முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-81-90–திவ்யார்த்த தீபிகை —

ஆளமர் வென்றி யடுகளத்துள் அந்நான்று
வாளமர் வேண்டி வரை நட்டு -நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை –81-

—————————————————————————————–

ஆளமர்
யுத்த வீரர்கள் நெருங்கி
இருக்கப் பெற்றதும்
கடல் கடையும் காலம் தேவாசுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியும் காலம்
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரர் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான்

வென்றி
ஜெயத்தை உடையதுமான

யடுகளத்துள்
எதிர்த்தவரை கொல்லுகின்ற
யுத்த களத்திலே

அந்நான்று
அசுரர்களை தேவர்கள் மேல் விழுந்து நலிந்த
அக்காலத்திலே

வாளமர் வேண்டி
அனுகூலரான தேவர்கட்கு வெற்றி
உண்டாகும் படி
மதிப்புடைய யுத்தத்தை விரும்பி

அதற்கு ஏற்ப

வரை நட்டு –
தண்ணீரிலே அமிழக் கூடிய
மந்த்ர பார்வத்தை மத்தாக நாட்டி

நீளரவைச்சுற்றிக் கடைந்தான்-
உடல் நீண்ட வாசூகி நாகத்தை
கடை கயிறாக சுற்றி
அமுதம் உண்டாகும் படி திருப் பாற் கடலை கடைந்தவன் உடைய

பெயரன்றே தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை
திரு நாமம் எப்படிப் பட்டது என்றால்
சம்சாரிகளை வாரிப் பற்றாக
பிடித்துக் கொண்டு போய்
பழைமையாய் இருக்கிற சம்சாரம் என்னும் நகரத்து
தாண்டுவிக்கின்ற சாதனம்
நரகு -சம்சாரம்

பிரயோஜனாந்தர பரர்களுக்கும்
தன் திருமேனி நோவக் கடல் கடைந்து அருளிய அவன் திரு நாமமே உத்தாரகம்-

——————————————————————————————————————————————————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் பைம்பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் -இடையிடையின்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேலோருநாள்
மானமாய வெய்தான் வரை –82-

——————————————————————————-

படையாரும் வாள் கண்ணார் –
வேலாயுதம் போன்ற ஒளி பொருந்திய
கண்களை உடைய பெண்கள்
அறிவு ஒன்றும் இல்லாத பெண்களும் ஆஸ்ரயிக்கும் படி

பாரசிநாள்-
த்வாதசி அன்று –
சத்வோத்தரமான நாள்

பைம்பூம் தொடையலோடு ஏந்திய தூபம் –
வாடாத மலர்களைக் கொண்டு
தொடுத்த மாலையோடு கூட
திரு வேங்கடமுடையானுக்கு
சமர்ப்பிக்கும் படி ஏந்தி உள்ள
தூபமானது
தூபத்தின் கமழ்ச்சியே திருமலை எங்கும் பரவிக் கிடக்கிறது –

இடையிடையின் மீன் மாய
ஆகாசத்தில் நடுவே நடுவே தோன்றுகின்ற
நஷத்ரங்கள் மறையும்படி

மாசூணும்
மாசு ஏறும்படி பண்ணா நிற்கும்

வேங்கடமே
திருமலையே யாகும்

மேலோருநாள் மானமாய வெய்தான் வரை
முன் ஒரு காலத்திலே
ஸ்ரீ ராமாவதாரத்திலே
மாரீசன் ஆகிய மாய மான் இறந்து விடும்படி
அம்பு தொடுத்து விட்ட ராமபிரான்
நித்ய வாசம் செய்கின்ற மலை யாவது

———————————————————————————————————————————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே -உரவுடைய
நீராழி உள்கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

———————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து
ஒருவராலும் அசைக்க முடியாத
கோவர்த்தன மலையே குடையாகவும்
தனது திருத் தோளே அந்தக் குடைக்கு காம்பாகவும் ஆக்கி
பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து

ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே
ஆயர்கள் வைத்திருந்த திரண்ட
ரிஷபங்கள் ஏழையும்
முடித்த விதம்
எங்கனே

-உரவுடைய நீராழி உள்கிடந்து-
மிடுக்கை உடைத்தான நீரை உடைய திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து

நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான்
எதிரியாக வந்த
மதுகைடபர் முதலிய ராஷசர்களின் மீது
அவர்கள் நீறாகும்படி
பெரிய சக்ராயுதத்தை திருக் கையிலே கொண்டு இருக்கிற உபகாரகனே
நிராசரர் -இரவில் திரிகின்றவர்கள் –

இப்படி கருதும் இடம் சென்று பொருது கை நிற்க வல்ல
திரு ஆழியான் திருக்கையிலே இருக்கச் செய்தேயும்
அவனைக் கொண்டு கார்யம் கொள்ளாமல்
உடம்பு நோவ கார்யம் செய்து அருளியது
ஆஸ்ரித பாரதந்த்ரயத்தாலே
பெறாப் பேறாக நினைத்து —
மழுங்காத வை நுதிய சக்கர நல்வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே -திருவாய்மொழி -3-1-9-

——————————————————————————————————————————————————————————–

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் யுலகளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

————————————————————————

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உபகாரகனே
உனது பெருமையை அறிவார் யாரும் இல்லை
சர்வஞ்ஞனான உன்னால் தான் அறிய முடியுமோ
உன்னால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற என்போல்வாரால் ஒருக்கால் அறியப் போகலாமே ஒழிய
சுய யத்னத்தால் உணர விரும்புவார்க்கு ஒருநாளும் காண முடியாதே

உராய் யுலகளந்த நான்று
எங்கும் சஞ்சரித்த படி அளந்த காலத்திலே
உராய் -உலாவி என்றபடி
சிறிதும் சிரமம் இன்றி -பட்டர் உடைய கருத்து
உராய் – உரசிக் கொண்டு -எல்லாரையும் தீண்டிக் கொண்டு
உரையாய் -மருவி உராய் சொல்லு என்றுமாம் –

வராகத்துஎயிற்று அளவு போதாவாறு என் கொலோ
வராஹ ரூபியான உன்னுடைய
திரு எயிற்றின் ஏக தேச அளவும்
போதாதாக இருந்த விதம்
எங்கனேயோ

எந்தை அடிக்களவு போந்த படி
எனது ஸ்வாமியான உன்னுடைய
திருவடிகட்கே அளப்பதற்குப் போந்திருந்த
பூமியானது-

——————————————————————————————————————————————————————————————————

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ —85-

———————————————————————————

படி கண்டு அறிதியே –
அவனது திருமேனியை
சேவித்து
அனுபவித்து அறிந்து இருக்கிறாயோ

பாம்பணையினான்
சேஷசாயி யான பெருமானுடைய

புட்கொடி கண்டு அறிதியே கூறாய்
கருடப் பறவை யாகிற த்வஜத்தை
சேவித்து
அனுபவித்து
அறிந்து இருக்கிறாயோ
சொல்லு –

வடிவில் பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
பஞ்ச இந்த்ரியங்களையும்
சரீரத்துக்கு உள்ளே அடங்கி இருக்கச் செய்து
திருவாராதன சாமக்ரியான
புஷ்பங்களையும்
தீர்த்தத்தையும்
தரித்துக் கொண்டு

நெறி நின்ற நெஞ்சமே நீ –
ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நிலைத்து நிற்கும் மனமே

இத்தால்
எம்பெருமான் கருடாரூடனாய் சேவை சாதிக்கும் நிலையில்
சேவிக்கப் பெறுதலிலும்
சேஷசாயியாய் சேவை சாதிக்கும் நிலையிலும்
சேவிக்கப் பெறுதலிலும்
தமக்கு ஆசை கொண்டு இருக்கும் படியை வெளியிட்டு அருளுகிறார்-

—————————————————————————————————————————————————

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா -வாசல்
கடை கழியா வுள்புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றியினி–86-

———————————————————————

குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
கோவர்த்தன மலையை
வேரோடு பிடுங்கி எடுத்து
மேலே வந்து சொரிகிற மழையை
மேலே விழாமல் தடுத்த
குணசாலியே
பனி மறைத்த -என்றும் பாட பேதம்

கழியா வுள்புகாக்
வெளிப் பட்டு போகாமலும்
உள்ளே புகாமலும்

காமர் பூங்கோவல்
விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரிலே

வாசல் கடை
திரு வாசலுக்கு வெளியிலே

இடை கழியே
நடுக் கட்டான
இடை கழியிடத்தையே
ரேழி-வெளியிலே சம்சாரிகளும்
உள்ளே உபாசகனான ரிஷியும்
அநந்ய பிரயோஜனரான மூவர் நின்ற இடமே உகந்து சேரும் இடமாக பற்றினான்

பொய்கை பூதம் பேயாழ்வார் நாங்கள் மூவரும் தங்கி இருந்ததனால்

பற்றி
விரும்பிய இடமாகக் கொண்டு

நீயும் திருமகளும்
நீயும் பிராட்டியுமாக

இனி

நின்றாயால்
நின்று அருளினாய் -ஆச்சர்யம் –

பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனை தொழுத நன்னாடு –
இவ்வரலாற்றுக்கு மூலமாய் இருக்கும் இப்பாட்டு
இஃது என்ன திருவருள்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய நீல மேக ச்யாமளமான திருமேனியையும்
மின்னல்கொடி பரந்தால் போன்ற திருமகளாரையும்
நெஞ்சு என்னும் உட்க் கண்ணால் கண்டு
அனுபவித்த படியை
இத்தால் வெளியிட்டு அருளினார் ஆயிற்று
இடையரோடும் பசுக்களோடும் நெருக்கி நின்றால் போலே ஆயிற்று இங்கு மூவரையும் நெருக்கி நின்று அருளினான்

கீழ் பாட்டில் நெஞ்சமே நீ அவனைசாஷாத் கரித்து அனுபவிக்கப் பெற்றாய் இல்லை -என்றாரே
அப்படி சொன்னது பொறுக்க மாட்டாமல்
இவர் இருந்த இடம் தேடி பிராட்டியுடன் வந்து கலந்தான்
இவர் தம்முடைய திரு உள்ளத்தை குறித்து
சாஷாத் கரிதில்லை -என்னத் தரியான் இ றே-பெரியவாச்சான் பிள்ளை –
முன்னே நடந்த திருக்கோவல் இடை கழி நெருக்கத்தை
மீண்டும் அனுபவிப்பித்து அருளினான் போலும்-

————————————————————————————————————————————————————————————————–

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் -கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு –87-

—————————————————————————————-

இனியார் புகுவார் எழு நரக வாசல்
ஏழு வகைப் பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனிமேல் யாவர் பிரவேசிப்பார்
ஒருவரும் இல்லை ஒ யம கிங்கர்களே
ஏழு நரகங்கள் -கொடிய நரகங்கள்
பெரும் களிற்று வட்டம் /பெரு மணல் வட்டம் /எரியின் வட்டம்
புகையின் வட்டம் /இருளின் வட்டம் /பெரும் கீழ் வட்டம் /அரிபடை வட்டம்
என்று ஓர் இடத்திலும்
கூட சாலம் கும்பீ பாகம் அள்ளல் அதோகதி யார்வம்பூ செந்து என்ற ஏழும் தீ நரகப் பெயர்
என்று ஓர் இடத்திலும்
ரௌரவம் /மகா ரௌரவம் /தமஸ் /நிக்ருந்தனம் /அப்ரதிஷ்டம் /அசிபத்ரம் /தப்த கும்பம்
என்றும் வேறு வகையாக கூறுவார்
அன்றிக்கே
எழு நரகம்
சம்சாரிகள் அடங்கலும் சென்று புகுகிற நரகம்
கிளர்த்தியை உடைய நரகம் என்றுமாம்

முனியாது மூரித்தாள் கோமின்
உங்கள் ஸ்தானத்துக்கு
அழிவு உண்டாவதாகச் சொல்லும் என் மேல்
கோபம் கொள்ளாமல்
இனி ஒருக்காலும் திறக்க முடியாத படி
பெரிய தாழ்பாளை போட்டுப்
பூட்டுங்கோள்

-கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே
காண்பதற்கு
விளாம் பழம் உதிர்ந்து விழும்படி
வத்சாசூரனை
எறி தடியாக எடுத்து எறிந்து
இரண்டு அசுரரையும் முடித்த
திருத் தோள்களை உடையனான
சர்வேஸ்வரன் உடைய
ஆபரண த்வனியை உடைய திருவடிகளை
சேவிப்பதற்கு சாதனம்
ஆபரண த்வனியில் ஈடுபட்டு கனை கழல் என்கிறார்

அவன் உகந்து வாழ்கிற திருக் கோவலூர் க்கு சமீபமான
இடத்தில் வசிப்பது தான் என்று

நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு
நன்றாக
அழகிய ஐம்பூ என்று பேர் படைத்த பரந்த
த்வீபத்தில் உள்ள பிராணிகள் அறிந்து விட்டன –
அறிந்த -அறிந்தன –விரைவில் பகவத் ஞானம் உண்டாகி விடும்
எதிர் கால செய்தியை இறந்த காலமாகவே அருளிச் செய்கிறார்

ஆழ்வார் திரு உள்ளம் ஆனந்த்தின் எல்லை கண்டது
நெருக்குண்டு இருக்கும் நிலைமை தாம் அனுசந்தித்தார்
உலகோரை உபதேசத்தாலே திருத்தி பணி கொண்டதும்
பாவனா பிரகர்ஷத்தாலே
அனைவரும் அவனுக்கு ஆட்பட்டதாக கருதி
கம்பீரமாக அருளிச் செய்கிறார்
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் நடமாடும் ஜம்பூத்வீபமே நாடு மற்றவை காடு
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை போலே –

————————————————————————————————————————————————————————————–

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் -சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு–88-

———————————————————————

நாடிலும் நின்னடியே நாடுவன்
மனத்தினால் தேடும் பொழுது
உனது திருவடிகளையே தேடுவேன்

நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் –
எப்பொழுதுவாய் விட்டு ஏதாவது
சொல்லும் போதும்
உனது புகழ்களையே பாடுவேன்

சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
ஏதாவது ஒன்றைத் தலையிலே
அணிவதாய் இருந்தாலும்
அழகிய திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உன்னுடைய அழகிய திரு வடிகளையே
சிரோ பூஷணமாக கொள்பவனான

என்னாகில் என்னே எனக்கு
எனக்கு
எது எப்படி யானால் என்ன

உண்டியே உடையே உகந்தோடும் மண்டலத்தவர்கள்
அநாதி கால துர்வாசனையை எளிதில் அகற்றப் போமோ
தம்மைப் பார்த்தார்
நல்லபடியாக ஈடேறப் பெற்றோமே
நாடிலும் நின்னடியே நாடுவன்-மநோ வ்ருத்தியையும்
நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் -வாக் வ்ருத்தியையும்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு -சரீர வ்ருத்தியையும்
சொல்லி மூன்றும் பகவத் விஷயத்தில் அவஹாஹித்த படியை அருளிச் செய்தார் ஆயிற்று
என் ஆகில் என்
இங்கு இருந்தால் என்ன
பரம பதத்தில் இருந்தால் என்ன என்றுமாம்-

——————————————————————————————————————————————————————

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் -புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம்–89-

————————————————-

எனக்கு
எம்பெருமான் நிர்ஹேதுக கடாஷத்துக்கு
பாத்ரபூதனான எனக்கு

ஆவார் ஆர் ஒருவரே
ஒப்பு ஆகுவார் எவர் ஒருவர் இருக்கின்றார்
யாரும் இல்லை

எம்பெருமான்
அந்த சர்வேஸ்வரனும்

தனக்காவான் தானே மற்றல்லால் –
தானே தனக்கு ஆவான் அல்லால் -மற்று
தானே தனக்கு ஒப்பாவானே அல்லாமல்
அவன் தானும்
எனக்கு ஒப்பாக வல்லானோ –
இப்படி சொல்லும்படி உமக்கு வந்த ஏற்றம் என் என்ன

புனக்காயாம் பூ மேனி
தனக்கு உரிய நிலத்திலே தோன்றின
காயம் பூ வின் நிறமும்

காணப் பொதியவிழும் பூவைப் பூ
காணக் காண கட்டவிழா நிற்கும்
பூவைப் பூவின் நிறமும்

மா மேனி காட்டும் வரம்
வரம் -சிறந்ததான
அவனது கரிய திருமேனியை எனக்கு காட்டா நிற்கும்

ஆகையாலே போலியான பொருள்களைக் கண்டும் அவனை கண்டதாகவே நினைத்து மகிழ்கிற எனக்கு
ஒருவரும் ஒப்பாகார் என்றபடி

இதுவும் கீழ்ப் பாட்டின் சேஷம்
ஹர்ஷப் பெருக்கால் அருளிச் செய்கிறார்
அவன் அடிமையில் ஈடுபட்டு அதன் மூலமாக செருக்கு கொள்ளுதல்
அடிக் கழஞ்சு பெறுதலால்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மற்றையோரும் அருளிச் செய்தவை
இது ஹேயம் அன்று உபாதேயம்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –
பெரிய திருவந்தாதி பாசுரம் இங்கே அனுசந்தேயம்-

———————————————————————————————————————————————————————————————–

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே -உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை
ஒரரியாய் நீ இடந்த தூன்–90-

—————————————————————————————-

வரத்தால் வலி நினைந்து
ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தினால்
தனக்கு உண்டான பலத்தை பெரிதாக மதித்து
வரம் கொடுத்தவர்கள் ஸ்ரீ மன் நாராயணன் ஆதீனம் என்று உணர வில்லையே –

மாதவ
திருமாலே

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உனது திருவடிகளை தனது தலையினாலே
வணங்காமல் இருந்தான் என்ற காரணத்தினாலோ
இல்லையே
பக்தனான பிரஹ்லாதனை நலிந்தான்
என்ற காரணத்தினாலே அன்றோ

-உரத்தினால்
உனது மிடுக்கினாலே

ஈரரியாய்
இரண்டு கூறாக கிழித்துப் போட வேண்டிய
சத்ருவாகி
பெரிய சத்ரு என்றுமாம்

நேர் வலியோனாய
எதிர்த்து நின்று போர் செய்யும் வலியை உடையனாகிய

விரணியனை
ஹிரண்யாசூரனை

ஒரரியாய் நீ இடந்த தூன்
ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாகி
நீ உனது நகங்களால் குத்தி கீண்டதானது
சரீரத்தை
ஓரரி – ஓர்தல் த்யாநித்தல் -த்யானிக்கப் படுகிற நரசிங்கம்

விமுகனாய் இருந்த காரணம் இல்லையே
ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை என்று சீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-பெருமாள் அருளினாரே
தனக்கு உயிர் நிலையான பாகவதர்களுக்கு தீங்கு என்றால் கொண்ட சீற்றம் உண்டே
கோபமாஹாரயத் தீவரம்
ததோ ராமோ மஹாதேஜா ராவனேண க்ருதவ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபச்ய வசமே யிவான்
பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகிப்
பிள்ளையை சீறி வெகுண்டு நலிந்தான் என்றவாறே
நம்மளவில் எத்தனை தீம்பனாய் இருந்தாலும் பொறுத்து இருப்போம்
நம்முடைய சிருக்கனை நலிந்த பின் பொறுத்து இருக்கவோ –
கேள்வி மட்டும் இங்கே
உத்தரம் அருளிச் செய்ய வில்லை
கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் -68 ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்
இது போலே
பெரிய திருவந்தாதி பாசுரத்தில்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாக்கால் பேராளா
மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பது அரிதே
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து –
இதற்கு அதிமாநுஷ ஸ்தவத்தில்
த்வன் நிர்மிதா ஜடரகாச தவ த்ரீலோகீ கிம் பிஷனாதியம்ருதே பவதா துராபா -என்று அனுவதித்து
மத்யே கதாது ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதமிவ ஸ்ருதிரஞ்சித ஸ்யாத்-என்று உத்தரம் அருளிச் செய்தார்
இது போலே ஆழ்வார் வெளிப்படையாக அருளிச் செய்த
மழுங்காத –சுடர் சோதி மறையாதே -என்பதற்கும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் சூத்ரம் இயற்றி அருளினார் –
—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: