ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -29-32-பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

இனி
தம்முடைய பிராப்தி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ பாஷ்யாதிகளான ஸ்ரீ ஸூக்திகளாலே பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளின
விஜய பரம்பரைகளைச் சொல்லி அத்தால் யுண்டான வீர ஸ்ரீக்கு மங்களா சாசனம்
பண்ணி அருளுகிறார் –

சாறுவாக மதம் நீறு செய்து சமணச் செடிக் கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியர் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்து அறமிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகி மாயவாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே—-29–

பிரத்யஷம் ஏகம் சார்வாக
குருமதம் -பிரபாக மதம்
குமாரிலன் மதம்-பர்ட்டமதம்

ப்ரத்யஷம் ஏகம் சார்வாக -என்கிற சார்வாக மதத்தை ஸ்வ ஸூ க்திகளாகிற அக்னி ஜ்வாலையாலே
பச்ம சாத்தாம் படி பண்ணி –
சமணர் ஆகிற செடிக்கு அப்படியே அக்னி ப்ரேஷேபத்தை பண்ணி
சாக்யர் ஆகிற சமுத்திரத்தை ஸ்வ ஸூக்தி கிரணங்களாலே சோஷிப்பித்து

அதிகமாய் இருப்பதான சாங்க்ய கிரியை வாக் வஜ்ரத்தாலே சேதித்திட்டு
பிரதிகோடிகளாய் வாதம் பண்ணுகிற காணாத வாதிகளுடைய வாக்கை ஸ்வ வாக்காலே பக்நமாம் படி பண்ணி –

மிகவும் உத்ததரராய் மேல் வந்த பாசுபதர் பாணாசுர யுத்தத்திலே ருத்ரன் சபரிகரமாய் ஓடினால் போலே
தத் பக்தர்களான இவர்களும் சீறு பாறாக சிதறி யோடும் பிரகாரமாக வாதம் பண்ணி அருளினவராய்
ஏதேனும் ஒன்றை ஜல்ப்பியா நிற்பதாய் பெருத்து இருப்பதான
பிரபாகர மதத்தோடு-யுச்சாரமாய் இருப்பதான பாட்டமதம் என்கிற அவற்றின் மேலே
க்ரூரமாய் இருப்பதான தர்க்க சரத்தை பிரயோகித்த பின்பு

எங்கும் பரந்து இருக்கையாலே
மயிகள் இருந்த இடத்தில் சென்று கிட்டி-வாதில் வென்றான் நம் இராமானுசன் என்கிறபடியே அவர்களை ஜெயித்திட்டு
மிகைத்து வாதத்திலே வருகிற பாஸ்கரன் உடைய மதமாகிற அம்மதத்தை ஒருவரும் நடவாதபடி நிரோதித்து
கழிய மிக்கு இருந்த யாதவ மதத்தை மாண்டு போம்படி பண்ணின
ஸ்ரீ எம்பெருமானார் உடைய
இதர தர்சன நிரசனத்தாலே வந்த மகா வீரம்நாள் தோறும் அபி விருத்தமாய் வாழ வேணும் –

கொடி எறிந்து போய் -என்று
அவ்வளவிலே நில்லாதே கை கழிந்து இருக்கிற பாரிப்பே யாகவுமாம்-

வந்த வாதியர் -என்றும் பாட பேதம் சொல்வர் –

—————————————————–

இனி
இதர நிரசனம் பண்ணி அருளின ஸ்ரமம் தீர ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ திருவாய் மொழி
முதலான பகவத் விஷயங்களை வ்யாக்யாநித்துக் கொண்டு எழுந்து அருளிய இருப்பு தமக்கு
ஆகர்ஷகமாய் இருக்கையாலே ஸ்ரீ பாதாதி கேசமாக அனுபவித்து இவை எல்லாம் தனித் தனியே
நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி
தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே–30-

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
கல்யாண குணங்களாலே பரிபூரணமான ஸ்ரீ எம்பெருமானார் உடைய பரம போக்யமாய்
நமக்கு சிரோ பூஷணமாய் இருக்கிற திருவடித் தாமரைகள் நித்ய மங்களமாய் இருக்க வேணும்

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி –
கடிப் பிரதேசத்திலே தரித்த ஆதித்யனை பரிவேஷித்தால் போலே மிக்க சிவப்பை யுடைத்தான
காஷாய வஸ்திரம் நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி –
அழகால் நிறைந்த சிவந்து இருப்பதான திவ்ய மங்கள விக்ரஹம் சர்வ காலத்திலும்
நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

இலங்கிய முந்நூல் வாழி –
வைதிகோத்தமர் என்னுமத்தை நிறம் பெறுதுமதாய்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படார்ந்தால் போலே
திரு மார்பிலே பிரகாசிக்கிற ப்ரஹ்ம சூத்ரம் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

இணைத் தோள்கள் வாழி –
பொற் கற்பகத்தின் சாகைகளாய் அதற்கு மேலே மோஷ பிரதான தீஷிதங்களாய்
சம்சார சாகரத்திலே மூழ்கி நோவு படுகிறவர்களை உத்தரிக்கிற சக்தியை யுடைத்தாய்
இப்படிக் கொடுக்கவும் எடுக்கவும் மாம் படியான குணத்தாலே பணைத்து நெடிதாய் இருப்பனவாய்
அதுக்கு மேலே வகுள துளசீ நளி நாஷ மாலா அலங்க்ருதமாய் இருக்கிற
பாஹு யுகங்கள் ஆனவை நித்ய மங்களமாய் இருக்க வேணும்

சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி –
அனுபாவ்யமாய்-பகவத் சாஷாத் காரத்தாலும்-ஆஸ்ரித தர்சனத்தில் ஹர்ஷத்தாலும்
அநாஸ்ரிதர் தர்சனத்தில் அநாயசத்தாலும்-அசங்குசிதமாய் -நிர்மலமாய் சோபாவஹமாய்
இருக்கிற திரு முக ஜ்யோதிஸ் ஆனது நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும் –

தூ முறுவல் வாழி
ஆஸ்ரித ரஷணத்தால் உண்டான ஆனந்தத்தாலும்-பகவத் அனுபவ பிரகர்ஷத்தால் உண்டான ஆனந்தத்தாலும்
பூ அலர்ந்தால் போலே பரிதியைப் பிரகாசிக்கிற
பரிசுத்தமான சிறு நகையும் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

துணை மலர்க் கண்கள் வாழி –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீயையும் தாம் திருத்த திருத்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும் எப்போதும் கண்டு களிக்குமதாய்
காருண்ய அம்ருத பிரசரண சீலமாய்
ஆஸ்ரிதரை அமலங்களாக விழிக்கும் என்னும்படி கடாஷிக்கிற
த்வந்த்வ அரவிந்த சுந்தரமான திருக் கண்கள் அழகு மாறாமல் நித்யமாக இருக்க வேணும்

ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
கீழ்ச் சொன்ன எல்லா வற்றையும் நிறம் பெருத்துவனவாய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீக்கு வர்த்தகமாய் இருப்பதாய்
பொன் மலையின் பரிசரம் எங்கும் வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் போலே
சிவந்த திருமேனியில் வெள்ளியதான த்வாதச ஊர்த்த்வ புண்ட்ரத்தால் யுண்டான
சௌந்தர்யம் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

இனி திருப்போடு எழில் ஞான முத்தரை வாழியே
பத்மாஸ்தனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதார்த்த பிரகாசகமாய் இருக்கிற
பரதத்வ போத முத்தரை யானது நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

—–

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி-வாழியே-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப ரூப குணங்களோடு வாசி அற எல்லாவற்றாலும் பரி பூரணராய்
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானாருடைய
அமரர் சென்னிப் பூ -என்னுமா போலே

இராமானுசன் அடிப் பூ என்று சொல்லப் படுமதாய்-அத ஏவ பரம போக்யமாய்
நமக்கு சிரோ பூஷணமாய் இருக்கிற திருவடிப் போதுகள்
போது செய்யாமல் ஏவம் வித ஆகாரத்தோடு நித்தியமாய் செல்ல வேணும் —

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி –
அதுக்கு மேலே ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் யுண்டாகையாலே –
சீதா காஷாய வாசி நீ-என்னும்படி -பாரதந்த்ர்ய அனந்யார்ஹத்வ ஸூசகமாய்
திருவரை பூத்தால் போலே திருவரைக்கு அலங்காராவஹமாய்
ஆதித்யனைப் பரிவேஷித்தால் போலே திருவரையில் சூழச் சாற்றி
மிக்க சிவப்பை உடைத்தான திருப் பரி வட்டமும் நித்யமாய்ச் செல்ல வேணும்

ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர்க்கு ஸூ பாஸ்ரயமாய் சௌந்தர் யாதிகளாலே மிக்கு
புஷ்பஹாச ஸூ குமாரமாய்
ரூபமே வாஸ்யை தன மஹிமான மா சஷ்டே-என்கிறபடியே
பரமாத்மராகம் புறம்பு ஒசிந்தால் போலே சிவந்து இருப்பதான திவ்ய மங்கள விக்ரஹமும்
சர்வ காலத்திலும் -நித்யம் நித்யா க்ருதிதரம் -என்னும்படி நித்ய மங்கள மாகச் செல்ல வேணும் –

இலங்கிய முந்நூல் வாழி –
அதுக்கு மேலே வைதிக உத்தமர் என்னுமத்தை நிறம் பெறுத்துமதாய்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படர்ந்தால் போலே
திருமார்பிலே பிரகாசிக்குமதாய்
ப்ரஹ்ம ஸூத்ர வ்யாக்ருத்வத் யோதகமாய் இருப்பதான
ப்ரஹ்ம ஸூத்ரப் புகரோடே நித்தியமாய் இருக்க வேணும் –

இணைத் தோள்கள் வாழி –
அதுக்கு அநந்தரம்-இரண்டு இடத்திலும் அளவாய்
பாஹூக் சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான -என்கிறபடியே
சர்வருக்கும் விஸ்ராந்த சாகியான-பொற் கற்பகத்தின் யுடைய சாகைகளாய்

அத ஏவ
மோஷ பிரதான தீஷிதங்களாய்-விசேஷித்து நிமக்ன உத்தரண சக்தியை யுடைத்தாய்
இப்படி கொடுக்கவும் எடுக்கவும் மாம்படியான குணத்தாலே-பணைத்து-நெடிதாய் இருப்பவனவைகளாய்
தோளார் சுடர்த் திகிரி சங்குடைச் சுந்தரன் -ஞான சாரம் -என்னும்படி
தோர்மூலோல்லாஸி சக்ராம்பு ஜங்களை யுடைத்தாய்
ஆகர்ஷகமான ஆழ்வார்களாலே அங்கிதமாய் இருப்பவனவைகளாய்

அதுக்கு மேலே
வகுள துளசீ நளி நாஷ மாலா அலங்க்ருதமாய் இருக்கிற யுகள பாஹூக்கள் ஆனவை
உக்தமான குணங்களோடு நித்யமாக செல்ல வேணும்-

சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி –
அதுக்கு மேலே ப்ரஹ்ம வித சௌம்யதே முகம்பாதி -என்றும்
முகச் சோதி மலர்ந்ததுவோ -என்றும் சொல்லுகிறபடி அனுபாவ்யமாய்
பகவத் சாஷாத் காரத்தாலும்-ஆஸ்ரித தர்சனத்தில் ஹர்ஷத்தாலும்-அநாஸ்ரித்த தர்சனத்தில், அநாயசத்தாலும்
அசங்குசிதமாய்-நிர்மலமாய்-சோபாவஹமாய் இருக்கிற முக ஜ்யோதிஸ் ஸூம் நித்தியமாய் செல்ல வேணும்-

தூ முறுவல் வாழி –
அதுக்கு மேலே-ஸ விலாச ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம் -என்னும்படி ஒரு திரு முகமாய் சேர்ந்து
அந்த முக பத்மத்தினுடைய விகாசம் என்னும்படியாய்-
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து -என்கிறபடியே
ஆஸ்ரித ரஷணத்தால் யுண்டான ஆனந்தத்தாலும்
பகவத் அனுபவ பிரகர்ஷ த்தால் யுண்டான ஆனந்தத்தாலும்
பூ அலர்ந்தால் போலே பரிதியைப் பிரகாசிப்பிக்கிற
சாருஹாசத்தால் யுண்டான சந்த்ரிகையைப் பிரவஹிக்கிற ஸூ ஸ்மிதமும் இப்படியே
என்றும் உளதாய் இருக்க வேணும் –

துணை மலர்க் கண்கள் வாழி –
அதுக்கு மேலே ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்-தாம் திருத்த திருத்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும்
எப்போதும் கண்டு களிக்குமதாய்-கருணாம்ருத ப்ரசரண சீலமாய்
ஆஸ்ரிதரை அமலங்களாக விழிக்கும் என்னும்படி கடாஷிக்கிற த்வந்த அரவிந்த சுந்தரமான திருக் கண்கள்
செவ்வி மாறாமல் நித்யமாகச் செல்ல வேணும் —

ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி –
கீழே உக்தங்களான இவை எல்லா வற்றையும் நிறம் பெறுத்துமவையாய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்கு வர்த்தகமாய் இருப்பதாய்-பொன் மலையின் பரிசரம் எங்கும்
வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் போலே சிவந்த திரு மேனியில் வெள்ளியதாய்
ஊர்த்த்வ தாஸ்ரயண ஸூசித சக்தியை யுடைத்தான -த்வாதச ஊர்த்த்வ புண்டர தாரணத்தால் யுண்டான
சௌந்தர்யம் நித்யமாக செல்ல வேணும்-

இனி திருப் போடு எழில் ஞான முத்தரை –
கீழே உக்தமான எல்லாவற்றுக்கும் அதிஷ்டையாய் இருந்த அந்த அதிஷ்டான சக்தியாலே
குத்ருஷ்டிகளாகிற குறும்பர் அறும் படியாகவும்
ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாயும்-கேவல பகவத் இச்சையாலே
வையம் மன்னி வீற்று இருந்து -என்னும்படி வ்யாவருத்தி தோற்ற
ஹம்ச சமூஹமத்யே ராஜ ஹம்சமானது சாசமாக இருக்குமா போலே
பரம ஹம்சரான தாமும்-சம்சேவிதா -இத்யாதிப் படியே ஸ்ரீ ராமாநுஜார்ய வசகராய்
ஸ்ரீ இராமானுஜனைத் தொழும் பெரியோராய் இருக்கிற முதலிகள் எல்லாரும் சேவித்து இருக்க
இவர்கள் நடுவே

பத்மாசன உபவிஷ்டம் பாத த்வபோத முத்ரம் -என்னும்படி
பத்மாசனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதாந்தார்த்த பிரகாசகமாய்
உன்நித்ர பத்ம ஸூபகமாய் இருக்கிற ஜ்ஞான முத்தரை யானது காதாசித்கம் அன்றிக்கே
சதா தர்சன யோக்யதாம் படி வாழக் கடவதாக வேணும்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -என்னக் கடவது இறே –

தேராருதுய்ய செய்ய முகச் சோதி -என்றும் பாடம் சொல்லுவர்
தோராத –

ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் -என்னுமா போலே
சீராரும் -என்கிறத்தை திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்

ஸ்ரீ எதிராசர் உடைய திருவடிகள் ஆகையாலே
பார்த்திவவய யஜ்ஞாஞான் விதமாய் இறே இருப்பது-

————————————————————————-

அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் ஆகையாலே மீளவும் ஆதர அதிசயத்தாலே
பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளினமைக்கும்
மற்றும் லோக உபகாரகங்களாக செய்து அருளினவை எல்லாவற்றுக்கும்
மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார்

கீழ் பாட்டு விக்ரஹ பரம்
இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே —31-

சாக்யோ லூக்யா ஷபாத ஷபணக் கபில பதஞ்சலி மத் அனுசாரிண-என்கிறபடியே
பாஹ்ய ஷண் மாதங்கள் ஆகிற மூடிக் கிடக்கிற செடிகளை மூலச் சேதனம்
பண்ணி அருளினவர் நித்யமாக எழுந்து அருள வேணும் –

மேலிட்டு வரும் குத்ருஷ்டிகளை –
நான்மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் -என்கிறபடியே –
சவாசனமாகத் துரத்தி அருளினவர் நித்யமாக வாழ்ந்து அருள வேணும் –

அறு சமயம் போந்தது போன்றி இறந்தது வெங்கலி -என்கிறபடியே
இவை எல்லாத்துக்கும் ஹேதுவாய் லோகம் எங்கும் காடமாய் மூடி வருகிற கலியை
அல்பாவ சேஷமும் இல்லாதபடி முடித்து விட்டவர் வாழ்ந்து அருள வேணும்

அநந்தரம்
ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அனுபத்ரவா அனுதினம் சம்வர்த்தயா-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திருச் செல்வம் எல்லாம் கட்டளைப் படும்படி பண்ணி அருளினவர் வாழ்ந்து அருள வேணும்

அதுக்கு மேலே
பிரமாணத்தில் வந்தால்
வேதத்தில் விப்ரபத்தி போக்கின அளவன்றிக்கே
வேதாந்த அர்த்தம் எல்லாம் ஸ்ரீ பாஷ்ய ரூபேண அருளிச் செய்தவர் வாழ்ந்து அருள வேணும்

அதுக்கு மேலே
ஸ்ரீ ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்ட ஸ்ரீ திருவாய் மொழியை வளர்த்த இதத் தாய் -என்னும்படி
வர்ப்பித்து அருளினவர் வாழ்ந்து அருள வேணும்
அதன் தாத்பர்ய மான சரணாகதி தர்மம் ஜகத்திலே வர்த்திக்க
விலஷணமான ஸ்ரீ பெரும் பூதிரிலே திரு வவதரிதவர் வாழ்ந்து அருள வேணும்
சௌந்தர் யாதிகளாலே பூரணமாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய
சர்வ சரண்யமான சரண யுகங்கள் நித்யமாக வாழ வேணும்

அழகாருகை -அடி இணைகளுக்கு விசேஷணம் ஆன போது
இரண்டு தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போல் இருக்கிற சேர்த்தி அழகையும்
ஸ்வத உண்டான சௌந்தர்யத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம் –

அற மிகு நல் பெரும் பூதூர் -என்றும் பாடம் சொல்வார்
அப்போது -ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்கிற
தர்மத்தை அதிகமாக உடைத்து என்னவுமாம்
வாழி -எனபது மங்கள சொல்

——————————————————

கீழ்
நற் பெரும் பூதூர் அவதரித்தார் என்று பிரஸ்துதமான திரு வவதார திரு நஷத்ர வைபவத்தை
ப்ரீதியாலே பேசி அனுபவித்து அருளுகிறார்-

சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி யிங்கினி வீறு நமக்கில்லை என்று மிகத் தளர் நாள்
மேதினி நஞ்சுமை யாறு மெனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மானிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும் பூதூர்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –32-

இதுவும் ஒரு நாளே
ஸ்ரீ மன் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர —

விசேஷணத்தை இல்லை செய்வாரும்-விசேஷ்யத்தை இல்லை செய்வாருமாய்
இப்படி விபாகத் த்வய குத்ருஷ்டிகளாய்க் கொண்டு
வேதார்த்தா பலாபம் பண்ணுகிறவர்கள் ஆகையாலே
வைதிக தர்மம் தலை சாயும்படி வந்து கிட்டி இருக்கிற வாதியர்களான
சங்கராதிகள் உடைய மதம் நாசத்தை அடையும் என்று
நாலுவகைப் பட்ட வேதமானது அர்த்த பௌஷ்கல்யத்தை யுடைத்தாய் அபிவிருத்தமாம் திவசம் –

கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லுகிறபடியே
குரூரமான கலியானது இவ் விடத்திலே
இனி நமக்கு சம்சார ராஜ்ஜியம் பண்ண சகயம் அன்று என்று
மிகவும் நிலை குலைந்து இருக்கப் பண்ண வற்றான திரு நஷத்ரம் –
கலியும் கலி கார்யமான குத்ருஷ்டிகளும் போகையாலே-
விஸ்வம் பரா புண்ய வதீ -என்றும்

தவம் தாரணி பெற்றது -என்றும் சொல்லுகிறபடியே
பூமியானது தம் தலை சுமை கழியும் என்று துக்கத்தை விட்டு பிரகாசியா நிற்கிற திரு நஷத்ரம்
இனி பூமியில் உண்டான அர்ச்சா ஸ்தலங்களை ஆதரிக்குமவர்கள் ஆகையாலே
ஸ்ரீ திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்
பராங்குச அபிதேயரான ஸ்ரீ நம் ஆழ்வார்
முதலானவர்களுடைய சம்ருத்தி அங்குரிக்கும் திரு நஷத்ரம்-

அதுக்கு மேலே ஸ்ரீ பெருமாள் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்
அருவி செய்யா நிற்கும் மா மலை -என்று சொல்லப் படுவதான ஸ்ரீ பெரிய திருமலை
மற்றும் உண்டான திவ்ய தேசங்களும்
ஸ்வ ஸ்வ சம்ருதியை அடைவுதோம் என்று ஹர்ஷிக்கும் திரு நஷத்ரம் –

இதுக்கு எல்லாம் அடியாக -அங்கயல் பாய் வயல் -என்னுமா போலே
சிவந்து அழகிய கயல்களை உடைத்தான வாவிகளாலே சூழப் பட்டு இருக்கிற
விளை வயல்களினாலே நித்யமாக யுண்டான நகர் அலங்காரங்களை யுடைத்தான
ஸ்ரீ பெரும் பூதூரை திரு வவதார ஸ்தலமாக யுடைய ஸ்ரீ மானாய்
ஸ்ரீ இளைய ஆழ்வார் என்கிற நிரூபகத்தை உடையரான
எம்பெருமானார் திரு வவதரித்து அருளின திவசம் திருவாதிரை திரு நஷத்ரம் –

இதுவும் ஒரு நாளே
ஸ்ரீ மான் ஆவிர் பூத் பூதௌ ராமானுஜ திவாகர -என்னக் கடவது இறே

தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -என்கிறதுக்கு
தத்ரஸ்தரான ஜீவேஸ்வரர்கள் ஹர்ஷிப்பார்கள் என்றபடி
மன்றல் -பொருந்துதலும்-நிலைப்பாடும்
ஆறுதல் -சமித்தல்
உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்க என்கிறபடியே
இவருக்கு தத் வாசகமான திரு நாமங்கள் தான் அனுபாவ்யமாய் இருக்கையாலே

ஸ்ரீ எதிராசன் என்றும்
ஸ்ரீ இராமானுசன் என்றும்
ஸ்ரீ எம்பெருமானார் என்றும்
ஸ்ரீ இளையாழ்வார் என்றும்–அனுசந்தித்து அருளினார்-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: