தலைவியை ஒருமுகத்தாலே ஆர்றுவிக்க வேணுமென்று நினைத்த தோழி யானவள் சில கேள்விகள் கேட்க,
அவற்றுக்கு மறுமாற்ற முரைக்கும் வகையாக
மைவண்ண நறுங்குஞ்சி தொடங்கி ஐந்துபாசுரங்கள் சென்றன.
தோழி தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடைவந்துவிட்டபடியால் அவள் வாளா கிடந்தாள்;
தலைவிக்கோ ஆற்றாமை மீதூர்ந்தது. கண்ணிற் கண்டதொரு வண்டைத் தூதுவிடுகிறாள் இப்பாசுரத்தில்.
ஸ்ரீராமவதாரத்தில் திர்யக்குக்கள் தூதுசென்று காரியம் தலைக்கட்டிவைக்கக் காண்கையாலே
வண்டுவிடுதூதிலே முயல்கிறாள் இப்பரகாலநாயகி–
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.
பதவுரை
தேன் மருவு-தேன் வெள்ளம் நிறைந்திருக்கப் பெற்ற
பொழில் இடத்து-சோலைப் புறத்திலே
மலர்ந்த போது-மலர்ந்த புஷ்பங்களிலுண்டான
தேன் அதனை–தேனை
வாய் மடுத்து–பானம் பண்ணி
உன் பெடையும் நீயும்–உனது பேடையும் நீயும்
பூ மருவி–புஷ்பத்திலே பொருந்தி
இனிது அமர்ந்து–இனிமையாகப் புணர்ந்து
பொறியின் ஆர்ந்த–மேனியிற் புகர் அதிகரிக்கப் பெற்ற
அறுகால சிறு வண்டே–ஆறு கால்களை யுடைய சிறிய வண்டே!
உன்னை தொழுதேன்–உன்னை வணங்கி யாசிக்கின்றேன்;
ஆநிரை–பசுக் கூட்டங்களை
மருவி மேய்த்த–விரும்பி மேய்த்தவனும்
அமரர் கோமான்-நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
அணி அழுந்தூர் நின்றானுக்கு–அழகிய திருவழுந்தூரிலே நிற்பவனுமான எம்பெருமான் பக்கலிலே
இன்றே நீ சென்று-இப்போதே நீபோய்
அஞ்சாதே–பயப்படாமல்
மருவி நின்று–பொருந்தி நின்று
ஓர் மாது–ஒரு பெண்பிள்ளை
நின் நயத்தாள் என்று–உன்னை ஆசைப் பட்டிருக்கின்றாள்‘ என்று
இறையே–சிறியதொரு வார்த்தையை
இயம்பிக் காண்–சொல்லிப் பார்.
முன்னடிகளில் வண்டைவிளித்துத் தொழுது, பின்னடிகளில், அது செய்ய வேண்டிய காரியத்தை விதிக்கின்றாள்.
திருவழுந்தூர் ஆமருவியப்பன் திருவடிவாரத்திலே சென்று தனது நிலைமையைச் சொல்லுமாறு வேண்டுகின்றாள்;
அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தமையால்
‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக்கிடக்கும்போது
நீ இப்படி உன்காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ? என்னுங்கருத்து முன்னடிகளில் வெளிவரும்.
நாம் வருந்தி யொடுங்கி -மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ என்று கிடக்கும்போது
இந்த வண்டு மாத்திரம் மலர்களிலே ஏறிக்கிடப்பதற்கு யாதுகாரணமென்று பார்த்தாள்;
அது நம்மைப்போலே விரஹ வேதனைப்படாமல் துணை பிரியாதிருப்பதனால் மலரிலே கால் பாவவும்
மதுவைப் பருகவும்
மேனி நிறம் பெற்றிருக்கவும் பெறுகின்றதென்றுணர்ந்து அங்ஙனமே விளிக்கின்றாள்.
பூவைக் கண்டால் அருவருத்தும் போக்ய வஸ்துக்களில் வெறுப்புற்றும் மேனி நிறமழிந்தும் இரா நி்ன்ற என்னையும்
உன்னைப்போலே யாக்க வேண்டாவோ?
நானும் துணைவனோடு கலந்து வாழும்படி நீ காரியஞ் செய்யவேண்டாவோ? என்பது உள்ளூறை.
“உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேன்“ என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும்,
“போந்தெ தென்னெஞ் சென்னும் பொன்வண்டு உனதடிப்போதிலொண்சீராந் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி“ என்கிறபடியே
ஆசார்ய பாதாரவிந்த ஸேவையாகிற மதுவைப் பருகுதலையே விரதமாகவுடைத்தாகியும்,
உயர்கதிக்கு ஸாதனமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கர்ம ஜ்ஞானங்களையுடையராகியும் ஸாரக்ராஹிகளாயுமிருக்கின்ற
ஸ்ரீவைஷ்ணவர்களை வண்டாகச் சொல்லுவது வழக்கம்.
அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணர்களை நோக்கி ‘நீர் எம்பெருமான் திருவடிகளிலே புருஷகாரஞ்செய்து
அடியேனையும் உம்மைப்போலே பகவதநுபவமே நித்தியமாய்ச் செல்லுமாறு ஆட்படுத்திக் கொள்ளவேணும்‘ என்று
பிரார்த்தித்தல் இதற்கு உள்ளூறை பொருள்.
வேதம் வல்லர்களைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிவது ஸம்ப்ரதாயமென்க.
போது + தேன், போதைத்தேன்; பூவிலுள்ள தேன் என்றபடி.
(அறுகால சிறுவண்டே தொழுதேனுன்னை.)
வண்டுக்கு ஆறு கால்கள் உள்ளமை இயல்வாதலால் இவ் விசேஷணம் இங்கு ஏதுக்கு? என்று கேட்கக்கூடும்;
இரண்டு காலாகவும் நான்கு காலாகவுமின்றியே விரைந்து செல்லுகைக் குறுப்பாக ஆறுகால்கள் இருக்கப்பெற்ற பாக்கியம் என்னே!
என்று வியந்து கூறுவதாகச் சில ஆசார்யர்கள் நிர்வஹித்தார்களாம்.
இந்த நிர்வாஹத்தில் ஸ்வாரஸ்யமில்லை;
வண்டு செல்லுதற்குச் சாதனம் சிறகே யன்றிக் கால்கள் அல்லவே;
ஆதலால் ‘அறுகால‘ என்னு மடைமொழிக்கு அங்ஙனே கருத்துரைத்தல் பொருந்தாதென்று, பட்டர் அருளிச் செய்ததாவது-
“தொழுதேனுன்னை“ என்று மேலே யிருக்கையாலே,
என்தலையிலே வைப்பதற்கு ஆறுகால்களுண்டாகப் பெற்றதே! என்று வியந்த சொல்லுகிறபடி என்பதாம்.
தூதுசென்று மீண்டுவந்தால் வண்டின் கால்களைத் தன்தலை நிறைய வைத்துக்கொண்டு கூத்தாடக் குதூஹலித்திருப்பதனால்
அதற்குச் சேர இங்ஙனே கருத்துரைத்தல் மிகப்பொருந்தும்.
“எங்கானலகங்கழிவாயிரை தேர்ந்து இங்கினி தமருஞ், செங்காலமட நாராய்! திருமூழிக்களத்துறையுங்,
கொங்கார் பூந்துழாய் முடியென்குடக்கூத்தற்கென் தூதாய் நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ நுமரோடே“ (9-7-1)
என்ற திருவாய் மொழிப்பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக் கொள்ளத்தக்கது.
சிறுவண்டே! =
ஏற்கனவே நீ சிறியையாயிருப்பதும் ஒரு பாக்கியம்;
அனுமான் இலங்கைக்குத் தூதுசென்ற போது சிலவிடங்களில் தன்வடிவைச் சிறுக்கடித்துக் கொள்ளவேண்டி யிருந்தது;
அங்ஙனே உனக்குத் தேவையில்லை; உருவமே சிறியையாயிரா நி்ன்றாய் காண் என்று விசேஷார்த்தங்காண்க.
ஹனுமானாகில் ‘இந்தக் குரங்கு இங்கே ஏதுக்கு வந்தது?, என்று ஆராய்ச்சிப்பட வேண்டியிருக்கும்;
நீ வண்டாகையாலே
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில்
இஷ்டமானதோரிடத்திலே யிருந்து கொண்டு வார்த்தை சொல்லலாம்படியான ஜன்மமன்றோ உன்னது என்பதும் விவக்ஷிதம்.
பரஸ்வரஸம்ச்லேஷ ஸுகத்தாலே மயங்கி மதிகெட்டுக் கிடக்கிற வண்டின் செவியிலே உறுத்தும்படி
‘பூமருவியினதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறுவண்டே!‘ என்று உரக்கக் கூவினவாறே
வண்டு துணுக்கென்று எட்டிப்பார்க்க, தொழுதேனுன்னை என்கிறாள்.
தலைமகனுடைய திருவடிகள் எனக்கு ஏதுக்கு? உன்னைத் துதிப்பதும் உன்காலிலே விழுவதுமன்றோ எனக்குப்பணி என்றவாறு.
எம்பெருமானைக் காட்டிலும் புருஷகார பூதரான ஆசார்யர்கள் மிகவும் உத்தேச்யர் என்ற சாஸ்த்ரார்த்த முணர்க.
என்னைத் தொழுவதேன்? வேண்டின காரியத்தைச் சொல்லலாகாதோவென்று வண்டு கேட்க;
காரியத்தைக் கூறத் தொடங்குகிறாள் பின்னடிகளில்.
அமரர்கோமான் பக்கலிலே சென்று தூது சொல்லுங்கோள் என்றாள்;
அந்தோ! அயர்வறுமமரர்களதிபதியன்றோ? அந்த மேன்மையிலே எங்களால் கிட்டப்போமோ? என்ன;
ஆமருவிநிரைமேய்த்த அமரர் கோமான் என்றாள்;
பரத்வம் ஒருபுறத்தே கிடக்கச் செய்தேயும் பசுக்களோடே பொருந்தி அவற்றோடே போது போக்குமவன் காண்;
நித்ய ஸூரிகளுக்குத் தன்னை யொழியச் செல்லாதாப்போலே பசுக்களை யொழியத் தனக்குச் செல்லாதபடியான
குடிப் பிறப்புடையவன்காண்;
மேன்மையைக் கண்டு தியங்காதே செல்லலாமென்றாள்; ஆமாம்; அது ஒருகாலத்திலன்றோ?
க்ருஷ்ணாவதாரங் கடந்து நெடுநாளாயிற்றே! என்ன;
அணியழுந்தூர் நின்றனுக்கு என்கிறாள்.
அக்காலத்தில் பசுக்களை ரக்ஷித்தாற்போலே அக்காலத்திற்குப் பிற்பட்டவர்களாய்ப பசு ப்ராயராயிருப்பாரையும்
ரக்ஷிக்கைக்காகப் * பின்னானார் வணங்குஞ் சோதியாகத் திருவழுந்தூரிலே நிற்கிறான் காண்;
அங்கேபோய் அறிவிக்க வேணுமென்றாளாயிற்று.
எம்பெருமான் பிரிந்துபோகிறபோது
* சேலுகளுந் திருவரங்கம் நம்மூர் என்றும் *
புனலரங்கமூர் என்றும் சொல்லிச் சென்று திருவரங்கத்திலே போயிருக்க.
திருவழுந்தூரிலே தூதுவிடுகை பொருந்துமோ? என்னில்; கேண்மின்;
‘புனலரங்கமூரென்று போயினாரே‘ என்றது உண்மைதான்;
ஆயினும், பிரிந்து போனவர் முழுதும் போயிருக்க மாட்டார்; திருவழுந்தூரிலே பின் தங்கி நின்றிருக்கக் கூடும்;
அங்கே சென்று அறிவிக்கலாமென்கிறாள் போலும்
அன்றியே;
புனலாங்கமூரென்று போயினார்; திருவரங்கத்தே போய்ப் பார்த்தார்; நீர் வாய்ப்பு் நிழல் வாய்ப்பும் கண்டவாறே
தனிக்கிடை கிடப்பதற்குப் புறப்பட்டிருப்பர்; இப்போது திருவழுந்தூரளவிலே எழுந்தருளியிருக்கக்கூடும்;
அங்கே சென்று அறிவிக்கவமையும் என்கிறாள் என்றுங் கொள்ளலாம்.
அணியழுந்தூர் நின்றானுக்கு =
இத்தலத்தைக் கடந்து அப்பால் போகமாட்டாமை யாலே அங்கே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நிற்கிளானென்கிறாள்.
திருவாலி திருநகரியிற் பரகாலநாயகி பக்கலில் நின்றும் ஆள்வருவது எப்போதோவென்று
எதிர்பார்த்தபடியே நிற்கிறானென்கிறாள் என்னவுமாம்.
இன்றே சென்று =
நாளைச் செய்கிறேனென்ன வொண்ணாது; நாளைக்கு நான் இருக்கப் போகிறேனோ?
நானில்லையானால் அவன்தான் இருக்கப்போகிறானோ?
இரண்டுதலையும் அழிந்த பின்பு நீ எங்குச் சென்று யார்பக்கலிலே என்ன சொல்லப் போகிறாய்?
இரண்டு தலையும் அழிந்ததென்றால் பி்ன்னை உலகந்தானுண்டோ? நீயும் அழிந்தாயாவாய்;
ஆக, நாங்களும், பிழைத்து நீயும் வாழ வேண்டியிருந்தாயாகில் இன்றே சென்று அறிவியாய் என்றாளாயிற்று.
நீ மருவி =
அவன் ஆமருவி நிரை மேய்த்தவனாகையாலே திர்யக் ஜாதியான உனக்கும் முகந்தரும்; நீ சென்று கிட்டலாம்.
அவனுடைய சீல குணத்தைக்கண்டு வைத்தும் “அவரை நாம் தேவரென்றஞ்சினோமே“ என்று மருண்டு
பின்வாங்கின என்னைப் போலல்லாமல் அருகே பொருந்தி நிற்கலாம் நீ.
(அஞசாதே நின்று.)
வார்த்தை சொல்லும் விஷயத்தில் சிறிதும் அஞ்சவேண்டா;
‘நம்முடைய அந்த புறத்தில் நின்றும் வந்தவர்கள்‘ என்று தோற்றும்படி செருக்கி வார்த்தை சொல்லவேணும்.
அவர்க்கு அறிவிக்கவேண்டும் வார்த்தை ஏதென்ன;
ஓர் மாதுநின் நயந்தாளென்று = என்பெயரைச் சொல்லவேண்டா;
ஒருத்தி‘ என்னும்போதே
அவர்தாமே தெரிந்துகொள்வர்;
‘ஒருகாட்டிலே ஒருமான் அம்புபட்டுக்கிடந்து துடிக்கின்றது‘ என்றால் உடனே எய்த வனககுத் தெரியுமன்றோ.
(நின்நயந்தாள்.)
ஓர்மாது‘ என்றாலே போதுமானது;
அதற்கு மேலும் ஒருவார்த்தை சொல்லவேணுமென்றிருந்தாயாகில் “நின்நயந்தாள்“ உன்னை ஆசைப்பட்டிருக்கின்றாள்) என்று சொல்லு.
படுகொலைப்பட்டாளென்று சொல்லு என்றபடி.
ஒரு க்ஷுத்ரபுருஷனை ஆசைப்பட்டாளல்லள், பரமபுருஷனை உன்னை ஆசைபட்டாளென்று சொல்லு.
பரத்வத்திலே ஆசைப்பட்டிலள், வியூகத்திலே ஆசைப்ட்டிலள், விபவாவதாரங்களிலே ஆசைப்ட்டிலள்,
அந்தர்யாமித்வத்திலே ஆசைப்பட்டிலள்; ஆசைப்படுதற்குரிய அர்ச்சவதாரத்திலே ஆசைப்பட்டாளென்று சொல்லு.
இறையே இயம்பிக் காண் =
முற்றமுடிய வார்த்தை சொல்ல வேண்டுமோநீ;
சிறிது வாயைத் திறக்கும் போதே உன்னை அவர் எங்ஙனம் கொண்டாடப்போகிறார் பார்;
“ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹூமத;“ என்கிறபடியே அனுமான் பெற்ற பரிசும் ஏகதேசமென்னும்படியன்றோ
நீ பஹுமாநம் பெறப்போகிறாய்; இது நான் சொல்ல வேணுமோ? அநுபவத்தில் பார்த்துக் கொள்ளாய் என்றாளாயிற்று.
தலைவி ஆற்றாமை மிக்கு கண்ணில் கண்ட ஒரு வண்டைத் தூது விடுகிறாள்
அது துணையுடன் மலரிலே கால் பாவி -மது பருகி -மேனி நிறம் பெற்று இருக்கக் கண்டு
என்னையும் உன்னைப் போல் ஆக்க வேண்டாவோ என்கிறாள்
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-விரும்பி
போந்தது என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -என்கிறபடி
ஆச்சார்யா பாதாரவிந்தம் சேவை ஆகிற மதுவை
ஞான அனுஷ்டானங்கள் சிறகு
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிந்து
போது +தேன் = போதைத்தேன்-பூவில் உள்ள தேன் என்றபடி
அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
விரைந்து போக ஆறு கால் சிலர் நிர்வாஹம்
பட்டர் தொழுதேன் உன்னை பின்பு இருப்பதால்
என் தலையில் வைப்பதற்கு ஆறு கால்கள் உண்டாகப் பெற்றனவே
எங்கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மடநாராய் திரு மூழிக் களத்துறையும் கொங்கார்
பூந்துழாய் முடி என் குடக் கூத்தற்கு என் தூதாய்
நுங்கால்கள் என் தலை மேல் கெழுமீரோ-திருவாய் மொழி -9-7-1-
சிறுவண்டே
திருவடி போலே சிறிய வடிவு எடுத்துக் கொள்ள வேண்டாமே
நீ வண்டாகையாலே-
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயில்
இஷ்டமானதோர் இடத்தில் இருந்து வார்த்தை சொல்லலாமே
பூமருவியினிது அமர்ந்து பொறியிலார்ந்த அறு கால சிறு வண்டே-என்று
உரக்க கூப்பிட்டதும்
எட்டிப் பார்க்க
தொழுதேன் உன்னை
என்கிறாள்
புருஷகார பூதரான ஆச்சார்யர்கள் உத்தேச்யம்
பராத்பரன் அன்றோ என்ன
ஆமருவி நிறை மேய்த்த அமரர்கோன்
நித்ய சூரிகளுக்கு தன்னை ஒழிய செல்லாதது போலே
இவனுக்கும் ஆ நிரைகள் விட்டு தரிக்க முடியாத படி குடிப்பிறப்பு உடையவன்-
அது என்றோ என்ன
அணி அழுந்தூர் நின்றானுக்கு
பிற்பட்டவர்களாய் பசு பிராயராய் உள்ளாரையும் ரஷித்து அருள பின்னானார் வணங்கும் சோதியாய்
பிரிந்து போகும் பொழுது புனல் அரங்கம் நம்மூர் என்று போயினாரே
திருவழுந்தூரில் தூது விடுகை எதுக்கு
முழுவதும் போய் இருக்க மாட்டார் -பின் தங்கி நின்று இருக்கக் கூடும் அங்கே சென்று அறிவிக்க அமையும்
அன்றியே
திருவரங்கம் போய் பார்த்தார்
நீர் வாய்ப்பும் நிழல் வாய்ப்பும் கண்டவாறே தனிக்கிடை கிடக்க பொருந்தி இராது
எதிர்கொண்டு வர புறப்பட்டு இருப்பார்
இப்போது திரு அழுந்தூரில் எழுந்து அருளி இருக்கக் கூடும்
அங்கே சென்று அறிவிக்க அமையும்
அணி அழுந்தூர் நின்றானுக்கு
அப்பால் போக மாட்டாமையால் ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றான்
திருவாலி திருநகரியில் இருந்து பரகால நாயகி ஆள் வருவது எப்போது என்று எதிர் பார்த்து நிற்கிறான்
இன்றே சென்று
நாளை நான் இருப்பேனா
நான் இல்லை என்றாள் அவன் இருப்பானா
பின்பு உலகம் தான் உண்டா
ஆக
நாங்களும் பிழைத்து நீயும் வாழ இன்றே சென்று அறிவியாய்
நீ மருவி
அவன் ஆ மருவி அப்பன்
திர்யக் ஜாதி ஆகையால் உனக்கும் முகம் தருவான்
சீல குணத்தை கண்டும் தேவர் என்று அஞ்சி பின் வாங்கின என்னை போல் அன்றிக்கே
நீ அங்கே பொருந்தி நிற்கலாம்
அஞ்சாதே நின்று
நம்முடைய அந்தபுரத்தில் நின்றும் வந்தவர்கள் என்று தோற்றும்படி
செருக்கி வார்த்தை சொல்ல வேணும்
ஒரு மாது நின் நயந்தாள் என்று
என் பேரைச் சொல்ல வேண்டா
ஒருத்தி என்னும் போதே அவர் தெரிந்து கொள்வார்
ஒரு காட்டிலே ஒரு மான் அம்பு பட்டு துடிக்கின்றது என்றால் எய்த வேடன் அறிவான் இறே
ஒரு மாது என்றாலே போதும்
அதுக்கும் மேலே வார்த்தை சொல்ல வேண்டுமானால்
நின் நயந்தாள் –
உன்னை ஆசைப் பட்டு இருக்கிறாள்.
படு கொலைப் பட்டாள் என்று சொல்லு
ஒரு சூத்திர புருஷனை ஆசைப் பட்டாள் இல்லை
பரம புருஷனான உன்னை ஆசைப் பட்டாள்
பரத்வத்திலே ஆசைப் பட்டிலள்
வ்யூஹத்திலே ஆசைப் பட்டிலள்
விபவ அவதாரங்களில் ஆசைப் பட்டிலள்
அந்தர்யாமியிலே ஆசைப் பட்டிலள்
ஆசைப் படுவதற்கு உரிய அர்ச்சாவதாரத்தில் இறே ஆசை பட்டாள் என்று சொல்லு –
இறையே இயம்பிக் காண்
முற்ற முடிய வார்த்தை சொல்ல வேண்டுமா
சிறிது வாயைத் திறக்கும் போதே கொண்டாடுவார்
ஏஷ சர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹனூமத -என்னும் படி
திருவடி பெற்ற பரிசும் ஏக தேசம் என்னும் படி அன்றோ நீ பஹூ மானம் பெறப் போகிறாய்
இது நான் சொல்ல வேணுமோ நீயே அனுபவத்தில் பார்த்து கொள்ளப் போகிறாய்-
—————————————————————–
கீழ்ப்பாட்டில் ஒரு வண்டைத் தூதுவிட்டாள்; அது போய்த் தூதரைத்துத் திரும்பி வருமளவும்
தரித்திருக்கமாட்டாமையாலே பின்னையும் ஒருநாரையைத் தூது விடுகிறாள்.
“திக்ஷு ஸர்வஸு மார்க்கந்தே“ என்கிறபடியே பிராட்டியைத் தேடுதற்கு எல்லாத் திசைகளிலும்
வாநர முதலிகளை ஏவினாப்போலே இவளும் கண்ணாற் கண்டவற்றை எல்லாம் ஏவுகிறாள்.
ராமாவதாரத்திலே வாநர ஜாதி வீறு பெற்றது போலே ஆழ்வார்களவதரித்துப் பக்ஷிஜாதி வீறு பெற்றது என்பர்.
செங்கால மடநாரா யின்றெ சென்று திருக்கண்ணபுரம்புக்கென்செங்கண்மாலுக்கு
என்காதலென்துணைவர்க்குரைத்தியாகில் இதுவொப்பதெமக்கின்பமில்லை*நாளும்
பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன்*தந்தால்
இங்கேவந்தினிதிருந்துன்பெடையும்நீயும் இருநிலத்திலினிதென்பமெய்தலாமே.
பதவுரை
செம் கால–சிவந்த கால்களையுடைய
மட நாராய்–அழகிய நாரைப்பறவையே!
இன்றே சென்று-இன்றைக்கே புறப்பட்டுப்போய்
திருக்கண்ணபுரம் புக்கு–திருக்கண்ணபுரத்தில் புகுந்து
என் செங்கண் மாலுக்கு-செந்தாமரைக் கண்ணராய் என்மீது வியாமோஹங் கொண்டவரும்
என் துணைவர்க்கு–எனக்குத் துணைவருமான சௌரிப் பெருமாள் பக்கலிலே
என் காதல்–எனது விருப்பத்தை
உரைத்தி ஆகில்–சொல்லுவாயாகில்
எமக்கு-(அவரைப் பிரிந்து வருந்திக் கிடக்கின்ற) நமக்கு
இது ஒப்பது இன்பம் இல்லை–இதுபோன்ற ஆனந்தம் வேறொன்றுமில்லை;
(இதற்காக உனக்கு நான் செய்யக்கூடிய உதவி யாதெனில்;)
செங்காலமடநாராய் =
பரகாலநாயகி தான் எம்பெருமானோடு ஸம்ச்லேஷித்திருந்த காலத்திலே அவன் தனது காலை நோக்கி
‘இதொரு காலும் சிவப்பும் இருந்தபடி என்!‘ என்று கொண்டாடக் கண்டவளாதலால்
நாரையின் மற்ற அவயங்களை விட்டுக் காலைக் கொண்டாடத் தொடங்குகிறாள்.
இனிதாகச் சூடவேண்டிய ஸுகுமாரமான கருமுகை மாலையைச் சும்மாடு கொள்வது போல,
கண்கொண்டு காணவேண்டிய உனதுகாலைக் கொண்டு தூதுபோக விடுகை மிகையாயிருக்கின்றதே! என்செய்வேன்?
உன்காலைப்பற்றியே என்காரியம் தலைக்கட்ட வேண்டியிருக்கின்றதே என்கிறாள்
‘நாராய்!‘ என்னும் விளி அம்மே! என்னுமாபோலேயிருக்கின்றது.
வழிபறியுண்கிற வளவிலே தாய் முகத்திலே விழித்தாற்போலே யாயிற்று தலைவனைப் பிரிந்து நோவுபடுகிறவளவிலே
இந்த நாரையின் காட்சியுண்டாயிற்று.
பிராட்டியைப் பிரிந்து நோவுபட்டுத் தடுமாறி நின்றவளவிலே பம்பைக்கலையில் அனுமான் வந்து தோன்றின போது
பெருமாளுக்குண்டான அத்தனை ஹர்ஷம் இப்போது பரகால நாயகிக்கு உண்டாயிற்றுப்போலும்.
“செங்காலமடநாராய்!“ என்று மிக்க இரக்கந்தோற்றக் கூவினவாறே நாரை
‘என்னை இவ்வளவு போற்றிப் புகழ்ந்து அழைக்க வேணுமோ?
திருவுள்ளம் பற்றின காரியத்தைச் சொல்லலாகாதோ?“ என்று கேட்கிறாப்போலே இசைவு தோற்ற அருகே வந்து நிற்க
இன்றேசென்று என்று தொடங்கிச் சொல்லுகிறாள்.
நாளை பார்த்துக் கொள்ளுவோ மென்று இருந்துவிடலாகாது; இப்போதே செய்ய வேண்டிய காரியங் காண்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணம்“
(அந்த ஸீதையைப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்ற அவர் படியைப் பார்த்தாலும்
கால தாமதம் செய்யலாகாது;
“ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ – மஹூர்த்த மபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவோத்த்ருதௌ.“
என்னத்தக்க என் படியைப் பார்த்தாலும் கால தாமதம் செய்யலாகாது. இப்போதே புறப்படவேணும்.
எவ்விடத்திற்கு? என்ன ; திருக்கண்ணபுரம் புக்கு என்கிறாள்.
கீழ்ப்பாட்டில் “அணியழுந்தூர் நின்றனுக்கின்றே சென்று“ என்று திருவழுந்தூறே வண்டைத் தூது விட்ட இத்தலைமகள்
இப்பாட்டில் இத்திருப்பதியை விட்டுத் திருக்கண்ணபுரத்திலே தூது விடுவானேன்? என்னில்;
முற்பாட்டில் தூதுவிட்ட வண்டை அவன் திருவழுந்தூரிலே கண்டிருப்பன்;
அங்குத் தரித்திருக்க மாட்டாமல் அந்த வண்டோடு கூடவே அரைகுலையத் தலைகுலைய எதிரே வந்து
ஒருபயணம் புகுந்து திருக்கண்ணபுரத்தேற வந்திருக்கிற ஸமயமாயிருக்கும் இப்போது;
அங்குச் செல்லலாம் என்கிறாள் போலும்.
பொதுவாக எம்பெருமானை நோக்கித் தூது விடுகிறாளத்தனை யாதலால் எந்தத் திருப்பதியை நோக்கித்
தூதுவிடினுங் குறை யொன்றுமில்லை யென்க.
திருக்கண்ணபுரத்தில் அவரைக் கண்டுபிடிக்கும் வகை ஏதென்ன;
என்செங்கண் மாலுக்கு என்கிறாள்.
அவர் என்னிடத்தில் கொண்டிருக்கிற வியாமோஹமெல்லாம் திருக்கண்களிலே காணலாம்படியிருக்குங் காண்;
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே“
என்கிறபடியே என்னைப் பிச்சேற்றின கண்களே அவரைக் கோட் சொல்லித் தருமே
என்னைப் பிரிந்திருக்கையாலே அவர்க்கு உறக்கம் இராது; அதனாலும் கண்கள் குதறிச் சிவந்திருக்கும்;
அந்த அடையாளங்கொண்ட அவரைக் கண்டு பிடித்துக் கொள்ளலா மென்கிறாளாயிற்று.
(என் துணைவர்க்கு)
எந்த நிலைமையிலும் எனக்குத் துணையாயிருப்பவர் அவர்;
கலந்து பிரிந்த போதும் ஸத்தை குலையாதபடி குணாநுபத்தாலே தரிப்பிக்கவல்ல துணைவர் என்றபடி.
இப்போதுண்டான ஆற்றாமையைப் பரிஹரிப்பதற்க அவரே துணைவர்;
“எருத்துக் கொடியுடையானும் பிரமனுமிந்திரனும் மற்று, மொருத்தருமிப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை“.
அவரைக் கண்டு கூற வேண்டிய வார்த்தை என்னென்ன;
என் காதல் உரைத்தியாகில் என்கிறாள் நீ அவர்க்கு வேறொன்றுஞ் சொல்ல வேண்டா,
‘இங்ஙனே ஆசைப்பட்டுக் கிடக்கிறாளொருத்தி‘ என்று இவ்வளவு சொன்னால் போதும்.
மற்றையோருடைய காதலைக் காட்டிலும் தன்னுடைய காதல் பரம விலக்ஷணம் என்பது தோன்ற ‘என்காதல்‘ என்கிறாள்.
“சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியாரெல்லாரோடுமொக்க எண்ணியிருந்தீரடியேனை,
நல்லாரறிவீர் தீயாரறிவீர் நமக்கிவ்வுலகத்து எல்லாமறிவீர் ஈதேயறியீரிந்தளூரீரே. (4-9-6) என்ற பாசுரம்
இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
(என்காதல்)
என்னுடைய காதல்
மற்றுள்ள முமுக்ஷிக்களின் காதல் கோலுமன்று;
அயர்வறு மமரர்களின் காதல் போலன்று,
அயர்வறுமமரர்களதிபதியின் காதல் போலுமன்று; என்னுடைய காதல்‘ என்றே சொல்லுமித்தனை.
‘பாதாழ்வானுடையநோய்‘ என்றால் விலக்ஷணமென்று ப்ரஸித்தமன்றோ, அதுபோலே.
உரைத்தியாகில் =
அங்குச் சென்றவாறே அவருடைய வடிவழகிலே கால் தாழ்ந்து போன காரியத்தை மறக்கவுங்கூடுமே;
தன்னையும் மறக்கும்படியாயன்றோ அவ்விடத்து இனிமை தானிருப்பது.
அப்படிப்பட்டவதில் கால் தாழாமல் தரித்து நின்று என்காதலை அவர் பக்கலில் உரைக்க வல்லையாகில் என்கிறான்.
நீ வாய் படைத்ததற்கு இதுவன்றோ பிரயோஜனம்;
பல வார்த்தைகளையும் சொல்லிப் போருகிற உன்வாயிலே என்விஷயமாக இந்த ஒருவார்த்தை வந்தாலாகாதோ?
நான் சொன்ன மாத்திரத்தால் அவர் வந்திருவாரோவென்ன;
உரைத்தியாகில் இது வொப்பதேமக்கின்பமில்லை யென்கிறாள்.
அவர் வரட்டும், வராமற்போகட்டும்; நீ அவரிடம் சென்று என் காதலைச் சொல்லுமதுவே எனக்குப் பரமாநந்த மென்கிறாள்.
அவர் பரமசேத நரன்றோ; தூதுரை செவிப்பட்டால் வராதொழிவரோ? வந்தே தீருவர் என்றிருக்கிறான்.
எனக்காகச் சென்று தூதுரைத்தல் மாத்திரம் போதாது;
அவ்வுபகார ஸ்மிகுதியாலே நான் உனக்குப் பண்ணும் கிஞ்சித்காரத்தையும் அங்கீகரிக்கவேணுமென்கிறாள்.
(நாளும் பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்)
பிரிந்தாரிரங்கு மிடம் நெய்தலாகையாலே கடற்கரையிலே தானிருக்கிறாளாய்,
‘பரப்புடைத்தான கடற்கரைச் சோலை யெல்லாம் எந்நாளும் உன் அதீனமாம்படி பண்ணி வைப்பேன்;
ஆனைக் கன்று போலே யிருக்கிற மீன்களை நீ மேல் விழுந்து புஜிக்கும்படியாக சேகரித்துத் தருவேன்‘ என்கிறாள்.
இத்தால் புருஷகார க்ருத்யம் பண்ணி பகவத் விஷயத்திலே சேர்ப்பிக்கும் ஆசார்யனுக்கு
“பொனனுலகாளீரோ“ என்னுமா போலே உபயவிபூதியுமளித்தாலும் தகும் என்றதாயிற்று.
ஆசார்யன் ஒருகால் உபகரித்துவிடுமித்தனை;
சிஷ்யன் வாழ்நாளுள்ள வளவும் அநுவர்த்திக்கக் கடவன் என்கிற சாஸ்த்ரார்த்தமும் இதில் விளங்கக் காண்க.
“பழனமீன் கவர்ந்து உண்ணத்தருவன்“ என்றதன் உள்ளூறை பொருளாவது –
நாரைக்கு மீன் எப்படி இனிதோ அப்படி ஆசார்யனுக்கு உகப்பான பொருளைத் தந்து கிஞ்சித்தகரிக்க வேணுமென்பதாம்.
தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இருநிலத்திலினிதின்பமெய்தலாம் =
நான் பண்ணின கிஞ்சித்காரத்தை ஸ்வீகரித்து நானிருந்தவிடத்தே வந்து புஜிக்க வேணும்;
ஏகாகியாய் வந்திருக்கவொண்ணாது.
அபிமத விஷயத்தோடேகூட வந்திருக்க வேணும்.
நான் தனியிருந்து படுகிற வருத்தந் தீர உன்னையாவது கூடியிருக்குமிருப்பிலே காணப்பெறவேணும்.
இங்ஙனே நானும் வாழ்ந்து நீயும் இனிது வாழ்ந்து நோக்கவேணுமென்றளாயிற்று.
வண்டு போய் தூது உரைத்து திரும்பி வரும் அளவும் தரித்து இருக்க மாட்டாமையால்
பின்னையும் ஒரு நாரையையும் தூது விடுகிறாள்
திஷூ சர்வாஸூ மார்க்கந்தே -எல்லா திக்குகளிலும் வானர ஜாதிகளை ஏவினால் போலே
ஆழ்வார்கள் திருவவதரித்து பஷி ஜாதி வீறு பெற்றதே
செங்கால மட நாராய்
சம்ச்லேஷம் போது இது ஒரு கால் இருந்த படியே என்று கொண்டாடக் கேட்டவள் ஆகையாலே
எல்லா அவயவங்களையும் விட்டு காலைக் கொண்டாடுகிறாள்
கருமுகை மாலையை சும்மாடு கொள்வாரைப் போலே
உன் காலைப் பற்றி என் கார்யம் கொள்ள வேண்டி இருக்கிறதே
நாராய்
அம்மே போன்ற விளி
பிராட்டி பிரிந்து பம்பை கரையிலே நோவு பட்ட பெருமாளுக்கு திருவடி தோன்றினால் போலே
அத்தனை ஹர்ஷம் இவளுக்கு நாரையைக் கண்டு உண்டாயிற்றே
அருகே வந்து நிற்க இன்றே சென்று —
ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாம் அஸி தேஷணாம்-அவர் படியைப் பார்த்தாலும் கால தாமதம் ஆகாது
ந ச சீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ -முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-
என்னத் தக்க என் படியைப் பார்த்தாலும் கால தாமதம் கூடாது
எவ்விடத்துக்கு என்ன -திருக்கண்ணபுரம் புக்கு -என்கிறாள்
முன் தூது விட்ட வண்டை அவன் திரு அழுந்தூரிலே கண்டு இருப்பான்
தரித்து இருக்க மாட்டாமையாலே அரைகுலைய தலை குலைய வண்டுடன்
பயணம் புகுந்து திருக் கண்ணபுரம் ஏற வந்து இருக்கும் சமயம் ஆகி இருக்கும் இப்போது
எம்பெருமானை நோக்கி தூது விடுகிறவள் எந்த திருப்பதிக்கும் தூது விடலாம் இறே என்னவுமாம்
அவனை கண்டுபிடிக்கும் வகை என்ன என்ன –
என் செங்கண் மாலுக்கு
என்னிடம் அவன் கொண்டு இருக்கும் வ்யாமோஹம் எல்லாம் திருக் கண்களிலே தெரியுமே
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே
உறக்கம் வராமல் குதறிச் சிவந்து இருக்கும்
என் துணைவர்க்கு
எந்த நிலையிலும் எனக்கு துணை
கலந்து பிரிந்தாலும் குணானுசந்தானத்தாலே தரித்து இருக்கப் பண்ணுபவன்
இப்போது ஆற்றாமைக்கு அவரே துணைவர்
எருத்துக் கொடியானும் பிரமனும் இந்த்ரனும் மற்றும் ஒருத்தரும்
இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
கண்டு சொல்ல வேண்டிய வார்த்தை என் என்னில்
என் காதல் உரைத்தியாகில் –
என் காதல்-
அவர் காதலை விட தன்காதல் பரம விலஷணம் என்று என்காதல் – என்கிறாள்
சொல்லாது ஒழிய கில்லேன் -அறிந்தது சொல்லில் நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரிரே-4-9-6-
என் காதல்
முமுஷுக்கள் காதல் போல் அன்று
அயர்வறும் அமரர்கள் காதல் போல் அன்று
அயர்வறும் அமரர்கள் அதிபதியின் காதல் போலும் அன்று
என்னுடைய காதல் -என்று சொல்லும் அத்தனையே
பரதனுடைய நோய் என்னுமா போலே விலஷணம் அல்லவா
உரைத்தியாகில்
அவன் வடிவு அழகிலே கால் தாழ நேரிடும்
தரித்து நின்று உரைக்க வேண்டுமே
வாய் படைத்ததுக்கு இது வன்றோ பிரயோஜனம்
பல விஷயம் பேசும் உன் வாயால் என் விஷயமாக ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ
உரைத்தால்; அவர் வந்திடுவாரோ என்ன
உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை
அவர் வரட்டும் வராமல் போகட்டும்
நீ சொல்லுவதே பரமானந்தம்
அவர் பரம சேதனர் -தூது செவிப்பட்டதும் வந்தே தீருவர் என்று இருக்கிறாள்
நான் செய்யும் கிஞ்சித் காரத்தையும் அங்கீ கரித்து கொள்ள வேணும்
நாளும் பைம்கானம் எல்லாம் உனதேயாக பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்
பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல்
கடல்கரையில் தான் இருக்கிறாளாய்-பரப்புடைத்தான கடல் கரை சோலை எல்லாம் எந்நாளும் உன் ஆதீனம்
ஆனைக் கன்று போல் இருக்கும் மீன்களை நீ மேல் விழுந்து புஜிக்கும் படி சேகரித்து தருவேன்
பொன்னுலகு ஆளீரோ போலே உபய விபூதியும் அளித்தாலும் தகுமே
ஆச்சார்யனுக்கு உகப்பான பொருளை தானே கிஞ்சித் கரிக்க வேணும்
தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இருநிலத்தில் இனிது இன்பம் எய்தலாம்
நான் இருந்த இடத்தே வந்து புஜிக்க வேணும்
ஏகாங்கியாய் இல்லாமல் அபிமத விஷயத்தோடு வர வேணும்
நான் தனியாய் இருக்கும் வருத்தம் தீர உன்னை யாகிலும் கூடி இருக்கும் இருப்பில் காண வேணும்
இங்கனே
நானும் வாழ்ந்து
நீயும் இனிது வாழ்ந்து
நோக்க வேணும் -என்கிறாள் ஆயிற்று-
—————————————————————————-
திருவாய்மொழியில் நம்மாழ்வார் * பூங்கழிவாயென்னுந் திருப்பதிகத்தில் எம்பெருமான் பக்கல் தூதுவிட்டு,
அநந்தரம் அவன் வந்து முகங்காட்டக் காணாமையாலே பிரணய ரோஷம் தலையெடுத்து ஊடல் செய்தாப்போலே
இப்பரகால நாயகியும் கீழே தூதுவி்ட்டவள் இதிலே ஊடுகின்றாள்.
‘இப்போது நம்முடைய ஆற்றாமை கனத் திருக்கையாலும்
தூது அனுப்பியிருக்கிறோமாகையாலும்
சில சுபநிமித்தங்கள் தோன்றி யிருக்கிறபடியாலும்
கடுவே அவன் வந்து நிற்கப்போகிறாள்; அப்படி அவன் வந்தால் முகங்கொடுத்து வார்த்தை சொல்லுவோமல்லோம்;
ஏனென்றால்,
அவனுடைய ஸம்ச்லேஷம் உடனே விச்லேஷத்தை விளைவித்தல்லது நிற்கமாட்டாமையாலே
இன்னமொரு விச்லே ஷத்துக்கு இலக்காயிருந்து மீண்டு மீண்டும் வருத்தப்படுவதிலுங்காட்டில்
அவனுக்கு முகங்கொடாதே அவன் கண்வட்டத்திலே முடிந்து பிழைப்பது நன்று‘ என்று நிச்சயித்துக் கொண்டாள்.
தம்மை முடித்துக்கொள்ள நினைப்பவர்கள் வெற்றிலை தின்னுதல் பூச்சூடுதல் சரந்தணிதல் சிரித்தல் முதலியன செய்யுமா போலே
இவளும் முடிவுக்குப் பூர்வாங்க மாகத் தெளிவு பெற்றிருந்தாள்.
உள்ளே யுருகி நையாநிற்கச் செய்தேயும் மேலுக்குத் தெளிந்திருந்தாள்; அதைக் கண்ட தோழியானவன்
‘இந்த நிலைமையிலே இவள் தெளிந்திருக்கைக்குக் காரணமில்லையே‘ எனச் சிந்தித்து
அவளையே வாய்விட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்றெண்ணி
‘நங்காய் இப்போது உன்னெஞ்சிலே கிடக்கிறதென்‘ என்று கேட்க;
‘அப்பெரியவர் வந்தால் பண்டு போலே முகங்கொடுக்கக் கடவேனல்லன்; அவர் கண்ணெதிரே உயிரை விட்டு
முடிந்துபோவதாகத் துணிந்திருக்கின்றேன்‘ என்று தலைவி சொல்ல;
அதுகேட்ட தோழியானவள் ‘கெடுவாய், மலையோடேமல் பொருத மல்லருண்டோ?
உபயவிபூதி நாதராய் ஸர்வசக்தராயிருக்கிறவரோடே அபலையான நீ எதிரிடுவதென்று ஒரு காரியமுண்டோ?
“நல்லவென்தோழி! நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர்சிறுமானி டவர் நாம் செய்வதென்?“ என்று
சொன்னவர்களைக் கேட்டதில்லையோ?
ப்ரணயிகளிடத்துச் செய்யத்தக்கதை ப்ரபுக்களிடத்துச் செய்யலாகுமோ?” என்று சொல்ல:
அவருடைய ப்ரபுத்வம் என்கையிலே படுகிறபடி பாராய்‘ என்று தலைவி சொல்ல;
‘இவளுடைய உறுதியைப் பார்த்தால் முடிந்தேதீருவள் போலேயிருக்கிறது;
ப்ரணய ரோஷத்தோடே நின்று, உயிர்துரக்குமளவு ஆகாதபடி இவளை நோக்கவேணும்‘ என்று பார்த்த தோழியானவள்.
‘நங்காய்! அவர்க்குள்ள ஆச்ரித பக்ஷபாதம் உனக்குத் தெரியாது போலும்; ஒரு பிராட்டிக் காகத் தென்னிலங்கை செற்றவர்காண்;
இந்திரனுக்காக மாவலியை வலிதொலைத்து மூவுலகளந்தவர்காண்;
பாண்டவர்கட்குப் பக்ஷபாதியாயிருந்து தேரை நடத்தினவர்காண்‘ என்று சில சேஷ்டிதங்களை யெடுத்துக் கூற,
‘ஆமாம் தோழீ!, எல்லாம் நானுமறிவேன்; அவை யெல்லாம் வஞ்சகச் செயலத்தனையே காண்;
நான் முடியாமலிருக்க மாட்டேன்‘ என்று தன் உறுதியை வெளியிடுகிறாளிதில். பரகாலநாயகி.
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.
பதவுரை
தோழீ–வாராய் தோழியே!,
தென் இலங்கை-தென்னிலங்கையிலுள்ள
அரண்–கோட்டைகள்
சிதறி–அழிந்து
அவுணன் மாள–இராவணனும் முடியும்படியாக
சென்று–(ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்)
உலகம் மூன்றி னையும் திரிந்து-(த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும்
மன் இலங்கு–அரசர்கள் விளங்கா நின்ற
பாரதத்தை மாள–பாரத யுத்தம் முடியும்படியாக
ஓர் தேரால் ஊர்ந்த–ஒரு தேரைக் கொண்டு நடத்தின
வரை உருவின் மா களிற்றை–மலை போன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை,
என் தன்–என்னுடைய
பொன் இலங்கு முலை குவட்டில்–பசலை நிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே
பூட்டிக்கொண்டு-அணைத்துக்கொண்டு
போகாமை வல் லேன் ஆய்-அப்பால் போகவொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி
புலலி எய்தி–அவரைப் பிரிந்துபட்ட கருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த-என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக
எப்பொழுதும்-எல்லாக் காலத்திலும்
நான்-நான்
நினைந்து-அவரையே சிந்தித்து
உருகி இருப்பேன்-முடிந்து பிழைப்பேன்.
தென்னிலங்கை யரண் சிதறி =
மேலே “வரையுருவின் மாகளிற்றை“ என்கையாலே மத யானையின் வியாபாரமாகச் சில சேஷ்டிதங்களைப் பேசுகிறாள்.
(தோழி சொன்ன சேஷ்டிதங்களை அநுபவித்துப் பேசுகிறபடி.)
ஒரு மதயானை வழிபோகா நின்றால் எதிரே கண்ட வற்றையெல்லாம் கையாலும் காலாலும் அழித்துக்கொண்டு போமோபோலே
கர தூஷ்ணாதி களைக் கொன்றும் வாலியை வதைத்தும் கடற்கரையிலே சென்று கடலை அணை செய்து
இலங்கையை அமைதிப்படுத்தின படியைக் கண்டபோதே இராவணன் செத்துப் போனவனாக ஆயினான்
என்பது தோன்றப் பாசுரம் தொடுத்திருக்குமழகு காண்மின்.
(தென்னி லங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்று)
பெருமாள் போன போக்கிலேயே இராவணன் முடிந்தானென்கை. ஒருபிராட்டிக்காக அவர் பண்ணின யானைத்தொழில்
இது வன்றோ என்று தோழிசொல்ல
‘ஆமாம், அவர் பரம ப்ரணயிதான்; அபலைகளாயிருப்பாரை அகப்படுத்திக் கொள்வதற்காகச் செய்த
செயலாகையாலே பகட்டுக் காண்‘ என்று கழித்துப் பேசுகிறபடி இது.
உலகமூன்றினையுந்திரிந்து =
உலகளந்தபடியை நினைக்கிறது இங்கு. ஒரு மதயானை யதேஷ்டமாகத் திரியுமாபோலே
எல்லார் தலைகளிலும் திருவடியை யிடடத் திரிந்தவாறு.
‘அந்ய சேஷத்வத்தாலும் ஸ்வாதந்த்ரிய ப்ரதிபத்தியாலும் விமுகராயிருப்பவர்களின் தலைகளிலும் திருவடியை வைத்து
உய்வு பெறுத்து மவர்காண்‘ என்று தோழிசொல்ல;
ஆமாம், அவர் விமுகர்தலைகளிலே திருவடியை வைப்பவரேயன்றி
“அடிச்சியோந் தலைமிசை நீயணி யாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்“ என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பவர் கட்கு முகங்கொடுக்கும் தயாளு அல்லர் காண் என்று சொல்லிக் காட்டுகிறபடி.
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாளவூர்ந்த =
எதிரிகளான் துரியோதனாதியர் கிருஷ்ணன் ஆயுதமெடுக்கவேண்டா‘ என்றார்களேயல்லது
‘ஸாரதியாய் நிற்கவேண்டா‘ என்றும் சொல்லவில்லையே;
ஆகையாலே ஸாரதியாய் நின்று ஒரு தேராலே ப்ரதிபக்ஷங் களை அழியச் செய்தானாயிற்று.
“பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார் களிற்றுக் கழன்மன்னர் கலங்கச்
சங்கம் வாய்வைத்தான்“ என்கிறபடியே த்ரௌபதியின் குழலை முடிப்பிக்கைக்காக அவர் பண்ணின வியாபாரமன்றோ வென்று தோழி சொல்ல;
ஒருத்திக்காக இப்படி காரியஞ் செய்கிறவனென்று நாட்டாரைப் பகட்டுகைக்காகச் செய்தாரித்தனை;
தம்மையே புகலாக நம்பியிருப்பாருடைய கூந்தலை விரிப்பிக்குமவர் காண் என்று சொல்லுதல் இங்கு உள்ளுறை.
ஆக இப்படிப்பட்ட வரையுருவின் மாகளிற்றை =
திண்மையில் மலைபோன்று செருக்கில் ஆனை போன்றிருக்கின்ற அவரை. (தோழீ!) அன்னவரை நான்
என்ன பாடுபடுத்தப் போகிறேன் காணாய் தோழீ! ; நீ விலக்காம லிருக்கவேணும்;
விலக்காதிருந்தாயாகில் அவர் படும் பாடுகளை யெல்லாம் காணலாமென்கை.
என்றன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொ்ணடு =
என்கையில் ப்ரஹ்மாஸ்த்ரமிருக்க எனக்கு வெல்ல வொண்ணாத நிலமுண்டோ?
எம்பெருமானாகிற அந்த மதயானை என்னுடைய முலையாகிற ஸ்தம்பத்தோடே சேர்த்துக் கொண்டு இறுக்கிக் கட்டிவிடுவேன்;
முகங்கொடுத்துப் பேசமாட்டேன், வெண்ணெய் திருடின கண்ண பிரானை யசோதை உரலிலே கட்டிப் போட்டு வைத்தாப் போலே,
என்னைப் படுகொலை யடித்த பெருமானை முலைக் குவட்டிலே கட்டிப் போடடு வைப்பேன்;
இதுவாயிற்று அவனுக்கு நான் செய்யும் பெரிய சிக்ஷ. என்னிடத்திலே முகம் பெறாமையாலே அவன் ஓடிப்போகத் தேடுவேன்;
(போகாமை முலைக்குவட்டில் பூட்டிக்கொண்டு)
“குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு, அற்றகுற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே“
என்கிறபடியே அவனாலும் நெகிழ வொண்ணாதபடி கட்டிப் போட்டு வைப்பேன்.
அவன் வந்து முகங்காடடினால் நெஞ்சு மேல்விழாதிருக்க வேணும்;
அவனை ஒரு சரக்காகவே நினையாமல் துரும்பாக நினைப்பேனாக வேணும்;
நீ அவனுக்குப் புருஷகாரமாக நிற்காம லிருக்கவேணும்; இவ்வளவும் பெற்றேனாகில் என் எண்ணம் ஈடேறும் என்ற கருத்துப்பட,
‘வல்லேனாய்‘ என்கிறாள்.
(புலவி யெய்தி)
அவனைப் பிரிந்து பட்ட வருத்தமெல்லாம் அவன் கண்முன்னே படக்கடவேனென்கிறாள்.
அன்றியே,
அவனைப் பிரி்ந்து நாம் பட்டபாடெல்லாம் அவன்றான் என்முன்னே படும்படி பண்ணக்கடவே னென்கிறாள் என்னவுமாம்.
இப்பொருளில், எய்தி என்றது‘ ‘எய்த‘ என்றபடி: எச்சத்திரிபு.
என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பமெய்த =
இப்போது ஸம்ச்லேஷிப்பதும் மறுபடியும் விச்லேஷிப்பதும் மீண்டும் ஸம்ச்லேஷிப்பதும் மீண்டும் விச்லேஷிப்துமாகி
மேன்மேலும் வருத்தங்கட்டு இலக்காயிராதபடி அவன் கண் வட்டத்திலே முடிந்து பிழைக்கடவேனென்கை.
கண் கை கால் முலை முதலிய ஸகல அவயவங்களும் முடியக் கடவன.
முடிந்து போவதே பேரின்ப மெய்துதலாம் இங்கு.
ஏழையாய்ப் பெரிய குடும்பியாயிருக்கு மவன் க்ஷாம காலத்தில் குடும்பத்தினுடைய பசியும் தன் பசியும் பொறுக்க மாட்டாமையாலே
குடும்பத்தோடு ஆற்றிலே விழுந்து முடிந்து மகிழக்கடவேனென்று நினைக்குமாபோலே இவளும் நினைக்கிறாளாயிற்று.
அவன் வந்தவாறே இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஸம்ச்லேஷிக்க வொருப்படுவேனென்று நினைக்க வேண்டா;
எப்போதைக்கும் இதுவே துணிவு. நினைத்த மாத்திரத்திலே உருகிப் போவதே என் பிரக்ருதி காண்மின் என்கிறாள்.
இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு.
இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி.
வைகல் பூம் கழிவாய் -என்னும் திருப்பதிகத்தில் தூது விட்டு முகம் காட்டாமையால்
பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடல் செய்தால் போலே
இதில் பரகால நாயகியும் ஊடுகின்றாள்
ஆற்றாமை கனத்து
தூது விட்டு
சுப நிமித்தங்கள் தோன்ற
கடுக வந்து நிற்கப் போகிறான்
முகம் காட்டாது -அவன் கண் வட்டத்திலே முடிந்து பிழைப்பது நன்று என்று நிச்சயித்து
முடிவுக்கு பூர்வாங்கமாக தெளிந்து
உள்ளே உருகி நைந்து இருந்தாலும் மேலுக்கு தெளிவு பெற்றால் போலே இருக்க
தோழியானவள் -மலையோடு பொருத மல்லர் உண்டோ
நல்ல வென் தோழி நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என்
பிரணயிகள் இடம் செய்யத் தாக்கத்தை பிரபுக்கள் இடம் செய்யவோ என்று சொல்ல
அவன் உடைய பிரபுத்வம் படப் போகிற பாட்டை பார்க்கப் போகிறாய் என்ன
தோழி யானவள்
அவனுடைய ஆஸ்ரித பஷபாதம் அறியாயோ
பிராட்டிக்காக இலங்கை அழித்து
இந்த்ரனுக்காக உலகு அளந்து
பாண்டவர்களுக்காக பலவும் செய்து -சொல்ல
எல்லாம் வஞ்சக செயல் அத்தனை காண்
நான் முடியாமல் இருக்க மாட்டேன் -என்று தன் உறுதியை வெளியிடுகிறாள்
புலவி எய்தி -அவரை பிரிந்த வருத்தம் எல்லாம் அவர் எதிரே பட்டு
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த -என்னுடைய எல்லா அவயவங்களும்
என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்தம் அடையும்படி
எப்பொழுதும் நான் நினைந்து உருகி இருப்பன் -எல்லா காலத்திலும் நான் அவரையே சிந்தித்து முடிந்து பிழைப்பேன் என்கிறாள்-
தென்னிலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்று
ஒரு மத்த கஜம் -மேலே வரை உருவின் மத களிற்றை -என்பர்
வியாபாரமாக சில சேஷ்டிதங்கள் பேசுகிறாள்
தோழியின் வார்த்தையை அனுவதித்து
மத கஜம் கண்டவற்றை அழித்து போவது போலே
கர தூஷணாதிகள் முடித்து
வாலியை வதைத்து
கடல் கரையிலே சென்று கடலை அடைத்து
இலங்கையை அடை மதில் படுத்தி
பெருமாள் போன போக்கிலே இராவணன் முடிந்தான்
பிராட்டிக்காக செய்த செயல் என்று தோழி சொல்ல
ஆமாம் அவன் பரம பிரணயி தான்
அபலைகளாய் இருப்பாரை அகப்படுத்திக் கொள்வதற்காக
செய்த செயலாகையாலே இது பகட்டு காண் -என்று கழித்து பேசுகிறபடி-
உலகு மூன்றினையும் திரிந்து
மத கஜம் எதேஷ்டமாக திரியுமா போலே
எல்லார் தலைகளிலும் திருவடி இட்டு திரிந்த படி
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வா தந்த்ரய பிரதிபத்தியாலும்
விமுகராய் இருப்பவர்களின் தலைகளிலும் திருவடியை வைத்து உய்வு பெறுத்துமவர் காண் என்ன
ஆமாம் விமுகர் தலைகளில் வைப்பவர்
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பார்க்கு முகம் கொடுக்கும் தயாளு அல்லர் காண் -என்று சொல்லிக் காட்டுகிறபடி-
ஒரு தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்துக்கு
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் –
த்ரௌபதி குழல் முடிக்க செய்து அருளிய வியாபாரம் என்று தோழி சொல்ல
நாட்டாரை பகட்டுக்கைக்காக செய்தான்
தம்மையே புகலாக நினைந்து இருப்பார் உடைய குழலை விரிப்பவர் அல்லர் காண்
இப்படிப் பட்ட
வரை வுருவின் மா களிற்றை
செருக்கி ஆனை போன்று இருக்குமவரை என்ன பாடு படுத்தப் போகிறேன் பார்
தோழி நீ விலக்காமல் மட்டும் இருந்தால் போதும்
என் தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
என்னிடம் பிரஹ்மாஸ்திரம் உண்டே
அந்த மத யானையை முலை யாகிற ஸ்தம்பத்துடன் சேர்த்துக் கொண்டு இறுக்கிக் கட்டி விடுவேன்
முகம் கொடுத்து பேச மாட்டேன்
என்னிடத்தில் முகம் பெறாமையால் ஓடிப் போக தேடுவன்
போகாமை முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
குற்றமற்ற முலை தன்னை குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே -என்கிறபடியே
அவனாலும் அவிழ்க்க ஒண்ணாத படி கட்டிப் போட்டு விடுவேன்
வல்லேனாய்
அவன் வந்து முகம் காட்டினால் நெஞ்சு மேல் விழாது இருக்க வேணும்
அவனை சரக்காக நினையாமல் துரும்பாக நினைத்து இருக்க வேணும்
நீ அவனுக்கு புருஷாகாரமாக நிற்காமல் இருக்க வேணும்
இவ்வளவும் பெற்றேனாகில் என் எண்ணம் ஈடேறும்
புலவி எய்தி
அவனைப் பிரிந்து பட்ட வருத்தம் எல்லாம் அவன் கண் முன்னே படக் கடவன்
அன்றிக்கே
அவனைப் பிரிந்து நாம் பட்டது எல்லாம் அவன் தானே என் முன்னே படும்படி பண்ணக் கடவேன்
இப்பொருளில் எய்தி என்றது எய்த என்றபடி -எச்சத் திரிபு-
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
இப்போது சம்ஸ்லேஷிப்பதும்
பின்பு விஸ்லேஷிப்பதும்
மீண்டும் சம்ஸ்லேஷிப்பதும்
விஸ்லேஷிப்பதும்
மேன்மேலும் வருத்தங்களுக்கு இலக்காகாமல்
அவன் கண் வட்டத்திலேயே முடிந்து பிழைக்கக் கடவேன் -என்கை
கண் கை கால் முலை -சகல அவயவங்களும் முடியக் கடவன
பெரிய குடும்பு ஏழையாய் அனைவரும் ஆற்றில் விழுந்து முடிய நினைக்குமா போலே
அவன் வந்தவாறே இந்த எண்ணம் மாற்றி சம்ஸ்லேஷிக்க ஒருப்பட வேண்டா
இந்த முடிவில் உறுதியாக -எப்போதும் இதே துணிவு
நினைத்த மாத்ரத்திலே உருகிப் போவது என் பிரகிருதி காண்
ஆற்றாமையின் கனத்தை அறிவித்தவாறு
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான
முடிந்த அவா என்கிற பரம பக்தி முதிர்ந்தமை சொன்ன படி-
————————————————————————
கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது
‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்து பிழைப்பதாகப் பேசினார்.
அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார்.
விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார்.
நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம்.
அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே.
பதவுரை
அன்று–முன் பொருகாலத்தில்
ஆயர் குலம் மகளுக்கு–இடைக் குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு
அரையன் தன்னை–நாயகரானவரும்
அலை கடலை கடைந்து-அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும்
அடைத்த அம்மான் தன்னை–(அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும்
குன்றாத வலி–குறைதலில்லாத மிடுக்கை யுடைய
அரக்கர் கோனை மாள–இராவணன் முடியும்படியாக
கொடும் சிலைவாய்–கொடிய வில்லிலே
சரம் துரந்து–அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து
குலம் களைந்து வென்றானை–அரக்கர் குலங்களை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரும்
குன்று எடுத்த–கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த
தோளினானை–புஜத்தை யுடையவரும்
விரி திரை நீர் விண்ணகரம் மருவி–பரந்த அலைகளை யுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி
நாளும் நின்றானை–எப்போதும் ஸந்நிதி பண்ணி யிருப்பவரும்
தண் குடந்தை–குளிர்ந்த திருக்குடந்தை யிலே
கிடந்த மாலை–பள்ளிக் கொண்டிருக்கும் ஆச்ரித வத்ஸலரும்
நெடியானை–ஸர்வோத்தமருமான பெருமானை
நாய் அடியேன்–நாய் போல் நீசனான அடியேன்
நினைந்திட்டேன்–நினைத்தேன்.
அன்று ஆயர்குலமகளுக்கு அரையன்றன்னை =
தம்மோடொத்த திவ்ய மஹிஷிகளுக்கு உதவினபடியைப் பேசத் தொடங்கி முந்துறமுன்னம்
நப்பின்னைப் பிராட்டிக்கு உதவினபடியைப் பேசுகிறார். ‘அரையன்‘ என்பது ‘அரசன்‘ என்ற பதத்தின் போலி.
நப்பின்னையின் துயரத்தைத் தொலைத்த பிரபு என்றபடி.
அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் கன்னை =
கடலைக் கடைந்ததும் கடலில் அணைகட்டினதும் பிராட்டிக்காக.
பிராட்டியைப் பெறுவதற்காகக் கடலைக் கடைந்தது; அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காகக் கடலை யடைத்தது.
தேவர்கட்கு அமுதங்கொடுப்பதற்காகவன்றோ கடல் கடைந்த தென்னில்; அன்று;
பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் என்க.
“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!“ என்றாரே இவர் தாமே.
(குன்றாத வலியரக்கர் இத்யாதி)
வர பலத்தையும் புஜ பலத்தையும் பற்றாசாகக் கொண்டு பர ஹிம்ஸையே போது போக்காயிருக்கும்
ராக்ஷஸ ஜாதிக்கெல்லாம் தலைவனாயிருந்த இராவணன் தொலையும்படியாக ஸ்ரீசாரங்கவில்லிலே அம்புகளைத் தொடுத்து
நடத்தி வெற்றி பெற்ற வீறுயுடைமை சொல்லுகிறது.
ராக்ஷஸ குலத்தவரான விபீஷணாழ்வான் வாழ்ந்து போயிருக்க, ‘குலம் களைந்து‘ என்னலாமோ வென்னில்;
அவர், தம்முடைய நினைவாலும் இராவணனுடைய நினைவாலும் சக்ரவர்த்தித் திருமகனாருடைய நினைவாலும்
ராக்ஷஸ குலத்தில் நின்றும் பிறிகதிர்ப்பட்டு இக்ஷ்வாகு குலத்திற்புகுந்து விட்டாரென்பது
வான் மீகி முதலிய முன்னோர்களின் ஸித்தாந்தம். இது ஸ்ரீவசநபூஷணாதிகளில் விரியும்.
இராவணனொருவனே குற்றமியற்றினவனாயினும் அவனுடைய ஸம்ஸர்க்கமே ஹேதுவாகக் குலங்குலமாக நசித்தொழிந்தது.
“கேசவன் தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும், மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா“ என்கிறபடியே
ஒருவன் அநுகூலனானால் அவனுடைய ஸம்பந்தி ஸம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமாபோலே
ஒருவன் பிரதிகூலனான இராவணனுடைய ஸம்ந்தத்தாலே ராக்ஷஸகுலமடங்கலும் பாழ்பட்டன;
அது கூலனான ஸுக்ரீவனுடைய ஸம்பந்தத்தாலே வாநரஜாதியடங்கலும் வாழ்ச்சி பெற்றன.
குன்றெடுத்த தோளினானை =
ஆயர்க்கு நேர்ந்த ஆபத்தைப் போக்கினது ஒரு பெருமையோ?
என்னுடைய ஆபத்தைப் போக்கவேண்டாவோ வென்பது இங்கு உள்ளுறை.
விரிதிரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை =
கீழ்ச்சொன்ன விபவாதாரங்களுக்குப் பிற்பட்டவர்களையும் அநுக்ரஹிக்கைக்காகவன்றோ
திருவிண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணுகிறது.
திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி என்றும், உப்பிலியப்பன் ஸந்நிதி என்றும் வழங்கப்பெறும்.
சோழநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று.
திருவிண்ணகரிலே நின்றான், திருக்குடந்தையிலே கிடந்தான்;
நின்றால் எங்கேனும் புறப்பட்டுப்போக நினைவுண்டு போலும் என்று நினைக்கும்படியாயிருக்கும்;
பள்ளிகொண்டிருந்தால் அங்ஙனே நினைப்பாரில்லையே:
‘ஸம்ஸாரம் கிழங்கெடுத்தாலல்லது போகோம்‘ என்றுகிடக்கிற கிடையாயிற்று.
(மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே
தானும் வ்யாமோஹ சாலியாய் அடியார்களையும் வ்யாமோஹ சாலிகளாக ஆக்குமவன் என்க.
(நெடியானை)
இப்படிப்பட்டவன் இப்போது எனக்கு எட்டாதவனாயினானென்று காட்டுகிறபடி.
அடிநாயேன் நினைந்திட்டேனே =
அவனுடைய மேன்மைக்கு எல்லையில்லாதாப் போலே என்னுடைய தாழ்வுக்கும் எல்லையில்லை;
திறந்த வாசலெல்லாம் நுழைந்து திரியும் ஐந்து போலே மிகத் தண்ணியன்.
இப்படிப்பட்ட நான் அப்படிப்பட்ட பரம புருஷனை நினைந்திட்டேன் –
அம்மானாழிப் பிரானவன் எவ்விடத்தான் யானார், எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங்கண்டீர்‘
என்றாப் போலே, மிக நீசனான அடியேனுக்கும் விதி வசத்தாலே நேர்ந்த இக்கலவி
நித்யமாய்ச் செல்ல வேணுமென்று நினைந்திட்டே னென்றவாறு.
பிரணய ரோஷம் உடன் பேசினார் கீழ்
ஆகில் வந்தால் அன்றோ செய்யக் கடவது
வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார்
விபவாதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார்
முனியே நான்முகனே -திருவாய் மொழி போலே யாயிற்று இப்பாசுரம்
அன்று ஆயர் குல மகளுக்கு அரையன் தன்னை –
நப்பின்னை பிராட்டிக்கு உதவினபடி
அரையன் -அரசன்
நப்பின்னை துயரம் தொலைத்த பிரபு
அலை கடல் கடைந்த அம்மான் தன்னை
கடலை கடைந்ததும் கடலில் அணை கட்டினதும் பிராட்டிக்காக
பிராட்டி பெற கடைந்து தனிமை தீர்க்க அணை கட்டி
மற்ற பலங்கள் ஆநு ஷங்கிகம்
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்றார் இவர் தாமே
குன்றாத வலி அரக்கர் -இத்யாதி
இராவணன் தொலையும்படி ஸ்ரீ சாரங்க வில்லாலே அம்புகளை தொடுத்து வெற்றி பெற்ற வீறுடைமை
குலம் களைந்து என்றது ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இஷ்வாகு குலத்தில் புகுந்ததால்
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் மா சதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -என்கிறபடியே
அனுகூலர் ஆனால் சம்பந்தி சம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமா போலே
பிரதி கூல சம்பந்தத்தால் ராஷச குலம் அடங்கலும் பாழ்பட்டன
சுக்ரீவன் சம்பந்தத்தால் வானர ஜாதி அடங்கலும் வாழ்ச்சி பெற்றன
குன்று எடுத்த தோளினானை
ஆயருக்கு நேர்ந்த ஆபத்தை போக்கினது பெருமையோ
எனது ஆபத்தை போக்க வேண்டாவோ
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை -தண் குடந்தை கிடந்த மாலை –
பிற் பட்டார்களுக்கும் அனுக்ரஹிக்கைக்காக அன்றோ
திரு விண்ணகரில் நித்ய வாசம் பண்ணுகிறது
திரு விண்ணகரிலே நின்றான்
திருக் குடந்தையிலே கிடந்தான்
நின்றால் புறப்படுவான் என்று நினைக்க தோன்றும்
கிடந்தால் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது போகோம்-என்று கிடக்கிற கிடையாகுமே
மாலை –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
தானும் வ்யாஹமோசாலியாய்
அடியார்களையும் வ்யாஹமோசாலியாய்-ஆக்குமவன்
நெடியாய் –
இப்படிப் பட்டவன் எனக்கு எட்டாமல் இருக்கிறானே என்று காட்டுகிறாள்
அடி நாயேன் நினைந்திட்டேனே –
அவனுடைய மேன்மைக்கு எல்லை இல்லை போலே
என்னுடைய தாழ்வுக்கு எல்லை இல்லை
திறந்த வாசல் எல்லாம் நுழைந்து திரியும் ஜந்து போலே மிகவும் தண்ணியன்
இப்படிப் பட்ட நான் அந்த நெடியானை நினைந்திட்டேனே
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்
எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர்
என்றால் போலே முகவும் நீசனான அடியேனுக்கும்
விதி வசத்தாலே நேர்ந்த இக் கல்வி
நித்தியமாய் செல்ல வேணும் என்று நினைந்திட்டேன் -என்றவாறு –
————————————————————
இத்திவ்வியப் பிரபந்தம் கற்பார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது.
“பன்னிய நூல் தமிழ் மாலைவல்லார் தொல்லைப் பழவினையை முதலரிய வல்லார் தாமே“ என்று
பயனுரைக்கும் முகத்தால்
அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும்.
மின்னுமா மழைதவழும் மேக வண்ணா விண்ணவர்தம் பெருமானே அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னுமா மணிமாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல்
தமிழ்மாலை வல்லார் தொல்லைப் பழவி னையை முதலரிய வல்லர் தாமே.
பதவுரை
முனிவரோடு அமரர் ஏத்த-முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்ரம் பண்ண அன்னம் ஆய் ஹம்ஸ ரூபியாய் அவதரித்து
அருமறையை-அருமையான வேதங்களை
வெளிப்படுத்த-பிரகாசிப்பித்த
அம்மான் தன்னை-ஸர்வேச்வரன் விஷயமாக,
மன்னு மாமாணி மாடம்மங்கை வேந்தன்-சாச்வதமான சிறந்த மணிமாடங்களை யுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரும்
மானம் வேல்-பெருமை தங்கிய வேற்படையை யுடைவரும்
கலியன்–திருமங்கையாழ்வார்
மின்னும் மா மழை தவழும் மேகம் வண்ணா-‘மின்னலோடுகூடியும் மிகவும் குளிர்ந்தும் தவழ்ந்து வருகின்ற மேகம் போன்ற வடிவையுடையவனே!
விண்ணவர் தம் பெருமானே–தேவாதி தேவனே!
அருளாய்-அருள்புரியவேணும்
என்று சொன்ன–என்று பிரார்த்தித்து அருளிச் செய்த
பன்னிய -மிகவும் பரம்பின
தமிழ் நூல்-தமிழ் சாஸ்த்ரமாயிராநின்ற
மாலை-இச் சொல் மாலையை
வல்லார் தாம்–ஓத வல்லவர்கள்
தொல்லை–அநாதியான
பழ வினையை–முன்னே வினைகளை
முதல்-வேரோடே
அரிய வல்லார்–களைந்தொழிக்க வல்லவராவர்.
மின்னுமா மழைதவழும் மேகவண்ணா =
மின்னி முழங்கி வில்லிட்டு அழகியதாய் வர்ஷிப்பதொரு காளமேகம் போன்ற வடிவுபடைத்த பெருமானே!
இங்கே வியாக்கியான வாக்கியம் காண்மின்; –
அடிநாயேன் நினைந்திட்டேனே என்ற இவருடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு இவருடைய தாபமெல்லாம் நீங்கும்படியாகக்
குளிர நோக்கிக் கொண்டு காளமேக நிபச்யாமமான வடிவோடே வந்து முகங்காட்டின படியைச் சொல்லுகிறது.“
விண்ணவர்தம் பெருமானே! அருளாய் என்று =
கீழ்ச்சொன்ன மின்னுமா மழைதவழும் மேகவண்ண வடிவை ஓவாத ஊணாக உண்டு களிக்கப்பெற்ற
அயர்வறுமமரர்களுக்கு அதிபதியே!,
கடலிலே வர்ஷிப்பது போலவும் மீனுக்குத் தண்ணீர் வார்ப்பது போலவும் அவர்களுக்கு உன்னைக் கொடுப்பது ஓரேற்றமோ?
(அருளாய்)
அவர்கள் உன்னை நித்யாநுபவம் பண்ணுமா போலே
நானும் உன்னை நித்யாநுபவம் பண்ணும்படி கிருபை பண்ண வேணும்
(என்று மன்னுமானமணி மாடமங்கை வேந்தன் மானவேற் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ மாலை)
மங்கை நாட்டுக்கு அரசராய், வேல் பிடித்துப் பகைவெல்லுந் தொழிலிலே. ஊன்றிக்கிடந்தவர்
“அரசமர்ந்தானடி சூடுமரசையல்லால் அரவாகவெண்ணேன் மற்றரசுதானே“ என்றாற்போன்ற
அத்யவஸாயத்தின் கனத்தாலே இங்ஙனே பேசினாராயிற்று
எம்பெருமானும் அவனடியார்களும் உவந்து முடிமேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது.
ஆக இப்படிப்பட்ட திவ்ய ப்ரபந்தத்தை ஓதவல்லவர்கள்
அநாதியான ஸம்ஸாரத்தை யடியறுத்து
நித்ய கைங்கரியம் பெற்று வாழப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.
நிகமத்தில் –
இப்பிரபந்தம் கற்பார்க்கு பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று
பயன் உரைக்கும் முகத்தால்
அப்படிப் பெற்ற பேற்றை தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிக்கப் பட்டதாகும்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
அடி நாயேன் நினைந்திட்டேன் -என்ற
இவருடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு
இவருடைய தாபம் எல்லாம் நீங்கும் படியாக
குளிர நோக்கிக் கொண்டு
காள மேக நிபாஸ்யமான வடிவோடு
வந்து முகம் காட்டின படியை சொல்கிறது
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
கீழ்ச் சொன்ன மின்னு மா மழை தவழும் மேக வண்ண
வடிவை ஓவாத ஊணாக உண்டு கழிக்கப் பெற்ற
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியே
கடலிலே வர்ஷிப்பது போலேயும்
மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலேயும்
அவர்களுக்கு உன்னைக் கொடுப்பது ஓர் ஏற்றமோ
அருளாய் –
அவர்கள் உன்னை நித்ய அனுபவம் பண்ணுமா போலே
நானும் உன்னை நித்ய அனுபவம் பண்ணும் படி
கிருபை பண்ண வேணும்
என்று மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன்
கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ் மாலை
மங்கை நாட்டுக்கு அரசராய்
வேல் பிடித்து பகை வெல்லும் தொழிலிலே ஊன்றிக் கிடந்தவர்
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்று அரசு தானே -என்றால் போன்ற
அத்யாவசாயத்தின் கனத்தாலே இங்கனே பேசிற்றார் ஆயிற்று –
எம்பெருமானும் அவன் அடியார்களும் உகந்து முடி மேல் கொள்ளும் பிரபந்தம் ஆகையால் மாலை -எனப்பட்டது –
ஆக
இப்படிப் பட்ட திவ்ய பிரபந்தத்தை ஓத வல்லவர்கள்
அநாதியான சம்சாரத்தை அடி அறுத்து
நித்ய கைங்கர்யம் பெற்று
வாழப் பெறுவார் என்று
பயன் உரைத்து தலைக் கட்டுகிறார்-
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.