ஸ்ரீ ஸப்த காதை –தனியன் /அவதாரிகை–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ ஸப்த காதை –தனியன்

வாழி நலம் திகழு நாரண நாதன் அருள்
வாழி அவன் அமுத வாய் மொழிகள் -வாழியே
ஏறு திருவுடையான் எந்தை வுலகாரியன் சொல்
தேறு திருவுடையான் சீர்—

————————————————————-

அவதாரிகை-

உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிரான ஸ்ரீ திருவரங்கச் செல்வனாருக்கும் கூட
ஜ்ஞாநீத்வாத் மைவமேமதம் -என்கிற திரு முகப்படி
மிகவும் தாரகராய்க் கொண்டு-அனைவரும் உஜ்ஜீவிக்கும்படி
ஸ்ரீ அத்திகிரி அருளாளன் அனுமதி முன்னாக ப்ரபந்தீ கரித்து அருளின
ஸ்ரீ வசன பூஷண-பிரமுக நிகில ரஹஸ்ய கிரந்த முகேன
சரம
பிரமாண
பிரமேய
ப்ரமாத்ரு
வைபவங்களை
ஸ பிரகாரமாகவும் பிரகாசிப்பித்தது அருளின
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து-

அவதார விசேஷமான அவருடைய விசேஷ கடாஷத்தாலே
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலையான ஸ்ரீ திருவாய் மொழியையும்
அதுக்கு அங்க உபாங்களான இரும் தமிழ் நூற் புலவர் பனுவல்களையும் மற்ற எண்மர் நன் மாலைகளையும்
ஸ்ரீ பிள்ளான் முதலானவர் செய்து அருளிய தத் தத் வ்யாக்யானங்களையும்-அவற்றின் தாத்பர்யங்களுக்கும்
சப்த ரச
அர்த்த ரச
பாவ ரசங்களுக்கும்
ஸ்வாபதேசாதிகளுக்கும்
நேர் பிரகாசங்களான விசேஷ ரஹஸ்யங்களையும்
சார்த்தமாக சம்சய விபர்யம் அற-அடைவே அதிகரிக்கப் பெற்று கிருத்தார்த்தராய் –

ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசரைப் போலேயும்
ஸ்ரீ நம்பிள்ளைக்கு ஸ்ரீ ஏறு திருவுடையான் தாசரைப் போலேயும்
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டருக்கு ஸ்ரீ பிள்ளை வான மா மலை தாசரைப் போலேயும் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாருக்கு
ஆத்ம சமராயும்
பிராண சமராயும்
திருஷ்டி சமராயும்
பாஹூ சமராயும்
ஆபரண சமராயும்
ஸ்ரீ பாத சமராயும்
ஸ்ரீ பாத ரேகா சமராயும்
ஸ்ரீ பாதச் சாயா சமராயும்
ஸ்ரீ பாதுகா சமராயும்
ஸ்ரீ பாத உபாதான சமராயும் -எழுந்து அருளி இருக்குமவராய்-

ப்ரம்ஸ சம்பாவனை இல்லாத உத்க்ருஷ்ட ஜன்மத்திலே அவதரிக்கப் பெறுகையாலே-சஹஜ தாஸ்யத்தை யுடையராய் –
தீதற்ற ஞானத் திருவாய் மொழிப் பிள்ளை -என்னும்படி சமஸ்த சாஸ்திர பாரங்கதராயும்
சர்வஞ்ஞராயும் பெரு மதிப்பராயும் போருகிற ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையும் கூட
தம்மருகே சென்று சரமார்த்த விசேஷங்களைக் கேட்டுப் போரும்படி மிகவும் சர்வஞ்ஞராய்
வாழு நலம் திகழு நாரண நாதன்-என்று
யாக அனுயாக உத்தர வீதிகளிலே காயான்ன ஸ்தல ஸூத்தி பண்ணின
ஸூத்த வ்ருத்த ஆசாரம் அறியும் பெரியோர்களாலே சர்வ காலமும் போற்றப் படுமவராய் –

ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளைலோகாச்சார்யர் தம்முடைய சரம தசையிலே
சரீர அவசான காலத்து அளவும் நீர் ஸ்ரீ திருவனந்த புரத்தே இரும் என்று நியமித்து அருளுகையாலே
அவர் நியமித்து அருளின படியே அங்கே சென்று –
நடமினோ நமர்கள் உள்ளீர் -என்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய நியமனத்தாலே
அந்தர் பூதரானவர்களில் தாம் பிரதானர் என்னும் வாசி தோற்ற
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் பணிந்து
த்வார த்ரயத்தாலும்
முக -நாபி -பாதங்களை –
முகமாகவும் -ஸ நாபியாகவும் -அடிப்பாடாகவும் -அடைவே அனுபவித்து
வாசம் கமழும் சோலையான புறச் சோலைக்கு விவிக்தமாய் இருப்பதொரு பிரதேச விசேஷத்தில் சென்று-

குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்றும்
விக்ரஹா லோக ந பர -என்றும்
ஸ்ரீ லோகார்யா முகாரவிந்தம் அகில ஸ்ருத்யர்த்த கோசம் சதாம்
தாம் கோஷ்டீஞ்ச ததேக லீன மனசா சஞ் சிந்தயந்தம் சதா -என்றும் சொல்லுகிறபடியே

தேமருவும் செங்கமலத் திருத் தாள்களும்
திகழும் வான் பட்டாடை பதிந்த திரு மருங்கும்
முப்புரி நூலின் தாம மணி வட மமர்ந்த திருமார்பும்
முன்னவர் தந்தருள மொழிகள் நிறைந்த திரு முறுவலும்
கருணை பொழிந்திடும் இணைக் கண்களும்
கன நல சிகை முடியும்
திங்கள் போலும் திரி நுதலும்
பொன் தோளும்
மங்கலமான மலர் மார்பும்
மணி வடமும்
மருங்குதனில் பரியட்டமும்
கமலப் பத யுகமும்
அழகிய பத்மாசனமும்
ஈராறு திரு நாமம் அணிந்த எழிலும்
இனித் திருப்போடு எழில் ஞான முத்ரையும்
தாமுமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை

ஸ்ரீ பாதாதி கேசாந்தமாகவும்
ஸ்ரீ கேசாதி பாதாந்தகமாகவும்
உருவு வெளிப் பாட்டாலே
விசத
விசத தர
விசத தமமாக
த்யானித்துக் கொண்டு –

வார்த்தோஞ்ச வ்ருத்யாபி யதீய கோஷ்ட்யாம் கோஷ்ட்யாந்தரானாம் பிரதமா பவந்தி –என்கிற
வேறுபாட்டை யுடைத்தாய் இருந்துள்ள
ஸ்ரீ நம்பிள்ளை திரு ஓலக்கத்துக்குப் போலியான அவருடைய திரு ஓலக்க வாழ்வை
பாவோ நான்யத்ர கச்சதி -என்னும்படி
அஸ்மத் இதம் அந்ய பாவராய் த்யானித்துக் கொண்டு
தம் திரு மேனியில் சிலந்தி நூல் இழைக்கும் படியாகவும் –
நைவதம்சான் இத்யாதிப்படியே
கடிந்ததும் ஊர்ந்ததும் தெரியாதபடி
நாளாறு நாள் சமாதியில் எழுந்து அருளி இருக்குமவராய்-

வாழி ஏறு திருவுடையான் எந்தை வுலகாரியன் சொல் தேறு திரு வுடையான் சீர் -என்கிறபடியே
ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய திவ்ய ஸூக்திகளாய் இருந்துள்ள
ஸ்ரீ வசன பூஷணாத்ய அகில ரஹச்ய தாத்பர்ய சார தமார்த்த விசேஷங்களையே
சர்வ காலமும் அனுபவித்துக் கொண்டு போருமவராய்
பாருலகைப் பொன்னுலகாகப் பார்க்கவும் பெற்றோம் -என்று தாமே பேசும்படி
சம்சார பரமபத விபாகம் அற இரண்டையும் ஒரு போகியாக்கிக் கொண்டு போருகிற
ஸ்ரீ விளாஞ்சோலை பிள்ளை –

ஸ்ரீ வகுள பூஷண சாஸ்திர சாரமாய்
ஸ்ரீ சரம ரஹச்யமாய் இருந்துள்ள ஸ்ரீ வசன பூஷண சாஸ்த்ரத்திலே
பரக்கச் சொன்ன விசேஷங்களை எல்லாம் தம்முடைய பரம கிருபையாலே
அனைவருக்கும் ஸூக்ரஹமாம்படி சங்க்ரஹித்து அருளுவதாகத் திரு உள்ளம் பற்றி
ஸ்ரீ கீதைக்கு ஸ்ரீ சரம ஸ்லோகம் பிரதானமாய் இருக்கிறாப் போலே
சரம பிரமாணம் பிரமேய பிரமாதாக்களை சரமமாக
பிரதி பாதிக்கிற
சரம பிரகரணம் ஸ்ரீ வசன பூஷணதுக்காக பிரதானமாய் இருக்கையாலே
இதில் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்களையும்
மற்றைப் பிரகரணங்களில் தத் உபயோகிதயா பரக்கப் பிரதிபாதிக்கிற
அர்த்த விசேஷங்களையும் பரப்பற
ஏழு பாட்டாலே
சங்க்ரஹித்து
வாழி அவன் வாய் அமுத மொழிகள் -என்னும்படி
சர்வ உபபோக்யமாய் இருந்துள்ள
ஸ்ரீ ஸப்த காதை -என்கிற பிரபந்த முகத்தாலே அருளிச் செய்கிறார் –

அது எங்கனே என்னில் –
வேதார்த்தம் அறுதி இடுவது -என்று தொடங்கி-
பிரபத்தி யுபதேசம் பண்ணிற்று இவளுக்காக -என்னும் அளவாக
புருஷார்த்த பிரகரணத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அஹந்தா ப்ரஹ்மணச் தஸ்ய -இத்யாதி ந்யாயத்தாலே
அம்பொன் அரங்கர்க்கும் -என்கிற இடத்தில் தாத்பர்ய விதியாக ஸூசிப்பிக்கையாலும் –

பிரபத்திக்கு -என்று தொடங்கி -ஏகாந்தீவ்ய பதேஷ்டவ்ய -என்னும் அளவாக உபாய பிரகரணத்தில்
சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
உம்பர் திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி -என்கிற இடத்தில் ஸூசிப்பிக்கையாலும் –

உபாயத்துக்கு -என்று தொடங்கி -உபேய விரோதிகளாய் இருக்கும் -என்னும் அளவாக
அதிகாரி நிஷ்ட க்ரம பிரகரணத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அஞ்சு பொருளும் பார்த்த குருவின் அளவில் தன்னை இறையை -இத்யாதிகளால் ஸூசிப்பிக்கையாலும்-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-என்று தொடங்கி
உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் -என்னும் அளவாக
ஆச்சார்ய அனுவர்த்தன பிரகரணத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
என்பக்கல் ஓதினார் -இத்யாதியாலே ஸூசிப்பிக்கையாலும்

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -என்று தொடங்கி
நிவர்தக ஞானம் அபய ஹேது -என்னும் அளவாக –
பகவத் நிர்ஹேதுக கிருபா பிரபாவ பிரகரணத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அழுக்கு என்று இவை அறிந்தேன் -என்கிற பாட்டில் ஸூசிப்பிக்கையாலும்

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்று தொடங்கி
அநந்தரம் பல பர்யந்தமாக்கும் -என்னும் அளவாக
சரம பிரகரணத்தில் சொல்லும் அர்த்த விசேஷங்களை
முதல் பாட்டு தொடங்கி தீங்கு ஏதும் இல்லா -என்னும் அளவாக சங்க்ரஹித்து
அடைவே
அபிமான வ்ருத்தியாலும்
அந்வய முகத்தாலும்
வ்யதிரேக முகத்தாலும்
பிரகாசிப்பித்தது அருளுகையாலும்
இப்பிரபந்தம் பரம ரஹச்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தங்களுக்கு சங்க்ரஹமாம்-என்னக் குறை இல்லை இறே –

பிரதம பர்வதத்தை
செக்கர் மா முகில் -என்று தொடங்கி –
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ திரு வாசிரியத்திலே பிரகாசிப்பித்தது அருளினால் போலே
இவரும் சரம பர்வதத்தை
அம் பொன் அரங்கர்க்கும் -என்று தொடங்கி
இப்பிரபந்தம் தன்னிலே ஏழு பாட்டாலே பிரகாசிப்ப்பித்து அருளுகிறார்

இன்னும் அதிலும் இதுக்கும் நெடு வாசி யுண்டு –
அது எங்கனே என்னில்
பாத பிரசாதி நியதி இல்லாத ஆசாரியப்பாவாவாய்க் கொண்டு நடந்து
சம்சார பந்தஸ்திதி மோஷ ஹேது –என்றும்
ஸித்திர் பவதி வாநேதி சம்ஸ யோச்யுத சேவினாம் -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்
மங்க ஒட்டு நின் மா மாயை -என்றும்
சொல்லுகிறபடியே பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான பிரதம பர்வத்தைப் பிரதி பாதிக்கும் அது –

பாத பிரசாதி நியதியை உடைத்தான வெண்பாவாய்க் கொண்டு நடந்து
தம்ஸ பாரம் தர்சயதி ஆச்சார்யா ஸ்துதேக திம் வக்தா -என்றும்
ந சம்சயோ ஸ்திதி தத் பக்த பரிசர்யார தாத்மனாம் -என்றும்
நீதியால் வந்து இப்பார்க்கு உண்டு உழியாவான் -என்றும்
மோஷைக ஹேதுவான சரம பர்வதத்தை சதிராக பிரதிபாதிக்கும் இது-

அன்றிக்கே
ஸ்ரீ ஆண்டாளுடைய திவ்ய ஸூக்தி பிரமாணகமாய்
த்ரயோதச வாக்யார்த்தமாய் இருந்துள்ள வாக்ய குரு பரம்பரையிலே
துரீய வாக்ய சங்க்ரஹமாய்
சப்தாஷரியான பிரதம வாக்யத்தில் பிரதம அஷரத்தை
அம் பொன் அரங்கர்க்கும் -என்று தொடங்கி -முதல் அடியில் முந்துற முன்னம் முதல் பாட்டும்
த்விதீயாஷரத்தை -அஞ்சு பொருளும் அளித்தவன் -என்கிற இடத்தில் இரண்டாம் பாட்டும்
த்ருதீயாஷரத்தை பார்த்த குரு என்கிற இடத்தில் நேராக மூன்றாம் பாட்டும்
துரீயாஷரத்தை ஒரு மந்த்ரத்தில் -என்கிற இடத்தில் நாலாம் பாட்டும்
பஞ்சமாஷரத்தை -என்பக்கல் ஓதினார் -என்கிற இடத்தில் அஞ்சாம் பாட்டும்
ஷஷ்டாஷரத்தை அம் பொன் அரங்கர் என்கிற இடத்தில் நேரே ஆறாம் பாட்டும்
சரமாஷரத்தை -சேருவரே அந்தாமம் தான் – என்கிற இடத்தில் சரம தமமாக ஏழாம் பாட்டும்
அடைவே உட்கொண்டு நடந்த
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரமாய் அவதரித்ததோபாதி
இப்பிரபந்தம் ஏழு பாட்டாய் அவதரித்தது என்னவுமாம் –

ஸ்ரீ மதுர கவிகளும்
ஸ்ரீ வடுக நம்பியும்
சரம பர்வங்களை உக்தி அனுஷ்டானங்களாலே
அடைவே வ்யக்தம் ஆக்கினாப் போலே காணும்
இவரும் இப்புடைகளிலே சரம பர்வதத்தை உக்தி அனுஷ்டானங்களாலே வ்யக்தம் ஆக்கி அருளின படி-

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விளாஞ்சோலை பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: