பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -41-50–திவ்யார்த்த தீபிகை –

மல்லர் சரித்ரம் நினைவுக்கு வர-அத்தை அருளிச் செய்கிறார் –
உனது ஸூகுமாரமான திருக்கையால்-சிறிதும் வயிறு எரிச்சல் படாமல் கல்லாகக் கிடந்தனவே அந்தோ-

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-
வலியம் என நினைந்து-
நாமே பல சாலிகள் என்று நினைத்துக் கொண்டு –

வந்து எதிர்ந்த மல்லர் –
எதிரிட்டு வந்த மல்லர்களுடைய

வலிய முடியிடிய –
வலிதான தலைகள்-சிதறி ஒழியும்படி –

வாங்கி –
போக்கடித்து

-வலிய நின் பொன்னாழிக் கையால்
உன்னுடைய வலிதாயும்-அழகிய திரு ஆழியையும்-யுடைத்தாய் இருந்துள்ள
திருக் கையாலே

புடைதிடுதி –
அந்த மல்லர்களை அடித்து விட்டாய் –

நீ கை நோவ கார்யம் செய்தததை கண்ணாலே கண்டு வைத்தும்-கீளாதே பல் நாளும் நிற்குமிப்பார்-இந்த உலகமானது-வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்-சிரஞ்சீவியா இருக்கின்றதே
என்ன நல்ல நெஞ்சே –
அன்றிக்கே
வலிய நின் பொன்னாழிக் கையால் கீளாதே புடைதிடுதி-இரணியனது மார்வைக் கீண்டு எறிந்தது போலும்-கேசியின் வாயைக் கீண்டு எறிந்தது போலும்
மல்லர்களைக் கீண்டு எறியாமல் மல் போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாக
திருக் கைகளாலே புடைத்திட்டாய்
அப்படி புடைத்திரா விட்டால் இந்த உலகம் அஸ்தமித்து போயிருக்கும்
அந்த மல்லர்களை புடைத்திடவே நீயும் பிழைத்து-இவ்வுலகமும் நிலை பெற்று -நிற்கிறது-என்றுமாம்-

—————————————————————-

தேவதாந்திர பஜனம் பண்ணி திரிகிறார்களே-வேதங்களும் வைதிகர்களும் பல பல செயல்களை செய்து அருளினவன்-
ஸ்ரீ மன் நாராயணனே என்று சொல்ல-சர்வ பிரகாரங்களாலும் அவனே ரஷகனாய் இருக்க-மற்று ஒருவருக்கு சேஷப்பட்டு இருக்க வழி இல்லையே –

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

பாருண்டான்
பிரளய காலத்தில் பூமியை விழுங்கினான்

பாருமிழ்ந்தான் –
பிறகு அதைப் புறப்பட விட்டான் –

பாரிடந்தான்
மகா வராஹமாய்-பூமியை ஓட்டுவித்து எடுத்தான்

பாரளந்தான்
திரு விக்ரமனாய் பூமியை அளந்து கொண்டான்

பாரிடம் முன் படைத்தான்
முதல் முதலாக இப் பூமியை எல்லாம் உண்டாக்கினான்

என்பரால் –
என்று சாஸ்திர ஞானிகள் சொல்லுகிறார்கள்

பாரிடம் ஆவானும் தான்
அவனே சகல பிரபஞ்ச ஸ்வ ரூபியாகவும் இருக்கிறான் -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -உபநிஷத்-எல்லா பொருள்களும்-ப்ரஹ்மத்தை-ஆதாரமாகவும்-ரஷகமாகவும்
சேஷியாகவும்-தாரகமாகவும் -கொண்டவை -என்றபடி

ஆனால்
ஆனபின்பு –

ஆரிடமே
ஆர் இடம்-நமக்கு ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு ஆர் -யாரும் இல்லை

அவை
இவ்வுலகங்கள்

மற்று ஒருவர்க்கு
ஸ்ரீ மன் நாராயணனைத் தவிர-மற்று ஒரு தெய்வத்துக்கு

ஆவான் புகா
சேஷப்பட்டு இருக்க மாட்டா –

ஆவான் புகுதல்
அடிமைப்பட நேர்தல்-இவன் அவனுக்கு ஆனான் என்றது இவன் அவனுக்கு அடிமைப் பட்டான் -என்றபடி
புகா -பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினை முற்று
கீழ்ச் சொன்ன செயல்கள் எம்பெருமான் தவிர மற்று ஒருவர் இடமும் பொருந்த மாட்டா -என்றபடி-

——————————————————————-

ஸ்ரீ மன் நாராயாணனே பராத்பரன் என்பதை வேறு ஒரு முகத்தாலும் ஸ்தாபித்துக் கொண்டு அருளுகிறார் –

அவயம் என நினைந்து வந்த சுரர்பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத்துயரை மாய்க்கும் வகை–43-

அவயம் என நினைந்து வந்த
அபயம் வேண்டி வந்து சரணம் அடைந்த –
சக்ருதேவ பிரபன்னாய தவாச்மீ திச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம-
அபயபிரதானம் தேடி வருகின்ற தேவதைகள்-அபயம் -அவயமாக திரிந்து
அவையம் -அந்தாதிக்கு சேர பாட பேதம் -அப்போது இடைப்போலி

சுரர்பாலே –
தேவதைகள் இடத்திலே

நவையை –
குற்றம் குறைகளை -துக்கமும் நவை

நளிர்விப்பான் தன்னை –
போக்கடிக்கும் எம்பெருமானை-நளிர்வித்தல் -நடுங்கச் செய்தல்
பகைவர்களை நடுங்க செய்து அருளி ஒழித்து அருளி -செய்பவன் தன்னை

வேத அபஹார -மது கைடபர்கள் கையிலே பறி கொடுத்த ப்ரஹ்மன் துயரமும்
குரு அபஹார -ப்ரஹ்மஹத்தி தோஷம் பீடித்த ருத்ரன் துயரமும்
தைத்ய பீடா -மகா பலி இடம் பறி கொடுத்த இந்திரன் துயரம் என்ன
மற்றும் பலவற்றையும் தீர்த்து அருளிய பிரான் ஸ்ரீ மன் நாராயணனே –

கவையில் மனத்துயர வைத்திருந்து
ஒருபடிப் பட்ட மனத்திலே-பரிபூர்ணமாக வைத்துக் கொண்டு இருந்து
கவை -இரண்டு பட்டு இருத்தல்
கவை இல்லாமை -ஒருப் படி பட்டு இருத்தல்
அனந்யா சிந்த யந்தோ மாம் -ஸ்ரீ கீதை –
எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவும் துணிந்து இருக்கை
எவைகோல் அணுகப் பெருநாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே -திருவாய்மொழி-9-8-3-

வாழ்த்தார்க்கு-
மங்களா சாசனம் பண்ணாதவர்களுக்கு

உண்டோ -மனத்துயரை மாய்க்கும் வகை
மனத்துயரை மாய்க்கும் வகை -உண்டோ-தங்கள் மனத்தில் உள்ள துக்கங்களை
போக்கிக் கொள்ள வழி ஏது

—————————————————————

பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –
வகை சேர்ந்த நல் நெஞ்சம் –
எம்பெருமான் உடைய ஏதோ ஒரு குணத்திலும் ஏதோ ஒரு சேஷ்டிதத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும்-அத்தையே பேசும் நாக்கும்
சகல குணங்களிலும் சகல சேஷ்டிதங்களிலும் நெஞ்சு பொருந்த வேண்டி இருக்க
அப்படி இல்லாமல் இருப்பது முற்காலத்தில் செய்த பாபமே -என்பதாக -பட்டர் நிர்வாஹம் –
ஞானம் பிரசரிப்பதற்கு வழியாக அமைந்துள்ள நெஞ்சும்
எம்பெருமானை பேசுவதற்கு யோக்யமான நாவோடு கூடின வாயும்
ரஜோ தமோ குணம் மிக்கு-சுயமாகவே பகவத் விஷயத்தில் படிந்தில்லை யாகிலும்
நம்மை ஈஸ்வரன் சிருஷ்டித்து அருளியது எதற்கு-நமக்கு கரண களேபரங்கள் கொடுத்தது எதற்கு-என்று ஆராய்ந்து-பகவத் விஷயத்தில் இழிந்து மங்களா சாசனம் பண்ண பிராப்தமாய் இருக்க-சம்சாரிகள் அடியோடு இழியாது இருக்கிறார்களே
மேல் உள்ள காலமும் நித்ய சம்சாரிகளாக போவதற்கு-இப்படி பாபிகளாக திரிகிறார்களே -என்று-

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இதுவன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

வகை சேர்ந்த நல் நெஞ்சம்
ஜ்ஞானதிற்கு மார்க்கமாக ஏற்ப்பட்டு இருக்கிற நல்ல நெஞ்சமும்

நாவுடைய வாயும் –
எம்பெருமானை பேசுவதற்கு உறுப்பான-நாவொடு கூடிய வாக்கும்

மிக வாய்ந்து வீழா வெனிலும்-
எம்பெருமானை நன்றாக கிட்டி-அனுபவிக்கா விட்டாலும்

மிக வாய்ந்து மாலைத்-
நன்றாக ஆராய்ச்சி பண்ணி-எம்பெருமானை –

தாம்
சேதனராய் பிறந்து இருக்கிற தாங்கள்

வாழ்த்தாது இருப்பார் –
வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்

இதுவன்றே மேலைத் தாம் செய்த வினை
மேலைத் தாம் செய்த வினை இது வன்றே-மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காக
தாங்கள் செய்து கொள்ளுகிற-பாபம் அன்றோ இது –

————————————————————

மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன் என்கிறார் –

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-

வினையார் தர முயலும்-
பாபங்கள் நமக்கு உண்டு பண்ண நினைக்கிற

வெம்மையை அஞ்சி –
கொடிய துன்பங்களுக்கு அஞ்சி

தினையாம் சிறிது அளவும்
தினை யளவு சிறிய அல்ப காலமும்-அதி அல்ப காலமும்

செல்ல -நினையாது
வீணாகக் கழிய விரும்ப மாட்டாமையினாலே

வாசகத்தால் ஏத்தினேன் –
சொற்களாலே துதிக்கின்றேன்

வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான்
நித்ய சூரிகள் தொழுது வணங்கும்-பெருமை வாய்ந்த பெருமானுடைய

பொன்னடிகள்
திருவடிகளை –

நான் –
அடியேன்-

—————————————————————–

உபாய உபேயங்கள் இரண்டும்-எம்பெருமான் ஒருவனே என்னும் உறுதியை
அருளிச் செய்கிறார் –

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங்கண் மால் -நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

கதி -கமன சாதனம்
கதி –கந்தவ்ய ஸ்தலம்
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
நாள் தோறும் நான் உனக்கு சொல்லும் சொல்லாவது-இவ்வளவே காண்
கூற்று– சொல்– கூறப்படுவது- கூற்று

தேங்கோத நீருருவம்-
ஓடாமல் தேங்குகின்ற-கடல் போன்ற திரு நிறத்தை யுடையவனும்

செங்கண் மால் –
செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையவனுமான-சர்வேஸ்வரன்

நீங்காத மாகதியாம்-
ஒரு நாளும் விட்டுப் பிரியக் கூடாத-சிறந்த உபேயமாய் இரா நின்றான் –

அவ்வளவும் அல்லாமல்

வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
கொடிய சம்சாரத்திலே பொருந்தாமல்-நம்மை ரஷிப்பதற்கு
சம்சாரம் -வெந்நரகம்

கதியாம்
உபாயமாகவும் இரா நின்றான்

நெஞ்சே-நீ- நினை
நெஞ்சே நீ இத்தை-அனுசந்திக்கக் கடவை –

————————————————————————–

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர்-
இவ்வுலகத்தவர்கள் நம்மை-ஒரு பொருளாக நினைத்து வணங்கி-ஏதாவது ஒரு அல்ப பலனையாவது-நம்மிடத்தில் வேண்டிக் கொள்வார்கள் –

என்றே நினைத்திடவும் வேண்டா
என்று கூட நீ நினைக்க வேண்டா

இப்பாவிகள் அல்ப பலன்களைக் கேட்டு அதுக்கும் உன் இடம் வராமல்
தேவதாந்த்ரங்கள் பக்கல் ஒடுமவர்கள் -ஆரோக்கியம் தேடி ஆதித்யனை பற்றி
செல்வம் வேண்டி சிவனைத் தொழுது-ஆயுளை வேண்டி அயனை அடைந்து
இப்படி உன்னை உபாயமாக கூட பற்றாமல் இருக்க -இப்படியானபின்பு

நீ நேரே -நினைத்து இறைஞ்ச
இவர்கள் உன்னையே உபாயமாகவும்-உபேயமாகவும் நினைத்து-தொழுவதற்கு

எவ்வளவர்-
என்ன அறிவுள்ளவர்கள் –

எவ்விடத்தோர்
அப்படிப் பட்ட அறிவு உடையோர்கள் இடத்தில் தான்-உள்ளார்களா
இருள் தரும் மா ஞாலத்தில் அன்றோ இருக்கிறார்கள்
நேரே நினைத்து இறைஞ்ச எவ்விடத்தோர் முதலில் சொல்லி-அப்புறம் எவ்வளவர்

மாலே –
சர்வேஸ்வரனே

அது தானும் –
கீழ் சொன்ன மானிடர்கள் போன்ற துர்புத்தி

எவ்வளவும் உண்டோ
சிறிதேனும் உண்டாகக் கூடியதோ-உபாய உபேயம் நீ தான் என்ற உறுதி
எமக்கு நிலை பெற்றது அன்றோ

எமக்கு
உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு பாத்ரமான அடியோங்களுக்கு என்றால்

இத்தால்-உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு இலக்காகும்படி அதிகாரம் இருந்தால் கடைத்தேறலாம் -என்றபடி-

——————————————————————-

இப்பாட்டிலும் தமது உறுதியை பேசுகிறார் –
பரமபதம் பாரித்து இருந்தோம் என்றும்-வேண்டாம் என்று இருந்தோம்
பாவோ நான்யத்ர கச்சதி -அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் போலேவும்-

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அடியோம்-மேல் உலகங்களுக்கு எல்லாம் மேலான பரமபதத்தை

எமக்கு அமைத்து இருந்தோம்-
எமக்கு பிராப்ய பூமியாக பாரித்துக் கொண்டு இருந்தோம்

அஃது அன்றேயாம் ஆறு
அப்படி இருப்பது அன்றோ-முமு ஷூத்வத்திற்கு ஏற்று இருப்பது

அமைப்பொலிந்த மென்தோளி காரணமா –
மூங்கில் போலே பருத்து விளங்குகின்ற-மெல்லிய தோள்களை உடையளான
நப்பின்னை பிராட்டிக்காக –
அமை -மூங்கில் -திரண்டு உருண்டு இருக்க திருஷ்டாந்தம்

வெம்கோடு ஏறு ஏழுடனே
கொடிய கொம்புகளை உடைய-ஏழு காளைகளை -ஒரு நொடிப் பொழுதிலே –

கொன்றானையே மனத்துக் கொண்டு
முடித்த எம்பெருமானையே-சிந்தையிலே த்யானித்துக் கொண்டு

கண்ணபிரான் குண சேஷ்டிதங்களையே மனத்தில்-த்யானித்து கொண்டு இருக்கும் அடியேனுக்கு பரமபதம் எதற்கு என்னவுமாம் –

————————————————————–

இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து –49-

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
மேகங்களையும்-கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் என்றும்-ஒக்கும் மால் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும்
தொக்க மேக பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவான் நான் -என்றும்

பெரிய மலைகளையும்-நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலோ வென்று கூவும்-
கரும் கடலையும்-கடல் வண்ணன் என்றே திருநாமம் இ றே
செறிந்த இருளையும்-தானோர் இருளன்ன மா மேனி எம்மிறையார்
இருள்விரி சோதிப் பெருமான் -திருவாசிரியம்

வண்டு அறாப் பூவை தான்-
தேனில் நசையாலே வண்டுகள் விட்டு நீங்காத-பூவைப் பூவையும்
பூவைப் பூ வண்ணா -என்னும்

மற்றுத்தான் -காருருவம்-
மற்று கார் உருவம் தான் -மற்றுள்ள-குவளை குயில் மயில் முதலிய
கறுத்த உருவங்களையும் –
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள் ஐம் பெரும் பாதகர்காள்
அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே –நாச்சியார் திரு மொழி -9-4-

கண்ட நாள்
பார்க்கும் காலத்தில்

காண்டோரும்
பார்க்கும் போது எல்லாம்-பிரமம் என்று இல்லாமல் காணும் தோறும் எல்லாம் இப்படியே

நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து
என் மனமானது-இவை கண்ணபிரான் உடைய-அழகிய திருமேனி என்று எண்ணி
என்னை விட்டு நீங்கி அங்கே ஓடும்-

——————————————————–

இப்படி அந்நியதா ஞானமாகவே முடிந்து விட்டதே –அவன் திரு உள்ளத்தில் இரக்கம் இல்லையா என்கிறார் –

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மாவாய் பிளந்தார் மனம்–50-

பிரிந்து ஓன்று நோக்காது
தம்மை விட்டு பிரிந்து-வேறு ஒன்றில் கண் வையாமல்

தம்முடைய பின்னே திரிந்து உழலும்
தம்மோடு கூடவே அலைந்து கொண்டு திரிகிற

சிந்தனையார் தம்மை
என் நெஞ்சினாரை

புரிந்து ஒரு கால்
ஒரு காலாகிலும் அன்பு கூர்ந்து

ஆவா வென இரங்கார்
ஐயோ என்று அருள் புரிகின்றிலர்-பகவான் –

அந்தோ

வலிதே கொல்மாவாய் பிளந்தார் மனம்
கேசி வாயைப் பிளந்த-அப்பெருமான் உடைய நெஞ்சு கடினமோ
ஆஸ்ரிதர்க்காக கேசி வதம் செய்து அருளின பிரான் திரு உள்ளம்
என் விஷயத்தில் கல் நெஞ்சாக உள்ளதே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
இரக்கம் அற்றவன் சொல்லக் கூசி
அந்தோ வலிதே கொல் என்று அருளிச் செய்கிறார்-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: