்கே இருக்கும் பொழுதே உண்டானதாக இருக்கும்-

பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியில்
ஸ்ரீ மன்நாராயணன் உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
நிர்ஹேதுகமான எம்பெருமான் திரு வருளாலே தோன்றின
பரபக்தி தசையை அடைந்துள்ள ஜ்ஞான விசேஷத்தாலே
சாஷாத் கரித்து அனுபவித்து
அத்திருமாலுக்கு சேஷமான விபூதியை ஸ்வ தந்த்ரம் என்றும்
அந்ய சேஷம் என்றும் பிரமிக்கிற அஜ்ஞ்ஞான இருள் நீங்கும்படி
பூமி முதலிய பதார்த்தங்களை தகளி முதலியன வாகவும் உருவகப் படுத்தி காட்டி
உபய விபூதி உக்தனான எம்பெருமானே சேஷி என்றும்
அவனுக்கு சேஷமாய் இருப்பதே ஆத்ம ஸ்வரூபம் என்றும்
அவன் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும்
அதனை கைபடுத்துத்தித் தரும் உபாயமும் அவன் திருவடிகளே என்றும்
நிஷ்கர்ஷித்து பேசினார் –

இத்திருவந்தாதியிலே பூதத் ஆழ்வார்
கீழே பொய்கை ஆழ்வார் உடன் கூட இருந்து எம்பெருமான் உடைய குணங்களை அனுபவித்ததனால்
அவனது அருளாலே வந்த பரபக்தியானது பரஜ்ஞான தசையை அடையும் படி பரிபக்குவமாக வளர
பரஜ்ஞான தசையை அடைந்த அந்த பிரேம விசேஷத்தாலே
எம்பெருமான் உடைய தன்மைகள் முழுவதையும்
சாஷாத் கரித்து அனுபவித்தார்
தம்முடைய அந்த அனுபவத்தை நாட்டில் உள்ளாறும் அறிந்து அனுசந்தித்து வாழுமாறு
இப்பிரபந்த ரூபமாக வெளியீட்டு அருளுகிறார்-

————————————————————————–

கடல் மல்லைக் காவலனே பூத வேந்தே
காசினி மேல் ஐப்பசி யில் அவிட்ட நாள் வந்து
இடர் கடியும் தண் கோவலிடைக் கழிச் சென்று
இணையில்லா மூவரும் இசைந்தே நிற்க
நடுவில் மிவ்வொருவரும் அன்று அறியா வண்ணம்
நள்ளிருளில் மால் நெருக்குகந்த ஞானச்
சுடர் விளக்கேற்றிய வன்பே தகளியான
தொடை நூறும் எனக்கு அருள் செய்துலங்க நீயே -பிரபந்த சாரம்

————————————————————————–

திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன்

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லைப்
பூதத்தார் பொன்னம் கழல்

தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
அமுதன்ன சொல்மாலை ஏத்தி தொழுதேன் -இரண்டாம் -85-
தல சயனத் தாரையும் பூதத் தாழ்வாரையும் தன்னிடத்தே கொண்டு இருப்பதே கடல் மல்லைக்கு புகழாகும்
முத்துக்கள் -பன்மைக்கு மூன்று வகை முத்து
கடலில் தோன்றும் முத்து
வானவரால் வணங்கப்படும் முத்து -பெரிய திருமொழி -7-8-8-
இவ் விபூதியில் இருந்து கொண்டே கரை கடந்த முக்தர் போன்ற பூதத் தாழ்வார் ஆகிற முத்து
பூதம் -சத்தை பெற்றவர் -எம்பெருமான் திருக் கல்யாண குணங்களை அனுபவித்தே சத்தை பெற்றவர்
கடல் வண்ணன் பூதம் -திருவாய் மொழி -5-2-1
————————————————————————–

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.
அன்பே தகளி ஆ–(பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஆத்மாவும் உருகப்பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

தகளியாவது – நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல், (தாளி என்று உலக வழக்கு.)
அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு
எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார்.
அன்பு ஆர்வம் இன்பு என்றவையெல்லாம் பகவத் விஷயத்தில் தமக்குண்டான அநுராக விசேஷங்களேயாம்.
அநுராகத்தில் கணுக்கணுவான அவஸ்தாபேதங்கள் உண்டாகையால் அவற்றைத் திருவுள்ளம் பற்றி
அன்பு என்றும் ஆர்வம் என்றும் இன்பு என்றும் சப்தபேதங்களையிட்டுச் சொன்னபடி.
ஆகவே, எம்பெருமானது திருவருளால் தமக்கு அப்பெருமான் விஷயமாகத் தோன்றியுள்ள ப்ரீதியின் நிலைமைகளைத்
தகளியும் நெய்யும் திரியுமாக உருவகப்படுத்தி, ஸர்வசேஷியான நாராயணனுக்குப் பரஜ்ஞானமாகிற சுடர் விளக்கையேற்றி
அடிமைசெய்யப் பெற்றேனென்று மகிழ்ந்து கூறினாராயிற்று.

எம் பெருமானிடத்தில் எனக்கு அனுராகமானது கணுக்கணுவாக ஏறி வளர்த்துச் செல்லப் பெற்றதனால்
அவ்வநுராகம் உள்ளடங்காமல் இத்தமிழ்ப் பாசுரங்களை வெளியிடத் தொடங்குகின்றேனென்பது பரமதாற்பரியம்.

உலகத்தில் ஒரு விளக்கு ஏற்றவேணுமானால் தகளியும் நெய்யும் திரியும் இன்றியமையாதனவாம்;
இவ்வாழ்வார் ஏற்றுகிற ஞானவிளக்கானது லோகவிலக்ஷணமானதால் லோகவிக்ஷணமான
தகளியையும் நெய்யையும் திரியையுங் கொண்டு ஜ்வலிக்கின்றது போலும்.
பகவத் விஷய அநுராகத்தின் வெவ்வேறு நிலைமைகளே இவையாயின.
உலகில் பதார்த்தங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றுவர்;
இவரும் ஸ்வஸ்வரூப பரஸ்வரூபங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றினர்.

“நன்புருகி” என்றவிடத்து, நன்பு என்று ஆத்மாவைச் சொல்லுகிறது.
ஜ்ஞாநாநந்தங்களை யுடையதாகையாலும் எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூர்தமாகையாலும்
ஆத்மா நல்ல வஸ்து என்ற காரணத்தினால் நன்பென்று இவர் ஆத்மாவுக்குப் பெயரிட்டனர் போலும்.
நன்பு என்பது குணப்பெயராயினும் “தத்குணஸாரத்வாத் து தத்வ்யபதேச: ப்ராஜ்ஞவத்” (ப்ரஹ்மஸூத்ரம்.) என்ற
ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியையாலே ஆத்மவாசகமாகக் குறையில்லையென்க. தமிழர் பண்பாகுபெயர் என்பர்.
நாரணன் – நாராயணன் என்பதன் சிதைவு.

இவ்வாழ்வார் ஞானத்தமிழ்புரியத் தொடங்கும்போதே ‘ஞானத் தமிழ் புரிந்த’ என்று இறந்தகாலத்தாற் கூறினது.
தம்மைக் கொண்டு கவிபாடுவிக்க விரும்பிய எம்பெருமான் ஸத்யஸங்கல்பனாகையாலும்,
எம்பெருமானது திருக்குணங்களைப் பற்றிப் பாசுரங்கள் பேசித் தலைக்கட்டியே தீரும்படியான தம் உறுதியினாலம்
இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டியாய் விட்டதாக நினைத்தென்க.
இதனைத் தமிழர், தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி என்பர்.

————————————————————————–

நான் இப்பிரபந்த முகத்தால் பகவந்நாமங்களை அநுஸந்தித்து அவனதருளால் நித்யஸூரிகள் பெறும் பேற்றைப்
பெறப்போகிறேனென்பதைப் பொதுப்படையான சொல்லாலே வெளியிடுகிறார்.
பகவந் நாமங்களை நன்றாக அறிந்து அன்புடன் யாவர் சொல்லுகின்றனரோ, அன்னவர்களை
அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான நித்யஸூரிகளோடொப்பப் பணி கொள்ளுதலன்றோ
எம்பெருமானுடைய தொழில் என்கிறார்.

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

பதவுரை

நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேமரூபமான) ஜ்ஞானத்தாலே
நன்கு உணர்ந்து–உள்ளபடியறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரமபதத்திற்கு அலங்காரமான நித்யஸூரிகளாக (நம்மை)ச் செய்துவைக்கு மதுவேயாம்.

எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு;
அவற்றில், திருமேனி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று ஒரு வகுப்பும்,
விபூதிவிஸ்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும் கொள்ளத் தக்கன.
ஸ்ரீவத்ஸவக்ஷா; புண்ட·காக்ஷ:, பீதாம்பர:, சார்ங்கீ, சக்ரபாணி: இத்யாதி திருநாமங்கள் முந்தின வகுப்பைச் சேர்ந்தவை;
லோகாத்யக்ஷ:, ஸுராத்யக்ஷ:, ஜகத்பதி; இத்யாதி திருநாமங்கள் பிந்தினவகுப்பைச் சேர்ந்தவை.
ஆக இவ்விரு வகுப்புகளையுந் திருவுள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும்,
இரண்டாமடியில் “மற்றவன் பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.
அன்றியே,
நாரணனுடைய நாமங்களை நன்றாகவுணர்ந்து அவனுடைய அந்தப் பெயர்களை அன்பு முற்றி வாய்விட்டுச் சொன்னால் – என்று
பொருள் கொள்ளவுங் கூடும்; அப்போது, கீழ்விவரித்தபடி வகுப்புபேதங் கொள்ளவேண்டா.

தானத்தால் – ‘ஸ்தாநம்’ என்னும் வடசொல் தானமெனத் திரிந்தது. எல்லை நிலத்தைச் சொன்னபடி.
அன்பினுடைய எல்லை நிலத்திலே நின்று என்க. சாற்றுதல் – சொல்லுதல்.
ஈற்றடியில், நாங்கள் என்பதும் பணி என்பதும் தனித்தனியே அமரரிடத்து அந்வயிப்பன,
பணியமரர் – எப்போதும் பணிவதையே இயல்வாகவுடைய அமரர்.
பரிசு – வெகுமதியுமாம்; நித்யஸூரி ஸாம்யத்தை வெகுமதியாக அளிப்பன் என்றவாறு.

————————————————————————–

ஸமயத்தில் ஆச்ரிதர்களுக்கு வந்து உதவுகைக்காகத் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளும்
திருக்குணத்தி லீடுபட்டு அப்பெருமானது திருவடிகளிலே நல்ல மலர்களைக் கொண்டு ஸமர்ப்பித்து
ஆராதிக்குமவர்கள் பரஞ்சோதியான பரமபதத்திலே சென்று புகப்பெறுவர்;
இந்திரன் முதலிய தேவர்களும் அப்பரமபதத்தை இன்னமும் காதால் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே யொழிய
கண்ணால் கண்டு சேரப் பெற்றார்களில்லை;
அப்படி தேவர்கட்கும் அரிதான பரமபதத்தை அநந்ய ப்ரயோஜநரான பக்தர்கள் அடையப்பெறுவர் என்கிறார்.

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

பதவுரை

பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்விகுன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்

“புகப்பெறுவர்போலாம்” என்றவிடத்து ‘போல்’ என்பது ஒப்பில் போலியாய் வந்தது
வடமொழியில். “கிமில் ஹி மதுராணாம்” இத்யாதி ஸ்தலங்களில் இவ சப்தம்போலே வாக்யாலங்காரமென்க.

புரிவார்கள் தொல்லமரர் கேள்வி – புரிவார்களான தொல்லமரருண்டு. முழுகுவது மூக்கைப் பிடிப்பது ஜபிப்பது முதலிய
ஸாதநாநுஷ்டங்களைச்செய்பவரான தேவர்கள்;
அவர்களுடைய செவிப்புலனுக்கு மாத்திரம் இலக்கானதேயன்றி, கட்புலனுக்கு இலக்கானதன்று பரமபதம்.
ஆழ்வானருளிய ஸ்ரீவைகுண்ட ஸ்தலத்தில்
“யத் ப்ரஹம் ருத்ர புருஹூதமுகைர் துராபம் நித்யம் நிவ்ருத்தி நரதைஸ் ஸநகாதி பிர்வா” என்றதும்,
பிள்ளைப் பெருமாளையங்காரருளிய திருவேங்கடமாலையில் “கேட்டமரர் வேட்டுத் தளர்வாகுமந்தரத்தான்” என்றதும் காண்க.

சாஸ்த்ரங்களில் பரமபதத்தைப் பற்றிச் சொல்லுமிடத்து “அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர்மஹாத்மந:”
(ஸூர்யன் அக்நிமுதலிய சுடர்ப் பொருள்களிற் காட்டிலும் மிக விஞ்சி விளங்குவது) என்று
சொல்லப்பட்டிருத்தலால் ‘துலங்கொளி சேர் தோற்றத்து’ என்றார்.

————————————————————————–

இப்பாசுரம் பெரும்பாலும் ரூபகாதிசயோக்தியலங்காரம் கொண்டுள்ளது. அதாவது –
விஷயங்களை மறைத்தும் ரூபகமாக்கியும் பேசுகிறது.
திருமா மகள் பொகுநனான எம்பெருமானை என்னுடைய நெஞ்சிலே எழுந்தருளப்பண்ணி
உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன் என்று சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறார்.

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பதவுரை

நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.

நகரிழைத்து – ராஜாக்கள் வஸிக்குமிடம் நகரமெனப்படும்: தேவாதி தேவனான எம்பெருமான் உவந்து வஸிக்குமிடம்
பக்தர்களுடைய ஹ்ருதயமேயாகையாலும் இவ்வாழ்வார் தாமும் பக்தசிரோமணியாகையாலும்
இவர் தம்முடைய திருவுள்ளத்திலேயே உவந்து வஸிப்பதென்பது திண்ணம்;
ஆகவே ‘நகரிழைத்து’ என்றது – என்னுடைய நெஞ்சை அவனுக்கு ‘உறைவிடமாக்கி’ என்றபடி.

அரசர்களை ஆந்தப்படுத்த விரும்புமவர்கள் தாமரை முதலிய நல்ல புஷ்பங்களைக்கொண்டு பணிவதுபோல,
தாமும் எம்பெருமானை நல்லதொரு புஷ்பமிட்டுப் பணிந்தமை சொல்லுகிறார்மேலே.
நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் என்று.
சாஸ்த்ரங்களில் (அஹிம்ஸை, இந்த்ரிய நிக்ரஹம், ஸர்வபூததயை, பொறுமை, ஞானம், தபஸ், த்யாநம், ஸத்யம்
என்னுமிவை யெட்டும் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமான எட்டுவகைப் புஷ்பங்கள்) என்று சொல்லியிருப்பதுபோல,
இங்கு இவ்வாழ்வார் பகவத் விஷய பகதியை நிகரில்லாத தாமரைப்பூவாகக் கருதுகின்றனர்.

தாமரைப்பூவென்றால் அதற்குப் புறவிதழ் அகவிதழ் முதலானவை இருக்குமே;
அவற்றின் ஸ்தானங்களிலே ஸ்நேஹம் ஸங்கம் காமம் என்கிற பக்தியின் பருவ விசேஷங்களையிட்டுப் பேச நினைத்து,
அவற்றையும் நேரே சொல்லாமல் முத்தும் மணியும் வயிரமுமாக உருவகப்படுத்திப் பேசுகின்றார்.
“நிகரில்லாப் பைங்கமல” மென்றது பொற்கமலத்தையாகையால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்ல வேண்டிற்று.

முதலடியில், மலர் என்றது மலரிதழைச் சொன்னபடி: ஆகுபெயர்.
புறவிதழின் ஸ்தானத்திலே முத்தாகச் சொல்லப்பட்ட ஸ்நேஹமும்,
அகவிதழின் ஸ்தானத்திலே மாணிக்கமாகச் சொல்லப்பட்ட ஸங்கமும்,
தாதின் ஸ்தானத்திலே வயிரமாகச் சொல்லப்பட்ட காமமும் கமலமென்னப்பட்ட பக்தியின் அவஸ்தாபேதங்களென்க.

நித்திலம் – வடமொழியில், ‘நிஸ்தலம்’ என்கிற சொல் முத்து என்னும் பொருளதாகக் கவிகளால் பிரயோகிக்கப்படுகிறது.
அதிவித்ருமமஸ்த நிஸ்தலாளீருசம்” என்று வரதராஜஸ்தவத்திலே கூரத்தாழ்வானும் பிரயோகித்தருளினர்.
அந்த நிஸ்தலமென்னும் வடசொல்லே தமிழில் நித்திலமென்ற திரிந்து கிடப்பதாகக் கொள்க.
இது தனியே ஒரு தமிழ்ச்சொல் என்பர் சிலர்.

————————————————————————–

எம்பெருமான் மாணுருவாய்ச்சென்று மாவலியிடத்தில் மூவடி நிலம் வேண்டினதன் கருத்து எதுவாயிருந்ததென்னில்,
மூன்று அடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து ஆக்ரமித்துக் கொள்ள வேணுமென்பதே முதலில் அபிப்பிராயமாக இருதது;
பிறகு அளக்கிற ஸமயத்தில் கீழுலகங்களை ஓரடியாலும், மேலுலகங்களை மற்றோரடியாலும் அளந்துகொள்ளுகையாலே
மூன்றாவது அடி இரந்து பெற்றது வீணாய்விடும்போலிருந்தது;
அது வீணாகாமைக்காக மாவலியைக் கேட்க, அவனும் தனது தலையையே அதற்கு இடமாகக் காட்ட
அதன்மேல் மூன்றாமடியை வைத்து அவனைப் பாதாளத்திலே கொண்டு தள்ளினனாக
இவ்வாழ்வாருடைய அநுஸந்தான முள்ளதாகக் கொள்க.

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

பதவுரை

படிநின்ற–பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை
அடிமூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடிமூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓதவல்லார் ஆர்–பேசவல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)

இந்தலோகம் அந்தரிக்ஷலோகம் ஸ்வர்க்கலோகம் என்னும் மூவுலகங்களையும் மூன்றடிகளாலே நீ
அளப்பதாயிருந்தால் மூவடி நிலம் நீ யாசித்துப் பெறலாம். காரியத்தில் அப்படி இல்லையே.
மூவடி நிலம் யாசித்துப்பெற்று அந்த மூவடிகளாலே மூவுலகங்களை நீ அளந்தாயோ? அஃது இல்லையே!
யாசிக்கிறபோது இருந்த எண்ணம் வேறாகவும் அளக்கிறபோது உண்டான எண்ணம் வேறாகவும் ஆயிற்றே! இது என்ன? என்றபடி.

உண்மையில், மூன்றடி யாசிக்கிறபோதே ‘இரண்டடிகளாலே கீழ்மேலுலகங்களை யளந்துகொண்டு
மூன்றாமடிக்காக மாவலியைச் சிறையில் வைக்கவேணும்’ என்னும் அபிப்பிராயம் எம்பெருமானுக்கு
இருந்திருக்கச் செய்தேயும் இவ்வாழ்வார் அபிப்ராயபேதம் தோற்ற அருளிச்செய்தது ஒரு சமத்காரமுமாகும்.

அவநி – வடசொல்; பூமி. படிநின்ற – ‘படி’ என்று உபமானத்துக்கும் வாசகமுண்டு; ஒப்பாகநின்ற கடல் என்னலாம்.

மூன்றாமடியில் “நின்படியை” என்ற பாடமும் பொருந்தும்.

————————————————————————–

பகவத் விஷயமானது அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமான விலக்ஷண விஷயமென்பதையும்,
சப்தாதிவிஷயங்கள் இகழத்தக்கவையென்பதையும் நன்றாகத் தெரிந்துகொண்டு,
செவி வாய் கண் மூக்கு உடலென்னும் ஐம்புலன்களையும் வெளிவிஷயங்களில் ஓடவொட்டாமல்
உள்விஷயமாகிய பகவத் விஷயத்திலேயே உபயோகப்படுத்தி,
“செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன்” என்றாற்போலே
எம்பெருமானுககு உரிய நல்ல புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு ருஜுவான பக்தியையுடையராகய்
அப்பரமனுடைய திருநாமங்களையே எப்போதும் அநுஸந்திக்கும்படியான பாக்கியம் எவர்களுக்குள்ளதோ,
அவர்கள் அப்பெருமானுடைய திருவடிகளைக் கண்டநுபவிக்கப்பெற்றவர்கள் என்றாராயிற்று.
இத்தால், கீழ்ப்பாசுரத்தில் “நின்னடியை யாரோதவல்லா ரறிந்து” என்றது –
இப்படி செய்யமாட்டாத தாந்தோன்றிகளைப் பற்றின வார்த்தை யென்பது விளங்கிற்றாம்.

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பதவுரை

அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்துகொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டிமேயவொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய்மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக்கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்திமிகுந்த மனத்தையுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து
அவன்தன்பேர்–அப்பெருமானது திருநாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக்கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹாபாக்யசாலிகள்
கார்ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்.

தவம் – வாக்கியம்.

————————————————————————–

உலகளந்த பெருமானுடைய திருவடிகளையே உகந்து ஆச்ரயித்திருக்கும்படி தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்.

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

பதவுரை

ஆழிநெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.

மாவலியினிடத்தினின்றும் தானம் வாங்கியவுடனே ஸ்ரீவிஷ்ணு திரிவிக்கிரமனாய் மூவடி மண்ணை அளக்கப்புக,
அதைக்கண்ட மஹாபலிபுத்திரனான நமுதியென்பவன் ஓடிவந்து ‘இது என்ன?’ என்று வளருகிற திருவடியைத்தகைய,
ஸ்ரீவிஷ்ணு ஏன் தகைகிறாய்? நான் தானம் வாங்கியதை அளந்துகொள்ள வேண்டாவோ?’ என்ன,
‘நீ செய்கிறது கபடமன்றோ?’ என்று நமுசிசொல்ல;
ஸ்ரீவிஷ்ணு ‘உன்னுடைய தகப்பன் யாசக பிரமசாரியாய் வந்த எனக்குத் தானம் பண்ணினது பொய்யோ?’ என்ன,
நமுசி ‘என்னுடைய பிதா உன்னுடைய மோசந்தெரியாமல் உன் வஞ்சனத்தில் அகப்பட்டுக்கொண்டான்’ என்ன,
ஸ்ரீவிஷ்ணு ‘நான் செய்வதை வஞ்சகமென்று எதனாற் சொல்லுகிறாய்?’ என்ன,
நமுசி ‘நீ செய்வது வஞ்சனமன்றாகில், நீ முன்னே கேட்ட போதிருந்த வடிவத்தைக் கொண்டு அளந்து கொண்டுபோ’ என்ன,
ஸ்ரீவிஷ்ணு ‘இது விகாரப்படுந்தன்மையுள்ள (எப்போதும் ஒரு தன்மையாயிராத) சரரமாயிற்றே,
முன்னைய வடிவத்தைக் கொண்டு எப்படியளக்க முடியும்?’ என்ன,
இப்படி ஸமாதானஞ் சொல்லவுங்கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாயிருந்த நமுசியை
வளர்ந்த திருவடியினால் ஆகாயத்திலே கொண்டுபோய்ச் சுழன்றுவிழும்படி செய்தானெம்பெருமான் – என்கிற வரலாற்றைப் பெரியாழ்வார்
‘என்னிது மாயம் என்னப்பனறிந்திலன், முன்னையவண்ணமே கொண்டளவாயென்ன
மன்னு நமுசியை வானிற்சுழற்றிய, மின்னுமுடியனே!” (1-8-8) என்ற பாசுரத்தில் அநுஸந்தித்தருளினர்;
அதனை இப்பாட்டில் சுருங்க அநுஸந்தித்திருக்கிறாரிவர்,
மாற்றார் என்று மாவலியின் மகனான நமுசி முதலிய விரோதிகளைச் சொல்லுகிறது.
அவர்கள் கண்சுழன்று அழலெடுத்த சிந்தையராய் அஞ்சும்படி வாய்மடித்தான் எம்பெருமானென்க.

“தழலெடுத்த போராழியேந்தினான்” – சக்கரத்தாழ்வானைக் கொண்டு காரியங் கொண்டதும் த்ரிவிக்ரமாவதாரத்திலுண்டு.
மாவலியானவன் வாமநனுடைய வடிவழகாலும் மழலைச் சொல்லாலும் மனமகிழ்ந்து இவன் விரும்பியதைக் கொடுப்பதாக
இருக்கும்போது அவனது குருவான சுக்கிராசாரியன் அப்பிரானது வடிவையும் வந்த விதத்தையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து
‘இவன் ஸர்வேச்வரன், தேவகாரியஞ் செய்யும்பொருட்டு உன் ஸம்பத்துக்களை யெல்லாம் பறித்துக்கொண்டுபோக வந்தான்’
ஆகையால் நீ இவனுக்குத் தானம் பண்ணுவது தகுதியன்று; என்று தானஞ்செய்வதைத் தடுக்க,
அவன் கேளாமல் தாரைவார்த்துத் தத்தஞ்செய்யப்புக, ஜலபாத்திரத்தின் துவாரத்திலே அந்த சுக்கிராசாரியன் புகுந்து கொண்டு
ஜலத்தை விழவொட்டாமல் தடுக்க, ஸ்ரீவிஷ்ணு, த்வாரத்தைச் சோதிப்பவன்போலே தன்னுடைய திருக்கையிலணிந்த
தர்ப்பபவித்ரத்தின் நுனியால் அவன் கண்ணைக் குத்திக் கலக்க, அவன் கண்ணையிழந்தவனாய் அங்கிருந்து வெளிப்பட,
பின்பு மாவலியிடத்தில் நீரேற்றனன் என்கிற வரலாறு ப்ரஸித்தமானதே;
இதனைப் பெரியாழ்வார் அநுஸந்திக்கும்போது
சுக்கிரன் கண்ணைத் துரும்பால்கிளறிய சக்கரக்கையன்” என்றதனால்,
“கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தான்” என்கிறபடியே, திருமால் விரும்பினவடிவங்கொண்டு செல்லுந்
தன்மையையுடைய திருச்சக்கரமே பவித்திர வடிவாய் நின்று சுக்கிரன் கண்ணைக் கலக்கினதாக
ஆசார்யர்கள் வியாக்கியானித் தருள்வதாலும்,
அதை யநுஸரித்து ஸ்ரீகூரநாராயண ஜீயர் தாமும் ஸுதர்சநசதகத்திலே
“க்ருதயந நயவ்யாஹதிர்ப் பார்க்கவஸ்ய… சக்ரத்நாரா -” (சுக்கிரனுடைய கண்ணைக்கெடுத்த சக்கரம்) என்று
அருளிச்செய்துள்ளதனாலும் இப்பாசுரத்தில் த்ரிவிக்ரமாவதார கதாநுஸந்தாநத்தில் ‘தழலெடுத்த போராழியேந்தினான்’ என்றது ஒக்கும்.

வாய்மடித்து – கோபத்தின் மிகுதியினால் ‘நாக்கை மடித்துப் பற்களைக் கடித்துக்கொண்டிருத்தல் இயல்வு
‘கண்சுழன்று’ என்றது எம்பெருமானுடைய கோபத்தினாலாகிய கண்சுழற்சியைச் சொன்னதாகவுமாம்,
நமுசியின் பயத்தினாலாகிய கண்சுழற்சியைச் சொன்னதாகவுமாம்.

மூன்றாமடியில் “சேவடியை” என்பதும் பாடம். ஈற்றடியில், ஓர் – வினைமுற்று தியானம் பண்ணு என்றபடி.

————————————————————————–

பேய்ச்சியின் முலைப்பாலை அமுதமாகவுண்ட கதையை அநுஸந்தித்து ஈடுபடுகிறார்.

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பதவுரை

(பூதனையானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகுபெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றான்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லிவாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.

கண்ணபிரானைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனாய் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன்,
தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப்
பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு
இரவிலே திருவாய்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த க்ருஷ்ண சிசுவையெடுத்துத்
தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால்
இறுகப் பிடித்துப் பாலுண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி
உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தானென்பது கதை.

வந்த பேய்ச்சி யசோதையான பாவனையோடு வந்தாவாகையாலே அவளுடைய பரிவு போன்ற பரிவை
ஏறிட்டுக்கொண்டது பற்றி ‘உகந்து’ எனப்பட்டது.
“ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு, இரு முலையும் முறை முறையா ஏங்கியேங்கி யிருந்துணாயே”
என்னும்படியாகப் பால் விம்மியிருந்ததனால் ‘ஒளிநிறங் கொள்கொங்கை’ எனப்பட்டது.
“நந்தன் பெறப்பெற்ற நம்பீ! நானுகந்துண்ணுமமுதே! எந்தை பெருமானே! உண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே” ‘.
“உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக்குடங்காலிருந்து வாய்முலையுண்ண நீவாராய்’ என்று
யசோதை ஆவலோடு சொல்லுமா போலே பூதனையும் சொன்னமை தோற்ற
‘அகங்குளிரவுண்ணென்றாள்’ எனப்பட்டது.
அவள் தாயான பாவனையிலே எவ்வளவு அன்பு அபிநயித்தாளோ, அவ்வளவு அன்பை இவனும் மகனான பாவனையிலே
அபிநயித்தமை தோற்ற “உகந்து முலையுண்பாய்போலே” எனப்பட்டது.
ஈற்றடியிலுள்ள “ஆனமையால்” என்பதை இரண்டாமடியிற் கூட்டிக்கொள்க.

அலைபண்பால் = இதன் அருமையான பொருள் குறிக்கொள்ளத்தக்கது.
பண்பாவது குணம்; அலையெறிகின்ற குணம் என்றது – அளவுகடந்த குணம் என்றபடி.
“மித்ரபாவேநி ஸம்ப்ராப்தம் நி த்யஜேயம் கதஞ்சந்” (மெய்யான அன்போடு வராவிட்டாலும் மித்திரன் என்கிற
பாவனை கொண்டுவந்தாலும் அன்னவனையும் நான் எவ்விதத்திலும் விடமாட்டேன்) என்று உறுதியாகச் சொல்லியுள்ள
எம்பெருமான் ப்ரீதிபாவனையோடு வந்த பேய்ச்சியைக் கொன்றது ஏனென்றால் அவளைக்கொன்று உலகுக்கு ஓருயிரான
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதானது உலகமுழுமைக்கும் உயிரளித்ததாக ஆகிறபடியால்,
இந்த மஹாகுணத்தை வெளியிடவேண்டிய அவளைக் கொன்றானென்க.

———————————————–

இத்தால் – யசோதைப் பிராட்டிக்குக் கண்ணபிரானிடத்துள்ள அன்பு அளவற்றதென்று வியந்து கூறினாராயிற்று.

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பதவுரை

அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்
அதுகண்டு–முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

முலை கொடுக்கவந்த பேய்ச்சியானவள் பிணமாய் விழுந்துகிடந்தபடியைப் பார்த்த யசோதை
‘இதென்ன உத்பாதம்!’ என்றுவெருண்டோட வேணுமேயல்லது, அணுகிவந்து முலைகொடுத்திருக்ககூடாது;
“பேய்ச்சி முலையுண்ட பின்னையிப்பிள்ளையைப் பேசுவ தஞ்சுவனே” என்று அஞ்சிக் காதவழியோட வேண்டியிருக்கவும்.
“பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாளஞ்சாதே” என்னும்படி அச்சமின்றி அணுகிவந்து
உன்னை எடுத்தணைத்து முலைகொடுத்த பெருங்குணத்தை நோக்குங்கால்,
முன்பு நீ உலகளந்த அரிய பெரிய காரியத்திற்காட்டிலும் இக்காரியமே மிகப்பெரிதென்று சொல்லலாம்படி யிருக்கின்றதென்கிறார்.
இத்தால் – யசோதைப் பிராட்டிக்குக் கண்ணபிரானிடத்துள்ள அன்பு அளவற்றதென்று வியந்து கூறினாராயிற்று.

வரன்முறையால் நீ அளந்த = ‘வரம்‘ என்னும் வடசொல் (மகர னகரப் போலியினால்) ‘வரன்‘ என்று கிடக்கிறது.
‘சிறந்ததான‘ என்றுபொருள். சிறந்த முறையானது ஸ்வஸ்வாமிபாவ ஸம்பந்தம்.
உலக முழுவதும் தன்னுடைய ஸொத்தாயும் தான் அதற்கும் ஸ்வாமியாயு மிருக்கையாகிற சிறந்த ஸம்பந்த
மிருக்கையாலேயன்றோ தன்னை யழியமாறியும் அளந்துகொள்ள நேர்ந்தது.

அளந்தமாகடல் ஞாலம் – முலைதந்த இந்நீர்மைக்குப் பெருமுறையால் எய்துமோ? = நீ மாகடல் சூழ் ஞாலத்தையளந்த
மஹாகுணமானது யசோதை அஞ்சாமல் முலைதந்த மஹா குணத்திற்கு ஈடாகமாட்டாது என்றவாறு
அதாவது யசோதை முலைதந்த நீர்மையை ஒரு தட்டிலும் நீயளந்த மாகடல் சூழ் ஞாலத்தை ஒரு தட்டிலும் வைத்துப்பார்த்தால்
“த்ரைலோக்யராஜ்யம் ஸகலம் ஸீதாயா முப்நுயாத் கலாம்” (மூவுலகுங்கூடியும் ஸீதைக்கு ஓரளவும் ஈடாகாது)
என்றாற்போலே அஜகஜாந்தரமாயிருக்குமென்பதாகக் கொள்ளலாம்.

பெருமுறையால் எய்துமோ பேர்த்து = பெருமுறையாவது – இது பெரிதா? அது பெரிதா? என்று ஆராயும் வகை;
அப்படி ஆராயுமிடத்து ஒப்பாகுமோ? என்கை.
“பேர்த்து” என்பதற்குப் பொருள் விசாரிக்க வேண்டா; வார்த்தைப்பாடு என்று கொள்ளலாம்.

————————————————————————–

முதலாழ்வார்களுகுப் பெரும்பாலும் எம்பெருமானுடைய விபவாவதாரங்களுள் க்ருஷ்ணாவதாமும் த்ரிவிக்ரமாவதாரமும்,
அர்ச்சாவதாரங்களுள் திருவேங்கடமலையும் அடிக்கடி வாய்வெருவும்படியா யிருக்குமென்பது குறிக்கொள்ளத்தக்கது.

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

பதவுரை

காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–போக்கி யருள வேணும்.

பிள்ளையாய் மாசகடம் பேர்த்தனை = ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த தான் நந்தகோபர் திருமாளிகையிலே
ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தப்பெற்று (யசோதையும் யமுனை நீராடப்போய்) இருந்தகாலத்து,
கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதை யறிந்த
பகவானான தான் பாலுக்கு அழுகிற பாவனையில் தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கியுதைத்து
அச்சகடத்தைச் சிந்நபிந்தமாக்கின வரலாறு அறிக.

பிரானே! யசோதைப்பிராட்டியைப் போல உன்னிடத்து எனக்கு அதிகமான ப்ரேமம் இல்லாவிட்டாலும்
‘ஆச்ரயிக்கத்தக்கவன் நீதான்’ என்கிற எண்ணத்தைப் பெற்று உன்னை ஆச்ரயிப்பதற்கு உரிய ஸாமக்ரிகளைப்
பரிபூர்ணமாகக் கொண்டிருக்கிற நான் இனி உன்னருளுக்கு இலக்காகக் கூடியவன்;
இதுவரையில் எனக்கு நேர்ந்திருந்த தேவதாந்தரபஜனம், உபாயாந்தரப்பற்று, ப்ரயோஜநாந்தர விருப்பம் முதலிய
பொல்லாங்குகளைத் தவிர்த்து இனி யென்னைக் காத்தருளவேணும் என்றாராயிற்று.

பேர்த்தனை, காத்தனை – முன்னிலையொருமை இறந்தகால வினைமுற்றுக்கள்.
‘ஏத்திய’ என்னும் இறந்தகாலப் பெயரெச்சம் காலமுணர்த்தாது தன்மையுணர்த்திற்று. கா – வினைமுற்று.

————————————————————————-

பெரும்பாலும் இவ்வுலகத்தவர்கள் தேவதாந்தர பஜனஞ்செய்து சுவையற்ற அற்ப பலன்களைப் பெற்று
அநர்த்தப்படுகின்றனரேயன்றி உன்னையுணர்ந்து ஆச்ரயித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசுகிறார்.

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும் கழல் தொழுது00நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

கடைநின்றமரர் கழல்தொழுது = அமரர் கடைநின்று கழல் தொழுது என்க.
கடையாவது மனைவாசல்; தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது – அவர்களை ஆராதித்தமை கூறியவாறு.
இனி, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு, “கடைநின்ற + அமரர்” என்று பிரித்து,
‘தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து’ என்பதாகவும் பொருள்கொள்ளலாம்.
இடைநின்ற வின்பத்தராவர் – எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கிடைக்கக் கூடிய பரமபதாநுபவமொன்றே உத்தமமாகையாலும்,
அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களெல்லாம் இடைக்கட்டாதலாலும்;
தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப்பட்ட ஹூத்ரபலன்களே கிடைக்குமாதலாலும் “இடைநின்ற இன்பத்தராவர்” என்னப்பட்டது.
இன்பமென்றதும் ப்ரமித்தவர்களின் கருத்தாலேயாம். ‘ஆவர்’ என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க.

————————————————————————–

கீழ்ப்பாட்டில், தேவதாந்தரபஜம் பண்ணுமவர்கள் அநர்த்தப்பட்டுப் போவதை யருளிச் செய்தார்;
‘ஆனால் அந்த தேவதைகளை ஆச்ரயிக்கலாகாதோ? இந்த்ர சந்த்ர ருத்ராதிகளும் மேம்பட்ட தேவதைகளாகத்
தானே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றனர்’ என்று நினைப்பார்க்கு உத்தரமாக இப்பாட்டருளிச் செய்கிறார்.

எம்பெருமானொருவனையே தொழுது உஜ்ஜீவிப்பதில் நம்மோடு அந்த தேவதாந்தரங்களோடு ஒரு வாசியில்லையான
பின்பு தேவாதி தேவனான ஸ்ரீமந் நாராயணனைத் தொழுவதே அனைவர்க்கும் கடமையாமென்பது இதனாலுணர்த்தப்பட்டதாம்.

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆச்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத் தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

கீழ்ப்பாட்டில் “நெடுமாலே! நின்னடியையாரோதவல்லார்?” என்றுசொல்லி வைத்து இப்பாட்டில்
“அரவணையான் பாதம் எவர் வணங்கி யேத்தாதார்?” என்றது முரண்படுமன்றோவென்று சங்கிக்க வேண்டா;
எம்பெருமான் திருவடியைத் தொழுது துதித்தலைக் கடமையாகவுடையராகாதவர்கள் யாவர்? என்பதே இப்பாட்டின் நோக்கமாகும்.
ஆகவே, எல்லாரும் எம்பெருமானைத் தொழுதேத்தக் கடமைப்பட்டவர்களென்று ஸ்வரூப யோக்யதையை
உணர்த்துமிப்பாசுரமும் இந்த ஸ்வரூபத்தைப் பரிபாலனம் பண்ணுவாரில்லையே யென்றுரைத்த கீழ்ப்பாசுரமும் முரண்படா.
இப்பாட்டின் பின்னடிகளில், ஸூரியன் பிரமன் சிவன் முதலானவர்களும் நாடோறும் தொடர்ந்து தொழுவதாகச்
சொல்லியிருந்தாலும், இவ்வுலகத்தவர்கள் பெரும்பாலோர் தொழாது கெட்டுப்போகின்றனரேயென்னும்
வருத்தம் ஆழ்வார்க்குப் பெரிதுமுண்டு.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் “பருவஞ்செழுங்கதிரோ னொண்மலரோன் கண்ணுதலோனன்றே தொழுந் தகையார் நாளுந்தொடர்ந்து”
என்றருளிச் செய்ததில் அப்படிப்பட்ட உயர்ந்தவர்களான தேவர்கள் தாம் எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு உரியவரேயன்றி
நம்போன்ற எளியவர் அப்பரமனை அடையுந்தரத்தினரன்று போலும் என்பதாக ஒரு சங்கை பிறக்கக்கூடுமாதலால்
எம்பெருமானை ஆச்ரயிக்கும் விஷயத்தில் சிறியார் பெரியாரென்னும் வாசியில்லை;
பிறப்பு முதலியவற்றால் தாழ்ந்தவர்களும் கூசாதே ஆச்ரயிக்கலாமென்னும் விஷயத்தை நிலைநாட்டுவதற்காக
ஸ்ரீகஜேந்திராழ்வானது செய்தியை அருளிச்செய்கிறாரிதில்-

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–13-

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது
சூழ் கயம் புக்கு–(கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.

மஹாவிஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் விஷ்ணுபூஜை செய்து கொண்டிருந்தபோது
அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில்
செலுத்தியிருந்ததனால் அம்முனிவனது வருகையை அறியாதவனாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க,
அம்முனிவன் இப்படி அரசன் நம்மை அலக்ஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து ,
‘யானைபோலச் செறுக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை’ என்று சபிக்க,
அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றினனாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால்
அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்துவருகையில்,
ஒருநாள் பெரியதொரு தாமரைத் தடாதகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கிற்று;
முன்பொருகால் தேவலனென்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்த போது
அவனது காலைப்பற்றியிழுத்து அனாதற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரிய முதலையாய்க் கிடந்த
ஹூஹூவென்னுங் கந்தர்வன் அவ்யானையின் காலைக்கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக் கொள்ள முடியாமல்
கஜேந்திராழ்வான் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அப்பொய்கைக் கரையிலே
அரைகுலையத் தலைகுலைய விரைந்தெழுந்தருளித்தனது திருவாழியைப் பிரயோகித்து முதலையைத் துணித்து
யானையை அதன் வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முக்தியை அருளினன் என்ற வரலாறு உணர்க.

“தொடரெடுத்த” என்று யானைக்கு இட்ட விசேஷணம் சாதியியல்வைக் குறிப்பதாம்.
காலிலிட்ட விலங்கை முறித்துக் கையிலே கொண்டு யதேச்சையாகத் திரியுந்தன்மை
யானைச்சாதிக்கு இயற்கை யென்க.

எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு இன்னார் ஆவார், இன்னார் ஆகார் என்கிற நியதியில்லாமை
இப்பாட்டால் வெளியிடப்பட்டதாயிற்று.

————————————————————————–

சிறியார் பெரியாரென்னும் வாசியின்றி யாவராலும் எம்பெருமான் ஆச்ரயிக்கத் தக்கவனென்று
கீழ்ப்பாசுரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதான பின்பு, ஸம்ஸாரிகளைக் ஸ்தோத்ரஞ்செய்துகொண்டு
அதனால் இந்தப் பிரபஞ்சத்திலேயே உழன்றுகொண்டு தடுமாறாமல் அப்பெருமானைப் பணிந்து
அவனது திருநாமங்களைச் சொல்லி அவ்வழியால் நீங்கள் மாத்திரம் ஈடேறுவதோடு நில்லாமல்
உங்களுடைய ஸஞ்சாரத்தாலே நாடு முழுதும் பரிசுத்தமாகும்படி செய்யுங்கோளென்று நாட்டாரை விளித்து உபதேசிக்கின்றாரிதில்,
எண்ட பொருளையுங்கொண்டு வயிற்றை நிரப்புவதற்காகப் பழிபாவங்களைச் செய்து வாழ்கின்ற ஸம்ஸாரிகளைத்
துதிப்பவர் விவேகிகளல்லர், பேதையர்களே யாவர் என்பது விளங்கப் ‘பேதைகாள்!’ என விளக்கின்றனர்.

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்போடும்படி
விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

“பெரும்பகுதியை” என்ற விடத்துள்ள இரண்டாம் வேற்றுமையுருபைப் பிரித்து ‘பண்டி’ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது.
பண்டியென்று வயிற்றுக்குப் பெயர். அதனைப் பெரும்பதியாக்குவதாவது வளர்ப்பதாம்; கண்டதையும் தின்று தின்று
ஏற்றச்சால்போலே வயிற்றை வைத்துக் கொண்டிருக்குமவர்களை நச்சிக் கவிபாடிக் காசுபெற்று வயிறுவளர்க்குந் தொழிலை
விட்டுத்தொலையுங்கோளென்று முன்னடிகளாற் கூறினாராயிற்று.
“பண்டு இப்பெரும்பதியை ஆக்கி” என்று பிரித்து பண்டு – அநாதிகாலமாக,
இப்பெரும்பதியை – இந்த ஸம்ஸாரத்தை, ஆக்கி – வளர்த்துக்கொண்டு என்றுரைக்கவுமாம்.

பழிபாவங்கொண்டு – கவனிப்பு இல்லாமையினால் அபுத்திபூர்வமாகச் செய்ய நேரும் பாவங்கள் பழியென்றும்,
வேணுமென்றே செய்யுந் தீங்குகள் பாவமென்றும் கொள்க.
வயிற்றை நிரப்பவேண்டுவோர்க்கு இவையித்தனையும் செய்யவேண்டியவையாமன்றோ.
இங்கு வாழ்வாரை = இந்தப் பிரபஞ்ச சுகத்தையே வாழ்வாக நினைத்திருப்பவர்களை என்றபடி.
கூறாதேயென்னுமளவால் பரித்யஜிக்க வேண்டுமதைச்சொல்லிப் பின்னடிகளாலே பரிக்ரஹிக்க வேண்டுமதைப் போதிக்கின்றார்.
உலகளந்த பெருமானுடைய திருநாமங்களை யநுஸந்தித்துக் கொண்டு
“கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று, மண்டினாருய்யலல்லால் மற்றையார்க் குய்யலாமே” என்றபடி
திருப்பதிகள் தோறும் நடந்தால்;
“தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள், தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே” என்று குலசேகராழ்வாரும் 3
“நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே என்று பெரியாழ்வாரும்
அருளிச்செய்தபடியே உலகமெல்லாம் பவித்திரமாய்விடும் என்றவாறு.
தீர்த்தகரர் – வடசொல்.

————————————————————————–

எம்பெருமானுகந்தருளின திருப்பதிகள் தோறும் திரியுங்கோளென்று ஸம்ஸாரிகளை நோக்கிக் கீழ்ப்பாட்டில் உபதேசித்தார்;
உண்டியே உடையே உகந்தோடித் திரியுமிம்மண்டலத்திலே இவருபதேசத்தை ஆதரிப்பார் ஆர்?
அவரவர் களிஷ்டப்படி தங்களுடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய,
‘ஐயோ! இப்பாவிகளுக்காக எம்பெருமான் கிருஷ்ணனாய்ப் பிறப்பதும் இராமனாய்ப் பிறப்பதுமாய்க் கொண்டு
படாத அலைச்சல்கள் பட்டுப் பரிதபியா நிற்க இவர்கள் இப்படி உண்டு உடுத்துத் திரிகின்றார்களே!’ என வருந்தின ஆழ்வார்,
அப் பெருமான் ராமக்ருஷ்ணாவதாரங்களிலே அதிஸுகுமாரமான திருமேனியோடே பட்ட மிறுக்குக்களை நினைந்துருகிப் பேசுகின்றார்.

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

கண்ணபிரானாய்த் திருவவதரித்துப் பாரதப் போரிலே பார்த்த ஸாரதியாயிருந்து எதிரிகள் விடுகிற அம்புகள் தன்மேலே
படும்படி திருமேனிக்குக் கவசமும் தரியாதே கிடந்து அர்ஜுநன் சொன்னவிடத்திலே தேரை நடத்திக்கொண்டு
பட்டபாடுகளை முதலடியிலே பேசினர்.

இராமனாய்த் திருவவதரித்துப் பித்ருவாக்யபரபாலந வியாஜத்தாலே காட்டுக்கெழுந்தருளி மாயமான் பிரிக்கப் பிராட்டியைப் பிரிந்து
பட்ட வருத்தங்களை இரண்டாமடியிற் பேசினர். ஆகிய இவ்வலைச்சல்கள்பட நேர்ந்த அவதாரங்கள் ஸம்ஸாரிகளைத் திருத்திப்
பணி கொள்வதற்காகச் செய்தவையாதலால் இவ்வலைச்சல்களும் ஸம்ஸாரிகளுக்காகப் பட்டவையென்று திருவுள்ளம் பற்றுதல் பொருந்தும்.
நாகத்தின் தண்பள்ளி கொள்வான் தனக்கு அழகியதே = இவ்வலைச்சல்கள் எங்கே? அவனுடைய ஸுகுமாரமான திருமேனி எங்கே?
மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கவேண்டியவன் வெம்பரல்களைக் கடித்தாற்போலே,
மெத்தென்ற சேஷ சயனத்திலே திருக்கண் வளர்ந்தருள வேண்டியவன் இவ்வலைச்சல்கள் படத் தகுமோ என்றவாறு.

அழகியதேயென்றது விபரீத லக்ஷணையினால் மிகவும் தகாதவையாக இருந்தனவென்ற பொருளைத்தரும்.
“அழகியவே” என்றும் பாடமுண்டு; அழகிய = அன்சாரியை பெறாத பலவின்பால் முற்று.

மூன்றாமடியில், இடப்பொருளதான கண் என்னுஞ் சொல் இங்கு தரை யென்ற பொருளைத் தந்தது.

————————————————————————–

கீழ்ப்பாட்டிற் கூறியபடியே எம்பெருமான் எப்படியாவது நம்மைப் பெறவேணுமென்றே பற்பல அவதாரங்களெடுத்துப்
படாதன படுகிறபடியால் நம்மைத் திருத்திப் பணிகொள்ளுதல் அப்பெருமானுக்கே கடமையாயிருக்கும்;
நாம் யாதொரு ஸாதாநாநுஷ்டாநமும் செய்யவேண்டா; ஆனாலும் நம்மை மண்ணும் மரமும் கல்லும் கரியும்போலே
அசேதநப்பொருளாகப் படைக்காமல் சேதநப்பொருளாகப் படைத்துள்ளதனால் நாம் அறிவுபெற்றுள்ள
வாசிக்காகச் செய்யத்தக்க தொன்றுண்டு, அதாவது அவனைப் பெறவேணுமென்னும் ருசி மாத்திரம் நமக்கு இருக்கத் தகும்.
மற்றபடி பேற்றுக்கு உபாயமாக நாம் முயற்சி செய்ய வேண்டுவதொன்றுமில்லை என்கிற
ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுவதாம் இப்பாசுரம்.

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருதாலும்
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்
மாலை–அப்பெருமானை
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;
(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்;)
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.)

இதில் முன்னடிகளுக்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு. நம்மனத்தில் எம்பெருமான் வந்து தங்கும்படி
விலக்காமையுடன் இருக்க வேண்டுவதே நாம் செய்யக்கூடிய செயல்;
அங்கே வந்து இடைவிடாது தங்கும்படி அப்பெருமானைச் செய்விப்பதென்பதே நமக்கு இயலாது.;
ஆதலால், நமக்கு ஸ்வரூபஜ்ஞாநமும் முற்றமுதிர உண்டாகாவிடினும், விலக்காமை என்கிற இவ்வளவு மாத்திரம்
நம்மிடத்து உண்டானால் எம்பெருமான் அதனையே பற்றுக்கோடாகக் கொண்டு
நம்முடைய விரோதிகளைப் போக்கித் தன்னைத் தந்தருள்வன் – என்பதாகக்கொள்ளலாம்.

அன்றியே;
அவ்வெம்பெருமான் சேஷி, தான் சேஷன் என்றறிகின்ற விவேகமில்லாதவனாகவே இச்சேதநன் இருந்தாலும்,
இவனுக்கு அப்பெருமானிடத்து ருசியில்லாமலிருந்தாலும், (பெரியோன் எந்த எந்தச் செயலைச் செய்கிறானோ
அந்தச் செயலையே மற்றுள்ள ஸாமாந்ய ஜநங்களும் செய்கிறார்கள்) என்றதற்கேற்ப,
பெரியோர் செய்யும் முறையைமையைக் கண்டாகிலும் ஸர்வேச்வரனை ஹ்ருதயத்திலே கொண்டு இச்சேதநன் தியானிக்கக் கடவன்;
இவ்வளவே கொண்டு எம்பெருமான் விரோதிகளைத் தொலைத்து ஸ்வப்ராப்தியையும் செய்து தருவன் – என்பதாகவுங் கொள்வர்.
மற்றும் பலவகைகளுங் காண்க.

பின்னடிகளில் அருளிச் செய்யப்பட்டுள்ள த்ருஷ்டாந்த வாக்கியார்த்தத்தின் ஸ்வாரஸ்யத்தை உணர்ந்த கொண்டு
அதற்கிணங்க முன்னடிகளின் ஆழ்ந்த கருத்தை அறிந்துகொள்க.
காடெழுந்து மேடாயிருந்த நிலத்தைச் சீர்திருத்தி ஏரியாக வெட்டுகின்றோமாயின் இக்காரியம் மழைபெய்வதற்கு ஸாதநமாக மாட்டாது;
நாம் ஏரி வெட்டுகிறோமென்பது கொண்டே பர்ஜந்யதேவன் மழை பெய்து விடுவனோ?
மழை பெய்வதென்பது பகவத் ஸங்கல்பாதீநமாகையால். அப்படிப்பட்ட மழைக்கு ஏரிவெட்டுதல் உபாயமாகமாட்டாது.
இஃது உலகறிந்த விஷயம். ஏரி வெட்டுதல் மழைபெய்வதற்கு உபாயமன்றாகில் வீணாக ஏரி வெட்டுவானேன்? என்று நினைக்கலாகாது;
எப்போதாவது பகவத் ஸங்கல்பத்தாலே மழை பெய்யுமாகில் அந்த மழை நீரை வனத்திடர் தாங்கிக் கொள்ளமாட்டாது;
நாம் அந்த வனத்திடரைச் சீர்திருத்தி ஏரியாக அமைத்து வைப்போமாயின், மழை பெய்யும்போது வரும் தண்ணீர்
அதிலே தங்குவதற்குப் பாங்காகும். ஆகவே மழைநீர் பழுதுபடாமைக்காக ஏரி வெட்டுதலேயன்றி
மழையைப் பெய்வித்தற்காகவன்று என்பது விளங்கும். இவ்வாறே,
நாம் சேதநராகப் பிறந்துள்ள வாசிக்காக நம்முடைய நிலைமைய சீர்ப்படுத்திக் கொள்வதானது பகவத்ப்ராப்திக்கு ஸாதநமாகமாட்டாது;
ஒருகால் பகவான் நம்மை திருவுள்ளம் பற்ற வருவானாயின் அவனுடைய விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகும்.
நம்மை நாம் சீர்திருத்தி வைத்துக் கொள்ளுதல்.

திருத்தமுறாத சேதநரை வனத்திடரின் ஸ்தாநத்திலே கொள்க; அத்வேஷாதிகளாலே தம்நெஞ்சைத் திருத்திக் கொள்வதானது
ஏரியாம் வண்ண மியற்றுகையாம்; பகவத்ப்ராப்தி கைபுகுதல் மாரிபெய்கையாம்.
ஆகவே நாம் செய்யும் ஸுக்ருதங்களெல்லாம் நிர்ஹேதுகமாகவுண்டாகிற பகவத் விஷயீகாரத்தைத் தாங்கிக் கொள்வதற்கு
மாத்திரம் உறுப்பாகுமேயொழிய, பகவத் விஷயீகாரத்தை நிர்ப்பந்தப்படுத்தி யுண்டாக்குவதற்கு உறுப்பாக மாட்டாதென்று
சேதநக்ருத்யங்களின் அநுபாயத்வம் ஸ்தாபிக்கப்பட்டதாயிற்று இப்பாட்டில்.

சேதநக்ருத்யமொன்றும் உபாயமன்றாகில், சேதநன் மனம் போனபடியே செய்து திரியலாமன்றோ என்று
சிலர் சங்கிப்பதற்கும் இடமில்லாமை காட்டப்பட்டது இதில்.
சாஸ்த்ரங்களுரைத்த நல்வழியில் நாம் இருந்துகொண்டு கர்த்தவ்யங்களை உபாயத்வ புத்தியின்றியே அநுஷ்டிக்க வேண்டியது ஆவச்யகமே;
ஆனால் நாம் நல்ல காரியங்களைச் செய்திருக்கிறோமாகையால் நமக்கு பகவத் விஷயீகாரம் விளைந்தே தீருமென்று
அதற்கு இதை ஸாதநமாக ப்ரதிபத்திபண்ணியிருக்க ப்ராப்தியில்லை.
“எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே” என்றே மஹான்கள்
அநுஸந்திப்பர்களாதலால் நிர்ஹேதுக க்ருபையினாலேயே எம்பெருமான் நம்மை விஷயீகரிக்கிறானென்று,
நாம் செய்துபோகும் நன்மைகள் ஒன்றுக்கு உபாயமாகையின்றியே ஸ்வயம் ப்ரயோஜந ரூபங்களென்றும் அறுதியிட்டிருக்க வேணும்.

ப்ரபத்தியை உபாயமாகச் சில ஸம்ப்ரதாயஸ்தர்கள் கொள்வது பிசகோ? எனின்; அன்று.
இவ்விடத்திலே ஸாரமாகச் சொல்லுயோம் கேண்மின்; –
கடலிலே வலைவீசி மீன் பிடித்து ஜீவிப்பானொரு செம்படவன் ஒருநாள் மீன்களிடையே விலையுயர்ந்த ரத்னமொன்று கிடைக்கப் பெற்றான்;
அதனுடைய மதிப்பை அவன் அறியமாட்டாதவனாதலால்.
மாமதியம் திளைக்குங் கொடி மாளிகை சூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெய்கெனச் சென்று முன்னில்
வளைக்கை நுளைப்பாவையர் மாறுமா போலே, அந்த ரத்னத்தைக் கொண்டுபோய் ஒரு வியாபாரியிடத்திலே
மிகக்குறைந்த விலை கூறி விற்றுவிட்டான். அந்த வியாபாரி, தான் ரத்னத்தின் மதிப்பு நன்குணர்ந்தவனாகையாலும்
(வியாபாரமே ஜீவிகையாகவுடையனாகையாலும் அவன் அதைக்கொண்டு போய் ஒரு மஹாராஜனிடத்திலே கிரமமாக
அதற்குள்ள விலைகூறி உயர்ந்த விலைக்கு விற்றுவிட்டான்.
பிறகு அந்த மஹாராஜன் அந்த ரத்நத்தைத் தான் விற்பனை செய்ய நினையாதே. அதனைப் பெரியதொரு ஹாரத்திலே
இணைத்து ஸ்வயம் போக்யமாக அமைத்துக் கொண்டான். ஆக இச் செய்தியில் ஒரு ரத்னத்துக்கே மூன்று தன்மைகள் உண்டாயின;

அற்ப விலைக்கு மாறுதல், உள்ள விலைக்கு மாறுதல், விலைக்கு ஆட்படாமல் ஸ்வயம் போக்யமாகக் கொள்ளப்படுதல்
என மூன்று வகைகள் ஒன்றுக்கே அதிகாரி பேதத்தால் கூடினாற்போலே,
நாம் செய்யும் ஸுக்ருதங்களுக்கும் இங்ஙனே மூன்று தன்மைகள் கூடும்; ரத்னத்தின் மதிப்பை அறியமாட்டாது
அதனை அற்பவிலைக்கு விற்ற செம்படவன் போல ப்ரபத்தியின் சீர்மையை அறியமாட்டாத சிற்றறிவாளர் (அதமாதிகாரிகள்)
ப்ரபத்தியைக் கொண்டு ஐச்வர்யகைவல்யாதி க்ஷûத்ர பலன்களைக் கொள்வர்.
ரத்னத்தைக் குறைந்த விலைக்குக் கொடாதே தகுந்த விலைக்குக் கொடுக்கும் வியாபாரியைப் போன்ற மத்யம அதிகாரிகள்
பரபத்தியை மோக்ஷஸாதநமாக அபிமானித்து க்ஷுத்ர பலன்களைக் கொள்ளாதே மோக்ஷபலனைக் கொள்வர்.
ரத்னத்தை ஒன்றுக்கும் ஸாதநமாக்காதே ஸ்வயம் போக்யமாகக் கொள்ளும் மஹாராஜனைப் போன்ற உத்தமாதிகாரிகள்
ப்ரபத்தியை ஒன்றுக்கும் ஸாதநமாகக் கோலாதே ஸ்வயம் புருஷார்த்தமாகக் கொண்டு வர்த்திப்பர்கள்.
மஹாராஜனுடைய நிலைமையை விரும்பாதே வியாபாரியின் நிலைமையை விரும்பி ப்ரபத்தியை ஸாதநமாகக் கொள்வார் அங்ஙனமே கொள்க.

“ரத்நம் தீவிரஹஸ்தலப்தமதமும் மூல்யம் ஸ்மாஸாதயேத் தத்ரத்நம் வணிஜோ வசம்வதமத ப்ராப்நோதி மூல்யம்
பஹு ஏத்யேதத் யதி ஸார்வபௌ மவசதாம். ப்ராப்ய ஸ்வயம் போக்யதாம் நித்யம் பூஷணதாமுபைதி,
ததயம்ந்யாய: ப்ரபத்தாவபி என்று ஸம்ப்ரதாய ஸித்தாஞ்சனத்திலே சொன்னேம்.

தோட்டம் சமைத்து மாம்பழம் பயிர் செய்வார்களில் அப்பழங்களை அரைகுறை விலைக்கும் அளவான விலைக்கும் விற்பாருமுண்டு;
விற்காதே ஸ்வபோகத்துக் குறுப்பாகக் கொள்ளுவாருமுண்டு.
ஒரு மாம்பழந்தானே ஒருவனுக்கு உபாயமாயும் ஒருத்தனுக்கு உபேயமாயும் ஆகாநின்றது.
உபாயமாகக் கொள்ளுமவனுடைய தாழ்வும் உயேமாகக் கொள்ளுமவனுடைய உயர்வும் உலகறிந்ததே.
அது போலே, நம்முடைய நற்கிரிசைகட்கு உபாயத் தன்மையும் உபேயத் தன்மையும் உண்டாயிருக்கச் செய்தே
உபேயத் தன்மையையே பாராட்டி உத்தமாதிகாரி கோஷ்டியில் புகாதே உபாயத் தன்மையைப்பாராட்டி
அதம கோஷ்டியில் புக நினைப்பாரை நாமேன் விலக்குவோம்?

இப்பாட்டில், முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி எங்ஙனேயென்னில்; சேதநன் ஸ்வஸ்ரூப பரஸ்வரூபங்களை
நன்கு தெரிந்துகொண்டு தானே நல்ல முயற்சிகளைச் செய்து அவை ஸாதநமாக எம்பெருமானைப்
பெற வேண்டுமென்று சொல்ல வேண்டியிருக்க அப்படி சொல்லாமல், தனக்கு ஸ்வரூபமளவில் அதனை விலக்காதவளவே
அமையுமென்று முன்னடிகளிற் சொல்லப்பட்டதே, இது பொருந்துமோ?
ஸாதநாநுஷ்டாநமில்லாமல் ஸாத்யம் கைபுகுமோ? என்று சங்கை உண்டாக,
த்ருஷ்டாந்த முகத்தாலே அந்த சங்கைக்குப் பரிஹாரங்கள்.
இப்பாசுரத்தின் அழகிய ஆழ்பொருள்களை இன்னமும் விரித்துரைக்க வேண்டியிருந்தும் விரிவுக்கு அஞ்சி நிற்கின்றோம்.

————————————————————————–

கீழ்ப்பாட்டிற் கூறியபடி உபாயோபேயங்களிரண்டும் தானேயாயிருக்கிற எம்பெருமானே. ஆச்ரயணீயன்;
அவனைத் தவிர்த்து மற்றையோரை ஆச்ரயித்தால் நம்மை அடிமைகொள்ள வல்ல சக்தி அவர்களுக்கில்லாமையாலும்,
ஆச்ரயணீயரென்று ஸாமாந்யர் பிரமிக்கக்கூடிய சில்லரைத் தெய்வங்களும் ஸ்ரீமந் நாராயணனை அடிபணிந்தே
தம்தம் குறைகளைத் தீர்த்துக்கொள்ளக் காண்கையாலும் அப்பரமபுருஷனே ஆச்ரயிக்கவுரியன் என்றாராயிற்று.

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆச்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாவர்?

முப்பத்து முக்கோடி தேவர்கட்குத் தலைவனான இந்திரனும், திருமாலினது திருநாபிக் கமலத்தை வாழிடமாகவுமுடைய பிரமனும்
நேராக நின்று கிட்டமாட்டாமையாலே சுற்றுப் பக்கங்களில் நின்றாகிலும் தம்முடைய அபிமாநம் நீங்கி எம்பெருமானை
ஆச்ரயிக்கும்படியைக் கூறுவன முன்னடிகள்.
பக்கங்களிலே நிற்கவாவது தைரியமுண்டாயிற்று இந்திரற்கும் பிரமற்கும் அவ்வளவும் தைரியமில்லாத சிவபிரான்
பின்புறத்திலே சென்று நின்றுகொண்டு யாசித்துத் தன் குறையை (ப்ரஹ்ம ஹத்யாசாப் நிவ்ருத்தி
முதலியவற்றை)த் தீர்த்துக்கொள்ளும்படியைக் கூறுவன பின்னடிகள்.

தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலை குறைந்துவந்து சரணமடைந்த சந்திரனை,
சிவபிரான் முடியின் மீது கொண்டு வரமளித்துப் பாதுகாத்ததனால் ஒற்றைப் பிறையணிந்த செஞ்சடையான் எனப்பட்டான்.

————————————————————————–

ஸ்ரீமந் நாராயணனே ஸர்வஸமாகரயணீயனென்று கீழ்ப்பாட்டிற் கூறியதை நிலைகாட்டுதற்காக
அப்பெருமான் தன்னை அழியு மாறியும் ஜகத் ரக்ஷணம் பண்ணுகிறபடியைப் பாருங்களென்கிறாரிதில்

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

பதவுரை

குறள்உரு ஆய்–வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம–பூமி முதலிய லோகங்களை
கொண்டத–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒருகாலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்

உலகத்தில் குள்ளனைக் கண்டால் கண்டவர்களும் ஏசிப் பேசுவது வழக்கம்; அப்படிப்பட்ட குள்ள வடிவைக் கொண்டான்
இந்திரன் குறையைத் தீர்ப்பதற்காக அன்றியும் உடல் ஒருபடியும் முகம் ஒருபடியுமாக வடிவெடுப்பதும் பரிஹாஸாஸ்பதம்;
அப்படிப்பட்ட வடிவையும் கொண்டான் மூவுலகங்களின் துயர் தொலைக்க.
அன்றியும் தன் காலிலேபட்ட வஸ்து அசுத்தமென்று அதை எவனும் உட்கொள்ளமாட்டான்;
எம்பெருமானோ வென்னில், த்ரிவிக்ரமாவதாரத்தில் தன்னடிக் கீழ்ப்பட்ட உலகங்களையே
(மற்றொரு கால் பிரளயங் கொள்ளாதபடி) உட்கொண்டான்.
ஆகவே இவ்வளவுஞ் செய்தது தன்னுடைமையைத் தான் நெருக்கிக் கொள்வதற்காகவே யாதலால்
இவனே ஸர்வ ஸ்வாமியென்பது திண்ணமன்றோ.

“வான்கடந்தான் செய்தவழக்கு” என்ற ஈற்றடிக்கு இருவகையாகக் கருத்தாகலாம்;
தன்னுடைய ரக்ஷகத்வத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிச்செய்த காரியங்களாகையாலே இவையெல்லாம்
நியாயமான காரியங்கள் என்பதாகவொரு கருத்து; இனி, வழக்கு என்றது எதிர்மறை இலக்கணையால் வழக்கல்ல என்றபடியாய்,
சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே உலகங்களை அளந்து கொள்வதும்,
உலகத்தில் எங்கும் என்றுங் கண்டறியாதவொரு விஜாதீயமான வடிவத்தையெடுத்து இரணியனைப் பிளந்தொழிப்பதும்;
தன் காலில்பட்டு அசுத்தமான வுலகத்தைத்தானே உட்கொள்ளுதலும் நியாயமல்லவே! என்றவாறாம்.
ப்ரேமத்தின் “கனத்தாலே” பக்தர்கள் இப்படி பரிஹாஸமுறையிலே பேசுவதும் பொருந்தும்.

வான் கடந்தான் = வானத்தை அளவிடிலும் அளவிட வொன்ணாத பெருமையை யுடையவனென்றும்
ஸ்வர்க்கத்தை யளந்தவனென்றும் பொருளாகலாம்.

————————————————————————–

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ணசிசுவாயிருந்த போது)
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

நந்தகோபார் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே ஒரு தொட்டிலில் தான் கண்வளரும்போது
கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அந்த வண்டியில் ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்ற போது
அதனையறிந்த தான் பாலுக்கு அழுகிற பாவனையிலே தான் சிறிய திருவடிகளை மேலேதூக்கி யுதைத்து
அச்சகடத்தை யொழித்தருளினது தன்னைத்தான் காப்பாற்றிக்கொடுத்து உலகத்தை வாழ்விக்கச் செய்த செயலாகிலும்,
ஸுகுமாரமான கைபடைத்த பிராட்டிமார்களும் தொட்டுப் பிடிக்கப் கூசும்படி அத்தனை ஸுகுமாரகவுள்ள திருவடியைக் கொண்டு
ஒரு முரட்டு வண்டியை உதைத்த விது மிகவும் தகுதியற்ற காரியமென்று தோற்றுவது மங்களாசாஸநபரர்களுக்கு ஸஹஜமாதலால்
‘வலிசகடம் செற்றது வழக்கன்று’ என்கிறார் முன்னடிகளில்.

கம்ஸனாலேவப்பட்ட அஸுரர்களில் ஒருவன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ் வரும்போது மேல்விழுந்து
கொல்லுவதாக எண்ணி வந்து நிற்க அதனையறிந்த கண்ணபிரான், அவ்வாறே தன்னை முட்டிக்கொல்லும் பொருட்டுக்
கன்றின் வடிவங்கொண்டு வந்த மற்றோரஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி
அவ்விளாமரத்தின்மேல் எறிய, கபித்தாஸுரனும் வத்ஸாஸுரனுமான இருவரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடனே
விழுந்து இறந்தனர் என்ற வரலாறு பின்னடிகளில் அறியத்தக்கது.
கடினப் பிரகிருதியான அஸுரனை அதிஸுகுமாரமான திருக்கையாலேபிடித்துச் சுழற்றியெறிந்த போது
அத்திருக்கைகள் எவ்வளவு öநாந்திருக்குமோ! என்று கொண்ட வயிற்றெரிச்சலால் வழக்கென்று நீ மதிக்கவேண்டா, என்றும்
‘பார்விளங்கத் தீமை செய்தாய்’ என்றும் பழி செய்தாய்’ என்றும் பேசினர்.

————————————————————————–

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்—20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்னராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).

இப்பாட்டுக்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு :
உபாயாந்தர நிஷ்டர்களெனப்படுகிற உபாஸகர்களை முன்னடிகளிலும்,
அநந்யோபாயரான ப்ரபந்தர்களைப் பின்னடிகளிலுங்குறிப்பதாகக்கொண்டு,
இவ்விருவகையதிகாரிகளும் எம்பெருமானையே உபேயமாகப் பெறுபவராதலால் வாழ்ச்சி பெற்றவராவர் என்பதாக ஒரு நிர்வாஹம்.

அன்றியே;
வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்துங் காரணங்கள் தாமுடையராகிப்
பழிபாவங் கையகற்றிப் பல்காலும் நின்னை வழிவாழ்வார் வாழ்வராம் – என்று ஒரே வாக்கியார்த்தமாக அந்வயித்து
ஒருவகை யதிகாரிகளைப் பற்றியே இப்பாசுரம் கூறுவதாக நிர்வஹிப்பதும் ஒரு புடையுண்டு.

தாங்கள் அறியாதிருக்கப் பிறர் ஏறிடும் அபகீர்த்தி பழியெனப்படும்;
தாங்களே புத்தியறிந்து செய்யும் பரஹிம்ஸை முதலியவை பாவமெனப்படும்;
இவ்விரண்டுக்கும் தங்களிடத்தில் அவகாசம் கொடாமல் : எப்போதும் பகவந்நாமங்களையே அநுஸந்தித்து
ஏத்திக் கொண்டிருக்கும்படியான ருசி விச்வாஸங்களையுடையவர்கள் வாழ்வார் என்றதாயிற்று.

மாதோ – அசை, இடைச்சொல்லுமாம். ஈற்றடியின் முதற்பதம் மோனையின் பத்திற்கிணங்க
‘தாரணங்கள்’ என்றிருக்கலா மென்றுகொண்ட பெரியவாச்சான் பிள்ளை அப்படியும் ஒரு பாடமருளிச் செய்கிறார்.
“தாரணங்கள் தாமுடையாரென்ற போது த்ருதியுடையாரென்றபடி.” என்பது வியாக்கியானம்.
‘தாரணம்’ என்ற வடசொல் திரிந்ததென்க. மனவுறுதியைச் சொன்னபடி
இனி ‘தாரணம்’ என்னும் வடசொல்லே வந்ததாகக் கொண்டால் உஜ்ஜீவநோபாயம் என்பது பொருளாம்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: