திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-1-5- -திவ்யார்த்த தீபிகை —

ஸ்ரீ யபதி இனி மேலும் இவருக்கு முகம் காட்டாது ஒழியில்
ஜகத் ஈஸ்வரன் அற்றதாய் விடும் என்று நிச்சயித்து
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானாதிகளுக்கு முகம் காட்டினாப் போலே
இவருக்கு முகம் காட்டி
தானும்
இவரும்
ஜகத்தும்
உண்டாம்படி பண்ணி அருள
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தை தம் வாயாலே பேசுகிறார் இந்த சரம திவ்ய பிரபந்தத்தில்-

முதல் பத்து -தாமான தண்மை
இரண்டாம் பத்து -திருத் தாயார் வார்த்தை
மூன்றாம் பத்து -தோழியுடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தலைமகள் வார்த்தை
பட்டர் -திரு நெடும் தாண்டகம் வல்லவர் -அத்தை கொண்டே நஞ்சீயரை சம்ப்ரதாயக்கு ஆக்கி அருளினார்

————————————————————–

தேஹாத்மாபிமானத்தைப் போக்கினது முதலாகத் திருவடிகளோடு ஸம்பந்தந்தை யளித்தளவாக வுள்ள
உபகார பரம்பரைகளைப் பேசி மகிழ்கிறார் இப்பாட்டில்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.

பதவுரை

முன் உருவில்–முன்னே யுள்ள (கண்ணாற் காணத் தக்க) பிராகிருத பதார்த்தங்களில்
மின் உரு ஆய்–மின்னின் தன்மையைக் காட்டிக் கொடுத்தவனாய்
வேதம் நான்கு ஆய்–நால் வேதங்களையும் உபகரித்தவனாய்
விளக்கு ஒளி ஆய்–இருளை அகற்றும் விளக்கொளி போலே அஜ்ஞான அந்தகாரத்தைப் போக்கித் தன் ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பித்தவனாய்
முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய்–(மலையில்) தோன்றி (ஆகாசத்திலே) கிளம்பின சந்திரனைப் போலே
ஆஹ்லாதகரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்,
பின் உரு ஆய்–இருபத்தினான்கு தத்துவங்களுக்குப் பிற்பட்ட தத்துவமாகி
முன் உருவின் பிணி மூப்பு இல்லா பிறப்பு இலி ஆய்–முன்னே தோன்றுகிற பிராகிருத வஸ்துக்களுக்குப் போலே
வியாதியும் கிழத்தனமுமின்றியே பிறப்பு மில்லாதவனான ஜீவாத்மாவுக்கு நிர்வாஹகனாய்
இறப்பதற்கே எண்ணாது–கைவல்ய மோக்ஷத்தை ஆச்ரிதர்கட்குக் கொடுக்க நினையா தவனாய்
எண்ணும் பொன் உரு ஆய்–எண்ணத் தக்க பொன் போன்ற ஸ்வரூபத்தை யுடையவனாய்
மணி உருவின் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய்–திவ்ய மங்கள விக்ரஹத்திலே பஞ்சோநிஜந்மயனாய்
புனல் உரு ஆய்-தண்ணீர் போலு ஸர்வ ஸுலபனாய்
அனல் உருவின் திகழும்–அக்னி போலே ஒருவர்க்குங் கிட்ட வொண்ணாத வடிவை யுடையனாய்
சோதி தன் உரு ஆய்–ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்
என் உருவில் நின்ற–என் சரீரத்திலே நின்றவனாய்
எந்தை-எனக்குத் தந்தையான ஸர்வேச்வரனுடைய
தளிர்புரையும் திரு அடி–தளிர் போன்ற திருவடிகள்
என் தலை மேல–எனது தலையிலே இரா நின்றன;
ஏ-ஆச்சரியம்!

முன்னுருவில் மின்னுருவாய் =
கண் முன்னே பரத்யக்ஷமாகக் காணப்படுகின்ற பொருள்களெல்லாம் முன்னுரு எனப்படுகின்றன.
‘அப் பொருள்கள் மின்னின் தன்மை போன்ற தன்மை யுடையன‘ என்னும் உணர்வைப் பிறப்பித்தவன் என்கிறார்.
“மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்“ என்கிறபடியே ப்ராக்ருதப் பொருள்களெல்லாம்
நிலை நிற்க மாட்டாதவை யென்று அறிவித்தானென்றவாறு.

ஜீவாத்மாவுக்கு தேஹ ஸம்பந்தம் இரண்டு வகையான காரணங்களினால் உண்டாகின்றது;
புண்ய பாப ரூப கருமங்கள் காரணமாகவும் எம்பெருமானது அருள் அடியாகவும்.
கருமமடியாக ப்ரக்ருதி பந்தமுண்டாமளவில், ஜீவாத்ம பரமாத்மாக்களுடைய ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ள
வொண்ணாமற் செய்கையும் தன் பக்கலில் அஸ்தைர்யத்தையும் அபோக்யதையையும் மறைத்து
ஸ்தைர்ய புத்தியையும் போக்யதா புத்தியையும் ப்ரக்ருதியானது பிறப்பிக்கும்;
இனி எம்பெருமானருளடியாக ஸம்ஸார பந்தமுண்டாமளவில், ஸ்வ விஷயத்திலும் ஸ்வகீய விஷயத்திலும் கிடக்கிற
அஸ்தைர்யத்தையும் அபோக்யதையையும் பிரகாசிப்பிக்கக் கடவதுமாய்
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பிக்கக் கடவதுமாயிருக்கும்.
ஆழ்வார் இவ்விபூதியிலே பிறந்தது கருமமடியாகவல்லாமல் எம்பெருமானருளடி யாகவாதலால்
ப்ராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசித்து த்யாஜ்யதா புத்தி யுண்டாயிற் றென்க.

வேதம் நான்காய் =
தேஹமே ஆத்மாவென்றும், இந்த்ரியமே ஆத்மாவென்றும் மாஸ்ஸே ஆத்மாவென்றும், ப்ராணனே ஆத்மாவென்றும்,
புத்தியே ஆத்மாவென்றும் கொள்வாருடைய கொள்கைகளைத் தள்ளி
‘அஹம்‘ (நான்) என்று வியவஹரி்ப்பதற்கு இலக்கான வஸ்துவே ஆத்மாவென்றும்
அவன் நித்யனென்றும் தெரிந்து கொள்வதற்கு சாஸ்த்ரம் அபேக்ஷிதமாகையாலே,
சாஸ்த்ரங்களில் தலையான வேதங்களை அருளினபடி சொல்லுகிறது.
இங்கு ‘வேத நான்காய்‘ என்றது, நால் வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் என்ற கருத்தினாலன்று;
நான்கு வேதங்களையும் உபகரித்தருளினவன் என்ற கருத்தினாலென்க.

ஆக, “மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்“ என்றவளவுக்குத் தேறின கருத்தாவது, –
ஆத்மாவிற்காட்டிலும் வேறுபட்ட அசேதனப் பொருள்களில் க்ஷணிகத்வ புத்தியைப் பிறப்பித்தவனும்,
அங்ஙனல்லாத ஆத்ம வஸ்துவின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்வதற் குறுப்பாக
சாஸ்த்ரங்களைத் தந்தருளினவனும் எம்பெருமான் என்றதாயிற்று.

விளக்கொளியாய் =
சாஸ்திரங்களைக் கொடுத்தருளின மாத்திரத்தால் என்னாகும்;
அவற்றால் மருள் நீங்கித் தெருள் பிறந்தாலன்றோ பயனுண்டாவது;
அங்ஙனம் அஜ்ஞானத்தை யகற்றி நல்ல ஞானத்தை யுண்டாக்கி
ஸ்வரூபத்தைப் பிரகாசிக்கச் செய்தருளினவன் என்கிறது –

விளக்கொளியாய் என்று. விளக்கொளியின் ஸ்வரூம் போன்ற ஸ்வபாவத்தை யுடைத்தாகையாலே
சாஸ்த்ர ஞானத்தை விளக்கொளி யென்கிறது.
விளக்கானது இருளைப் போக்கிப் பொருள்களை விளங்கச் செய்யுமா போலே அக விருளைப் போக்கி
ஸ்வரூபத்தைப் பிரகாசிக்கக் கடவதா யிருக்குமன்றோ சாஸ்த்ர ஞானம்.
இப்படிப்பட்ட சாஸ்த்ர ஞானத்தை யுண்டாக்கி யருளினவன் எம்பெருமான் என்க.
எம்பெருமானருள் இல்லாவிடில் உண்மையான சாஸ்த்ரார்த்த ஜ்ஞானம் உண்டாகமாட்டாதென்று உணர்க.

முளைத்தெழுந்த திங்கள்தானாய் =
மலை நுனியில் தோன்றி ஆகாசத்திலே கிளம்பின சந்திரனைப் போலே ஸந்தோஷ கரமான
ஞானத்தைக் கொடுத்தருளினவன் என்றபடி.

கீழ் ‘விளக்கொளியாய்‘ என்றவிடத்திலும் இவ் வர்த்தந்தானே சொல்லிற்று;
மீண்டும் இங்குச் சொல்லுகிறது என்னென்னில்; கேண்மின்;
எம்பெருமானைப் பற்றின ஞானங்கள் பல வகைப்படும்;
எம்பெருமானைக் காதால் கேட்டுணர்வது, நெஞ்சில் ஊன்ற மநநஞ்செய்துணர்வது, உபாஸநம் செய்துணர்வது
கண்ணாரக் கண்டுணர்வது என்றிப்படிப்பட்ட ஞானங்களுள்
ஸ்ரவண ஜ்ஞானம் (காதால் கேட்டுணர்தல்) பெற்றமை மாத்திரம் ‘விளக்கொளியாய்‘ என்றதனால் சொல்லிற்று;
மநந – நிதித்யாஸந-தர்சந ஜ்ஞானங்களைப் பிறப்பித்தமை இங்குச் சொல்லப்படுகிறது என வாசி காண்க.

விளக்கினாலுண்டாகிற ஆநந்த ரூபமாக இருப்பது போல, ஸ்ரவண ஜ்ஞானத்திற்காட்டிலும்
மநந நிதித்யாஸந தர்ச நங்களாலுண்டாகும் ஞானம் மிக்க ஆஹ்லாத ரூபமாக இருக்குமாதலால்,
விளக்கொளியா யென்றதனால் மற்ற ஞானங்களைச் சொல்லிற்றென்றும்
முளைத்தெழுந்த திங்கள் தானாய் என்றதனால் மற்ற ஞானங்களைச் சொல்லிற்றென்றும் பகுத்துரைத்தல் மிகப் பொருந்தும்.
இது தன்னிலும் முளைத்து என்றதனால் மநந தசையும்,
எழுந்த என்றதனால் நிதித்யாஸந தசையையும்,
திங்கள் தானாய் என்றதனால் ஸாக்ஷாத்கார தசையும் சொல்லப்பட்டன வென்றுணர்க.

பின்னருவாய் முன்னுருவிற்பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் =
இவ்வளவும் ஜீவாத்மாவைச் சொல்லுகிறதாய் (ஸாமாநாதி கரண்யத்தாலே)
இப்படிப்பட்ட நியாமகன் எம்பெருமான் என்றதாகிறது.

“பொங்கைம்புலனும் பொறியைந்துங் கருமேந்திரிய மைம்பூதம்,
இங்கிவ்வுயிரேய் பிரகிருதிமானாங்கார மனங்களே“ என்கிறபடியே
இருபத்தினான்காகிய தத்துவங்களுக்குப் பிற்பட்டவனாய் இருபத்தைந்தாம் தத்துவமாகச் சொல்லுப்பட்டவனான
ஜீவாத்மாவைப் பின்னுருவாய் என்றதனாற் சொல்லுகிறது;

முன்னுருவிற் பிணி மூப்பில்லாப் பிறப்பலி யென்பது அந்த ஜீவாத்மாவையே;
ப்ரத்யக்ஷத்திற் காணப் படுகின்ற ப்ராக்ருத பதார்த்தங்களை முன்னுரு வென்கிறது.
அந்தப் பொருள்களுக்கு ஸம்பானுவிற் பிணி மூப்பில்லாப் பிறப்பிலி“ யென்று ஜீவாத்மாவைச் சொல்லிற்றாயிற்று.

ஆக பின்னுருவாயும் முன்னுருவிற்பிணிமூப்பி்ல்லாப் பிறப்பிலியாயு மிராநின்ற ஜீவாத்மாவைச் சொல்லி,
ஆய் என்ற ஸாமாநாதி கரண்யத்தாலே அப்படிப்பட்ட ஜீவாத்மாவை நிர்வஹிப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.

இறப்பதற்கே யெண்ணாது =
இறப்பாவது மரணம்; ஆத்ம ஸ்வரூபாநுபந்தியான மரணம் இங்கு விவக்ஷிதம்;
அதாவது கைவல்யமோக்ஷம்.
தேஹாநுபந்தியான மரணம் ஆத்மாவுக்கு இல்லையாயினும் ஸ்வரூபாநுபந்தியான மரணம் உண்டாதலால்,
அப்படிப்பட்ட மரணமாகிய கைவல்ய மோக்ஷத்தை அந்தரங்கமான அடியார்க்குக் கொடுக்க
நெஞ்சிலும் நினையாதவனெம்பெருமான் என்றவாறு.

ஸ்வத : ஸுகியான ஆத்மாவினுடைய அநுபவ் ஸ்வரூபமாய்த் தனியே ஒரு புருஷார்த்மாய்
மீட்சியில்லாததான கைவல்யத்தை இறப்பு என்ன லாமொவென்னில்;
சரீரமானது ஆத்மாவின் வியோகத்தை யடைந்தால் அது மரணமாக ப்ரத் யக்ஷத்தில் வியவஹரிக்கப்படுகிறது;
இதுவும் அப்படியே ஸாக்ஷாத் ஆத்மாவாகிய பரமாத்மாவின் வியோகத்தாலே மரணமாகக் குறையில்லை.
ப்ரத்யக்ஷத்தில் மரணமடைந்த சரீரம் நஷ்டமாகிறாப்போலே ஆத்மா நசிப்பதில்லையே;
அப்படி இருக்க மரணமென்னலாமோ வென்னில்,
ஸ்வரூபாநுரூபமான போகமில்லாமையாலே ஆத்மாவை நஷ்டனாகவே கொண்டு மரணமென்னலாம்.
“ம்ருதோ தரித்ர: புருஷ:“ (ஏழையான மனிதன் செத்தவனே) என்கிறாப் போலே இதனைக் கொள்க.
இடைவிடாது ஸ்வதநுபவஞ் செய்பவர்களின் ஹ்ருதயத்தாலே இது மரணமேயாகும்.
இதனைத் திருவாய் மொழியில் ‘இறுகலிறப்பு என்றது முணர்க.

ஆக இறப்பதற்தேயெருண்ணா என்றதனால் சொல்லிற்றாவது –
வைவல்ய மோக்ஷத்தைப் புருஷார்த்தமாக அபேக்ஷிப்பவர்களுக்குக் கொடுக்க வல்லவனான எம்பெருமான்
இப்போது என்னை இப் படுகுழியிலே வீழ்த்த நினையானென்பதாம்.

இப்படிப்பட்ட உபகாரத்திற்கு மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை ப்ரகாசிப் பித்தருளினா னென்கிறார்
எண்ணும் பொன்னுருவாய் என்று.
போக்யதையின் மிகுதியாலே ஒரு நொடிப் பொழுதும் விடமுடியாமல் எப்போதும் சிந்திக்க வுரியதும்
பொன் போல் விரும்பத்தக்கதுமான திவ்ய ஸ்வரூபத்தை யுடையவன் என்றபடி.

மணியுருவிற் பூதமைந்தாய் =
இங்குப் ‘பூதமைந்து‘ என்கிறது பஞ்சோப நிஷத்துக்களை;
பரமேஷ்டீ புமாந் விச்வோ நிவ்ருத்தஸ் ஸர்வ ஏவ ஹி“ என்கிறபடியே
பஞ்சோப நிஷத்தை வடிவாயுடைத்தாயிருக்கும் எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹம்.
அஸ்ம தாதிகளின் தேஹங்களுக்குப் பஞ்சபூதங்கள் உபாதாநமாயிருக்குமாபோலே
எம்பெருமானுடைய திருமேனிக்குப் பஞ்சோபநிஷத்துக்கள் உபாதாநமாயிருக்குமென்று பாஞ்சராத்ர சாஸ்த்ரம் கூறும்.

இனி, ‘மணியுருவிற் பூதமைந்தாய்‘ என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்;
தனக்கு அஸாதரணமான மணியுருவிலும் எழுந்தருளி யிருப்பவனாய்,
ப்ராக்ருதமான பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியுள்ளவன் என்று.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைச் சொல்லுகிறது புனலுருவாய் என்று.
வஸிஷ்டனென்றும் சண்டாளளென்றும் வாசியில்லாமல் ஒரு துறையிலே படித்தாடுதற்குரிய தண்ணீர்ப் போலே
அனைவர்க்கும் ஒருதன்மைப்பட எளியனாயிருக்குமவன் என்றவாறு.
இப்படி அனைவர்க்கும் எளியனானால் எந்த சத்ருவினால் எந்த வேளையில் என்ன கேடு விளைகிறதோவென்று
அஞ்சியிருக்க வேண்டாதபடி பிரதிகூலர்க்கு நெருப்புப் போலே கிட்ட வொண்ணாதிருக்குமவன் என்கிறார்
அனலுருவின்திகழும் என்று.
அநுகூலர்க்குப் புனலுருவினன்; பிரதிகூலர்க்கு அனலுருவினன் என்க.

சோதிதன்னுருவாய் =
நாட்டில் சோதிப்பொருள்களென்று விளங்குகின்ற அக்நி சந்திரன் ஸூரியன் முதலியவர்கட்கும்
தன்னுடைய ஸம்பந்தத்தாலே ஜ்யோதிஸ்ஸு உண்டாம்படி பரஞ்சோதியாயிருப்பவனென்கை.
“தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி“ என்று உபநிஷத்தும் ஓதிற்று.

என்னுருவில் நின்ற =
மிகவும் ஹேயமான என்னுடைய சரீரத்திலே வந்து நின்றானென்கிறார்.

கீழே இவ்வாழ்வார் மடலெடுக்கையாலே எம்பெருமான் தன்னுடைய ஸத்தைக்கு ஹாநி விளைந்திடு மென்றஞ்சி
ஓடி வந்து இவருடைய சரீரத்திலே பொருந்தித் தரிப்புப் பெற்றான் போலும்.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய தளிர் போன்ற திருவடிகள் என் தலைக்கு
அலங்காரமாய்க் கிடக்கிறபடிபாரீர் என்றாராயிற்று.

தேகாத்ம அபிமானத்தை போக்கினது முதலாக
திருவடிகளோடு சம்பந்தத்தை அளித்தது ஈறாக
எம்பெருமான் பண்ணி அருளிய உபகார பரம்பரைகளை பேசி மகிழ்கிறார்

முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷமாக காண்பவை மின்னல் போல் அஸ்திரம் என்று காட்டி அருளி
மின்னின் நிலையின மன்னுயிர் ஆக்கைகள்
கர்மம் அடியாக பிறந்து – பக்கல் அஸ்த்ரத்தையும் அபோக்யதையும் மறைக்குமே –

வேதம் நான்காய்
ஆத்ம வஸ்துவின் உண்மையை புரிந்து கொள்ள வேத சாஸ்த்ரங்களை தந்து அருளி

விளக்கு ஒளியாய்
சாஸ்திர ஞானத்தையும் அருளி -ஸ்ரவண ஞானம்

முளைத்து எழுந்த திங்கள் தானாய்
ஸ்ரவணத்துக்கு மேலே -மனனம் -நிதித்யாசனம் -த்யானம்- சாஷாத்காரம்
முளைத்து -மனனம்
எழுந்த -நிதித்யாசன
திங்கள் தானாய் -சாஷாத்காரம்

பின்னுருவாய் -ஜீவாத்மாவுக்கு நியாமகன்
இதையே
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலி -பிரகிருதி பதார்ந்தகளின் தோஷங்களான
பிணி மூப்பு பிறப்பு இல்லையே

இறப்பதற்கே என்னாது கைவல்ய மோஷம் என்னாமல்
அன்னவான் அந்நாதோ பவதி என்பர் எண்ணத்தால் இதுவும் இறப்பே
இருகலிறப்பு-என்பர் இத்தையே நம்மாழ்வார்

இதுக்கு மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தது அருளினான்

பொன்னுருவாய் -திவ்ய ஸ்வரூபம்

மனிவுருவில் பூதம் ஐந்தாய் -பஞ்ச உபநிஷத் மயம்
பரமேஷ்டி புமான் விச்வோ நிவ்ருத்த்தஸ் சர்வ ஏவ ஹி –
அன்றிக்கே
தனக்கு அசாதாரணமான மணி யுருவிலும்
பிராக்ருதமான பஞ்ச பூதங்களிலும் எழுந்து அருளி இருப்பவன்

புனலுருவாய்
சௌலப்யம்
வசிஷ்ட சண்டாள வாசி இல்லாமல் படிந்தாடும் துறை போலே

அனலுருவில் திகழும்
ஆஸ்ரித விரோதிகளுக்கு

சோதி தன்னுருவாய்
அக்னி சந்த சூர்யர் போன்றோருக்கு தன்னுடைய சம்பந்தத்தாலே ஜோதிஸ் அருளி -பரஞ்சோதி

என்னுருவில் நின்ற
நீசன் என்னுடைய ஹேயமான சரீரத்தில் புக்கு
மடல் எடுத்த காரணத்தால் -தனது சத்தைக்கு கேடு என்று அஞ்சி ஓடி வந்து
சரீரத்தில் பொருந்தி தரிப்பு பெற்றான்-

அவனது தளிர் போன்ற திருவடிகள் எனது தலைக்கு அலங்காரம் ஆயிற்று
என்னுருவில் நின்ற எந்தை
தளிர் புரையும் திருவடி
என் தலை மேலே-

———————————————————————–

பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே.

பதவுரை

ஏர் உருவில் அழகிற ஜகத்தில்–
மூவருமே என்ன நின்ற–மூன்று தெய்வங்களே முக்கியம்‘ என்று சொல்லலாம்படி யமைந்த
இமையவர் தம்-தேவதைகளினுடைய
திரு உரு-ரூபங்களை
வேறு எண்ணும் போது–தனித்தனியாகப் பிரித்து ஆராயுமிடத்தில்
ஓர் உருவம்-(நான்முகக் கடவுளாகிற) ஒரு மூர்த்தியானது
பொன் உருவம்–பொன்னின் வடிவாகவுள்ளது;
ஒன்று–(பரம சிவனாகிற) ஒருமூர்த்தி யானது
செம் தீ–சிவந்த நெருப்பின் வடிவாக வுள்ளது;
ஒன்று–(ஸ்ரீமந் நாராயணனாகிற) ஒரு மூர்த்தியானது
மா கடல் உருவம்–கருங்கடல் போன்ற வடிவமாக வுள்ளது;
ஒத்து நின்ற–சேர்ந்திருக்கின்ற
மூ உருவும்–(மேற்சொன்ன) மூன்று மூர்த்திகளையும்
கண்ட போது-(பிரமாணங்கொண்டு) பரிசீலனை செய்யுமிடத்து,
பார் உருவி–கடினமான பூமியென்ன
நீர்-ஜலமென்ன
எரி-அக்நியென்ன
கால்-வாயுவென்ன
விசும்பும் ஆகி–ஆகாசமென்ன ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்தும்
பல்வேறு சமயமும் ஆய்-பலவாய் வேறுபட்ட சமயங்களை யுடைத்தாயிருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
பரந்து நின்ற-இப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்து நிற்குமதாய்
ஆம் சோதி-பரஞ்சோதியென்று போற்றப் படுமதாய்
ஒன்று-அத்விதீயமா யிருக்கின்ற
முகில் உருவம்-காளமேக வுருவமானது
எம் அடிகள் உருவம்–எம்பெருமானுடைய வடிவமாம்.

அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளிடத்தும் ஸாம்யபுத்தி நடப்பதாகிற ஒரு அநர்த்தமுண்டே,
அந்த அநர்த்தத்தையும் எம்பெருமான் தமக்குப் போக்கியருளின படியைப் பேசுகிறார் இப்பாட்டில்.
இருவர் சேஷபூதராய் ஒருவன் சேஷியாய், இருவர் ஸ்ருஷ்டிக்கப் படுகிறவர்களாய் ஒருவன் ஸ்ருஷ்டி செய்பவனாய்,
இருவர் சரீர பூதராய் ஒருவன் சரீரியாய் இருக்கிறபடியை எனக்குக் காட்டித்தருளினா னென்கிறார்.

இந்திரன் சந்திரன் வருணன் குபேரன் என்று பலப் பல தெய்வங்கள் இருந்தாலும்
விஷ்ணு, பிரமன், சிவன் என்கிற மூன்று மூர்த்திகளே முக்கியமாக வழங்கப் பெறும்;
அம் மூன்று மூர்த்திகளின் உருவங்களை ஆராயுமிடத்தில், ஒருவனுடைய (நான்முகனுடைய) வடிவம் பொன்னின் வடிவாகவுள்ளது;
மற்றொருவனுடைய (பரம சிவனுடைய) வடிவம் சிவந்த நெருப்பின் வடிவாகவுள்ளது;
இன்னுமொருவனுடைய (ஸ்ரீமந் நாராயணனுடைய) வடிவம் கருங்கடல் போன்றுள்ளது.

மேற்சொன்ன மும் மூர்த்திகளையும் பிரமாணங்கொண்டு பரிசீலனை செய்யுமிடத்து,
பஞ்ச பூதங்களை யுண்டாக்கியும் பலவகைப்பட்ட சமயங்களை யுயை ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்தும் நிற்கிற பரஞ்சோதியான எம்பெருமானுடைய வுருவம்
காளமேக வுருவமாயிருக்கும் என்று சொல்லுகிறவிதனால் முகிலுருவமுடையவனே எம்பெருமான் என்றாராயிற்று.

“ஏருருவில் மூவருமே யென்ன நின்ற இமையவர் தம் திருவுரு வேறெண்ணும் போது
ஒருருவம் பொன்னுருவம், ஒன்று செந்தீ, ஒன்று மாகடலுருவம், ஒத்து நின்ற
மூவுருவுங் கண்ட போது பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஒன்றாஞ்சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே“ என்று அந்வயிப்பது.

பாருருவி – ‘உர்வீ‘ என்னும் வடசொல் உருவி யெனத் திரிந்தது, பூமி யென்று பொருள்.
பார் என்றது பூமிக்கு விசேஷணமாய் நிற்கிறது இங்கு. பருமை பொருந்திய பூமி யென்றபடி.
அண்ட காரணமான பஞ்ச பூதங்களை ஸ்ருஷ்டி யெனப்படும், அஃது உள்ள ஸ்ருஷ்டி யெனப்படும்.
“பாருருவி நீரெரிகா்ல் விசும்புமாகி“ என்றது ஸமஷ்டி ஸ்ருஷ்டியைச் சொன்னபடி,
“பல் வேறு சமயமுமாய்“ என்று வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறது.
தேவ மநுஷ்யாதி பேதத்தாலே பலவகைப் பட்ட பாகுபாடுகளை யுடைய ஜகத்தை யுண்டாக்கினவனாய் என்றபடி.

சமயம் என்றது வடசொல் திரிவு ஏற்பாடு என்று பொருள்.
உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஒவ்வொரு ஏற்பாடு உண்டு,
தேவதைகள் – ஆராதிக்க வுரியராயும் அமுத முண்பவராயு மிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு,
மனிதர் ஆராதனை செய்பவர்களாயும் அன்னமுண்பவர்களாயு மிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு,
திர்யக்குக்களும் ஸ்தாவரங்ளும் ஆராதனைக்குக் கருவியாயிருத்தல் அவற்றுக்கான ஏற்பாடு,
இங்ஙனே கண்டு கொள்க.

பரந்துநின்ற –
பரக்கையாவது – ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களிலும் அநு ப்ரவேசத்தாலே ஆத்மாவாய் வியாபித்து நிற்கையாம்.
ஸூக்ஷ்ம சேதநா சேதநவிசிஷ்டனாகிற படியைச் சொன்னவாறு. இதற்கு ஈற்றடியில் அந்வயம்.

(ஏருருவில்)
ஜகத்திலே என்றபடி. ஜகத்து முழுவதும் எம்பெருமானுடைய உரு (சரீரம்) ஆகையாலே அந்தச் சொல்லியிட்டுச் சொல்லிற்று.
இருள் தரு மா ஞாலம் என்று வெறுக்கத் தக்க இதனை ஏருரு என்பானென்? என்னில்,
இந்த –ஜகத்தானது முமுக்ஷுக்களுக்கு ஒரு படியாலே ஹேயமாயும் ஒரு படியாலே உத்தேச்யமாயுமிருக்கும்,
ஸம்ஸார ஸ்தானம் என்று வெறுக்கத் தக்கதாயிருக்கும்,
எம்பெருமானுடைய விபூதியென்கிற காரணத்தாலே உத்தேச்யமாயிருக்கும்.
இங்கு உத்தேச்யத்வம் தோன்ற ஏருரு என்றதாகக் கொள்க.

மூவருமே யென்ன நின்ற இமையவர் –
ஸ்ருஷ்டி, ரக்ஷணம், ஸம்ஹாரம் என்பன மூன்று தொழில்கள்.
இவை மூன்றையும் ஸ்ரீமந் நாராயணனொருவனே நிர்வஹித்தாலும்
அவன் தான் ப்ரமனை அநு ப்ரவேசித்து ஸ்ருஷ்டிமையும்,
ருத்ரனை அநுப்ரவேசித்து ஸம்ஹாரத்தையும்,
தானான தன்மையிலே ரக்ஷணத்தையும் நடத்திப் போருகையாலே மூன்றுக்கும் ஒருவனே கடவன் என்று
தெளிய கில்லாத ஸாமாந்ய ஞானிகள் ஒவ்வொரு தொழிலுக்கு ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வதந்த்ர நிர்வாஹகமாகக் கொண்டு
மூன்று மூர்த்திகள் ஆச்ரயணீர் என்று.
“ஸஆத்மா, அங்காந்யந்யா தேவதா“ என்று சுருதியின்படி ப்ரஹ்ம ருத்ர்ர்களும் எம்பெருமானுடைய திருமேனியே யென்று
தெளியக் கண்டவராகையாலே அவர்களையும் திருவுரு என்ற கௌரவச் சொல்லுகிறார் என்ப.

வேறெண்ணும்போது –
“நன்றெழில் நாரணன் நான்முகனரனென்னுமிவரை, ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி
நும் மிரு பசை யறுத்து, நன்றென நலஞ்செய்வது அவனிடை நம்முடை நானே“ என்ற திருவாய்மொழிப்படியே
ஏக த்த்துவமாக மனத்து வைக்கிற பட்சத்தில் முகிலுருவமொன்றே தோன்றும்,
அங்ஙன்ன்றியே
பிரித்து ப்ரதிபத்தி பண்ணுகிற பட்சத்தில் முகிலுருவமொன்றே தோன்றும்,
அங்ஙன்ன்றியே
பிரித்து ப்ரதிபத்த பண்ணுகிற பட்சத்தில் ப்ரமஙேதுவான அஸாதாரண வடிவங்களைச் சொல்லுகிறது
ஒருருவம் பொன்னுருவ மென்று தொடங்கி.

பிரமனது உருவம் பொன்னுருவாயிருக்கும்,
பொன்னானது எல்லா ஆபரங்களும் பண்ணுகைக்கு உரித்தாயிருப்பது போல பதினான்கு லோகங்களையும்
ஸ்ருஷ்டிப்பதற்கு உரியவுருவமென்று தோற்றியிருக்குமென்க.

(ஒன்று செந்தீ) ருத்ரனது உருவம் செந்தீயுருவாயிருக்கும்,
அக்நிக்கு ஸ்வபாவம் அனைத்தையும் கொளுத்துகையாகையாலே, ருத்ரனுடைய ஸ்வபாவத்தைப் பார்த்தால்
ஜகத்தையெல்லாம் உபஸம்ஹரிப்பதற்கு உரித்தாயிருக்குமென்று தோற்றவிருக்கும்

(ஒன்று மா கடலுருவம்)
கண்டார்க்கு முதலியவற்றொடு வாசியற ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யிட்டு வைத்து ரக்ஷிக்கையும் பார்த்தால்,
ஆச்ரிதர்களுக்குத் தாபத்ரய ஹரமாயும், ஆச்ரயித்தாரைத் தன்னபிமானத்திலே யிட்டு வைத்து
ரக்ஷிக்குமதாயுமிருக்கை தோற்ற விருக்கும்.

ஒத்துநின்ற மூவுருவுங்கண்டபோது மூவுருவம் ஒத்திருக்கையாவதென்? என்னில்
அவரவர்களுடைய தொழிலுக்கு அவரவருடைய உருவம் பொருத்தமா யிருக்கும்படியைச் சொன்னவாறு.
ஸ்ருஷ்டிக்குப் பொருத்தமாயிருக்கும் பொன்னுருவம்,
ஸம்ஹாரத்துக்குச் சேர்ந்திருக்கும் செந்தீயுருவம்,
ரக்ஷணத்திற்குத் தகுந்திருக்கும் மாகடலுருவம் என்று காண்க.

ஆக இப்படிப்பட்ட மூவுருவையும் பிரமாணகதி கொண்டு ஆராயுமிடத்தில்,
பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற ஒன்றே ஆம் சோதியாகும்.
*ஏகோஹவை நாராயண ஆஸீத்* என்றிவை முதலான வேத ப்ரமாணங்களின் படியே
ஸ்ரீமந் நாராயணானொருவனே முழு முதற் கடவுளாயிருப்ப னென்றாராயிற்று.

எம்மடிகளுருவம் முகிலுருவம் =
கீழ், ‘மாகடலுருவம்‘ என்றதையே இங்கு முகிலுருவமென்று அநுபாஷிக்கிறார்.
முகிலுருவ முடையவரே எம்மடிகள் என்றாரென்க.

பாருருவி -பசுமை பொருந்திய பூமி
பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்து அருளினவன்
அண்டத்துக்குள் பிறந்த பிரமன் ருத்ரன் முதலானார் உடன் சாம்யம் சங்கிக்கவும் இடமில்லை
அரி அரன் அயன் மும் மூர்த்தி சாம்ய பிரமையையும் ஒழித்து அருளினான்
நான்முகன் பொன்னின் வடிவு -பொன் கொண்டு ஆபரணம் பண்ணுமா போலே
ருத்ரன் நெருப்பின் வடிவு -ஜகம் உப சம்ஹரிக்கைக்கு உறுப்பாக
ஸ்ரீ மன் நாராயணன் -கரும் கடல் -கண்டாருக்கு விடாய் தீர்க்கும்
கடல் போன்று தன்னுள்ளே இட்டு ரஷிக்கையும்
மூன்று உருவமும் ஒத்து இருக்கை
தொழிலுக்கு பொருத்தமாய் இருக்கை
பிரமாண கதி கொண்டு ஆராயும் இடத்தில்
பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயுமாகி
பரந்து நின்ற ஒன்றே ஆம் சோதியாகும்
சிருஷ்டித்து அந்தர்யாமியாயும் வியாபித்து பரஞ்சோதி ரூபம்
ஒன்றாம் ஜோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
தேவ மனுஷ்யாதி சமயமுமாகி
பரந்து நின்ற அந்தர்யாமி
ஏருருவில் -ஜகம் முழுவதும் அவன் உருவம் -எம்பெருமான் விபூதி என்பதால் உத்தேச்யம்
சம்சாரம் என்பதால் த்யாஜ்யம்
ச ஆத்மானி அங்காநி அந்யா தேவதா -தேவர்களும் எம்பெருமான் திருமேனி –
அதனால் அவர்களையும் திரு உரு கௌரவ சொல்
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நம் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே -திருவாய் மொழி
எம்மடிகள் உருவம் முகில் உருவம்
கீழே கடலுருவம் என்றத்தை அனுபாஷிக்கிறார்-

————————————————————————

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும திரேதைக் கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் கட்டுரையே யாரொருவ ர் காண்கிற் பாரே?

பதவுரை

திரு வடிவில்–விலக்ஷணமான வடிவுகளில்,
கருநெடுமால்–காளமேக ச்யாமமான வடிவை
பெரு வடிவின்–பெரிய கூர்ம ரூபத்தோடே
கடல்–கடலினின்றும்
அமுதம் கொண்ட காலம்–(தேவர்களுக்கு) அமுதமெடுத்துக் கொடுத்த காலமாகிய கிருத யுகத்திலே
வளை உரு ஆய் திகழ்ந்தான் என்றும்–சங்கு போலே வெளுத்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
திரேதைக் கண்–த்ரேதா யுகத்திலே
சேயன் என்றும்–சிவந்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
(கலியுகத்தில்)
கரு நீலம் வண்ணன் என்றும்–இயற்கையான) நீல நிறத்தை யுடையவனாய் விளங்குகிறானென்றும்
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்–எப்போதும் நின்று துதிப்பதல்லாமல்
ஒரு வடிவம் என்று ஓர் உரு என்று உணரல் ஆகா-வடிவும் நிறமும் இன்ன தென்றும் இவ்வள வென்றும் அறியப் போகாமலிருக்கிற
கரு வடிவின் செம்வண்ணம் கண்ணன் தன்னை பெருமானை–கறுத்த திருமேனியையும் செந்நிறமான திருக் கண்களை யுமுடையனான எம்பெருமானை
யார் ஒருவர்–ஆரேனுமொருவர்
காண் நிற்பாரே–(ஸ்வப்ரயத்நத்தால்) காணக் கூடியவரோ?
கட்டுரை–(நெஞ்சே!) சொல்லு.

திரிமூர்த்தி ஸாம்ய ப்ரமத்தை எம்பெருமான் தமக்குப் போக்கித் தந்தருளின படியை அருளிச்செய்தார் கீழ்ப்பாட்டில்.
எம்பெருமான் தனது நிர்ஹேதுக க்ருபையினால் தமக்குக் காட்டித் தந்தருளின திருமேனியின் வைலக்ஷண்யத்தை
அநுபவித்துப் பேசுகிறார் இப்பாட்டில்.
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன்;
க்ருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வ குணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே
அவர்கட்காகக் கிருத யுகத்தில் பால் போல் வெளுத்த நிறத்தைக் கொள்வன்;
த்ரேதா யுகத்திலே சிவந்த நிறத்தைக் கொள்வன்;
த்வாபர யுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வன்;
கலி யுகத்தில் இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன்-என்பது நூற்கொள்கை.

ஸ்ரீபாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தில் இருபதாவது ச்லோகம் முதலாக
இவ் விஷயம் விரியக் காணத் தக்கது.
இப்பாட்டில் த்வாபர யுகத்திற் கொள்ளும் பசுமை நிறம் சொல்லப்படா தொழியினும் அதுவும் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
பொருட்சேர்த்திருக்குத் தகுதியாக
“பெருவடிவிற் கடலமுதங்கொண்ட காலம் வளையுருவாய்த் திகழ்ந்தான்“ என்பது முந்துற அந்வயித்துக் கொள்ள வுரியது.

“திரேதைக்கண்“ சேயனென்றும் =
இவ் வாக்கியம் முன்னே யிருந்தாலும் அர்த்தச் சேர்த்திக்குத் தகுதியாகப் பின்னே அந்வயிக்க வுரியது.
க்ருத யுகத்திற்குப் பிறகு தானே திரேதா யுகம். ஆழ்வாரும் யுக க்ரமமாகவே அருளிச் செய்யாலாமே;
மாறுபட அருளிச் செய்வானென்? என்னில்;
ஸத்வாஜஸ்தமோமயமான ப்ரக்ருதிக்கு நிறங்கள் சொல்லப் புகுந்த வேத வாக்கியத்தில்
* அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் * என்று சிவப்பு வெளுப்பு கறுப்பு என்கிற அடைவிலே
ஓதி யிருக்கையாலே அந்தச் சாயையாலே அருளிச் செய்கிறபடி எனலாம்.

“கருநீலவண்ணன்“ என்றது கலியுகத்தின் நிறத்தைச் சொன்னபடி.

(ஒருவடி வத்தோருருவென்றுணரலாகா)
“மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் காணோரேனமுமாய்க் கற்கியாம்“ இத்யாதிப்படியே
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளிலே பலவகைப் பட்ட வடிவுகளையும்
சிவப்பு வெளுப்பு கறுப்பு என்றாற்போலே வகைப்பட்ட நிறங்களையும் எம்பெருமான் என்று கொண்டாலும்
இவை யெல்லாம் இச்சையினால் பரிக்ரஹிக்கப் பட்டவையத்தனையே யாதலால்,
அப்படி ஸங்கல்பத்தினாற் கொள்ளும் வடிவுகளும் நிறங்களும்
ஒருவராலும் எல்லை காண வொண்ணாதபடி யிருக்கிறானாயிற்று எம்பெருமான்.
பல வடிவுகளையும் சில நிறங்களையும் ஒருவாறு அவரவர்கள் பாசுரமிட்டுப் பேசித் துதிக்கலாமத்தனை யல்லது
உள்ளபடி அறியக் கூடாதவனான எம்பெருமானை யார் தாம் அறிய வல்லார்? –
நிர்ஹேதுக பகவத் ப்ரஸாதத்தாலே நான் கண்டு பேசினாப் போலே எவர் தாம் கண்டு பேச வல்லார்?
நான் கண்டாப் போலே காண வல்லாருண்டோ? நான் பேசினாப் போலே பேச வல்லாருண்டோ? என்றாராயிற்று.

கட்டுரை –
ஏவலொருமை வினை முற்று; தம்முடைய திருவுள்ளத்தை விளிக்கின்றமை கொள்க.
இனி, ‘கட்டுரை‘ என்பதை வினை முற்றாகக் கொள்ளாமல் பெயர்ச் சொல்லாகக் கொண்டு உரைப்பினுமாம்;
அவரவர்கள் ஏதோ பேசுவது வெறுங்கட்டுரையே யன்றி உள்ளபடி கண்டு பேசினதன்று என்க.

நிர்ஹேதுக கிருபையால் தன்னுடைய திரு மேனி வைலஷண்யம் காட்டி அருளினத்தை பேசி மகிழ்கிறார்
த்ரேதைக் கண்-என்னாமல் பெரு வடுவில் கடல் அமுதம் கொண்ட காலம் -வளை உருவாய்த் திகழ்ந்தான்
பிரயோஜனாந்த பரர்களுக்காக்ள அமுதம் கொண்ட சேஷ்டிதம் கொண்டே அருளுகிறார் –
பெரிய திரு நாளிலே ஆதரம் உடையார்
பங்குனி மாசத்துக்கு பின்பு கார்யம் செய்கிறோம் என்ன பிராப்தமாய் இருக்க
பெரிய நாளுக்கு பின்பு கார்யம் செய்கிறோம் -என்னுமா போலே
பெரு வடிவில் என்றது பதினாலு நூறாயிரம் காதம் அளவு பரப்பை உடைத்தான
திருப் பாற் கடலில் அப்பரப்பு முழுவதும் விம்மும்படி
தன் தாளும் தொழும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
திருக் கண் வளர்ந்த வடிவுடன் கடல் கடைந்ததும்
பல வடிவுகள் கொண்டும்
மந்திர மலை அழுந்தாமைக்கு ஆமை வடிவு கொண்டும்
கொந்ழியாமைக்கு ப்ருஹத் ரூபியாயும்
தேவதைகளோடு நின்று கார்யம் செய்யும் வடிவு கொண்டும்
வாசூகி நாகத்துக்கு வலிமையாய் புகுந்து நின்றும் -இப்படி பல பல வடிவுகள் கொண்டானே
கடல் அமுதம் கொண்ட காலம்
அமுதம் அமரர்கட்கு ஈந்த -உப்புச் சாறு
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் –
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே-திருவாய்மொழி
கையும் திருவாழியும் கொண்டு கடல் கடைந்த ஆழ்வார் உடைய அமுதம்
தோளும் தோள் மாலையுமாக கடல் கடைந்த அமுதினை ஆழ்வார்கள் நேரில் கண்டது போல்
பரம போக்யமாக களித்து அனுபவிப்பார்கள்
த்ரேதைக் கண் சேயன் என்றும்
முதலில் இத்தை அருளி
அஜாமேகரம் லோஹித சுக்ல க்ருஷ்ணம் -ஸ்ருதியும்
சிவப்பு வெளுப்பு கருப்பு அடைவிலே சொல்லியது போலே
கரு நீல வண்ணன் -கலி யுகத்தின் வர்ணம்

ஒரு வடிவத் தோர் உரு என்று உணரலாகாது –
மீனாய் இத்யாதி தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளையும்
சிவப்பு வெளுப்பு கறுப்பு என்றால் போலே
இச்சையால் பரிக்ரஹிக்கப் பட்டவை
சிலவற்றை பாசுரம் இட்டு சொல்லலாம்
உள்ளபடி அறிய முடித்த அவனை
அவனது நிர்ஹேதுக கிருபையால் -பகவத் பிரசாதத்தால் கண்டு
நான் பேசினால் போல் பேச வல்லார் யார்
கட்டுரையே-
தமது திரு உள்ளத்தை விளிக்கிறார்
அன்றிக்கே
அவர்கள் ஏதோ ஏதோ பேசினும் வெறும் கட்டுரையே அன்றி உள்ளபடி கண்டு பேசினது அன்று என்றுமாம்-

————————————————————————

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத் தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.

பதவுரை

இந்திரற்கும்–இந்திரனுக்கும்
பிரமற்கும்–ப்ரஹ்மாவுக்கும்
முதல்வன் தன்னை–காரண பூதனாய்
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம்–பெரிதானபூமி, காற்று, அக்நி, ஜலம், ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய்
செம்திறத்த தமிழ் ஓசை ஆகி–செவ்விய தமிழ்ப் பிரபந்தங்களைப் பிரகாசிக்கப் பித்தவனாய்
வடசொல் ஆகி–ஸம்ஸ்க்ருத வேதத்தையும் பிரகாசிக்கப் பித்தவனாய்
திசை நான்கும் ஆய்–நான்கு திசைகளிலுமுள்ள எல்லாப் பொருள்களுக்கும் அந்தராத்மாவாய்
திங்கள் ஞாயிறு ஆகி–சந்திர ஸூரியர்கட்கும் நியாமகனாய்
அந்தரத்தில்–இப்படி ஸகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமிடத்தில்
தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை–தேவர்களுக்கும் அறியக் கூடாத சுத்த ஸ்வபாவனாய்
அந்தணர் மாடு–பிரமாணர்கட்குச் செல்வமான வேதத்தினுடைய
அந்தி–முடிவிலே
வைத்த–விளங்குகிற
மந்திரத்தை–பரம மந்த்ரமான ஸர்வேச்வரனை
மந்திரத்தால்–திரு மந்த்ரத்தாலே
மறவாது வாழுதி ஏல்–இடைவிடாது அநுபவிப்பாயாகில்
மட நெஞ்சமே–விதேயமான நெஞ்சே!
என்றும்–இவ்வாத்மா உள்ளவளவும்
வாழலாம்–உஜ்ஜீவிக்கப்பெறலாம்.

எம்பெருமானைத் தாம் ஒருவராக அநுபவிப்பதில் த்ருப்தி பிறவாமையாலே உசாத் துணை கூட்டிக் கொள்ள
விருப்பமுண்டாயிற்று ஆழ்வார்க்கு;
முக்தர்களும் நித்யர்களும் இந்நிலத்தவ ரல்லாமையாலே அவர்கள் துணையாகப் பெற்றதில்லை;
இந் நிலத்தவரான ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடும் அவர்களாகையாலும் துணையாக மாட்டார்கள்;
இனி ஒரு போதும் தம்மை விட்டுப் பிரியாதிருக்கிற தமது திருவுள்ள மொன்றே தமக்குத் துணையாகவற்றாதலால்
‘நெஞ்சே! இவ் விஷயத்தை நாம் அநுபவிக்கும் படி பாராய்‘ என்கிறார்.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை=
உலகத்தில், நான்முகக் கடவுளாகிய பிரமனுக்குப் பரத்வம் சங்கிப்பவர்கள் உளரே யன்றி
இந்திரனுக்குப் பரத்வம் சங்கிப்பார் ஆருமில்லை;
அப்படியிருக்க ‘இந்திரற்கும் முதல்வன்‘ என்று இங்குச் சொல்லுவானேன்?
அப்படிச் சொன்னாலும் பிரமனை முந்துறச் சொல்லிப் பின்னை இந்திரனைச் சொல்லியிருக்கலாமே;
முற்படச் சொல்லுவானென்? என்னில்;

ஸாதாரண ஜீவ ராசிகளில் பரிகணிதனான இந்திரனுக்கு எப்படி எம்பெருமான் காரணபூதனோ,
அப்படியே நான்முகனுக்கும் காரணபூதன் என்று தெளிவித்தவாறு.
இந்திரன் எப்படி கார்ய பூதனோ அப்படியே பிரமனும் கார்ய பூதன் என்று தெளிவித்தவாறு.
இந்திரன் எப்படி கார்ய பூதனோ அப்படியே பிரமனும் கார்ய பூதன் என்று காட்டுதற்கே இந்திரனை முற்படச் சொல்லிற் றென்க.

ருத்திரனுக்குத் தந்தையான பிரமனை யெடுத்துச் சொன்ன போதே ருத்ரனுக்கும் எம்பெருமானே முதல்வனென்பது வெளிப்படையேயாம்.
தாழ்ந்தவர்களில் கடையான இந்திரனையும் உயர்ந்தவர்களில் முதல்வனான பிரமனையும் எடுத்துரைத்த போதே
ப்ரத்யாஹாரந்யா (ப்ரத்யாஹாரந்யாயமாவது முதலையும் முடிவையுஞ் சொன்ன முகத்தால்
இடையிலுள்ள வற்றையும் க்ரஹிப்பித்தல்.) யத்தாலே நடுவுள்ள தேவர்களும் சொல்லப்பட்டனராகக் குறையில்லை யென்க.

இருநிலங்கால் தீநீர்விண் பூதமைந்தாய் =
எம்பெருமான் பஞ்ச பூதங்களாகவே யிருக்கிறானென்றது பஞ்ச பூதங்களையும் படைத்தவனென்றபடி.

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி=
தமிழ் வேதத்தையும் ஸம்ஸ்க்ருத வேதத்தையும் வெளிப்படுத்தினவன் என்றாவது,
தமிழ் வேதத்தாலும் ஸம்ஸ்க்ருத வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன் என்றாவது பொருள் கொள்க.
ஆர்ய பாஷையாகிய ஸம்ஸ்க்ருத பாஷையை முன்னே சொல்லி ஆரியச் சிதைவான தமிழ்ப் பாஷையைப்
பின்னே சொல்ல ப்ராப்தாயிருக்க, முன்னே சொல்லிற்று என்னென்னில்;

தமிழ் வேதமானது வடமொழி வேதம் போலல்லாமல் ஸர்வாதிகாரமாயிருத்தாலலும்,
”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்ற
வேதாந்த தேசிகன் பாசுரப்படியே தெளிவாகப் பொருள்களை விளக்குதலாலும்,
ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவையும் சேராதவையுமாகிய கண்ட பொருள்களையும் பேசுகிற வடமொழி வேதம்
போலல்லாமல் ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவற்றையே பேசுதலாலும்
இன்னமும் இப்படிப்பட்ட பலவகையான வைலக்ஷண்யத்தை உட்கொண்டு
ஸம்ஸ்க்ருத வேதத்திலும் தமிழ்வேதம் மிகச் சிறந்ததென்பது விளங்க முந்துறச் சொல்லிற்றென்க.

வடமொழியானது ‘முரட்டு ஸ்ம்ஸ்க்ருதம்‘ என்று பேர் பெற்றிருக்கும்;
இஃது அங்ஙனல்லாமல் ‘ஈரத்தமிழ்‘ என்றும் செவிக்கினிய செஞ்சொல்‘ என்றும்
சிறப்புறுதல் பற்றிச் ‘செந்திறத்த‘ என விசேஷிக்கப்பட்டது.

திசைநான்குமாய்=
நான்கு திசைகளிலுமுண்டான ஸகல பதார்த்தங்களையும் படைத்தவனாய் என்றபடி.
திங்கள் நாயிறாகி யென்று சந்திர ஸூரியர்களுக்கு அந்தராத்மாவா யிருக்கும்படியைச் சொல்லுகிறது.

(அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா வந்தணனை)
‘அந்தரம்‘ என்று மேலுலகத்திற்கும் பெயருண்டாகையாலே
‘மேலுகத்திலுள்ள தேவர்க்கும் அறியலாகா‘ என்று பொருளுரைக்கலாம் ஆயினும் அப் பொருள் இங்கு விவக்ஷிதமன்று;
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் * ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யா: அந்தர: * என்று தொடங்கிப்
பல பர்யாயங்களில் பிரயோகிக்கப்ட்டுள்ள அந்தர சப்தம் வியாபகன் என்னும் பொருளதாகையாலே
இவ்விடத்திற்கும் அப்பொருள் ஏற்கும்;

அந்தரத்தில் – அந்தரனாமிடத்தில் (அதாவது) ஸ்ருஷ்டிக்கப்பட்ட் ஸகல பதார்த்தங்களிலும் வியாபனாய்
உறைந்து நிற்குமிடத்தில் என்றவாறு.
ஞான சக்திகளால் நிரம்பின தேவர்களுங்கூட எம்பெருமானுடைய ஸர்வ வ்யாப்தியை அறிய மாட்டார்களென்றதாயிற்று.
எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷ விஷய பூதனான ப்ரஹலாதாழ்வான் போல்வார் அறியலாமத்தனை யன்றி
மற்றையோர் அறியகில்லார் என்க.

(அந்தணனை)
அந்தணனென்பது பிராமணனுக்குப் பெயர்;
அதைக் கொண்டு ‘பரிசுத்தன்‘ என்கிற பொருளை ஆசாரியர்கள் விவக்ஷிப்பர்கள்.
திருவாய்மொழியில் ”அறவணை ஆழிப்படை யந்தணனை” என்றவிடத்தும் இப்படியே.
ப்ரக்ருதத்தில் விவக்ஷிதமான பரிசுத்தியாவது, எம்பெருமான் ஸகல பதார்த்தங்களிலும் வியாபித்திருக்கிறானென்றால்
அவற்றிலுள்ள தோஷங்களாலே ஸ்பர்சிக்கப்பட்டு அபரிசுத்தனாக ஆகிறானோ என்று
ஒரு சங்கை தோன்றக்கூடுமாதலால் அதற்கு இடமறச் சொல்லுகிறபடி.

(அந்தணர் மாட்டாந்திவைத்த மந்திரத்தை)
”மாடு பொன் பக்கஞ் செல்வம்” என்ற நிகண்டின்படி மாடு-செல்வம்;
பிரமாணர்கட்குச் செல்வம் வேதமென்று நூல்கள் கூறும்.
”தநம் மதீயம் தவ பாதபங்கஜம்” என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எம்பெருமானுடைய திருவடிகளே
தனமாயிருப்பது போல, ப்ராஹ்மணர்கட்டு வேதமே தனமாயிருக்கும்.
ஆகவே ‘அந்தணர்மாடு‘ என்று வேதத்தைச் சொல்லிற்றாயிற்று. அதனுடைய அந்தியாவது வேதாந்தம்;
வேதாந்தத்திலே புதைத்து வைக்கப்பட்ட மந்திரமாயிருப்பன் எம்பெருமான்.

ஸஹஸ்ரநாமத்தில் எம்பெருமானுக்கு ‘மந்த்ர:‘ என்றாரு திருநாமமுண்டு;
மந்த்ர:=வேதமந்திர ரூபமாயிருப்பவர்;
மந்திரங்களினால் தெரிவிக்கப்படுகிறவர் என்றுரைத்தார் சங்கராச்சாரியர்;
தியானம் செய்கிறவர்களைக் காப்பாற்றுகிறவர் என்றுரைத்தருளினர் பட்டர்.

இங்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியம்;-
”மந்த்ரம் என்றும் ஸர்வ ஸ்மாத் பரனென்றும் பர்யாயம் போலே காணும்.
ஈச்வரனை ரஹஸ்யமென்கிறது- தலைக் கடையையும் புழைக் கடையையு மடைத்துக் கிழிச் சீரையை
அவிழ்த்துப் பார்ப்பாரைப் போலே அஷ்ட கர்ணமாக உபதேசிக்கவும் அநுஸந்திக்கவும் வேண்டி.
இப்படி சீரிய சரக்காயிருக்கையாலே.” என்பதாம்.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை (மடநெஞ்சமே! மந்த்ரத்தால் வாழுதியேல்)
பகவத் விஷயத்தை அநுபவிக்குமிடத்தில் வேதாந்த முகத்தாலே யாவது இதிஹாஸ புராணமுகத்தாலே யாவது
அநுபவிக்கப் பாராமல் திருவஷ்டாக்ஷாமாகிற பெரிய திருமந்திரத்தினால் அநுபவிக்கப் பார்த்தாயாகில் என்றபடி.

இடையிடையே விஷயாந்த்ரங்களிலும் நெஞ்சுசெல்லக்கூடா தென்பதற்காக
”மறவாது வாழுதியேல்” என்கிறார் என்று சிலர் சொல்லுவர்;
இங்கு அந்த நிஷேதத்திற்கு ப்ரஸக்தியில்லை. கேவலம் உபேயாகவே நினைக்க வேண்டிய எம்பெருமானை
உபாயமாகவும் நினைத்தல் அவனை மறந்ததாகவே கருதக் கூடியதாதலால் அந்த நினைவு வேண்டாவென்கிற தென்க.
‘சிந்தித்தியேல் என்றோ ‘நினைத்தியேல்‘ என்றோ சொல்ல வேண்டுமிடத்தில் ‘வாழுதியேல் என்றது,
அதுதானே வாழ்ச்சியாயிருக்கவேணு மென்கைக்காக.
எம்பெருமானுடைய பரத்வத்திலும் உபாயத்வத்திலும் இழியாதே போக்யதையில் இழிந்து
அநுபவித்தால் அதுதானே வாழ்ச்சியாயிருக்குமிறே.

(என்றும் வாழலாம்)
ஆத்மா உள்ளவரையிலும் நித்யஸூரிகள் நடுவேயிருந்து வாழலாமென்றதாயிற்று.

உசாத்துணை தேட்டம் அவனை அனுபவிக்க
நெஞ்சே கூட சேர்ந்து அனுபவிக்கப் பாராய் என்கிறார்
இந்த்ரனை முதலில் சொல்லி காரண பூதர்கள் இவர்கள்
நடுவு உள்ள தேவர்களும் சொல்லப் பட்டனர்
இந்த்ரனுக்கு பிரமனுக்கு ரேபாந்தமாகச் சொல்லிற்று பூஜ்யா புத்தியால் அன்று — ஷேபிக்கிறார்
இந்த்ரனுக்கு -இந்தரற்கு
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்னற்கு ஆளன்றி ஆவரோ
இங்கும் கண்ணனுக்கு

இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
பஞ்ச பூதங்களாகவே இருக்கிறான் என்றது அவற்றை படைத்தான் என்றபடி

செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி
சர்வாதிகாரம் ஆதாலால் தமிழ் முதலில் சொல்லி
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே
ஈரத் தமிழ்
செவிக்கு இனிய செஞ்சொல் -அதனால் செந்திறத்த என்கிறார்
முரட்டு சமஸ்க்ருதம்
வந்தருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -ஈட்டில்
பட்டர் ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தவாறே நஞ்சீயரை பல காலும் இயல் கேட்டு அருளுவர்
ஒரு கோடையிலே திரு வீதியிலே நீரை விட்டு எழுந்து அருளி இருந்து இப்பாட்டை இயல் சொல்லும் என்று
ஜீயரை அருளிச் செய்து
தாம் இத்தை அனுசந்தித்து இருந்து
அனந்தரத்தே தாமும் இப்பாட்டை இயல் சொல்லி
யம நியமாதி க்ரமத்தாலே த்யேய வஸ்துவை மனனம் பண்ணி
புறம்புள்ள பராக்கை அறுத்து அனுசந்திக்கப் புக்காலும்
சுக்கான் பரல் போல் இருக்கக் கடவ நெஞ்சுகள் பதம் செய்யும் படி தார்மிகராய் இருப்பார்
இவை சில ஈரச் சொல்களை பொகட்டு போவதே -என்று அருளிச் செய்தார்
இன்னும் தங்கள் அன்பார தமது சொல் வலத்தால் -9-2-8-
வங்கி புரத்து நம்பி பெருமாளை சேவிக்க எழுந்து அருளின அளவிலே
இடைச்சிகள் அண்டையில் சேவித்தாராய் அதை ஆண்டான் கண்டருளி
பிராப்யமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சமுதாயம் இருக்க அவர்கள் அண்டைக்கு எழுந்து அருளுவான் என் என்ன
நாம் சற்று விரகராய் இருப்போம்
இவர்கள் ஒன்றும் அறியாத கொச்சைகள் ஆகையாலே எம்பெருமான் உடைய கடாஷம்
இவர்கள் இடத்திலே பள்ள மடையாய் இருக்கும் என்று அங்கே இருந்தேன் என்ன
அவர்கள் சொன்னது ஏது தேவரீர் அருளிச் செய்தது ஏது என்று ஆண்டான் கேட்க
பொன்னாலே பூணூல் இடுவீர்
நூறு பிராயம் புகுவீர்
அழுத்த விரட்டை உடுப்பீர்
என்கிற இவை அவர்கள் சொன்ன வார்த்தை
விஜயஸ்வ விஜயீ பவ -என்று நான் சொன்ன வார்த்தை என்று வங்கி புரத்து நம்பி அருளிச் செய்ய
அங்குப் போயும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லையே
எங்கே இருந்தாலும் நாம் நாம் காணும்
இங்கே எழுந்து அருளீர் -என்று ஆண்டான் அருளிச் செய்த வார்த்தை

அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை
இங்கு மேல் உலகம் பொருள் இல்லை
அந்தர சப்தம் வியாபகன் என்னும் பொருளில் அந்தரனாகும் இடத்தில்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போல்வார் அறியலாகுமே ஒழிய பிரயோஜனாந்த பரர்கள் அறியார்
அந்தணன்
பரிசுத்தன்
அறனை ஆழிப்படை அந்தணனை
வ்யாபித்தாலும் எந்த தோஷங்களும் தட்டாதவன்

அந்தணர் மாடு அந்தி வைத்த மந்த்ரத்தை
மாடு பொன் பக்கல் செல்வம்
இங்கு செல்வம்
தனம் மதியம் தவ பாத பங்கஜம்
பிராமணர்களுக்கு வேதமே தனம்
வேதாந்தத்தில் புதைத்து வைக்கப் படும் மந்த்ரம்
மந்திர -சஹஸ்ரநாமம் -பட்டர் த்யானம் செய்பவரை காத்து அருளுபவன்
சங்கரர் வேத மந்திர ரூபம் -மந்த்ரங்களினால் தெரிவிக்கப் படுகிறவர்
மந்த்ரம் என்றும் சர்வ ஸ்மாத் பரன் என்றும் பர்யாயம் போலே காணும்
ஈஸ்வரனை ரஹச்யம் என்கிறது தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்து
கிழிச் சீரையும் அவிழ்த்து பார்ப்பாரைப் போலே அஷட் கரணமாக உத்தேசிக்கவும்
அனுசந்திகவும் வேண்டி
இப்படி சீரிய சரக்காய் இருக்கையாலே

மந்திரத்தால் வாழுதியேல்-
வேதாந்த முகத்தாலோ
இதிஹாச புராண முகத்தாலோ ஆராதிக்கப் பார்க்காமல்
திரு மந்தரத்தால் அனுபவிக்கப் பார்
மறவாது வாழுதியேல் என்பர் சிலர் -விஷயாந்தரங்களில் நெஞ்சு செல்லக் கூடாது என்பதற்காக
அந்த நிஷேததுக்கு பிரசக்தி இல்லை
உபேயமாக மட்டுமே நினைக்க வேண்டியவனை உபாயமாக நினைப்பதும் மறப்பது போலே தானே
அந்த நினைவு வேண்டா என்கிறது இதில்

சிந்தித்தியேல் நினைத்தியேல் சொல்லாமல் வாழுதியேல் என்றது அது தானே வாழ்ச்சி

பரத்வத்திலும் உபாயத்திலும் இழியாதே
போக்யதையில் இழிந்து அனுபவித்தால்
அது தானே வாழ்ச்சி

என்றும் வாழலாம்
ஆத்மா உள்ளவரை நித்ய சூரிகள் நடுவே இருந்து வாழலாம் என்றதாயிற்று

—————————————————————-

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.

பதவுரை

ஒரு கால்–ஒரு திருவடியானது
ஒண் மிதியில்–அழகாக ஓரடியிட்ட மாத்திரத்தில்
புனல் உருவி நிற்ப–ஆவரண ஜலத்தளவும் ஊடுருவிச் சென்று
(அப்புறம் போக இடம்பெறாமையாலே) நிற்க,
ஒரு காலும்–மற்றொரு திருவடி
காமரு சீர் அவுணன்–நல்ல பாக்யசாலியான மஹாபலி யானவன்
உள்ளத்து எண்மதியும் கடந்து–தன்னெஞ்சிலே நினைத்திருந்த நினைவைக் கடந்து
அண்டம் மீது போகி எழுந்து–அண்ட பித்திக்கு மப்பால் செல்லக் கிளம்பி
இரு விசும்பின் ஊடு போய்–பெரிய ஆகாசத்தையும் ஊடுருவிச் சென்று
கதிரவனும் –ஸூரிய மண்டலத்தையும்–
மேலே தண் மதியும்–அதற்கும் மேற்பட்ட குளிர்ந்த சந்திர மண்டலத்தையும்
தவிர ஓடி–கடந்து சென்று
தாரகையின் புறம் தடவி–(அதற்கும் மேற்பட்ட) நக்ஷத்ர மண்டலத்தையும் கடந்து
அப்பால் மிக்கு–அவ்வருகே பிரம லோகத் தளவும் வியாபித்து நிற்க
மண் முழுதும்–பூலோகம் முதலான பதினான்கு லோகங்களையும்
அகப்படுத்து நின்ற எந்தை-ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட
எந்தை–எம்பெருமானுடைய
மலர் புரையும் திரு அடியே–தாமரை மலரையொத்த திருவடிகளையே
வணங்கினேன்–வணங்கப் பெற்றேன்.

கீழ்ப்பாட்டில் “மந்திரத்தால் வாழுதியேல்” என்று திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை ஸ்மரித்தார்;
அதில் நாராயண நாமத்தின் பொருளான வ்யாபகத்வத்தை த்ரிவிக்ரமாவதாரத்திலே யிட்டு அநுபவிக்கிற பாசுரம் இது.

(ஒருகால் ஒண்மிதியில் புனலுருவி நிற்ப.)
ஒரு திருவடியானது பூமியளவாதல் ஸப்த ஸாகரங்கள்ளவாதல் ஸப்த த்வீபங்களளவாதல்
சக்கரவாள கிரியளவாதல் மஹா ஜலத்தள வாதல் அண்ட கடாஹத்தளவாதல் செல்லுகையன்றியே
ஆவரண ஜலத்தளவுஞ் சென்று நின்றதாம்.

ரக்ஷ்ய வர்க்கமெல்லாம அண்ட கடாஹத்தினுள்ளே யன்றோ வுள்ளது,
அதற்கு மப்பால் செல்லவேண்டுவானென் என்னில்;
ரக்ஷகனுடைய ரக்ஷணப் பாரிப்பு ரக்ஷய வஸ்துவலினளவன்று, அதனிலும் விஞ்சியது என்று காட்டுகிறபடி.

”சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிற் பெரும் பாழேயோ“ என்று தொடங்கித்
தத்வ த்யத்தையுஞ் சொல்லி ”சூழ்ந்ததனிற் பெரிய என்னவா” என்று அதனிலும் விஞ்சினதாக வன்றோ
ஆழ்வாருடைய ஆசையளவு சொல்லப்பட்டது; எம்பெருமானுடைய வாத்ஸல்யம் இதனிலுங் குறைந்து விடுமோ?
உலகமுள்ள வளவையும் மீறிச் செல்லுகி்ன்றது ரக்ஷகனான எம்பெருமானுடைய பாரிப்பு.
ஆகவே அண்ட கடாஹத்துக்குமப்பால் ஆவரண ஜலத்தளவும் ஒரு திருவடி ஊடுருவிச் சென்றதென்க.

ஆக, பூமியையளந்த திருவடியை அநுபவித்துப் பேசினாராய்,
இனி மேலுலகங்களை யளந்த மற்றொரு திருவடியின் செயலைப் பேசுகிறார் ஒருகாலும் என்று தொடங்கி.
‘திருவடி‘ என்று கௌரவித்துச் சொல்ல வேண்டியிருக்க ‘கால்‘ என்கிறாரே, இதுவென்? என்னில்;

முதற்பாட்டில் ”தளிர்புரையுந் திருவடி என்தலை மேலவே” என்றும்,
இப்பாட்டிலும் ”மலர்புரையுந் திருவடியே வணங்கினேனே” என்றும் அருளிச் செய்கிற ஆழ்வார்
இங்குக் கால் என்றது வெறுமனன்று; ஒரு கருத்துத் தோன்றவே இப்படியருளிச் செய்தது;
அதாவது, ஸம்ஸாரிகளின் அபிப்பிராயத்தாலே சொல்லுகிறபடி;

உலகளந்த காலத்தில் திருவடி எல்லார் தலையிலும் பட்டபோது ஸம்ஸாரிகள்
‘ஒருவருடைய கால் நம் தலையிலே பட்டதே“ என்று வெறுத்திருந்ததத்தனை யொழிய
”கோல மாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குலை கழலே” என்றாற் போலே உகந்து கொண்டார்களில்லையே;
அன்னவரது கருத்தாலே கால் என்றது.

(காமருசீரவுணனுள்ளத் தெண்மதியுறங் கடந்து)
வாமனன் ‘மூவடி நிலம் தா‘ என்று கேட்டவாறே
‘மூவடி நிலந்தானே இவன் கேட்பது, அதைக் கொடுப்போம்; அதுதவிர மற்ற நிலமெல்லாம் நம்மது தானே‘ என்றிருந்தான் மாவலி;
மூவடி மண் இரந்துபெற்ற வாமனன் பூமியை யடங்கலும் அளந்தவாறே ‘பூமிபோனாலும் மேலுலகமெல்லாம் நம்மது தானே‘ என்றிருந்தான்;
மேலுலகத்தையு மளந்தவாறே, எண்டிசையுங் கீழும் மேலும் முற்றவுமிழந்தோமே! என்று வருந்தினானாயிற்று.
இதுவே ‘அவுணனுள்ளத் தெண்மதியுங்கடந்து‘ என்றதன் கருத்து.

மஹாபலியை ஜ்ஞாதாக்க ளெல்லாரும் அஹங்காரி யென்றும் பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும் நிந்தியா நிற்க,
இவர் ”காமசீரவுணன்” என்று புகழ்ந்து பேசுவானென்னென்னில்;
அவ் வவதாரத்திற்குப் பிற்பட்டுப் போன நம்மைப் போலன்றியே ஸ்ரீவாமநனுடைய வடிவழகையும் சீலத்தையும்
கண்ணாலே காணப்பெற்றவனன்றோ மாவலி; இவனைப்போலே பாக்யசாலியுண்டோ?
என்னுங்கருத்தாலே அருளிச்செய்கிறபடி.

இங்கே வியாக்கியான வாக்கியங்காண்மின்;-
“நானும் அடியேனென் றிருக்கிறதை விட்டு பகவத் விபூதியை அபஹரித்து ஔதார்யத்தை யேறிட்டுக்கொண்டு
யஜ்ஞத்திலே இழியப்பெற்றிலேனே! என்கிறார்“ என்பதாம்.
“ஐயோ! நான் காளிய நாகமாகப் பிறவாதொழிந்தேனே; பிறந்திருந்தேனாகில் கண்ணபிரானுடைய
திருவடியைச் சென்னி மேற் கொண்டிருப்பேனே“ என்று ஸுந்தரபாஹுஸ்தவத்தில் ஆழ்வான் அருளிச் செய்ததை நினைப்பது.

(அண்டமீதுபோகி இருவிசும்பினூடுபோயெழுந்து)
‘போகி‘ என்றதை ‘போக‘ என்னும் எச்சத் திரிபாகக் கொண்டு ‘எழுந்து‘ என்றதை அதனோடு அந்வயித்துக் கொள்ள வேணும்.
அண்டத்திற்கு அப்பால் போவதாகக் கிளம்பி ஆகாசத்தின் மேலே போய்‘ என்றவாறு.
இவ்விடத்தில் ”இரு விசும்பினூடு போய்“ என்றவளவு போதுமே “அண்டமீதுபோகி யெழுந்து” என்பது வேணுமோ?
என்னில்;
“ஸ்ரீவாமனனுடைய விஜயத்தில் தமக்குண்டான ஆதராதிசயத்தாலே அளக்கும் ப்ரதேசத்ததுக்
கொண்டைக் கோல் நாட்டுகிறார்“ என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

மேலே அதிக்ரமித்துச் சென்ற விடங்களைச் சொல்லுகிறது
மேலைத் தண் மதியும் என்று தொடங்கி.
அந்தரிக்ஷத்துக்கு மேலெல்லையாய் ஸ்வர்க்கத்துக்குக் கீழெல்லையாயிருக்கும் ஆதித்ய பதம்;
அதற்கு மேலே நூறாயிரக்காத வழியுண்டு சந்திர பதம்;
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழியுண்டு நக்ஷத்ர பதம். அதற்கு மேலும் ஓங்கிச் சென்றதாயிற்று திருவடி.

ஸூர்யமண்டலங் கடந்த பின் சந்திர மண்டலமாயிருக்க,
இங்குத் ”தண்மதியுங் கதிரவனும்” என்று சந்திர மண்டலத்தை முந்துறச் சொல்லுவானென்? எனில்;
அஹங்காரிகளாய் மிகவும் விமுகராயிருக்கும் ஸம்ஸாரிகளின் தலையிலே ஸூகுமாரமான திருவடியை வைக்கையாலே
அத் திருவடிக்குண்டான வெப்பந்தீர சைத்யோபசாரம் பண்ண வேணுமென்று திருவுள்ளம் பற்றி
முந்துறச் சந்திர மண்டலத்தைப் பேசுகிறாரென்று ரஸோக்தியாக அருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.

மந்திரத்தால் வாழுதியேல் -திரு அஷ்டாஷர மகா மந்த்ரத்தை ஸ்மரித்தார்
அதில் நாராயண நாம பொருளான வியாபகத்தை திரி விக்கிரம வியாபாரத்திலே இட்டு அனுபவிக்கிற பாசுரம் இது

ரஷகனுடைய ரஷணப் பாரிப்பு ரஷ்ய வஸ்துவின் அளவன்றே விஞ்சியது –
தளிர் புரையும் திருவடி என்றவர்
இங்கே கால் என்கிறது சம்சாரிகள் அபிப்ராயத்தாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -உகந்து கொள்ளாமல்
ஒருவனுடைய கால் நமது தலையிலே பட்டதே -என்பார்கள் இறே

காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து
அவன் எண்ண எண்ண அத்தையும் கடந்து
எண் திசையும் கீழும் மேலும் முற்றும் இழந்தோமே
அவனுக்கும் சீர்மை
வாமனன் வடிவு அழகையும் சீலத்தையும் கண்ணாலே காணப் பெற்ற சீர்மை
நானும் அடியேன் என்று இருக்கிற இத்தை விட்டு
பகவத் விபூதியை அபஹரித்து
ஔதார்யத்தை ஏறிட்டுக் கொண்டு
யஞ்ஞத்திலே இழியப் பெற்றிலேனே
ஐயோ நான் காளியனாக பிறவாது ஒழிந்தேனே ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவம்

அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து
போகி என்றது போக என்றபடி
போவதாக கிளம்பி மேலே போய்
இரு விசும்பினூடு போய் எழுந்து -என்று மட்டும் சொல்லாமல்
அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து-என்றது
ஸ்ரீ வாமனன் உடைய விஜயத்திலே தமக்கு உண்டான ஆதாராதிசயத்தாலே
அளக்கும் பிரதேசத்துக்கு கொண்டைக் கால் நாட்டுகிறார்

மேலைத் தண் மதியும் இத்யாதி
அந்தரிஷத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்வர்க்கத்துக்கு கீழ் எல்லையாய் இருக்கும் ஆதித்ய பதம்
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழி உண்டு சந்திர பதம்
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழி உண்டு நஷத்ர பதம்
அதுக்கும் மேலே ஓங்கிச் சென்றதாயிற்று திருவடி
ஸூர்ய மண்டலம் கடந்த பின் சந்திர மண்டலமாய் இருக்க
இங்கு முந்துற சந்திர மண்டலம் சொன்னது
திருவடிகளில் வெப்பம் தீர சைத்யபோசாரம் பண்ண திரு உள்ளம் பற்றி முந்துற பேசுகிறார்-

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: