திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-21-25- -திவ்யார்த்த தீபிகை —

இத்திருத்தாண்டகம் மூன்று பத்தாக வகுக்கப்பட்டுள்ளது.
முதற்பத்துப் பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலே யிருந்து பேசினவை
அதற்குமேல் பத்துப் பாசுரங்களாகிய நடுவிற்பத்து, தாய்பாசுரமாகச் சென்றது.
இனி, இதுமுதலான பாசுரங்கள் தலைமகள் பாசுரமாகச் செல்கின்றன.

பகவத்கீதையில் (10-9) “மச்சித்தா மதகதப்பராணா; போதயந்த; ப்ரஸ்பரம், கதயந்தச் சமாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திச. “
(அதாவது, சித்தத்தை நமக்கென்றே பறிகொடுத்து அப்படியே நம்மைப்பிரிந்தால் தரிக்கமாட்டாமல் பிராணனையும்
நம்அதீனமாக்கி, தாம்தாம் அனுபவித்த நம்குணங்களை யெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு
அப்படியே நாம்செய்த திவ்யசேஷ்டிதங்களையும் எடுத்துப் பேசிக்கொண்டு ஆனந்திக்கிறார்கள்.)
என்றுள்ள ச்லோகத்தை இத்திருத்தாண்டகத்தின் மூன்றுபதிகங்கட்கும் வாக்கியார்த்தமாக நிர்வஹிப்பர் பட்டர்.
* மச்சித்தா; * என்றதற்குப் பொருந்தியிருக்கும் முதற்பதிகம்;
*மத்கதப்ராணா; * என்றதற்குப் பொருந்தியிருக்கும் நடுவிற்பதிகம்;
* போதயந்த; ப்ரஸ்பரம் * என்றதற்குப் பொருந்தியிருக்கும் கடைப்பதிகம்.
தம்முடைய ஞானத்திற்கு எம்பெருமானையே இலக்காக்கி ஜ்ஞாந ப்ரதாநரான வ்யாஸ பராசராதி மஹர்ஷிகளின்
ரீதியிலே பேசுகையாலே முதற்பத்து (மச்சித்தா;) என்றபடியாகிறது;
தன் மூச்சடங்கி வேற்று வாயாலே பேசினதாகையாலே நடுவிற் பத்து (மத்கதப்ராணா;) என்றபடியாகிறது.
தோழிமார்களுக்குச் செய்தியறிவித்தும் தோழிமார்களின் வார்த்தைகளைக் கேட்டும் தரித்துப் பேசின தாகையாலே
இப்பத்து (போதயந்த; பரஸ்பரம்) என்றபடியாகிறது.

“அதர்சநே தர்சநமாத்ரகாமா; த்ருஷ்ட்வா டரிஷ்வங்கரஸைகலோலா;,
ஆலிங்கிதாயாம் புநராயதாக்ஷயாம் ஆசாஸதே விக்ரஹயோரபேதம்“
(கண்ணாற் காணாதளவில் ஒருதடவை கண்ணாற் காணப்பெற்றால் அமையும் என்று காதலிப்பர்கள்;
அப்படியே காணப்பெற்றுவிட்டால் ஒருகால் அணைத்துக் கொள்ளவேணும் என்று காமுறுவர்;
அப்படியே அணைத்துக்கொள்ளவும் பெற்றால் ‘இரண்டு சரீரமாக இருப்பதேன்?
இரண்டுடலும் ஓருடலாக ஒற்றுமைப்பட்டாலாகாதோ? என்று அபேதத்தை விரும்பிப் போருவர்கள்.) என்றொரு ஸுபாஷிதமுண்டு.
இதுவும் அடைவே மூன்று பத்துக்கும் வாக்கியார்த்தமாக அமையும். எங்ஙனேயென்னில்,
முதற்பத்தில் “எங்குற்ற யெம்பெருமானுன்னை நாடி ஏழையேனிங்ஙனமே யுழிதருகேனே“ என்று
அவனைக் காணவேணுமென்னுமாசை கிளர்ந்திருக்கின்றமை தோற்றச் சொல்லுகையாலே
* அதர்சநே தர்சநமாத்ர காமா; * என்றபடியாகிறது.
இரண்டாம் பத்தில் “முற்றாராவனமுலையாள்பாவை, மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாளஃதுங்கண்டு மற்றாள்“ என்று
நாச்சியாரைப்போலே தானுந் திருமார்பிலே அணைய வாசைப்பட்டமை தோற்றச் சொல்லுகையாலே
* த்ருஷ்ட்வா பரிஷ்வங்கரஸைகலோலா; * என்றபடியாகிறது.
இனி‘ இப்பத்தில் “கள்ளூரும் பைந்துழாய்மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்டபோது,
புள்ளூரும்கள்வா! நீ போகாமைவல்லேனாய்ப் புலவியெய்தி என்னில் அங்கமெல்லாம் வந்தின்பமெய்த
எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே“ என்றும் சொல்லுகையாலே * ஆசாஸதே விக்ரஹயோரபேதம் * என்றபடியாகிறது.

‘காந்தர்வவிவாஹ மென்னப்படுகிற இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தாள் பெண்பிள்ளை‘ என்று கேள்விப்பட்ட திருத்தாயார்
‘நங்காய்! நங்குடிக்கிதுவோ நன்மை‘ என்று சீற,
மகளானவள் ‘அன்னை என்னோக்குமென் றஞ்சுகின்றேன்‘ என்கிறபடியே பயப்பட்டுத் தலைமகன் பக்கலில் செல்லாதிருக்க,
அவனும் என்னோவென்று சங்கைகொண்டவனாய் இவள்பக்கலிலே நேரேவரக்கூசி
இவளது அபிப்பிராயமறியவேணுமென்று பார்த்து, பிறரைத் தூதுவிடுவதிற்காட்டில் தானே
ஒரு வியாஜமாகவந்து கருத்தறிதல் நன்றென்று நினைத்து,
‘தலைவியானவள் ஊரைச் சூழ்ந்ததொரு பூந்தோப்பிலே பூக் கொய்யப் புறப்பட்டுப் போகிறா ளென்று கேள்விப்பட்டு,
தான் வேட்டையாடிவருவானாக எடுத்துக்கட்டின குழற்கற்றையும் பிடரியிலே தழைந்தலைகிற மயிரும்
இறுக்கின சாணமும் கட்டின கச்சும் வலத்தோளிலிட்ட மெத்தையும் பெருவிரலிலே பூட்டின சரடும்
இடக்கையிலே நடுக்கோத்துப் பிடித்த வில்லும் வலக்கையிலே இறுக்கின அம்பும் முதுகிலேகட்டின அம்பறாத்தூணியுமாய்க்
கொண்டு அந்தப் பூந்தோப்பில்தானே சென்றுசேர,
தலைமகளுடன்கூட இருந்ததோழி தானும் ஒருவியாஜத்தாலே பேரநிற்க, தைவயோகத்தாலே
நாயக நாயகிகளுக்குக் கலவி கூடிற்றாய்,
நாயகனும் “புனலரங்க மூரென்று போயினாரே“ என்கிறபடியே வெளிப்பட்டுச் செல்ல
அவ்வளவிலே உயிர்த்தோழியானவள் வந்தணுகி ‘நங்காய்! தலைவன் வந்தபடியென்? செய்தபடியென்?“ என்று கேட்க,
தலைவி தோழிக்கு வ்ருத்தகீர்த்தநம்பண்ணுகிற பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

கீழ்ப்பாட்டில், தாயானவள் தான்சொன்ன ஹிதத்தை மகள் கேளாதவளானபடி யாலே
இனி இவளை அடக்கியாளுகை முடியாத காரியமென்று நிச்சயித்துப்
‘பேராளன் பேரோதும் பெண்ணைமண்மேற் பெருந்தவத்தளென்றல்லாற் பேசலாமே“ என்று கொண்டாடி உதாஸீநையானாள்;
‘தலைவிக்கு இங்ஙனம் ஆற்றாமை மீதூர்ந்தது நம் க்ருஷி பலித்த படியன்றோ என்று நினைத்து மகிழ்ந்து
எம்பெருமானும் உதாஸீநனாய் நின்றான்;
இந்த நிலைமையிலே நாமும் உதாஸீநித்திருந்தால் இவளை இழந்தோமாகவேணு மத்தனையென்று எண்ணின உயிர்த்தோழி,
கீழ்நடந்த கலவியை நினைப்பூட்டினால் அது கண்டு இவள் ஒருவாறு தரித்திருக்கக் கூடுமென்று பார்த்து
‘அவன் வந்தபடி என்? உன்னோடு கலந்தபடி என்? பின்பு பிரிகிறபோது உனக்குத் தேறுதலாகச்
சொல்லிப் போன வார்த்தை ஏதேனுமுண்டோ? சொல்லிக்காணாய்‘ என்ன, அவற்றைத் தோழிக்குச் சொல்லுகிறாள்.

அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டுவைத்து, கைப்பட்ட பொருளைக் கடலிலே வீசியெறிந்தாற்போலே,
ஏதோவேறாக நினைத்து அஞ்சி இழந்தோமோ தோழீ! என்கிறாள்.

“இப்பாட்டு, சக்ரவர்த்தி திருமகன் தலைமகனாய் ஸ்ரீஜநகராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவ்ருத்தமாகிறது“
என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது.
ஆழ்வார்தாம் ஸ்ரீஜநகராஜன் திருமகளான நிலைமையிலே நின்று பேசுகிறாரென்றவாறு.

மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.

பதவுரை

மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ-கறுத்தநிறமுடைத்தாய் மணம் மிக்கதாய்
அலகல காயிருந்துள்ள திருக்குழற் கற்றையானது பின்னே அலையவும்
இரு பாடு-இருபுறத்திலும்
மகரம் சேர் குழை–மகரகுண்டலங்கள்
இலங்கி ஆட-அசைந்து விளங்கவும்
எய் வண்ணம் வெம்சிலையே துணை ஆ–ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்வியவில்லையே துணையாகக் கொண்டு
இங்கே-இந்தத் திருமணங்கொல்லையிலே
இருவர் ஆய் வந்தார்-(தாமும் இளைய பெருமாளுமாக) இருவராய் வந்து என்னெதிரே நின்றார்;
(அவருடைய)
கை-திருக்கைகள்
தாமரை வண்ணம்-செந்தாமரைப் பூப்போலு மழகுடையன;
வாய்–திருப்பவளமும்
கமலம் போலும்–தாமரையொக்கும்;
கண் இணையும்–திருக்கண்களும்
அரவிந்தம்–அத்தாமரையே
அடியும்-திருவடிகளும்
அஃதே-அந்நத் தாமரையே;
அவ்வண்ணத்தவர்-அப்படிப்பட்ட அழகு வாய்ந்த அவருடைய
நிலைமை-நிலைமையை
கண்டும்-கண்டுவைத்தும்
தோழீ-தோழியே!
அவரை-அவரைக் குறித்து
தேவர் என்று அஞ்சினோம்- பரதேவதையென்கிற பிரதிபத்தியாலே பயப்பட்டோமே!

மைவண்ணநறுங்குஞ்சிக்குழல் பின்தாழ =
திருக்குழலுக்குக் கருநிறம் இயற்கையாயிருக்க மைவண்ணம் என்று எடுத்துச் சொல்லுவானேன்? என்னில்;
* கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின், உட்கொண்ட நீல நன்னூல் தழை கொல்; * என்று சங்கித்து
“அன்று மாயன்குழல்“ என்ன வேண்டும்படி
விலக்ஷணமான கருநிறங்கொண்டதாதல் பற்றி மைவண்ணமென்று சிறப்பித்துக் கூறப்பட்டது.
திருக்குழலைக் கண்ட கண்ணனுக்கு அவனுடைய திருமேனி நிறம் ஸ்படிக வர்ணம் என்னத் தக்கதாயிருக்கும் போலும்.

வண்ணத்தின் சிறப்புமாத்திரமேயோ? பரிமளமும் விலக்ஷணமாயிருக்கிறபடி காண்.
தாபத்ரயத்தினால் தபிக்கப்பட்டவரோடு விரஹ தாபத்தினால் தபிக்கப்பட்டவரோடு வாசியற
அனைவர்க்கும் சிரமம் தீர்க்கவல்லதான திருக்குழற் பரிமளத்தை என் சொல்லுவேன்!.

நிறமும் மணமுமேயோ ஆகர்ஷகமாயிருக்கிறன;
திரள்திரளாகக் குழன்றிருக்கை யன்றியே அலகலகாகப்பிரிந்து சுருண்டிருக்கும் பரிசுதான் சொல்லத் தரமோ?
ஆக இப்படிப்பட்ட திருக்குழற்கற்றை பின் பிடரியிலே அசைந்தலையவும்.

இவள் பின்புறத்தே காண் ப்ரஸக்தி என்னென்னில்;
பெருக்காறு பெரு வெள்ளமாக ப்ரவஹிக்கப் புக்கால் அதனை எதிர்நோக்க முடியாதாப்போலே
இவளுடைய ஸௌந்தர்ய ஸாகாதரங்களைக் கண்டு நேர் முகம் பார்க்கமாட்டாமையாலே முகத்தைத் திருப்பினார்,
அச்சமயத்தில் கண்டாளென்ப.

மகரஞ்சேர்குழை யிருபாடிலங்கியாட =
மைவண்ண நறுங்குஞ்சிக் குழற்கற்றையின் இருட்சியாலே கண்கள் இருண்டு திருமுகம் தோற்றாதிருக்க,
அவ் வளவிலே இரண்டு சந்திரர்கள் உதித்தாற்போலே காண் திருமகரக் குழைகளிருந்தபடி.
இலங்கையில் திருவடி பிராட்டியைத் தேடுகிற ஸமயத்திலே சந்திரோதயம் உதவினாப்போலே,
திருக்குழலாலே இருண்ட திருமுகத்திற்கு இம் மகரக்குழைகள் பிரகாசமாக வாய்த்தன வென்க.
‘திருமகரக்குழைகள் திருக்குழலுக்கு ஆபரணமாயிருக்கிறதோ,
திருக்குழல்தான் திருமகரக்குழைகட்கு ஆபரணமா யிருக்கிறதோ‘ வென்று விகல்பிக்கலாம்படியாக
விளங்குகை இலங்கி என்பதன் பொருள்.

‘ஆட‘ என்றதற்கு மூன்று வகையாக அருளிச்செய்வர்;
‘ஆட இருவராய் வந்தார்‘ என்று அந்வயித்தால்,
ஒரு கடல் அசைந்து வந்தாற்போலே காண் வருகிற போது இரண்டருகும் திருமகரக் குழைகள் அசைய வந்தபடி என்கிறாளென்க.
‘ஆட என் முன்னே நின்றார்‘ என்று அந்வயித்தால்
அபிமத விஷயத்தைக் கண்டால் முகத்திலே சில அசைவுகளுண்டாகுமே; அதைச் சொன்னபடி யென்க.
நஞ்சீயர் அருளிச்செய்வதாவது-‘முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவதாக எத்தனை ஆடல்கள் செய்தான்
இவளுடைய பெண்மையை அழிக்கைக்காக!‘ என்றாம்.

கூட வந்த பேர் ஆரேனுமுண்டோ?‘ என்ன.
எய்வண்ணவெஞ்சிலையே துணையா என்கிறாள்.
கையில் வில்லே துணையாக வந்தாரென்க.
வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தவராகையாலே முன்பு நம்மைச் சேர விட்டது இந்த வில்லையன்றோ வென்று
நன்றி பாராட்டி அதனைத் துணை கொண்டு வந்தா ர்போலும்.
‘வெஞ்சிலையே துணையா‘ என்ற தனால் ஸம்ச்லேக்ஷிக்கைக்கு ஏகாந்தமாம் படி வந்தார் என்பது தோன்றும்.
யாரேனுங் கண்டு ‘இங்கு வந்ததென்?‘ என்றால் ‘வேட்டையாட வந்தோம்‘ என்று மறுமொழி சொல்லப் பாங்காக வில்லெடுத்துவந்தபடி.

‘இங்கே வந்தார்‘ என்று திருமணங்கொல்லையைக் காட்டுகிறாள்.
நான் நிதிகண்டெடுத்தவிடம் இது காண்! என்கிறாள்.
“கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொண்டு கிடக்கலாம்படிகாண் இலச்சினை பட நடந்த
அடிச்சுவடிருந்தபடி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்.

“எய்வண்ண வெஞ்சிலையே துணையா“ என்று சொல்லிவைத்து
‘இருவராய் வந்தார்‘ என்கை அஸங்கதமன்றோ வென்னில்;
வில் போலவே இளைய பெருமாளும் விசேஷண பூதராகையாலே ஒருவரென்னவுங் குறையில்லை.
இதுவொரு விசிஷ்டாத்வைதம்.
இளைய பெருமாளைச் சொல்லுமிடத்து “ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” (இராமபிரானது வலக்கை லக்ஷ்மணன்) என்றது காண்க.
கையும் வில்லுமாய் வந்தா ரென்றவாறு.

அப்படியாகில் இருவராய் வந்தார் என்னவேணுமோ? வேற்றுமை தோற்ற சொல்லுவானென்? என்னில்;
அணைக்குந்தோளோடே வந்தார்‘ என்று சொன்னால் வேற்றுமை தோற்றச் சொன்னதாக மாட்டாதாப் போலே இதனையுங்கொள்க.
ஸம்ச்லேஷிக்கை வருகிறவன் படுக்கையோடே வருகை மிகையன்றே.
(இளைய பெருமாள் படுக்கையோ வென்னில்; * சென்றாற்குடையா மெனப்பட்ட ஆதிசேஷனேயிறே லக்ஷ்மணனாக வந்து பிறந்தது.)

இனி, “இருவராய்வந்தார்“ என்பதற்கு
தெய்வத்தன்மையும் மானிடத் தன்மையும் கலசி வந்தார் என்றும் பொருளுரைப்பர்.
சேஷத்வமும் சேஷித்வமுமாகிற இரண்டு படியுங் கலசிவந்தார் என்று முரைப்பர்.-
“தம்முடைய காலை என்தலையிலே வைக்கக் கடவதாக வந்து என்காலைத் தம் தலையிலே வைத்துக் கொண்டாரென்கிறாள்.
பரணிக்ரஹணம் பண்ணும் போது சேஷியாயிருக்கையும்
படுக்கையிலே முறைகெடப் பரிமாறுகையுமாயிறே யிருப்பது.
வகுத்த ஸ்வாமியாகவும் வேணும்;
ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம: ஆகவும் வேணுமிறே“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் போக்யமாக அநுஸந்திக்கத் தக்கன.

இருவராய் வந்தார் =
இருவராம்படியாக வந்தார்; (தாமும் நாமுமேயாம்படியாக வந்தார் என்றவாறு.) என்றும் உரைத்தருளினர்.
ஆய் என்பதற்கு ‘ஆம்படி‘ என்று பொருள்படுவது சிரமமாயினும்,
அர்த்தத்தின் சீர்மையைப் பற்ற இங்ஙனே உரைக்கக் குறையில்லை யென்ப.

‘இருவராவந்தார்‘ எனப் பாடமிருந்தால்
முந்தின பொருள்களும் இப்பொருளும் செவ்வனே கொள்ளக் கிடக்குமென்று கூறுவாருமுளர்.
“சப்தத்தை நியமித்து“ என்று வியாக்கியான மிருக்கும்போது வேறுபாடங் கற்பிக்க அதிகாரமுடையோ மல்லோம்.

தாமிருக்குமிடத்திலே நாம் மடலெடுத்துச் சென்று கிட்ட வேண்டும் படியாயிருக்க,
நாமிருந்த விடத்தேற அவர் வந்தார் காண்! என்ற அற்புதந்தோன்ற, வந்தார் என்கிறாள்.
அவர் வரும்போது நடந்த நடையழகை நீ காணப் பெற்றிலையே தோழீ! என்பதும் இச்சொல்லில் உள்ளூறை.

வந்தார் என் முன்னே நின்றார் =
மிக்க பரபரப்போடே வந்தவர் கடல் கண்டு தியங்கினாற் போலே என்னைக் கண்டு
மேல் அடியிடமாட்டாதே தியங்கி முன்னே நின்றார். மேல் போக்கிட மில்லாமையாலே நின்றார்.
‘வந்தார்‘ என்றது முற்றெச்சம்; வந்து என்றபடி.

இனிமேல், அவருடைய ஸௌந்தர்ய ஸாகரத்தில்தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள்
கைவண்ணந்தாமரை யென்று தொடங்கி
திருவடி தொடங்கித் திருமுடி யீறாகச் சொல்லுதல்,
திருமுடி தொடங்கித் திருவடியீறாகச் சொல்லுதலாகிற முறைமைகளை அடைவு இதுவாகையாலே.
முதலிலே, தன்னை மேல்விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள்;
கையைப் பிடித்த பின் ‘இதுவொரு வடிவழகிருந்தபடி என்!, இதுவொரு முலையழகிருந்தபடி என்!,
இதுவொரு கண்ணழகிருந்தபடி என்!‘ என்று இன் சொல்லுச் சொன்ன திருவாயை அதற்குப் பின்னே சொல்லுகிறாள்.
இன்சொல்லுச் சொல்லத் தொடங்கி முற்ற முடியச் சொல்லித் தலைக்கட்ட மாட்டாமல்
உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து வக்தவ்ய சேஷத்தைக் கண்ணாலே சொல்லித் தலைக் கட்டுகையாலே
அதற்குப் பின் கண்ணைச் சொல்லுகிறாள்.
அக் கண்ணழகுக்குத் தோற்றுத் தான் திருவடியிலே விழுந்தமை தோற்ற அதற்குப்பின்னே அடியைச் சொல்லுகிறாள்.

கீழ்ப் பதினெட்டாம்பாட்டில்
“கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமலவண்ணம்“ என்று உபமேயமான அவயவங்களை யெல்லாம்
ஒரு சேரச் சொல்லி முடிவில் உபமாந வஸ்துவைச் சொன்னது போல இங்கும் சொல்லலாமா யிருக்க,
‘கைவண்ணம் தாமரை, வாய் கமலம் போலும், கண்ணினையும் அரவிந்தம்‘ என்றிப்படி
ஒரு உபமாநவஸ் துவையிட்டே பல வாக்கியங்களாகப் பேசுவானேன்? என்னில்;
இதில் ஒரு விலக்ஷணமான போக்யதையுண்டு என்று சொல்லலாமத்தனை.

கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத்தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும்
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு.
உபமாந வ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு
(தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல்
வாக்ய பேதம் பண்ணுதலும்
அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை.

“அடியும் அஃதே“ என்றதில் உபேக்ஷ தோற்றும்;
‘எம்பெருமானது திவ்யாவயவங்களுக்கு இத்தாமரை ஏற்ற உவமையன்று;
ஆயினும் ஏதேனுமொரு உவமையை யிட்டுப் பேசி அநுபவிக்க வேண்டியிருப்பதால்
அதற்காகச் சொன்னபடி‘ என்பது இதில் தொனிக்கும்.

இங்ஙனே தலைமகள் சொல்லக் கேட்ட தோழியானவள்
‘நங்காய்! அவர் வந்த வரவை நீ சொல்ல நான் கேட்டாற்போ லிருக்கையன்றியே
நானே நேரில் ஸாக்ஷாத்கரிப்பது போலிராநின்றதே நீ பேசுகிற பேச்சின் வாய்ப்பு! என்று சொல்ல;
தோழீ! அவர் வந்த வரவின் வீறுபாட்டையும் அவரது அவயவங்கள் பொலிந்த பொலிவையும் நான் என்னென்று சொல்லுவேன்?
அவ்வண்ணத்தவர் என்று சொல்லலாமத்தனை யென்கிறாள்.
நீ கேட்கையாலே உனக்கொரு உவமையை யிட்டுச் சொல்லலாம்படி யன்று காண் அவர் வடிவருவிந்தபடி;
‘அப்படிப்பட்ட வடிவுடையவர்‘ என்று இரண்டுகையுந் தூக்கிச் சொல்ல வேணும் காண் என்கிறாள்.

அவ்வண்ணத்தவர்நிலைமை கண்டுந்தோழீ! அவரைநாம் தேவரென்று அஞ்சினோமே =
அவருடைய வடிவழகிருந்தபடியையும் அவருடைய சீலமிருந்தபடியையும் கண்டுவைத்தும்
“அம்மானாழிப்பிரா னவனெவ்விடத்தான் யானார்“ என்றாற்போலே மயங்கி அஞ்சி இழந்தேனே யென்கிறாள்.
அவருடைய ஸௌசீல்ய ஸௌலப்யங்களைக் கண்டு அஞ்சாதே கூசாதே கலந்து பரிமாறலாயிருக்க,
அந்தோ! * ஒன்றுந்தேவு முலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று நான்முகன் றன்னோடு
தேவருலகோ டுயிர்படைத்த பெருமானன்றோ இவர்!
நரநாரணனா யுலகத் தறநூல் சிங்காமை விரித்த பெருமானன்றோ இவர்! என்றாற்போலே பரத்வத்தையே நினைத்துப்
பாவியேன் இறாய்த்து இழந்தொழிந்தேனே என்கிறாள்.
ஸம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமாகிப் பின்பு விச்லேஷம் நிகழ்ந்தபடியைத் தெரிவிக்கிற புடை இது என்க.

“ஆத்மாநம் மாநுஷம் மந்யே என்னுமவர் நினைவைவிட்டு
பவாந் நாராயணேதேவ: என்னும் வழிப் போக்கர் வார்த்தையைப் பற்றிக் கெட்டாமே! என்கிறாள்.
தன்னோடு ஸுகதுக்கங்கள் ஒத்தவளான தோழியையுங் கூட்டி நாம் என்கிறாள்.“

இப்பாசுரத்தின் ஈற்றடியின் விசேஷார்த்தங்களைப் பன்னியுரைக்குங்காற் பாரதமாம்‘
பூருவர்களின் வியாக்கியானங்களிற் கண்டு அநுபவித்துக் களிக்க.

இது முதல் தலை மகள் பாசுரமாக செல்லுகிறது –
மத் சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திச-கீதை -10-9-
முதல் பத்து -மத் சித்தா -ஞானத்துக்கு எம்பெருமானை இலக்காக்கி
வியாச பரசராதி மக ருஷிகளின் ரீதியிலே பேசுவது
நடுவில் பத்து -மத் கத பிராணா -தம்மூச்சு அடங்கி வேற்று வாயாலே பேசினது ஆகையாலே
இந்த பத்து -போதயந்த பரஸ்பரம் -தோழி மார்களுக்கு அறிவித்தும் அவர்கள் வார்த்தைகளை கேட்டும்
தரித்து பேசும் பதிகம்

அதர்சனே தர்சன மாத்ர காமா
த்ருஷ்ட்வா பரிஷ்வங்க ரசைகலோலா
ஆலிங்கதாயாம் புநராய தாஷ்யாம் ஆசசாதே விக்ரஹ யோரபேதம் -ஸூ பாஷித ஸ்லோஹம்
கண்ணால் காணாத அளவில் -ஒரு தடவை காணப் பெற்றால் அமையும் என்பார்கள்
அப்படிக் காணப் பெற்றால் அணைத்துக் கொள்ள ஆசைப் படுவார்கள்
அணைத்துக் கொள்ளப் பெற்றதும் இரு உடல் ஒன்றாக கூடாதோ என்று காமுறுவர்

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே யுழி தருகேனே -ஆசை கிளர்ந்து -முதல் பத்து

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய் யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டு அற்றாள்-என்று
பிராட்டி போலே தானும் அணைய ஆசைப்பட்டமை -இரண்டாம் பத்து

கள்ளூறும் பைந்துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன்
கண்ட போது புள்ளூரும் கள்வா நீ போகேல் என்பன் – என்றும்
என் தன் பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்
புலவி எய்தி என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -மூன்றாம் பத்து

தலைவி பூ கொய்ய புறப்பட்டதை கேள்விப் பட்டு
வேட்டையாடும் வ்யாஜத்திலே அவனே
எடுத்துக் கட்டின குழல் கற்றையும்
பிடரியிலே தழைந்து அலைகிற மயிரும்
இருக்கின சாணமும்
கட்டின கச்சும்
வலத் தோளில் இட்ட மெத்தையும்
பெரு விரலிலே பூட்டின சரடும்
இடக்கையிலே நடுக்கோத்து பிடித்த வில்லும்
வலக்கையிலே இறுக்கின அம்பும்
முதுகிலே கட்டின அம்புறா துணியுமாய்
கொண்டு அந்த பூம் தோப்பிலே தானே சேர
தோழியும் ஒரு வ்யாஜத்தாலே பேர நிற்க
தெய்வ யோகத்தாலே கலவி கூடிற்றாய்
நாயகனும்
புனல் அரங்கம் என்று போயினாரே -என்கிற படி வெளிப்பட்டு செல்ல
அவ்வளவில் தோழி தலைவன் வந்த படி என்
செய்தபடி என்-என்று கேட்க
தலைவி தோழிக்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகிற பாசுரமாய் செல்லுகிறது இப்பாசுரம்

அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டு வைத்து
கைப்பட்ட பொருளை கடலிலே வீசி எறிந்தால் போலே
வேறாக நினைந்து அஞ்சி இழந்தோமே
இப்பாட்டு சக்கரவர்த்தி திருமகன் தலைமகனாய்
ஸ்ரீ ஜனகராஜன் திரு மகள் தலை மகளாய் பிரவ்ருத்தம் ஆகிறது

மைவண்ண நறும் குஞ்சி சுழல் பின் தாள
கொள்கின்ற கோளிருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உட்கொண்ட நீல நன்னூல் தழை கொள் -என்று சங்கித்து
அன்று மாயன் குழல் -என்ன வேண்டும்படி விலஷணமான
கரு நிறம் கொண்ட குழல்
பரிமளமும் விலஷணம்
கண்டவர் தாப த்ரயங்கள் ஆறும் படி
நிறமும் மணமுமேயோ
திரள் திரளாக குழன்று இருக்கை அன்றிக்கே அலகு அலகாக பிரிந்து சுருண்டு இருக்கும் பரிசு சொல்லத் தரமோ
பின் புடரியிலே அசைந்து அசைந்து அலைய கண்டாள்
இவளுடைய சௌந்தர்ய சாகர தரங்களை நேர்ந்கொண்டு நேர் பார்க்க மாட்டாமல் திரு முகத்தை திருப்ப
அப்பொழுது கண்டாள்

மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
சந்த்ரர்கள் உதித்தால் போலே
திருக் குழல் திரு மகர குழைகள் ஆபரணமா
அன்றி
திரு மகர குழைகள் திருக் குழலுக்கு ஆபரணமா -என்பதால் இலங்கி –
ஆட
மூன்றுவகை
ஆட இருவராய் வந்தார் -கடல் அசைந்து வந்தால் போல் இரண்டு அருகும் மகர குழைகள் அசைந்து
ஆட என் முன்னே வந்தார் -அபிமத விஷயம் கண்டால் முகத்திலே அசைவுகள் உண்டாகுமே -அதைச் சொன்னபடி
நஞ்சீயர் நிர்வாஹம் -முன்பைக் காட்டுவது பின்பை காட்டுவது-எத்தனை ஆடல்கள் செய்தான் இவளுடைய பெண்மையை அழிக்கைக்காக

எய் வண்ண வெஞ்சிலையே துணையா வந்தார்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்ததால் –
நம்மை முன்பு சேர விட்டது வில்லே அன்றோ -நன்றி பாராட்டி -கொண்டு வந்தார்
வெஞ்சிலையே துணையா -சம்ச்லேஷிக்கைக்கு ஏகாந்தமாக வந்தார்
வேட்டை யாட வந்தோம் என்று கண்டார் வினவ மறுமொழி சொல்ல பாங்காக வந்தார்

இங்கே வந்தார்
திரு மணம் கொல்லையை காட்டுகிறாள்
நான் நிதி கண்டு எடுத்த இடம் இது காண்
கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொண்டு கிடக்கலாம் படி காண் இலச்சினை பட நடந்த அடிச் சுவடு

இருவராய் வந்தார்
இளைய பெருமாளும் வில் போலவே விசேஷண பூதர்
இது ஒரு விசிஷ்டாத்வைதம்
ராமஸ்ய தஷிணோ பாஹூ
வேற்றுமை தோன்ற சொல்லுவான் என்னில் அணைக்கும் தோள் உடன் வந்தார்
சம்ச்லேஷம் பண்ண படுக்கை உடன் வந்தார்

இருவராய் வந்தார்
தெய்வத் தன்மையும் மானிடத் தன்மையும் கலசி வந்தார்

சேஷத்வமும் சேஷித்வமும்-இரண்டு படியும் கலசி வந்தார்
தம்முடைய காலை என் தலையிலே வைக்கக் கடவதாக வந்து என் காலை தம் தலையிலே வைத்து கொண்டார்
பாணி க்ரஹணம் பண்ணும் போது சேஷியாய் இருக்கையும்
படுக்கையிலே முறைகெட பரிமாறுகையும்
வகுத்த ஸ்வாமியாகவும் வேணும் -ந சாஸ்திரம் நைவ ச க்ரம

இருவராம் படியாக வந்தார்
தாமும் நாமுமே யாம்படி வந்தார் -ஆய் -ஆம்படி –

வந்தார்
நாம் மடல் எடுத்து சென்று கிட்ட வேண்டி இருக்க நாம் இருந்த இடத்தே அவர் வந்தார் காண்
வரும் போது நடை அழகை நீ காணப் பெற்றிலை காண்-

வந்தார் என் முன்னே நின்றார்
பர பரப்புடன் வந்தவர் கடல் கண்டு தயங்கினால் போலே என்னைக் கண்டு மேல் அடி இட மாட்டாதே தயங்கி முன்னே நின்றார்
வேறு போக்கிடம் இன்றி நின்றார் -வந்தார் முற்று எச்சம்

கை வண்ணம் தாமரை
அனுபவித்த அடைவிலே சொல்லுகிறாள்
முதலிலே தன்னை மேல் விழுந்து பாணிக் க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள்

இது ஒரு அழகு இருந்தபடி என் –முலை அழகு இருந்த படி என் –வாய் அழகு இருந்தபடி என்
இன் சொல்லு சொன்ன திரு வாயைச் சொல்லுகிறாள்

முற்ற முடிய சொல்லித் தலைக் கட்ட முடியாமல் உள் எலாம் உருகி -வக்தவ்ய சேஷத்தை –
கண்ணாலே தலைக் கட்டுவதால் கண்ணை சொல்கிறாள்

கண் அழகுக்கு தோற்று திருவடியில் விழுந்தமை தோற்ற அடியை சொல்லுகிறாள்

கீழ் 18 பாட்டில் கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் அம் கமல வண்ணம் போல்
உபமேய அவயவங்களை ஒரு சேரச் சொல்லி உபமான வஸ்துவை ஒரு தடவை சொல்வது போல் அன்றி
உபமான வஸ்துவை பல காலும் சொல்லுவது
விலஷணமான போக்யதை உண்டு என்று காட்ட
கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம்

அடியும் அக்தே-திவ்ய அவயவங்களுக்கு தாமரை ஏற்ற உவமை அன்று -உபேஷை தோற்ற அருளுகிறாள்-

அவ் வண்ணத்தவர்
வரவின் வீறுபாட்டையும் அவயவங்களின் பொலிவையும் அப்படிப் பட்ட என்று இரண்டு கையையும் தூக்கி
உனக்காக ஒரு திருஷ்டாந்தம் இட்டு சொன்னேன் -என்று சொல்ல

நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
அழகையும் சீலத்தையும் கண்டு வைத்தும்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்
சௌலப்யம் சௌசீல்யம் கண்டு அஞ்சாதே கூசாதே பரிமாறலாய் இருக்க அந்தோ
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்த பெருமான் அன்றோ -என்றும்
நர நாரணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்த பெருமான் அன்றோ
இறாய்த்து இழந்து ஒழிந்தேன்
சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாகி பின்பு விச்லேஷம் நிகழ்ந்த படி

ஆத்மானம் மானுஷம் மன்யே -என்னும் அவர் நினைவை விட்டு
பவான் நாராயணா தேவதா -என்ற வழிப் போக்கர் வார்த்தையை பற்றிக் கேட்டோமே

நாம் -தோழியையும் சேர்த்து -தன்னோடு சுக துக்கங்களில் ஒத்தவர் –

——————————————————————

கீழ்ப்பாட்டில் ‘அவரை நாம் தேரரென்றஞ்சினோமே‘ என்று ப்ரமத்தாலே தான் இறாய்த்தமை சொன்னாள்;
அதைக்கேட்ட தோழியானவள் ‘நங்காய்! நீ இறாய்த்து அகன்றாயாகில் அவர் உன்னோடு கலந்தபடி என்?‘ என்று கேட்க,
‘அவர் என்னை வசப்படுத்திக் கொண்டபடியும் என்னோடு கலந்தபடியும் இது காண்‘ என்கிறாள் இப்பாட்டில்.

அவர் தம்முடைய விலக்ஷணமான வடிவழகையும் சீலத்தையும் காட்டின விடத்திலும்,
அவரைத் தேவரென்றஞ்சி இறாய்த்தபடியாலே
‘இனி நாம் வந்தவழியே திரும்பிப் போகவேண்டு மத்தனையன்றோ‘ என்று நினைத்தார்; கால் பெயர மாட்டிற்றில்லை;
சேஷவஸ்து கைப்படுவது சேஷியானவனுக்குப் பரம லாப மேயன்றொ:
வடிவழகைக் காட்டுவதும் சீலத்தைக் காட்டுவதும் எதற்காக? கைப்படாத வஸ்துவைக் கைப்படுத்துகைக்காக வன்றோ?
தாம் உத்தேசித்து வந்த விஷயம் இங்குக் கைபுகுந்ததில்லை-எவ் வகையினாலேனும் வசீகரித்தாக வேணுமே,
அதற்கு வழி யென்ன? என்று பார்த்தார்;
முன்பு திருவாய்ப்பாடியிற் பெண்கள் தம்முடைய திருக்குழலோசையிலே வசப்படக் கண்ட வாஸநையாலே
இங்கு நம்முடைய மிடற்றோசையாலே வசீகரிக்கப்போமென்று பார்த்து ஒரு பண்ணை நுணுங்கத் தொடங்கினார்;
நாம் வேட்டையாடுகிற வியாஜமாக வந்தோமாகையாலே ‘பாடுகிறது ஏதுக்கு?‘ என்று கேட்பாரில்லை;
ஆகவே தாராளமாகப் பாடலாமென்று துணிந்து ஒரு பண்ணை நுணுங்கினார்;
அதிலே யீடுபட்டு மேல்விழுந்து கலந்தேன் என்று வரலாறு சொல்லுகிறாள் பரகாலநாயகி.

நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்குஇதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.

பதவுரை

ஒன்று–மிகச் சிறந்ததான
கைவளம்–கைவளமென்கிற பண்ணை
ஆராயா-ஆராய்நது பாடி
நம்மை நோக்கா–நம்மைப் பார்த்து
இறையே நாணினார் போல்–சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று
பின்னும்–அதற்குப் பிறகும்
நயங்கள் செய்வளவில்–நயமான வார்த்தைகளையிட்டுப் பண்ணிலே பாடினவளவில்
என் மனமும் கண்ணும்-எனது நெஞ்சம் கண்களும்
ஓடி-பதறிச் சென்று
எம்பெருமான் திருஅடிக்கீழ் அணைய-அப்பெருமானது திருவடிவாரத்திற் பதிய
இப்பால்–அதன்பின்
கைவளையும்–என் கையில் தரித்திருந்த வளைகளையும்
மேகலையும்-அரையில் மேவிய கலையையும்
காணேன்-காணமாட்டாமல் இழந்தேன்;
கனம் மகரத்குழை இரண்டும்-கனமான மகரகுண்டலங்களிரண்டையும்
நான்கு தோளும்-நான்கு திருத்தோள்களையும் காணப்பெற்றேன்;
(அதன்பிறகு)
எம் பெருமான் கோயில் எவ்வளவு உண்டு என்றேற்கு-“தேவரீருடைய இருப்பிடம் (இவ்விடத்திலிருந்து) எவ்வளவு தூரமுண்டு?‘ என்று கேட்ட எனக்கு
எழில் ஆலி இது அன்றோ என்றார்-அழகிய திருவாலிப்பதி இதோ காண்! என்று சுட்டிக் காட்டினார்.

நைவளம் ஒன்று ஆராயா =
‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர்.
பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தையுடைய தாதல் பற்றி
நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச் செய்வர்.
மற்ற இசைகளிற்காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும்
இதற்கு வசப்படாவிட்டால் வேறுகதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,”நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…”(146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப்பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும்
யாழ்நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.

மேலும், இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க்காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம்தெரி பாலை கைவல் பாண்மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
நட்டராகம் என்னும் பாலைப்பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமையறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும்.
பாலையாழில் வாசிக்கப்பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப்பண்கள், பகற்பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப்பண்கள்
எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக்கருவிகள் என இயற்கையோடும்,
இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசைபட வாழ்ந்தார்கள்.

கருமயோக ஜ்ஞாநயோகங்களால் அஸாத்யமானதை பக்தியோகத் தாலே ஸாதிக்கலாம்;
அதனாலும் அஸாத்யமானதை ப்ரபத்தியாலே ஸாதிக்கலாம்;
அதுவும் பலித்தலில்லை யென்றால் வேறு கதியில்லை என்றிருப்பதுபோல,
காதலன் தானும் இப் பரகால நாயகியைப் பெறுகைக்ககுச ஸரமோபாயமான பண்ணைக் கைகண்டபடி.

ஆராய்தல் – நன்றாக நுணுங்குதல்.
‘ஆராயா‘ என்றது செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்; ஆராய்ந்து என்றபடி.
மேலே ‘ நோக்கா“ என்றதையும் இங்ஙனமே கொள்க.

நைவளம் என்கிற பண்ணைத் தாம் நுணுங்கினவாறே தாம் உருகினார்;
‘முரட்டு ஆணாகிய நாமே உருகுகிற போது மெல்லியலான இவள் உருகக் கேட்க வேணுமோ?
வயிரத்தை யுருக்குமது அரக்கை யுருக்கச் சொல்லவேணுமோ? இது இவளையும் அழித்தே தீரும்‘ என்றறுதியிட்டு என்முகத்தைப் பார்த்தார்;
உண்மையில் அவ் விசையினால் நான் உள்ளெலா முருகிக் குழைந்திருக்கச் செய்தேயும்
அந்த உருக்கத்தையும் ஈடுபாட்டையும் எப்படியோ மறைத்து, சிறிதும் விகாரப்படாதவள் போல முகத்திற் காட்டிக் கொண்டேன்;
அப்படிப் பட்ட நிலைமையைக் கண்டு அவர்க்கு வெட்கமுண்டாயிற்று. ஏன்?
நம்முடைய எண்ணம் பழுதாயிற்றேயென்று லஜ்ஜித்தார்;
அவர் தம்முடைய காம்பீர்யத்தாலே நாணினமை தோற்றாதபடி யிருக்கப்பார்த்தும் நாணினார் போலவே காணப்பட்டார்;
‘நம்முடைய சரமோபாயமும் நிஷ்பலமாயிற்றே‘ என்று அவரால் வெட்கப்படாமலிருக்க எங்ஙனே முடியும்.
அந்த வெட்கத்தாலே நேர்முகம் பார்க்கமாட்டாதே சோலையைப் பார்ப்பதும் பக்கங்களைப் பார்ப்பதுமாக ஆனார்.

பின்னும் நயங்கள் செய்வளவில் = ‘பின்னும்‘ என்றது,
நைவளமென்கிற பண்ணைப் பாடினவளவோடு நில்லாமல் என்றபடி. அது பலிக்கவில்லையென்று வாளா கிடந்திலர்;
‘அடியேன், குடியேன்‘ என்றாற்போலே சில நைச்ய பாஷணங்களைப் பண்ணிலே ஏறிட்டுப் பாடத்தொடங்கினார்; அவ்வளவிலே.

என்மனமுங் கண்ணுமோடி எம்பெருமான்திருவடிக்கீழ் அணைய =
விகாரத்தை வெளிக் காட்டாதிருக்கவேணுமென்று நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கப் பெற்றதில்லை;
அடக்கிக் கொண்டிருந்தும் என்னால் அடக்க முடியவில்லை; கடல் உடைந்தாற்போலே உடைந்தது.
நெஞ்சும் கண்ணும் ஆச்ரயத்தைவிட்டுப் பதறியோடிற்று;
தம் மிடற்றோசை யாலே என்னை யீடுபடுத்தினவருடைய திருவடிவாரத்தின்கீழே சென்றணைந்தன. –

வியாக்கியான வாக்கியங்காண்மின்; – “அவர் நினைத்தவளவன்று காண் நான் அழிந்தபடி யென்கிறாள்.
என்முலையைத் தம் மார்விலே நெருக்கித் தழுவிக் கொள்ளவாயிற்று அவர் நினைத்திருந்தது;
நான் அவர் காலைத் தலையிலே வைத்துக் கொண்டே னென்கிறாள்“.

இப்பால் கைவளையும் மேகலையுங் காணேன் =
இதனால் விரஹ வ்ருத்தாந்தம் சொல்லுகிறதன்று; உந்மஸ்தகமான ஸம்ச்லேஷ ரஸம் சொல்லுகிறது.
கைவளையையும் மேகலையையுங் காணாமை விச்லேஷத்திலன்றோ வென்னில், அங்ஙனே ஸம்ச்லேஷத்திலுமுண்டு.

ஸம்ச்லேஷரஸம் மீதூர்ந்து உண்டான தேஹப் பூரிப்பினால் வளைகள் வெடித் தொழிந்தமையாலுண்டான இழவைச் சொன்னபடி.
கலவியிலும் வளையிழப்பது பிரிவிலும் வளையிழப்பது என்றனால், பின்னை வளை தங்கியிருக்கும் நிலைமை எது வென்னில்;
ஸம்ச்லேஷரஸம் உந்மஸ்தகமாகாமல் ஸாத்மி்க்கு மளவாகும் தசையிலே வளை தங்கியிருக்கு மென்க.

(மேகலையுங்காணேன்)
மே – அரையில் மேவுகின்ற, கலை – வஸ்திரம் என்று கொள்க.
“பரியட்ட மாறாட்டத்தாலே என்பரியட்டப்பட்டுங் கண்டிலே னென்கை.
அவன் பரியட்டம் தன்னரையிலேயிருக்கக் கண்டாளித்தனையிறே“ என்ற வியாக்கியான வாக்கியமுங் காண்த்தக்கது.
இதுவும் ஸம்ச்லேஷரத்தின் உந்மஸ்தகத்வத்தை வெளியிடவற்று.

“கைவளையும் மேகலையுங் காணேன்“ என்றதற்கு ‘அஹங்காரமமகாரங்கள் ஒழிந்தன‘ என்று கூறுதல்
ஸ்வாபதேசப்பொருள் என்றருளிச்செய்வர்.
உபாயவிரோதி, ப்ராப்யவிரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து
“உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற
பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு.
‘நான் போக்தாவன்று, எனக்குப்போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற
ஸ்வரூப தத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று.

கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும் =
அணைத்தபோது உறுத்தின திருமகரக் குழைகளையும், அணைத்த திருக்கைகளையும் கண்டேனென்கிறாள்.
கலந்தவள் சக்ரவர்த்தி திருமகனாயிருக்க, நான்கு தோள் என்கிறதென்னென்னில்;
தன்னைத் தழுவுகையாலே தோள்கள் பணைத்தபடி.
அன்றி,
உண்மையான சதுர்ப்புஜ ஸ்வரூபத்தை வெளியிட்ட படியாகவுமாம்.

எவ்வளவுண் டெம்பெருமான்கோயில்? என்றேற்கு =
வந்தவிடத்திலே கலந்து பிரிந்து போகையன்றியே அவருடைய இருப்பிடத்தே உடன் சென்று
நித்ய ஸம்ச்லேஷம் பண்ணிக் களிக்கவேணுமென்னும் விருப்பாலும்,
சிறிது தூரமாகிலும் கூடவே தோள்மேல் தோளிட்டுக்கொண்டு போகவேணு மென்னும் விருப்பாலும்,
தகுதியான பரிஜனங்களோடே அநுபவிக்கவேணு மென்னும் விருப்பாலும்
‘தேவரீருடைய வாழ்விடம் இங்குத் தைக்கு எத்தனை தூரமுண்டு?‘ என்று கேட்டேன்;
இதோ காண்கிற திருவாலித் திருநகரி காண் என்று சொல்லி அந்தர்த்தானமாய்விட்டார்.
அந்தோ! ‘எவ்வளவுண்டெம்பெருமான் கோயில்‘ என்று பாவியேன் நானே யன்றோ பிரிவை ப்ரஸ்தாவித்தேன்;
அது கேளாதிருந்தேனாகில் இன்னமும் சற்றுப்போது அநுபவிக்கலாமாயிருந்ததே!
நானே கெடுத்துக் கொண்டேனே யென்கிறாள் போலும்.

அவர் தன்னை வசப்படுத்திய படியையும் கலந்த படியையும் தோழிக்கு சொல்கிறாள்
தேவர் என்று அஞ்சியதும் பின் போக நினைத்தார்
கால் பெயர மாட்டிற்று இல்லை
சேஷ வஸ்து பெறுவது சேஷிக்கு பரம லாபம் அன்றோ
அழகையும் சீலத்தையும் காட்டி அருளி வீணாக போகவா
முன்பு ஆய்ப்பாடி பெண்கள் திருக் குழல் ஓசை ஈடு பட்டது போலே
மிடற்று ஓசையால் வசீகரிப்போம் என்று பண்ணை நுணுங்கத் தொடங்கினார்
அதிலே ஈடுபட்டு மேல் விழுந்து கலந்தேன் என்கிறாள்

நை வளம் ஓன்று ஆராயா
பாடுவாரையும் கேட்பாரையும் நைவிக்கும் பண் நைவளம்
ஆராய்தல் நுணுங்குதல்

நோக்கா
நாமே உருக இவளும் உருகுவாள் என்று நோக்கினான்
விகாரம் இல்லாதது போல் முகத்தை வைத்துக் கொண்டேன்

நம்முடைய சரம உபாயமும் நிஷ் பலமா என்று வெட்கினார்
கம்பீரத்தால் லஜ்ஜித்தது தோற்றாமல் இருக்க பார்த்தார்
நேர் முகம் பார்க்காமல் சோலை பக்கம் பார்ப்பதாக ஆனார்

பின்னும் நயங்கள் செய் வளவில்
-பின்னும் -நை வளம் பண்ணை பாடினதொடு நில்லாமல்
அடியேன் குடியேன் போன்ற நைச்ய பாஷாணங்கள்
பண்ணிலே ஏறிட்டு பாடத் தொடங்கினார்

என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய
விகாரம் காட்டக் கூடாது என்று நான் இருந்தாலும்
கடல் உடைந்தால் போல்
நெஞ்சும் கண்ணும் ஆஸ்ரயத்தை விட்டு ஓடின
அவர் நினைத்த அளவன்று காண் நான் அழிந்த படி -என்கிறாள்
என் முலையை தம் மார்பிலே நெருக்கித் தழுவிக் கொள்ள வாயிற்று அவர் நினைத்து இருந்தது
நான் அவர் காலை தலையிலே வைத்துக் கொண்டேன் -என்கிறாள் –

இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்
விரஹ விருத்தாந்தம் சொல்ல வில்லை
உன்மத்தமான சம்ச்லேஷ ரசம்
தேக பூரிப்பினால் வளைகள் வெடித்து ஒழிந்தன
மே -அரையிலே மேவுகின்ற
கலை -வஸ்த்ரம்
பரியட்ட மாறாட்டத்தாலே என் பரியட்டப் பட்டும் கண்டிலேன் என்கை
அவன் பரியட்டம் தன் அரையிலே இருக்கக் கண்டாள் இத்தனை இறே

அஹங்காரம் மமகாரம் ஒழிந்தன -ஸ்வாபதேசம்

உபாய விரோதி பிராப்ய விரோதி புருஷார்த்த விரோதி இடையூறுகளும் தொலைந்து
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று –
என்கிற பிரார்த்தனை பலித்தமை சொல்லிற்று
நான் போக்தா அன்று
எனக்கு போகம் அன்று
போக்தாவும் அவனே
போகமும் அவனுடையதே
ஸ்வரூப தத்தவத்தின் முற்றின அனுசந்தானம் சொல்லிற்று-

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
அணைத்த போது உறுத்தின திரு மகரக் குழைகளையும்
அணைத்த திருக் கைகளையும் கண்டேன்
தன்னை அணைத்த படியால் தோள்கள் பணைத்த படி -நான்கு தோள்
சதுர புஜ ஸ்வரூபத்தை வெளியிட்டதாகவுமாம்

எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
அவன் இருப்பிடம் சென்று நித்ய சம்ச்லேஷம் பெறவும்
கூடவே தோள் மேல் தோள் போட்டு போக விரும்பியும்
பரிஜனங்கள் உடன் சேர்ந்து அனுபவிக்கவும்
தேவரீர் வாழ்விடம் இங்குத்தைக்கு எத்தனை தூரம் என்றேன்

இதோ காண்கிற திருவாலி திரு நகரி காண் என்று சொல்லி அந்தர்தானமாய் விட்டார்
பாவியேன் நான் அன்றோ பிரிவை பிரஸ்தாவித்தேன்
நானே கெடுத்துக் கொண்டேன் –

——————————————————————-

தன் பேறாகத் தானே வந்து கலந்தவன் பிரிகிறபோது ‘போக வேண்டா‘ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டிற்றிலையோ?
என்று தோழி கேட்க, அது சொல்லாமலிருப்போனோ? அதுவுஞ் சொன்னேன், பலிக்கப் பெற்றதில்லை யென்கிறாள்.
கலவியிலே உன் கைக்கு அடங்கின சரக்காயிருந்தவர் உன் வார்த்தையை அலக்ஷியஞ் செய்து போவரோ?‘ என்ன,
‘நிலமல்லாத நிலத்திலே இப்படி நெடும் போது நிற்கலாகுமோ‘ என்று பெரிய திருவடி தூக்கிக் கொண்டு போகப் போயினாரென்கிறாள்.

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே?

பதவுரை

உன் ஊரும்-உள்ளுக்குள்ளேயே படரும்படியான
சிந்தை நோய்-மனோவியாதியை
எனக்கேதந்து-என்னொருத்திக்கே உண்டாக்கி
என் ஒளி வளையும்-எனது அழகிய வளைகளையும்
மா நிறமும்-சிறந்த மேனிநிறத்தையும்
இங்கே-இந்தத் திருமணங் கொல்லையிலே
கொண்டார்-கொள்ளை கொண்டு போனார்; (அப்படி அவர் போகிய போது)
சேல்-மீன்களானவை
தெள் ஊரும் இளதெங்கின் தேறல் மாந்தி-தெளிவாகப் பெருகுகின்ற இளந்தென்னங் கள்ளைப் பானம் பண்ணி
உகளும்-களித்துத் தடித்துத் உலாவா நிற்கப்பெற்ற
திரு அரங்கம்-ஸ்ரீரங்கம்
நம் ஊர் என்ன-நமது இருப்பிடம் என்று சொல்லிப்போக,
கள் ஊரும் பைந்துழாய் மாலையானை-தேன் வெள்ளமிடாநின்ற பசுமைதங்கிய திருத்துழாய் மாலையையுடைய அப்பெருமானை
கனவு இடத்தில் யான் காண்பன்-கனவிலே நான் காணப்பெறுகிறேன்;
கண்ட போது-அப்படி காணும்போது
புள் ஊரும் கள்வா-கருடப்பறவையை ஏறிநடந்துகிற கள்வனே!
நீபோகேல் என்பன்-இனிநீ என்னைவிட்டுப்பிரி்ந்து போகலாகாது என்பேன்;
என்றாலும்-அங்ஙனஞ் சொன்னாலும்
நமக்கு-நமக்கு
இது-அப்பெருமானது கல்வியானது
ஓர் புலவிதானே-வருத்தமேயாய்த் தலைக்கட்டு மது.

உபயவிபூதி நாதராய்ப் பரம உதாரராயிருக்குமவர்க்கு நீ வாழ்க்கைப்பட்டிருந்தாயாகில் அவர் போம்போது
உனக்குத் தந்துபோன செல்வம் ஏதேனுமுண்டோவென்று கேட்க,
உள்ளுருஞ் சிந்தைநோய் எனக்கே தந்து என்கிறாள்.
தோழீ! இதுகாண் அவர் எனக்குத் தந்துபோனது என்கிறாள்,
கண்ணாலே பார்த்துச் சிகித்ஸை பண்ணத்தக்க நோயையன்று கொடுத்தது;
ஸர்ப்பம் ஊர்ந்தாற்போலே உள்ளுக்குள்ளே ஸஞ்சாரியாயிருக்கின்ற ப்ரேமவியாதியைத் தந்துபோனார்.
“தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்“ என்கிறபடியே அவர்க்குத் தேவிமார் மற்றும் பலருண்டாகிலும்
அவர்களை அவர் பொருள் படுத்தவேயில்லை; என்னொருத்திக்கே ஸர்வ ஸ்தானமாகக் கொடுத்தாராயிற்று.

அவர் கொடுத்ததற்கு நீ ஏதேனும் பிரதிஸம்பாவனை செய்ததுண்டோ? என்று தோழிகேட்க,
“என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டாரிங்கே“ என்கிறாள்.
நான் கொடுக்கவேண்டிற்றுண்டோ?
அவர்தாம் கொள்ளை கொள்ளிக்குறும்பராயிற்றே; தாமே கொள்ளைகொண்டுபோனார்.

கீழ்ப்பாட்டில் ‘கைவளையும் மேகலையுங் காணேன்“ என்ற விடத்திற்கொண்ட அர்த்தத்திற்கு
எதிரான அர்த்தம் இங்குக்கொள்ளவேண்டும்.
அங்கு ஸம்ச்லேஷத்தாலுண்டான பூரிப்பு; இங்கு விச்லேஷத்தாலுண்டான இளைப்பு.

ஏற்கனவே பூரிப்பினால் வளைகள் வெடித்துப் போயிருக்க, என்னொளி வளையைக் கொண்டார் என்று
இங்குச் சொல்வதற்கில்லையே; கையில் வளையிருந்தாலன்றோ கொண்டாரென்னலாம் என்று சிலர் சங்கிக்கக்கூடும்;
வளைகொண்டாரென்றதில் தாற்பரியமாகிய உடலிளைப்புமாத்திரமே இங்கு விலக்ஷிதமென்று கொள்க;
உடல் ஈர்க்குப்போல இளைக்கும்படி செய்துவிட்டாரென்றவாறு.

அஹங்காரமமகாரங்கள் நன்கு ஒழியப்பெற்றவர் தம்வாயாலே ‘என்னொளிவளை‘ என்னலாமோ? என்னில்;
ஸம்ச்லேஷகாலத்தில் இந்த வளையும் நிறமும் காதலனுடைய கொண்டாட்டத்திற்கு மிகவும் உறுப்பாயிருந்ததனால்
அவனுக்கு ஆதரணீயமானது என்னும் வழியாலே தமக்கு ஆதரணீயமாகக் குறையில்லை என்க.

கூடியிருக்குங்காலத்தில் நாயகன் ‘இதுவொரு வளையிருக்கு மழகு என்னே! ;
சேர்த்தியால் வந்த ஒளியிருக்குமம்படி என்னே; வடிவில் நிறமிருக்கும்படி என்னே!‘ என்று பலகாலும் வாய் வெருவுவது
வழக்க மாகையாலே அதனை அநுவாதம் செய்கிறவத்தனை.

இங்கே யென்று
தான் வழிபறியுண்ட விடத்தைக் காட்டுகிறாள்;
மைவண்ணநறுங்குஞ்சியில் ‘இங்கே‘ என்று தான் நிதியெடுத்த விடத்தைக் காட்டினள்;
இப்பாட்டில் ‘இங்கே‘ யென்று
நிதியிழந்தவிடத்தைக் காட்டுகிறாள். நான் வழிபறிக்க வந்து வழிபறியுண்டேனென்கிறாள்.

நங்காய்! உன் ஒளிவளையும் மாநிறமுங்கொண்டு அவர் போகிறபோது உம்முடைய ஊர் ஏதென்று கேளாவிட்டதென்?
என்று தோழிகேட்க; அது நான் கேட்கவேண்டிற் றில்லை;
பிரிவில் தரித்திருக்கைக்காகத் தாமே சொல்லிப் போனாரென்கிறாள் தெள்ளூருமித்யாதியால்.
தெளிந்து தெங்கினின்றும் பெருகிவாரா நின்றுள்ள தேனை நுகர்ந்து சேல்மீன்கள் உகளும்படியான
திருவரங்கம் நம்மூர் என்று சொல்லிப்போனார்.

‘என்ஊர்‘ என்றாவது, ‘உன் ஊர்‘ என்றாவது சொல்லாமல் ‘நம்மூர்‘ என்றதில் இவளுக்கு ஒரு ஆநந்தம்.
என்னூர் என்றால் அவனுடைய ஆச்ரித பாரதந்திரியம் குலையும்;
உன்னூர் என்றால் இவளுக்கு ஸ்வரூப ஹாநியாகும்.
இரண்டு தலைக்கும் பாங்காக நம்மூர் என்று சொல்லிப் போனார்.
“திருமந்த்ரம்போலே இருவர்க்கும் பொதுவானவூர்“ என்று வியாக்கியான ஸ்வாரஸ்யம் நோக்குக.

அப்படி அவர் கருணையற்றுப் பிரிந்துபோகச் செய்தேயும் அவருடைய வடிவின் போக்யதை
இவளைக் கனக்க ஈடுபடுத்தியிருக்கையாலே கள்ளூரும்பைந் துழாய் மாலையானை யென்று வாய்வெருவுகின்றாள்.
தோளிலிட்ட தனிமாலையுந் தாமுமாய் அவர் இருந்த இரும்பை நீ காணப்பெற்றிலையே தோழீ! என்கிறாள்.
அவ்வூர் படுமதெல்லாம் அவருடம்பும் படுகிறது காண்.
தெள்ளூருமிளந்தெங்கின் தேறல் அவ்வூர்த் திருவீதிகளிலே வெள்ளமிடுமாபோலவே
அவருடம்பும் பைந்துழாய்மாலையின் மதுவெள்ள மொழுகப்பெற்றிருந்தது.

கனவிடத்தில் யான் காண்பன் =
கனவு என்றது ஸ்வப்நத்தையாகவுமாம்; இவ்விபூதியின் வாழ்க்கையை ஸ்வப்நபர்யாயமாக ஞானிகள்
அத்யவஸிப்பராகையாலே கனவிட மென்று இவ்விபூதியைச் சொல்லிற்றாகவுமாம்.
அவர் கூடவே கலந்து வாழ்கிற பாவனையைக் காட்டிக் கொண்டிருக்குமளவிலே, மறைந்திருந்த பெரிய திருவடி வந்து
“வந்த காரியம் தலைக்கட்டிற்றே, இனி யெழுந்தருளலாகாதோ“ என்று நிற்க, அவன் மேலேறிப் போகப் புறப்பட்டார்;
இத்தனை காலமும் நம் கைச்சரக்காயிருந்தவர் நாம் ஒரு வார்த்தை சொன்னால் கேளாதொழிவரோ வென்று நினைத்து
“புள்ளூருங்கள்வா! நீபோகேல்“ என்று சொல்லியும் இங்ஙனே வருத்தப்பட வேண்டிய நிலைமைதானேயாயிற்று.
ஸம்ச்லேஷத்துக் கடுத்தபடி விச்லேஷம் விளைந்தாலல்லது ஸாத்மியாது என்பது அவருடைய கருத்துப்போலும்.
அதனை நினைந்து ஆறியிருக்கப்போமோ நமக்கு? துடிப்பதே தொழிலாயிற்று என்கிறாள்.

நிலமல்லா நிலத்திலே இப்படி நெடும் போது நிற்கலாமா என்று பெரிய திருவடி தூக்கிக் கொண்டு போக போயினான்
உபயவிபூதி நாதன் போகும் பொழுது எனக்கு தந்து போன செல்வம் என்ன -என்ன
உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து
தக்கார் பல தேவிமார் சால உடையவர் என் ஒருத்திக்குமே என்று இத்தை கொடுத்து போந்தான் -சர்வ ஸ்வதானமாக —

நீ ஏதேனும் பிரதி சம்பாவனை செய்தது உண்டோ -என்ன
என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
நான் கொடுக்க வேண்டாம்
அவனே கொள்ளை குறும்பன் அன்றோ
தாமே கொள்ளை கொண்டு போனார்
இங்கு விஸ்லேஷத்தால் உண்டான இளைப்பு
முன்பு சம்ஸ்லேஷத்தால் உண்டான பூரிப்பு

அஹங்காரம் மமகாரங்கள் ஒழிந்தவர்
என் ஒளி வளை-என்னலாமோ என்னில்
சம்ஸ்லேஷ தசையில் அவனுக்கு ஆதரணீயம் என்னுமத்தால் உத்தேச்யம்
இது ஒரு வளை இருக்கும் அழகு என்ன
இது ஒரு சேர்த்தி அழகு என்ன
இப்படி அவன் வாய் வெருவினதை அனுவாதம் செய்கிறாள்

இங்கே
வழி பரியுண்ட இடத்தை காட்டுகிறாள்
மை வண்ண நறும் குஞ்சி பாசுரத்தில்
இங்கே
நிதி எடுத்த இடத்தை காட்டினாள்
இதில் நிதி இழந்த இடத்தை காட்டுகிறாள்-

போகும் பொழுது அவரே-தெள்ளூரும் -இத்யாதி — நம்மூர்
என்னூர் என்றால் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் குலையும்
உன்னூர் என்றால் இவளுக்கு ஸ்வரூப ஹானியாகும்
திரு மந்த்ரம் போலே இருவருக்கும் பொதுவான ஊர்

பிரிந்து போகும் பொழுதும் வடிவு அழகின் போக்யதை கனக்க ஈடுபடுத்தியது
கள்ளூறும் பைந்துழாய் மாலையானை
தோளில் இட்ட தனி மாலையும் தாமுமாய் இருந்த சேர்த்தி அழகை நீ காணப் பெறவில்லையே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் அவ்வூர்த் திரு வீதிகளிலே வெள்ளம் இடுமா போலே
அவர் உடம்பும் பைந்துழாய் மாலையின் மது வெள்ளம் ஒழுகப் பெற்று இருந்தது

கன விடத்தில் யான் காண்பன்
ஸ்வப்னம்
இந்த விபூதியை சொல்லிற்று ஆகவுமாம்

மறைந்து இருந்த பெரிய திருவடி வந்து
வந்த கார்யம் தலைக் கட்டிற்றே-இனி எழுந்து அருளலாகாதோ
போகப் புறப்பட்டார்

நம் கைச் சரக்கு-என்று நினைத்து
புள்ளூறும் கள்வா நீ போகேல்
சம்ஸ்லேஷம் விஸ்லேஷத்துடன் தலைக் கட்டும்
அதனை நினைத்து ஆறி இருக்கப் போமோ
துடிப்பதே தொழில் ஆயிற்று-

———————————————————————————

“புள்ளூருங்கள்வா! நீ போகேலென்பன் என்றாலுமிது நமக்கோர் புலவி தானே“ என்றாள் கீழ்ப்பாட்டில்;
அது கேட்ட தோழியானவள், ‘நங்காய்! பெரிய திருவடி வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டானென்கிறாயே;
அந்தப் பெரிய திருவடி தானும் உனக்கு அடங்கினவனல்லனோ?
“ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணை யோலை எழுதுவது;
ஆகிலும் பணிசெய்வது க்ருஹிணிக்கிறே“ என்ற நியாத்தாலே கணவனுக்கு அடிமைப் பட்டாரெல்லாரும்
மனைவியர்க்கும் அடிமைப் பட்டிருத்தல் முறைமை யன்றோ;
பகவானுக்கு அடிமைப் பட்டபோதே உனக்கும் அடிமைப் பட்டவனாயன்றோ அக்கருடனிருப்பது;
அப்படி விதேயனான அவனை நீ போகேலென்று நியமிக்கக் கூடாதோ?‘ என்று கேட்க;
ஆமாம் தோழீ!, அவன் ஒருவனுமேயாகிலன்றோ நியமிக்கலாம்; நித்ய விபூதியிலுள்ளரடங்கலும் வந்து சூழ்ந்துகொண்டார்கள்;
அவர் தாமும் முன்புபோலின் றியே இப்போதுண்டான விலக்ஷணமான மேன்மையினாலே எதிர்த்துப் பேச
வொண்ணா தபடியாயிருந்தார்; அதனாலே சென்று கிட்டவும் வார்த்தை சொல்லவும் அருமையாயிருந்தது!,
என் செய்வேன் என்கிறாள்.

இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட,
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே.

பதவுரை

உலகு உண்ட பெரு வாயர்–பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும்,
இங்கே வந்து-இவ்விடத்தே வந்து
பொரு கயல்-ஒன்றோடொன்று போர்செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற
என் கண்-எனது கண்களிலிருந்து
நீர் அரும்ப–நீர்த் துளிகள் துளிக்கும்படி
புலவி தந்து–விரஹ வேதனையை யுண்டாக்கி,
இலங்கு ஒலி நீர் பெரு பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகில் ஒப்பர்-விளங்குகின்ற ஓசையை யுடைய
நீர் நிறைந்த பெருங்கடலில் ஆழ்ந்து நீரைப் பருகின பெருவயிற்றை யுடைய காளமேகத்தின் நிறத்தை ஒத்தவருமான பெருமாள்
பெருந்தவத்தர் அருதவத்து முனிவர் சூழ-பரமபக்தி யுக்தரான ஸ்ரீவைஷ்ணவர்களும் மஹா தபஸ்லிகளான ரிஷிகளும் சூழ்ந்து நிற்க
ஒரு கையில்-ஒரு திருக்கையிலே
சங்கு-திருச்சங்கையும்
மற்றொரு கை–மற்றொரு திருக் கையிலே
ஆழி-திருவாழியையும்
ஏந்தி-தரித்துக் கொண்டு
புனல் அரங்கம் ஊர் என்று-நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் என்று சொல்லிவிட்டு
போயினார்-அகன்றுபோனார்;
(அதுவே காரணமாக)
இரு கையில்-(எனது) இரண்டு கைகளிலும்
சங்கு இவை நில்லா-இந்தச் சங்குவளைகள் கழன்றொழிந்தன
எல்லே பாவம்–என்ன மஹா பாபமோ!.

இருகையிற் சங்கு இவை நில்லா =
போகிறவர் தாம் மாத்தி்ரம் போகையன்றியே என்கையில் வளைகளையுங் கொண்டுபோனார்.
அவர் போய்விட்டாலும் அவர் உகந்த வளைகளாவது கையிலிருந்தால் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாகிலும்
ஒருவாறு போதைப் போக்கலாமென்று நினைத்துக் கையில் வளையைப் பார்த்தாள்;
வளை அவர்க்கு முன்னே போய் நின்றது. இன்னொரு கையிலாவது வளை தங்கியிருக்கிறதோவென்று பார்த்தாள்;
அதுவும் அதுக்கு முன்னே போய் கிடந்தது; அந்தோ! என்செய்வேன்!, இருகையிற் சங்கிவை நில்லா வென்கிறாள்.

‘சங்கு நில்லா‘ என்னாமல் ‘சங்கு இவை நில்லா‘ என்றதற்குக் கருத்தென்னன்னில்;
அவர் நில்லாதொழிந்தால் இவையும் நில்லாதொழிய வேணுமோ?
அவர் சேஷியாகையாலே போகிறார்; எனக்கு சேஷமான இவையும் நில்லாதே போகவேணுமோ?
அவர் சேதநராகையாலே என்னிடத்தில் ஏதேனுங் குறைகண்டு போகலாம்; அசேதனமான இவையும் போகவேணுமோ?
வந்து கலந்தவராகையாலே போகிறார் அவர்; ஸஹஜமான இவையும் போகவேணுமோ?
நம் கைக்கு அடங்காதவராகையாலே அவர் போனார்; நம் கைக்ககு அடங்கின இவையும் போகவேணுமோ?
அவர் நிற்கிலும் இவை நிற்கின்றனவில்லையே யென்கிறாள்.
போகேலென்னச் செய்தேயும் அவர் போனாப்போலே இவையும் பலகால் எடுத்தெடுத்துக் கையிலேயிடச் செய்தேயும்
கழலுகின்றமை தோற்றும் நில்லா என்றதில்.

எல்லே பாவம்! =
ஈதென்ன கஷ்டகாலம்!? சேதனப்பொருளோடு அசேதனப் பொருளோடு வாசியற எல்லாம்
என்னைக் கைவிடும்படியாக என்ன பாபம் பண்ணினோனோ வென்கிறாள்.
கைப்பட்டதும் போகும்படியான பாபத்தை யன்றோ பண்ணினே னென்கிறாள்.

தன்னோடு கலந்து பிரிந்துபோகிறபோது அவருடைய வடிவிற்பிறந்த புதுக்கணிப்பைச் சொல்லுகிறாள்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட பெருவயிற்ற கருமுகிலேயொப்பர் வண்ணம் என்று.
தன்னை வெறுந்தரையாக்கினபடிக்கு ஒரு க்ருஷ்டாந்த மிட்டுச் சொல்லுகிறாள் போலும்.
இயற்கையான வொளிமிக்க கம்பீரமான மஹாமுத்ரத்தை வெறுந்தரையாகப் பருகி நீர் கொண்டெழுந்த காளமேகம் போலே
காண் போகிற போது அவரது வடிவு இருந்தபடி.

கீழ்ப்பாட்டில் “என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டார்“ என்றாளே;
இங்கு நின்றுங் கொண்டதெல்லாம் அங்கே குடிகொண்டதாக வேணுமே, அது தோன்றச் சொல்லுகிறபடி.
பரகாலநாயகி, தன்னைப் பெருங்கடலாகவும் அவரைக் காளமேகமாகவுங் கருதி இது சொல்லுகிறாளென்க.
மேகமானது பெரிய அபிநிவேசத்தோடே வந்து கடலில் ஸாரத்தைக் கவர்ந்து செல்வதுபோல
அவரும் இத்தலையில் ளெஸந்தர்ய ஸாகரத்தைக் கவர்ந்து சென்றமை சொன்னபடி.
அதுதானும் அவரது வடிவிலே நன்கு தோன்றியிருக்கையாலே ஸ்பஷ்டமாயிற்று.

பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ண மென்று பெருமாளுடைய இயற்கையான அழகு சொல்லுகிறதன்று;
தற்காலத்திலுண்டான அழகைச் சொல்லுகிறாள்.
ஐயோ! மேகம் முகக்குமிடமாகப் பெற்றேனே. மேகம் முகந்து பெய்யுமிடமாகப் பெற்றிலேனே! என்கிற வருத்தம்
‘மண்டி யுண்ட‘ என்றதில் தொனிக்கும்.
அன்றியும்,
இத் தலையிலுள்ள தெல்லாவற்றையும் கொள்ளை கொண்டும் இன்னமும் அவருடைய வயிறு நிரம்பவில்லையே,
அவருக்கு த்ருப்தி பிறக்க வில்லையே! என்பது ‘பெருவயிற்ற‘ என்பதில் தொனிக்கும்.

அவர் பிரிந்து போகிறபோது வடிவில் புகர் இருந்தபடியும் சுற்றும் புடைசூழ நின்றார்
பெருவெள்ளமிருந்தபடியும் மேன்மை யிருந்தபடியும் தோழீ! நீ காணப் பெற்றிலையே!,
அவற்றை என் சொல்லவல்லேனென்வாய்கொண்டு?
(பெருந்தவத்த ரருந்தவத்து முனிவர் சூழ ஒரு கையிற் சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயர் போயினார்.)
ஒருவ ரிருவராய் வந்து கிட்டினார்களோ?
கடலில் அமுதந் தோன்றினவன்று அதனை அமரர் சுற்றிலும் சூழ்ந்துகொண்டாப்போலே காண் என்னைப் பிரிந்து போகிறபோது
அவரைப் பரிகாரம் வந்து சூழ்ந்துகொண்டது.
வைகுண்ட து பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ * என்று
சொல்லப்பட்ட பக்தர்களும் பாகவதர்களும் வந்து சுற்றிலும் சூழ்ந்து கொண்டார்கள்.
அந்தப்பெருங் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நான் கிட்டிச்சென்று அவரைப் போகேலென்று சொல்வது எங்ஙனே?

அந்தப் பெருவெள்ளத்தை ஒருபடி நீஞ்சிக்கொண்டு சென்றோமேயாகிலும்,
“குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்னப்பட்ட
அவருடைய திருவுரு கண்ணால் முகக்கலாயிருந்ததோ?
கையுந் திருவாழியுமாய்நின்ற மேன்மை கிட்டலாம்படியிருந்ததோ?

(ஒருகையிற் சங்கு ஒருகை மற்றாழியேந்தி)
அவர்தாம் வந்த போதிலே என்கையைப் பிடித்த கையும் என்காலைப் பிடித்த கையும் இப்போது சங்கும் சக்கரமும் பொலிய நின்றனவே!.
கலந்தபோது அவர்க்கு இருந்த நீர்மைக்கு எல்லையில்லாதாப்போலே காண்
போகிறபோதிருந்த மேன்மைக்கு எல்லை யில்லாதிருந்தபடியும்.
“வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு, படை போர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே“ என்று
நெடுந்தூரத்திலே நின்று அந்த மேன்மைக்குப் பல்லாண்டு பாடும்படியா யிருந்ததத்தனையன்றி
அணுகிச் சென்று வாய்திறக்க வழியுண்டாயிருந்ததோ வென்கிறாள்.

(உலகுண்ட பெருவாய ரிங்கேவந்து)
இத்தால் பிரளமாகிற பெரிய ஆபத்துக்கு உதவினவர் என்று சொல்லுகிறதன்று,
அவர் தன்னோடு கலக்க வருகிறபோது இருந்த ரீதியைப்பற்றிச் சொல்லுகிறாள்.
பிரளய காலத்திலே உலகங்கட்கெல்லாம் தம்மையொழியச் செல்லாமையிருந்தாப் போலே
என்னை யொழியச் செல்லாதவராயன்றோ அவர் ஸம்ச்லேஷிக்கவந்தபோதில் இருந்தபடி என்கை.

பொருகயற்கண் நீரரும்பப் புலவிதந்து =
அவர் வந்து கலந்ததனால் நான்பெற்ற பேறு இதுகாணென்கிறாள்.
“கண்ணீர் பெருக“ என்னாமல் ‘அரும்ப‘ என்றதனால் விரஹ சோகாக்நியாலே உள்ளூலர்ந்து கிடக்கின்றமை தோன்றும்.
உள்ளே உலர்ந்து கிடக்கும் போது கண்ணீர் பெருகுவதெங்ஙனே?

(புலவி தந்து)
தன்னைக் கிட்டினாரை “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்“ என்கிறபடியே
ஆனந்தத்தின் எல்லையிலே நிறுத்த வல்லவரான அவர் காண் எனக்கு இப்போது துயரத்தை விளைத்தது.

(தந்து)
உபயவிபூதிநாதரான அவர் தம் முடைய பணப்பையில் நின்றும் அவிழ்த்துத் தந்த செல்வம்
இதுகாணென்கிறாள் போலும்.

அவர் தமக்கு நெஞ்சில் இரக்கமில்லாமை வந்தேறியானாலும் இயற்கையிலே கருணை யுண்டாகையாலே
அதனால் தூண்டப் பெற்று ஒருவார்த்தை சொல்லிப்போனார் காண்;
பிரிவில் நான் தரித்திருக்க வேணுமென்று பார்த்து ‘நம்ஊர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று
அழகும் போன போதை யழகும் தோழீ! நீ காணப் பெற்றிலையே! என்றாளாயிற்று.

அந்த பெரிய திருவடி உனக்கு அடங்கினவன் அல்லனோ
ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கு என்று அன்றே ஆவணை ஓலை எழுவது
ஆகிலும் பணி செய்வது க்ருஹிணிக்கு இறே
அவன் ஒருவன் மட்டும் இல்லையே நியமிக்க
நித்ய ஸூரிகள் அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டார்களே
விலஷணமான மேன்மையினாலே எதிர்த்து பேச ஒண்ணாத படி இருந்தாரே

இரு கையில் சங்கு இவை இல்லா –
அவர் போனாலும் அவர் உகந்த வளையல்கள் இருந்தால் போதைப் பாக்கலாமே
ஒரு கை மட்டும் இல்லை
இரு கைகளிலும் இல்லை
இவர் இல்லாது ஒழிந்தாலும் இவையும் நில்லாமல் போகவோ சங்கு -இவை நில்லா
சேஷியான அவர் போகலாம்
சேஷமான இவையும் போகலாமோ
சேதனர் -குறை கண்டு போகலாம்
அசேதனங்கள் இவை போகலாமோ
வந்து கலந்தவர் போகலாம்
சகஜமான இவையும் போகலாமோ
கைக்கு அடங்காதவர் போகலாம்
கைக்கு அடங்கின இவையும் போகலாமோ
அவன் நிற்கிலும் இவை நிற்காமல் போக வேண்டுமோ
போகேல் என்ன அவர் போனது போல இவையும் பல கால் எடுத்து எடுத்து பூண்டாலும் கழன்று போகின்றனவே-

எல்லே பாவமே

இலங்கு ஒளி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட பெரு வயிற்ற
கரு முகிலே யொப்பர் வண்ணம்
பிரிந்து போகும் பொழுது வடிவில் பிறந்த புதுக் கணிப்பை திருஷ்டாந்தம் இட்டு சொல்கிறார்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் என்றாள் கீழ்
இங்கு நின்றும் கொண்டது எல்லாம் அங்கு குடி இருக்க வேணுமே
தன்னை பெரும்கடல் -அவர் காளமேகம் -மேகம் அபி நிவேசதுடன் கடல் சாரம் கவர்ந்து
போவது போலே இவள் உடைய -சௌந்தர்ய சாகரம் கொள்ளை கொண்டு
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் -என்கிறாள்
ஐயோ மேகம் முகக்கும் இடமாகப் பெற்றேனே
மேகம் முகந்து பெய்யும் இடமாக பெற்றிலேனே
என்பதால் மண்டி யுண்ட என்கிறாள்
அன்றிக்கே
இவ் வளைவையும் கொள்ளை கொண்டும் வயிறு நிரம்ப வில்லையே -திருப்தி இல்லையே
பெரு வயிற்று-

அவர் பிரிந்து போகும் பொழுது வடிவில் பிறந்த புகர் வெள்ளம் இருந்த படியை நீ காணப் பெற வில்லையே
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகுண்ட பெரு வாயர் போயினர்
ஓர் இருவராய் வந்து கிட்டினார்களோ
கடலில் அமுததுக்காக அன்று அமரர் சூழ்ந்தது போலே
வைகுண்ட து பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணு ர சிந்த்யாத்மா பக்தைர் பாகவ தைஸ் சஹ
பக்தர்களும் பாகவதர்களும் சூழ
விலக்கி கிட்டே சென்று போகேல் சொல்ல முடியுமா

குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -கண்ணால் முகக்கலாய் இருந்ததோ
கையும் திரு ஆழியுமாய் இருந்த மேன்மை கிட்டலாம் படி இருந்ததோ
என் கையைப் பிடித்த கையும் காலைப் பிடித்த கையும் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கின்றனவே
கலந்த போது நீர்மைக்கு எல்லை இல்லாதவோ பாதி
இப்பொழுது மேன்மைக்கு எல்லை இன்றி இருந்ததே
வடிவார் சோதி -சுடர் ஆழியும் பல்லாண்டு –அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு -என்று
மேன்மைக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய அணுகி வாய் திறக்கவோ

உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
பிரளய காலத்தில் தன்னை அன்றி செல்லாத இருந்த உலகமோபாதி
என்னை ஒழிய செல்லாதவராய் இங்கே சம்ஸ்லேஷிக்க வந்தார்

பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து
கலவியின் பேறு இது தான்
கண்ணீர் பெருக இல்லை அரும்ப
விரஹ சோக அக்னியால் உள்ளுலர்ந்து கிடக்கின்றாள்

புலவி தந்து
தன்னை கிட்டினாரை-வீவில் இன்பம் மிக வெள்ளை நிகழ்நதனன் -என்கிறபடி
ஆனந்தத்தின் எல்லையில் நிறுத்த வல்லவாரன அவர்
என்னை துயரத்தின் எல்லையில் நிறுத்தி

தந்து
உபய விபூதி நாதர் தனது பணப்பையில் நின்று அவிழ்த்து எனக்கு செல்வம் கொடுத்து அருளினார் இந்த செல்வம் பாராய்

பிரியில் தான் தரித்து இருக்க கருணை உடன்
நம்மூர் திருவரங்கம் பெரிய கோயில் -என்கிற
தர்ம வார்த்தை சொல்லிப் போந்தார்
சொல்லும் போது திரு அதர அழகையும்
போன போதை அழைகையும் தோழி நீ காணப் பெறவில்லையே-

————————————————————————–

தலைமகன் தன் பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என் பக்கலிலுள்ளவை
யெல்லாவற்றையுங் கொள்ளை கொண்டு போயினானென்கிறாள்–

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.

பதவுரை

மின் இலங்கு திரு உருவும்-மின்னல்போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும்
பெரிய தோளும்-பெரிய திருத்தோள்களும்
கரி முனிந்த கைத் தலமும்-குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப்புடைத்த திருக்கைகளும்
கண்ணும்–திருக் கண்களும்
வாயும்–திரு அதரமும்
தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே–தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத்துழாய் மாலையின் கீழே
தாழ்ந்து இலங்கு–தாழ்ந்து விளங்குகின்ற
மகரம் சேர் குழையும்–மகர குண்டலங்களுமாகிற இவற்றை
காட்டி–ஸேவை ஸாதிப்பித்து
என் நலனும்–என்னுடைய அழகையும்
என் நிறைவும்–என் அடக்கத்தையும்
என் சிந்தையும்–என் நெஞ்சையும்
என் வளையும்–என் கை வளைகளையும்
கொண்டு–அபஹரித்துக் கொண்டதுமன்றி
என்னை ஆளும் கொண்டு–என்னை அடிமை யாக்கிக் கொண்டு,
பொன் அலர்ந்த–பொன் போல் மலர்ந்த
நறு–பரிமளம் மிக்க
செருந்தி பொழிலின் ஊடே–ஸுரபுன்னைச் சோலையினிடத் தேயிருந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினார்–நீர் வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய் விட்டார்!.

மின்னிலங்கு திருவரங்கம் =
மின் போலே விளங்கா நின்றுள்ள திருமேனியை முதலிலே காட்டினாரென்கிறாள்.
“கார்வண்ணந் திருமேனி“ என்றும்
“கருமுகிலேயொப்பர்வண்ணம்“ என்றும்
“முகிலுருவமெம்மடிகளுருவந்தானே“ என்றுங்கீழே சொல்லி யிருக்க,
இங்கே ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது என்னனெனில்;
ஔதார்யத்திற்கும் விடாய்தீர்க்குந் தன்மைக்கும் மேகத்தை ஒப்புச் சொல்லிற்றுக் கீழ்;
எதிர்விழி விழிக்க வொண்ணாதபடியான தன்மையை நோக்கி இங்கு ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது.

ஆனாலும் காளமேகத்தின் நிறமேயன்றோ வடிவின்நிறமென்னில்;
திருவாழியாழ்வானுடைய புகர் திருமேனியெங்கும் பரவியிருக்கையாலே இங்ஙனே சொல்லக் குறையில்லை யென்க.
அருண கிரணத்தாலே திருப் பல்லாண்டும் நோக்குக.
“ஒருகையிற்சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயரிங்கேவந்து“ என்று கீழே சொல்லிற்றும் இங்கே நினைக்கத்தக்கது.
பெரிய மேன்மையைக் காட்டினமை சொல்லிற்றாயிற்று.

பெரியதோளும் =
காலமுள்ளதனையும் அனுபவித்தாலும் வேறொரு அவயவத்தில் போக வொட்டாதபடி துவக்க வல்ல
அளவிறந்த போக்யதை வாய்ந்த திருத்தோள்கள்.
“தோள் கண்டார் தோளே கண்டார்“ என்னும்படியானவை.
ஆகவே, பெரிய என்று போக்யதையிலுள்ள பெருமையைச் சொன்னபடி.

இனி, “பாஹுச்சாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந;“ என்கிறபடியே
தோள் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் ஒதுங்கினவர்கள் சுருங்கி
நிழலே மிக்கிருக்கும்படியான பெருமையைச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம்.

கரிமுனிந்த கைத்தலமும் =
கம்ஸனால் மதமூட்டி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீட மென்கிற யானையைத் தொலைத்த மிடுக்க விளங்க நின்ற திருக்கைகள்.
ஒரு விசேஷணமிட வேண்டாதே இயற்கையாகவே பரமபேக்யமா யிருந்துள்ள கண்ணும் வாயும்.

(தன்னலர்ந்த நறுந்துழாய் இத்யாதி)
தன்னிலத்திற் காட்டிலும் செவ்வி பெற்று நறுமணம் மிக்க திருத் துழாய் வளையத்தினருகே
திருத்தோளளவுந் தாழ்ந்து விளங்குகின்ற மகர குண்டலங்களும்,
ஆக இவற்றையெல்லாம் ஸேவை ஸாதிப்பித்து.

(என்னலனு மென்னிறைவு மென்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு)
ஸர்வஸ்வதானம் பண்ணுவாரைப்போலே வந்து ஸர்வஸ்வத்தையுங் கொள்ளை கொண்டார் என்கிறாள்.
நலன் – நலம்; மகரனகரப்போலி. குணம் என்றபடி.
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்கிற ஆத்ம குணங்களையும், அழகு மென்மை முதலிய தேஹ குணங்களையும் சொன்னபடி.

(நாணமாவது, தகாத காரியத்தில் மனமொடுங்கிநிற்பது.
மடமாவது, எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல்.
அச்சமாவது, மிகச்சிறிய காரணத்திலும் மனம் நடுங்குதல்.
பயிர்ப்பாவது, பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக் கொள்வது.)

ஆக
இக்குணங்களையும் அழகு முதலியவற்றையுங் கொள்ளை கொண்டாரென்றது,
வைவர்ணியப்படுத்தி வாய் பிதற்றச் செய்தாரென்றபடி.

“என்னலனும் நிறைவும் சிந்தையும் வளையுங் கொண்டு“ என்று சொல்லாதே
‘என்‘ என்பதை ஒவ்வென்றிலுஞ் சேர்த்து ‘என்னிறைவும் என்சிந்தையும் என்வளையும்‘ என்று சொல்லுவானென்? என்னில்;
இதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க,
என்னுடையவற்றை அவர் கொள்ளை கொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! என்று எடுத்தெடுத்துக் காட்டுகிறபடி.

என்னையாளுங்கொண்டு =
என் ஸர்வ ஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டு போன மாத்திரமேயோ?
அவற்றைச் சுமந்துகொண்டு போவதற்கு. ஆளாகவும் என்னையே அமைத்துக் கொண்டபடி என்னே! என்கிறாள்.
ஒருவனுடைய வீட்டிலே கொள்ளை கொள்ளப் புகுந்து ஸர்வஸ்வத்தையும் பறித்து அவற்றை அந்த வீட்டுக்குடையவனது
தலையிலேயே வைத்துச் சுமக்கச் செய்து கொண்டு போமா போலே யிருந்ததீ! என்கிறாள்.
அன்றியே,
“கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றவேல்“ என்கிறபடியே
அவரோடு கலந்து பரிமாறின பரிமாற்றத்தையே அடிமையாக நினைத்திருக்கையாலே அதனைச் சொன்னபடியுமாம்.

இங்ஙனே மறுபடியும் ஒருகால் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் இருக்கவேணுமே;
முதலே போய் விட்டால் பின்னையுங் கொள்ளை கொள்வதற்கு இடமில்லைபாகுமே.
‘உள்ளம். புகுந்தென்னை நைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்“ என்று –
போகிற உயிரையும் போகவொட்டாமல் நிறுத்தி வைப்பது மேன்மேலும் ஹிம்ஸைகளைச் செய்வதற்கு ஆச்ரயம் வேணுமென்றாயிற்று.
அப்படியே, பின்னையும் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் நிறுத்த வேண்டி –
(நான் ஸத்தை பெற்றிருப்பதற்காக) ஊரைச் சொல்லிப் போனாரென்கிறாள்;
பொன்போலேயலர்ந்து பரிமளம் மிக்கிருந்துள்ள பூவையுடைய ஸுர புன்னபை் பொழிலினூடே
உபய காவேரீ மத்தியத்திலுள்ள திருவரங்கம் பெரிய கோயில் நம்மூர் என்று சொல்லிக் கொண்டே போயினார் என்கிறாள்.

இங்கே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்;-
“திருநகரியில் நின்றும் கோயிலளவுஞ் செல்லப் பொழிலாய்க் கிடந்ததோ வென்னில்;
ஒரு காளமேகம் வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால் கண்ட விடமெங்கும் தளிரும் முறியுமாகாதோ? என்று பட்டாருளிச் செய்வர்“ என்று.

முற்காலத்தில், விக்ரமசோழதேவன் என்பானொரு அரசன் தமிழில் ரஸிகனாயிருந்தான்;
அவனது ஸபையில் வைஷ்ணவ பண்டிதர்களும் சைவ பண்டிதர்களும் அடிக்கடி செல்லுவதுண்டு;
ஒருகால் இரு சமயத்து வித்வான்களும் கூடியிருந்த போது அவ்வரசன்
“தலைமகன் பிரிந்தபோது தலைவி இன்னாப்போடே சொல்லும் பாசுரம் எங்ஙனே யிருக்கிறது? சொல்லுங்கள், கேட்போம்‘
என்று இரு வகுப்பினரையுங் கேட்க,
ஸ்ரீவைஷ்ணவ வித்வான்
“மின்னலங்கு திருவுருவம் பெரியதோளும்“ என்று தொடங்கி இப்பாசுரத்தை யெடுத்துச் சொன்னார்;
சைவ வித்வான்
“எலும்பஞ்சாம்பலு முடையவனிறைவன்“ என்று தொடங்கி ஒரு செய்யுளைச் சொன்னான்;
இரண்டையுங் கேட்டு அரசன்
‘நெஞ்சில் கிலாய்ப்போடே சொல்லச் செய்தேயும் மின்னிலங்கு திருவுருவும் என்று நெஞ்சு பிணிப்புண்ணுமாறு
சொன்னவளே உண்மையில் தலைமையுடையவள்;
மற்றொருத்தி பிணந்தின்னி‘ என்றானாம்.

தன் பக்கல் உள்ள அனைத்தையும் காட்டி
என் பக்கல் உள்ளவற்றையும் கொள்ளை கொண்டான்

மின்னிலங்கு திருவுருவம்
கீழே கார் வண்ணன் -கரு முகில் வண்ணம் -என்றவர் மின்னிலங்கு திருவுரு
எதிர் விழி விழிக்க ஒண்ணாத படியான தசை
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -புகர் திரு மேனி எங்கும் பரவி
பெரிய மேன்மையை சொல்லிற்று ஆயிற்று

பெரிய தோளும்
கால தத்வம் உள்ளதனைத்தும் அனுபவித்தாலும் முடிக்க ஒண்ணாத அளவிறந்த போக்யதை
தோள் கண்டார் தோளே கண்டார்
பாஹூ ச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மனா
ஒதுங்கினவர்கள் சுருங்கி நிழலே மிக்கு
பெருமையை சொல்லிற்று ஆகவுமாம்

கரி முனிந்த கைத்தலமும்
விசேஷணம் இடாத -இயற்கையாகவே பரம போக்யமாய் உள்ள திருக் கண்ணும் திரு வாயும்

தன்னலர்ந்த திருத் துழாய் இத்யாதி
தன்னிலத்தில் காட்டிலும் செவ்வி பெற்ற திருத் துழாய் வளையத்தின் அருளே
திருத் தோள்கள் அளவும் தாழ்ந்து விளங்குகின்ற திரு மகரக் குண்டலங்களும்

ஆகைய இவற்றை எல்லாம் சேவை சாதிப்பித்து

என்னலனும் -நலன் குணம் -நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு ஆத்ம குணங்களையும்
அழகு மென்மை தேக குணங்களையும் கொண்டான்
என் நிறைவும்
வைவர்ணியப் படுத்தி வாய் பிதற்ற செய்தான்
என் சிந்தனையும்
என் வளையும் கொண்டு
என்னை ஆளும் கொண்டு
சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து
சர்வ ஸ்வத்தையும் கொள்ளை கொண்டான்
என் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
அவருடைய
குணங்களையும்
பும்ஸ்வத்தையும்
நெஞ்சையும்
ஆபரணங்களையும்
கொள்ளை கொள்ள பிறந்தது இருக்க
என்னுடையவற்றை கொள்ளை கொண்ட அற்புதம் காணீர் இது இது என்று எடுத்து காட்டுகிறாள்

என்னை ஆளும் கொண்டு
கொள்ளை கொண்ட சர்வ ஸ்வத்தையும் சுமந்து போக ஆளாகவும் என்னை நியமித்து
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் -என்கிறபடியே
அவரோடு கலந்த பரிமாற்றமே அடிமை யாக நினைத்து சொல்கிறாள் என்னவுமாம்

மீண்டும் கொள்ளை கொள்ள ஆஸ்ரயம் வேணுமே
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர் பெய்து கூத்தாட்டுக் காணும்
நான் சத்தை பெற்று இருப்பதற்காக ஊர் பேரைச் சொல்லி போந்தான்
திரு நகரியில் நின்றும் கோயில் அளவும் செல்ல பொழிலாய் கிடந்ததோ என்னில்
ஒரு காள மேகம் வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால்
கண்டவிடம் எங்கும் தளிரும் முறியும் ஆகாதோ -பட்டர்

விக்கிரம சோழன் சபையில் தலைமகள் இன்னாப்புடன் சொல்லும் பாசுரம் -தலை மகன் பிரியும் பொழுது
சொல்லுங்கோள் கேட்போம் என்று ஸ்ரீ வைஷ்ணவ வித்வான்களையும் சைவ வித்வான்களையும் கேட்க
மின்னிலங்கு திரு வுருவும் பெரிய தோளும் -இப்பாசுரத்தை இவர்கள் சொல்ல
சைவ வித்வான் எலும்பும் சாம்பலும் உடையவன் என்று தொடக்கி ஒன்றை சொல்ல
இரண்டையும் கேட்ட அரசன்
நெஞ்சில் கிலாப்போடே சொல்லச் செய்தேயும் மின்னிலங்கு திரு வுருவம் என்று
நெஞ்சு பிணிப் புண்ணுமாறு சொன்னவளே உண்மையில் தலைமை உடையவள்
மற்றவள் பிணம் தின்னி -என்றானாம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: