திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-6-10- -திவ்யார்த்த தீபிகை —

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

பதவுரை

அலம் புரிந்த–போதும் போதும் என்று சொல்லும்படி கொடுக்க வல்ல
நெடு தட கை–நீண்ட பெரிய திருக் கைகளை யுடையனாய்
அமரர் வேந்தன்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
அம் சிறை புள் தனி பாகன்–அழகிய சிறகை யுடைய பெரிய திருவடிக்குத் தனிப்பாகனாய்
அவுணர்க்கு–ஆஸுர ப்க்ருதிகளுக்கு
என்றும்–எக்காலத்தும்
சலம் புரிந்து–சீற்றங்கொண்டிருந்து
அங்கு–அவர்கள் விஷயத்திலே
அருள் இல்லா தன்மை ஆளன் தான்-இரக்க மற்றிருக்கை யாகிற தன்மையை யுடையனான் எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கிற
ஊர் எல்லாம்–திருப்பதிகளிலெல்லாம்
தன் தாள் பாடி–அவனுடைய திருவடிகளைப் பாடி,
நிலம் பரந்து வரும் கலுழி–பூமி முழுதும் வியாபித்து வருகின்ற பெரு வெள்ளத்தை யுடைய
பெண்ணை–பெண்ணை யாறானது
ஈர்த்த-(வெள்ளத்தில்) இழுத்துக் கொண்டுவருகிற
நெடு வேய்கள்-பெரிய மூங்கில்களினின்றும்
படு-உண்டாகிற
முத்தம்-முத்துக்களை
உந்த–வயல்களிலே கொண்டுதள்ள
உந்தி–(உழவர்களாலும் தங்கள் பயிர்க்குக் களையென்று) தள்ளப்பட்டு
புலம் பரந்து–கழனிகளெங்கும் பரவி
பொன் விளைக்கும்–பொன்னை விளைக்குமிடமாயும்
பொய்கை வேலி–நீர் நிலைகளைச் சுற்றிலும் உடையதாயுமுள்ள
பூ கோவலூர்–திருக்கோவலூரை
தொழுதும்–ஸேவிப்போம்;
நெஞ்சே போது–நெஞ்சே! வா.

கீழ்ப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பேசியநுபவித்தார்; அது என்றைக்கோ கழிந்த அவதாரமிறே;
அதற்குத் தாம் பிற்படுகையாலே கண்ணாரக் கண்டு அநுபவிக்கப் பெற்றிலோமே! என்று வருந்தியிருக்க,
இவருடைய வருத்தத்தைக் கண்ட எம்பெருமான்
‘ஆழ்வீர்! அவதாரத்துக்குப் பிற்பட்டவர்களையும் அநுபவிக்கைக்காக வன்றோ நாம் அந்தச் செவ்வியொடே
திருக் கோவலூரில் ஸந்நிதி பண்ணி யிருப்பது; அங்கே வந்து குறையற அநுபவிக்கலாமே‘ என்று,
உலகளந்த திருக் கோலமாக ஸேவை ஸாதிக்கு மிடமான திருக் கோவலூரைக் காட்டிக் கொடுக்க,
‘நெஞ்சே! நமக்கு வாய்த்தது; அநுபவிக்கப் போகலாம், வா‘ என்றழைக்கிறார்.

வழி போவார்க்கு வாய்ப் பாடல் வேண்டுமாகையாலே எம்பெருமானுகந்தருளின நிலங்களாகிய
திருப்பதிகளை யெல்லாம் பாடிக் கொண்டே போக வேணுமென்கிறார் முன்னடிகளில்.

திவ்யதேசங்கள் எப்படிப்பட்டவை? எம்பெருமான் திருவுள்ளம் உவந்து எழுந்தருளியிருக்கப் பெற்றவை.
அவ் வெம்பெருமானுக்கு நான்கு விசேஷணங்கள் இடப்பட்டிருக்கின்றன.

(அலம்புரிந்த நெடுந்தடக்கை)
‘அலம்‘ என்பது வடசொல்; போதும் என்னும் பொருளதான இடைச்சொல்
யாசகர்கள் ‘போதும் போதும்‘ என்று சொல்லும் படியாக அவர்கட்கு அபாரமாகக் கொடுக்க வல்ல
பெரிய கையை யுடையவன் எம்பெருமான்.
தன்னிடத்தில் தானம் பெற்ற பின் வேறொரு வாசலிலே சென்று துவள வேண்டாதபடி பர்யாப்தமாகக் கொடுப்பவனென்க.
புரிதல்-கொடுத்தல்.

இனி, ‘புரிதல்‘ என்று மீளாகைக்கும் போதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே;
பெறுமவர்கள் ‘போதும்‘ என்றவாறு கொடுப்பதினின்று மீண்டாலும் நெடுந்தடக்கையாகவே யிருக்கும்;
உழக்கிலே பதக்கை யடக்க வொண்ணாமையாலே மீளுமித்தனை;
இவன் தன்னுடைய ஔதார்யத்தைப் பார்த்தால் யாசகர்களின் மனோ ரதம் சிறிதாய் இவனுடைய பாரிப்பே விஞ்சியிருக்குமென்பது கருத்து.

(நெடுந்தடக்கை) நெடு, தட என்ற இரண்டு விசேஷணங்களுக்குக் கருத்து என்னென்னில்;
யாசகர்களிருந்த விடத்தளவுஞ் செல்ல நீண்ட கை என்பது நெடு என்றதன் கருத்து;
திருக்கையின் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் அவகாசங் கொள்ளும்படியான
பெருமை ‘தட‘ என்றதனாற் சொல்லிற்றாமென்க.

அலம் புரிந்த என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்;
ஹலம் என்ற வடசொல் கலப்பை யென்று பொருள்படும்; அஃது அலமெனத்திரியும்;
கலப்பையைத் தரித்த திருக் கையை யுடையவன் என்னலாம்.
இதனால் பலராமாவதாரத்தைப் பேசினபடி.
பலராமனுக்குக் கலப்பையும் உலக்கையும் முக்கிய ஆயுதங்கள்.
அதனால் அவ்விராமனுக்கு ‘ஹலாயுதன், ஹனீ, முஸலீ என்ற திருநாமங்கள் வழங்கும்.

அமரர் வேந்தன் =
கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்ய ஸூரிகளை இங்கு அமரர் என்கிறது.
நித்ய ஸூரிகளை அடிமை கொள்வதாக முடி கவித்திருப்பவன் என்றவாறு.

(அஞ்சிறைப்புள்தனிப்பாகன்)
கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்ய ஸூரிகளை அடிமை கொள்பவனென்று பொதுவாகச் சொல்லிற்று;
அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு திருஷ்டாந்தமாக ஒரு வ்யக்தியைச் சிறப்பாக எடுத்துப் பேசுகிறார்.
அழகிய சிறகை யுடையனான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகன், கருடவாஹன்ன் என்றபடி.
எம்பெருமான் தன்மீதேசறி உலாவும்போது உண்டாகும் ஆயாஸத்திற்குத் திருவாலவட்டம் பணிமாறினாப் போலே
இரண்டு சிறகாலும் ஆச்வாஸம் செய்கிறபடியைத் திருவுள்ளம் பற்றி ‘அஞ்சிறை‘ என்று புள்ளுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.
அடியார்கள் இருக்குமிடங்களிலே எம்பெருமானைக் கொண்டு சேர்ப்பதற்குச் சிறகுகளே கருவியாதலால் அவற்றைக் சிறப்பித்துக் கூறுகிறபடியுமாம்.

(அவுணர்க்கென்றும் சலம்புரிந்து அங்கருளில்லாத் தன்மையாளன்)
ஸ்ரீராம க்ருஷ்ணாதிரூபேண திருவவதரித்து விரோதிகளைக் களைந்தமை சொல்லுகிறது.
‘அவுணர்‘ என்றது அசுர்ர் என்றபடி. இது அஸுரஜாதியைச் சொல்லுகிறதன்று.
அஹங்கார மமகாரங்களோடு கூடினவர்களாய் பகவத் பக்தியிலே பகை யுள்ளவர்கள் ஆஸுரப்க்ருதிகளென்று
சொல்லப் படுவார்களாதலால் அவர்களையே இங்கு அவுணரென்கிறது.

ப்ரஹ்லாதாழ்வான் அஸுரயோனியிற் பிறந்தவனாயிருக்கச் செய்தேயும்
“உபமாநமசேஷாணாம் ஸாதூநாம்யஸ் ஸதாபவத்“ எனும்படி ஸாதுக்களுக்கு உபமாநமா யிருந்தான்.
விபீஷணாழ்வான் ராக்ஷஸ அஸுரயோநியிற் பிறந்திருக்கச் செய்தேயும் “விபணஷஸ் து தர்மாத்மா“ என்னும்படியாயிருந்தான்.

ஜயந்தன் (காகாஸுரன்) தேவயோநியாயிருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான்.
ஆன இப்படிகளை ஆராயுமிடத்து அஸுரத்வமும் தேவத்வமும் ஜாதிபரமன்று, ஸ்வபாவபரம். அதாவது.
“விஷ்ணு பக்திபரோ தேவோ விபரீதஸ் த்தாஸுர“ என்று ஸ்ரீவிஷ்ணு தர்மத்திலே சொல்லிற்று.
“த்வௌ பூதஸர்க்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச-தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா.“ என்று
பகவத்கீதை யிலே சொல்லிற்று.
எம்பெருமானுடைய ஸ்வரூப குணவிபூதிகளில் அன்புள்ளவர்கள் தேவரெனப்படுவர்கள்,
அவற்றில் பொறாமை யுள்ளவர்கள் அசுரனெப்படுவர்கள்.
“நண்ணவசுர்ர் நலிவெய்த நல்லவமர்ர் பொலிவெய்த“ (10-7-5) என்பன போன்ற விடங்களிலும்
இவ்வகைப் பொருள் அநுஸந்திக்கப்பட்டமை காண்க.
ஆக இப்படிப்பட்ட ஆஸுர ப்ரக்ருதிகள் விஷயத்தில் ஒருநாளும் அநுக்ரஹ மின்றி நிக்ரஹமே செய்து போருமியல்வின்ன் என்றதாயிற்று.

இப்படிப்பட்ட எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குந் திருப்பதிகளை யெல்லாம் பாடிக் கொண்டே
திருக்கோவலூர் தொழப் போவோமென்கிறார்.
மேல் ஒன்றரையடிகளால் திருக் கோவலூரை விசேஷிக்கிறார்.
(நிலம் பரந்து வருங்கலுழி இத்யாதி.)
பெண்ணையாகிற ஒரு பெண்மணி திருக் கோவலூராயனாராகிற புருஷோத்தமனை அநுபவிக்கப் போகிறாளாகையாலே
அளவற்ற ஆதரந்தோற்றப் பேராரவாரத்தோடே பெருகுகிறபடி.
ஜந்தோஷ மிகுதியாலே கரை மீதே வழிந்து குடியிருப்புக்களை யழித்த, கரையில் நிற்கிற வேய்களை
வேர்ப் பற்றிலே குத்தியெடுத்து இழுத்துக் கொண்டு வர, அந்த வேய்கள் உடைந்து முத்துக்களை ப்ரஸவிக்க,
அவற்றைப் பெண்ணையாறு வயல்களிலே கொண்டு தள்ள,
பயிரிடுமவர்கள் அவை தங்கள் பயிர்க்குக் களைகளென்று தள்ள,
அவர்களாலும் தடைசெய்ய வொண்ணாதபடி வயல்களிலெங்கும் பரந்தனவாம் முத்துக்கள்,
இப்படிப்பட்ட வயல்களிலே பொன் போன்ற நெற்கள் விளையப் பெற்ற பூங்கோவலூரைத் தொழுவோம்,
நெஞ்சே! புறப்படு என்றாராயிற்று.

பொய்கை வேலி என்பதில் தொனிக்கும் அர்த்த விசேஷமும் உணர்க.
பொய்கை யாழ்வார் முதலான முதலாழ்வார்களைக் காப்பாகவுடைய திருக்கோவலூர் என்க.

அவதாரத்துக்கு பிற்பட்டார் உஜ்ஜீவிக்க -திவ்ய தேசங்கள் இருக்க
அமரர் வேந்தன் -அலம் புரிந்த தடக்கைக்கு இலக்கான நித்ய ஸூரிகள் அமரர்
அவர்களை அடிமை கொள்ள முடி கவித்து இருப்பவன் அமரர் வேந்தன்

அஞ்சிறைப் புள் தனிப் பாகன் –
அமரர் அடிமை கொண்டதற்கு ஒரு எடுத்துக் காட்டு
பெறிய திருவடிக்கு அத்விதீயமான பாகன்
ஆயாசத்துக்கு திரு ஆல வட்டம் போலே சிறகுகள்
அடியார்கள் இருக்கும் இடம் அவனை கொண்டு வருவதால் அழகிய அடை மொழி

அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
அஹங்கார மமகாரங்கள் -பகவத் பக்தியிலே பகை உள்ளவர்கள்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஆசூர ஜாதியில் இருந்தாலும்
உபமானம் அசேஷாணாம் சாதுநாம் யஸ் சதா பவேத்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விபீஷணஸ் து தர்மாத்மா
ஜெயந்தன் காகாசுரனாய் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான்
அசூரத்வமும் தேவத்வமும் ஜாதி பரம் அன்று ஸ்வபாவ பரம்
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ் ததாசூர -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
த்வௌ பூத சர்க்கௌ லோகேச்மின் தைவ ஆசூர ஏவ ச
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாயா சூரி மதா-ஸ்ரீ கீதை

மேலே திவ்ய தேசங்களை பாடிக் கொண்டு திருக் கோவலூர் தொழப் போவோம் என்கிறார்
பெண்ணை ஆறு திருக் கோவலூர் ஆயானாகிய புருஷோத்தமனை அனுபவிக்க
பெரிய ஆதாரத்துடன் பெறுகிற படி
கரை புரண்டு வேய்களை குத்தி எடுத்து
அந்த வேய்கள் உடைந்து முத்துக்கள் பிரவேசிக்க
அவற்றை பெண்ணை ஆறு வயல்களிலே கொண்டு தள்ள
பயிரிடுமவர்கள் அவற்றை களை என்று தள்ள
அவர்களாலும் தடை செய்ய ஒண்ணாதபடி வயல்கள் எங்கும் பரந்தனவாம் முத்துக்கள்
இப்படிப் பட்ட வயல்களிலே பொன் போன்ற நெற்கள் விளையப் பெற்ற
பூம் கோவலரைத் தொழுவோம் நெஞ்சே புறப்பட்டு -என்கிறார்-

————————————————————————–

வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

பதவுரை

வற்பு உடைய–மிடுக்குடைய
வரை நெடு தோள்–மலை போன்று உயர்ந்த தோள்களை யுடையரான
மன்னர்–(கார்த்த வீரியார்ஜூனன் முதலான) அரசர்கள்
மாள–முடியும்படி
வடிவு ஆய–அழகியதான
மழு–கோடாலிப் படையை
ஏந்தி–தரித்து (பரசு ராமனாய்த் திருவதரித்தும்)
உலகம் ஆண்டு–(ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும்
வெற்பு உடைய–மலையை உள்ளே யுடைய
நெடு கடலுள் –பெரிய கடலினுள்ளே
தனி வேல்–ஒப்பற்ற வேற்படையை
உய்த்த–செலுத்தின
வேள் முதலா–ஸுப்ரஹமண்யன் முதலான தேவதைகளை
வென்றான்–(பாணாஸுர யுத்தத்தில்) தோல்வி யடையச் செய்தும் போந்த எம்பெருமான்
ஊர்–எழுந்தருளி யிருக்குமிடமாய்,
விந்தை மேய–(தவம் புரிவதற்காக) விந்தின மலையிலி் வாழ்ந்தவளாய்
கற்பு உடைய–அறிவில் சிறந்தவளாய்
மடம்–பற்றினது விடாமையாகிற குணமுடையனான
கன்னி–துர்க்கையானவள்
கடி பொழில் சூழ்–பரிமளத்தை யுடைய சோலைகளாலே சூழப்பட்டதாய்
நெடு மறுகில்–விசாலமான திருவீதிகளை யுடைத்தாய்
கமலம் வேலி–தாமரைத் தடாகங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
பொற்பு உடைய மலை அரையன்–பராக்ரம சாலிகளான மலயமாநவர்களாலே ஆச்ரயிக்கப் பட்டதான
பூங்கோவலூர்–திருக் கோவலூரை
நெஞ்சே தொழுதும்–மனமே! தொழுவோம்;
போது–வா

கீழ்ப்பாட்டில் “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று
திருக் கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை யழைத்தார்;
அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்ட சண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த
ஸர்வ ஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத் தொடங்கினார்.
அஸ்தானத்திலும் பய சங்கை பண்ணுகை யன்றோ ஆழ்வார்களின் பணி.

எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குணங்களை அநுஸந்தித்தவாறே இவ் விலக்ஷண வஸ்துவுக்கு
என்ன அவத்யம் வருகிறதோவென்று வயிறு பிடிக்க வேண்டும்படியாயிற்று.
ஸ்ரீவிபீஷணாழ்வான் அநுகூலனாய் வந்து சரணம் புகா நிற்கச் செய்தேயும் ஸுக்ரீவ மஹாராஜர் தம்முடைய கனத்த
ப்ரேமத்தினால் கலங்கி அபாயசங்கை பண்ணினபோது பெருமாள் தம் தோள் வலியைக் காட்டி அச்சந் தவிர்த்தாப் போலே
பிரகிருதத்திலும் திருக் கோவலூராயனார் தம் மிடுக்கையும் காவலுறைப்பையும் தேசத்தினுடைய அரணுடைமையையும்
ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுக்க, அவற்றையெல்லாங்கண்டு தெளிந்த ஆழ்வார் அச்சங்கெட்டு
“பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருவுள்ளத்தைத் தட்டி யெழுப்புகிறார்.

“வற்புடையவரை நெடுந்தோள் மன்னர்மாள வடிவாய மழுவேந்தி” என்ற வளவும் பரசுராமாவதார பரம்.
“உலகமாண்டு” என்றது ஸ்ரீராமாவதாரபரம்.
“வெற்புடைய நெடுங்கடலுள் தனி வேலுய்த்த வேள் முதலா வென்றான்” என்றது ஸ்ரீ க்ருஷ்ண யவதாரத்தில்
பாணாஸுர விஜய பரம். இவை, ஆழ்வாருடைய அச்சங்கெடுக்கைக்கு எம்பெருமான் காட்டித் தந்த மிடுக்குக்களாம்.

வடிவாய மழு = ‘வடிவு ஆய மழு‘ என்று பிரித்தால் அழகியதான மழு என்று பொருள்படும்.
‘வடி வாய மழு‘ என்று பிரித்தால் கூர்மையான வாயையுடைய மழு என்று பொருள்படும்.

உலகமாண்டு =
ஸ்ரீராமபிரானாய்த் திருவவதரித்துத் திருக்குணங்களாலே உலக முழுவதையும் ஈடுபடுத்தி
ஆண்ட படியைச் சொல்லுகிறது இது.

வெற்புடைய நெடுங்கடலுள் தனி வேலுய்த்த வேள் முதலா வென்றானூர் =
முற் காலத்தில் மலைகளெல்லாம் இறகுகளுடன் கூடிப் பறந்து ஆங்காங்க வீழ்ந்து நகரங்களையும் கிராமங்களையும்
அழித்துக் கொண்டு திரியுங்கால் தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின் இறகுகளை அறுத்தொழிக்க,
மைநாக மலை அவனுக்குத் தப்பித் தெரியாதபடி கடலினுள்ளே கிடக்க,
தேவஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யன் அதனையறிந்து தனது வேற்படையைச் செலுத்தி
அம்மலையை நலிந்த வரலாறு இங்கு அறியத்தக்கது.
அப்படிப் பட்ட மஹாவீரனான ஸுப்ரஹ்மண்யன் முதலானாரைப் பாணாஸுர யுத்தத்தினன்று பங்கப்படுத்தினமை சொல்லிற்றாயிற்று.

‘வேள்‘ என்று காமனுக்குப் பேராயிருக்க, ஸுப்ரஹ்மண்யனை வேள் என்றது உவமையாகு பெயர்.
மன்மதனைப் போல் அழகிற் சிறந்தவனென்க.
நம்மாழ்வார் ‘ஆழியெழ‘ என்னுந் திருவாய்மொழியிலே பாணஸுர விஜய வ்ருத்தாந்தத்தைப் பேசும் போது
“நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான்” என்று ஸுப்ரஹ்மண்யன் தோற்றுப் போனதை முந்துற
அருளிச்செய்கையாலே இவ்வாழ்வாரும் அதனைப் பின்பற்றி ”வேள்முதலா வென்றான்” என்றாரென்க.
”கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு” என்ற இராமாநுச நூற்றந்தாதியுங் காண்க.

இனி, திருக்கோவலூர்த் திருப்பதியின் காவலுறைப்பை அருளிச் செய்கிறார் -விந்தைமேய வென்று தொடங்கி.
துர்க்கையானவள் இந்த க்ஷத்திரத்தைத் காவர் செய்து வர்த்திக்கிறாளென்பது இதிஹாஸம்.
பெரிய திருமொழியிலும் (2-10-6) இவ்வூர்த் திருப்பதிகத்தில்
”வியன்கலை யெண்டோளினாள் விளங்குசெல்வச் செறியார்ந்த மணிமாடந் திகழ்ந்து தோன்றுந்
திருக்கோவலூரதனுட் கண்டேனானே” என்றருளிச் செய்தது முணர்க.
இந்தத் துர்க்கையானவள் இவ்விடத்துக் காவல் பூணகைக் குறுப்பாக விந்த்யாடவியிலே யிருந்து தவம் புரிந்தாளென்பதுபற்றி
‘விந்தைமேய‘ எனப்பட்டது. ‘விந்தியம்‘ என்பது விந்தையென மருவிற்று.

கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமலவேலி =
எங்குப் பார்த்தாலும் நறு மணம் மிக்க சோலையாயிருக்கும்;
திருவீதிகளோ அகல நீளங்களிற் குறையற்றிருக்கும்; தாமரைத் தடங்களும் ஊர்க்கு வேலியாயிருக்கும்.

பொற்புடைய மலையரையன் பணிய நின்ற =
திருவல்லிக்கேணியில் தொண்டையர் கோன் போலவும்,
அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும்,
நந்திபுரவிண்ணகரத்தில் நந்திவருமன் போலவும்,
திருநறையூரில் செம்பியன் கோச் செய்கணான்போலவும்,
திருக்கோவலூரில் ‘மலயமாநவர்‘ என்னும் பிரபுக்கள் தொண்டு பூண்டு உய்ந்தனராக இதிஹாஸம் வழங்குமென்ப.

”மலையரையன்” என்றது ஜாத்யேகவசநமாய்ப் பரம்பரையான அரசர்களைச் சொல்லுகிறதென்பது பெரியவாச்சான் திருவுள்ளம்.
அவ்வரசர்களின் கைங்கரியங்களுக்கு இலக்காயிருக்கும் திருக்கோவலூர்.
ஆக இப்படிப்பட்ட திருப்பதியைச்சென்று தொழுவோம், புறப்படாய் நெஞ்சமே! என்றாராயிற்று.

திருவடியை வசிஷ்ட சண்டாள விபாகம் அற சர்வ ஸ்வதானம் பண்ண அதுக்கு அஞ்சி
அஸ்தான பய சங்கை ஆழ்வார்களின் பணி
சுக்ரீவன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் பண்ணிய அதி சங்கைக்கு தனது தோள் வலியைக் காட்டி
அச்சம் தவிர்த்தால் போலே
இங்கு உள்ள காவல் உறைப்பையும் தேசத்தில் உள்ள அரண் உடைமையும் ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க
கண்டு தெளிந்து ஆழ்வார் அச்சம் கேட்டு பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -என்று
தமது திரு உள்ளத்தை தட்டி எழுப்புகிறார்

வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடிவாய மழு ஏந்தி -ஸ்ரீ பராசுராம விஜய பரம்
உலகம் ஆண்டு -ஸ்ரீ ராம விஜய பரம்
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் -ஸ்ரீ கிருஷ்ண பாணாசூரா விஜய பரம்
ஆழ்வார் அச்சம் தீர அவன் காட்டித் தந்த மிடுக்குகள்

வடிவாய மழு-வடிவு ஆய மழு அழகிதான மழு
வடி வாய மழு -கூர்மையான வாயை உடைய மழு
மைந்நாக மலையை ஸூப்ரஹ்மன்யன் நலிந்த வரலாறு
மன்மதனை போலே அழகு என்பதால் -வேள் -என்கிறாள்
நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் -வேள் முதலா வென்றான்
கார்த்திகையானும் கரி முகத்தானும் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு

விந்தை மேய –
துர்க்கை தேவதை ஷேத்திர காவல்
வியன்கலை ஒண் தோளினாள் விளங்கு செல்வச் செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவலூர் அதனுள் கண்டேனே -பெரிய திருமொழி
விந்த்யாடவியிலே இருந்து தவம் புரிந்தாள் எனபது பற்றி விந்தை மேய -என்கிறார்
விந்த்யம் எனபது விந்தை என மருவி –

பொற்புடைய மலை யரையன் –
திருவல்லிக்கேணியில்- தொண்டையர் கோன் -போலவும்
திரு அட்ட புயகரத்தில் -வயிரமேகன்- போலவும்
திரு நந்திபுர விண்ணகரத்தில் -நந்தி வருமன் -போலவும்
திரு நறையூரில் -செம்பியன் கோச் செங்கணான் -போலவும்
திருக் கோவலூரில் -மலயமானவர் -பிரபுக்கள் தொண்டு பூண்டு உய்ந்தனர்
மலையரையன் ஜாதி ஏக வசனம்-பரம்பரையான அரசர்கள் – என்றுமாம்-

——————————————————————-

பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்-

நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணி னேனே.

பதவுரை

நீரகத்தாய்-நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!
நெடு வரையின் உச்சி மேலாய்–திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!
நிலாத் திங்கள் துண்டத்தாய்–நிலாத் திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!
நிறைந்த கச்சி ஊரகத்தாய்–செழிப்பு நிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருப்பதியிலுள்ளவனே!
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்–அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
உள்ளுவார் உள்ளத்தாய்–சிந்திப்பாருடைய நெஞ்சிலுறைபவனே!
உலகம் ஏத்தும் காரகத்தாய்–உலகமெல்லாம் துதிக்கும்படியான திருக்காரகத்திலுள்ளவனே;
கார் வானத்து உள்ளாய்–திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!
கள்வா-கள்வனே!
காமரு–விரும்பத்தக்கதாய்
பூ–அழகியதான
காவிரியின்–திருக்காவேரியினது
தென் பால்-தென் புறத்திலே
மன்னு-பொருந்தி யிருக்கிற
பேரகத்தாய்-திருப்பேர் நகரில் உறை பவனே!
என் நெஞ்சில் பேராது உள்ளாய்-எனது ஹ்ருதயத்திலே பேராமலிருப்பவனே!
பெருமான்-ஸர்வ ஸ்வாமியானவனே!
உன் திரு அடியே-உனது திருவடிகளையே
பேணினேன்-ஆசைப்படா நின்றேன்.

நீரகத்தாய் =
திருக்கச்சிமாநகரில் திருவூரகமென்று ப்ரஸித்தமான ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸந்நிதியிலுள்ள
திருநீரமென்கிற திவ்யதேசம்; அவ்விடத் தெம்பெருமானை விளித்தபடி.
நீரின் ஸ்வபாவத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குந் தலமாதல் பற்றி இத்தலத்திற்கு
நீரக மென்று திருநாமமாயிற்றென்பர்.
நீர்க்கும் எம்பெருமானுக்கும் ஸ்வபாவ ஸாம்யம் பலபடிகளாலுண்டு. அது நமது ஸ்வாதேசார்த்த ஸாகரத்தில் காணத்தக்கது.

நெடு வரையின் உச்சி மேலாய்=
பூ மண்டலத்திலுள்ளார் அநுபவிப்பது மாத்திரமன்றியே மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கலாம்படி
ஓங்கியுள்ள திருமலையிலே நின்றருள்பவனே!
“வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“
“வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“
“மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற அருளிச் செயல்களறிக.

நிலாத்திங்கள் துண்டத்தாய் =
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டினுள் ‘நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது ஒரு திருப்பதி;
இது பெரிய காஞ்சீபுரத்தில் தேவதாந்தா ஆலயத்தினுள் உள்ளது.

நிறைந்தகச்சியூரகத்தாய்=
ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி.
எம்பெருமான் உரக ரூபியாக இத்தலத்தில் ஸேவை ஸாதிப்பதனால் ஊரகமென்று திருநாமமாயிற்றென்ப.
(உரகம்-ஆதிசேஷன்)
நிறைந்த கச்சி யென்றது
திவ்ய தேசங்களால் நிறைந்த காஞ்சீ ஷேத்ரமென்றபடி.
திருவூரகத் தெம்பெருமான் தன் திருமேனியொளியாலே திருக்கச்சி மாநகர் முழுவதையும்
நிரப்பி யிருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்.

ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்=
இவ்விடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியங்களின் பரம போக்யதை காண்மின் ;-
“திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண்வளர்ந்தருளினவனே!.
அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே
அழகிய துறை யென்கிறது. தத்ஸம்பந்தத்தாலேயிறே அத்துறையைப்பற்றிக் கிடக்கிறது.
(கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா-
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்.”-
“கணிகண்ன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் –
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.” )
என்ற விடுதிப் பாசுரங்களைத் திருமழிசைப்பிரான் வைபவத்திற்காண்க.
ஆச்ரிதன் போனபோது அவன் பின்னே போயும் அவன் வந்தவாறே வந்து கால்நடை தலைமாடாக் கிடந்தும்
இப்படியிறே அங்குத்தை ஆச்ரித பாரதந்திரிய மிருப்பது.
‘இந்த வூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ‘ என்று வைஷ்ணவனிருந்த தேசம்
வைஷ்ணவனுக்கு உத்தேச்யமாயிருக்குமா போலே ஆச்ரித ஸ்பர்சமுள்ளதொருதுறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யமா யிருக்கிறபடி.

உள்ளுவார் உள்ளத்தாய்! –
காஞ்சீ ஷேத்ரதில் ‘உள்ளுருவாருள்ளம்‘ என்று ஒரு திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டம் போலவே
தேவதாந்திர ஆலயத்தின் உள்ளிருப்பதாகவும், அத்தலத்து எம்பெருமானையே இங்கு
‘உள்ளுருவாருள்ளத்தாய்!‘ என விளித்திருப்பதாகவும் பலர் சொல்லிப் போருவதுண்டு ;
இஃது ஆதாரமற்ற வார்த்தையாகும்.
பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் இங்ஙனே காணவில்லை யென்பதுந்தவிர,
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளின நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்
உள்ளுவாருள்ள மென் றொரு திருப்பதி பாடல் பெற்றிராமையும் நோக்கத்தக்கது.
தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருக்குமவனே! என்றபடி.
எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான
உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்ய மென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறானென்றும்
நம் ஆசார்யர்கள் நிர்வஹித்தருள்வது இங்கு உணரத்தக்கது.

உலகமேத்துங் காரகத்தாய் =
காரகமென்கிற திவ்ய தேசமும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கியது.
மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் வாழுமிடமாதல் பற்றி இத்தலத்திற்குக்
காரக மென்று திருநாமமாயிற்றென்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஸாம்யம் பலபடிகளால் உய்த்துணரத்தக்கது.
(இதுவும் நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விசதம்.)

கார்வானத்துள்ளாய்! =
கார்வானமென்பதும் தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று;
இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கிய திவ்யதேசங்கள் நான்கிலொன்று.

கள்வா! =
‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்திலுறைபவனே :
பிறர் அறியாதபடி காரியஞ் செய்பவனைக் கள்வனென்பது;
எம்பெருமானும் ‘இராமடமூட்டு வாரைப்போலே உள்ள பதிகிடந்து ஸத்தையே பிடித்து
நோக்கிக் கொண்டு போருமவனாகையாலே கள்வனென்ப்படுகிறான்.

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்! =
‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளிகொண்டருள்பவனை விளிக்கிறபடி.

பல திருப்பதிகளையும் வாயார சொல்லிக் கதறுகிறார் –
நீரகத்தாய்
திருக் கச்சியில் திரு ஊரகம் -உலகந்த பெருமாள் சந்நிதியில்
உள்ள திரு நீரகம் திவ்ய தேசம்
நீரின் ஸ்வ பாவங்கள் அவனுக்கும் உண்டே
1-பள்ளத்தில் பாயும் -மேட்டில் ஏறுவது அருமை
ஜாதி இத்யாதிகளால் குறைந்தோர் பக்கம்
பாண்டவதூதன் பீஷ்மர் துரோணர் துரியோதனன் விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகை அமுது செய்து அருளினான்
பள்ளத்தே ஓடி பெரும் குழியே தங்கும் இயல்வு உண்டே
2-நீர் இல்லாமல் கார்யம் இல்லை
லோகோ பின்ன ருசி யாக இருந்தாலும் எல்லாரும் நீரை விரும்புவது போலே எம்பெருமானும்
3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை– சூடு வந்தேறி
இவனுக்கும் தண்ணளி இயற்கை -சீற்றம் வந்தேறி
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் -முமுஷூப்படி திவ்ய ஸ்ரீ ஸூக்தி
4- நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேணும்
எம்பெருமான் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –
5-நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரியதாய் இருக்கும்
ஆண்டாள் சூடிக் களைந்த மாலையாலே விலங்கிட்டு வைத்து புஜிக்க- நின்றான்
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது நடந்தான்
6-நீர் மற்ற பண்டங்கள் சமைக்க வேணும் –
தனிப்பட தானே குடிக்கவும் தக்கதாய் இருக்கும்
அவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் இரண்டு ஆகாரங்களும் உண்டே
அவனும் ஸ்வயம் புருஷார்த்தம்
7-அன்னம் போன்றதுக்கு பிரதி நிதி உண்டு
நீருக்கு பிரதிநிதி இல்லையே
குண அனுசந்தானத்தாலும் போது போக்க அரிது
ஒரு நாள் காண வாராயே -அடியேன் தொழ வந்து அருளாயே -என்று பிரார்தித்து பெற்றே தீர வேணும்
8-சோறு உண்ணும் போது நீர் வேணும்
நீர் வேறு ஒன்றை அபேஷிக்காது
உபாயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேணும்
எம்பெருமான் இதர நிரபேஷன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
9-கொள்ளும் பாத்ரங்கள் தார தம்யம் அன்றி நீர் தானே குறைய நில்லாது
எங்கும் நிரம்பவற்று
எம்பெருமானும் கொள்ளக் குறைவிலேன்
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்ளக் குறையே அத்தனை
ஐஸ்வர்யம் போதுமே கைவல்யம் போதுமே
10- நீர் ஐந்து வகைப் பட்டு இருக்கும்
பூமிக்கு உள்ள பதுங்கிக் கிடக்கும் நீர் /ஆவரண ஜலம் /பாற் கடல் நீர் /பெருக் காற்று நீர் /தடாகங்களில் தேங்கும் நீர்
அவனும் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
விடாய்த்தவனுக்கு வேறு இடம் தேடித் போக வேண்டாத படி நிற்கிற இடத்திலே உண்டாய் இருக்கச் செய்தேயும்
கொட்டும் குத்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக் கிடையாத பூமிக்குள் பதிந்த நீர் போலே அந்தர்யாமித்வம்
கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு ஹிருதயத்தில் இருக்கச் செய்தேயும்
கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அஷ்டாங்க யோகம் யத்னத்தால் காண வேணுமே
விடாய்தவனுக்கு அண்டத்துக்கு வெளியே பெருகிக் கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆயிற்று
கண்டு பற்ற வேண்டும் என்று இருக்குமவனுக்கு லீலா விபூதிக்கு அப்பால் உள்ள பரத்வம்
அப்படி அதி தூரஸ்தம் அன்றியே அண்டத்துக்கு உட்பட்டு இருக்கச் செய்தேயும்
விடாய்தவனுக்கு கிட்ட அரிதான பாற் கடல் போலே வ்யூஹம்
சமீஸ்தமாய் இருந்தும் தத் காலத்தில் இருந்தவர்களுக்கு மாத்ரம் உபயோகமாய் யோக்யமாய்
பிற்பட்டார்க்கு அரிதான பெருக்காறு போலே ஆயிற்று விபவம் -ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்
விடாய்தவனுக்கு விடாய் தீரலாம்படி பெருக்காரிலே தேங்கின மடுக்கல் போலே யாயிற்று
கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லார் கண்ணுக்கும் இலக்காம்படி அர்ச்சாவதாரம்
11- நீரானது ஸ்வத பரிசுத்தமாயினும் ஆஸ்ரய வசத்தாலே த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும்
அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் த்யாஜ்யனாயும்
கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள எம்பெருமான் உபாதேயம்
12-தோண்ட தோண்ட சுரக்கும் நீர்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும்
13-நீர் தனக்கு ஒரு பிரயோஜனமும் இன்றியே பரார்த்தமாகவே இருக்கும்
எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும்
14-நீர் தானே பெய்ய வேணும் அன்றி ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது
எம்பெருமான் படியும் அப்படியே
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேஷை கஞ்சித் கதாசன
15 நீர் கடலில் இருந்து காள மேகம் வழியாக வந்தால் அன்று உபஜீவிக்க உரியது ஆகாது
எம்பெருமானும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆசார்யர் முகமாகவே வந்தே உபஜீவ்யன் ஆகிறான்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூல் கடல் சொல் இவர் வாயனவாயத் திருந்தினவாறே
சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆமே
16-வசிஷ்ட சண்டாள விபாகம் அற ஒரே துறையிலே படிந்து குடைந்தாடலாம் நீரில்
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
பெரியார் சிறியார் வாசி அற ஆஸ்ரயிக்கலாம்
17-நீர் சிறிது த்வாரம் கிடைத்தாலும் உட் புகுந்து விடும்
எம்பெருமானுக்கு சிறிது வ்யாஜ்யமே போதும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறைய வந்து புகுந்தான்
18-தீர்த்த விசேஷங்களிலே நீருக்கு மகாத்மயம் அதிகம்
எம்பெருமானுக்கு கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திருப்பதிகள் விசேஷம்
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் ஏறட்டு கொள்வது
முதுகில் கொட்டுவது உள்ளில் இழிச்சுவது குடைந்து நீராடுவது
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் ஸ்ரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி -எம்பெருமானை விழுங்குவார்கள்
20-நீர் வேண்டியவன் துளி நுனி நாக்கு நனைத்தால் போதும் என்பான்
கூராழி வெண் சங்கு ஏந்தி –ஒரு நாள் காண வாராயே
21-நீரில் சிறிய கல்லும் அமிழும் பெரிய தெப்ப மரமும் மிதக்கும்
ப்ரஹ்மாவாய் இழந்து போதல் இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யக் காண்போம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
சிறு மா மனிசர் அமிழ்தலும்
ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்றலும் காண்போம்
இங்கனே பலவும் உண்டே

நெடு வரையின் உச்சி மேலாய்
பூமியில் உள்ளார் மட்டும் அன்றி மேல் உலகத்தோரும் வந்து அனுபவிக்கலாம் படி
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் திரு வேங்கடம்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு
மந்திபாய் வட வேங்கட மா மலை நின்றான் –

நிலா துங்கள் துண்டத்தாய்

நிறைந்த கச்சி ஊரகத்தாய்
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி
திரு ஊரகத்து எம்பெருமான் ஆதி சேஷன் தனது திரு மேனி ஒளியாலே திருக் கச்சி முழுவதும் நிறைத்த என்றுமாம்

ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
திரு வெக்காவில் அழகிய துறையைப் பற்றி கண் வளர்ந்து அருளினவனே
அல்லாத துறைகளைப் போல் அன்றியே ஆழ்வார் திரு மழிசைப் பிரான் இழிந்து தீர்த்தம் ஆடின துறையாகையாலே அழகிய துறை ஆகிறது
தத் சம்பந்தத்தாலே இறே அத் துறையைப் பற்றிக் கிடக்கிறது
கனி கண்ணன் போகின்றான் –பைந்நாகப் பாயை சுருட்டிக் கொள்
கனி கண்ணன் போக்கு ஒழிந்தான் –பைந்நாகப் பாய் படுத்துக் கொள் –
ஆஸ்ரிதன் போன போது அவன் பின்னே போயும்
அவன் வந்தவாறே கால் கடை தலை மாடாக கிடந்தும்
இப்படி இறே அங்குத்தை ஆஸ்ரித பாரதந்த்ர்யம் இருப்பது
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ என்று
ஸ்ரீ வைஷ்ணவர் இருந்த தேசம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்குமா போலே
ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள துறையும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யமாய் இருக்கும் படி
வேகவதி –வேகா சேது -வேகவணை –வேகணை -வேகனை-வெக்கணை -வெக்கா மருவி

உள்ளுவார் உள்ளத்துள்ளாய்
ஹிருதய கமலத்தில் வாழ தான் திவ்ய தேச வாஸம்
சிலர் உள்ளுவார் உள்ளம் தேவதாந்திர கோயில் என்றும் அங்குள்ள பெருமாள் என்றும் –
நிலாத் துங்கள் துண்டத்தாய் -என்றும் தப்பாக சொல்வார்கள்

உலகமேத்தும் காரகத்தாய்
மேகம் போன்ற ஸ்வ பாவம் உடையவனே
1-பெய்ய வேண்டிய இடம் அளவும் சென்று பெய்யும்
வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
2- மின்னல் உள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும்
பிராட்டி உடன் இருந்தால் கிருபா ரசம் விஞ்சி இருக்கும்
இவள் சந்நிதியால் காகம் தலைப் பெற்றது அது இல்லாமையால் ராவணன் முடிந்தான்
3- மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்
தனக்கு உபதேசித்தார்க்கும் உபதேசிப்பான்
சித்ர கூடத்தில் வசிஷ்டன் பெருமாள் இடத்திலே சில சூஷ்ம தர்மங்கள் கேட்கப் பெறலாயிற்று
4-பெய்யப் பெறாத காலத்திலே வரைக்கும் மேகம்
நெஞ்சு உலர்ந்து பேசினான் இறே திரௌபதிக்கு ஆபத்திலே நேரிலே வந்து உதவப் பெறாமையாலே
5-இன்ன காலத்தில் மேகம் பெய்யும் என்று அறுதியிட வல்லார் யாரும் இல்லை
வந்தாய் போலே வாராதே வாராதே போலே வருவானே
திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான்
அபேஷியாது இருக்கவே தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்டான்
6- வனத்திடை ஏரியாக வெட்டி யாயிற்று நீ மழை பெய்தாக வேணும் என்று வளைப்பிட ஒண்ணாது
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்தனன்
7- ஜல ஸ்தல விபாகம் இன்றியே பெய்யும் மழை
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம்
இடையர் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -பகவத் விஷயீ காரம் பெற்றவர்கள்
8-மேகம் சரத் காலத்திலே கர்ஜித்து போய் விடும் மழை பெய்யாது பெய்யும் காலத்தில் ஆடம்பரம் அறப் பெய்யும்
எம்பெருமான் குசேலருக்கு அருள் செய்தபடி
9- விராட பர்வ கால ஷேபத்துக்கு வரும் மேகம்
பகவத் விஷய கால ஷேபத்துக்கு வந்து நிற்கும் எம்பெருமான்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் என்று வந்தான் இறே ஸ்ரீ ரெங்க நாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே
10- சுக்திகளில் பெய்து முத்தாக்கும் மேகம்
அடியாருக்கு இன்ப மாரியாகிய எம்பெருமான் கடாஷ தாரையும்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் இடத்தே பிரவஹித்து மிக்க பயன் தரும்
11-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் -இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்
இவனும் இன்னார் தூதன் என நின்றான்
கோதை வேலை ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் இறே
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்
எருக்கலை போல்வன வீழ்ந்து ஒழியும்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய்
தாயார் மகிழ ஒன்னார் தளர
13- எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் பைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் -வேறு புகல் அற்று
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -அநந்ய கதிகளால்
14-துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை -என்கிறபடி
அன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேது வாகையாலே போக ஸ்தானமாயும்
விடாய் தீர பருகுகையாலே ஸ்வயம் போக்யமாயும் இருக்கும்
பிராப்யனும் பிரபகனுமாய் இறே இவனும் இருப்பது
15-எத்தனை கண்ணீர் விட்டாலும் விருப்பம் இல்லாத அன்று வாளா இருக்கும் மேகம்
பரதாழ்வான் பலருடன் சித்ர கூட பரிசரத்திலே போந்து கண்ணநீரை விழ விட்டு வேண்டினவிடத்தும்
ஸ காம மன வாப்யைவ -என்று மநோ ரதம் பெறாமல் வீண்டான் இறே

கார் வானத்துள்ளாய்
மேகத்தின் ஸ்வபாவ விசேஷங்கள் இத்தலத்து எம்பெருமான் இடமும் உள்ளன

கள்வா
பண்டே யுன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே
மண்டத்தோர் புள் வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக் கள்வா
என்று ஓதுவது என் கண்டு

காமரு காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்
திருப் பேர் நகர்
சிலர் காவிரியின் தென் பால் விசேஷணம் பார்க்காமல் பேரகம்-உலகளந்த பெருமாள் என்பர்

——————————————————————-

எம்பெருமானே! நீ திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்குமழகையும்
அஹங்காரிகளுக்கும் திருமேனியிலே இடங்கொடுத்திருக்கும் சீலத்தையும்
வாய் வெருவிக் கொண்டு திரிவேன் நான் என்கிறார்–

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய் மதிள்கச்சி யூராய். பேராய்,
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா,
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழி தரு கேனே.

பதவுரை

வங்கத்தால்–கப்பல்களினால்
மா மணி–சிறந்த ரத்னங்களை
வந்து–கொண்டு வந்து
உந்து-தள்ளுமிடமான
முந்நீர்-கடற்கரையிலுள்ள
மல்லையாய்–திருக்கடன் மல்லையில் வாழ்பவனே!
மதிள் கச்சி ஊராய்–மதிள்களை யுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே!
பேராய்-திருப்பேர் நதராளனே!
கொங்குஆர்–தேன் நிறைந்ததும்
வளம்–செவ்வி பெற்றதுமான
கொன்றை அலங்கல்- கொன்றை மாலையை
மார்வன்-மார்விலே யுடையனும்
குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான்-பர்வதராஜ புத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை
பங்கத்தாய்-(வலது) பக்கத்திலுடையவனே!
பால் கடலாய்-திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே!
பாரின் மேலாய்-ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே!
பனி வரையின் உச்சியாய்-குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே
எங்கு உற்றாய்-எங்கிருக்கிறாய்?
பவளவண்ணா-திருப்பவள வண்ணனே!
எம்பெருமான்-எம்பிரானே!
ஏழையேன்-மிகவும் சபலனாகிய அடியேன்
உன்னை நாடி –உன்னைத் தேடிக்கொண்டு–
இங்ஙனமே -இவ்வண்ணமாகவே–
உழிதருகேன்–அலைச்சல் படாநின்றேன்.

(வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சியூராய்)
பரவாஸுதேவனாகிய ஒரு சிறந்த விலையுயர்ந்த ரத்னத்தை அவனது வாத்ஸல்யமென்கிற ஒரு கப்பலானது
(த்வீபாந்தரத்தில் நின்றும் த்வீபாந்தரத்திற்குச் சரக்குகளைக் கொண்டு தள்ளுவது போல)
திருக்கடல் மல்லை யென்கிற ஒரு தீவிலே கொணர்ந்து தள்ளிற்றாம்;

“கானத்தின் கடல் மல்லை“ என்றபடி காட்டு நிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்னத்தைப் பேணுவார் இல்லாமையாலும்
ரத்னம் விலை போவது மஹா நகரங்களிலாகையாலும் அந்தக் கப்பலானது அந்த ரத்னத்தை அங்கிருந்து கொணர்ந்து
காஞ்சீபுரத்திலே திருவெஃகாத்துறையிலே தள்ளிற்றாம்- என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது.
ஆழ்வார் தாமும் இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம் பற்றியே பெரியதிருமொழியில்
திருக்கடல்மல்லைப் பதிகத்திலும் ”கச்சிக்கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்” என்றருளிச் செய்தது.

புண்டரீகர் என்கிற ஒரு பரம பக்தர், கடலின் இக்கரையிலே ஒரு பெரியதோட்டம் ஏற்படுத்தி
அதில் சிறந்த புஷ்பங்களை யுண்டாக்கி அவற்றைத் தொடுத்தெடுத்துக் கொண்டு போய் எம்பெருமானுக்கு
ஸமர்க்கிக்க வேணுமென்று பாரித்தார்; கடலைக்கடந்து செல்ல வேண்டியிருந்தமையால் இக்கடலைக் கையாலிறைத்துவிட்டு
வெறுந்தரையாக்கி நடந்தே செல்லுவோமென்று துணிந்து கடலை இறைக்கத் தொடங்கவே,
எம்பெருமான் அவருடைய ஆதராதிசயத்தைக் கண்டு வியந்து உவந்து, தானே கடற்கரையிலே ஓடி வந்து
அவரது தோப்பிலே தலைக்கிடை கிடந்து அவருடைய வழிபாடுகளை ஸ்வீகரித்தருளினன் என்பது
திருக்கடல்மல்லைத் தலசாயிப் பெருமாளைப் பற்றின புராண வரலாறு.

பேராய்!=
பேரில் உள்ளவன் பேரான்; பேராய் என்பது விளி; திருப்பேர் நகரிலுள்ளவனே! என்றபடி.

(கொங்கத்தார் இத்யாதி)
கொன்றை மாலையை யணிந்த மார்வை யுடையவனும் பார்வதியைத் தனக்கு மனைவியாகக் கொண்டவனுமான
ருத்ரனைத் தனது திருமேனியின் ஒரு புறத்திலே இடங்கொடுத்து இருத்தியிருக்குமவனே! என்றபடி.

“கொங்கத்தார்“ என்ற பாடத்தில்
‘கொங்கு அத்து ஆர்‘ என்று பிரித்து ‘அத்து‘ என்பதைச் சாரியையாகக் கொள்ள வேணும்.
‘கொங்குத்தார்‘ என்ற பாடத்தில்,
கொங்கு- தேனையும், தார்-பூக்களையும், வளம்-அழகையுமுடைத்தான, கொன்றை யலங்கல்- என்றுரைத்துக்கொள்க.
பங்கத்தாய்=‘பங்கு‘ என்று பார்ச்வத்திற்குப் பெயர்; திருமேனியின் கூறு. பங்கில் உடையவன்-பங்கத்தான்; அதன் விளி்.

பாற்கடலாய்=
அஹங்காரியான ருத்ரனுக்குத் திருமேனியில் இடங்கொடுத்தவளவேயோ?
பிரமன் முதலானோர்க்கு ஓர் ஆபத்து வந்தபோது ரக்ஷகரான நாம் நெடுந்தூரத்திலிருக்க வொண்ணாதென்று
பரமபதத்தில் நின்றும் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!.

பாரின்மேலாய்=
அஸுரர்களாலும் ராக்ஷஸர்களாலும் குடியிருப்பிழந்து ஸகல தேவதைகளும் வந்து சரணம் புக,
ராமக்ருஷ்ணாதி ரூபத்தாலே தன்னை அழியமாறி வந்தவதரித்து இப்பூமண்டலத்தின்கண் உலாவினவனே! என்கை.

பனிவரையினுச்சியாய்!=
ஸம்ஸாரதாபத்தை ஆற்றும்படியான குளிர்ச்சி பொருந்திய திருவேங்கட மலையினுச்சியிலே வாழ்பவனே!.

பவளவண்ணா!=
பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவுபடைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம்.
திருமங்கையாழ்வாருடைய இப்பாசுரத்திலுள்ள ‘பவளவண்ணா!‘ என்கிற விளியைக் கொண்டே
ஐயங்கார் அச்செய்யுள் இயற்றியருளின ரென்பது மறுக்கத்தக்கது.

(எங்குற்றாய் இத்யாதி.)
அடியார்களுக்காகவே திருப்பதிகளில் ஸந்நிதி பண்ணியிருந்தும் பாவியேனுக்குத் தோற்றா தொழிவது என்னோ;
“வருந்தி நான் வாசக மாலை கொண்டு, உன்னையே யிருந்திரந்து எத்தனை காலம் புலம்புவனே” என்றாற்போலே
உன்னைக் கூவிக் கூவிக் கதறுவதே எனக்குப் பணியாயிற்றே!, என்படியைக் கண்டாயோ;
இன்னமும் இரங்கியருளத் திருவுள்ளமில்லையோ? என்றாராயிற்று.

நீ திருப்பதிகளில் கோயில் கொண்டு இருக்கும் அழகையும்
அஹங்காரிகளுக்கும் உனது திருமேனியில் இடம் கொடுத்து கொண்டு இருக்கும் சீலத்தையும்
வாய் வெருவிக் கொண்டு திரிவேன்

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சி ஊராய்
சிறந்த ரத்னத்தை வாத்சல்யம் என்கிற கப்பல் -கானத்தின் கடல் மல்லை-கடல் மலை தீவிலே தள்ள
விலை போவது மகா நகரங்களில் -என்பதால் அந்த கப்பல் திரு வெக்கா துறையிலே தள்ளிற்றாம்
கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தல சயனம் -பெரிய திருமொழி

பேராய்
திருப் பேர் நகரில் உள்ளவனே

கொங்கத் தார் இத்யாதி
வலத்தனன் திரிபுரம் எரித்தனன்
பச்யை காதச மே ருத்ரான் தஷிணாம் பார்ச்வம் ஆச்ரிதான் -மோஷ தர்மம்
தபஸா தோஷிதஸ் தேன விஷ்ணு நா ப்ரப விஷ்ணு நா ஸ்வ பார்ச்வே தஷினே சம்போர் நிவாஸ பரிகல்பித
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து
சர்வ காலமும் இவர்கள் எம்பெருமானுடைய திருமேனியிலே இருப்பார்களோ என்னில்
ஆபத்துகளிலே திரு மேனியிலே இடம் கொடுத்து கொண்டு அருளும்
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போருவர்கள்
சாமாந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும்
மாளிகைக்கு உள்ளே செம்பாலே நாழி அரிசியை
தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இறே
அப்படியே இவர்களும் திரு மேனியில் பண்ணி வைத்து இருக்கும் பிராப்தி விடார்கள் இறே
ஒரோ கலஹங்களிலே அடைய வளைந்தனுக்கு உள்ளே குடி வாங்கி இருந்து
கலஹம் தீர்ந்தவாறே புறம்பே புறப்பட்டாலும்
இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே

பவள வண்ணா
விரும்பத் தக்க வடிவு திருப் பவள வண்ணன்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
கண்டறிந்தும் கேட்டறிந்தும் தொட்டறிந்தும் காதலால்
உண்டறிந்து மோந்தறிந்தும் உய்யேனே பண்டைத்
தவள வண்ணா கார்வண்ணா சாம வண்ணா கச்சிப் பவள வண்ணா நின் பொற்பாதம்

எங்குற்றாய்
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே
இரங்கி அருள திரு உள்ளம் இல்லையா

——————————————————————-

எம்பெருமானே! பலபடிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதொழியப் பிறிதொன்றுமறியேன் என்கிறார்-

பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான்,
என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்னறிவ னேழையேன், உலக மேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே.

பதவுரை

உலகம் ஏத்தும்-உலகமடங்கலும் துதிக்கத் தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே!
வட ஆனாய்-வட திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே!
குட பால் ஆனாய்–மேற்றிசையில் (கோயிலில் திருக் கண் வளர்ந்தருளுகிற) யானை போன்றவனே!
குண பால மதம் யானாய்–கீழ்த் திசையில் (திருக் கண்ணபுரத்தில்) மத யானை போன்றவனே!
என்றும்–எக் காலத்திலும்
இமை யோர்க்கு முன்னானாய்-நித்ய ஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே!
பின்னானார் வணங்கும் சோதி–அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத் தக்க சோதியாக
திருமூழிக் களத்து ஆனாய்–திருமூழிக் களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
முதல் ஆனாய்–முழுமுதற் கடவுளே!
பொன் ஆனாய்–பொன் போன்றவனே!
பொழில் ஏழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்–ஸப்த லோகங்களையுங் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே!
இகழ்வு ஆய தொண்டனேன் ஏழையேன் நான்–இகழ்வையே வடிவாகவுடைய தொண்டனாய் அறிவிலியான நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னால் அல்லால்–என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுமித்தனையல்லது
என் அறிவன்-வேறு என்ன வென்று சொல்ல அறிவேன்?

பொன்னானாய்! =
பொன் போன்றவனே! எம்பெருமானைப் பொன்னாகக் கூறுவதற்குப் பல பொருத்தஞ் சொல்லலாம்;
அதாவது-
பொன்னானது தன்னைப் பெற்றவர்களையும் பெற விருப்பமுடையாரையும் இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது;
எம்பெருமான் படியும் அப்படியே;
“கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பு முமுக்ஷுக்களை உறங்கவெட்டான்;
கண்ட பின்பும் * ஸதாபச்யந்தி யாகையாலே நித்ய முக்தர்களை உறங்கவொட்டான்.
பொன்னானது தன்னையிழந்தவனைக் கதறிக் கதறி யழப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே: ஸ்ரீராமபிரானை யிழந்த பரதாழ்வான் ஸபையிற் புரண்டு கதறிழுதமை ஸ்ரீராமாயணாதிப்ரஸித்தம்.
“பழுதே பலபகலும் போயின” வென்று கதறியழுவர் விவேகமுடையார்.
“இன்பத்தை யிழந்த பாவியேனெனதாவி நில்லாதே”
“எழில்கொள் நின் திருக்கண்ணினை நோக்கந் தன்னையுமிழந்தேனிழந்தேனே”
“உன்னைக் காண்பான் நானலப்பாய் ஆகாசத்தை நோக்கியழுவன் தொழுவனே” என்றிப்படியெல்லாங் கதறுவர்கள்.
பொன்னானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்; தன்னை யுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே; “எனக்காரும் நிகரில்லையே”
“மாறுளதோவிம்மண்ணின் மிசையே”
“எனக்கென்னினி வேண்டுவதே”
“இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்களிறே எம்பெருமானையுடையார் –
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

பொழிலேழுங் காவல்பூண்ட புகழானாய் =
ஏழுலகங்களையும் ஆளிட்டு ரக்ஷிக்கை யன்றியே தானே முன்னின்று ரக்ஷிப்பதனால் வந்த புகழ் படைத்தவனே!.
‘காவல் பூண்ட‘ என்றதனால் காத்தல் தொழிலைத் தனக்கு ஒரு அணிகலனாகப் பூண்டிருப்பனென்கிறது.
ஸ்ரீவிபீஷணாழ்வான் கடற்கரையிலே வந்து சரணம் புகுந்த போது ஸுக்ரீவ மஹாராஜர் முதலானார் இவனை
ரக்ஷித்தருளலாகாதென்று தடை செய்த விடத்தும் ஒரு தலை நின்று ரக்ஷித்தே தீரும்படியான விரதம் பூண்டவனிறே எம்பெருமான்.

(இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாப் என்னானாப் என்னலல்லால் என்னறிவனேடையேன்?)
‘இகழ்வாய்‘ என்பதை, ‘இகழ்வு ஆய‘ என்றும் ‘இகழ் வாய‘ என்றும் பிரிக்கலாம்;
அடைவே, நீசனாகிய என்றும்,
இகழத் தக்க வாய் மொழியை யுடையேனான என்றும் பொருள் காண்க.
தண்ணீர்க்குடமெடுக்கும் தாஸியொருத்தி ஸார்வ பௌமனை ஆசைப் படுதல் போலவும்
பிச்சை யாண்டி பட்டாபிஷேகத்தை விரும்புதல் போலவுமன்றோ நித்ய ஸம்ஸாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது என்கிறார்.

(என் ஆனாய்! என் ஆனாய்!)
ஆனை என்பது ஈறு திரிந்த விளியாய் ‘ஆனாய்‘ என்றாயி்ற்று;
‘என்னுடைய மத்த கஜமே! என்னுடைய மத்த கஜமே!‘ என்று ஏதோ வாய் வெருவுகின்றேனத்தனை யொழிய
ஸாதநாநுஷ்டானமாகச் சொல்லும் முறைமை யொன்றுமறியே னென்றவாறு.

யானைக்கும் எம்பெருமானுக்கும் பலபடிகளாலே ஸாம்யமுண்டு;- அது நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விரியும்.

(உலகமேத்தும் தென்னானாய் இத்யாதி.)
“திருமங்கை மன்னன் கட்டின திக்கஜங்களிருக்கிறபடி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை காண்க.
தென் திசைக்காகத் திருமாலிருஞ்சோலை மலையிலும், வட திசைக்காகத் திருவேங்கடமலையிலும்,
மேற்றிசைக்காகத் திருவரங்கம் பெரிய கோயிலிலும், கீழ்த் திசைக்காகத் திருக்கண்ணபுரத்திலும்
மத யானைபோலே விளங்குகிறபடியை அநுஸந்தித்தாராயிற்று.
தென்னானை, வடவானை, குடபாலானை, குணபால மதயானை என்ற பதங்கள் விளியுருபு ஏற்றுக் கிடக்கின்றன.

“குணபால மதயானாய்” என்கிற விடத்திற்கு
காட்டு மன்னார் ஸந்நிதியிலுள்ள மன்னனார் பரமான வியாக்கியானமுமுண்டு.

‘உலகமேத்தும்‘ என்கிற அடைமொழி நான்கு யானைகளுக்கும் அநவயிக்கும்.

(இமையோர்க்கு என்றும் முன்னானாய்)
நித்ய ஸூரிகளுக்கு எஞ்ஞான்றும் கண்முன்னே தோற்றி அவர்களுக்கு நித்ய தர்சந விஷய பூதனானவனே!

பின்னானார் வணங்குஞ்சோதி திருமூழிக்களத்தானாய்! =
திருமூழிக்களமென்றது உபலக்ஷணமாய் அர்ச்சாவதார ஸாமாந்ய வாசகமாய் நிற்கும்.
பரத்வத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்வத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள்
இங்குப் பின்னானார் எனப்படுகின்றனர்;
அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளி யிருக்குமவனே!.
திருமூழிக்களமென்பது மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றில் ஒன்று.
இத்திருப்பதியைப் பாடினோர் இவ்வாழ்வாரும் நம்மாழ்வாருமே.
இருவரும் இப்பதியைப் பற்றிப் பேசுமிடங்களில்
‘திருமூழிக் களத்துறையு மொண் சுடர்‘ என்றும்
‘முனியே திருமூழிக்களத்து விளக்கே” என்றும்
“மூழிக்களத்து விளக்கினை” என்றும் சுடர்ப் பொருளாக அருளிச் செய்தல் குறிக் கொள்ளத் தக்கது:
அவ்வாறே இங்கும் “பின்னானார் வணங்குஞ் சோதி திருமூழிக்களம்” எனப்பட்டது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது;
அத் திருக்குணம் இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே;
அது தன்னிலும், கேவலம் அறிவிலிகளானவர்கட்கே காட்சி தருமிடமாகிய திருமூழிக்களத்தில்
அக்குணம் மிகமிக வொளிப்பெற்று விளங்குதலால்
‘ஒண்சுடர்‘ என்றும்
‘விளக்கு‘ என்றும்
‘சோதி‘ என்றும் இத் திருப்பதிக்குச் சிறப்பாகச் சொல்லுதல் ஏற்குமென்ப.
ஸகல ஜாதிகளிலும் பிற்பட்டவர்களைப் பின்னானார் என்கிற சொல்லாற் கொள்ளவுமாம்.
அர்ச்சாவதாரங்களில் புறப்பாடு வியாஜத்தினால் மிகத் தண்ணியர்களுக்கும் காட்சி தருவதுண்டே.

பல படிகளாலும் உன்னை பாடி கதறுவது ஒழிய பிரித்து ஒன்றும் இல்லையே -என்கிறார்

பொன்னானாய்
தீயில் சுட்டு –உளியை இட்டு வெட்டி -உரை கல்லிலே உரைத்தாலும்
பரம போக்யமாக ஒளி விஞ்சி காட்டும்
குந்து மணி உடன் ஒக்க நிறுத்து பார்ப்பதே வருந்துமாம்
இன்னார் தூதன் என நின்றாலும்
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தானை

பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய்
ரஷகம் ஆபரணம்
மம வ்ரதம் என்றானே கடல்கரையிலே

இகழ்வாய தொண்டனேன்
இகழ்வு ஆய -நீசனாகிய
இகழ் வாய -இகழத் தக்க வாய் மொழியை உடையவன்
நித்ய சம்சாரி உன்னை ஆசைப்படுவதே

என் ஆனாய் என்னுடைய மத்த கஜம் என்றே வாய் வெருவி
திருமங்கை கட்டின திக் கஜங்கள் இருக்கிறபடி
குணபால மத யானாய் -திருக் கண்ணபுரம் /காட்டு மன்னார் மன்னாதன்
உலகம் ஏத்தும் அடை மொழி நான்கு திவ்ய தேசங்களுக்கும்

இமையோர்க்கு என்றும் முன்னானாய்
நித்யருக்கு நித்ய தர்சன விஷய பூதன் ஆனவனே

பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய்
திரு மூழிக் களத்துறையும் ஒண் சுடர்
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
மூழிக் களத்து விளக்கினை
இங்கும்
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய்
சீல-சௌசீல்ய குணம் இங்கே பிரகாசிப்பதால்
சீலத்திலும் -ஜாதி ஞானாம் வ்ருத்தம் – பின்னானார்
புறப்பாடு வ்யாஜத்தினாலே தண்ணியர்களுக்கும் சேவை உண்டே

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: