திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-16-20- -திவ்யார்த்த தீபிகை —

“மென் கிளி போல் மிக மிழற்று மென் பேதையே“ என்றது கீழ்ப்பாட்டில்;
நாயகன் எதிரே நிற்கிறானாக நினைத்து மென் கிளி போல் வார்த்தை சொன்ன விடத்தில்
அவனும் அப்படியே மேலிட்டு வார்த்தை சொல்லக் கேட்டிலள்;
அதனால் நின்ற நிலை குலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் என் மகள் என்கிறாள் திருத்தாய்.
அவனுடைய ரக்ஷகத்வமும் லௌலப்ய ளெஸசீல்யாதிகளும் பாவியேனிடத்தில் பலிக்கப் பெற்றிலவே!
என்று கண்ணுங் கண்ணீருமாய்க் கதறுகிற படியைப் பேசுகிறாளாய்ச் செல்லுகிறது.

கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்¦ தன் கனியே என்றும்,
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும்,
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்என்றும்,
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.

பதவுரை

கன்று மேய்த்து-கன்றுகளை ரக்ஷித்து
இனிது உகந்த-மிகவும் மகிழ்ச்சி கொண்ட
காளாய் என்றும்–இளையோனே! என்றும்,
கடி பொழில் சூழ்–வாஸனை மிக்க சோலைகளாலே சூழப்பட்ட
கண புரத்து–திருக் கண்ண புரத்திலே (பழுத்த)
என் கனியே என்றும்–என் பழமே! என்றும்
மன்று அமர கூத்து ஆடி–வீதி யாரக் குடக் கூத்தாடி
மகிழ்ந்தாய் என்றும்–மகிழ்ந்தவனே! என்றும்
வட திரு வேங்கடம்–வட திருவேங்கட மலையிலே
மேய மைந்தா என்றும்–பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும்,
அசுரர் குலம்–அசுரக் கூட்டங்களை
வென்று–ஜயித்து
களைந்த–வேரோடொழித்த
வேந்தே என்றும்–வேந்தனே! என்றும்
விரி பொழில் சூழ்-விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட
திருநறையூர்–திருநறையூரிலே
நின்றாய் என்றும்–நின்றருளுமவனே! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்-அடர்ந்த திருக்குழற் கற்றையையும்
கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
துணை முலை மேல்–ஒன்றோடொன்றொத்த தனங்களிலே
துளி சோர–கண்ணீர்த் துளிகள் பெருகும் படியாக
சோர்கின்றாள்–தளர்கின்றாள்

கன்று மேய்த்து இனிது கந்தகாளாய் என்றும் =
ஸர்வ ரக்ஷகனான நீ ரக்ஷணத் தொழிலில் நின்றும் கை வாங்கினாயோ என்கிறாள்.
நித்ய ஸூரிகளை ரக்ஷிக்குமளவோடே நின்றால் ஆறியிருப்பேன்;
ராம கிருஷ்ணாதிரூபத்தாலே வந்தவதரித்து இடக்கையும் வலக்கையுமறியாத இடையரை ரக்ஷித்தவளவோடே நின்றாலும் ஆறியிருப்பேன்;
அறிவு கேட்டுக்கு மேலெல்லையான கன்றுகளையுமுட்பட மேய்த்த உன்னை விட்டு எங்ஙனே ஆறி யிருப்பேனென்கிறாள்.
அறிவில்லாமையில் கடைநின்ற கன்றுகளையும் ரக்ஷித்த நீ, உன் வாசியை யறிந்து உன்னை யொழியச்
செல்லாத வென்னை ரக்ஷியாதொழிவதே!, நானும் கன்றாகப் பிறக்கப் பெற்றிலேனே! என்கிறாள் போலும்.

கண்ணபிரானுக்குப் பசுக்களை மேய்ப்பதில் ஸாதாரணமான உவப்பும்
கன்றுகளை மேய்ப்பதில் இனிது உவப்பும் ஆம் என்பது சொற் போக்கில் தெரியக் கிடக்கிறது;
“திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி“ என்றார் நம்மாழ்வார்;
“கன்றுமேய்த்து இனிது உகந்த“ என்கிறாரிவ்வாழ்வாழ்வார்.

காளாய்! = இளம் பருவத்தைச் சொன்னபடி;
“காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்“ என்பது திவாகரம்.

கடி பொழில் சூழ் கணபுரத்தென் கனியே யென்றும் =
அவ் வக்காலங்களில் பிற்பட்டாரையும் ரக்ஷிக்கைக்காக வன்றோ திருக் கண்ணபுரத்திலே வந்து இனிய கனி போல் நின்றருளிற்று.

“கன்றுமேய்த்தினிதுகந்த காளாய்“ என்றவுடனே
“கடிபொழில் சூழ்கணபுரத்தென்கனியே“ என்று சொன்ன அமைதியை நோக்கி இவ்விடத்திற்கு
பட்டர் ரஸோக்தியாக அருளிச் செய்வதொன்றுண்டு;-
“கண்ண பிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவை கை தவறிப் போகையாலே
அவற்றை மடக்கிப் பிடிக்கப் போன விடத்திலே விடாய் தீருவிருப்பதொரு சோலையைக் கண்டு
திருவாய்ப்பாடியாக நினைத்துப்புகுந்தான்;
அப் பொழில் -மயல் மிகு பொழிலாகையாலே கால் வாங்க மாட்டிற்றிலன்; அதுவாயிற்றுத் திருக் கண்ணபுரம்“ என்பராம்.

கடி பொழில் சூழ் கணபுரம் =
“ஸர்வகந்த;“ என்கிற சுருதியின் படியே பரிமள மயனாயிருக்கிற எம்பெருமானையும்
கால் தாழப் பண்ணுவித்துக் கொள்ள வல்ல பரிமளமுற்ற பொழில்களென்க.

(கணபுரத்தென் கனியே!)
அச் சோலை பழுத்த பழம் போலும் சௌரிராஜன்,
“என் கனியே“ என்கையாலே உபாயாந்தர நிஷ்டர்களுக்குக் காயாகவே யிருப்பனென்பது போதரும்.
அவர்களுக்கு ஸாதநாநுஷ்டானம் தலைக் கட்டின பின்பு அனுபவமாகையாலே அது வரையில் காயாயிருப்பன்;
ப்ரபந்நர்க்கு அத்யவஸாயமுண்டான ஸமயமே பிடித்துப் பரம போக்யனா யிருக்கையாலே பக்குவ பலமாயிருப்பன்.

அவல் பொதி அவிழ்ப்பாரைப் போலே ஸமுதாய ஸ்தலத்திலே ஸர்வ ஸ்வதானம் பண்ணினாயல்லையோ என்கிறாள்.
மன்று – நாற்சந்தி; அஃது அமரக் கூத்தாடுகையாவது
கூத்தாடி முடிந்த பின்பும் அவ்விடம் கூத்தாடுவது போலவே காணப் படுகையாம்.
“பெருமாள் எழுந்தருளிப் புக்க திரு வீதி போலே காண் திருவாய்ப்பாடியில் அம்பலமிருப்பது“ என்று பட்டர் பணிக்கும்படி.
மன்று என்று இடையரெல்லாரும் திரளுமிடத்திற்கும் பெயராதால், இச்சொல் ஆகு பெயரால்
இடையர்களை உணர்த்தி இடையரெல்லாரும் ஈடுபடும் படும்படியாகக் கூத்தாடினமை சொல்லுகிறதென்றும் உரைப்ப.

மகிழ்ந்தாய் என்றவிடத்திற்குப் பெரியாச்சான் பிள்ளை வியாக்கியானம் காண்மின் ;-
“கூத்துக் கண்டவர்கள் உகக்கை யன்றியே உகப்பானும், தானாயிருக்கை;
அவர்களைத் தன் கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய் உகப்பானும் தானாயிரக்கிறபடி.
ஸஜாதீயர்களை ஈடுபடுத்திக் கொள்ளப் பெற்றோம் என்று உகந்தானாயிற்று.
அந்தணர்க்குச் செல்வம் மிக்க பல யாகங்கள் நிகழ்த்துமா போலவும்
விஷய ப்ரவணர்க்கு ஐச்வரியம் விஞ்சினால் அடுத்தடுத்து விவாஹம் பண்ணிக் கொள்ளுமா போலவும்
இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் போக்கு வீடாக ஆடுவதொரு கூத்து குடக்கூத்து;
சாதி மெய்ப் பாட்டுக்காகக் கண்ணபிரான் குடக் கூத்தாடினபடி.
ஊர்ப் பொதுவான பண்டம் எனக்கு அரிதாயிற்றே! என்று பரிதாபந் தோற்றச் சொல்லும் வார்த்தை
மன்ற மரக்கூத்தாடி மகிழ்ந்தாய்! என்பது.

வட திவேங்கடம் மேய மைந்தா வென்று =
ஒரு ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுத்தது மாத்திரமன்றியே உபயவிபூதிக்கும் நடுவானதொரு
மன்றிலே நின்று தன்னைக் கொள்ளை கொடுத்த படியைச் சொல்லுகிறது;
“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே“ –
“வானவர் வானவர்கோனொடும் ஈமன்றெழுந் திருவேங்கடம் என்றும்
“கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்“ என்றுஞ் சொல்லுகிறபடியே
உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசியற அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவு எனக்கு அரிதாயிற்றே!
என்று பரிதபித்துச் சொல்லுகிறபடி.

வென்றசுரர்குலங்களைந்த வேந்தே யென்றும் =
அவன்றான் விரோதி நிவ்ருத்தியைச் செய்வதற்கு அசக்தனென்றும்
அது பிறரால் ஆக வேண்டிய தென்றும் இருந்தால் ஒருவாறு ஆறியிருக்கலாம்;
அசுர ராக்ஷஸர்களின் கூட்டங்களைக் கிழங்கெடுத்து வெற்றி பெற்ற பெரு வீரனாய்
அவன் விளங்கும் போதும் நான் இழக்கிறனே! என்று வருந்திச் சொல்லுகிறபடி.

விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாயென்றும் =
வென்று அசுரர் குலங்களைந்த அவதாரத்திலும் இழந்தவர்களுக்கும் முகங் கொடுப்பதற்காகத்
திரு நறையூரிலே வந்து நின்றருளுமவனே! என்கிறாள்.
நறையூர் நம்பியும் நாச்சியாரும் கடாக்ஷிக்க
அக் கடாக்ஷமே விளை நீராக வளருகிற பொழிலாகையாலே விரி பொழிலாயிருக்கும்.
அசேதநங்களைக் கடாக்ஷித்து வளரச் செய்பவன் என்னைக் கடாக்ஷியாதொழிவதே! என்கிறாள்.
பிராட்டி பக்கலிலே பிச்சேறித் தன்னூரை அவள் பெயராலே ப்ரஸித்தப்படுத்தி
நாச்சியார் கோவிலாக்கி இப்படி ஒருத்திக்குக் கை வழி மண்ணாயிருப்பவன் என்னொருத்தியை
விஷமாக நினைப்பதே! என்பதும் உள்ளுறை.

துன்று குழல் கரு நிறத்து என் துணையே யென்று –
மிகவும் நெருங்கி இருண்டிருக்கின்ற திருக் குழற் கற்றையையும் காளமேகம் போன்ற வடிவையுமுடைய
உன் துணைவனே! என்கிறாள்.

ஆக இப்படியெல்லாம் சொல்லா நின்று கொண்டு தன் ஆற்றாமைக்கு ஒரு போக்கடி காணாமையாலே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்ந்தாளாயிற்று.

கன்று மேய்த்தினிதுகந்த காளாயென்று சொல்லித் துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாள்,
கடி பொழில் சூழ் கணபுரத்தென் கனியே யென்று சொல்லித் துணை முலை மேல்
துளி சோரச் சோர்கின்றாள் என்று தனித்தனியே கூட்டியுரைத்துக் கொள்க.

நிலை குலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் –
அவனுடைய ரஷகத்வமும் சௌலப்ய சுசீல்யாதிகளும் பாவியேன் விஷயத்தில் பலிக்கப் பெற வில்லையே

கன்று மேய்த்து இந்து உகந்த காளாய்
சர்வ ரஷகன் -நிதர ஸூரிகள் ரஷிக்கும் அளவில் இருந்தால் ஆறி இருப்பேன்
ராம கிருஷ்ணாதி ரூபத்திலே வந்து இடக்கை வலக்கை அறியாத இடையர்களை ரஷிக்கும்
அளவோடு இருந்து இருந்தால் ஆறி இருப்பேன்
அறிவு கேட்டுக்கு மேல் எல்லையான கன்றுகளையும் உட்பட
நானும் கன்றாக பிறக்க பெற்றிலேனே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -கன்று மேய்த்து இனிது உகந்த –

கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்னும்
கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டு இருக்கும் போது
அவை கை தவறிப் போகையாலே
அவற்றை மடக்கி பிடிக்கப் போன இடத்தில் விடாய் தீர இருப்பதொரு சோலையைக் கண்டு
திரு வாய்ப்பாடியாக நினைந்து புகுந்தான்
அப் பொழில் மயல் மிகு பொழில் ஆகையாலே கால் வாங்க மாட்டிற்று இலன்
அது வாயிற்று திருக் கண்ணபுரம் -என்பார் பட்டர்

சர்வகந்த வஸ்துவையும் கால் தாழப் பண்ணும் பரிமளம் உள்ள பொழில்கள்
கணபுரத்து என் கனி–அந்த சோலை பழுத்த பழம்போலும் ஸ்ரீ சௌரி ராஜன்
உபாயாந்தர நிஷ்டருக்கு காயாகவும் -சாதனானுஷ்டானம் தலைக் கட்டின பின்பு தானே அனுபவம்
பிரபன்னருக்கு அத்யாவசியம் உண்டான சமயமே பிடித்து பரம போக்யனாய் இருக்கையாலே பக்குவ பலமாய் இருப்பானே

மன்று அமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
மன்று- நால் சந்தி
பெருமாள் எழுந்து அருளிப் புக்க திரு வீதி போலே காண் திருவாய்ப்படியிலே அம்பலம் காண்

மகிழ்ந்தாய்
கூத்துக் கண்டவர்கள் உகக்கை அன்றிக்கே உகப்பானும் தானாய் இருக்கை
அவர்களை தனது கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய்
உகப்பானும் தானாய் இருக்கிறபடி
ஊர் பொதுவான பண்டம் எனக்கு அரிதாயிற்றே

வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
ஒரு ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுத்தது அன்றிக்கே
உபய விபூதிக்கும் நடுவான மன்றிலே நின்று தன்னை கொள்ளை கொடுத்த படி
அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவு எனக்கு அரிதாயிற்றே

வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
வீரனாய் இருந்தும் இழக்கிறேனே

விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
நம்பியும் நாச்சியாரும் கடாஷிக்க அதுவே விளை நீராக
அசேதனங்களை கடாஷித்து அருளினவன் என்னை கடாஷியாது ஒழிவதே
பிராட்டி பக்கல் பிச்சேறி அவள் பெயராலே தன்னூரை நாச்சியார் கோயில் என்று பிரசித்தப் படுத்தினவன்
என் ஒருத்தியை விஷமாக நினைப்பதே

துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
ஆற்றாமைக்கு போக்கடி காணாமல் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்று
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்று சொல்லி
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
என்று தனித் தனியே கூட்டி கொள்க-

—————————————————————-

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,
நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.

பதவுரை

பொங்கு ஆர் மெல் இள கொங்கை-வளர்த்தி மிக்கதாய் மிருதுவாய் இளையதான தனம்
பொன்னே பூப்ப–வைவர்ணியமடையவும்
பொரு கயல் கண்–சண்டை யிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்கள்
நீர் அரும்ப–நீர்த் துளிகள் அரும்பவும்
போந்து நின்று–(வெளியே வந்து) நின்று
செம் கால மடம் புறவம்பெடைக்கு பேசும்சிறு குரலுக்கு–சிவந்த கால்களை யுடைய இளம் புறாக்கள் தம் பேடைகளோடு சிறு குரலாகப் பேசுகிற படிக்கு
உடல் உருகி–மெய் கரைந்து
சிந்தித்து–(அவன் முறைகெடப் பரிமாறும் படியை) நினைத்து,
ஆங்கே–அவ்வளவில்
தண் காலும்–திருத் தண் காலையும்
தண் குடந்தை நகரும்–திருக் குடந்தைப் பதியையும்
பாடி–(வாயாரப்) பாடி
தண் கோவலூர்-குளிர்ந்த திருக் கோவலூரையும்
பாடி-பாடி
ஆட-கூத்தாட
கேட்டு–அவ் வொலியை நான் கேட்டு,
நங்காய்-‘பெண்ணே!
நம் குடிக்கு–நமது குலத்திற்கு
இது நன்மையோ என்ன–வாய் விட்டுக் கூப்பிடுகிறவிது நலந்தானோ? என்று சொல்ல,
நறையூரும்–திரு நறையூரையும்
பாடுவாள் நவில் கின்றாள்–பாடுவாளாகப் பேசத் தொடங்கினாள்.

கீழ்ப் பாட்டில் “துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்ற படியே
தன் பெண் பிள்ளை சோர்வுற்றபடியைக் கண்ட திருத்தாயார்
‘இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாகிலும் வழிப்படக் கூடுமோ‘
என்றெண்ணி ‘நங்காய்! நீ இங்ஙனே வாய்விட்டுக் கூப்பிடுகையும் மோஹிக்கையுமாகிற இவை
உன்னுடைய பெண்மைக்குத் தகாது, இக்குடிக்கும் இழுக்கு‘ என்று சொல்ல;
அப்படி அவள் ஹிதஞ் சொன்னதுவே ஹேதுவாக மேன்மேலும் அதி ப்ரவருத்தியிலே பணைத்த படியைச் சொல்லுகிற பாசுரம் இது.

பொங்கார் மெல்லிளங்கொங்கை பொன்னே பூப்ப –
விரஹ வேதனையால் உடலில் தோன்றும் நிற வேறுபாடு பொன் பூத்தலாகச் சொல்லப்படும்; பசலை நிறம் என்பதும் அதுவே.
இதைப் பற்றிக் குறுந்தொகையில் ஒரு செய்யுளுண்டு; அதாவது-
“ஊருண்கேணியுண்டுறைத் தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி
நீங்கி விடுவுழி விடுவுழிப் பாத்தலானே“ (399) என்பதாம்.
ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசி போன்றது பசலை நிறம்;
தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்;
கையை எடுத்து விட்டோமாகில் மறுபடி அவ்விடமெல்லாம் பாசி மூடிக் கொள்ளும்;
அது போல, கலவியில் கணவனுடைய கைபடுமிடங்களில் பசலை நிறம் நீங்கும்;
அணைத்த கை நெகிழ்த்த வாறே அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசி போன்றது பசலைநிறம் என்றபடி.
(தொடு வுழித் தொடு வுழி – தொட்ட விடங்கள் தோறும். விடு வுழி விடு வுழி- விட்ட விடங்கள் தோறும்.
பரத்தலான் – பரவுகிற படியினாலே.)

பொரு கயல் கண்ணீரரும்ப –
சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்றனவாகக் கண்கள் வருணிக்கப்படும்.
அப்படிப்பட்ட கண்கள் நீர் பெருக நின்றபடி. காதலிகளின் கண்களில் நீர் பெருகுதல் எப்போதுமுள்ள தொன்று;
கலவி நிகழுங்காலத்தில் ஆனந்தக் கண்ணீர் பெருகும்; பிரிந்து வருந்துங் காலங்களில் சோகக் கண்ணீர் பெருகும்.
அதுவாயிற்று இங்குச் சொல்லுகிறது. முலையிலே பசலை நிறம் குடியிருந்தாற்போலே
கண்ணிலே சோக பாஷ்பம் குடியிருந்தது.
கீழ்பாட்டில் “துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாள்“ என்றது;
இங்கு “கண்ணீர் அரும்ப“ என்கிறது;
விரஹத் தீயாலே உள்ளுலர்ந்து உழக்குப் பாலைக் காய்ச்சினால் வாயாலே பொங்கி வழியா நிற்கச் செய்தேயும்
கீழே நீர் அற்றிருக்குமாபோலே கொள்க.

போந்து நின்று –
‘நாயகன் தானே வந்து மேல் விழ வேண்டும் படியான முலையழகையும் கண்ணழகையுமுடைய நீ
மேல் விழுகை பெண்மைக்குப் போராது காண்‘ என்று தாய் சொன்ன ஹிதம் தனக்குச் செவி சுட விருக்கையாலே,
நெருப்புட்பட்ட வீட்டில் நின்றும் பதறிப் புறப்படுமா போலே அத் தாய் இருந்த அகத்தில் நின்றும் சடக்கெனப் புறப்பட்டாள்.
ஸ்ரீவிபீஷணாழ்வான் தன் உபதேசத்திற்குடன்படாத ராவணன் சொன்ன திரஸ்கார வார்த்தையைக் கேட்ட பின்
ஒரு கணப் பொழுதும் அங்குத் தங்கியிருக்க மாட்டாமல் விரைந்து புறப்பட்டாற்போல.

நின்று –
தரிப்புப் பெற்று நின்று என்றபடி. ஹிதஞ்சொன்ன தாயினிருப்பிடத்தை விட்டு
அப்புறப் பட்டவாறே கால் பாவி நின்றாளாயிற்று. நாயகன் பக்கலில் முகம் பெறாத வளவில் ஓரிடத்தில்
கால் பாவி நிற்கக் கூடுமோ வென்னில்; தன்னுடைய பதற்றத்திற்குத் தான் வந்ததே காரணமாகத் தரிப்புப் பெற்று நின்றாளென்க.

இலங்கையைவிட்டு ஆகாசத்திற் கிளம்பின விபீஷணாழ்வான் ஸ்ரீராம கோஷ்டியில் முகம் பெறாதிருக்கச் செய்தேயும்
ராவண பவனத்தை விட்டு நீங்கின வளவையே கொண்டு ஆகாசத்திலே கால் பாவி நின்றாற்போல.
“உத்தரம் தீரமாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டத“ என்றார் வால்மீகி பகவான். (வ்யதிஷ்டத – நன்றாகத் தரித்து நின்றார் என்றபடி.)

செங்காலமடப்புறவம் பெடைக்குப் பேசுஞ் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்தாங்கே –
பாம்புக்கு அஞ்சியோடினவன் புலியின் வாயிலே விழுந்தாற்போலேயாயிற்று.
தாயின் வாய்ச் சொல் பாதகமாயிருக்கிறதென்று வெளியிலே வந்தவளுக்கு அதனிலுங் கொடிய சொல் செவியிலே விழுந்தது;
அதாவது, புறா ஆணும் பெண்ணுங்கூடிக் கொஞ்சும் பேச்சுக்கள் செவிப்பட்டன! அந்தோ!
இவையுங்கூடத் தம் தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழா நி்ற்க நம் நிலைமை இங்ஙனேயாயிற்றே! என்று உடலுருகினாள்;
பண்டு அவனும் தானும் இங்ஙனே கலந்து பரிமாறின படிகளை நினைத்துக் கொண்டான்; பின்னையும் உடலுருகினாள்.

(செங்காலமடப்புறவம்)
ஆண் புறாவின் சிவந்த கால்கள் நாயகனுடைய செந்தாமரை யடிகளை நினைப்பூட்டி வருத்தின போலும்.
இது கண்ணுக்கு விஷமானபடி.

(பெடைக்குப் பேசும் சிறுகுரல்)
இது காதுக்கு விஷமானபடி. இங்ஙனே அவன் ரஹஸ்யமாக நம் காதிலே பேசும் பேச்சுக்கள்
கேட்கப் பெறுவது என்றோ வென்று உடலுருகினாளென்க.

(ஆங்கே தண்காலும் இத்யாதி)
இவற்றாலே ஆற்றாமை மீதூர்ந்தவாறே நாயகனோடு பரிமாறுதற்கான ஸங்கேத ஸ்தலங்களைப் பற்றி
வாய் விட்டுக் கூப்பிடத் தொடங்கினாள். திருத்தண்கால், திருக்குடந்தை, திருக்கோவலூர் முதலான
திருப்பதிகளைச் சொல்லிப் பாடத் தொடங்கினாள். தண்கால் – குளிர்ந்த காற்று என்றபடி.
அங்குள்ள எம்பெருமான் குளிர்ந்த தென்றல் போலவே ச்ரமஹமான வடிவை யுடையன யிருக்கையாலே
அத் தலத்திற்கே தண்காலென்று திருநாமமாயிற்றென்ப.
பண்டு அப்பெருமான் தன்னை அணைக்கிற போது சிரமமெல்லாந் தீர்ந்த மிக இனிமையாயிருக்கையாலே
மீண்டும் அங்ஙனேயாக வேணுமென்று தண்காலைப் பாடினாள்.

(தண் குடந்தை நகரும் பாடி)
எம்பெருமான் அமுது செய்த போனகம் சேஷ பூதர்க்கு ஸ்வீகரிக்க வுரியது‘ என்று முறையிருக்க,
திருக்குடந்தை யாராவமுதாழ்வார், தமக்கு ஆக்கின திருப்போனகத்தை முற்படத் திருமழிசைப்பிரானை
அமுது செய்யப் பண்ணுவித்துப் பி்ன்னைத் தாம் அமுது செய்தாரென்று ஒரு ப்ரஸித்துயுண்டு.
இப்படியாக அன்பரோடு புரையறக் கலந்து பரிமாறுகிறவனென்று ஸாபிப்ராயமாகத் திருக்குடந்தையைப் பாடினாள்.

(தண்கோவலூர்பாடி)
‘பாவருந்தழிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாளிரவின், மூவரு நெருக்கி மொழி விளக்கேற்றி
முகுந்தனைத் தொழுத நன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் (பொய்கையார் பூதத்தார் பேயார்)
மூவரும் பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்து ஆனந்தப் பெருவெள்ளமெய்தின வரலாற்றை
நெஞ்சிற்கொண்டு திருக் கோவலுரைப் பாடினா ளென்க.
இவ்விடத்து வியாக்கியான வாக்கியங் காண்மின்;-
‘ஆஸ்ரிதர் வந்து கிட்டினால் பின்னை அவர்களோடு முறை யழியப் பரிமாறுகை யன்றியே தானே மேல் விழுந்து
ஸம்ச்லேஷித்த விடமாயிற்று, திருக்கோவலூராகிறது.
அவர்கள் மழை கண்டு ஒதுங்க அவர்களிருந்த விடத்திலே தானே சென்று தன்னை அவர்கள் நெருக்கத்
தான் அவர்களை நெருக்க இப்படி பரிமாறி, அவர்கள் போன விடத்திலும் அவ்விடத்திலே நிற்கிறானிறே
வாசல் கடைகழியாவுள் புகா என்று“.-

ஆட –
திருத்தண் காலையும் திருக் குடந்தையையும் திருக் கோவலூரையும் வாயாரப் பாடினவிடத்திலும்
த்ருப்தி பிறவமையாலே ஆடவும் தொடங்கினாள்;

இப்படி இவள் ஆடுகிறபடியைக் கண்டும் பாடுகிறபடியைக் கேட்டும் தாயானவள்
‘நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை?“ என்றாள்;
(அதாவது சேதந லாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமே யன்றி ஈச்வர லாபம் சேதநனுக்குப் புருஷார்த்தமன்றே;
அவன்றன்னுடைய பேற்றுக்கு அவன்றானேயன்றோ பதறவேணும்; நீ இங்ஙனே பதறக்கடவையோ? என்றாள்.
இவள் இது சொன்னதுவே ஹேதுவாகப் பரகால நாயகி நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள்.
பெடை யடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமல மடலெடுத்து மதுநுகரும்
வயலுடுத்த திருநறை யூரிலே சென்று சேரப் பெறுவது எந்நாளோ! என்னா நின்றாளென்க.

‘பாடுவான்‘ என்ற பாடமுமுண்டு; வான் விகுதி பெற்ற வினையெச்சம்.

தாயார் ஹிதம் சொன்னதே ஹேதுவாக
மேன்மேலும் அதி பிரவ்ருத்தியில் பணைத்த படி

கொங்கை பொன்னே பூப்ப –கண்ணீர் அரும்ப
சம்ச்லேஷம் ஹர்ஷ கண்ணீர்
விச்லேஷம் -சோக கண்ணீர்
கீழே நீர் சோர இங்கே அரும்ப
விரஹ தீயால் உள்ளுலர்ந்து நீர்ப் பசை அற்று கிடைக்கையாலே அரும்ப -என்கிறாள்

போந்து நின்று
ஹிதம் சொல்ல சொல் இவளை விரட்ட
ராவணன் சொல் கேளாமல் விபீஷணன் போனால் போல்
உத்தரம் தீரமாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -நன்றாகத் தரித்து நின்றார் போலே

செங்கால மடப்புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே
பாம்புக்கு அஞ்சி ஓடி புலி வாயில் விழுந்தால் போல்
முன்பு அவனும் தானும் பரிமாறின படிகளை நினைவூட்ட
செந்தாமரை அடிகளை நினைவூட்டி
கண்ணுக்கு இது காதுக்கு குரல் விஷமான படி

திருத் தண்கால்
தென்றல் போலே ஸ்ரமஹரமான
பண்டு தன்னை அணைக்கும் பொழுது சிரமம் தீர்ந்து இனிமையாக இருக்கையாலே
மீண்டும் அங்கனேயாக வேணும் என்று பாட

தண் குடந்தை நகரும் பாடி
அன்பர் உடன் புரை அறக் கலந்து
திரு மழிசை பிரான் உண்ட சேஷம் அமுது செய்து

தண் கோவலூரும் பாடி
பா வரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரும் நெருக்கி மொழி விளக்கு ஏற்றி முகுந்தனை தொழுத நன்னாடு
ஆஸ்ரிதர் வந்து கிட்டினால் பின்னை அவர்களோடு முறை அழிய பரிமாறுகை அன்றிக்கே
தானே மேல் விழுந்து சம்ச்லேஷித்த இடமாயிற்று திருக் கோவலூர்
அவர்கள் மழை கண்டு ஒதுங்க அவர்கள் இருந்த இடத்திலே தானே சென்று
அவர்கள் நெருக்க தான் அவர்களை நெருக்க இப்படி பரிமாறி
அவர்கள் போன இடத்திலும் அவ்விடத்திலே நிற்கிறான் இறே
வாசல் கடை கழியா உள் புகா என்று

ஆக
திருத் தண கால்
திருக்குடந்தை
திருக் கோவலூர்
மூன்றையும் வாயாரப் பாட மட்டும் திருப்தி இல்லாமல் ஆடத் தொடங்கினாள்

நம் குடிக்கு இதுவோ நன்மை என்றாள் திருத்தாயார்
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே அவன் தானே பதற வேண்டும்

இந்த ஹிதமே ஹேதுவாக நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள்
பெடை யடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம் மடல் எடுத்து மது நுகரும் வயலுடுத்த
திரு நறையூரிலே சென்று சேரப் பெறுவது எந்நாளோ
என்னா நின்றாள்
பாடுவான் -பாட பேதம் வான் விகுதி பெற்ற வினை எச்சம்

——————————————————————————————-

கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே?

பதவுரை

பாவம் செய்தேன் என்-பாவியான என்னுடைய
ஏர் வண்ணம் பேதை-அழகிய வடிவை யுடைய பெண்ணானவள்
என் சொல் கேளாள்–என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை;
திருமேனி கார் வண்ணம் என்னும்–(எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்;
கண்ணும்–(அவனது) திருக்கண்களும்
வாயும்–திரு வாயும்
கைத் தலமும்–திருக் கைகளும்
அடி இணையும்–திருவடியிரண்டும்
கமலம் வண்ணம் என்னும்–தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்;
பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும்–(அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்;
பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும்-குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்
விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்;
எம் பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்-என்னை அடிமைப் படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்;
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்–நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக் கடவேன் என்கின்றாள்;
நிறைவு அழி்ந்தார் நிற்கும் ஆறு இது அன்றோ-அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்!

பெண் பிள்ளையின் வாய் வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய்
கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது.
‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்த படியாலே இனி படியாகவே தோற்ற விருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘
என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல,
மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது,
திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது,
அவனூர் எங்கேயென்று வினவுவது,
நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது,
ஆக விப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய்.
‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும்,
‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும்
‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும்
‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும்
‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல்.
‘என்னும்‘ என்கிற வினை முற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது.
‘என்மகள் இப்படி சொல்லுகிறாள், இப்படி சொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று.

முந்துற முன்னம் இவள் எம்பெருமானுடைய வடிவழகிலே வாய் வைக்கத் தொடங்கினாளே! என்கிறாள்.
‘திருமேனியானது காளமேக நிறத்தது, திருக் கண்களும் திருவாயும் திருக் கைத்தலமும் திருவடி யிணையும்
செந் தாமரை மலர் நிறத்தன‘ என்று திருமேனியையும் திவ்யாவயவங்களையும் பற்றிப் பேசுகின்றாளாம்.
அடியிலே எம்பெருமான் இவளுக்குத் தன் வடிவை முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுக்கையாலே
அதுவே வாய்வெருவுதலாயிருக்கின்றாள் காணுமிவள்.

எம்பெருமான் தானுகந்தார்க்கு ஸர்வ ஸ்வதானமாகக் கொடுத்தருள்வது தன் திருமேனியையே.
பரதாழ்வாள், சிறியதிருவடி, அக்ரூரர் முதலானாரிடத்தே இது காணலாம்.
“தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்த; சிரஸ்யாக்ஷிபதம் கதம் – அங்கே பரதமாரோப்ய முதித; பரிஷஸ்வஜே“ என்று
பரதாழ்வான் விஷயத்திலே சொல்லப்பட்டது.
(நெடுநாள் கடந்தபின் கண்ணுக்கு இலக்காகித் திருவடிவாரத்தில் வீழ்ந்த பரதாழ்வானை வாரியெடுத்து
மடிமீதிருத்தி மகிழ்ந்து சேரத்தழுவினாள் ஸ்ரீராமபிரான் என்பது இதன் பொருள்)
“ஏஷ ஸர்வஸ்பூதஸ்து பரிஷ்வங்கோஹநூமத; மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந;“ என்று
சிறிய திருவடி விஷயத்திலே சொல்லிற்று.
“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜக்ருதசிஹ்நேந பரணிநா, ஸம்ஸப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே“ என்று
அக்ரூரர் விஷயத்திலே சொல்லப்பட்டது.
மூவர்க்கும் தன் திருமேனியை அணைக்கக் கொடுப்பதே பெரும்பரிசு.

கார்வண்ணந் திருமேனி =
தாப த்ரயத்தினால் தகர்ப்புண்டிருப்பார்க்கு நினைத்த மாத்திரத்தில், அதனை ஆற்றக் கடவதும்
விரஹ தாபத்தாலே வருந்துவார்க்கு அதனைத் தணிக்க வல்லதுமான திருமேனியைப் பேசினபடி.

கண்ணும் வாயுங் கைத்தலமுமடியிணையுங் கமலவண்ணம் =
மேகத்திலே தாமரைக் காடு மலர்ந்தாற்போலே யாயிற்று அவயவங்களிருக்கிறபடி.

பார்வண்ணமடமங்கை பத்தர் =
இங்கும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக் கொள்ளவேணும்;
மகள் பாசுரத்தைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி.
கடலிலே உழன்று காலங்கழிக்குமவர்கள் மூழ்கி மண்ணெடுக்குமாபோலே, கீழ்ச்சொன்ன ஸௌந்தர்ய ஸாகரத்திலே
அவ லீலையாக ஆழங்காற்பட்டிருப்பவள் பூமிப்பிராட்டி;
அவளிடத்தில் பக்தி யுக்தனாயிருப்பன் எம்பெருமான் என்கிறது.
பூமிப்பிராட்டியாலே எம்பெருமான்றான் ஸேவிக்கப் பட வேண்டியது போய் எம்பெருமான்றான் அவளை ஸேவித்திருக்கிறானாம்
ப்ரணய தாரையில் முதிர்ச்சியாலே. அவளுடைய போக்யத்தையிலே துவக்குண்டு அத்தலை இத்தலையானபடி.
இப்படி ஒருத்தி பக்கலிலே பக்தியைப் பண்ணி நிற்கும் பெருமான், நான் பக்தி பண்ணுகிறனென்றால்
எனது பக்தியைப் பெற்றுக்கொள்வதும் செய்கிறானில்லையே! என்ற வருத்தந் தோற்றப் பார்வண்ண மடமங்கை பத்தர் என்கிறாள் பரகாலநாயகி.

பித்தர் பனிமலர் மேல்பாவைக்கு =
இவ்வி்டத்திலும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக்கொள்வது.
இதுவும் மகள் வார்த்தையைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி.
குளிர்ந்த தாமரைப்பூவின் பரிமளந்தானே ஒருவடிவு கொண்ட தென்னலாம்படியுள்ள பெரிய பிராட்டியார்
திறத்திலே பித்துக்கொண்டவன். என்கிறது.
“அல்லிமலர்மகள் போகமயக்குக் களாகியும் நிற்குமமம்மான்” என்கிறபடியே
அவளுடைய போகங்களிலேயே மயங்கி என்னை மறந்தான் திடீர் என்றாள் போலும்.

பாவஞ்செய்தேன் =
வினவ வந்தவர்கட்கு அழுது காட்டுகிறாள் திருத்தாய்.
இப் பெண்பிள்ளையைப் பெறும்படியான பாவஞ்செய்தேன் நான் என்று கண்ணீர் சொரிகின்றாளென்க.
இவள் ஈடுபட்ட விஷயத்தின் வைலக்ஷண்யத்தை நம்மால் மாற்றப் போகாது;
இவளுடைய ஆற்றாமையும் நம்மால் அடக்க வொண்ணாது; அவனே உபேக்ஷியா நின்றாள்; இவளோ பதற நின்றாள்;
இந் நிலைமையைக் கண்டு கொண்டிருக்க வேண்டுவது என் பாபமே யன்றோ என்கிறாள்.
பகவத் விஷயத்திலே தன் பெண்பி்ள்ளைக்குண்டான அவகாஹநம் தனக்கு மிகவும் மகிழ்ச்சிக் குடலாயிருக்கையாலே
‘புண்ணியஞ்செய்தேன்‘ என்ன வேண்டுமிடத்து நாட்டாருக்காக மறைத்து “பாவஞ்செய்தேன்“ என்கிறாள்.

காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர், ஞாலத்தப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்!
நானே மற்றாருமில்லை‘ என்ற யசோதைப் பிராட்டியைப்போலே
“ஞாலத்துப் புத்திரியைப் பெற்றாள் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை” என்று சொல்லிக் கொள்ளவே இத்திருத்தாய்க்கு விருப்பம்;
ஆயினும் கட்டுப்பாட்டுக்காக மறைக்கிறாளென்க.

ஏர்வண்ணவென்பேதை =
ஐயோ! இப்பெண்ணை தன்வடிவழகைத் தான் நன்கறிந்தாளாகில் ‘அவன்றானே நமக்காக மடலெத்துப் புறப்படட்டும்‘ என்று கிடக்கலாமே;
தன்படியைத் தான் அறியாமலன்றோ இவள் இப்படி படுகிறாள் என்கிறாள்.
அவனுடைய கார் வண்ணம் இவளுடைய ஏர்வண்ணத்துக்கு ஏற்குமோ?
ஒரு உவமையையிட்டுச் சொல்லும் படியா யிருக்கிறது அவன் வடிவு;
இவள்வடிவுக்கு உவமை இல்லையே; ‘அழகியவடிவு படைத்தவள்! என்று சொல்லலா மத்தனை யொழிய
த்ருஷ்டாந்தமிட்டுச் சொல்ல வழியில் லையே! என்கிறாள்.

என்சொல்கேளாள் =
நான் இவளை அடக்கி யாண்டுகொண்டிருந்த காலமுண்டு; அது கடந்துபோயி்ற்று;
“அவனுடைய திருவருள் தன்னடையே பரிபக்குவமாகும் போது கிடைக்குமே யல்லது நாம் பதறிப் பயனில்லை காண்“
என்று நான் சொல்லப் புறப்பட்டால் நான் வாய் திறப்பதைக் கண்டவுடனே இவள் காதை அழுந்த மூடிக்கொள்ளுகிறாளே!
என் செய்வெனென்கிறாள்.

(என்சொல் கேளாள்)
“மாமேகம் சரணம் வ்ரஜ“ என்றும்,
“அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம“ என்றும் அவன் சொல்லி வைத்த
வார்த்தைகளைக் கேட்டிருக்குமவள் என்சொல்லைக் கேட்பளோ?

எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்னும் =
என்வார்த்தை கேளாத மாத்திரமேயோ? அவனிருக்கும் தேசத்திற்குச்செல்ல வழியும் தேடுகின்றாள்.
என்னைத் தனக்கே யாக்கிக் கொண்டவனுடைய கோயிலுக்கு எங்ஙனே வழியென்கிறாள்.

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேனென்னும் =
எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்று கேட்டவளுக்கு வழி சொல்வாரார்? ஒருவரும் வாய்திறந்திலர்;
அதற்குமேல் தானே சொல்லுகின்றாள் – நீர்வண்ணன் நீர்மலைக்கேபோவேன் என்கிறாள்.
திருக்குறைய லூரில் நின்றும் புறப்பட்டுத் திருநீர்மலைக்குப் போய் அங்கு நின்றும்
திருவரங்கம் பெரிய கோயிலுக்குப் போகவேணும் என்று இங்ஙனே இவள் வழி கண்டிருக்கிறாள் போலும்.
கோவிலிலே கெட்டுப்போன பொருளைக் குளத்திலே தேடுமாபோலே யிருக்கிறது இவள்படி.
திருப்பதிகளிலே தங்கித் தங்கிப்போகப் பார்க்கிறாளாயிற்று.

இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறே =
தன் தலையில் ஸ்வரூபத்தைப் பாராதே எதிர்தலையின் வைலக்ஷண்யத்தையே பார்த்துப் பதருவாருடையபடி இதுவன்றோ.
இப்படியும் அடக்கங்கெட்டாளே என்மகள்! என்றாளாயிற்று.

திருத் தாயார் இவளுடைய கருத்துக்கு உடன்பட்டு இவள் பாசுரங்களை கேட்போம்
அவளும் அவன் திருமேனி அழகை வருணிப்பது
நாய்ச்சிமார் பக்கல் அவன் இருக்கும் இருப்பை பேசுவது
அவனூர் எங்கே என்று வினவுவது
நான் இங்கே கதறி என்ன பயன்
அவனூருக்கே போய்ச் சேருவேன்
போலவே கேட்டு
உகந்து
தானும் –
கார்வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்பதும்
பார் வண்ண மட மங்கை பத்தர் -என்பதும்
பனிமலர்மேல் பாவைக்கு பித்தர் -என்பதும்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்பதும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்பதும்
மகள் வார்த்தையின் அனுவாதன்கள்
மற்றவை திருத் தாயார் வார்த்தை

அடியிலே தனதுவடிவை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுக்கையாலே அதுவே வாய் வெருவுதல்
ஸ்ரீ பரத ஆழ்வான் /திருவடி /அக்ரூரர்
தம் சமுத்தாப்ய காகுஸ்த சிரச்ய அஷிபதம் கதம் -அங்கே பரதம் ஆரோப்ய முதித ப்ரிஷச்வஜே -ஸ்ரீ பரத ஆழ்வான் விஷயம்
ஏஷ சர்வஸ்வ பூதச்து பரிஷ்வங்கோ ஹநூமத மயா காலமிமம் ப்ராப்ய தததச் தஸ்ய மகாத்மான -திருவடி விஷயம்
சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேன பாணினா சம்ச்ப்ருச்யாக் ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -அக்ரூரர் விஷயம்
மூவருக்கும் திரு மேனி அணைக்கக் கொடுத்த பரிசு

சௌந்தர்ய சாகரத்தில் ஆழம் கால் பட்ட பிராட்டிமார் இடம்
அவள் போக்யதையில் ஈடுபட்டு இத்தலை அத்தலையான படி
அல்லி மலர்மகள் போக மயக்குக்கு ஆளாகியும் நிற்கும் அம்மான்
அப்படிப் பட்டவன் எனது பக்தியை பெற்றுக் கொள்ள வில்லையே வருத்தம் தோன்ற பார் வண்ண மட மங்கை பித்தர் –
அவர்கள் போகங்களில் ஈடுபட்டு என்னை மறந்தான்
இவ்வளவையும் திருத் தாயார் அனுவதித்து -சொல்லி

பாவம் செய்தேன்
வினவ வந்தவர்களுக்கு அழுது காட்டுகிறாள்
காலிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை போலே
ஞாலத்து புத்ரியைப் பெற்றாள் நானே மற்றாரும் இல்லை சொல்லிக் கொள்ளவே விருப்பம்
கட்டுப்பாடுக்காக மறைக்கிறாள்

ஏர் வண்ண என் பேதை
இவள் அழகுக்கு அவன் அன்றோ மடல் எடுக்க வேணும்
இவள் வடிவுக்கு உவமை இல்லை சொல்ல

என் சொல் கேளாள்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம
என்று அவன் சொல்லி இருக்கும் வார்த்தைகளைக் கேட்டு இருக்குமவள் என் சொல்லைக் கேட்பாளோ

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
என் வார்த்தை கேளாத மாத்ரமேயோ
அவன் இருக்கும் தேசத்துக்கும் வழி தேடுகிறாள்
என்னை தனக்கே யாக்கிக் கொண்டவனுடைய கோயிலுக்கு எங்கே வழி

நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
திருக் குறையலூரில் நின்றும் புறப்பட்டு
திரு நீர் மலைக்கு போய்
அங்கு நின்றும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு போக வேணும்
என்று வழி கண்டு இருக்கிறாள் போலும்
கோயிலிலே கெட்டுப் போன பொருளை குளத்திலே தேடுமா போலே இருக்கிறது இவள் படி
திருப் பதிகளில் தங்கி தங்கி போகப் பார்க்கிறாள் ஆயிற்று

இது அன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறு
தன் தலையிலே ஸ்வரூபத்தை பாராதே
எதிர் தலையில் வைலஷணயத்தையே பார்த்து
பதறுவார் உடைய படி இது அன்றோ
இப்படியும் அடக்கம் கெட்டாளே என் மகள் -என்கிறாள்-

—————————————————————

இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறோ“ என்றாள் கீழ்ப்பாட்டில். அதுகேட்ட பெண்டுகள்
‘இப்படியும் சொல்லிக் கைவிடலாமோநீ? ‘நீ விரும்புகிற புருஷன் வேற்றுப் பெண் பிள்ளைகள் பக்கலிலே
சாலவும் ஆழ்ந்து கிடப்பவனாகையாலே அவன் உனக்கு முகந்தரமாட்டான்;
வீணாக ஏன் அவனிடத்து நசை வைத்துக் கதறுகின்றாய்?‘ என்று சொல்லியாவது மகளை மீட்கப் பார்க்கலாகாதோ?‘ என்று சொல்ல;
‘அம்மனைமீர்! அதுவுஞ் சொன்னேன்; நான் சொல்வதில் ஒரு குறையுமில்லை;
என் உபதேசமெல்லாம் விபரீத பலமாய்விட்டது காணீர்‘ என்கிறாளிதில்.

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.

பதவுரை

பொருவு அற்றாள் என்மகள்–ஒப்பில்லாதவளான என்பெண்ணானவள்,
முற்று ஆராவனம் முலையாள்–முழுமுற்றும் போந்திலாத அழகிய முலைகளை யுடையவளும்
பாவை-சித்திரப் பதுமை போன்றவளுமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி
மாயன்-அற்புதனான எம்பெருமானுடைய
பெற்றேன்-பெற்றெடுத்த தாயாகிய நான்,
வாய் சொல் பேச-(ஹிதமாகச் சில) வார்த்தைகள் சொல்ல,
இறையும்-சிறிதேனும்
கேளாள்-காது கொடுத்துங் கேட்பதில்லை;
பேர் பாடி-திருப்பேர் நகரைப் பாடியும்
தண் குடந்தை நகர் பாடியும்-குளிர்ந்த திருக்குடந்தை நகரைப் பாடியும்
மொய் அதலத்துள் இருப்பாள் அஃது கண்டும்-அழகிய திருமார்பினுள் அடங்கிவாழும்படியைக் கண்டு வைத்தும்
அற்றாள்-அவனுக்கே அற்றுத் தீ்ர்ந்தாள்;
தன் நிறைவு அழிந்தாள்-தன்னுடைய அடக்கமொழிந்தாள்;
ஆவிக்கின்றாள்-நெடு மூச்செறியா நின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-தோழீ! திருவரங்கநகர் படிந்தாடுவோமா?‘ என்கிறாள்;
பொன் தாமரை கயம்-திருப்பொற்றாமரைத் தடாகத்திலே
நீர் ஆட-குடைந்தாடுவதற்கு
போனாள்-எழுந்து சென்றாள்;
உம் பொன்னும் அஃதே-(தோழியர்காள்!) உங்கள் பெண்ணின்படியும் இவ்வண்ணமேயோ?

முற்றாராவன முளையாள்பாவை என்கிறது பெரியபிராட்டியாரை.
பிராட்டியின் பருவத்தைப் பற்றிச் சொல்லுமிடங்களில் “யுவதிச்ச குமாரிணீ“ என்று சொல்லப்பட்டது; அதாவது –
குமாரியாயிருக்கும் நிலைமையிலே நிற்பவளாய் அத்தோடு யௌவனமும் வந்து முகங்காட்டுமளவாயிருக்கும் இவள் பருவம் என்றபடி.
அதற்கு இணங்க ‘முற்றாராவன முளையாள்பாவை‘ என்கிறது.
முழுமுற்றும் போந்திலாத அழகிய முலையையுடையளான ஸ்ரீமஹாலெட்சுமி –
உபயவிபூதி நிர்வாஹகனாய் எல்லையில் ஞானத்தனாய் நிரூபாதிக ஸ்வதந்த்ரனாய் அவாப்த ஸமஸ்த காமனாயிருக்கு
மெம்பெருமானையும் தன்னுடைய ஒரு அவயவ விசேஷத்திலே அடக்கியாளப் பிறந்தவளென்கிறது.

மாயன்மொய்யகலத்துள்ளியிருப்பாள் அஃதுங்கண்டும் அற்றாள் =
எம்பெருமான் பிராட்டியின் திருமுலைத் தடத்தைவிட்டுப் பேராதாப் போலே அவள் இவனுடைய திருமார்பை விட்டுப் பேராதிருக்கிறபடி;
இவன் அவளுடைய திருமுலையைப் பற்றி ‘அகலகில்லேனிறையும்‘ என்பன்;
இவள் அவனுடைய திருமார்வைப்பற்றி ‘அகலகில்லேனிறையும்‘ என்பள்.
முலையை யணைந்து அவன் பித்தேறிக்கிடக்க, மார்வையணைந்து இவள் பித்தேறிக்கிடக்க,
இங்ஙனே ஒரு திவ்யதம்பதிகள் பைத்தியம் பிடித்துப் படுகிறபாடு என்! என்னலாம்படி யிருக்கும்.

(அஃதுங்கண்டும் அற்றாள்)
“திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கடலமுதினிற் பிறந்தவளும்,
நின்ஆகத்திருப்பது மறிந்துமாகிலுமாசை விடாளால்“ என்றவாறு.
உலகத்தில் ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயினிடத்தில் அளவற்ற அன்பு வைத்திருப்பதாகக் கண்டால் அவனிடத்தில்
மற்றையோர் ஆசைவைப்பது கூடாது; ஏனெனில்;
அவனுடைய ஆசைப்பெருக்கம் முழுதும் ஒருவ்யக்தி வழியிற் பாய்ந்துவிட்டதனால் அது மற்றொரு வ்யக்தியிற் பாய மாட்டாது;
அலக்ஷயஞ்செய்யவே நேரிடும். ஆகவே, ஏற்கனவே ஒரு வ்யக்தியினிடத்தில் காதல் கொண்டிரா நின்ற புருஷனை
மற்றையோர் காதலிப்பது விவேகிக்ருத்யமன்று. இஃது உலகில் ஏற்பட்ட விஷயம்.
இந்த நியாயத்தைக் கொண்டு பார்க்குமளவில், என்மகள்
அல்லிமலர் மகள் போகமயக்குக்களாகியும் நிற்குமம்மா னிடத்தில் ஆசைவைப்பது கூடாது.
அழகிற்சிறந்த திருமகள் ஒரு நொடிப்பொழுதும் விடாது திருமார்பிலேயே அந்தரங்கமாக வாழ்வதைக் கண்டுவைத்தும்
இவள் அவ்விடத்திற்கே அற்றுத் தீர்ந்தாள் காண்மின் என்றாள் திருத்தாய்.

“நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக“
என்கிறபடியே குற்றங்களைப் பொறுப்பிக்கவல்ல பெரியபிராட்டியாரும்,
“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல், என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தாரென்பர்“
என்கிறபடியே * செய்தகுற்றம் நற்றமாகவே கொள்ளவல்ல என்பெருமானும் கூடியிருக்கிற இவ்விருப்புத்தானே
நமக்குப் பரமஉத்தேச்யமென்று கொண்டு அந்த மிதுனத்திலே ஈடுபடாநின்றாளாயிற்று.

தன்நிறைவழிந்தாள் =
அந்த மிதுனத்தில் ஈடுபட்டமாத்திரமேயோ? தன் பெண்மைக்குரிய அடக்கமும் அழியப்பெற்றாள்.
‘கடல்வற்றிற்று‘ என்பாரைப்போலே சொல்லுகிறபடி காண்மின்.
நிறைவழிந்தாளென்பதை நீ அறிந்தமை எங்ஙனே? என்று கேட்க ஆவிக்கின்றாள் என்கிறாள்.
கீழ் ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே?‘ என்று திருவரங்கம் பெரிய கோவிலுக்குப்போக வழி தேடினவள்
அதுதெரியப் பெறாமையாலே நெடுமூச்செறியா நின்றாள். இதுவே நிறைவழிந்தமைக்கு அடையாளம்.

அணியரங்கமாடுதுமோ தோழீயென்னும் =
பரகாலநாயகியின் நிலைமையைக் கண்டு ‘எம்பெருமானோ இவளுக்கு முகங்காட்டிற்றிலன்;
ஹித பரையான தாயார் சொல்லும் வார்த்தைகளில் ஒன்றும் இவளுக்கு ப்ரியமல்லாமையாலே தாயைக் கொண்டு
இவள் ஆச்வஸிக்கவழியில்லை; இத்தருணத்தில் இவளுக்கு நாம் அருகே நின்று முகங்காட்டுவோம்‘ என்று
நினைத்துத் தோழிவந்து பக்கத்தில் நின்றாள்;
நின்றவாறே ‘அணியரங்கமாடுதுமோ தோழீ!‘ எனத் தொடங்கினாள்.
ஸ்ரீரங்கநாதனாகிற பொய்கையிலே படிந்து குடைந்தாடி நம்முடைய விரஹதாபமெல்லாம் தணியப் பெறுவோமோ? என்றாளென்க.

பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக்கேளாள் =
‘இனி நாம் இவள் வருந்தும் படியான ஹித வார்த்தைகளைச் சொல்லக் கடவோமல்லோம்;
இவளுக்கு ப்ரியமான வார்த்தை களையே சொல்லுவோம்‘ என்று நினைத்து இவளுடைய காரியங்களுக்கு
உடன்பாடான வார்த்தைகளைச் சொல்லுவதாக நான் வாய்திறந்தாலும்
‘என்வாயில் வருகிற வார்த்தை‘ என்பதுவே காரணமாக அந்த அநுகூல வார்த்தைகளையும் செவிதாழ்த்துக் கேட்கிறாளில்லை.
‘அணியரங்கமாடுவோம், நீர்வண்ணன் நீர்மலைக்கே போவோம்‘ என்று காதை மூடிக்கொள்ளுகிறளென்றபடி.
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேளாள். பிரதிகூலமே சொல்லிப் போருவார் வாயிலே அநுகூல வார்த்தைகள் வந்தாலுங் கேட்பாரில்லையிறே.

உன்வார்த்தை கேளாத அவளுடைய வார்த்தை இருந்தபடி என்? என்று கேட்க,
பேர்பாடித் தண்குடந்தை நகரும்பாடி என்கிறாள்.
கோவிலுக்குப் போம் வழியிலுள்ள பாதேயங்களைப் பேசா நின்றாளென்கிறாள்.
திருக்குறையலூரிலிருந்து திருவரங்கம் போக வேண்டுவார் முந்துறத் திருக்குடந்தையைப் பாடிப் பின்னைத்
தென்திருப்பேர்நகரைப் பாட வேண்டுவது ப்ராப்தமாயிருக்க க்ரம ப்ராப்தி பற்றுகிறதில்லை ஆற்றாமையின் கனம்.
(பாதேயம் = வழிப்போக்கில் உணவுச்சாதம்)

பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணியதீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும்
புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள்கொள்ளப் பொருந்துமாயினும்
எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக்கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும்.
தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்; –
‘மகள் ‘ அணியரங்காடுதுமோ‘ என்று ஊரைச் சொன்னாள்;
தான் * பொற்றாமரைக் கயமென்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள்:
‘தயரதன் பெற்ற மரதக மணித்தடம்‘ என்றும்
‘வாசத்தடம்போல் வருவானே!‘ என்றும் தடாகமாகச் சொல்லக்கடவதிறே“ என்பதாம்.

அவள் பொற்றாமரைக்கயம் நீராடப் புறப்பட்டால் நீ தடை செய்யலாகாதோ? என்ன,
பொருவற்றாள் என்மகள் என்கிறாள். பொருவு – பொருத்தம்; என்னோடு சேர்த்தியற்றாள் என்றபடி.
என் உறவை அறுத்துக் கொண்டவளை நான் எங்ஙனே நியமிப்பேன்? என்கிறாள்.
இனி, ‘பொருவற்றாள்‘ என்பதற்கு ‘ஒப்பில்லாதவள்‘ என்றும் பொருளாகும்.

உம்பொன்னுமஃதே =
இரண்டு வகையான பொருளைக் கருதி இச்சொல் சொல்லுகிறாள்;
உங்கள் வயிற்றிற் பிறந்த பெண்ணும் இவளைப்போலே அடங்காப் பிடாரிதானோ?
அன்றி விதேவையா யிருப்பவளோ? என்று கேட்பது வெளிப்படை. உங்கள் பெண்ணுக்கு இத்தனை வைலக்ஷண்யம் இல்லையே!,
நங்கைமீர்! நீரு மோர்பெண்பெற்று நல்கினீர், எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற வேழையை! என்றாற்போலே கொண்டாட்டம் உள்ளுறை.

“உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை;
‘மத்துறு கடை வெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!!‘
என்று அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது“
என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

மொய் அகலத்துள் இருப்பாள் அஃது கண்டும் அற்றாள்

முற்று ஆரா வன முலையாள் பாவை -என்கிறது பெரிய பிராட்டியாரை -யுவதிச்ச குமாரிணி
அவாப்த சமஸ்த காமனையும் ஒரு அவயவ விசேஷத்தில் அடக்கி ஆளப் பிறந்தவள்

மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃது கண்டும் அற்றாள்
அகலகில்லேன் இறையும் என்று
முலையை அணைந்து அவன் பிதற்றிக் கிடக்க
மார்பை அணைந்து இவள் பிதற்றிக் கிடக்க
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்தவளும்
நின்னாகத்து இருப்பதுவும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால்
பொறுப்பது இவளுக்காக
அவனும் தன அடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாறேல் நன்றே செய்தார் என்று
குற்றமே நற்றமாக கொள்பவன்
இவ்விருப்பு தானே நமக்கு பரம உத்தேச்யம் என்று மிதுனத்தில் ஈடுபடா நின்றாள்

தன் நிறை வழிந்தாள்
நிறை அழிந்தமைக்கு அடையாளம் எம்பெருமான் திருவரங்கம் எங்கே -என்கிறாள்
தோழியிடம்
அணி அரங்கம் ஆடுதுமோ தோழி
ஸ்ரீ ரெங்கநாதன் ஆகிற பொய்கையிலே குடைந்தாடி விரஹ தாபம் தனியோ பெறுவோமா –

பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
பெற்றதே குற்றமாக
அவன் சொல்லும் தோழி சொல்லும் கேட்பவள்
அனுகூல வார்த்தை எனது வாயிலே வந்தாலும் கேளாள்

பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
கோயிலுக்கு போம் வழியில் பாதேயங்களை பேசா நின்றாள்
திருக் குறையலூரில் இருந்து கோயிலுக்கு
முதலில் திருக் குடந்தை பாடுவது இருக்க
ஆற்றாமையின் கனத்தால் க்ரம ப்ராப்தி பற்றுகிறது இல்லை

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
மகள் அணி அரங்கம் ஆடுதுமோ என்று ஊரைச் சொன்னாள்
தான் பொற்றாமரைக் கயம் என்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்
வாசத்தடம் போல் வருவானே -என்றும்
தடாகமாகச் சொல்லக் கடவது இறே
திருக்குடந்தை புஷ்கரணியை சொன்னாள் என்றுமாம்
ஆனால் வ்யாக்யானத்துக்கு சேர எம்பெருமானையே குறிக்கும்

உம் பொன்னும் அக்தே
உங்கள் வயற்றில் பிறந்த பெண்ணும் இப்படியா சொல் கேளாமல்
உங்கள் பெண்ணுக்கு இவ்வளவு வைலஷண்யம் இல்லையே
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் எங்கனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை
என்றால் போல கொண்டாட்டம் உள்ளுறை

உம் பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை
மத்துடை கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு எத்திறம்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று
அவதாரத்தை அனுசந்தித்தவாறே அவர்கள் மோஹித்தது
அர்ச்சாவதாரத்தில் இறே இவள் மோஹிப்பது –

பொன் என்ற சொல் உவமை ஆகு பெயரால் பெண்ணை குறிக்கும் –

————————————————————————–

பண்டு ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டிக்கு உதவினபடியையும்,
ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பேரனுக்கு உதவினபடியையும்,
வராஹாவதாரத்தில் பூமிப்பிராட்டிக்கு உதவினபடியையும்,
பிரளயகாலத்தில் உலகங்கட்கெல்லா முதவினபடியையும்,
த்ரிவிக்ரமாவதாரத்தில் ஸர்வஸ்வதானம் பண்ணினபடியையும் எடுத்தெடுத்துப் பரகாலநாயகி வாய்விட்டுக்
கதறுகின்றபடியைத் திருத்தாயார் சொல்லாநின்று கொண்டு, இப்படிப்பட்ட என் மகளை இந்நிலவுலகத்தில்
பெரும்பாக்கியம் படைத்தவளென்று சொல்லலாமத்தனையன்றி வேறெதுவும் சொல்லப்போகாதென்று தலைக்கட்டுகிற பாசுரம் இது.

தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,
பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?

பதவுரை

முன்–முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்–தேர்வீரனும் வாட்படை வல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள-ஐச்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க-(அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
(அனுமானையிட்டு)
செம் தீ ஓங்கி–சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
(அதுவன்றியும்)
போர் ஆளன்-போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்-ஆயிரம்தோள்களை யுடையனான
வாணன் பாணாஸுரன்
மாள-பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து-அலையெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு–பாணபுரத்திற்புகுந்து
மிக்க-வீரலக்ஷ்மி மிகப்பெற்றவனும்
பார் ஆளன்–பூமிக்குநிர்வாஹகனும்,
பார் இடந்து–(வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தியெடுத்தும்
பாரை உண்டு–(பிரளயத்தில்) பூமியைத்திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து–அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து–(த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
(ஆக இப்படியெல்லாம்)
பாரை ஆண்ட–இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்–பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதும்-இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை-இப் பெண் பிள்ளையை
மண் மேல்-இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே–பெருமாபாக்கிய முடையவள் என்று சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப்போமோ?

தேராளும் வாளரக்கன் செல்வம் மாள =
இத்தனை தேர்களை ஆண்டா னென்று ஒரு கணக்கிட்டுச் சொல்லாத பொதுவிலே ‘தேராளும்‘ என்றது,
தேரென்று பேர் பெற்றவை யெல்லாவற்றையும் ஆண்டவனென்றபடி.
இது சொன்னது ரத கஜ துரக பதாதிகள் என்கிற சதுரங்க பலத்தையும் ஆண்டமை சொன்னவாறு.
பெருவீரர்களைப் பேசும்போது ‘அதிரர்‘ ‘மஹாரதர்‘ என்று தேரையிட்டு நிரூபித்துப் பேசுவது மரபாதலால் இங்கும் தேராளும் என்றது.

(வாளாரக்கன்.)
கீழ்ச்சொன்ன சதுரங்கபலங்களையும் அழகுக்காகக் கட்டி வைத்தானத்தனையே யென்னவேண்டும்படியான தனிவீரன்.
ஆக இப்படிப்பட்ட அரக்கனுடைய

செல்வம்மாள =
ஒன்றுக்கும் விகாரப்படகில்லாத அனுமானும் கண்டு போர்ப்பொலியக் கொண்டாடின செல்வமன்றோ இராவணனது.
“யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸே ச்வா; ஸ்தாயம் ஸுரலோகஸ்ய ஸசக்ரஸ்யாபி ரக்ஷிதா.“
(இவ்விராவணனிடத்தில் அதர்மம் ஒன்று மாத்திரம் இல்லாதிருந்தால் இவனே தேவாதி தேவனாக விளங்கவல்லவன்
(என்றாயிற்று அனுமான் பேசினது. அங்ஙனம் வியக்கத்தக்க ஐச்வரியமெல்லாம் தொலையும்படியாக.

தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கி =
தென் என்று கட்டளைப்பட்டிருக்குமொழுங்கபாட்டைச் சொன்னபடி.
சுற்றுங்கடலாய் அப்புறம் நாடாய் அங்கே மலையாய் அதன்மேலே மதிளும்
அட்டாலையுமாயிருக்கிற கட்டழகையுடைய இலங்காபுரி என்றபடி.
அப்படிப்பட்ட நகரம் நிலை கலங்கும்படியாக நெருப்பையிட்டுக் கொளுத்திச் சுடுகாடாக்கினபடி.
இதற்கு முன்னே அக்னிபகவான் இராவணனிடம் அஞ்சி நடுங்கி அவனுக்குக் குற்றேவல் செய்து கொண்டு போதுமான
இரைபெறாத உடம்பு வெளுத்துக் கிடந்தான்;
அனுமான் இலங்கை புக்க பின்பு அவனுடைய வாலை அண்டை கொண்டு வயிறுநிரம்பப் பெற்றுத்
தன்னிறம் பெற்றுத் தேக்கமீட்டானென்க.

ஆக இவ்வளவும் பிராட்டிக்காகச் செய்த காரியத்தைச் சொன்னாளாயிற்று.

இனி இரண்டாமடியால் பேரனுக்குச் செய்த காரியஞ் சொல்லுகிறது.
வாணனை உயிரோடு விட்டிருக்கச் செய்தேயும் ‘வாணன் மாள‘ என்றது எங்ஙனே யென்னில்;
பின்பு அவன் உயிரோடிருந்த இருப்பு பிணமாயிருக்குந் தன்மையிற்காட்டில் வாசியற்ற தென்பது விளங்க மாள என்றது.

பொருகடலை அரண்கடந்துபுக்கு மிக்க பாராளன் =
எதிரிகட்கு அணுக வொண்ணாதபடி திரைக் கிளர்த்தியை யுடைத்தான கடலாகிற அரனைக் கடந்து
பரணபுரத்திலே சென்று புகுந்து வீரலக்ஷ்மியாலே மிக்கவனாய்,
பூமிக்குச் சுமையான வாணன் தோள்களை அறுத்தொழிக்கையாலே பூமிக்கு நிர்வாஹகனானவன்.

பாரிடந்து =
பிரளயத்தைச் சார்ந்திருந்த பூமியை மஹா வராஹரூபியாகச் சென்று உத்தரித்து வந்தபடி சொல்லுகிறது.
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந்
தேசுடைய தேவர் என்னை மாத்திரம் இப்படி உபேக்ஷித்திருப்பதே! என்பது கருத்து.

பாரையுண்டு =
பூமியை யடங்கலும் பிரளயப் பெருவேள்ளம் கொள்ளப் புகுகையில் எல்லாவற்றையும் வாரித்
திருவயிற்றிலே வைத்துக் காத்தபடி சொல்லுகிறது.
நானும் அக்காலத்தில் இருந்திருந்தேனாகில் திருமேனியோடே ஸம்பந்தம் பெற்றிருப்பேனே என்றவாறு.

பாருமிழந்து =
பிரளயகாலத்தில் திருவயிற்றினுள்ளே அடக்கின பூமியை மறுபடியும் வெளிப்படுத்திக்
கரண களேபரங்களைக் கொடுத்தருளி உருப்படுத்தினது இங்ஙனம் உபேக்ஷிக்கைக்காகவோ? என்றவாறு.

பாரளுந்து =
உலகளக்கிற வியாஜத்தாலே விரும்பாதார் தலையிலும் திருவடியை வைத்து ஸத்தை பெறுவித்தருளினவன்,
விரும்புகின்ற எனக்குத் திருமார்பைத் தாராவிடினும் ஊர்ப் பொதுவான திருவடியையும் தாரா தொழிவதே!
என்ற கருத்தப்படச் சொல்லுகிறபடி.

பாரையாண்ட =
ஆகக் கீழ்ச் சொன்னவற்றையெல்லாம் திரளப்பிடித்து நிகமனஞ் செய்கிறபடி.

தேராளும் வாளரக்கன் செல்வம்மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கிப் பாரையாண்ட பேராளன்;
பாரிடந்து பாரையாண்ட பேராளன்; பாரையுண்டு பாரையாண்ட பேராளன்; பாருமிழந்து பாரையாண்ட பேராளன்;
பாரளந்து பாரை யாண்ட பேராளன் – என்றிங்ஙனே அந்வயித்துக் கொள்ளலாம்.

இவை பரகாலநாயகி ஓதின திருநாமங்களாம்.
ஆக இப்படிப்பட்டவையும் இவை போல்வனவுமான திருநாமங்களை இடைவிடாமல் கால ஷேபார்த்தமாகப் பேசவல்ல விவளை,

மண்மேற்பெருத்தவத்த ளென்றல்லால் பேசலாமே? =
நித்யஸூரிகளின் திரளில் நின்று பிறிகதிர்ப்பட்டு வந்தவள் என்னலாமத்தனையொழிய வேறு பேசப்போமோ?
பூமியிலேயிருக்கச் செய்தே நித்யஸூரிகள் பரிமாற்றத்தை யுடையவளென்றே சொல்லி வேணும்.

ஆகத் திருத்தாயார் பாசுரமாகச் சென்ற இடைப்பத்து முற்றிற்று.

தேராளும் வாளரக்கன் செல்வம் மாள
ரத கஜ துரக பதாதிகள் சதுரங்க பலன்களையும் அழகுக்காக கொண்ட தனி வீரன்
வாள் படையும் கொண்டவன்
திருவடி மதித்த ஐஸ்வர்யம் மாள

தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
திருவடி வாலை அண்டை கொண்டு
வயிறு நிரம்பப் பெற்று தன்னிறம் பெற்று
பிராட்டிக்காக செய்த கார்யம் சொல்லி

பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க பாராளன்
எதிரிகள் அணுக ஒண்ணாத படி திரைக் கிளர்த்தியை உடைய
கடலைக் கடந்து
பாணா புரத்திலே சென்று புகுந்து
வீர லஷ்மி யாலே மிக்கு
பூமிக்கு சுமையான வாணன் தோள்களை அறுத்து ஒழித்து
பூமிக்கு நிர்வாஹகன்
பேரனுக்காக செய்த கார்யம்

பாரிடந்து பாரை உண்டு பாரை உழிந்து
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானிமிலா பன்றியாய்
தேசுடைய தேவர் என்னை மாதரம் உபேஷிப்பதே
இது எல்லாம் செய்து அருளியது
இப்பொழுது என்னை உபேஷிக்கைக்காகவோ

பாரளந்த
உபேஷிக்காதார் தலையிலும் திருவடியை வைத்து அருளிய நீ
விரும்புகின்ற எனக்கு திரு மார்பைத் தரா விடினும்
ஊர்ப் பொதுவான திருவடியையும் தாராது ஒழிவதே

பாரை ஆண்ட
கீழ் சொன்னது எல்லாம் திரள பிடித்து நிகமனம் செய்கிறபடி
பாரை யாண்ட பேராளன் முன்பு சொன்ன
ஸ்ரீ ராமாவதார
ஸ்ரீ கிருஷ்ணாவதார
ஸ்ரீ வராஹாவதார
பாரை உண்டு பாரை ஆண்ட பேராளன்
பாரை உமிழ்ந்து பாரை ஆண்ட பேராளன்
பார் அளந்து பாரை ஆண்ட பேராளன்
இப்படி ஒவ் ஒன்றிலும் அன்வயித்து
இவை போன்ற திரு நாமங்களை இடை விடாமல்
கால ஷேப அர்த்தமாக பேச வல்ல இவளை

மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே
நித்ய ஸூரிகளின் திரளின் நின்று
பிறி கதிர் பட்டு வந்தவள் என்னலாம் அத்தனை ஒழிய
வேறு பேசப் போமோ
பூமியில் இருக்கச் செய்தே நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றம்
உடையவள் என்றே சொல்ல வேண்டும்
என்று சொல்லி திருத் தாயார் பேச்சாக தலைக் கட்டுகிறார்-

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: